Google   www kalachuvadu.com

தலையங்கம்

தேவை சம உரிமை; அனுமதிச் சலுகை அல்ல

மக்களுக்கு எதிரான போர்

சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் ஆகியன அடிப்படையில் பொது அமைப்புகளுக்குள் ஒரு சில பிரிவினரை நுழையவிடாமல் தடுப்பது என்பது நமக்குப஢ புதிதல்ல. மதம், சாதி, பாலினம் சார்ந்து இந்தப் பாரபட்சம் கோவில்கள் உள்ளிட்ட பொது வெளிகளில் பல விதங்களில் செயல்பட்டுவருகிறது. சமத்துவம், சமூக மாற்றம், அறிவியல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட பல சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளும் இவை போன்ற பாரபட்சங்களுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயங்களுக்குள் அனுமதிப்பதற்காக காந்தியடிகள் எடுத்த முயற்சி இதற்கு ஓர் உதாரணம்.

எந்த வழிபாட்டுத் தலமும் சமத்துவத்தை மறுக்க முடியாது. சபரிமலையிலும் பெண்கள் அனுமதி மறுப்பைச் சில பிரத்தியேகமான சமயக் காரணங்கள் காட்டி நியாயப்படுத்திவிட முடியாது. கோவில் சம்பிரதாயங்கள் காலந்தோறும் மாறி வருவதையும் கோவிலுக்கு நெருக்கமானவர்களின் விருப்பம் சார்ந்து நெகிழ்வடைவதையும் வரலாறு பதிவுசெய்திருக்கிறது. 40 நாள் கடும் விரதம் என்ற அளவுகோல் ஑போகும் வழி விரதம்ஒ என்னுமளவுக்கு மெலிந்திருப்பதைப் பார்க்கிறோம். போதைப் பொருள்களை நாடக் கூடாது என்பது விரத விதிகளில் ஒன்று. ஐயப்பமார்களுக்குத் தனி கிளாசில் சாராயம் வழங்கப்படுவது தமிழக, கேரள சாராயக் கடைகளின் நடைமுறைகளில் ஒன்று. கடும் பிரம்மச்சரியம் அனுஷ்டிக்க வேண்டும் என்பது விரதத்தின் இன்னொரு விதி. இது கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய எந்த ஏற்பாடும் இல்லை. மீறல்களும் தடுமாற்றங்களும் மாற்றங்களும் மலிந்த இந்தச் சம்பிரதாயங்கள் பெண் பக்தர்களுக்காக ஏன் நெகிழக் கூடாது?

மாதவிலக்கு மட்டும்தான் பிரச்சினை என்றால் மாதவிலக்கு நாட்களில் வரக் கூடாது என்ற விதியை மட்டும் உருவாக்குவதை விட்டுவிட்டுப் பெண்களே வரக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? ஆண் பக்தர்கள் விஷயத்தில் பிரம்மச்சரியம் என்னும் விதியை எப்படி அவர்களது மன சாட்சிக்கு விட்டுவிடுகிறார்களோ அதுபோலவே இதையும் பெண் பக்தர்களின் மனசாட்சிக்கு விட்டு விட வேண்டியதுதான்.

இது ஒரு புறம் இருக்க, அறிவியல் வெளிச்சம் படாத ஆதி நாள்களில் மாதவிலக்கு உள்ளிட்ட பல இயற்கையான நிகழ்வுகள் குறித்து எழுந்த அச்சம் மற்றும் அருவருப்புக் காரணமாக உருவான பல அணுகுமுறைகள் இன்று மாறிவிட்டன. இந்நிலையில் மாதவிலக்கைத் தீட்டு என்றும் ஒதுக்க வேண்டிய காலகட்டம் என்றும் பார்க்கும் அணுகு முறைகளை மாற்றிக்கொள்வதுதான் அறிவியல் அணுகுமுறையாக இருக்க முடியும்.

மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்குவது மட்டுமின்றி முழுமையான சமத்துவத்தை உறுதி செய்வதே ஜனநாயகப் பண்பு. எனவே வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கான தடைகளை நீக்குவதோடு நில்லாமல் உரிய பயிற்சி கொடுத்து அவர்களைப் பூசாரிகள் ஆக்குவதற்கும் வகை செய்யவேண்டும். எனவே, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தைப் பிறப்பித்துள்ள தமிழக அரசு, பெண்களும் அர்ச்சகராகலாம் என்பதாக அதை நீட்டிக்க வேண்டும்.

n n n

சமூகப் பிரச்சினைகளில் தனது குரலை எப்போதும் வெளிப்படுத்தி வந்தவரும் காலச்சுவடு நிறுவனருமான சுந்தர ராமசாமியின் கருத்து இந்தப் பின்னணியில் கவனிக்கத்தக்கது.

ஒரு எழுத்தாளனாக என்னுடைய நிலைபாடு சகல ஜாதியைச் சேர்ந்தவர்களும் சகல மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்துக் கோவிலில் பூசாரிகளாகவோ பிற பணிகளை ஆற்றுபவர்களாகவோ இயங்கத் தகுதியானவர்கள் என்பதுதான். பக்தர்களுடைய தேவையை மிகச் சிறப்பாகப் பூர்த்தி செய்ய அவர்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கோவில்களை மிகச் சிறப்பாகப் பேண அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். . . சிதம்பரம் கோவிலில் இன்னும் மாதவிடாய் நீங்காத ஒரு முஸ்லிம் பெண்மணியோ அல்லது ஒரு கிறிஸ்தவப் பெண்மணியோ அல்லது ஒரு தலித் பெண்மணியோ பூசாரியாகப் பணியாற்றுவதை இந்து மதத்தின் அடிப்படை சார்ந்து மறுப்புக் கூற முடியாது என்றே நினைக்கிறேன். . . நீண்ட காலத்திற்குப்பின் அமலாக இருப்பதை எழுத்தாளர்கள் இன்றே கண்டு சொல்லலாம். அதைச் சொல்ல அந்தக் காலத்தின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. (வானகமே இளவெயிலே மரச் செறிவே, பக்கம் 31, 2004)

உள்ளடக்கம்

Google Ads.....


Google