|
தலையங்கம்
மக்களுக்கு எதிரான போர்
ஜூலை 11ஆம் தேதி பிற்பகல் மும்பையின் புற
நகர் ரயில்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்கள்
பொதுமக்களில் 200 பேரைக் கொன்று 700க்கும் மேற்பட்டோ ரைப்
படுகாயப்படுத்தியிருக்கின்றன. குண்டு வைப்பதற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் உண்மையில் மிகப் பயங்கரமானது.
மூச்சுத் திணற வைக்கும் நெரிசலான பயணத்திற்குப் பழகிப்போன
மும்பைவாசிகள் தமது பணியிடங்களிலிருந்து அப்பொழுதுதான் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார்கள். எதிர்பாராத தருணத்தில் வெடித்துச்
சிதறிய ரயில் பெட்டிகள் நூற்றுக்கணக்கான பயணிகளை
நிராதரவானவர்களாக்கின. மும்பையின் ரத்தக் குழாய்கள் என
வர்ணிக்கப்படும் புறநகர் ரயில்கள் உருக்குலைக்கப்படுவதன்
பின்விளைவுகளைப் பற்றிய பயங்கரவாதிகளின் கனவுகளை மும்பையின்
சாமானிய மக்கள் தங்களது துணிச்சலான செயல்பாடுகள் மூலம்
தகர்த்தெறிந்தனர். பின்விளைவாக எவ்விதக் கலவரமும் வெடிக்கவில்லை;
பயங்கரவாதத்திற்கெதிராக இதைவிடவும் தீரமான முறையில் யாராவது
போராட முடியுமா என்பது சந்தேகம்தான்.
பயங்கரவாதிகளிடம் ஓமென்மையாகஔ நடந்துகொள்வதை
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு கைவிடவேண்டும் என்கிற
கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. பயங்கரவாத இயக்கங்களுக்கு
அரசும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியாவுக்கெதிரான பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு
இடமளித்துவருவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனப்
பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்திருக்கிறார்.
இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் எதிர்
வன்முறைக்கான விதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.
பயங்கரவாதத்தின் வேர்களைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கான
செயல்திட்டங்களை வகுப்பதைப் பற்றியோ அவர்களுக்குத் துருப்புச்
சீட்டுகளாகப் பயன்பட்டுவரும் சமூக, அரசியல் மற்றும் மத
வேறுபாடுகள் சார்ந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான உருப்படியான
முயற்சியையோ நாம் இன்னும் தொடங்கவே இல்லை. குறிப்பான தூண்டுதலோ
நோக்கமோ இலக்கோ இல்லாமல் நடத்தப்படும் இத்தகைய செயல்கள் நாம்
வாழும் காலகட்டத்தை மிகவும் பயங்கரமானதாக உணரச் செய்கின்றன.
பொதுமக்கள்மீது பொது இடங்களில் திடீரென்று நடத்தப்படும்
இத்தகைய தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முகமற்ற பயங்கரவாதம்
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விபரீதமானது.
இந்தக் குண்டு வெடிப்புக்குப் பின்னால்
லஷ்கர்-இ-தொய்பா என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இருக்கலாம்
என்பதற்கான அடையாளங்கள் அரசுக்குக் கிடைத்துள்ளன. சிறுபான்மைச்
சமூகத்தின் மீது இந்திய ஜனநாயகவாதிகள் காட்டிவரும் புரிதலைப்
பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பதாகச் சில பயங்கரவாத அமைப்புகள்
புரிந்து கொண்டிருக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஊடகங்களிலும் மனித உரிமை ஆர்வலர்களிடையேயும்
அறிவுஜீவிகளிடையேயும் நடைபெற்றுவரும் விவாதங்கள் நமது
ஜனநாயகத்தை வலுவூட்டுவதற்கும் மதச்சார்பின்மையை
வலியுறுத்துவதற்குமானவை.
இஸ்லாமியப் பயங்கரவாதத்தை எதிர்ப்பது
இந்துத்துவ ஆதரவு எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விடுமோ
என்கிற அச்சம் நமது ஜனநாயகவாதிகளுக்கு இருக்கக்கூடும். ஆனால்
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்பதால் மதச் சார்பின்மைக்கும்
பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் தொடர்பில்லை என்பதை அவர்கள் உணர
வேண்டும். இந்துத்துவத்தின் செயலூக்கம் மட்டுப்பட்டிருக்கும்
இன்றைய நிலையில் இத்தகைய ஒரு படுகொலையில் ஈடுபடுவது
பா.ஜ.க.விற்கும் சிவசேனைக்கும் சாதகமாக முடியும் என்பது இந்த
பயங்கரவாத அமைப்புகள் அறியாதது அல்ல. சில தமிழக முற்போக்குவாதிகள்ஒ
இந்துத்துவத்திற்கு எதிராகச் சிறுபான்மை அடிப்படைவாதத்தை
ஆதரித்ததும் கோவை குண்டு வெடிப்பை நியாயப்படுத்திப் பேசி
வந்ததும் இன்று மீள் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதச் செயல்களின் வேர்கள்,
அவற்றின் வெளிப்பாடுகள் ஆகியவை குறித்த வெளிப்படையான, விரிவான
விவாதங்கள் இக்கட்டத்தில் இன்றியமையாதவை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு நம்
சமூகத்தின் மத ஒற்றுமைக்குக் கடுமையான சேதத்தை
உருவாக்கியிருக்கலாம். ஆனால் மத ஒற்றுமை இங்கு பெருமளவில்
பத்திரமாக உள்ளது என்பதுதான் மும்பையின் சாமானியர்கள்
காட்டிவரும் விவேகம் உணர்த்தும் செய்தி. மக்களுக்கெதிரான
தாக்குதல்களை முறியடிப்பதன் மூலம் மத ஒற்றுமையை மேலும்
வலுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
உள்ளடக்கம் |