Google   www kalachuvadu.com

அஞ்சலி : பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி) 1910-2006

விடைபெறும் கடைசிக் குரல்

பழ. அதியமான்

n அஞ்சலி - சுரதா

n அஞ்சலி - ராஜா ராவ்

மணிக்கொடி எழுத்துச் சங்கிலியின் இறுதிக் கண்ணியான எழுத்தாளர் சிட்டி என்கிற பெ.கோ. சுந்தரராஜன் 97ஆம் வயதில் அண்மையில் காலமானார்.

'தரவுகள் வழங்கும் மூலங்களையே ஆராய்ச்சிகள்' என மயங்கிக் கிடந்த ஒரு காலத்தில்தான் சிட்டியை நான் முதன்முதலில் சந்தித்தேன். கல்வித் துறை சாராத ஆராய்ச்சியாளராக அவர் எனக்கு அறிமுகமானார். 1982 முதல் 90 வரையிலான ஆண்டுகளில் அநேகமாக இரு வாரத்திற்கு ஒரு முறை அவரைப் பார்த்துவிடுவேன். தமிழ் இலக்கியத்தில் 30கள் காலப் பகுதியில் ஆராய்ச்சி செய்கிற யாரும் என்னைப் போலவே அவரைப் பார்க்க வேண்டியிருந்தது.

1930களின் காலப் பகுதி சார்ந்த சர்ச்சை தொடர்பாக பாரதி மறைவு முதல் மகாகவி வரை நூல் எழுதிய அ. மார்க்ஸ் இந்த முறையில் அவரைப் பார்த்து எழுதிய வரி இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு பற்றற்ற துறவியின் மனோபாவத்தில் சிட்டி இருந்தார் என அது தொடங்கும். சிட்டி தன் சிறுகதை வரலாற்று நூலை எழுதி முடித்துவிட்டிருந்த சமயம் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். 'யாரிடம் முன்னுரை?' என்று நான் கேட்டேன். 'நாங்கள் முன்னுரை வாங்குகிற மாதிரி யார் இருக்கிறா சொல்லுங்க?' என்றார். முன்னர் எழுதிய நாவல் வரலாற்று நூலுக்குத் தெ.பொ.மீ.யிடம் முன்னுரை வாங்கியிருந்தனர். யாரையும் சொல்ல முடியலையே என்று நான் கைவிரிப்பேன் என்று எதிர்பார்ப்பதுபோல அந்தக் குறும்பு தெறிக்கும் குண்டு விழிகள் என்னைப் பார்த்தன. ஆனால் நான் சொன்னேன். எனக்கு வழக்கமாகக் கிடைக்கும் காப்பி அன்று கிடைக்கவில்லை.

30களில் நிலவிய இலக்கிய உள் அரசியல் பற்றியெல்லாம் சிட்டி சொல்லுவார். அன்றைய ஆளுமைகளான ஆ.நா. சிவராமன், டி.எஸ். சொக்கலிங்கம், சங்கு கணேசன், கு.ப.ரா., வ.ரா. பற்றியும் நிறையச் சொல்லியிருக்கிறார். வயதானவர்களிடம் எப்போதும் நாம் எதிர்பார்க்கும் கழிவிரக்கப் பேச்சை ஒரு நாளும் சிட்டியிடமிருந்து நான் கேட்டதில்லை.

'அரங்கம்' என்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தகவல்கள் தரும் ஓர் ஆராய்ச்சி அமைப்பைச் சிட்டி நடத்தினார். அதில் நான் பணம் கட்டிய உறுப்பினர். அது சரியாக இயங்கின மாதிரித் தெரியவில்லை. அந்த அரங்கம் பற்றி இலக்கியச் சிந்தனையின் கூட்டத்தில் கூட சோ. சிவபாத சுந்தரம் பேசினார். மத்திய அரசின் ஏதோ ஓர் அமைச்சகத்தின் மூலமாக, இந்தியாவில் பல பதிப்பகங்கள் வெளியிடும் நூல்கள் இந்த 'அரங்க'த்துக்கு வந்துகொண்டிருந்தன.
வாசகர் வட்டம், பாரதி பாசறை போன்ற அமைப்புகள் சிட்டியிடம் ஆலோசனை கேட்பதுண்டு. இந்த அமைப்புகளுக்கு ஒரு வகையில் "அளவு டம்ளர்" போலச் சிட்டி செயல்பட்டிருக்கலாம்.

தேடல் ஆராய்ச்சியில் பல்லாண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டதால் தமிழ் நாட்டில் எவருமறியாத பல நூலகங்களோடு சிட்டிக்கும் சிவபாத சுந்தரத்துக்கும் அறிமுகம் இருந்தது. சிவபாத சுந்தரம், லண்டன் நூலகத்தில் கண்டெடுத்த ஆதியூர் அவதானி சரிதம் என்ற கவிதை வடிவ நாவலை (?) இவர்கள் வெளியிட்டது இத்தகைய நூலக ஆராய்ச்சியின் விளைவுகளுள் ஒன்று. சிட்டியின் சிறப்பான காலம் 1968-90வரையிலான ஆராய்ச்சிக் காலம்தான். இணை ஆசிரியரான சோ. சிவபாத சுந்தரம் திரும்பவும் லண்டன் போகிறவரையிலான காலம் அது.

கூட்டு முயற்சியாகவும் எதிரொலியாகவுமே சிட்டியின் பெரும்பாலான சிருஷ்டிகள் உருவாகியுள்ளன. புதுமைப்பித்தனின் கிண்டல் தொனிக்கும் விமர்சனக் குட்டு பெற்றாலும் 30களில் கிளர்ந்த 'பாரதி மகாகவியா?' சர்ச்சையின் ஒரு பரிமாணத்தின் பதிவு என்ற வகையில் சிட்டியின் கண்ணன் என் கவி முக்கியமான நூல்தான். இந்த நூல் கு.ப.ரா.வுடன் இணைந்து எழுதியது. "அடிச்சுவட்டில்" நூல் வரிசையை நினைவூட்டும் சிட்டியின் நடந்தாய் வாழி காவேரி நூல் தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதியது. எழுத்தாளர், ஒலிபரப்பாளர், சோ. சிவபாத சுந்தரத்தோடு இணைந்து எழுதிய நாவல் வரலாறும் சிறுகதை வரலாறும் சிட்டியின் கூட்டு முயற்சியின் உச்சங்கள் எனலாம். இன்னும் பல காலம் ஆராய்ச்சியாளர்கள் தேடும் நூல்களாக அவை இருக்கும். விந்தன் போன்ற முக்கிய ஆளுமைகள் விடுபட்டிருந்தாலும் இலக்கிய வரலாற்று ஆய்வில் இந்நூல்களைப் புறந்தள்ளிவிட முடியாது. சர்க்கரை ஆலைகளுக்குப் பஞ்சமானதேசம் இது. சிட்டியின் இணை தயாரிப்பின் இறுதி முயற்சி வரலாற்று ஆய்வாளர் பெ.சு. மணியின் பங்களிப்போடு உருவான அதிசயப் பிறவி வ.ரா. வரலாறு. இன்னுமொரு வ.ரா. பற்றிய நூல் வரும் வரை களத்தில் தாங்கும். இன்னொரு நூல் எங்கே வரப்போகிறது?

'அந்தக் காலத்துச் (30களில்) சிறுகதை முயற்சிகளின் சின்னங்களாயிருந்தவை சுந்தரராஜனின் கதைகள்' எனச் சிவபாத சுந்தரம் விமர்சிக்கும் சிட்டியின் மொத்தக் கதைகள் 50க்கும் குறைவாகவே இருக்கலாம். அந்திமந்தாரை, தாழை பூத்தது முதலியவை அவரது சிறுகதைத் தொகுப்புகள். அவரது அநேகக் கதைகள் ஏதோ ஒன்றின் எதிரொலிகளாக இருப்பதை சோ. சிவபாதசுந்தரம் மூலம் அறியலாம். சிட்டியின் 'புரியாத கதை', கு.ப.ரா.வின் 'புரியும் கதை'க்கு எதிர்மறை. தி. ஜானகிராமனின் 'மறதி' கதைக்கு மறுப்பு 'வழியிலே வந்தவள்'. புதுமைப் பித்தனின் 'சாபவிமோசன'த்தின் தாக்கம் 'மாசறு கற்பினாள்'. இது சிட்டியின் கதைகளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு குறிப்பு.

மணிக்கொடி, ஆனந்த விகடன், களிராட்டை முதலிய பத்திரிகை எழுத்துகள், வார்தா திட்டம், மதுவிலக்கு மங்கை, எல்வின் கண்ட பழங்குடி மக்கள் முதலிய நூல் முயற்சிகள், ஆசிரியர் வேலை, வானொலி வேலை, திருமணம், குடும்பம் எனக் கழிந்த சிட்டியின் முதற்கட்ட வாழ்க்கையைப் படைப்புக் காலம் எனலாம். நாவல் வரலாறு, சிறுகதை வரலாறு, சத்திய மூர்த்தி, காஞ்சி மடத்துப் பெரியவர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று ஆங்கில நூல்கள் முதலியன உருவான காலம் (1968-90) வாழ்க்கையின் பயன் கனிந்த ஆராய்ச்சிக் காலம்; மண்ணாங் கட்டி, கேலியும் கோலியும் இன்னும் சில தொகுப்புகள் அவரது இறுதிக் கால வாழ்வில் வெளிவந்தவை. இவை படைப்புக் காலத்தில் எழுதப்பட்டவை: இந்த இறுதிக் காலத்தைத் தொகுப்புக் காலம் எனச் சொல்லலாம்.

மணிக்கொடியின் புகழை நிலை நிறுத்துவதிலும் அதை அடுத்த தலை முறைக்கு நீட்டிப்பதிலும் சிட்டி ஆராய்ச்சிக் கால வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். 1980களில் சென்னையில் மணிக்கொடிக்குப் பொன் விழாவை நடத்தினார். மணிக்கொடியின் பிரமை தொடர இக்கூட்டத்தின் பங்கு அதிகம். கல்கியால் போஷிக்கப்பட்ட சனரஞ்சகத் தன்மைக்கு எதிர் நிலை எடுத்த மணிக்கொடியில் எழுதியவர், இந்த எதிர் நிலை மனோபாவத்தின் பெருமைமிக்க அடையாளச் சாட்சியான மணிக்கொடியின் புகழை நிலைநிறுத்த முனைந்தவர். மணிக்கொடி விழாவிலும் பின்னரும் கல்கியைக் கொண்டாடும் நிலைக்குச் சரிந்ததின் பின்னணியில் இயங்கும் இலக்கியத்தை மீறிய காரணங்கள் யோசிக்க வேண்டியவை.

வ.ரா.வைக் குருவாகக் கொண்டாடிய சிட்டி, அவரைப் போலச் சீர்திருத்தக்காரர் அல்ல என்பது சிட்டியின் நூற்பட்டியலைப் பார்த்தாலே தெரியும். எனினும் அவர் பழம் பஞ்சாங்கம் அல்ல. சூழலின் இறுக்கத்தைக் குறைக்கும் நகைச்சுவை அவருடையது. எப்போதும் நினைவில் நிறுத்தி அசைபோட்டுப் பார்த்துச் சிரிக்கும் ரகத்தைச் சேர்ந்ததல்ல சிட்டியின் நகைச்சுவை. இவ்வகைக் கட்டுரைகளுக்கு வைத்துக்கொண்ட புனைபெயரே சிட்டி. புனைபெயர் நிலைத்த அளவுக்கு நகைச்சுவை நிலைக்கவில்லை. எழுத்துவில் சிட்டி எழுதிய 'அழுக்கு' கவிதை ரொம்பப் பிரபலம். சிட்டியின் கவிதைக்கு அடையாளம் அது.

தழுவல் இலக்கியம் தொடர்பில் மகாகலைஞன் புதுமைப்பித்தன் மீதான சிட்டியின் விமர்சனங்களுக்குத் தமிழ்ப் படைப்பு ஆளுமைகள் பலர் சரியான பதிலைக் கொடுத்துவிட்டனர். ரகுநாதன், பொதியவெற்பன் ஆகியோரது உணர்ச்சி, அறிவு, தர்க்கம் சார்ந்த நீண்ட பதில்கள் சிட்டியின் நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டன. அவர் நகைச்சுவை எழுத்தாளர் என்பதை நிரூபிக்கக் காலம் அளித்த இன்னொரு சந்தர்ப்பம் போலும்.

மணிக்கொடி பற்றிய சித்திரங்கள் தமிழ்ச் சூழலில் தமது சோபையை இழப்பதற்குள் அதில் 30களில் எழுதிய அதன் வாழும் அடையாளமாக விளங்கிய கடைசிக் குரல் நம்மிடமிருந்து விடை பெற்றுக்கொண்டுவிட்டது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google