|
விவாதம்
நேர்காணல் என்னும் இலக்கிய
வகை
இ. அண்ணாமலை
முன்னர் பேட்டி எனப்பட்ட இன்றைய நேர்காணல்
தற்காலத் தமிழில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய இலக்கியவகை
(literary genre). இலக்கியம் என்னும்போது சிறுகதை, நாவல் போன்ற
கற்பனை இலக்கியத்தை மட்டும் குறிக்கும் குறுகிய பொருளில்
அல்லாமல் கட்டுரை போன்ற கற்பனையல்லாதவற்றையும் சேர்த்துச்
சொல்கிறேன். முதல் நேர்காணல் தமிழில் எப்போது தோன்றியது என்று
எனக்குத் தெரியவில்லை. காலனிய காலத்தில் பத்திரிகைகள், இதழ்கள்
போன்ற பொதுஜன ஊடகங்கள் தோன்றிய பின்தான் நேர்காணல் உருப்பெற்றது
என்பது என் ஊகம். இந்தக் காலத்தில் மற்ற இந்திய மொழிகளைப் போல்
தமிழும் மொழியின் பொது இட - அம்பல -
(public sphere in the
sense of Jurgen Habermas) பயன்பாட்டின் விளைவாகப் புது
வடிவங்களையும் மொழித் தன்மைகளையும் பெற்றது. பொது இடத்தின்
அரசியல் தன்மையாலும் அதில் பங்கேற்றவர்களின் சமூகப்
பின்னணியாலும் அதில் பயன்பட்ட மொழி புதிய கூறுகளைப் பெற்றது.
நேர்காணல் இப்படி வந்த புதிய வடிவங்களில் ஒன்று.
நேர்காணலின் இந்த வரலாற்றுப் பின்னணியின்படி அது
ஒரு பொது இட வடிவம். அதாவது, வீட்டில் பேரன் தாத்தாவிடம் அவர்
காலத்தைப் பற்றிக் கேட்கும் கேள்விகளிலிருந்து அது வேறுபட்டது.
நேர்காணலுக்கு ஓர் இறுக்கத் தன்மை (formal
nature) உண்டு; சமூகத்திற்குப் பொதுவான பிரச்சினைகளைப் பற்றிப்
பேசும் தன்மையும் உண்டு. இது இரண்டு பேர் - நேர்காண்பவர்,
நேர்காணப்படுபவர் - சேர்ந்து உருவாக்கும் இலக்கிய வகை. இந்தத்
தன்மையில் நேர்காணல், கட்டுரையிலிருந்து வேறுபட்டது.
நேர்காணல் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஒலி, ஒளி
ஊடகங்களில் முதலில் நிகழ்த்திப் பின் அச்சு ஊடகத்துக்கு வருவது
சகஜம். ஊடகத்துக்கும் நேர்காணலுக்கும் உள்ள தொடர்பு, மேலே
சொன்ன வரலாற்றின் தொடர்பாக ஊடகம் ஒரு பொது இடமாக மாறியதால்
மட்டும் வந்தது அல்ல. நேர்காணல் உடனடி நிகழ்ச்சி (live
performance) சார்ந்தது; நடத்து கலையை (performing art) போன்றது;
அதனால் ஒலி, ஒளி ஊடகத்தோடு நிகழ்காலத் தொடர்பும் உடையது.
கேள்விகளை முன்னரே எழுதிக் கொடுத்து நேர்காணல் நடக்கலாம்.
இருப்பினும், அதில் உடனடித் தன்மை முற்றிலும் போய்விடுவதில்லை.
கதை, கவிதை போன்ற இலக்கிய வகைகள் அச்சில் அல்லது எழுத்தில்
வார்க்கப்பட்ட பிறகே ஒலி, ஒளி ஊடகங்களுக்கு வரும். அதனால்
அவற்றைச் செப்பம் செய்யும் வாய்ப்பு அதிகம். இந்த ஊடகங்களின்
கவியரங்குகளில் கவிஞர் அந்தக் கணத்தில் கவிதை உருவாக்குவது
நடந்தாலும் அது படைப்பு இலக்கிய வகையின் பொது விதி அல்ல -
பாட்டி தான் தோன்றியாகச் சொல்லும் வாய் மொழிக் கதைகளும்
பாடல்களும் நாம் சிறுகதை, கவிதை என்று வரையறுப்பவற்றில்
அடங்காததைப் போல.
ஊடகம் நேர்காணலின் இறுக்கத் தன்மையைக்
குறைக்கும் வாய்ப்பு இருந்தாலும் அதை முற்றிலுமாகப்
போக்குவதில்லை. இந்த வகையில் நேர்காணல் இன்று பத்திரிகைகளிலும்
இதழ்களிலும் பரவலாக உள்ள கலந்துரையாடல், அரட்டை, கேள்வி-பதில்
ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. அரட்டையில் - அது திரைப்படக்
கலைஞர்களைப் பற்றி இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளைப் பற்றி
இருந்தாலும் சரி - தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்,
தனிப்பட்டவர்கள் பற்றிய அம்பலமாகாத செய்திகள், செய்திகளின்
பரபரப்புத் தன்மை ஆகியவை தூக்கலாக இருக்கும்.
பல பேருக்கிடையே நடக்கும் கலந்துரையாடல், அரட்டை
போலல்லாமல் நேர்காணல் இரண்டு பேருக்கிடையே நடப்பது. ஓர் அரசியல்
தலைவரைப் பலர் சேர்ந்து கேள்வி கேட்கும் நடைமுறையும் உண்டு. அது
பத்திரிகையாளர் சந்திப்பு என்பதில் அடங்கும். நேர்காணல் என்ற
இலக்கிய வகையின் கீழ் வராது. கல்வி நோக்கத்தோடு, அறிவியல்
போன்ற பொருள் பற்றிக் கற்பிதமான கேள்வி-பதில் வடிவத்தில் செய்தி
சொல்வதும் நேர்காணல் ஆகாது. அந்தக் காலத்தில் திரிகூடசுந்தரம்
இப்படிச் செய்திருக்கிறார்.
கேள்வி-பதில் வடிவம் நேர்காணலின் அடிப்படைக்
கூறு என்றாலும் கேள்வி-பதில் வடிவத்தில் உள்ள எல்லாமே நேர்காணல்
ஆகாது.
நேர்காணலின் நோக்கம் மேலே சொன்ன கருத்துப்
பரிமாற்றங்களிலிருந்து வேறுபட்டது.
நேர்காணப்படுபவர் பிரபலமானவராக இருக்க வேண்டிய
அவசியமில்லை. அவர் சாதாரணத் தொழிலாளியாக இருக்கலாம், அல்லது
சிறந்த விஞ்ஞானியாக இருக்கலாம்; இழிவுக்கு உள்ளாகும் விலைமாதாக
இருக்கலாம், புகழ்பெற்ற நடிகராக இருக்கலாம். நேர்காணலின்
நோக்கம் வாசகர்களுக்கு - ஊடக நுகர்வாளர்களுக்கு - சென்றடைய
வேண்டிய செய்திகளை, அனுபவங்களை, வாழ்க்கைப் பார்வைகளைத் தருவது.
இவை நேர்காணல் நடக்கும் கணத்தில் ஆர்வத்தைத் தூண்டிப் பின்
கவலைப்படாதவையாக இருக்கமாட்டா. அரசியல்வாதிகளிடம் அன்றைய சூடான
நிகழ்ச்சியைப் பற்றி நடத்தும் நேர்காணல் பத்திரிகையில் வரும்
செய்திகள் போன்றது; சில நாட்களில் பதத்துப் போய்விடும்.
நேர்காணல் பத்திரிகைகளில் வரும் கட்டுரை போன்றது. நிலைத்து
நிற்கும் கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் பொழுதுபோக்காக
இருக்கும் கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் உள்ள வேறுபாடு
நேர்காணலிலும் இருக்கும் வாய்ப்பு உண்டு. நிலைத்து நிற்கும்
பாங்குள்ள நேர்காணலே நல்ல நேர்காணல் என்று இலக்கியத் தரம்
பெறும்.
நல்ல கட்டுரையின், கதையின் தன்மை என்ன
என்பதுபோல் நல்ல நேர்காணலின் தன்மை என்ன என்ற கேள்வியும்
விமரிசனப் பார்வைக்கு உரிய ஒன்று. நேர்காணலில் வடிவ அளவு
பற்றிய ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. அது ஆயிரம்
வார்த்தைகளிலும் இருக்கலாம், ஐம்பதாயிரம் வார்த்தைகளிலும்
இருக்கலாம். இருப்பினும், அளவைப் பொறுத்தவரை நேர்காணல் கட்டுரை,
சிறுகதையோடு ஒப்பிடத் தகுந்ததாக உள்ளதே தவிர நாவலோடு ஒப்பிடத்
தகுந்ததாக இல்லை. சில நேர்காணல்கள் - உதாரணமாக, சாம்ஸ்கியோடு
நடத்தப்பட்ட உரையாடல்கள் - புத்தக வடிவில் வந்திருக்கின்றன
('Imperial Ambitions: Conversations on the post-9/11 world'
with David Barsamian அண்மையில் வெளிவந்த நூல்).
அவற்றுக்கு நாவலுக்கு உள்ளது போன்ற கட்டமைப்பு
தேவை இல்லை. அதே சமயம் கட்டுரை, சிறுகதைபோல் ஒரு பொருளைப்
பற்றியதாக, ஒரே வீச்சுக் கொண்டதாக நேர்காணல் இருக்கத்
தேவையில்லை. நேர்காணலின் உள்ளடக்க எல்லையின் பரப்பு
நேர்காணப்படுபவர், நேர்காண்பவர், வெளியிடும் சாதனம் (இதழ்,
தொலைக்காட்சி போன்றவை) ஆகிய மூன்றின் பின்னணியையும்
நோக்கத்தையும் பொறுத்திருக்கும்.
பரபரப்பை உருவாக்கும் கேள்வியையும் பதிலையும்
கொண்ட நேர்காணலையே நாடும் இதழ்கள் உண்டு. இவை பெரும்பாலும்
வாசகர்களுக்குக் கவர்ச்சியும் கிளர்ச்சியும் தரும் ஜனரஞ்சகமான
இதழ்கள்.
துப்பறியும் கதையைப் போல உண்மையை அல்லது
ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அமையும்
நேர்காணல்களும் உண்டு. புலனறி பத்திரிகையாளர் (investigative
journalist) கட்டுரை போன்ற பெரும்பாலும் பத்திரிகைகளில்
இடம்பெறும். இத்தகைய நேர்காணல்கள் நிலைத்த தன்மை பெறுவதில்லை.
எனவே, இலக்கிய வகையில் சேர்த்துப்
போற்றப்படுவதில்லை. நேர்காணப்படுபவரின் ஆளுமை பன்முகத்தாக
இருக்கும்போது அவற்றில் ஒன்றையோ சிலவற்றையோ நேர்காண்பவர்
நேர்காணலுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவருடைய தேர்வு வாசகர்களின்
பின்னணியை, எதிர்பார்ப்பைப் பொறுத்து இருக்கும். உதாரணமாக,
சாம்ஸ்கியின் நேர்காணலில் அவருடைய மொழிக்கொள்கை இடம்பெறுமா
அரசியல் கருத்தாக்கம் இடம்பெறுமா என்பது நேர்காணலை வெளியிடும்
இதழின் வாசகர்களைப் பொறுத்தது.
வாசகரைப் பொறுத்து நேர்காணலின் உள்ளடக்கம்
அமையும் கூறு அதைச் சிறுகதையிலிருந்து வேறுபடுத்துகிறது. கதை,
ஆசிரியரின் அனுபவ வெளியீடாக உருப்பெறுகிறது. வாசகர்கள் இரண்டாம்
பட்சம்தான். வாசகரை முன்வைத்து எழுதும் கதைகள் இருந்தாலும் அவை
நல்ல இலக்கியத் தகுதி உடையனவாகக் கருதப்படுவதில்லை. இந்த
வகையில் நேர்காணல் கட்டுரையோடு ஒத்துப்போகிறது.
கட்டுரைகள் வாசகரை மனத்தில் இருத்தி
எழுதப்படுகின்றன. இருப்பினும் நேர்காணலுக்கும் கட்டுரைக்கும்
ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது.
கட்டுரையின் தன்மை அதை எழுதுபவரின் ஆளுமையைப்
பிரதிபலிப்பதாக இருக்கும். கட்டுரை ஒரு நபரைப் பற்றியதாக
இருக்குமானால் அந்த நபரின் ஆளுமையை வெளிப்படுத்தும் கட்டுரையில்
கட்டுரையாளரது ஆளுமையின் சாயல் படர்ந்திருக்கும். நேர்காணலின்
நோக்கம் நேர்காணப்படுபவரைப் பற்றிய தகவல் - அவருடைய பின்புலம்,
அனுபவம் அல்லது சாதனை, கருத்தோட்டம், உலகப் பார்வை ஆகியவை -
வாசகரைச் சென்றடைவதற்கு வழிவகுப்பது; கொடுக்கும் தகவலின்
வழியாக அவருடைய ஆளுமையை வெளிப்படுத்துவது. இது ஒரு வகையில் ஒரு
கதையின் பாத்திரப் படைப்பின் மூலம் பாத்திரத்தின் தன்மையைக்
காட்டுவதைப் போன்றது. கதையின் சிறப்புப்போல் நேர்காணலின்
சிறப்பு, கேட்கும் கேள்விகளின் மூலம் நேர்காணப்படுபவரின்
தன்மையைக் காட்டுவதில் இருக்கிறது. ஆனால் ஒரு கட்டுரையைப் போல,
நேர்காண்பவரின் தன்மையும் நேர்காணலில் நிரவி இருக்கும்.
நேர்காணல் நடத்தும் செயற்பாட்டில் நேர்காண்பவர்
தன்னை எவ்வளவு வெளிப்படுத்தலாம் என்பது முக்கியமான கேள்வி.
கதையில் அதன் ஆசிரியர் முற்றிலும் உள்ளடங்கியிருப்பதுபோல்
நேர்காண்பவர் இருக்க வேண்டுமா அல்லது கட்டுரையில் அதன் ஆசிரியர்
பொதுவாக வெளிப்பட்டு நிற்பதுபோல் இருக்கலாமா என்று இந்தக்
கேள்வியை வேறு வகையில் கேட்கலாம். நேர்காணல் பற்றிய இந்தக்
கேள்வி தமிழ்ச் சூழலில் இன்னும் விவாதிக்கப்படவில்லை. இந்தக்
கேள்விக்கு எழுதுபவருக்கும் எழுதப்படுபவர்க்கும் இருக்க
வேண்டிய இடைவெளியின் அடிப்படையில் தரும் பதிலில், நேர்காணல்
கதைக்கும் கட்டுரைக்கும் இடைப்பட்ட ஓர் இலக்கிய வகையா என்ற
கேள்வியின் பதில் அடங்கியிருக்கிறது.
நேர்காணலில் அரசியல், திரைப்படம் முதலிய
துறைகளில் உள்ள பிரபலங்களைக் கேள்வி கேட்பதிலிருந்து விலகி,
அறிவுஜீவிகளைக் கேள்வி கேட்பதற்குக் கொண்டுவந்ததில்
காலச்சுவடுக்குப் பங்கு உண்டு. இதன் இதழ்களில் வெளிவந்த சில
நேர்காணல்களைப் பார்க்கும்போது நேர்காண்பவர் நேர்காணலில்
முன்நிற்பதுபோல் தெரிகிறது; நேர்காண்பவர் சார்ந்த இதழ்
மறைமுகமாக முன்நிற்பதுபோல் தெரிகிறது. அதாவது, இதழ் ஏதாவது
காரணங்களுக்காக முன்னிலைப்படுத்தும் கேள்விகள் இன்றியமையாமல்
நேர்காணலில் இடம்பெறுவது போல் தோன்றுகிறது. இது நேர்காணலின்
முக்கியமான அம்சம் அல்லவென்றால், ஓர் இலக்கிய வகை என்ற அளவில்
நேர்காணலை இந்த அம்சம் எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பற்றி
யோசிக்க வேண்டும். புதிய இலக்கிய வகைகளின் தரத்தை
நிர்ணயிப்பதில் சிறுபத்திரிகைகளுக்கு முக்கியமான பங்கு
இருப்பதால் இதைப் பற்றிய விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.
உள்ளடக்கம்
|