Google   www kalachuvadu.com

சந்திப்பு

இசை நாடகக் கலைஞரின் அனுபவப் பதிவு
கலைமாமணி கே.ஆர்.அம்பிகா

சந்திப்பு: தேவிபாரதி, சரஸ்வதி

தமிழின் மரபு சார்ந்த கலைகளுள் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டது இசை நாடகம். புராண, இதிகாச, மரபு சார்ந்த கதையாடல்களை எளிய பாடல்களின் மூலம் மக்களிடம் கொண்டுசென்ற இந்தக் கலைஞர்கள் தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றில் முக்கியமான இடம் பெற்றவர்கள். தமிழின் மரபான கலை வடிவமான தெருக்கூத்துக்கும் இசை நாடகத்திற்குமிடையே நெருக்கமான பிணைப்புகள் உள்ளன. ஒரு வகையில் தெருக்கூத்திலிருந்து பிறந்ததே இசை நாடகம் என்றுகூடச் சொல்லலாம். கூத்தின் பல கூறுகளை உள்வாங்கிக்கொண்டு உருவான நவீனக் கலை வடிவம் அது.

தமிழ் நாடக உலகின் தந்தையெனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளைத் தொடர்ந்து உருவான எண்ணற்ற கலைஞர்கள் அதை ஒரு மக்கள் கலையாக மாற்றினார்கள். சுவாமிகளின் வழியைப் பின்பற்றித் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் நூற்றுக்கணக்கான நாடகக் குழுக்கள் உருவாயின. 'பாய்ஸ் நாடகம்' எனவும் 'ஸ்பெஷல் நாடகம்' எனவும் அழைக்கப்பட்ட இக்குழுக்களைச் சேர்ந்த கலைஞர்களில் பலரும் தெருக்கூத்துக் கலைஞர்களே. சுவாமிகளின் மூலப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு தமக்கான புதிய பிரதிகளைத் தாம் வாழும் பிரதேசங்களின் தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கிக்கொண்ட இவர்கள் சமகால வாழ்வைத் தமது கதையாடல் வெளியில் மிதக்கவிடும் நுட்பம் கொண்டவர்கள். 1940களில் பல இசை நாடகக் குழுக்கள் விடுதலைப் போராட்டத்திற்குத் துணைபுரியும் பல பிரச்சாரப் பாடல்களை நாடக அரங்குகளில் பாடியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கொண்ட இக்கலைஞர்கள் பலரின் சொந்த வாழ்வு பெரும் சிதைவுகளுக்குள்ளான ஒன்று; துயர் நிரம்பிய கதையாடல்களின் சாயல்களைக் கொண்டது- குறிப்பாகப் பெண் கலைஞர்களின் வாழ்வு. வறுமை தவிர வேறு பல நெருக் கடிகளையும் எதிர்கொண்டவர்கள் இவர்கள்.
சென்ற நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் இசை நாடகம் பெற்றிருந்த செல்வாக்கு, தற்போது திரைப்படங்கள் பெற்றிருக்கும் செல்வாக்குக்கு நிகரானது. பட்டி தொட்டியெங்கும் பிரசித்தி பெற்ற பல கலைஞாகள் இசை நாடக உலகில் இருந்தார்கள். தமிழில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டபொழுது நாடக உலகில் அனுபவம் பெற்ற கலைஞர்களே அவற்றில் பங்கெடுத்தார்கள். சென்ற நூற்றாண்டின் 90கள் வரை செல்வாக்குப் பெற்றுவந்த இந்த இசை நாடகக் கலை, 90களுக்குப் பிறகு நவீன ஊடகங்களின் பெருக்கத்தாலும் மக்களின் ரசனை மாற்றத்தாலும் ஆபாச நடனங்களாலும் அபத்தமான நகைச்சுவைகளாலும் இன்று தனது செல்வாக்கை இழந்துவருகிறது. இதன் அழிவைப் பொருமல்களோடும் துயரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும் மூத்த இசை நாடகக் கலைஞர்களில் கரூர் 'கலைமாமணி' கே.ஆர். அம்பிகாவும் ஒருவர்.

கடந்த நூற்றாண்டில் முதல் 40 ஆண்டுகள் வரை இசை நாடகத்தில் கொடிகட்டிப் பறந்த புகழ்மிக்க கலைஞரான 'தாடிக்கொம்பு' பொன்னையாவின் மகள் அம்பிகா. இவரது தாயார் கோகிலம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் தாடிக்கொம்பு. பொன்னையாவின் சொந்த ஊர் அது. 'ராமானுஜம் நாடக சபா' என்ற பாய்ஸ் நாடகக் குழுவை ஏற்படுத்தி, கலைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளைத் தந்தவர். பின்னாளில் அது 'பால சரஸ்வதி நாடக சபா'வாக உருப்பெற்றுப் பெரும் செல்வாக்குப் பெற்றது.

ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடக உலகில் 'ராஜபார்ட்' என்னும் ஆண் வேடம் புனைந்து 'ராஜ நடிகை' என்று போற்றப்பட்டவர் அம்பிகா. அரை நூற்றாண்டுக் காலம் இசை நாடகக் கலைஞராகக் கொடிகட்டிப் பறந்த அம்பிகா, கரூர் நாடக நடிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அந்தக் காலகட்டத்தில் நாடகக் கலைஞர்களின் வாழ்வை மேம்படுத்தவும் நாடகக் கலையை நலிவிலிருந்து மீட்டெடுக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டவர். 1995ஆம் ஆண்டில் 'கலைச் செல்வம்' விருதையும் 2000இல் 'கலைமாமணி' விருதையும் பெற்றவர்.

எழுபது வயதை நெருங்கிவிட்ட அம்பிகா இன்றும் இசை நாடக உலகில் பொருட்படுத்தப்படும் ஒரு மூத்த கலைஞராகவே கருதப்படுகிறார். இன்றும்கூட அவரால் பாடி நடிக்க முடிகிறது. கரூர், திண்டுக்கல், ஈரோடு, மணப்பாறை பகுதிகளில் அம்பிகாவின் பெயரை நினைவுகூரும் நாடக ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

நாடகத் துறையில் ஈடுபட்ட சிறந்த நடிகைகளில் பலரது வாழ்வு பெரும் சோதனைகளுக்கு உட்பட்டது; ஆதரவற்றவர்களாகவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் தமது இறுதிக் காலங்களைக் கழித்தவர்களே அதிகம். ஆனால் அம்பிகா வெற்றிகரமான கலைஞராகவும் பொறுப்பு மிகுந்த குடும்பத் தலைவியாகவும் திகழ்பவர். அவருடைய இரு மகள்களில் ஒருவரான இந்திரா இப்பொழுது இசை நாடக உலகில் அம்பிகாவின் இடத்தைப் பூர்த்தி செய்பவராகத் திகழ்கிறார். அம்பிகாவின் கலை உலகம், வாழ்க்கை பற்றிய விவரணப் படம் ஒன்றை 'ஸ்பாரோ'வுக்காக எழுத்தாளர் அம்பை 2002இல் தயாரித்துள்ளார்.

சென்ற ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது நடந்த சந்திப்பில் தனது வாழ்வைப் பற்றியும் கலையைப் பற்றியும் விரிவாக எங்களுடன பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

n n n

"சினிமா, டி.வி. எல்லாவற்றிலும் சகிக்க முடியாத ஆபாசம்"

அந்தக் காலத்தில் என்னுடைய அப்பா தாடிக்கொம்பு பொன்னையா பெரிய நடிகர். 'ராமானுஜ நாடக சபா'விற்கு அவர்தான் வாத்தியார்; பெண் வேடங்களிலும் நகைச்சுவை நடிப்பிலும் கொடிகட்டிப் பறந்தவர். குறிப்பாக 'ஸ்திரீ பார்ட்'டில் அவருக்கு இணையாக நடிக்க யாரும் இல்லை; வெறும் பாவனைகளாலேயே 'பெண்'ணை மேடையில் உருவாக்கிக் காட்டிவிடுவார். பெரும் குடிகாரர்; நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது இவர் மேடையின் திரைக்குப் பின்னால் போதையில் உருண்டு கிடப்பார். 'பொன்னையா எங்கே, அவரைக் கூப்பிடுங்கள்' என்று பார்வையாளர்கள் தவித்துப் போய்க் கூச்சலிடுவார்கள். பொன்னையா அவசர அவசரமாக எழுந்து நெற்றியில் ஒரு சாந்தைத் தீற்றிக்கொண்டு ஒரு வேஷ்டியை மாராப்பாகப் போட்டுக்கொண்டு தலைவிரிகோலமாக மேடைக்கு ஓடி வருவார். சிறந்த நகைச்சுவை நடிகரான அவர் 'அரிச்சந்திரா'வின் மயான காண்டத்தில் சந்திரமதியாகப் புலம்பியழும் காட்சியில் பார்வையாளர்களைக் கலங்க வைத்துவிடுவார். பின்னாளில் நானே பல முறை லோகிதாசனாக அவருடைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்போது எனக்கு வயது நான்கு. என் நாடக வாழ்விற்குத் தாயாக இருந்தவர் என் அப்பாதான்.

திண்டுக்கல் பக்கத்தில் உள்ள குழிப்பட்டிதான் என் அம்மா பிறந்த ஊர். அங்கெல்லாம் அப்பொழுது காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகம். என் தாயாரின் அம்மா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். ஐந்து பெண்கள், ஐந்து ஆண் குழந்தைகளோடு வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த என் தாத்தா தனது எல்லாக் குழந்தைகளையும் எனது தந்தையின் பாய்ஸ் நாடகக் குழுவில் சேர்த்துவிட்டார். அந்தக் காலத்தில் இப்படித்தான் குழந்தைகள் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்க்கப்பட்டார்கள். பிறகு உடனடியாகவே நடிக்கத் தொடங்கிவிடுவார்கள். கம்பெனிகளில் வாழும் குழந்தைகளுக்கு நடிப்புதான் வாழ்க்கை. ஒவ்வொரு நாடகமும் நூற்றுக்கணக்கான இசைப் பாடல்களால் ஆனது. ஒவ்வொருவரும் எல்லாப் பாடல்களையும் மனனம் செய்திருக்க வேண்டும். எல்லாரும் எந்த நேரத்திலும் எந்த வேடத்தையும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்க வேண்டும். ஓயாத பயிற்சியால் அனைத்து நடிக நடிகைகளுக்கும் இயல்பாகவே அது கைகூடிவிடும். நான் எனது சிறு வயதிலேயே பிரகலாதன், லோகிதாசன், புலேந்திரன், கண்ணன் எனப் பல வேடங்களில் நடித்திருக்கிறேன்.

என் தந்தையின் நாடகக் கம்பெனிக்குப் பத்துப் பன்னிரெண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. அதில்தான் கொட்டகைகளும் பயிற்சிக் கூடங்களும் அடங்கிய முழு அளவிலான பாய்ஸ் நாடகக் கம்பெனி இருந்தது. நாடக வாழ்வைத் தேர்ந் தெடுத்துக்கொண்ட எல்லோருக்கும் அதுதான் வீடு. அங்கேயே தங்கி வாள் சண்டை, குத்துச் சண்டை, களறி, மல்யுத்தம் என எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். நடிகர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகப் பல குதிரைகளை வைத்திருந்தார்களாம். எல்லாம் தானமாகப் பெற்றவை. பழையகோட்டை பட்டக்காரர்கூடப் பல குதிரைகளைத் தானமாகக் கொடுத்திருந்தார். திரைச் சீலைகள், அரங்கப் பொருள்கள் என மேடைக்கான எல்லாச் சாதனங்களையும் வடிவமைக்கவும் தமக்குத் தாமே ஒப்பனை செய்துகொள்வதற்குமான பயிற்சியையும் முறையாகப் பெற்றவர்களாக பாய்ஸ் நாடகக் குழுவின் நடிகர்கள் விளங்கினர். நாளெல்லாம் குரல் பயிற்சி கொடுப்பார்கள். நாடகத்திற்கு நல்ல சாரீரம் அவசியமல்லவா? எவ்வளவு கரடு முரடான தொண்டையைக் கொண்டிருந்தாலும் நாடகத்திற் கென்று வந்துவிட்டால் சாரீரம் இளகிவிடும். மென்மையும் லயமும் தானாகவே உருப்பெற்றுவிடும்.

என் அம்மா சில காலமே நடித்தார். வயதுக்கு வந்தவுடன் என் தாத்தா அவர்களைத் திரும்ப ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ஆனால் அம்மாமீது அப்பா காதல் கொண்டிருந்ததால் அவர் அம்மாவைத் திருமணம் செய்து திரும்ப அழைத்து வந்துவிட்டார். திருமணத்திற்குப் பிறகு அம்மா நடிக்கவில்லை; அப்பாவுக்குத் துணையாக இருந்தார்.

ஆனால் குடிப்பழக்கமும் எண்ணற்ற பெண் தொடர்புகளும் அப்பாவைச் சீரழித்துக்கொண்டிருந்தன. எப்பொழுதும் குடிதான். நாடகக் கலைஞர்களுக்கு எல்லாம் தானமாகவே கிடைத்தன. அப்பா பெண் வேடம் ஏற்று நடித்ததால் மக்கள் அவருக்கு விலையுயர்ந்த பட்டுப் புடவைகளைப் பரிசாகக் கொடுப்பார்கள். வெள்ளி ஜரிகைகளாலான பட்டுப் புடவைகள்; நூற்றுக்கணக்கான ரூபாய் மதிப்பிலானவை. அந்தக் காலத்தில் அவற்றின் மதிப்பு மிக அதிகம். இன்றைக்கெல்லாம் அவற்றின் மதிப்பு லட்சக் கணக்கில்கூட இருக்கும்; குடிப்பதற்காக எல்லாவற்றையும் பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் அடகுவைத்து விடுவார். ஒரு சமயத்தில் ஊரில் பல பெண்களிடத்தில் அப்பா தானமாகப் பெற்றுவந்த புடவைகளைப் பார்த்திருக்கிறேன். பெண்களும் தானமாகவே கிடைத்தார்கள் அப்பாவுக்கு. அவருடைய கலைக்கு மயங்கிய பெண்கள் அவரை ஓயாமல் வசீகரித்துக் கொண்டே இருந்தார்கள்.

கடைசியில் மகத்தான கலைஞரான என் அப்பா ஒரு மேக நோயாளியாகிவிட்டார். அந்தக் காலத்தில் இந்த நோய்க்கு வைத்தியம் இல்லை. நாட்டு வைத்தியத்தில் குதிரைச் சாணத்தைச் சுட்டு அதன் சாம்பலை உடம்பில் பூசிக்கொண்டு கழுத்துவரை ஆற்று மணலில் புதைந்து நிற்கச் சொன்னார்கள். ஆனால் அதனால் பலன் எதுவும் இல்லை. கடைசிக் காலத்தில் பெரும் துன்பத்தை அனுபவித்த அந்த நகைச்சுவைக் கலைஞன் என் ஒன்பதாம் வயதில் என்னையும் என் அம்மாவையும் நிர்க்கதியாய் விட்டுவிட்டுச் செத்துப்போனார்.

அப்பா சாகும் தறுவாயில் தனக்குப் பிறகு லட்சுமண்பட்டிக்குப் போய்விடுமாறு எங்களுக்குச் சொல்லியிருந்தார். கரூரிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது லட்சுமண்பட்டி. கலைஞர்களைச் சீராட்ட எண்ணற்ற நிலக்கிழார்கள் அங்கு இருந்தார்கள். அப்பா இருந்தபோது பல முறை அந்த ஊரில் மாதக் கணக்கில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தியிருக்கிறோம். அந்தப் பகுதியிலுள்ள இசை நாடகக் கலைஞர்களுக்கு அன்று அப்பாதான் குரு. தந்தையை இழந்து நிராதரவராய் அந்தக் கிராமத்திற்கு வந்து நின்ற எங்களை அந்த ஊர்தான் அரவணைத்தது. தங்குவதற்கு வீடும் பிழைப்புக்கு வேலையும் கிடைத்தன. அம்மா விவசாயக் கூலி வேலை செய்துதான் என்னைக் காப்பாற்றினார். நான் காடுகளில் ஆடுகளை மேய்ப்பேன்.

அம்மாவுக்கு அப்பாவுடனான பழைய கலை வாழ்வை மறக்க முடியவில்லை. தாடிக்கொம்பு பொன்னையாவின் பெயர் சொல்ல அவர் விட்டுச் சென்றது என் ஒருத்தியை மட்டும்தான்.

திடீரென அம்மா ஒரு நாள் மதுரைக்குப் புறப்பட்டுப் போனார். இரண்டு மூன்று நாள்கள் கழித்துத் திரும்பி வந்தபோது சங்கரதாஸ சுவாமிகளின் நாடகப் பிரதிகளைக் கொண்டுவந்தார். நான் ஆடு மேய்த்துக் கொண்டே ஒவ்வொரு பாடலாக மனனம் செய்யத் தொடங்கினேன். வயல்வெளிகளில் அம்மா எனக்குக் கலையைப் போதித்தார்; ராகங்களையும் பாவங்களையும் சொல்லிக் கொடுத்தார்; நடனம் கற்றுக்கொடுத்தார். எங்குப் பார்த்தாலும் முதிர்ந்த வேப்ப மரங்களைக் கொண்டவை லட்சுமண்பட்டியின் மேய்ச்சல் நிலங்கள். அவற்றிற்குக் கீழேதான் நான் பாதம் பதித்து ஆடத் தொடங்கினேன். புழுதி பறக்கும். இடையர்கள் தங்களுடைய ஆடுகளை விட்டுவிட்டு வந்து என்னைச் சூழ்ந்து கொள்வார்கள். நிலாக் காலங்களில் விடிய விடியத் தீராமல் பயிற்சி நடக்கும். நான் நன்றாகக் கற்றுக்கொள்ளும் வரை அம்மா தூங்கவில்லை. சரியாகச் சாப்பிடக்கூட மாட்டார். அம்மா இல்லாவிட்டால் அம்பிகாவும் இல்லை, கலையும் இல்லை. 11 வயதில் நான் மறுபடியும் மேடையேறினேன்.

தொடக்கத்தில் வெறும் நடன மங்கையாக மேடையேறினேன். பிறகு ஒவ்வொரு வேடமாய் நிறைய வேடம் ஏற்று இசை நாடகத்தில் கவனம் பெற்றேன். 12 வயதில் முதன் முதலாக ராஜபார்ட் வேடம் தரிக்க வாய்த்தது எனக்கு. மதுரை வீரன் நாடகத்தில் முத்து வீரன் பாத்திரம். மிகுந்த கோபமும் சீற்றமும் கொண்ட மதுரை வீரன் வேடத்தை ஏற்க ஆண்களே மிகப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். சுழன்றெரியும் நெருப்பில் மதுரை வீரனின் கண்கள் ஜொலிக்க வேண்டும். நடிகனுக்கு அப்பொழுது அருள் வந்துவிடும். ஆண் நடிகர்களே ஏற்கத் தயங்கும் வேடத்தை நான் ஏற்று நடித்தேன். எனக்குப் பெரும்புகழ் கிடைத்தது இதில்தான். பின்னர் பல நாடகங்களிலும் 'ராஜபார்ட்' வேடம் என்றாலே அம்பிகாதான் என்று ஆகிவிட்டது. அரிச்சந்திரன், கோவலன், முருகன், காத்தவராயன், சிவன், அர்ஜுனன், பீமன், நளன் எனப் பல வேடங்களை ஏற்று 'ராஜ நடிகை' என்று பெயர் வாங்கினேன். என் சமகாலத்தில் அப்படிப் பெயர் வாங்கிய நடிகைகள் மெய்ஞான வள்ளி, சந்தானலட்சுமி என வெகு சிலர் மட்டுமே.

எவ்வளவோ கலைஞர்கள் இருந்தார்கள். எல்லோரையும் சீராட்டியது தமிழ்ச் சமூகம். கார்த்திகையிலிருந்து வைகாசிவரை கிட்டத்தட்ட ஆறு மாத காலம் அலுப்பிலிருந்து மக்களை மீட்டெடுத்தவை இசை நாடகங்களும் கூத்தும்தான். வெறும் கேளிக்கையாக அல்லாமல் மக்கள் தமது வாழ்வின் ஒரு பகுதியாகக் கலையை நேசித்த காலம் அது. நாடகங்களின் கதையாடல்களோடும் பாத்திரங்களோடும் மக்கள் உணர்ச்சிபூர்வமாக ஒன்றிப் போயிருப்பார்கள். அரிச்சந்திரா நாடகத்தில் மயான காண்டத்தில் சந்திரமதி புத்திர சோகத்தில் புலம்பியழும்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பார்வையாளரும் தேம்பியழும் சப்தத்தைக் கேட்க முடியும். ஆண்களின் கண்களும்கூடத் தளும்பி நிற்கும். அப்படியொரு விளைவைப் பார்வையாளர்களிடம் உருவாக்க முடியாத ஒரு நடிகனையோ நடிகையையோ மக்கள் அங்கீகரிக்கமாட்டார்கள்.

ஒரு சமயம் கரூருக்குப் பக்கத்தில் குன்னுடையக் கவுண்டன் கதை நடந்து கொண்டிருந்தது. படுகளத்தில் அண்ணன் மார்கள் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்த தங்கா துயர் தாளாமல் புலம்பியழும் ஒரு கட்டம் உண்டு. மூன்று நான்கு மணிநேரம் புலம்பியழுவாள் தங்கா. நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்லி ஒரே மூச்சில் அழுது தீர்க்க வேண்டும். தங்காளின் வேடம் தரித்த ஒரு ஆண் நடிகர் எல்லாப் பாடல்களையும் சொல்லிச் சொல்லிப் பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தார். ஆனாலும் பார்வையாளர்களிடமிருந்து அழுகுரல்கள் வரவில்லை. கோபம் கொண்ட நாடக வாத்தியார் பொது மக்கள் முன்னிலையில் அந்த நடிகரை அடித்துவிட்டார். கூட்டம் ஸ்தம்பித்துப்போனது. அடி வாங்கிய நடிகர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தொடர்ந்து நடித்தார். சில நிமிடங்களில் அவர் தன் பார்வையாளர்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்துவிட்டார்.

தொழிலோடு உணர்வுபூர்வமான பிணைப்பும் ஈடுபாடும் இல்லாமல் மேடையேற முடியாது. நாங்கள் தெய்வங்களாக வேடம் தரிக்கும்பொழுது மக்கள் எங்களைத் தெய்வங்களாகவே மதித்தார்கள். மாரியம்மனாக நடிக்கும்பொழுது குழந்தைகளைக் கொண்டுவந்து எங்கள் முன்னால் கிடத்தி ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். நோயுற்றவர்கள் தமது நோய் குணமாக எங்களிடமிருந்து திருநீறு பெற்றுச் செல்வார்கள். ஒரு ஊரில் நாடகம் நடக்கிறதென்றால் சுற்றுப்பட்டிப் பதினெட்டு ஊர் மக்களும் நாடகம் பார்ப்பதற்காகத் திரண்டு வந்துவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் இவ்வளவு போக்குவரத்து வசதி கிடையாது. வண்டி கட்டிக்கொண்டுதான் வருவார்கள். இரட்டை மாட்டு வண்டிகள். மேலே மூடாக்கெல்லாம்கூட இருக்காது.

வெயிலோ மழையோ பொருட்படுத்தாமல் வருவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடகத்தையும் பல முறை பார்த்திருப்பார்கள். புதிதாகப் பார்ப்பவர்கள் வெகு குறைவு. பலருக்கு நாடகங்களின் வசனங்களும் பாடல்களும் மனப்பாடமாய்க்கூட இருக்கும். நாடகம் நடக்கும்பொழுது கூடச் சேர்ந்து பாடலை முணுமுணுக்கும் ரசிகர்கள் அநேகம். ஒரு வரி விடுபட்டுவிட்டால், பாவம் மாறிவிட்டால் அப்பொழுதே தங்களுடைய ஆட்சேபணையைத் தெரிவிப்பார்கள். அவ்வளவு ஈடுபாடு. இழவு வீடுகளில் பெண்கள் பாடும் ஒப்பாரிப் பாடல்கள் எல்லாம் இசை நாடகங்களிலிருந்து பெறப்பட்டவையே. அவ்வளவு ஏன், புருஷன் பெண்டாட்டியை அடித்துவிட்டால் வீட்டின் மூலையில் உட்கார்ந்துகொண்டு அழும் ஒரு பெண்ணின் புலம்பல்களைக் காதுகொடுத்துக் கேட்டுப் பாருங்கள்; அது கோவலன் நாடகத்தில் கண்ணகி புலம்பியழும் அதே பாடல் வரிகளாகத்தான் இருக்கும். நாடகத்தைப் பார்த்து அழுவதற்கு எங்கள் பெண்கள் கற்றுக்கொண்டார்களா அல்லது அவர்கள் புலம்பியழுவதைப் பார்த்து நாடகம் எழுதினார்களா என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மக்களின் சமகால வாழ்வைப் பிரதி பலிக்கக்கூடியவை இசை நாடகங்கள்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் எண்ணற்ற இசை நாடகக் கலைஞர்கள் தமது நாடகங்களில் விடுதலை உணர்வை ஊட்டும் பாடல்களைப் புகுத்தியிருக்கிறார்கள். நாற்பதுகளில் நாங்கள் நடத்திய காத்தவராயன் நாடகத்தில் ஆரியமாலாவைச் சிறை மீட்கக் காத்தவராயன் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பற்றிப் பாடும் கட்டத்திலெல்லாம் நாடகக் கலைஞர்கள் இந்திய விடுதலையைப் பற்றித்தான் பாடுவார்கள். பல நாடகங்கள் காங்கிரஸின் பிரச்சார நாடகங்களாகவே இருந்தன.

சுதந்திரத்திற்குப் பிறகு நான் நடத்திய பல நாடகங்களில் காமராஜரின் புகழ் பாடும் பல பாடல்களைப் பாடியிருக்கிறேன். ஒரு சமயம் காமராஜரின் வாழ்க்கைச் சரிதத்தையேகூட நாடகமாக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது. ஐம்பதுகளிலெல்லாம் பெரியாரும் அவருடைய சுயமரியாதை இயக்கமும் என்னை வெகுவாக ஈர்த்தனர். எனது நாடகங்களில் சுயமரியாதைப் பிரச்சாரத்தை வெளிப்படையாகவே செய்தேன். பகுத்தறிவுப் பிரச்சாரம் இசை நாடகங்களின் உள்ளடக்கங்களுக்குப் பொருந்தவில்லை. எனினும் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பினோம்.

எனது நாடகங்கள் பெண்களின் துயரங்களை உரத்த குரலில் சொல்பவை. பொதுவாக நமது நாடகங்களே பெண்களின் துயரத்தைப் பேசுபவைதான். உதாரணமாக நல்லதங்காள் கதை. ஒரு காலத்தில் நல்லதங்காள் தமிழ்ப் பெண்கள் படும் துயரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாள். நல்லதங்காளின் துயரத்தைக் கேட்டு அழக்கூட முடியாது. தாங்க முடியாத கொடுமைகளுக்குள்ளானவள் அவள். அந்தக் கதை நடக்கும் பொழுது பெண்கள் பேசக்கூடச் சக்தியற்றவர்களாய்க் கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய கண்களிலிருந்து தாரைதாரையாய் நீர் பெருகும். பெரும் குற்ற உணர்வைத் தூண்டும் அக்கதையை யாராலும் தொடர்ந்து பார்க்க முடியாது. அதனால் தானோ என்னவோ, அந்தக் கதை தொடர்ந்து நடிக்கப்படவில்லை. நல்லதங்காள் நாடகம் நடத்தினால் பஞ்சம் வந்துவிடும் எனச் சொல்லி அந்த நாடகத்தைத் தவிர்க்கத் தொடங்கினார்கள் மக்கள். ஓர் அளவுக்கு மேல் போனால் கலையில் கூடத் துயரத்தைச் சகித்துக்கொள்ள முடியாது எனத் தோன்றுகிறது.

ஆனால் நாடகங்களில் நடித்த பல பெண்களின் வாழ்க்கை துயரமானது. ஆண்களிலும்கூடப் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள்தான். கலைஞர்களின் மேல் பைத்தியமாக இருந்த ஆண்களாலும் பெண்களாலும் பல கலைஞர்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கல்யாணமே செய்துகொள்ளாமல் யாரையாவது சார்ந்திருக்கிறார்கள், பிறகு சிதைந்து போகிறார்கள். சிதைந்து போகாமல் என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நான் எனது வாழ்நாள் முழுவதும் போராடியிருக்கிறேன்.

அப்பொழுது இசை நாடகக் குழுக்கள் அடிக்கடி கேரளப் பகுதிக்குச் சுற்றுப் பயணம் செய்யும். கேரளாவில் கள்ளிக்கோட்டை, அட்ட மலை, நெடுங்கரணை போன்ற பகுதிகளில் உள்ள எஸ்டேட்களில் வேலை செய்யும் தொழிலாளர்களிடையே தமிழ் இசை நாடகக் குழுவிற்குப் பெரும் செல்வாக்கு இருந்தது. கேரளாவில் எனக்கு அம்பிகை என்று பெயர். ஓட்டைக் காசுகள் அப்பொழுது புழக்கத்திலிருந்தன. அவற்றின் மதிப்பு அரையணாவோ ஓரணாவோதான். ரசிகர்கள் அவற்றை மாலையாகத் தொடுத்துப் பிடித்தமான கலைஞர்களுக்கு அணிவிப்பார்கள். ஒவ்வொரு நாடகத்திலும் எனக்கு நிறையக் காசு மாலைகள் கிடைக்கும். வரும்பொழுது ஒரு டிரங்குப் பெட்டி நிறையக் காசு மாலைகளுடன் திரும்புவேன். அவற்றைக் கொண்டுதான் சொந்தமாகத் தோட்டம் வாங்கினேன்.

ஒரு கட்டத்தில் தி.மு.கழகத்தின் பிரச்சார நாடகங்களில் நடித்ததால் என்னை அந்தக் கட்சியைச் சேர்ந்தவளாகவே அனைவரும் நினைத்தனர். கரூர் தொகுதியில் தி.மு.க. சார்பாகத் தேர்தலில் போட்டியிடக்கூட அழைத்தார்கள். ஆனால் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. நாடகமே உலகம் என்றாகிவிட்டது.

என் மகள் இந்திரா இசை நாடக மரபை விடாது பின்பற்றிக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது நான் ஏற்று நடித்த பாத்திரங்களை இப்பொழுது அவள் ஏற்று நடிக்கிறாள். எனக்கு இது சந்தோஷமாக இருக்கிறது. ஆனாலும் இசை நாடக மரபின் இப்போதைய நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது. சினிமா, டி.வி. எல்லாவற்றிலும் சகிக்க முடியாத ஆபாசம். கலை உணர்வு கொஞ்சம்கூட இல்லை. இது போன்ற முயற்சிகளுக்குக் கிடைக்கும் ஆதரவு ஆரோக்கியமானதல்ல. இது சமூகத்திற்குப் பெரும் கேடு. நாம் நமது மரபான அடையாளங்களை நாகரீகத்திடம் இழந்துவிட்டோம்.

எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. கலை மரபுகளை ஒருங்கிணைத்து ஆற்றல் மிக்க கலைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். கலைமரபுகளுக்கான ஒரு பள்ளியை உருவாக்க வேண்டும். அதுவும் முழுக்க முழுக்கப் பெண்களால், பெண்களைக் கொண்டு உருவானதாக இருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் கனவுதான். வெறும் கனவு. என் காலத்திலேயே இசை நாடக மரபு மறைந்துவிடுமோ எனத் தோன்றுகிறது. கடைசிக் காலம்வரை பார்த்து ரசிக்கக்கூட அவை இல்லாமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது. அப்படி நேர்ந்துவிட்டால் அது எனக்குத் தனிப்பட்ட முறையில் பேரிழப்புதான்.

கட்டுரை வடிவம்: தேவிபாரதி

உள்ளடக்கம்

Google Ads.....


Google