Google   www kalachuvadu.com

தமிழ்நாடு சட்டப் பேரவையில்
ரவிக்குமார் நிகழ்த்திய முதல் உரை

மனித உரிமையின் குரல்

காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் 2006ஆம் ஆண்டு மே 27 அன்று நிகழ்த்திய உரை சட்டமன்றப் பதிவேட்டில் உள்ளவாறு இங்கு தரப்படுகிறது. கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டுச் சட்டமன்ற உறுப்பினர்களால் பாராட்டப்பட்ட இந்த உரையில் எழுப்பப்பட்ட ஒரு கோரிக்கை உடனடியாக ஏற்றுக்஢கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை குறித்த ரவிக்குமாரின் கோரிக்கையை முதல்வர் மு. கருணாநிதி ஏற்றுக்கொண்டார். தற்போது 700 ஆக உள்ள இந்த எண்ணிக்கையை 1000 படிகளாக உயர்த்துவதாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கான தனது பதிலுரையில் முதல்வர் அறிவித்தார்.

திரு. டி. ரவிக்குமார்: பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த மரபு மிகுந்த மாமன்றத்திற்கு நான் வருவதற்குக் காரணமாக இருந்து, தான் போட்டியிட இருந்த தொகுதியினை எனக்கு ஒதுக்கித் தந்து என்னைத் தன்னிடத்தில் இங்கே அனுப்பிவைத்திருக்கின்ற எங்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரும் எழுச்சித் தமிழருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கும் என்னுடைய வெற்றிக்காக உழைத்து 13,000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய, பாடுபட்ட ஜனநாயக மக்கள் கூட்டணியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே சுவாமி சகஜானந்தா காலத்திலிருந்து அரசியல் உணர்வோடு செயல்பட்டு அதே உணர்வைப் போற்றிப் பாதுகாத்து அதன் விளைவாக என்னைத் தங்களுடைய பிரதி நிதியாக இங்கே அனுப்பியிருக்கின்ற காட்டு மன்னார்கோயில் தொகுதி மக்களுக்கும் என்னுடைய நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு பண்டைக் காலத்திலே திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகளிலேயே சிறந்த உரை என்னவென்று கேட்டால் பரிமேலழகர் உரை என்று சொல்வார்கள். இன்றைக்கு நவீன காலத்து உரைகளிலே சிறந்த உரை எதுவென்று கேட்டால், அறிஞர் பெருமக்களெல்லாம் ஏற்றுக் கொள்கின்ற ஒரு அற்புதமான உரையைத் தந்து வள்ளுவத்தை தமது மூச்சாகக் கொண்டிருக்கின்ற முத்தமிழ் அறிஞரின் அவையிலே (மேசையைத் தட்டும் ஒலி) ஓர் எழுத்தாளனாக நானும் நின்று பேசுகின்ற ஒரு பெருமையைப் பெற்ற அந்த நிலையையும் எண்ணி இந்த ஆளுநர் உரைமீது என்னுடைய கருத்துகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இன்றைக்கு ஊடகங்களால் ஊதி வளர்க்கப்பட்டு இந்தியத் துணைக் கண்டமே ஏதோ கொந்தளிப்பில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர் கல்வி நிலையங்களிலே இடவொதுக்கீட்டு உரிமையை மறுத்திட வேண்டுமென்று நடக்கின்ற அந்தச் சதித் திட்டங்களுக்கு மைய அரசும் துணை போய்விடுமோ அல்லது பயந்து தயங்கிவிடுமோ என்கின்ற ஒரு அச்ச உணர்வு இன்றைக்கு நாட்டு மக்களிடத்திலே எழுந்திருக்கின்ற நிலையிலே மைய அரசு அந்த இடவொதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்றுவோம் என்று உறுதியோடு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்ற நேரத்திலே அதற்கு ஊக்கம் அளிக்கும்விதமாக இந்த மாமன்றத்திலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று எங்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் அறிக்கையின் வாயிலாக விடுத்த வேண்டுகோளை ஏற்கும் விதமாக இதே கூட்டத் தொடரிலேயே அதற்கான தீர்மானம் நிறைவேற்றப் படுமென்று ஆளுநர் உரையிலே அறிவித்து இன்றைக்கு இந்த நாட்டிலே இருக்கின்ற ஒடுக்கப்பட்ட கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இந்த அரசின் அறிவிப்பை நான் வரவேற்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி.)

அதே நேரத்திலே இன்றைக்கு மத்திய அரசு அமைத்திருக்கின்ற அந்த அமைச்சர்கள் குழு, அவர்கள் அந்த உயர் கல்வி நிலையங்களிலே இடங்களை உயர்த்திக் கொள்ளலாம் என்கின்ற ஒரு பரிந்துரையை வழங்கியிருக்கின்றார்கள். அப்படியான பரிந்துரை என்பது இடவொதுக்கீடு தொடர்பாக இதுகாறும் பேணப்பட்டு வந்த மரபுக்கும் அரசியலமைப்புச் சட்ட விதிமுறை களுக்கும் முரணானது. அப்படி இடங்கள் உயர்த்தப்படுமேயானால் அந்த இடங்களிலும் இடவொதுக்கீட்டினை வழங்க வேண்டுமென்ற திருத்தம், நாம் கொண்டுவருகிற தீர்மானத்திலே சேர்க்கப்பட வேண்டுமென்று இந்த மாமன்றத்தின் முன்னே தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இடவொதுக்கீட்டைக் காப்பதிலே நாம் எந்த அளவுக்கு அக்கறை யோடு இருக்கின்றோமோ, அதற்காக இந்த அவையிலே தீர்மானம் இந்தத் தொடரிலேயே நிறைவேற்றப்படுமென்று அறிவித்திருக்கின்றோமோ அப்படியே மிக அண்மையில் இருக்கின்ற... நம்முடைய சொந்தங்கள், ஈழத் தமிழர்கள்மீது இன்றைக்குப் பேரினவாதிகளால் ஒரு யுத்தம் வலிந்து திணிக்கப்படுகிறது. அது பற்றியும் கவலை தெரிவித்து இதிலே குறிப்பிடப்பட்டிருந் தாலும்கூட, இன்றைக்கு அவர்கள் எப்போது தங்கள் தலையிலே குண்டு விழுமோ தங்கள் உயிர்கள் பறிக்கப்படுமோ என்கிற அச்சத்தின் காரணமாக ஏதிலிகளாகத் தஞ்சம் தேடி நமது மண்ணை நோக்கி ஓடி வரும்போது கடலிலேயே ஜல சமாதி அடைகின்ற கோரக் காட்சிகளை நாம் கண்டுகொண்டிருக்கின்றோம். இந்த நிலையிலும் நாம் பாராமுகமாக இருந்து விடாமல், நாம் எல்லாம் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றோம் என்று இந்த உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அந்த நாட்டிலே வலிந்து திணிக்கப்படுகின்ற யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். அமைதியான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்கின்ற தீர்மானத்தை நாம் இந்த அவையிலே, இதே கூட்டத் தொடரிலே ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த ஆட்சிக் காலத்திலே கொண்டுவரப்பட்ட திட்டம் என்று புறக்கணித்துவிடாமல், ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவும் என்கிற விதத்திலே பெருந்தன்மையோடு இலவச மிதிவண்டி திட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்கின்ற உறுதி மொழியை இந்த அரசு வழங்கி இருக்கிறது. அது மிகவும் பாராட்டுக்குரியது. (மேசையைத் தட்டும் ஒலி).

அதே பெருந்தன்மையோடு உழவர் பாதுகாப்புத் திட்டத்தையும் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று உங்களைக் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக, இந்த ஆளுநர் உரையிலே பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும்கூட, கல்விக்காகக் காட்டப்பட்டிருக்கின்ற அக்கறை மிகவும் முக்கியமானது. மிகவும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய அந்த அக்கறை, நுழைவுத் தேர்வை ரத்து செய்வதிலும் கல்விக் கட்டணங்களைக் குறைப்போம் என்று சொல்வதிலும் பள்ளிகளிலே, கல்லூரிகளிலே ஆசிரியர்களை டைம் ஸ்கேல் (Time Scale) அடிப்படையிலே நியமித்து, மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவோம் என்று சொல்வதிலும் அந்த அக்கறை வெளிப்பட்டிருக்கின்றது. இது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

அதே நேரத்திலே, இதற்கு முன்னாலே நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த காலத்திலே, அறிமுகப் படுத்தப்பட்டு, பின்னாலே 25 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, இன்றைக்கு நீதிமன்றங்களுடைய தலையீட்டினாலே பறிக்கப்பட்டிருக்கின்ற கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு என்கின்ற அந்த உரிமையை மீண்டும் பெறுவதற்கு, நேற்றும்கூட இந்த அவையிலே அது பற்றிய விவாதங்கள் நடந்தன. உச்ச நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கின்ற அந்த வழக்கை துரிதப்படுத்தி, வரும் கல்வி ஆண்டிலேயே அந்த இட ஒதுக்கீட்டு உரிமையை அந்த மாணவர்களுக்கு மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

(மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் தலைமை.) அதுமட்டுமல்லாமல், இன்றைக்கு மருத்துவப் படிப்பிற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டியிட்டும், நல்ல மதிப்பெண்களைப் பெற்றும், அவர்கள் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம், போதுமான மருத்துவக் கல்லூரிகள் நம் மாணவர்களுடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய கல்வி நிலைக்கும் ஏற்ற விதத்திலே, அந்த விகிதத்திலே போதுமான மருத்துவக் கல்லூரிகள் நமது மாநிலத்திலே இல்லை. இன்றைக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைநகரங்களிலே மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளோடு சேர்த்து 50 இடங்கள் கொண்ட ஒரு மருத்துவக் கல்லூரியைத் துவக்குவது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. இன்றைக்கு மத்தியிலே சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கின்றவர் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்கின்ற காரணத்தினாலே, இப்படியான ஒரு திட்டம் வந்தால் அவரும் உங்களுக்கு ஒத்துழைப்பார். எனவே, மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை (இந்த இடத்திலே அமைச்சர் மாண்புமிகு ஆர்க்காடு வீராசாமி அவர்கள் குறுக்கிட்டு ஒரு விளக்கத்தை அளித்தார். 1996-2001 ஆண்டு காலத்தில் மாவட்ட தலைநகரங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கொள்கை முடிவை தி.மு.க. அரசு அறிவித்தது. அதன்படி வேலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. இப்போது விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். அதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.)

திரு. டி. ரவிக்குமார்: உடனடியாகவே அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக அறிவிப்பு செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி. அடுத்து, தந்தை பெரியார் அவர்களுடைய நெஞ்சிலே தைத்த முள்ளைக்களையும்விதமாக, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற ஒரு புரட்சிகரமான சட்டத்தை இன்றைக்கு இந்த அரசு நிறைவேற்றியிருக்கின்றது. அதை மனப்பூர்வமாக வரவேற்கின்ற அதே நேரத்திலே, அந்தச் சட்டத்தை இந்து அறநிலையத் துறைக்கு உட்படாத அனைத்து இந்துக் கோயில்களுக்கும் விரிவுபடுத்தி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம், அனைத்து இந்து கோயில்களிலும் அர்ச்சகராகலாம் என்று அதனை அறிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

அனைத்து மதங்களிலும் உள்ள ஆதி திராவிடர்களுக்கு, ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விரிவுபடுத்தப்படும் என்று ஒரு சிறப்பான அறிவிப்பை ஆளுநர் உரையிலே வெளியிட்டிருக்கின்றீர்கள். அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு அறிவிப்பு. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தைவிட்டு விலகி, பௌத்தத்தை ஏற்று இந்த ஆண்டு 50 ஆண்டுகளை எட்டுகிறது. அந்த மத மாற்றத்தின் பொன்விழா ஆண்டு இது. இந்த ஆண்டிலே இந்த அனைத்து மதங்களிலும் உள்ள ஆதி திராவிடர்களுக்கான சலுகைகள் விரிவுபடுத்தப்படும் என்கின்ற அந்த அறிவிப்பை, நீங்கள் குறிப்பான சட்டமாகத் தலித் கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு, இஸ்லாத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீட்டு உரிமை என்று குறிப்பான சட்டங்களாக, அதிலும் குறிப்பாக, அந்த மதமாற்றப் பொன்விழாவில், அக்டோ பர் மாதத்திற்குள்ளாக அறிவித்து, அதைப் பெருமைப்படுத்த வேண்டுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தை வாங்கித் தந்த செயலை உலகத் தமிழர்கள் எல்லோருமே பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால், அந்தச் செம்மொழி என்கின்ற அந்தப் பெருமை, தமிழை நாம் இன்னும் ஆற்றல்கொண்ட மொழியாக, அறிவியல் மொழியாக வளர்த்தெடுப்பதிலேதான் தங்கியிருக்கின்றது. இன்றும் கூட ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள், அவையெல்லாம் படியெடுக்கப்பட்டாலும்கூட, தொகுத்து ஆவணப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இன்னும் படியெடுக்கப்படாத கல்வெட்டுகள் நம்முடைய கோயில்களிலே, சிற்றூர்களிலே நிறைந்து கிடக்கின்றன. உலகத்திலேயே ஒரு வரலாற்றை உருவாக்கு வதற்கு ஆதாரங்களாக இருக்கின்ற கல்வெட்டுகள் நிறைந்த பகுதிகளிலே, மிகக் குறைந்த பகுதிகளிலே ஒன்றாகத் தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கின்றது. அப்படி நம்முடைய தொன்மையான நாகரிகத்தின் வரலாற்றை நாம் தோண்டியெடுக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கான ஆவணங்களாக, ஆதாரங்களாக இருக்கின்ற அந்தக் கல்வெட்டுகளையெல்லாம் நாம் படியெடுத்து, தொகுத்து, படியெடுக்கப்பட்ட அந்தக் கல்வெட்டுகளையும் நாம் ஆவணங்களாக மாற்ற வேண்டும். அப்படியெல்லாம் செய்தால்தான் இந்தச் செம்மொழிச் சிறப்பு என்பது பாதுகாக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தினுடைய வரலாற்றைச் சார்ந்த பல்வேறு ஆவணங்கள் இன்றைக்கு லண்டனில் உள்ள ஆவணக் காப்பகங்களிலே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்குத் தமிழகத்தின் வரலாற்றைப் பற்றி எழுதக்கூடியவர்கள், லண்டனுக்குச் சென்று அந்த ஆவணங்களைப் பார்ப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமாகக்கூடிய காரியம் அல்ல. அப்படித் தமிழகம் தொடர்பாக லண்டன் ஆவணக் காப்பகத்திலே என்னென்ன ஆவணங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றதோ, அவற்றின் படி ஒன்றை நாம் கேட்டுப்பெற்று, அவற்றை நம்முடைய தமிழ்நாட்டு ஆவணக் காப்பகத்திலே வைத்தால், தமிழகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கிறவர்களுக்கு அது உதவியாக இருக்கும். இந்தக் கோரிக்கையையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தாழ்த்தப்பட்ட மக்களுடைய மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகிற நிதி போதுமானதாக இல்லை என்கின்ற காரணத்தினாலும், இன்னும் அவர்களது வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கோடும், 20 ஆண்டுகளுக்கு முன்பே மைய அரசு சிறப்புக் கூறுகள் திட்டம் (Special Component Plan) என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.

அதன்படி, ஒவ்வொரு மாநில அரசும் தங்களுடைய நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்குகின்ற நிதியிலே, அந்தந்த மாநிலத்திலே இருக்கின்ற, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுடைய மக்கள் தொகை விழுக் காட்டிற்கு இணையாக நிதியை ஒதுக்க வேண்டுமென்று சட்டமே இயற்றப்பட்டது. அந்தச் சட்டமும் வழிகாட்டுதலும் மத்திய அரசால் மறைந்த பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகளுக்குமேல் ஆனாலும் கூட, இன்னமும் தமிழ்நாட்டைப் பொறுத்தளவிலே, அது முழுமையாக நடைமுறைக்கு வராத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் எதிர்வரும் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது, அதைச் சிறப்புக் கூறுகள் திட்டத்தோடு சேர்ந்த நிதிநிலை அறிக்கையாக, மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட நிதிநிலை அறிக்கையாகத் தயாரிக்க வேண்டுமென்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, பல்வேறு பணியிடங்களையெல்லாம் நீங்கள் நிரப்புவதாக அறிவித்து இருக்கிறீர்கள். உங்களுடைய கடந்த ஆட்சிக் காலத்திலே, அமைச்சராக இருந்த மாண்புமிகு சமய நல்லூர் செல்வராஜ் அவர்களுடைய தலைமையிலே, ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, அதனுடைய அறிக்கை அந்த அரசிடம் அப்போது சமர்ப்பிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டிலே. அந்த அறிக்கையின் அடிப்படையிலே, உங்களுடைய முந்தைய ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியிலே, நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தீர்கள் இதே அவையிலே. அந்த வெள்ளை அறிக்கையில் பின்னடைவுப் பணியிடங்களாக எவ்வளவு பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கின்றன என்பதை நீங்கள் அதிலே குறிப்பிட்டு இருந்தீர்கள். அந்தப் பின்னடைவுப் பணியிடங்கள் தவிர, அதற்குப் பின்னால் சேர்ந்த பின்னடைவுப் பணியிடங்களும் இன்றைக்குச் சேர்ந்துவிட்டன. இடையிலே வேலை நியமனத் தடையாணை இருந்த காரணத்தினாலே, அவை இன்னமும் பின்னடைவுப் பணியிடங்களாகவே தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. சமய நல்லூர் செல்வராஜ் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் அறிக்கை இன்றளவும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. நீங்களே நியமித்த குழு. உங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை. அதனை இப்போது நீங்கள் பரிசீலித்து மீண்டும் அந்தப் பின்னடைவுப் பணியிடங்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்று கணக்கிட்டு, அவற்றை நிரப்புவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவது பற்றி இன்றைக்குக்கூட விவாதம் நடந்தது. அந்த நிலம் எங்கே இருக்கிறது? எப்படி வழங்கப் போகிறீர்கள் என்கின்ற பிரச்சினையெல்லாம் ஒருபுறம் இருக்க, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலே வழங்கப்பட்ட நிலம், பஞ்சமி நிலம் என்று அழைக்கப்பட்டு, அவர்கள் பெயரிலே இன்றளவும் ஆவணங்களிலே தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால், அந்த நிலங்களெல்லாம் பிறரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிமையான அந்தப் பஞ்சமி நிலங்களை, இலட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து, முதலிலே அந்த மக்களுக்கு ஒப்படைப்பதற்கு நீங்கள் முயற்சித்தாலே எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். இரண்டு ஏக்கர் நிலம் நீங்கள் கொடுக்கிறீர்களோ இல்லையோ, எங்களுக்கு ஏற்கனவே உரிமையாக இருக்கின்ற அந்த நிலத்தையாவது நீங்கள் மீட்டுத் தரவேண்டுமென்று உங்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். டெஸ்மா சட்டத்தை ரத்து செய்வதாகச் செய்யப்பட்டு இருக்கின்ற அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, மனித உரிமைகளின்பால் அக்கறை கொண்ட எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு அது. டெஸ்மா சட்டம் மட்டும் அல்ல. (இந்த சமயத்தில் "என்மீதுகூட டெஸ்மா உள்ளது" என்று உட்கார்ந்தபடியே நகைச்சுவையாகக் கூறினார் முதல்வர்.) (குறுக்கீடு) டெஸ்மா சட்டம் மட்டும் அல்ல, அதேபோல் கருப்புச் சட்டம் என்று சொல்லப்படுகின்ற பல்வேறு சட்டங்கள் நம் அரசின் கையிலே இருக்கின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், குண்டர் சட்டம். அப்படியே அந்தச் சட்டங்களையும்கூட நீங்கள் ரத்து செய்து, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன் உதாரணமாக விளங்க வேண்டுமென்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

பெண்களுக்குப் பொழுதுபோக்கவும் பொது அறிவு தரவேண்டுமென்றும் நீங்கள் காட்டுகின்ற அக்கறை. அதற்காக வண்ணத் தொலைக்காட்சி தருவேன் என்கின்ற அறிவிப்பு. இது வரவேற்க வேண்டியதா இல்லையா என்கின்ற வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், இளைய சமுதாயத்தினருக்குப் பொது அறிவு வரவேண்டுமென்று சொன்னால், இன்றைக்குத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கின்ற நிலையிலே, கணினி வழங்குவதால்தான் அவர்களுக்கு அந்தப் பொது அறிவு வளர்வதற்கு நாம் உதவ முடியும் என்பதிலே யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.

எனவே இந்த அரசு குறைந்தபட்சம் ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழங்க முடியவில்லையென்றாலும் கல்லூரி அளவிலே, குறிப்பாகக் கம்ப்யூட்டர் பாடப் பிரிவை எடுத்துப்படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்காவது இலவசமாகக் கம்ப்யூட்டர்களை வழங்குவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு நமது மாநிலத்தை, நமது உதவியை, நம்முடைய ஆதரவைத் தேடி அகதிகளாக வருகின்ற ஈழத் தமிழ் மக்கள் சிறப்பு முகாம்கள் என்கின்ற பெயரிலே அமைந்திருக்கின்ற திறந்தவெளி சிறைச் சாலைகளிலே தங்கவைக்கப்படுகின்றார்கள். அந்த முகாம்களுடைய நடைமுறைகள் - நம் இந்திய அரசானது சர்வதேச அளவிலே இருக்கின்ற குறிப்பாக ஐ.நா. சபையினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற அகதிகளைப் பற்றிய ஒப்பந்தத்திலே கையெழுத்திடாத காரணத்தினாலே, பிற நாடுகளிலே அகதிகள் நடத்தப்படுகின்ற விதத்தைப் பின்பற்றாமல் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கின்றது. அதனால், இங்கே நடத்தப்படுகின்ற சிறப்பு முகாம்கள் மிகமிக மனிதாபிமானமற்ற முறையிலே அதனுடைய நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றைச் சீர்திருத்தி அதிலும் குறிப்பாக அப்படி வருகின்ற அகதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித் தொகை மிகமிக குறைவாக இருக்கின்றது. ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட அந்தத் தொகையை நீங்கள் மறுபரிசீலனைசெய்து அவர்களுக்கு அதை உயர்த்தித் தர வேண்டும். அப்படி வருகின்ற, நம்முடைய ஆதரவைத் தேடி வருகின்ற அந்த அகதிகளை நாம் மேலும் மனிதாபிமானத்தோடு அணுகி அவர்களை நடத்திட வேண்டும். அவர்களுடைய சுயமரியாதைக்குக் குந்தகம் வராமல் நாம் அவர்களை நடத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் போலவே, ஆடவர்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அந்த சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படுகின்ற பொருள்களை வணிகப்படுத்துவதற்கு பூமாலைத் திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்றும் இந்த அறிக்கையிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அத்துடன்கூட அந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகக் கிராமப்புற பொருளாதார மேலாண்மையை நாம் அவர்கள் கையிலே ஒப்படைப்பதற்கு முன்வர வேண்டும். குறிப்பாக, கிராமப்புறங்களிலே மேற்கொள்ளப்படுகின்ற அரசு சார்ந்த கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை அதற்கு தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்கள் அந்தப் பகுதியிலே இருந்தால் அவர்களிடத்திலே அந்த கான்ட்டிராக்ட் பணிகளை நாம் கொடுத்துச் சாலை போடுகின்ற பணி அல்லது அரசுக் கட்டடங்களைக் கட்டுகின்ற பணி போன்ற பணிகளிலும் அந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை நாம் ஈடுபடுத்த வேண்டும்.

கச்சத் தீவுப் பகுதியிலே தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படுகின்ற துயரத்தை உணர்ந்து இந்த அரசு அவர்களுடைய உரிமைகளைப் காப்போம் என்று கூறியிருக்கிறது. கச்சத் தீவு மீனவர்களுடைய உரிமைகளை மீட்பது மட்டுமல்லாமல் கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து நாம் கச்சத் தீவையே மீட்க வேண்டுமென்ற கோரிக்கை பல காலமாக எழுப்பப்பட்டு இருக்கின்றது. அதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். இவற்றோடு என்னுடைய தொகுதியைச் சார்ந்த சில கோரிக்கைகளை மட்டும் எழுப்பி நான் என்னுடைய உரையை முடித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

சோழர் காலத்திலே வெட்டப்பட்ட மிகப்பெரிய வீராணம் ஏரியைக் கொண்ட தொகுதி என்னுடையது. அந்தப் பகுதியைச் சொந்த ஊராகக்கொண்ட மாண்புமிகு பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் அவர்களும் எதிரிலே அமர்ந்திருக்கிறார். அந்த வீராணம் ஏரியைத் தூர் வாரி ஆழப்படுத்த வேண்டுமென்றும் அதனுடைய கரையை உயர்த்த வேண்டுமென்றும் அந்தப் பகுதி மக்கள், குறிப்பாக விவசாயிகள் கூறி வருகின்றார்கள். இன்றைய நிலையிலே புதிய வீராணம் திட்டம் காரணமாக அங்கிருந்து நீர் கொண்டுவரப்பட்டு சென்னை மக்களுடைய தாகம் தீர்க்கப்படுகின்றது. சென்னை மக்களுடைய தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எம்முடைய தொகுதி உதவி செய்கின்றது என்கின்ற பெருமையை நாங்கள் கொள்கின்றோம்.

அதே சமயத்திலே சென்னை மக்களுடைய குடிநீர் தாகத்தைத் தீர்த்து உதவிசெய்கின்ற அந்தப் பகுதி மக்களுக்கு, அதற்கு ஈடாகச் சென்னை மாநகர் எதைத் தரப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது. அப்படி எடுக்கப்படுகின்ற தண்ணீருக்கு ராயல்டி வழங்கி அதனால் பாதிக்கப்படுகின்ற, ஏனென்று சொன்னால் தொடர்ந்து தண்ணீரை எடுத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நிச்சயமாக அது ஒரு பிரச்சினையாக உருவெடுக்கப்போகிறது. அந்தப் பிரச்சினை வராமல், அந்தப் பகுதியை மேம்படுத்த வேண்டுமென்று சொன்னால், அங்கேயிருந்து எடுக்கப்படுகின்ற தண்ணீருக்கு நாம் அந்த மக்களுக்கு ராயல்டி வழங்க வேண்டும். அந்த ராயல்டியைக் கொண்டு அந்தப் பகுதி மேம்பாட்டிற்கு உதவிசெய்ய வேண்டும். இதற்கு ஏற்கெனவே, மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு அவர்கள் எடுக்கின்ற தண்ணீருக்கு ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டு அரசு அவர்களிடமிருந்து வசூலித்து வருகின்றது. அதையே முன்னுதாரணமாகக் கொண்டு அந்த ராயல்டியை நிர்ணயிக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கண்ணகிக்குச் சிலை வைப்பதை எல்லோரும் பாராட்டினார்கள், கற்பின் இலக்கணமாகக் கண்ணகி மட்டும் இல்லை, நீங்கள் பூம்புகாரிலே கலைக்கூடம் அமைத்தபோது அங்குக் கண்ணகியின் சிலைக்கு அருகிலேயே மாதவியின் சிலையையும் வைத்திருந்தீர்கள், கண்ணகியை மட்டும் இன்றைக்குக் கற்பின் சின்னமாகப் போற்றும்போது, மாதவி ஏதோ அதில் ஒரு மாற்றுக் குறைந்தவர்போல ஆகிவிடுகிறது. கண்ணகி சிலை எழுப்பும்போது நீங்கள் மாதவிக்கும் அருகிலேயே சிலை அமைத்து, இந்த ஐயத்தைப் போக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கட்டப்படுகின்ற தொகுப்பு வீடுகள் பழைய முறையிலேயே கட்டப்படுகின்றன. அவை மனிதர்கள் வசிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன என்பது நம்முடைய சபை உறுப்பினர்கள் எல்லோருக்குமே தெரியும். இன்றைக்கு சுனாமி பேரழிவுக்குப் பின்னாலே மீனவ மக்களுக்குக் கட்டப்பட்டிருக்கின்ற வீடுகள் நல்ல நிலையிலே கட்டித்தரப்பட்டிருக்கின்றன, அத்தகைய வீடுகளுக்கு என்ன Unit Cost  நிர்ணயிக்கப்பட்டதோ அந்த Unit Costஐ நிர்ணயித்து இனித் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மீனவ மக்களுக்குக் கட்டித்தரப்பட்டிருக்கின்ற வீடுகளைப் போலவே தொகுப்பு வீடுகளைக் கட்டித் தர வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

அயோத்திதாசர் அவர்களுக்கு - 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் என்று பெயரிட்டு வார இதழை நடத்தி நமது தமிழ்ச் சமூகம் பெருமைப்படக் காரணமாக இருந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு - இன்றைய முதல்வர் அவர்கள் முன்முயற்சி எடுத்து அஞ்சல் தலையை வெளியிட்டார்கள். அந்தப் பெருமையின் தொடர்ச்சியாக அயோத்திதாசருக்கு ஒரு சிலையை நிறுவ வேண்டும் என்றும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே அவரது பெயரிலே ஓர் இருக்கையை ஏற்படுத்தி, தமிழ்ப் பௌத்தம் பற்றிய ஆய்வுகள் நடத்துவதற்கு நீங்கள் வழிவகைகள் செய்ய வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொண்டு, ஓர் எழுத்தாளன் என்கின்ற முறையிலே என்னுடைய கடைசியான வேண்டுகோளை வைக்கின்றேன். எழுத்தாளராக இருக்கிற முதல்வர் அவர்கள் இதை இப்போதேகூட ஏற்று அறிவிக்கக்கூடும்.

இன்றைக்கு நூலகங்களிலே வாங்குகின்ற நூல் பிரதிகள் அதிகபட்சமாக 750 படிகள்தான் வாங்கப்படுகின்றன. எந்த நூலை வாங்கினாலும் அதிகபட்சமாக அவ்வளவுதான் வாங்கப்படுகின்றன. பல கோடித் தமிழர்கள் வாழ்கின்ற இந்த நாட்டிலே ஒரு நூல் அதிகபட்சமாக 1,100 படிகள்தான் அச்சிடப்படுகின்றது என்பது தமிழர்கள் பெருமைப் படக்கூடிய ஒரு விஷயம் அல்ல. எனவே இந்தக் களங்கத்தை நீக்கும் விதமாக நீங்கள் நூலகங்களில் நூல் வாங்கும்போது அது எந்த நூலை அவர்கள் தேர்வு செய்தாலும் குறைந்தபட்சம் 1,500 படிகளாவது வாங்க வேண்டுமென்று உத்தரவிட்டுத் தமிழ் எழுத்துலகிற்கு மட்டுமல்ல, தமிழ் மொழிக்கும் நீங்கள் வாழ்வு அளிக்க வேண்டுமென்று வேண்டி, இந்த வாய்ப்புக்கு நன்றிகூறி அமர்கிறேன். வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).

உள்ளடக்கம்

Google Ads.....


Google