|
பதிவுகள்:
அற்றைத் திங்கள்: கோவை - பிப்ரவரி 18, 2006
மிகையற்ற உரையும்
அலுப்பற்ற அந்தியும்
கே.என். செந்தில்
நவீனத் தமிழ் இலக்கியத்தில் தன் பயணத்தின் முதல்
சுவடை நாவலிலிருந்து தொடங்குபவர்கள் வெகு அபூர்வம். இதற்கு,
முந்தைய தலை முறையின் சிறந்த உதாரணம் ப. சிங்காரம். ஆனால்
அவருக்குரிய அங்கீகாரமும் அவரது நாவலுக்குரிய பரந்துபட்ட
கவனிப்பும் கிடைத்த சமயத்தில், அவர் இறந்து பல வருடங்கள்
கடந்துவிட்டிருந்தன. நல்லவேளையாக பி.ஏ. கிருஷ்ணனுக்கு அந்த
ஆபத்து நேர்ந்துவிடவில்லை. 'புலிநகக் கொன்றை' வெளியான அதே
ஆண்டில் அது முக்கியமான நாவலாகப் பெரும்பாலானவர்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த நாவலைப் போலவே அவர் கலந்துகொண்ட 'அற்றைத்
திங்கள்' நிகழ்வில் அவரது உரையிலும் நகைச்சுவை கலந்திருந்தது.
"பிரக்ஞை வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை.
வாழ்நிலைதான் பிரக்ஞையை
நிர்ணயிக்கிறது" என்ற மார்க்ஸின்
வரிகளுக்கு முன்மாதிரியாகக் கிருஷ்ணனின் குடும்பப் பின்புலம்
அமைந்திருந்திருக்கிறது. அவரது தந்தை பட்சிராஜன் கம்ப
ராமாயணத்தில் புலமை கொண்டவர். அவர் தமிழ்மீது மிகுந்த பற்றுக்
கொண்ட ஆசிரியர்களிடம் கல்வி பயின்றிருக்கிறார். தனது தந்தை
ஆலயப் பிரவேசத்தை அப்போதே ஆதரித்த முற்போக்காளராக இருந்தாலும்
தீவிர வைணவராகவும் வாழ்ந்த முரணைக் கிருஷ்ணன் நேர்மையோடு தன்
உரையில் பதிவு செய்தார். அவர் தனது ஊரான நெல்லையைச் சுற்றியே
இளமைக்காலத்தைக் கழித்திருக்கிறார்.
அங்கிருந்த நூலகங்களில் அப்போது கிடைத்த அரிதான
நூல்கள் மூலம் தன்னை வளர்த்து வந்திருக்கும் கிருஷ்ணனுக்கும்
பலரைப் போல நவீன இலக்கியத்துடனான தொடர்பு ஒரு விபத்தாகவே
அறிமுகமாகியிருக்கிறது. பொன்னியின் செல்வன் நாவலை
வாசித்துக்கொண்டிருந்தபோது அதை பைண்ட் செய்தவருடைய கருணையால்
கல்கி இதழின் கடைசிப் பக்கங்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றன.
அந்தப் பக்கங்களில்தான் புதுமைப்பித்தனின் 'கடவுளும்
கந்தசாமிப்பிள்ளையும்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதில்
தொடங்கிய கிருஷ்ணனின் வாசிப்புப் பயணம் பிறகு எழுத்துப் பயணமாக
வளர்ந்தது.
கிருஷ்ணனின் குடும்பத்திற்குப் பல துறைகளைச்
சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. புதுமைப்பித்தன்
ஒரு முக்கியமான காரியத்திற்காக அவரது தாத்தாவைச்
சந்தித்திருக்கிறார். அவரது இல்லத்தில் காமராசர்
தங்கியிருக்கிறார். கிருஷ்ணனின் எழுத்து முயற்சியை ஆசிரியர்
மூலம் அறிந்த ஜீவா அவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ஓஅந்த
முயற்சியை ஜீவா படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
படித்திருந்தால் அந்தப் பாராட்டும் கிடைக்காமலே போயிருக்கும்!ஔ
என்றார் கிருஷ்ணன்.
கிருஷ்ணனது உரையின் பெரும்பகுதி முன்னாள் அசாம்
முதல்வர் சரத் சந்திர சின்ஹாவைப் பற்றியே இருந்தது (காலச்சுவடில்
அவருக்கு ஒரு அஞ்சலியையும் எழுதியிருக்கிறார் கிருஷ்ணன்). இன்று
நாம் நம்ப முடியாத வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச் சென்ற அந்த
ஆத்மாவுக்கு அவர் செலுத்திய இன்னொரு அஞ்சலியாக அது இருந்தது.
தான் செய்த உதவிக்கு மாற்றாக எதையுமே பெற்றுக்கொள்வதை
விரும்பாத சின்ஹா, கிருஷ்ணனிடம் சால்வை பெற்றுக்கொண்ட
காரணத்தையும் சின்ஹாவைச் சந்திக்க கௌஹாத்தி சென்றபோது அனைத்துப்
பத்திரிகைகளும் தலைப்புச் செய்தியாக அவர் மரணத்தை
வெளியிட்டிருந்ததையும் கிருஷ்ணன் கூறியபோது அரங்கில் மன
நெகிழ்வின் சலனத்தை உணர முடிந்தது.
பார்வையாளர்களின் பலவிதமான கேள்விகளுக்கும்
கிருஷ்ணன் தெளிவாக பதிலளித்தார். பதினான்காவது அற்றைத்
திங்களாக அமைந்த இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர் கண்ணன்.
நாஞ்சில் நாடனின் சிறப்பான அறிமுக உரையோடு தொடங்கிய இந்நிகழ்வு
எம். கோபாலகிருஷ்ணனின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.
உள்ளடக்கம்
|