|
பத்தி
வளர்ப்புப் பிரச்சினை
வாழ்வின் சில தீர்வுகள் தற்காலிகமாகப்
பலனளித்தாலும் காலப்போக்கில் அதே பிரச்சினைகள் வேறுவிதமாகத் தலை
தூக்குகின்றன. மக்கட்பேறு இல்லாமல் போய்விடும் நிலையை
எதிர்கொள்ள விந்து தானம், சோதனைக் குழாய்க் குழந்தை என்றெல்லாம்
உயிரியல் ஆய்வுகள் எங்கேயோ சென்றுவிட்ட இந்தக் காலத்திலும் சில
மனப்போக்குகள் மாறாமலே இருக்கின்றன.
எல்லாச் சமூகங்களிலும்
பாரம்பரியமாக இருந்துவரும் "தத்து எடுத்துக்கொள்ளுதல்" என்னும்
நிகழ்வும் பல விதப் பரிமாணங்களைப் பெற்றுவிட்டது. மேலைநாட்டில்
பெருகிவரும் "தத்து", வளர்ந்து வரும் நாடுகளில் சிலர் கைகளில்
இரக்கமற்ற வியாபாரமாக மாறிவிடும் நிகழ்வுகளைப் பற்றியும்
அடிக்கடி கேள்விப்படுகிறோம். மனிதாபிமான ரீதியில், ஏழ்மை
காரணமாகப் பெற்ற குழந்தையையே அதன் பெற்றோர் விற்பதென்பது
வருத்தமளிக்கும் செயலாக இருந்தாலும் ஒரு ஏழைக் குழந்தை வசதியான
வாழ்வு கிடைக்குமென்று நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் அப்படி
வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் எப்படிப்பட்ட
வாழ்வு அமைகிறது, பதின்மப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்படும்
சிக்கல்கள் என்ன, வளர்ப்புத் தாய்-தந்தையர் என்ன மாதிரியான
பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பவை
பற்றியெல்லாம் அதிகம் பேசப்படுவதில்லை.
போன வருடம் வெளிவந்த வயதுப் பிரச்சினை
(Une Question d'Age) என்ற பிரெஞ்சு
நாவல் சமூகவியல் கண்ணோட்டங்களில் இந்தப் பிரச்சினையை
எதார்த்தமாகச் சித்தரித்துள்ளது. நாவலின் ஆசிரியை எவிலின்
பிஸியெ Evelyne Pisier சட்டம்,
அரசியல் பாடப் பேராசியராக இருக்கிறார். இவருக்கு ஐந்து
குழந்தைகள்: இவருக்குப் பிறந்தவை மூன்று, சிலி நாட்டில் தத்து
எடுத்துக்கொண்ட குழந்தைகள் இரண்டு. சட்ட ரீதியாகத் தத்து
எடுத்துக்கொள்பவர்கள் சந்திக்க வேண்டிய நிபந்தனைகள்
இடர்ப்பாடுகள் புதிய சூழலில் வளர்ப்புக் குழந்தைக்கு ஏற்படும்
சிக்கல்கள் ஆகியவற்றைப் பல தளங்களிலும் சமாளித்த இவர் தன்னைப்
போலவே இதே பிரச்சினையை எதிர்கொண்டவர்களைச் சந்தித்துப் பேசியும்
பல தகவல்களைத் திரட்டிய பின்னர் இந்த நாவலை எழுத நினைத்தார்.
"என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைப்
பற்றி ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டு வர
வேண்டும் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன். நிர்வாகக்
கெடுபிடிகள், நல்ல மனத்துடன் தத்து எடுக்க
விரும்புகிறவர்களுக்கு ஏற்படும் அவமானங்கள், அவர்களைச்
சிறுபிள்ளைகளைப் போலக் கருதும் மனப்பான்மை என்று பல கூறுகள்
கொண்ட அரசின் போக்கைக் கடுமையாக விமர்சிக்க விரும்பினேன்,"
என்கிறார் பிஸியெ (நேர்காணல் - L'Express
03.01.2005). ஆனால் சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்து,
நேர்மையாகவும் முழுமையாகவும் இந்தப் பிரச்சினையைப் பற்றிப்
பேசுவதற்கு உகந்தது நாவலின் வடிவமே என்று தான் கருதியதாலும்
இந்த நாவலை எழுத முற்பட்டதாக இவர் சொல்கிறார்.
ஒரு குழந்தையைப் பிரசவித்தவள் மட்டும்தான் "உண்மையான
தாயாக" இருக்க முடியும் என்றும் தன் தாயின் கருப்பையிலிருந்து
வெளிவந்தவள் மட்டுமே "உண்மையான மகள்" என்றும் நினைக்கும்
பிரெஞ்சு சமூகத்தின் குறுகிய மனப்பான்மையை இவர் கண்டிக்கிறார்.
இதனால் நல்லெண்ணத்துடன் தத்து எடுக்க விரும்புபவர்களுக்கு
எதிராக ஒரு மறைமுக இயக்கமே செயல்படுகிறது - சமூக நலத்
துறையினரின் ஓயாத விசாரணைகள், உளவியல் மருத்துவர்களின்
கேள்விகள், நீதிபதிகளின் பரிவின்மை, சர்வதேச நிறுவனங்களின்
கட்டுப்பாடுகள் தவிர, எந்த வயதில் ஒரு குழந்தையைத் தத்து
எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் ஏற்படும்
காலதாமதம் பிரச்சினையைத் தீவிரப்படுத்துகிறது. வளர்ப்புக்
குழந்தை, தான் இந்தப் பெற்றோரின் சொந்தக் குழந்தை அல்ல என்பதை
உணர்கிறது. என்னதான் முயன்றாலும் வளர்ப்புத் தாய் உண்மையான
தாயாக முடியாது என்பதைப் பலரும் ஓயாமல் நினைவுபடுத்துகிறார்கள்.
சமூகத்தின் இந்தப் போக்கு அவளுக்கு ஒருவிதக்குற்றவுணர்வை
உண்டுபண்ணுகிறது.
பெரும்பாலான வளர்ப்புப் பெற்றோர்களின் பொதுவான
ஒரு பிரச்சினையைப் பற்றிச் சொல்கிறார் பிஸியெ: "குழந்தையிடமிருந்து
உண்மையை மறைக்கக் கூடாது என்றும் கூடிய விரைவிலேயே
எல்லாவற்றையும் பற்றி அதனிடம் சொல்லிவிட வேண்டும் என்றும்
நிறுவனங்கள் பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்கிறது. குழந்தையும்
சிறு வயதிலேயே தன்னுடைய தாய்நாடு, அதன் சூழல்களை எல்லாம்
புகைப்படங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்கிறது. ஆனால் ஒரு நாள்,
பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தை அழுதுகொண்டே வருகிறது. தான் ஒரு
வளர்ப்புக் குழந்தைதானே என்று யாரோ அதனிடம்
சொல்லியிருக்கிறார்கள். வளர்ப்புப் பெற்றோர் சமாதானம்
செய்கிறார்கள்: 'உனக்குத்தான் இது ஏற்கனவே தெரியுமே.'
தெரியும்தான். ஆனால் இந்தப் பார்வையில், இந்தத் தொனியில்
இல்லையே! குழந்தையின் மனம் புண்படும்படி ஏதாவது
சொல்லிவிடுகிறோமே என்றுகூடச் சிலருக்குத் தெரிவதில்லை: 'உனக்கு
நாலு தாத்தா-பாட்டிகள் இருக்கிறார்கள் இல்லையா?"அழகாக
வளர்ந்துவரும் ஓர் உறவைச் சமூக விஷமிகள் கெடுத்துவிடுகிறார்கள்.
ஆனாலும் உண்மையைச் சொல்லிவிடுவதுதான் நல்லது என்று சொல்கிறார்
திருமதி பிஸியே. உண்மை பதின்மப் பருவத்தில்தான் தெரிய வருகிற
தென்றால் நிலைமை மோசமாகிவிடும்.
'இயற்கையாகவோ செயற்கை முறையிலேயோ குழந்தையைப்
பெற்றுக்கொள்வதுபோல அல்ல தத்து. குடும்பம் ஒன்றுக்கு
அளிப்பதுதான் தத்து' என்பது போன்ற கோஷங்கள் முட்டாள்தனமானவை
என்கிறார் ஆசிரியர். தத்து எடுப்பது மனிதாபிமானத்தினாலோ தர்ம
சிந்தனையினாலோ அறிவு முதிர்ச்சியினாலோ செய்யப்படும் செயல்
என்னும் எண்ணத்தையே இவை போன்ற வாசகங்கள் வளர்க்கின்றன.
இவற்றுக்கு அப்பால் ஆதரவற்ற குழந்தையை எடுத்து வளர்த்து
ஆளாக்குவதில் உள்ள பெரும் மகிழ்ச்சியை, மனநிறைவை மறந்துவிடக்
கூடாது என்கிறார் அவர்.
பதின்மப் பருவத்தில் உள்ள வளர்ப்புக்
குழந்தைகளின் மன நிலையை ஆசிரியர் ஆழமாகச் சித்தரிக்கிறார்.
பொதுவாகவே பதின்மப் பருவத்தில் விடுபட்டுச் சுதந்திரமாக இருக்க
வேண்டும் என்று ஆழ்மனத்தில் நினைப்பார்கள் என்கிறார்கள் உளவியல்
நிபுணர்கள். ஆகவே சொந்தத் தாயினால் கைவிடப்பட்டு வளர்ப்புத்
தாயிடமும் முழுவதும் ஒட்டாமல் அந்நியமாதலுக்கு ஆளாகும்
வளர்ப்புக் குழந்தைகள் இந்தப் பருவத்தில் எதிர்பாராத விநோதமான
பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். சொத்துக்கு
இயல்பான வாரிசாக இல்லாததால் சொத்து கிடைக்காமல் போய்விடுமோ
என்ற பயமும் அதையே முழுவதும் சார்ந்திருக்கும் மனநிலையும்
இவர்களிடையே வக்கிரமான செயல்பாடுகளைத் தூண்டுகின்றன. தாங்கள்
வளரும் வீட்டிலேயே சில்லறைத் திருட்டுகளைச் செய்கிறார்கள்.
இந்த நாவலில் சிறுவன் ஒருவன் வளர்ப்புத் தந்தையின் சொத்து
எப்படியும் தனக்குத்தான் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில்,
தான் எந்த வேலையையும் செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை
என்று சொன்னாலும் பிச்சை வாங்கிப் பிழைக்கும் வழக்கத்தை
மேற்கொள்கிறான். தன்னுடைய சொந்தத் தாய் அவளுடைய நாட்டில் தெருத்
தெருவாக அலைந்து பிச்சை எடுக்கும் காட்சியை அவன் கற்பனை செய்து
பார்த்ததாகப் பின்னால் தெரியவருகிறது.
பன்னிரண்டு வயதுவரை மகிழ்ச்சியாக இருந்த
வளர்ப்புக் குழந்தைகள் அதற்குப் பின் திருட்டு, பிச்சை எடுத்தல்,
சில்லறைக் குற்றங்கள், போதைப் பழக்கம், பாலியல் வக்கிரங்கள்
இவற்றுக்கு அடிமையாகிவிடுவதால் அவர்களை மீண்டும் அனாதை
விடுதிகளுக்கோ சீர்திருத்தப் பள்ளிகளுக்கோ திருப்பி அனுப்ப
நேரிடும்போது வளர்ப்புத் தந்தையைப் பழிவாங்குகிறார்கள்.
தங்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதாக அவர் மீது வீண்பழியைச்
சுமத்தி மகிழ்கிறார்கள்.
ஆண்டுதோறும் பிரான்சில் 23,000 தம்பதிகள் தத்து
எடுக்க விருப்பம் தெரிவித்து அரசாங்கத்திடம் அனுமதி
கேட்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது
8,000 பேருக்கு அரசு அனுமதி கிடைக்கிறது. இறுதியில் 5,000 பேரே
தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அதில் 4,000 பேர் வெளிநாட்டுக்
குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார்கள். நிதியுதவி உள்பட பலவித
உதவிகளை தத்து எடுப்பவர்களுக்கு அளிக்கப் போவதாக அரசாங்கம்
அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் திருமதி எவிலின் பிஸியெவின்
வயதுப் பிரச்சினை நாவல் சம காலத்தியப் பிரச்சினை ஒன்றைச்
சமூகவியல் கோணத்தில் பார்க்கும் இலக்கியப் படைப்பாக அமைகிறது.
உள்ளடக்கம்
|