|
பத்தி
அரசியல்: ஓசையும் வேகமும்
சக்கரியா
இந்திய அரசியல்வாதிகள் பொதுவாகத் தேர்தலை
நாராசமான இரைச்சல் திருவிழாவாகத்தான் கையாளுகிறார்கள். மிக
அதிக உச்சத்தில் கத்துபவனுக்குத்தான் மிக அதிகமான
ஓட்டுக்கிடைக்கிறது என்று அவர்கள் நம்புவதாகத் தோன்றுகிறது.
மிக அதிகமான ஒலிபெருக்கிகள் மூலம் மிக உச்சமான சத்தத்தில்
பாட்டு வைப்பவன்தான் ஜனநாயகத் தலைவன் என்று அவர்கள் நம்புவதாகவே
கருத வேண்டும். சத்தம்தான் மிகப் பெரும் செய்தி. சொல்லும்
அர்த்தமும் அதில் சிறிய அம்சம் மட்டுமே. 'ஊடகமே செய்தி'
(medium is the message) என்று மார்ஷல் மக்லூஹன்
சொல்லியிருக்கிறாரே.
சத்தமே செய்தி என்று நம்புகிற இரண்டு பிரதானப்
பிரிவுகள் இந்தியாவில் உள்ளன: ஒன்று, அரசியல் கட்சிகள்.
இரண்டாவது, மதங்கள். இந்தியாவிலுள்ள வெவ்வேறு சமூகங்களின்
அன்றாட வாழ்வில் மிகக் கொடூரமான ஒலிச் சீர்கேட்டை ஏற்படுத்தும்
பிரதான சக்திகள் இவைதாம். பண்பாட்டின் அடையாளம் சத்தத்தை
உயர்த்துவதல்ல; சத்தத்தைக் குறைப்பதே என்று அறியாத அல்லது
அறிந்துகொள்ள மறுக்கிற இரண்டு ராட்சச சக்திகள்தாம் அரசியல்
கட்சிகளும் மதங்களும். மதங்கள் - இதில் இந்து, முஸ்லிம்,
கிறிஸ்தவ பேதங்களில்லை - கிட்டத்தட்ட எல்லா நாள்களிலும்
இரைச்சலால் குடிமக்களை வதைக்கின்றனவென்றால் அரசியல் கட்சிகள்
அப்படிச் செய்வது தேர்தல் காலங்களில். வழிபாட்டுத் தலங்களுக்கு
அருகில் வசிப்பதனால் அமைதி என்பது என்னவென்றே அறியாமல்
போனவர்களை எனக்குத் தெரியும். அலறுகிற ஆன்மீகமே அவர்களுக்குப்
பழக்கமானது.
கேரளத்தில் அரசியல் கட்சிகள் எல்லாச்
சமயங்களிலும் ஓசையை உற்பத்தி செய்வதில்லை. அவர்களுடைய
செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய வேளை வரும்போதுதான் அவர்கள் ஒலி
பெருக்கிகளும் சினிமாப் பாட்டுகளுமாக ஊர்க்காரர்கள் மேல் குதிரை
சவாரி செய்வார்கள். மலையாளிகளின் செவிப்புலன்களின் மீது கடல்
கிழவர்களைப் போலத் தொற்றிக்கொண்டு நிரந்தரமாக
அலறிக்கொண்டேயிருப்பவை மதங்கள்தாம். ஒரு சின்ன மதக்
கொண்டாட்டமானாலும் வாரம் முழுவதும், குடியிருப்புப் பகுதி
முழுவதும் நிஷ்டூரமாகவும் பண்பாடில்லாமலும் கர்ணகடூரமான
சத்தத்தை வெளித்தள்ளிக் கொண்டிருப்பார்கள். அதற்கு எதிராக
மெல்லிய குரல் எழுப்பினால், எழுப்புகிறவனின் கதை முடிந்தது.
அரசியல்வாதி தன்னுடைய பேரிரைச்சல்தான் வாக்காளரை அடிபணிய
வைக்கிறது என்று கருதுவதைப் போலவே மதங்களும் தம்முடைய பெரும்
அலறல்தான் விசுவாசிகளைக் குனியவைக்கிறது எனக் கருதுகின்றன
என்பதில் சந்தேகமில்லை.
உலகின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள நாடுகளில் பயணம்
செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒருபுறம்
மேற்கத்திய நாட்டவரின் வளர்ச்சியடைந்த கலாச்சாரங்களையும்
மறுபுறம் வளர்ந்து உயரப் பாடுபடும் கறுத்த மக்களின்
கலாச்சாரங்களையும் நேரில் காண வாய்த்திருக்கிறது. ஆனால் ஓசையால்
வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் பொது வாழ்வை ஆக்கிரமிப்பதை
இந்தியா தவிர வேறொரு சமூகத்தில் பார்த்ததில்லை. சமூகத்தின்
சிறுபான்மைப் பிரிவு சத்தத்தால் பெரும்பான்மை மீது அதிகாரத்தை
நிறுவுவதையே நாம் இங்குக் காண்கிறோம். இரண்டு கற்களை எடுத்து
நட்டு அதற்குக் கடவுளின் பெயரைச் சூட்டிவிட்டால் இருநூறு
ஒலிபெருக்கிகள் வைத்து இரண்டாயிரம் குடும்பங்களையாவது
அடக்கியாளுவதற்கான சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. அந்தக்
குடும்பங்களில் மரணப் படுக்கையில் கிடப்பவர் இருக்கலாம்; சத்தம்
சித்ரவதையாகத் தோன்றும் நோயாளிகள் இருக்கலாம்; தேர்வுக்காகப்
பதட்டத்துடன் படிக்கும் மாணவர்களிருக்கலாம்; அமைதியையும்
நிசப்தத்தையும் விரும்பும் சிந்தனையாளர்களிருக்கலாம்;
நிம்மதியான சூழலை விரும்பும் கலைஞர்களிருக்கலாம். ஆனால்
கடவுளின் பெயரால் நடத்தப்படும் இந்த ஆக்ரோஷ இரைச்சல்களுக்கும்
கூப்பாட்டு அலறல்களுக்கும் முன்னால் இது போன்ற மானுடப்
பிரச்சினைகள் வெறும் அற்பமானவை.
ஒலிச் சீர்கேட்டுக்கு எதிராக இந்தியாவிலுள்ள
மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றாதது ஏன் என்று நான்
வியந்ததுண்டு. கலாச்சார வளர்ச்சியடைந்த நாடுகளில் சத்தத்தைத்
திணிப்பது குற்றமாகும். 'சனாதனமும் புனிதமுமான' பண்பாடு
நிறைந்து ததும்புகிறது என்று சொல்லப்படும் இந்தியாவில் மட்டும்
சத்தம் மூலம் நடத்தும் ஆக்கிரமிப்பு ஏன் குற்றமாவதில்லை?
எனக்குப் பதில் விளங்கியது அண்மையில்தான். ஒலி மாசுபாட்டுக்கு
எதிராகச் சட்டம் உருவாக்கினால் அதன் முதல் இரை - மதம் என்ற
இன்னொரு முதல்வனுடன் - அரசியல் கட்சிகளாகவே இருக்கும். சத்த
ஆக்கிரமிப்பின் பிரதேசம் இரண்டு முதல்வர்களுள்ள பிரத்தியேகப்
பகுதியாகும்.
கடந்த தேர்தல் காலத்தில் தமிழ்நாட்டில் பயணம்
செய்ய நேர்ந்தபோதுதான் கேரளத்தைவிட எத்தனையோ மடங்கு
பேய்த்தனமான சத்த ஆக்கிரமிப்பைத் தமிழக அரசியல் கட்சிகள்
தமிழ்க் குடிமக்களின் மீது நிகழ்த்துகின்றனவென்று புரிந்தது.
ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த நண்பரும் நானும்
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாகத் திருநெல்வேலி
மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்குச் சென்றுகொண்டிருந்தோம்.
அரசியல் கட்சிகள் பொது மக்களை - கிராமத்தவரையும் நகரத்தினரையும்
ஒரேபோல - ஓசைக் கழிவுகளாலும் பிரச்சார சாதனக் கழிவுகளாலும்
பிணம் தின்னும் ஈக்களைப் போல மொய்த்துக்கொண்டிருக்கின்றன.
பரஸ்பரம் மோதிக்கொள்ளும் கடூரமான சப்தக் கீற்றுகளுக்கிடையில்
பிதுங்கும் மனிதர்கள். கொடி தோரணங்களுக்கும் மற்ற பிரச்சாரப்
பூச்சுப் பொருள்களுக்கும் இடையில் குடிமக்கள் முட்டிமோதி
நடக்கவேண்டியிருக்கிறது. ஒலிபெருக்கிகளில் கூச்சல்கள். அரசியல்
முழக்கங்களின் அட்டகாசங்கள். ராகமோ அர்த்தமோ இல்லாத பாட்டுகள்
ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொள்வதன் பைத்தியக்காரத்தனமான ஓசைத்
திருவிழா. இதெல்லாம் எதற்காக என்று யோசிக்கும்போதுதான் நாம்
நடுங்கிப்போகிறோம்.
மக்களான நாம் நம்முடைய பொதுக் காரியங்களை
நடத்துவதற்கும் மக்களின் மேம்பாட்டுக்கான சட்டத்தை உருவாக்கவும்
மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். நம்முடைய பொது
நன்மைக்காகக் கணிசமான சம்பளமும் சலுகைகளும் கொடுத்து மக்கள்
பிரதிநிதிகள் என்னும் வேலைக்காரர்களை நியமிக்கிறோம்.
அதற்கான நடைமுறையே ஓட்டெடுப்பு. நாம்
அளிக்கவிருக்கும் வேலைக்காக விண்ணப்பித்திருக்கும் வேலை
தேடுபவர்கள் அதன்பேரில் நம்மீது இந்த ஆக்கிரமிப்புகளையும்
தனிவாழ்க்கையில் அத்துமீறல்களையும் நடத்துகிறார்கள்.
ஆச்சரியமென்றே சொல்ல வேண்டும் - அவர்கள் நம்முடைய 'தலைவர்கள்'
என்று உரிமை பாராட்டிக்கொள்கிறார்கள்.
இது என்ன கதை? இது எப்படி நிகழ்ந்தது? நாம் ஓட்டுப் போட்டு
நியமனம் செய்யும் நம்முடைய வேலைக்காரர்கள் எப்படி நம்முடைய 'தலைவர்கள்'
ஆனார்கள்? இதுதான் இந்திய ஜனநாயகத்தை அரசியல் கட்சிகள் ஜேப்படி
செய்த கதை.
அரசியல் சிந்தனையில்லாத பெரும்பான்மை மக்களை
ஏமாற்றிய, ஜனநாயகத்தைத் தங்களுடைய முடியாட்சியாகத் தலைகீழாக
மாற்றி நிறுத்திய கதை. குறுகிய கிராமத்துச் சாலை வழியாக நாங்கள்
அம்பாசமுத்திரத்துக்குச் சென்றுகொண்டிருந்தோம். சட்டென்று
டிரைவர் காரை ஒடித்துத் திருப்பிப் பாதைக்கு வெளியில் இறக்கி
சடன் பிரேக் போட்டு நிறுத்தினார். நாங்கள் திடுக்கிட்டுப்
பார்க்கையில் முன்னால் ஒரு பிரம்மாண்டமான வாகன வியூகம் பாய்ந்து
வந்துகொண்டிருந்தது.
கார்கள், வேன்கள், லாரிகள் ஆகியவற்றின் நீண்ட
வரிசை. எல்லாவற்றிலும் நிறைய ஆட்கள். மேளச் சத்தமும் பாட்டும்
பெரும் கூச்சலும். அந்தச் சின்னப் பாதையில் அவை குறைந்தது நூறு
கிலோ மீட்டர் வேகத்தில் அலறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தன.
ஒரு மரண வேகம். அந்த வழியில் கால்நடையாகச் செல்பவர்களும்
மாட்டுவண்டிகளும் சைக்கிளோட்டிகளும் இருந்தனர். அவற்றையெல்லாம்
மோதிச் சிதறுவது போல ஒரு 'தலைவர்' - மக்களின் வேலைக்காரன் -
ஓட்டுக் கேட்பதற்காக வெற்றி ஊர்வலம் நடத்திக்கொண்டு போவதைப்
பார்த்து நாங்கள் மூக்கில் விரல் வைத்து நின்றோம். எங்கே வந்து
சேர்ந்திருக்கிறது ஜனநாயகம்!
எனக்கு மலையாளிகளைப் பற்றி நல்ல அபிப்பிராயம்
தோன்றிய மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்தது அது.
இன்றைய கேரளத்தில் இப்படி ஓர் இறுமாப்பைக் காட்ட எந்த மக்கள்
பிரதிநிதியும் தயாராக இருக்கமாட்டார் என்பதே என் நம்பிக்கை. 'உன்னுடைய
நம்பிக்கை உன்னை வாழ வைக்கட்டும்'. அப்படித்தானே?
தமிழில்: சுகுமாரன்
உள்ளடக்கம்
|