Google   www kalachuvadu.com

மதிப்புரை

ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு
பிறசொற்பத்தி ஆண்டு
(1751 - 1752)

இரண்டாம் ஜாமங்களின் கதை

வெளியீடு:
மெய்யப்பன் பதிப்பகம்
53, புதுத்தெரு, சிதம்பரம் - 1.
முதல் பதிப்பு - டிசம்பர் 2004
பக். 429, ரூ.140/-

ஆ. சிவசுப்பிரமணியன்

18ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆவணங்களுள் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பும் ஒன்றாகும். இந்நாட்குறிப்பின் சிறப்புக் கருதியே இதை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழிபெயர்த்துள்ளனர். இந்தியவியல் அறிஞரான ஜூவோ துப்ராய் என்ற பிரெஞ்சுக்காரரும் நீலகண்ட சாஸ்திரியாரும் இணைந்து, ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் மூலப்பிரதியிலிருந்து படியெடுக்கப்பட்ட இரு நகல்களை 1939ஆம் ஆண்டில் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதன் விளைவாக,

ஆனந்தரங்கப்பிள்ளையின் பல தேதியிட்ட குறிப்புகளில் சிறப்பாக, 1 அக்டோ பர் 1749 முதல், 7 அக்டோ பர் 1760ஆம் ஆண்டு முடிய உள்ள இடைப்பட்ட காலங்களுக்கான முப்பத்தைந்து தினசரிக் குறிப்புகள் பிரசுரிக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பில் இடம்பெறாமல் உள்ளது என்ற உண்மை புலனானது. எனவே ரங்கப்பிள்ளையின் தமிழ் நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பு முழுமையானது இல்லை என்று தெரிய வந்தது.

என்று ஜெயசீல ஸ்டீபன் "தமிழில் நாட்குறிப்புகள்" என்ற தமது நூலில் (1999: பக். 29-30) குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு விடுபட்ட பகுதிகள் முழு நாட்குறிப்பில் முப்பது விழுக்காடு இருக்கும் என்று ஓர்சே மா. கோபாலகிருஷ்ணன் கணித்துள்ளார் (தனக்கு முன்னர் துப்ராய் நீலகண்ட சாஸ்திரியாரும் இவ்வுண்மையைக் கண்டறிந்ததை என்ன காரணத்தாலோ கூறாமல் விட்டுவிட்டார்). 1751 ஏப்ரல் 16 முதல் 1752 மார்ச் 4 வரையிலான நாட்குறிப்பில் விடுபட்ட பகுதிகளையே 'ஆனந்தரங்கப் பிள்ளை விரிவடைந்த நாட் குறிப்பு' என்ற தலைப்பில் 2004இல் வெளியிட்டுள்ளார். ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஏனைய தொகுதிகளைப் போன்றே இத் தொகுப்பிலும் பல முக்கிய, சமூக அரசியல் செய்திகள் இடம்பெற்றுள்ளன. சான்றாகச் சில சமூகச் செய்திகளை மட்டும் காண்போம்.

18ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் செயல்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கூட்டுறவுச் சங்கம் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் நெசவுச் சாலைகள் நிறுவி அதில் நெசவாளர்களைப் பணியில் அமர்த்தியது. நெசவுத் தொழிலுடன் தொடர்புடைய சாயச் சாலைகளும் துணிகளில் அச்சிடும் அச்சுச் சாலைகளும் இதனையடுத்து உருவாயின. இங்கு நெய்யப்பட்ட துணிகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இத் தொழிலில் வண்ணார்கள் பங்கேற்றமையை இந்நூல் எடுத்துரைக்கிறது.
புதுச்சேரியில் வண்ணான்துறை என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான வண்ணார்கள் கூடி, புதுத்துணி விறைப்பாய் இருக்கும் வகையில் சலவைசெய்து கஞ்சிபோடும் பணியில் ஈடுபட்டுவந்தனர். இதைப் பார்வையிட வண்ணான் துறைக்கு அவ்வப்போது ஆனந்தரங்கப் பிள்ளை போய் வந்தார். (பக். 162, 163, 236 - 38, 329, 338, 340, 343, 348) துணி வாங்கும் "வர்த்தகர்கள் கஞ்சிப் பிடிக்கவில்லையென்றும், பிடவை முறப்பாய் இராமல் துவண்டு இருக்கிறதென்றும், சலவை நன்றாய் இருக்கவில்லை" என்றும் ஒருமுறை குறை கூறியதாக ஆனந்தரங்கப்பிள்ளை எழுதியுள்ளார். இப்பணியில் ஈடுபட்ட வண்ணார்களுக்கு ஒழுங்காக ஊதியம் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. 22.08.1751இல் பிரெஞ்சுத் துரையுடன் ஆனந்தரங்கப்பிள்ளை வண்ணான்துறைக்குச் சென்றபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றை அவரது நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வண்ணர கூலிக்காறர் யிறணூறு பேர் மட்டுக்கும் வேலை செய்யுற பேருக்குள்ளே னாற்பது ஆள் பிறப்பிட்டு வெளியே போய் ஆட்டுச் சாணிக்கும் தழைக்கும் போனார்கள். அவர்கள் யென்னத்துக்குப் போகிறது. கூலி ஆளுகள் கையிலே அழைப்பிச்சுக் கொள்ளப் போகாதாயென்று கேட்டார். அதுக்கு அவர்கள் சொன்னது அரிசி குறைச் சலானபடியினாலே கூலி ஆளுகளுக்கும் குடுத்து எங்களுக்கும் ஒன்றும் நிறுவாகத்துக்கு வரமாட்டாது, அதினாலே தானே நாங்கள் தானே போய் ஒரு நாளையிலே தழையை வெட்டிக் கொண்டு வருஓம், அப்படி அல்லவென்று நீங்களதுக்கு வேறே கூலி குடுத்து அழைப்பிச்சு குடுத்தால் னாங்கள் யேன் போறோமென்று சொன்னார்கள். அந்த வார்த்தை சொன்ன உடனே, கேட்டும் கேளாத போலேயும் சாடையாய்ப் பிறப்பிட்டுப் போனார்.

புதிதாக நெய்து வந்த துணியில் கஞ்சி போடுவதற்காக அல்லது சாயம் தோய்க்கத் தழையையும் ஆட்டுப் புழுக்கையையும் எதற்காக எம்முறையில் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. நமது பாரம்பரியத் தொழில்நுட்பமொன்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் மறைந்து கிடக்கிறது. சாயம் காய்ச்ச உதவும் அவுரி ஆங்கிலேயர்களால் இக்கால கட்டத்தில் பரவலாக அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே நமது பாரம்பரிய முறையில் சாயங்காய்ச்ச உதவும் ஏதோ ஒரு குறிப்பிட்ட மரத்தின் தழையைப் பறிப்பதற்காகச் சென்றிருக்கலாம். இச்செய்தியுடன், வண்ணத்தார் என்ற பெயரில் கல் வெட்டுகளில் வண்ணார்கள் குறிப்பிடப்பட்டுள்ளதையும் இணைத்து நோக்கினால், துணிகளுக்கு வண்ணம் தோய்க்கும் பணியில் ஈடுபட்டமையாலேயே வண்ணத்தார் என்று வண்ணார்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருத ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட் குறிப்பு இடமளிக்கிறது.

பிரெஞ்சுப் படைகள், மராட்டியப் படைகள், சந்தாசாகிப் படைகள் ஆகியன நிகழ்த்திய கொள்ளைச் செயல்கள் இந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ளன. மக்களை அடித்தும் காவலில் வைத்தும் அச்சுறுத்தியும் தீர்தா முதலி மகன் அழகப்பன் என்கிறவன் பணம் வாங்கியதுடன் "துலுக்கர் வேஷம் போட்டுக் கொண்டு வீடுகளிலே போய் பூந்து பெண்டுகளிலே சோரவரி (பலாத்காரம்)" நிகழ்த்தியதையும் ஆனந்தரங்கப்பிள்ளை பதிவு செய்துள்ளார். "பழியெல்லாம் போம் அமணன் தலையோடே" என்பதுபோல் பாலியல் வன்முறையானது இஸ்லாமியர்கள் வேடத்தில் திட்டமிட்டு சில நேரங்களில் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு இந்நாட்குறிப்புச் செய்தி சான்றாகிறது.

பிரெஞ்சு ஆட்சியின்போது புதுச்சேரியில் நிகழ்ந்த வாணிப வளர்ச்சியின் விளைவாக கோமுட்டிகள் (செட்டியார்) பொருளியல் நிலையில் வளர்ச்சியுற்றனர். இதனடிப்படையில் சில புதிய மரியாதைகளைப் பெற அவர்கள் விரும்பினர். கம்மாளர் தெருவில் குடியிருக்கும் செட்டியார் ஒருவர் தமது பேத்தியின் திருமணத்தின்போது மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் செல்ல, பிரெஞ்சு ஆளுநரிடம் அனுமதி வாங்கினார். ஆடம்பரமாக ஊர்வலம் வரும்போது பழைய சமூக அமைப்பில் ஏற்றம் பெற்றிருந்த கம்மாளர்கள் ஊர்வலத்தில் குறுக்கிட்டுத் தடை செய்தனர். கோமுட்டிகள் பிரெஞ்சு ஆளுநரிடம் முறையிட அவரும் துப்பாக்கிகள் ஏந்திய பத்துச் சிப்பாய்களையும் பத்துச் சேவகர்களையும் அனுப்பிவைத்தார். கம்மாளர்கள் இதை எதிர்த்து மனுகொடுத்தனர்.

சென்னைப் பட்டணத்தின் மீது படையெடுத்த பிரெஞ்சு துருப்புகளின் செயலை துயிப்ளே பின்வருமாறு ஆனந்தரங்கப்பிள்ளையிடம் குறிப்பிட்டார். "பூந்தமல்லி சீமை வகையிரா, மயிலாப்பூர் உள்பட பரங்கிமலை பெரிய மலை, சின்ன மலை வகையிரா கொள்ளையிட்டார்கள். கொள்ளையிட்டவர்களுக்கு விஸ்தாரமாய் தினுசுகள், தானியங்கள், மாடுகள் வகையிரா அகப்பட்டதெல்லாம் அங்கங்கேதானே சரிப்போனபடிக்கெல்லாம் வித்துப்போடுகிறார்களாம். ஆனால் நம்முடவர்களுக்கு கொள்ளை நன்றாய் வாய்க்குது. ஒவ்வொருத்தன் கூலிக்காறன் கூட ஆஸ்திக்காறனாக சுகப்பட்டார்கள்".

இதன் விளைவாகக் குடிமக்கள் அங்குமிங்கும் இடம்பெயர்வதை, "தாமரை யிலையிலே யிருக்கிற செலம் மூலைக்கி மூலை ஆதரவன்றி யிலே ஓடி தளும்புகிறாப் போலே செனங்களும் அலையுறார்கள்" என்று ஆனந்தரங்கப்பிள்ளை கூறியுள்ளார்.

இந்நூலின் தொடர்ச்சியாக ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட் குறிப்பு இரண்டாம் பகுதி (ஆங்கிரச ஆண்டு 1752 - 1753) 2005இல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை ஆண்ட நிஜாமின் பேரனான சலாபத் சங் என்பவனை, நிஜாமின் மகன் நாசர் ஜங்குக்கு எதிராகப் பிரெஞ்சு ஆளுநர் துப்பிளே ஆதரித்தது தொடர்பான செய்திகளை இந்நூல் குறிப்பிடுகிறது. சலாபத் சங்குவின் திவான் ராஜா ரகுநாத தாஸ் என்பவரை, ஊதியம் கொடுக்கவில்லை என்பதற்காக ராணுவ ஜமைதார் ஒருவர் வெட்டிப்போட்ட செய்தியும் இடம்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஊதியம் தரவில்லை என்று சலாபத் சங்கையும் வெட்டிப்போட்ட செய்தி இடம்பெற்றுள்ளது. இது போன்ற அரசியல் நிகழ்வுகள் மட்டுமின்றி, தான் முக்கியமென்று கருதிய சில நிகழ்வுகளையும் ஆனந்தரங்கப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். 1752 ஜூன் இரண்டாம் நாள் பெய்த மழையால் ஏற்பட்ட விளைவுகளையும் கூடப் பதிவுசெய்துள்ளார்.

காலையில் என்ன சாப்பிட்டாய் என்று கேட்ட துப்பிளேயிடம் 'பழையதும், தயிரும், ஊறுகாயும்' சாப்பிட்டதாக ஆனந்தரங்கப்பிள்ளை பதில் அளித்ததற்கு ஐரோப்பிய உணவின் சிறப்பையும் அதை மேசையில் அமர்ந்து உண்ணும் பாங்கையும் துப்பிளே, உயர்வாகக் கூறியதாக ஆனந்தரங்கப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய இன மையவாதச் சிந்தனையின் வெளிப்பாடாக இப்பகுதி அமைந்துள்ளது.

இத்தகைய பல அரிய செய்திகள் இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் இறுதியில் பெயரடைவு ஒன்று இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இந்நாட்குறிப்பில் இடம் பெறும் பிரெஞ்சு, டச்சு, பாரசீக, அரபு மொழிச் சொற்களுக்கும் தற்போது அதிகமாகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்களுக்கும் பொருள் எழுதியும் நாட்குறிப்பில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புகள் எழுதியும் தெலுங்குப் பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தும் பதிப்பித்திருக்கலாம். அப்படிப் பதிப்பித்திருந்தால் ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் அனைத்துத் தொகுதிகளும் இனி எப்படிப் பதிப்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான முன்னோடிப் பதிப்பாக இந்நூல்கள் அமைந்திருக்கும். இது ஆசை பற்றி அறையலுற்றதேயன்றி இந்நூல்களைக் குறைத்து மதிப்பிடும் நோக்கில் கூறப்பட்டதன்று. நூலாசிரியரின் கடின உழைப்பைப் புறந்தள்ள இயலாது. அத்துடன் இதுவரை அச்சேறாது விடுபட்ட நாட்குறிப்புப் பகுதிகளையும் இணைத்து முழுமையான பதிப்பை வெளியிடுவதன் அவசியத்தை உணர்த்துவதில் இந்நூல்கள் வெற்றி பெற்றுள்ளன.

இதுபோல் எஞ்சிய விடுபட்டப் பகுதிகளும் வெளிவர வேண்டுமென்று தமது முன்னுரையில் வலியுறுத்தும் பதிப்பாசிரியர், அவற்றைப் பெறப் பிரான்சுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் புதுச்சேரியில் உள்ள இந்தியத் தேசிய ஆவணக் காப்பகத்திலேயே இந் நாட்குறிப்பின் ஒளிநகல்களைப் பெறலாம் என்றும் வழிகாட்டியுள்ளார். நமது வரலாற்றாய்வாளர்கள் கவனிப்பார்களாக!

ஆனந்தரங்கப் பிள்ளை வி-நாட்குறிப்பு
ஆங்கிரச ஆண்டு (1752-1753)

வெளியீடு:
நற்றமிழ் பதிப்பகம்
எம் 55/12, எம்.ஐ.ஜி. அடுக்ககம்
முதல் நிழற்சாலை விரிவாக்கம்
இந்திரா நகர், அடையாறு
சென்னை - 600 020.

முதல் பதிப்பு - 2005
பக். 600; விலை: ரூ. 230

உள்ளடக்கம்

Google Ads.....


Google