Google   www kalachuvadu.com

தலையங்கம்

கோணங்கள்

கறுப்புக் கண்ணாடி தரிசனங்கள்

கண்ணன்

மீண்டும் ஜூலை '83

கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு உவப்பற்ற பல பொருள் விளக்கங்களைக் கொண்ட 'டா வின்ஸி கோட்' திரைப்படத்தைத் தி.மு.க. அரசு தடை செய்திருக்கிறது. தடையை நீக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை இந்த அரசு மதிக்கப்போவதில்லை. Cinematograph Act, 1952ஐப் பயன்படுத்திச் சட்ட ஒழுங்கு அடிப்படையில் இத்திரைப்படத்தைத் தடை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியிருக்கிறது அரசு. தடை செய்யாமல் தடை செய்யும் இந்தத் தந்திரம் முன்னர் தேசியப் படங்களைத் தடுக்கக் காலனியாதிக்க அரசு கைக்கொண்ட முறைமையாகும்.1

ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், தமிழக அரசைப் பின்பற்றி 'டா வின்ஸி கோ'டைத் தடை செய்த ஆந்திர அரசைக் கண்டித்துள்ளது. தடையை நீக்கியதுடன், வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எந்தப் பிரதானக் கிறிஸ்தவ அமைப்பும் இத்தடையை வேண்டவில்லை. சகிப்புத்தன்மையற்ற மதம் என்னும் பிம்பம் தம் மதத்திற்கு ஏற்படுவதைப் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் விரும்புவதில்லை. அதே நேரத்தில் இத்தடையை நீக்கக் கோரும் மனமும் அவர்களுக்கு இல்லை.

மத உணர்வுகளைப் புண்படுத்துவதைத் தவிர்ப்பதில் கலைஞருக்கும் தி.மு.க.வுக்கும் இருந்திருக்கும், இருந்துவரும் அக்கறை உலகறிந்த செய்தி. அண்ணாவின் 'கம்பரசம்' நூல், கம்பராமாயணப் பிரதிகளை எரிக்க முனைந்தது, 'பராசக்தி' வசனங்கள், புலவர் குழந்தையின் ராவண காவியம், இந்துப் புராணங்களில் அரக்கர்களாக இருப்பவர்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் ஆர்.எஸ். மனோகரின் நாடகங்கள் என மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக மத நம்பிக்கையாளர்களால் கருதப்பட்ட, தி.மு.க. ஆதரித்த செயல்பாடுகளுக்குப் பலப் பல உதாரணங்களைத் தர முடியும். இந்த மண்ணில் இவற்றிற்கெல்லாம் இடம் உண்டெனில் 'டா வின்ஸி கோ'டுக்கு மட்டுமென்ன விதிவிலக்கு? முன்னர் ஒரு முறை கலைஞர் ஆராய்ச்சியில் இறங்கி இந்துக்கள் என்றால் திருடர்கள் என்ற பொருள் கண்டு வெளியிட்டமை அவரது புண்படுத்தாமைப் பண்புக்குச் சிறந்த உதாரணம். தீ மிதித்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்த கலைஞரிடம், அப்போது அவைத் தலைவராக இருந்த மறைந்த பி.டி. ஆரின் பக்தியைப் பற்றிக் கேட்டபோது, 'அவர் பரம்பரைப் பக்தர். பஞ்சத்திற்கு வந்த பக்தரல்ல' என்று சிறுதெய்வ வழிபாட்டாளர்கள் 'மனம் புண்படாமல்' குறிப்பிட்டது மற்றொரு உதாரணம்.

அ.தி.மு.க., ம.தி.மு.க. வின் கோட்டையாகக் கருதப்பட்ட தென் தமிழகம் இம்முறை தி.மு.கவிற்குக் கைகொடுத்தது. குமரியை 'வெறும் தொல்லை' என்று முன்னர் குறிப்பிட்ட கலைஞரின் கூட்டணிக்குக் குமரியில் முழுமையான வெற்றி ஏற்பட்டது. இவ்வெற்றிக்குக் கிறிஸ்தவர்களின் ஓட்டு ஒரு முக்கியக் காரணி. கத்தோலிக்க, சீர்திருத்தக் கிறிஸ்தவச் திருச்சபைகள் இம்முறை கிறிஸ்தவர்களின் ஓட்டை முழுமையாகத் தி.மு.க. கூட்டணிப் பக்கம் திருப்புவதில் தீவிரம் காட்டின. எனவேதான் அவர்களின் மனதைப் புண்படுத்திய 'டா வின்ஸி கோ'டை அழுத்தமான கோரிக்கையின்றியே தடை செய்துள்ளது தி.மு.க. அரசு. கலைஞரின் உண்மையான கைமாறு இதுதான்.

கிறிஸ்தவர்களின் மனம் 'புண்படாமல்' காப்பாற்றியிருக்கும் கலைஞர் இப்போது மத உணர்வுகளை முன்னர் 'புண்படுத்திய' 'பராசக்தி' வசனங்களையும் தனது மேடைப் பேச்சுகளையும் மறு பரிசீலனை செய்வாரா? (பற்பல கோரிக்கைகள் இருந்தும் 'பராசக்தி' திரைப்படத்தை ராஜாஜியின் காங்கிரஸ் அரசு அப்போது தடை செய்யவில்லை) இந்தியப் புராணங்கள் பற்றிய பெரியாரின் மறுவாசிப்புகளைவிட, 'டா வின்ஸி கோ'டின் மறுவிளக்கங்கள் உக்கிர மானவையா?

இந்து மதத்தின் அநீதியான ஆதிக்கச் சிந்தனைகள் பற்றிய நியாயமான விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அம்மத நிறுவனங்களின் சாதிய அணுகுமுறைகளைத் தகர்ப்பதற்கான செயல்பாடுகளும் அவசியமானவை. ஆனால் இத்தகைய விமர் சனங்கள், செயல்பாடுகளிலிருந்து குறிப்பிட்ட சில மத நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மதச் சார்பற்ற சிந்தனையாளர்கள் மற்றும் அரசின் வேலை அல்ல. அது நியாயமானதும் அல்ல.

n

மத உணர்வுகளைப் புண்படுத்துதல் பற்றிய திடீர் அக்கறை ஏற்பட்ட மற்றொரு 'பெரியாரிஸ்ட்' அ. மார்க்ஸ். இறைத் தூதர் கார்ட்டூன் பிரச்சினைத் தொடர்பாக 'சமரசம்' என்ற இஸ்லாமிய இதழில் எழுதும்போது இவ்வாறு எழுதி அசர வைக்கிறார்.

"கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் 'blasphemę்'க்கு நியாயம் கற்பிப்பதை ஏற்க முடியாது."2

இவர் இந்து மதத்தை மலம் அது இது என்றெல்லாம் எழுதிவந்தது ஒருபுறம் இருக்க, ஒரு 'பெரியாரிஸ்ட்' இத்தகைய நிலைபாட்டை எடுக்க முடியுமா என்ற அடிப்படையான கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும். பெரியாரின் செயல்பாடுகளை, உரைகளை, எழுத்துக்களை, 'மத உணர்வுகளை இழிவுசெய்தல் கூடாது' என்று கற்பிக்கும் ஒருவர் ஏற்க முடியுமா? Blasphemy என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி, 'behaviour or language that insults or shows a lack of respect for God or religion' என்று பொருள் தருகிறது. கடவுளை அவமதித்தல், மத உணர்வுகளை அவமதித்தல் கூடாது எனில் பிள்ளையார் சிலை உடைத்தலை எப்படிப் பார்ப்பது என்று இந்தப் 'பெரியாரிஸ்ட்' நமக்கு விளக்க வேண்டும். சீதையின் கீழாடையை லட்சுமணன் தூக்கிப் பார்ப்பது போன்ற அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய திராவிடர் கழக ஊர்வலங்கள் blasphemy அல்லவா? இஸ்லாமிய மிதவாதிகள், மதவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என எல்லாத் தரப்பினருக்கும் 'ஆமா' போடுபவராக இருக்கும் அ. மார்க்ஸ் ஏக காலத்தில் 'பெரியாரிஸ்ட்'ஆகவும் இருப்பதை என்னவென்று சொல்ல?

n

இந்த வருடம் ஜூன் மாதம் ஐந்து சமண முனிவர்கள் மேட்டூருக்கு வருகை தந்தார்கள். இவர்களது பயணத்தின் நோக்கம் 'உலக அமைதி'. "இந்த உடம்புகூட நமக்குச் சொந்தமல்ல" என்றதத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் நிர்வாணமாக உலக அமைதிக்கான பயணத்தை மேற் கொண்டுள்ளனர் (திகம்பரப் பிரிவைச் சேர்ந்த அந்த முனிவர்களைப் 'பீடிச் சாமியார், சாக்குச் சாமியார், சரக்குச் சாமியார்' போன்றவர்களோடு ஒப்பிட்டது 'புலனாய்வு' இதழ் ஒன்று.)3

மேட்டூரில் அவர்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதியின் முன்னர் பெரியார் திராவிடர் கழகத்தினர், சமீப காலமாக வீரத் தமிழர்கள் கையிலெடுத்திருக்கும் ஆயுதங்களான செருப்பு, துடைப்பம் ஆகியவற்றோடு போராட்டத்தில் இறங்கினர். ஜெயலலிதா ஆட்சியில் 'தொட்டிலில் உறங்கும் புரட்சி'4யாளர்கள் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் துயில் எழுந்து ஆட்டம் போடத் தொடங்கிவிடுவது வழக்கமானதுதான்.

வீரப்பனின் ஆதரவாளராகப் பரவலாக அறியப்படும் கொளத்தூர் மணி சமண முனிவர்களின் வருகையைப் பற்றிக் கூறியதாவது: "அஞ்சு பேரு நிர்வாணமாப் போனா, உலக அமைதி கிடைச்சுடும்னா. . . ஊருல இருக்கிற எல்லாருமே நிர்வாணமாச் சுத்தினா சீக்கிரமே உலக அமைதி கிடைச்சிடுமே. என்ன ஒரு கேவலமான கொள்கை! மதத்தின் பெயரால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? இவர்கள்மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!"5

ஊரில் எல்லோரும் நிர்வாணமாக இருப்பதே ஆரோக்கியமானது என்று எண்ணியவர்கள் ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டில் நிர்வாணச் சங்கங்கள் அமைத்தனர். அவற்றில் நிர்வாணமாகப் பங்குகொண்டு, நிர்வாணச் சங்கத்தினருடன் தானும் நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு தமிழகத்தில் அதைப் பிரசுரித்தவர் பெரியார். 'பெரியாரிஸ்ட்' கொளத்தூர் மணியைப் போல நிர்வாணத்தை அவர் ஒரு 'கேவலமான கொள்கை'யாகப் பார்த்ததாகத் தெரியவில்லை.

தமிழக அரசு சிறுபான்மைச் சமணர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகச் செருப்பு, துடைப்பம் ஏந்திய போராளிகள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாகச் சமண முனிவர்களை மாநிலத்தைவிட்டு வெளியேற்றியது. ஏனெனில் சமணர்களுக்கு இங்கு ஓட்டு வலிமை இல்லை. இத்தகைய சகிப்புத் தன்மையற்ற ஒரு சூழ்நிலை இன்று குஜராத் நீங்கலாக இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

Advt

சமணம் தமிழகத்திற்கு அந்நியமானதல்ல. தென் குமரியில் சிதறால் வரை சமணர்கள் பள்ளி அமைத்துச் செயல்பட்டுள்ளனர்.6 அதேபோலச் சமணர்களைக் கழுவிலேற்றிய வரலாறும் நமக்குண்டு. அந்த ரத்த ருசி இன்னும் மறக்கப்படவில்லை என்பதை இச்செயல்பாடுகள் உணர்த்துகின்றன. மேலும் மத உணர்வுகளைப் புண்படுத்தலாகாது என்ற 'பெரியாரிஸ்ட்'களின் புத்தம் புதிய நிலைப்பாடு செமிட்டிக் மதங்களுக்குப் பொருந்துமே அன்றி இந்திய மதங்களுக்குப் பொருந்தாது போலும்.

மத நம்பிக்கைகள் மத நம்பிக்கையாளர்களால் பேணப்பட வேண்டியவை. பின்பற்ற மறுப்பவர்கள் மத நீக்கம் செய்யப்படலாம். ஆனால் அந்த மதத்தில் நம்பிக்கை அற்றவர்களோ அல்லது எந்த மதத்திலும் நம்பிக்கையற்றவர்களோ அவற்றை மதிக்க வேண்டும் என வற்புறுத்துவது விவேகமானது அல்ல. அது ஒரு மதச் சார்பற்ற சமூகத்திற்கு அழகும் அல்ல. இணையமும் குறுந்தகடுகளும் பிற நாட்டுத் தொலைக்காட்சி சானல்களும் சரளமாகப் புழங்கும் உலகமயமான சூழலில் இத்தகையக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது சாத்தியமுமல்ல. நமது சந்தர்ப்பவாத செக்குலரிஸ்டுகளின் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் மத அடிப்படைவாதிகளுக்கான நியாயங்களை உருவாக்கி அவர்களை வலுப்படுத்துவதிலேயே சென்று முடியும்.

அடிக்குறிப்புகள்

1 தியடோர் பாஸ்கரன், Outlook, 12 ஜூன் 2006

2 சமரசம், 1-15 ஏப்ரல் 2006

3 ஜூனியர் விகடன், 11.06.2006

4 வானகமே இளவேயிலே மரச்செறிவே - சுந்தர ராமசாமி (2004)

5 ஜூனியர் விகடன், 11.06.2006

6 தென்குமரியின் கதை - அ.கா. பெருமாள் (2003)

உள்ளடக்கம்

Google Ads.....


Google