Google   www kalachuvadu.com

அரசியல்

கலாச்சாரத்தின் மாற்றம்
தேர்தல் 2006

இரா. திருநாவுக்கரசு

தேர்தல்-2006: ஒரு நேரடி அனுபவம்

தேர்தல் மதச்சார்பற்ற சடங்காக மாறிவிட்டது என்னும் தீவிர அங்கலாய்ப்பு, இதே அமைப்பிற்குள்ளாகச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தும் நம்பிக்கை, தேர்தல் என்பதே வெறும் ஏமாற்று வேலை என்ற ஆவேசம் ஆகிய அணுகுமுறைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அநேகமாக எல்லாத் தேர்தல் காலங்களிலும் இது போன்ற சிந்தனைகள் வெகுவாக விவாதிக்கப்படுகின்றன.

எல்லாச் சமூக நிகழ்வுகளையும், மாற்றங்களையும், மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட, மலினப்படுத்தப்பட்ட நேரடியான அரசியல் சமன்பாடுகளாகப் பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பது சற்றே வருத்தத்திற்குரிய உண்மை. "எங்களோடு இல்லையென்றால், பயங்கரவாதிகளோடு இருப்பதாக அர்த்தம்" என்ற ஜார்ஜ் புஷ்ஷின் அபத்தத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது மேற்கூறிய அரசியல் சமன்பாடுகள் ஊடே சமூக, கலாச்சார, அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும் பிரக்ஞை. சரி x தவறு, ஆம் x இல்லை, நல்லது x கெட்டது என்ற இருபடித்தான பரிமாணங்கள் மூலமாக எல்லா நிகழ்வுகளையும் பார்க்க எத்தனிப்பதன் விளைவு, எளிதில் எதிரிகளை அடையாளம் காட்டுவதோடு முடிந்துவிடுகிறது. எதிரிகள் அடையாளப்படுத்தப்பட்ட பிறகு அநேகமாக விவாதம் நின்றுவிடுகிறது. ஜன நாயகத்தின் சாரம் இது அல்ல என உறுதியாகக் கூறலாம். ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான ஜனநாயகம் வலிந்து கருத்தொற்றுமைகளைச் சன்னமான அதிகாரத்துடன் உருவாக்காது; மாறாக, உத்வேகம் மிக்க விவாதத் தளங்களை உருவாக்கும்.

இந்தியத் துணைக் கண்டச் சமூக அமைப்பில், பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் கலாச்சாரம் பெரும் பங்காற்றுகிறது. யார் எத்தகைய உற்பத்தி முறையில் ஈடுபட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இந்தியாவில் கலாச்சாரத்தின் குவிமையமாக இருக்கும் சாதிய அமைப்பு முறையே. ஆக, கலாச்சாரத் தளத்தில் நிகழும் போராட்டமும் முக்கியத்துவம் பெறத் தக்கதுதான். குறிப்பாகச் சொன்னால், சாதி ரீதியான முரண்பாடுகளை மையப்படுத்தி அமையும் போராட்டத்தில் தேர்தல்கள் ஆக்கபூர்வமான பங்கை அளிக்கின்றனவா என்பதே நம் முன் உள்ள பிரதானக் கேள்வி.

இதனடிப்படையில், சமீபத்திய தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை உற்று நோக்கினால், தமிழக அரசியல் மிக முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளது என்று தெளிவாகக் கூறலாம். போட்டி இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கிடையேதான் என்று கூறுவது மேம்போக்கான பார்வையாகவே அமையும்.

தமிழக அரசியலில் மிக முக்கியச் சக்தியாக இருந்த எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, நான்கு முறை சட்ட மன்றத்திற்கும் ஆறு முறை மக்களவைக்குமாகச் சேர்த்து, பத்துத் தேர்தல்களில் தமிழக மக்கள் தந்திருக்கும் அரசியல் முடிவுகள், அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டும். 1996 சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த அ.தி.மு.க, இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றது கூட்டணி பலத்தால் மட்டுமே. அந்த சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட தி.மு.க., 1999 மக்களவைத் தேர்தலில் கண்ட வெற்றிக்குக் காரணம் கூட்டணிக் கட்சிகளின் பலம்தான். இதை நன்கு உணர்ந்திருந்தாலும் 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளைத் தி.மு.க உதறியது ஏன் என்ற கேள்விக்கான விடை காணும் பொறுப்பை அரசியல் சாணக்கியர்களின் தீவிர விசாரணைக்கு விட்டுவிடுவோம். அதே தவறை 2004 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. செய்தபோது, ஏற்கனவே இருந்த அதிருப்தியும் சேர்ந்துகொள்ள, மிக மோசமான தோல்வியை அக்கட்சி சந்தித்தது. மிகுந்த சிரமங்களுடனும் அரசியல் சாணக்கியத்துடனும் கூட்டணியைத் தக்கவைக்கத் தி.மு.க. தலைமை காட்டிய உத்வேகம், கூட்டணி என்பது முக்கியமான அரசியல் சக்தி என்பதையும் மீறித் தவிர்க்க முடியாத அம்சமாகத் தமிழகத்தில் உருவாகிவிட்டதைத் தெளிவுபடுத்தும்.

2006 தேர்தலில் தி.மு.க. கண்ட வெற்றி, கூட்டணி பலத்தால் மட்டுமே சாத்தியம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளில் வெற்றி பெற்று 26.45 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற கட்சி தனியாக ஆட்சி அமைத் திருப்பது புதிய அரசியல் விந்தை. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் ஏறக்குறைய 20 சதவிகித வாக்குகளைப் பெற்று 67 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. அதே போல் அ.தி.மு.க., 188 தொகுதிகளில் போட்டியிட்டு 61 தொகுதிகளில் வெற்றி கண்டு 32.64 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அதன் இரு முக்கியக் கூட்டணிக் கட்சிகள் 7 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகள் பெற்று 8 இடங்களை வென்றுள்ளன.

இப்படியாகக் கூட்டணிக் கட்சிகளின் பலம் என்பது இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று. சில மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நிலவிவரும் சூழலில் கூட்டணி என்பதைப் பெரும் அரசியல் அதிர்வாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி என்பது கொள்கை, சித்தாந்தம் சார்ந்து உருவாவது அல்ல; வெறும் அரசியல் ஆதாயத்தை மட்டுமே வைத்து அமைவது.

அப்படியென்றால், வெறும் பதவிகள் மூலம் கிடைக்கும் ஓலாபம்ஔ தவிர்த்துக் கூட்டணி என்பதன் சமூகவியல் பொருள் ஏதேனும் இருக்கிறதா? இன்றைய தேர்தல் கூட்டணியின் அடிப்படையை எவ்வளவு சிரமப்பட்டுத் தேடினாலும் அதில் சித்தாந்த ஒற்றுமையைக் கண்டறிய முடியாது. தங்களது அரசியல் எதிர்காலம், அதன் வளம் பற்றி மட்டுமே சிந்திக்கும் எண்ண ஓட்டம் இன்று கோலோச்சத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியில் உருவான நவீனத்துவம் காலனிய ஆட்சி மூலம் துணைக் கண்டத்தில் அறிமுகமானபோது, அதுவரை நிலவிவந்த சமூக, கலாச்சாரத் தளம், முன்னெப்போதும் இருந்திராத பெரும் அதிர்வைச் சந்தித்தது. அதன் முக்கியமான விளைவுகளாகச் சாதி, மதங்களை மையப்படுத்திய அரசியல் மிக முக்கியமானது எனலாம். எதிர்வரும் காலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள எதனடிப்படையில் காலனிய அரசை அணுகுவது என்ற துணைக் கண்ட மக்களின் கேள்விக்குக் கிடைத்த பதில்: சாதி.

சமூக, கலாச்சாரக் கட்டமைப்பில் அடிநாதமாக இருக்கும் சாதியின் துணை கொண்டு, புதிதாக உருவாகியுள்ள போட்டிச் சூழலுள்ள அரசியலையும் அதிகாரத்தையும் கைப்பற்றத் துணைக் கண்ட மக்கள் செய்த முயற்சிகள் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டு இந்தியாவின், குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் வரலாற்றியலின் மையமாகியிருக்கிறது. இன்று உரிமைகளைப் பெறும் வழிமுறைகளில் சாதி மிக முக்கியமான வாகனமாக மாறிவிட்டது. தனிநபரை மையப்படுத்தி ஐரோப்பாவின் சமூகத்தைக் கட்டமைத்த நவீனத்துவம், துணைக் கண்டத்தில் குழு சார்ந்த சமூகக் கட்டமைப் பிற்கு அடித்தளம் அமைத்திருக்கிறது. இன்றைய தமிழ்ச் சூழல் இதன் அடுத்த கட்டத்திற்கு எட்டிப் பாய்கிறது. சாதி சார்ந்த சமூகக் கட்டமைப்பு 'தமிழ்' எனும் தேசியப் பிரக்ஞை நிறைந்த தமிழ்ச் சூழலில், சாதியோடு அதன் நிலவகை சார்ந்த கலாச்சார அம்சங்களும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. நவீனத்துவம் இந்தியாவில் உருவாக்கிய போட்டி சார்ந்த அரசியலின் மேம்பட்ட அடுத்த நிலையாக இதைக் கொள்ளலாம்.

அசாதாரணமான சூழல் தவிர்த்து, இனி தமிழகம் முழுவதும் பேராதரவோடு வாக்குகள் பெற்றுத் தனிக் கட்சி ஆட்சி அமைவது ஏறக்குறைய முற்றுப் பெற்ற அம்சமாகவே தோன்றுகிறது. தென் மாவட்டங்களின் அரசியல் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாநிலத்தின் இதர பகுதிகளோடு ஒப்பிடுகையில் சற்றே வேறானது என்றாலும் இனி அந்த வேறுபாடுகள் சில கலாச்சாரக் குறியீடுகளையும் தன்னுள் சுவீகரித்துக்கொண்டு தனித்துவமிக்க அரசியல் கருத்தாடலாக மாறக்கூடும்.

சாதி எதிர்ப்பு என்ற பன்முகக் கலாச்சாரப் போராட்டம், பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குத் துரதிருஷ்டவசமாக மாறியதன் விளைவு, விருப்பு வெறுப்பின்றி நெடிய வரலாற்றை விமர்சனம் செய்து, அதனூடாகப் புதிய வரலாறு படைத்திருக்க வேண்டிய தமிழ்ச் சமூகம், தனது கடந்த கால வரலாற்றை இன்றைய தேவைகளுக்காக வெறும் மறுபதிப்பு மட்டும் செய்வதில் தீவிரமாக இறங்கிவிட்டது. தமிழக அரசியல் நவீன காலத்துக்கு முந்தைய மன்னர் கால அரசியல் கலாச் சாரத்தை ஒத்திருக்கிறது என்ற கூற்றுத் தோற்றுவித்திருக்கும் புதிய கேள்விகள், புதிய பதில்களுக்கான தேவையைத் துரிதப்படுத்தியிருக்கிறது.

1967 முதல் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் தமிழகம், 1977இல் மிக முக்கியக் கட்டத்தை எட்டியது. ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒரே அரசியல் பாரம்பரியத்தையும் சித்தாந்தத்தையும் தோற்றுவாயாகக் கொண்ட, எந்த மாநிலத்திலுமே இல்லாத அசாதாரணமான, ஆச்சரியமான அரசியல் சூழல் உருவானது. இந்தி எதிர்ப்பு-தமிழின் தொன்மை; வடநாட்டின் சுரண்டல்-திராவிட மேன்மை போன்ற முழக்கங்கள் வழியாக பிராமணரல்லாத தமிழர்களை ஒன்றிணைக்க முற்பட்ட தமிழக அரசியல், இன்று அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்திருப்பதாகவே தோன்றுகிறது. எனினும், மேற்கூறிய முழக்கங்களை விரிவான பின்புலமாகக் கொண்டு தமிழக அரசியல் களம் புதிய பரிமாணம் பெறத் தொடங்கிவிட்டது. பிராமணரல்லாதோர், தமிழர் போன்ற திராவிட அரசியல் கருத்தாடலுக்குள்ளாகத் தனித்தனி சாதிய அடையாளங்கள் தனித்துவமும் இறையாண்மையும் பெற்ற அரசியல் வடிவங்கள் முன்னுரிமை பெறத் துவங்கிவிட்டன. மன்னர் கால அரசியல் கலாச்சாரம் என்ற கூற்று இது வரை முழுமையாகத் தமிழகத்திற்குப் பொருந்தவில்லை; இனிமேல்தான் இக்கூற்று முழுமை பெறும். நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் வழியாக அவற்றின் கலாச்சார அடையாளங்கள், தொண்டை நாடு போன்ற பதங்கள் இனி அரசியல் களத்தில் வெகு இயல்பான வேகத்தில் பயன்படுத்தப்படும் காலம் விரைவிலேயே உருவாகலாம்.

கடந்த 70 ஆண்டுகளாகத் திராவிட 'சாம்ராஜ்யம்' உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்று குறுநில மன்னர்களின் அரசியல் வாழ்விற்கு வழிகோலியுள்ளது. புதிய குறுநில மன்னர்கள் தங்களது மாமன்னரது கொள்கைக்கு விசுவாசமாகவே இருப்பார்கள் என்றாலும் தங்களது தனித்துவத்தை இழக்க விரும்பாதது போலவே தெரிகிறது. தேர்தல் 2006 அதை உறுதி செய்வதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
குறிப்புகள்

1. Pamela Price (1989): Kingly Models in Indian Political Behavior: Culture as a Medium of History, Asian Survey, 29.6 pp. 559-623.
2.Thirunavukkarasu, R. (2001): Changing Equations in Tamil Nadu: Economic and Political Weekly Vol.36, No:27, pp.2486 - 89.
கட்டுரையாளர் ஆய்வு மாணவர், சமூகவியல் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி.

உள்ளடக்கம்

Google Ads.....


Google