Google   www kalachuvadu.com

மையத்திற்கு வெளியே சில உலகங்கள்

'மக்டலீன் சிஸ்டர்ஸ்' அம்பலப்படுத்தும் உண்மைகள்

மு. புஷ்பராஜன்

அதிகாரம், அதிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாத அதிகாரம் எந்த எல்லைவரை செல்லும் என உங்களால் கற்பனை பண்ண முடியுமா? சில வேளைகளில் உங்கள் கற்பனையையே ஊதித் தள்ளும் அளவிற்கு அதன் நிஜம் அமைந்துவிடும். ஸ்தாபனமயப்பட்ட அதிகார அமைப்புகள் தமது வரைவுகள் கருதி மனித மாண்பை நாசம் செய்துவிடுகின்றன. ஒரு சிறிய நெகிழ்வுத்தன்மை, உறுதிப்படுத்தப்பட்ட இருப்பிற்கான உடைவின் ஆரம்பமெனக் கருதப்பட்டு மேன்மேலும் அது தன்னை இறுக்கிக்கொள்கிறது.

நொந்து நூலாகிப்போவதென்னவோ அதற்குள் அகப்பட்டவர்கள்தான். நாம் சாதாரணமாக வெளியே உலவி, வேலை, வீடு, உணவு, உறக்கம் என வாழ்ந்துவருகையில் நமது வாழ்வு வட்டத்திற்கு அப்பால் வெவ்வேறு தனித்த உலகுகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அவற்றின் உள்ளறைகள் பற்றி அறிய வருகையில் நாம் அதிர்ச்சியில் உறைந்துபோய்விடுகிறோம். அந்த உலகம் ஒரு சிறைச்சாலையாகவோ வதை முகாமாகவோ ராணுவ அமைப்பாகவோ மத ஸ்தாபனமாகவோ, ஏன், குடும்ப அமைப்பாகவோ இருக்கலாம். அளவுகள்தான் மாறுபாடுவன. குணநிலை சார்ந்து எல்லாம் ஒன்றுதான்.

அவுஷ்விட்ஸ் வதை முகாமிற்கும் லுப்யாங்க்கா சிறைச்சாலைக்கும் குணநிலை சார்ந்து எந்த வித்தியாசமும் இல்லை. ராணுவப் பயிற்சி முகாம்களுக்கும் சில மத ஸ்தாபனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. அறிவுலகை ஓர் அசைப்பு அசைத்த ரஜ்னீஷின் அமெரிக்க ஆசிரம நிகழ்வுகளை (Bhagwan: The God That Failed - Hugh Milne) அறிந்தவர்க்கு அவை ஜார்ஜ் ஆர்வலின் "விலங்குப் பண்ணை"யை நினைவூட்டலாம். அதேபோல் Magdalene Laundryஇல் நடந்தவை அலெக்சாண்டர் குப்ரின் இயக்கிய Metal Jacket திரைப்படத்தை நினைவூட்டலாம்.

மக்டலீன் லாண்ட்ரி என்பதுதான் என்ன? அதற்காக நீங்கள் The Macdalene Sisters என்ற திரைப்படத்திற்குள் நுழைந்துதான் ஆக வேண்டும். அதற்கு முன் கத்தோலிக்கத் திருச்சபை மேரி மக்டலீனை எவ்வாறு உருவகப்படுத்தியுள்ளது என்பதுதான் இதற்கான நுழைவாயில்.

மேரி மக்டலீன் விபச் சாரத்தின் மூலம் நெறிதவறி வாழ்ந்த ஒருவர்; யூத மரபுப்படி கல்லால் எறிந்து கொல்லப்படவிருந்த கணத்தில் "உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதல் கல்லை எறியட்டும்" என்று யேசு கூறிய வார்த்தைகளால் மரணத்திலிருந்து மீட்கப்பட்டு யேசுவைப் பின்பற்றி வாழ்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது.

தவறிழைக்கப்பட்டதாகக் கருதப்பட்டுச் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பெண்களைப் பராமரிப்பதற்காக அருட்சகோதரிகளால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்தின் பெயர்தான் மக்டலீன் லாண்ட்ரி. இந்த நிறுவனத்தின் தத்துவம் மிக மிக எளிமையானது. அதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அருட்சகோதரி பிரிட்ஜெட் இவ்வாறு மிகவும் கருணை பொங்கக் கூறுகிறார் :

"வாழ்க்கையில் தவறியவர்கள் பிரார்த்தனை, கடுமையான உழைப்பு ஆகியவையினூடாக நமது ஆண்டவரும் மீட்பவருமாகிய யேசு கிறிஸ்துவின் பாதைக்குத் திரும்பலாம். மேரி மக்டலீன் கூடப் பணத்திற்காக உடலால் இழிந்த செயலும் மோசமான பாவங்களையும் புரிந்தவர்தான். உடலின் எல்லா வித சந்தோஷங்களையும் மறுத்தல், உணவு, தூக்கம் என்பவற்றையும்கூட மனித சக்திக்கு அப்பாற்பட்ட பொறுமையுடன் மேரி மக்டலீன் தனது ஆத்மத்தைக் கடவுளுக்கு அர்ப்பணித்ததால்தான் மோட்சத்தின் கதவுகளைக் கடந்து நித்திய வாழ்வை வாழ்ந்துகொண்டார்.

"எங்களது இச்சலவைச் சாலை சாதாரணத் துணிகளையும் படுக்கை விரிப்புக்களையும் கொண்டதல்ல. இவை நீங்கள் கட்டிக்கொண்ட பாவத்தின் கறையை அகற்றி உங்கள் ஆத்மாவைத் தூய்மைப்படுத்தும் அர்த்தம் கொண்டவை. நீங்கள் இங்கே மீட்சி பெற்று கடவுளின் விருப்பப்படி நித்திய அழிவிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளலாம். காலை உணவு ஆறு மணிக்கு, பிரார்த்தனை ஆறு முப்பதுக்கு, ஏழு மணிக்கு வேலை."

இங்குதான் சமூகத்தின் ஒழுக்கம் என்ற சில்லுள் நசிபட்ட மார்கரெட், ரோஸ், பெர்னடெட் என்னும் மூன்று இளம் பெண்கள் கொண்டுவரப்படுகிறார்கள். வாழ்வின் வசந்த காலங்களையும் அதன் வசீகரங்களையும் கனவாயும் நிஜமாயும் அணு அணுவாகச் சுவைக்க வேண்டிய காலம் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

இது மார்கரெட்டின் கதை: திருமணக் கொண்டாட்டம். ஆரவாரம், மகிழ்ச்சி, குதூகலம், மது போதையின் தளர்ச்சி, பாடல்கள் ஆகியவைகளின் ஆட்சி. மது போதையிலிருந்த தனது சகோதரன் முறையுள்ள ஒருவனால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறாள் மார்கரெட். ஆற்றாமையின் கலங்கிய கண்களுடன் உறவுக்காரப் பெண் ஒருத்தியிடம் முறையிடுகிறாள். அவள் அவனிடமும் அவர்கள் தந்தைமாரிடமும் கூறுகிறாள். மார்கரெட்டின் தந்தை அதனை குருவிடம் கூறுகிறான். மார்கரெட்டின் தகப்பன், அவன், அவனுடைய தகப்பன், குரு, எல்லோரும் வெளியே சென்று ஆலோசிக்கிறார்கள். மார்கரெட்டிடம் எதுவும் கேட்கப்படவில்லை. கலங்கிய கண்களோடும் திகைப்புடனும் ஏக்கத்துடனும் அவர்கள் வரும் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள். எல்லோரும் இழிந்த உணர்வு தொனிக்க மார்கரெட்டைப் பார்க்கிறார்கள். எவ்வித உரையாடல்களும் இல்லை. பார்வைகளின் பரிமாற்றம்தான். கண்களின் ஒளி, வார்த்தைகளுக்கு அப்பால் எவ்வளவு வலிமையானது. மறுநாள் அதிகாலை தூக்கத்திலிருந்து மார்கரெட் எழுப்பப்பட்டு காரில் ஏற்றப்படுகிறாள். தாயோ கையறு நிலையில் ஜன்னல் வழியாகப் பார்க்கிறாள்.

அவர்களுக்கான அபிப்பிராயம் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை அங்கு இல்லை. தந்தையின் முடிவு மட்டுமே. கார் வேகமாகச் சென்றுவிடுகிறது.

இது பெர்னடெட்: அனாதைச் சிறுவர்களைப் பராமரித்துக் கல்வி கற்பிக்கும் நிலையம் அது. பெர்னடெட்டும் வேறு சில பெண்களும் நிலையம் அமைந்திருக்கும் தெருவோரத்தில் இளவயதுப் பையன்களுடன் கேலி பேசிச் சிரித்துக்கொள்கிறார்கள். நிர்வாகம் மறைவாக நின்று கவனித்துக்கொண்டிருக்கிறது. மணி ஒலிக்கையில் திரும்பவும் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். பெர்னடெட் மட்டும் சிறிது நேரம் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருக்கிறாள். இளவயதில் அவ்வாறாகக் கதைப்புக்களில் ஆவலுற்றிருக்கும் இயல்பின் அறிகுறியாக மறுநாள் அவள் படுத்திருக்கும் கட்டிலின் வெறுமையை அவளது சக தோழிச் சிறுமிகள் காண நேர்கிறது.

ரோஸ்: மகப்பேற்று நிலையத்தின் ஒரு அறை. கையில் பச்சைக் குழந்தையுடன் ரோஸ். அருகில் இறுகிய முகத்துடன் தாய். மெலிந்து நைந்துபோன துயரக் குரலுடன் கூறுகிறாள்: "அம்மா, உனக்கும் அப்பாவுக்கும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இவனைப் பாருங்கள், மிக அழகாக இருக்கிறானல்லவா? அம்மா, ஒரேயொரு தடவை இவனைப் பாருங்கள்" எனக் கசிந்து கூறுகிறாள். தாயின் இறுகிய முகத்தில் எந்த இரக்கத்தின் ரேகைகளும் இல்லை. குழந்தையின் முகத்தைக் கடைக் கண்ணால்கூடப் பார்க்கவில்லை. வாசலில் நின்று தந்தை அழைக்கிறார். அவரிடமும் குழந்தையின் அழகு பற்றியும் அவனை ஒரு முறை பார்க்கும்படியும் கெஞ்சுகிறாள். அவரும் அதைக் கேட்டுக்கொள்வதாக இல்லை. அழைத்து வரப்பட்ட குரு, ரோஸுக்குச் சமூகத்தில் கிடைக்கப்போகும் இழிந்த நிலை பற்றியும் குழந்தையைப் பராமரிக்க ஏற்படும் நெருக்கடிகள் பற்றியும் கூறி, குழந்தையின் நல்ல எதிர்காலம் கருதிப் பராமரிப்பு நிலையத்தில் சேர்ப்பது பற்றிக் கூறிப் பத்திரத்தில் கையொப்பமிடும்படி கோருகிறார். தயக்கத்துடன் கையொப்பம் இடுகிறாள் ரோஸ். அவ்வளவுதான், எல்லாம் திட்டமிட்டபடியே இயந்திரக் கதியில் செயல்படுத்தப்படுகிறது. தாதி, குழந்தையை எடுத்துச் சென்றுவிடுகிறாள். தாய் எவரையும் திரும்பிப் பார்க்காமல் விறைப்போடு வெளியேறுகிறாள். குழந்தை எடுத்துச் செல்லப்படுவது கண்டு கலங்கிய அவள், தன் முடிவை மாற்றிவிட்டதாயும் குழந்தையைத் தன்னிடம் தரும்படியும் கூறிக் குழந்தையை நோக்கிச் செல்ல முற்படுகிறாள். தந்தை தடுத்துப் பிடித்துக்கொள்கிறார்.

தந்தையைப் பார்த்துத் திரும்பத் திரும்பக் கேட்கிறாள். மகனின் முகத்தைப் பார்த்தீர்களா? அவன் அழகாக இருக்கிறானல்லவா? யார் செவியிலும் ஏறவில்லை. மனதை உலுக்கி எடுத்துவிடுகிறார்கள்.

இம்மூவரும் மக்டலீன் லாண்ட்ரியில் சேர்த்துக்கொள்ளப்படும்போதுதான் பொறுப்பாளராக இருந்த அருட்சகோதரி பிரிட்ஜெட், நான் முன்னர் குறிப்பிட்ட தனது கொள்கை விளக்கத்தைக் நிகழ்த்தினார்.

இந்த நிறுவனத்தின் செயற்பாட்டுத் திட்டமே வேலை, வேலை, வேலை. யாரும் யாருடனும் பேசிக்கொள்ள முடியாது. ஒரு ராணுவ ஒழுங்கமைப்பை இங்கு காணலாம். ஒரு அருட்செல்வி வழிநடத்திச் செல்ல, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாது வரிசைகொண்டு பகுதிபகுதியாகக் கடந்து செல்வார்கள். அறிவிப்பில் இடப்பட்ட நேரப்படி பிரார்த்தனை, வேலை, சாப்பாடு, தூங்கப்போதல் அனைத்தும் நடைபெறும். வேலை செய்யும்போது கண்காணிக்க ஒரு அருட்சகோதரி. அவருக்கு உதவியாக ஒருவர். அவரும் வழி தவறிப்போய் மீட்பிற்காய்ச் சேர்த்துக்கொள்ளப்பட்ட மந்தைகளில் ஒருவர். மீட்பிற்காக நாற்பது வருடங்களைக் கழித்துவிட்டார். இவர் தன் முதுமையின் அனுபவத்தினூடாக நிர்வாகத்திற்குத் தகவல்கள் கொடுக்கும் உளவாளியாக மாறியதுதான் இவர் கண்ட மீட்பு. ஆயினும் இவரது உறுதியான நம்பிக்கை, நிர்வாகம் தன்னைக் கடைசிக் காலத்தில் காப்பாற்றும் என்பதுதான். ஆனால் எல்லா உளவாளிகளுக்குமான முடிவுதான் இவருக்கும். நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வைத்திய சாலைக்குக்கூட எடுத்துச் செல்லப்படாது அனாதையாய் இறக்க நேரிடுவது ஒரு பெரிய சோகம்.

இங்கு எந்த எதிர்க் கருத்திற்கும் இடமில்லை. அது ஒழுங்கீனமாகக் கருதப்பட்டுப் பிரம்படிக்குரிய குற்றமாக்கப்படும். பிரம்படித் தழும்புகளுடன் பலர் உள்ளனர். தப்பியோட முனைந்தால் தலைமுடி ஒட்ட வெட்டப்படுகிறது. ஓடியவர்கள்கூடத் தந்தைமாரால் அடி உதையுடன் திரும்ப ஒப்படைக்கப்படுகிறார்கள். அவமானச் சின்னங்களைத் தங்களோடு வைத்துக்கொள்ள அந்தத் தூயவான்கள் விரும்பவில்லை.

இரவு தூக்கத்தில் இருக்கும் அவர்கள் அருட் சகோதரிகளால் எழுப்பப்பட்டுக் கேலி செய்யப்படுகிறார்கள். எப்படி? எல்லோரும் நிர்வாணமாக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்படுகிறார்கள். மார்புகளைக் கைகளால் மறைக்கவும் அனுமதிக்கப்படவில்லை. இப்போது அருட்சகோதரிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். யாருடைய முலைகள் பெரியவை? இவளுடையதா, அவளுடையதா? ஒருத்தி வெற்றி பெற்றவளாக அறிவிக்கப்படுகிறாள். ஓர் அருட்சகோதரி ஒருத்தியைப் பார்த்து இவ்வாறு கூறுகிறாள்: "தலையில் இருப்பதைவிட அதிகமான மயிர் உனக்கு உள்ளது." அவர்கள் அவமானத்தால் அழுகிறார்கள். இதற்கு ஆறுதலாகச் சொல்லப்பட்டது, இது ஒரு பகடி விளையாட்டு, இதற்கு ஏன் அழ வேண்டும் என்பதுதான். பூனைக்குக் கொண்டாட்டம்தான். ஆனால் எலிக்கல்லவா உயிர் போகிறது. அந்த நிலையத்திற்கு வந்துசெல்லும் குருவின் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.

இவர்களது உழைப்பின் பணத்தால் கைகளால் துவைத்த நிலை மாறிச் சலவை இயந்திரங்கள் பொருத்தப்படுன்றன. ஆனால் அவர்களோ சக்கையாக்கப்படுகிறார்கள். உள்ளேயும் வாழ முடியாது, வெளியே வாழ்வதற்கும் அவர்களுக்கான உலகம் இல்லை.

எல்லா அடக்குமுறைகளும் அதற்கு எதிரான விதையைத் தன்னகத்தே கொண்டிருப்பதுபோல் அந்த விதையைக் கொண்டவளாக பெர்னடெட் உருவாகிறாள். அவளது தைரியத்தாலும் தீர்மானகரமான எதிர்ப்புச் சக்தியாலும் இறுதியில் தப்பிச் சென்றுவிடுகிறார்கள்.

இந்தத் தப்பித்தலுக்கு முன்னரே மார்கரெட் அப்போது வளர்ந்துவிட்ட தனது தம்பியின் பொறுப்பில் மீட்டுச் செல்லப்பட்டுவிடுகிறாள்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படத்தின் இறுதியில் பின்வரும் குறிப்புகள் காட்டப்படுகின்றன.

தன் சகோதரனால் மீட்டுச் செல்லப்பட்ட மார்கரெட் ஆரம்பப் பள்ளி ஒன்றின் ஆசிரியராயும் பின்னர் உதவித் தலைமை ஆசிரியராயும் ஆனாள். பெர்னடெட் ஸ்காட்லாந்து சென்று சொந்தமாக சலூன் ஆரம்பித்தாள். திருமணமாகி மூன்று முறை விவாகரத்துச் செய்து இன்றும் தனியாக வாழ்கிறாள். ரோஸ் திருமணம் செய்து இரு பெண் குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளாள். முப்பத்தி மூன்று வருடங்களுக்குப் பின்னர் தனது முதல் குழந்தையை 1998இல் கண்டுகொண்டு, பின் அதே ஆண்டு அவள் இறக்கிறாள். இறக்கும் வரை அவள் உத்தம கத்தோலிக்கப் பெண்ணாகவே வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. குருவின் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்டினா என்ற பெண் மன நோயாளியென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு anorexia நோயினால் இறந்துள்ளாள்.

இவர்கள் நடித்தனர் என்ற உணர்வினை மீறி ஒரு வாழ்வின் அவலத்தை நம்முன் வைத்தனர். இத்திரைப்படத்தின் அழகியலையும் கலைத் தன்மைகளையும் மீறி இதன் உண்மை நம்மை மிக வலுவாகத் தாக்குகிறது. இதன் நெறியாளர் Peter Mullan என்றும் நினைவுகொள்ளக்கூடியவரே.

2

இத் திரைப்படத்தைப் பார்த்தபோது நாம் மட்டுமல்ல, இந்த மக்டலீன் லாண்ட்ரி பற்றிய உண்மைகள் வெளித் தெரிய வந்தபொழுது டப்ளின் நகரமும் அதைத் தொடர்ந்து உலகமும் அதிர்ச்சியால் குலுங்கித்தான் போனது. டப்ளின் நகரின் டிரம்கோண்ட்ரா என்ற இடத்திலுள்ள சவச் சாலையில் இவ்வாறான 175 பெண்களது உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. மக்டலீன் லாண்ட்ரியின் கடின உழைப்பில் உருக்குலைந்து உயிர் நீத்த அப்பாவிப் பெண்களின் புதைகுழிகளின் தலைமாட்டில் அடையாளக் கல் எதுவுமில்லையென்பது மிகவும் சோகமானது.

அயர்லாந்தில் மட்டுமே 30000 பெண்கள் இவ்வகைப் பராமரிப்பு நிலையங்களில் இருந்ததனர். அதன் கடைசிச் சலவை நிலையம் 1996ஆம் ஆண்டு மூடப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறைபோல் இயங்கிய இதன் காலம் reign of terror என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்திலுள்ள நாக் ஹம்மடி நகரத்தின் ஜபல் அல் தரிஃப் பகுதியின் மலைப் பகுதியிலுள்ள குகைகளின் அருகே புராதன ஜாடி ஒன்று மணலின் அடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில் புராதன Copticஇல் எழுதப்பட்ட The Gospel of Mary Magdalene, The Gospel of Thomas ஆகியன உள்பட இன்னும் பல பிரதிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை இதுவரை ஒப்புக் கொள்ளப்பட்ட வாடிகனின் கருத்துக்களைத் தலைகீழாகப் புரட்டிவிட்டன. அவற்றில் ஒன்று மேரி மக்டலீன் பற்றியது. இது பற்றிய சாதக பாதக விவாதங்கள் அவ்வப்போது மேற்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

உள்ளடக்கம்

Google Ads.....


Google