Google   www kalachuvadu.com

தார்மீக அரசியலுக்குச் செருப்படி

ரேவதி

2006 ஏப்ரல் 17, காலை 11:00 மணி

காட்சி - 1:

தேசத்தின் மிக உயரிய நீதி பரிபாலன அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் நுழைவாயிலில் தலை கவிழ்ந்த நிலையில் யாரிடமோ எதற்காகவோ மன்னிப்புக் கோருபவரைப் போலச் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் தேசப் பிதாவின் கரிய சிலைக்குக் கீழே தனது வேதனையை வெளிப்படுத்துவதற்கான சக்தி சிறிதும் அற்றவராய் அமர்ந்திருக்கிறார் கம்லு ஜீஜீ.

காட்சி - 2:

தேசத்தின் மிகப் பெரிய வளர்ச்சிப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படும் சர்தார் சரோவர் அணைக் கட்டுத் திட்டத்தால் பாதிக்கப்படும் சுமார் 30,000 அப்பாவி இந்தியர்களின் எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தைக் கோரி தொடர்ந்து 21 நாள்களாக உண்ணாவிரதம் என்னும் அறப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மேதா பட்கர், தேசத்தின் மிகத் தரமான மருத்துவமனைகளில் ஒன்றான எய்ம்ஸில் (aiims - All India Institute of Medical Sciences) உள்ள ஒரு வார்டில் தலைநகரின் காவல் துறையின் ஒத்துழைப்போடு கட்டாயச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்.

காட்சி - 3:

உச்ச நீதிமன்றத்தின் அதே நுழைவாயில்.

பரிதவிப்புக்குள்ளான ஒரு மனிதரை உச்ச நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் அதன் காவலாளிகள். நர்மதா அணைத் திட்டப் பகுதியைச் சேர்ந்த ஜலசந்தி என்னும் எழில் சூழ்ந்த மலைக் கிராமமொன்றின் தலைவரான பாவா மரியாதான் அவர். அவர்தான் 2002இல் அதே உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதியான ஒய்.கே. சபர்வால் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு பெஞ்சிடமிருந்து ஒரு தீர்ப்பைப் பெற்றிருந்தார். பாதிக்கப்படும் மக்களுக்குப் புனர்வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்வரை அணைக்கட்டின் உயரம் அதிகரிக்கப்பட மாட்டாது என அவருக்கு உத்தரவாதம் அளித்திருந்த தீர்ப்பு அது. நர்மதை கட்டுப்பாட்டு ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அணைக்கட்டின் உயரத்தைக் கூட்டும் பணியைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும் புனர்வாழ்வுப் பணிகள் முடிவடைந்த பின்னரே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரியும் அதற்கான ஆணையை நீதிமன்றத்திடமிருந்து எதிர்பார்த்து வழக்குத் தொடுத்திருப்பவரும் அவர்தான்.

காட்சி - 4:

கட்டுமானப் பணிகள் தடை செய்யப்படும் என்ற நம்பிக்கையை நீதிமன்றம் தகர்த்துவிட்ட நிலையில் பிற்பகலில் தொடரவிருக்கும் விசாரணையை நிராசையோடு எதிர்பார்த்து அதே நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த மக்களிடையே நின்றுகொண்டிருக்கிறார் அருந்ததி ராய். ஓயாது நச்சரிக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் அவருடைய பேட்டியைப் பதிவு செய்துகொண்டிருக்கும் வேளையில் எங்கிருந்தோ ஓடி வரும் குஜராத்தின் பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் ராயிடம் ஆவேசமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார். "உங்களால் ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்க முடியுமா என்ன?"

காட்சி - 5:

இக்காட்சியும்கூட ஒரு 'உண்ணாவிரதப் போராட்ட'த்தைச் சித்தரிக்கக்கூடியதுதான். இடம்: குஜராத்தின் சபர்மதி ஆசிரமம் (பெயர் நினைவிருக்கிறதல்லவா?). காட்சியின் நாயகர் 'எளிய' கதர் பட்டு உடையில் தென்படுகிறார். ஆனால் நாம் கற்பனை செய்துகொள்வதுபோல் அவர் சாமான்ய மனிதரல்ல. கடந்த வருடங்களில் குஜராத்தில் கொடிய வன்முறைகளை நிகழ்த்திய மத வெறியர்களின் பிதாமகர், குஜராத்தின் நிரந்தர முதல்வராக அதே மத வெறியர்களால் சித்தரிக்கப்படும் நரேந்திர மோடிதான் அவர். கட்டுமானப் பணிகளைத் தொடருவதற்கு நீதிமன்றம் எவ்விதமான தடையையும் விதித்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டம் முதலில் ஆசிரமத்தின் வாயிலில் அமைக்கப்பட்ட ஒரு பந்தலுக்குக் கீழேதான் நடைபெறுவதாக இருந்தது. பிறகு ஏதோ காரணத்தால் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு பெரிய 'அறை'க்கு மாற்றப்பட்டது.

மேற்குறிப்பிட்டவை கடந்த பல வருடங்களாக நடைபெற்றுவரும் 'தேசத்தின் மிகப் பெரிய வளர்ச்சிப் பணி' எனச் சித்தரிக்கப்படும் நர்மதா அணைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மேதாவைப் போன்ற பழமைவாதிகள் காண்பித்துவரும் ஓயாத எதிர்ப்பை முறியடிக்க தேசபக்தர்கள் நடத்திவரும் போராட்ட நாடகத்தின் வெவ்வேறு காட்சிகள். பல நம்ப முடியாத திருப்பங்கள் நிரம்பிய அந்த நாடகத்தை காமிராவில் பதிவுசெய்ய முயன்ற எனக்கு அந்தக் 'கதை'யை எங்கிருந்து தொடங்கி எப்படி நிறைவு செய்வது என்பது உண்மையிலேயே புரிந்துகொள்ளச் சாத்தியமற்ற காரியமாகவே இருந்தது.

மருத்துவமனையினுள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மேதாவைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த ஷிவானியின் முகம் பாறாங் கல்லைப்போல இறுகிப்போய்த்தான் கிடந்தது. மேதாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மேதா கோமாவில் விழுந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொன்ன மருத்துவர்களின் கருத்தை உருண்டு வழியும் கண்ணீர்த் துளிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயலாமல் அவர் பகிர்ந்துகொண்டபொழுது ஜந்தர் மந்தரின் அந்த நடைபாதையில் குழுமியிருந்த மனிதர்கள் உறைந்துபோனார்கள்.

* * *

நர்மதா பச்சாவ் ஆந்தோலனின் (NBA) இருபதாம் ஆண்டு நிகழ்வுகளைக் காண்பதற்காக மேதாவோடு நர்மதையின் மலைக் கிராமங்களுக்கு ஒரு சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தபொழுதுதான் அவர் அந்த நதியோடும் மலைக் கிராமங்களின் மிக எளிய மனிதர்களோடும் எவ்வளவு ஆழமான பிணைப்புகளைக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. நர்மதையின் கிராமங்களிலுள்ள ஒவ்வொருவரின் பெயரும்கூட அவருக்குத் தெரிந்திருந்தது. தேசத்தின் மிகப் பெரிய வளர்ச்சிப் பணிக்கான பலி பீடத்தில் தியாகம் புரியுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட அந்தப் பரிதாபத்திற்குரிய கிராமவாசிகளின் குரலை ஒரு சக்தியாக ஒருங்கிணைத்து அதிகார வர்க்கத்தின் செவிகளில் ஒலிக்கச் செய்தவர் மேதா பட்கர். இவை போன்ற வளர்ச்சிப் பணிகள் எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களைத் தங்களது வாழ்விடங்களிருந்து அப்புறப்படுத்தி நாதியற்ற நிலைக்குத் தள்ளுகின்றன என்கிற விவாதத்தை உருவாக்கியதில் அவருடைய பங்கு அசாதாரணமானது. எல்லோராலுமே கைவிடப்பட்டுவிட்ட அறவழியிலான போராட்ட வடிவங்களுக்கு உண்மையாகவே மதிப்பளித்த போராட்டத்தை இந்த நாட்டின் அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும், ஏன், நீதித் துறையும்கூட மிகக் குரூரமாகத் தண்டித்தனர்; ஏமாற்றினர்; கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்தால் திசைதிருப்பினர்.

தம்முடைய அறப் போராட்டங்களுக்கு யாருமே பதிலளிக்க முன்வராதபொழுது மேதா சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 17 ஆம் தேதி அளித்த தீர்ப்பில் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. நம்பிக்கையின் கடைசி இழை அறுந்த பிறகு உச்ச நீதிமன்ற வாயிலில் அருந்ததி ராய் மிக அப்பட்டமாக ஈவிரக்கமற்ற விதத்தில் ஒரு உண்மையை மிகக் கவலையோடு அங்குக் குழுமியிருந்தவர்களிடம் சொன்னார்: "இவர்கள் எல்லோருமே மேதா இறந்துபோய்விட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அவர் வாழ வேண்டும். இக்கொலை பாதகச் செயலை எதிர்த்துப் போராடுவதற்காக அவர் உயிருடன் இருந்தாக வேண்டும்."

* * *

ஆனால் வழக்கம்போலவே வாக்குறுதிகளைத் தூக்கி உடைப்பில் போட்டுவிட்டுக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். வரலாற்றின் கரிய பக்கங்களில் புதிதாக உருவாகும் தாள்களில் அப்பாவிகளாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டமொன்றின் வாழ்வு இடம்பெறும். அவர்களுடைய சிதறடிக்கப்பட்ட உடல்கள் பல பெருநகரங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் குழாய்களின் வழியே குடிநீராக வழிந்தோடும்.

இயற்கையை நேசித்து அதன் ஒரு பகுதியாய் வாழ்ந்த அந்த மனிதர்கள் நாகரிக உலகின் சாபமாகவும் துர்சொப்பனமாகவும் மாறிப்போவார்கள்.

மேதாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து அவருக்குப் பழரசம் வழங்கிய பிஞ்சரி பாயின் முகம் உங்களுக்கு
நினைவிருக்கிறதா? நர்மதையைக் காப்பாற்றத் தனது அனைத்தையும் இழந்த பழங்குடிப் பெண் அவர்.

"நாங்கள் பழி பாவத்துக்கு அஞ்சுபவர்கள். இந்நிலங்களிலிருந்து விளைவதைச் சாப்பிடும் எங்களுக்கு உழைப்புதான் மூலதனம். ஆனால் இப்பொழுது நாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த நிலங்களிலிருந்து எங்களை முழுமையாகப் பிரித்துவிட்டார்கள். எங்களுக்குத் தந்த வாக்குறுதிகள் எதையும் யாருமே நிறைவேற்றவில்லை. முதலில் 90 அடி, பிறகு 110 அடி, இப்பொழுது 121 அடி எனப் படிப்படியாக எங்கள் மனிதர்களை அணையின் ஆழங்களுக்குள் புதைத்துவிட்டார்கள். புனர்வாழ்வு தருவதாக அநியாயமாகப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சர்தார் சரோவர் என்ற பெயரில் இவர்கள் எங்களுடைய சமாதிகளைத்தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்" எனத் தன்னுடைய பாவ்ரி மொழியில் பேசிய பிஞ்சரி பாய் தனது அடிவயிற்றிலிருந்து, "நர்மதையைக் காப்பாற்று, மனிதத்தைக் காப்பாற்று" என முழங்கியதைக்கூட நீங்கள் கவனித்திருக்கலாம்.

நர்மதையின் கரை நெடுகிலும் எண்ணற்ற பிஞ்சரி பாய்கள் இருக்கிறார்கள். "இந்தத் தீர்ப்பின் மூலம் நாட்டின் உச்ச நீதிமன்றம் அவமானப்படுத்தப்பட்டுவிட்டது" என்கிறார் பிலாலி என்னும் பழங்குடிக் கிராமத்தின் தலைவரான பிச்சோடி. 2002இல் இவர் தொடுத்த வழக்கில்தான் உச்ச நீதிமன்ற பெஞ்ச் சர்தார் அணைத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு ஏக்கர் நிலம் வழங்குமாறு ஆணையிட்டது. அப்போது அந்தத் தீர்ப்பை வழங்கியது தற்போதைய தலைமை நீதிபதியான ஒய்.கே. சபர்வால்.

தனது குடிசையில் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு கத்தை காகிதங்களைக் கொண்டு வந்து நம்மிடம் காட்டுகிறார். "இப்படிச் சொல்வதில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. எங்களுடைய அறவழியிலான எல்லாப் போராட்டங்களையும் அரசு தோற்கடித்துவிட்டது. கடைசியில் நாங்கள் துப்பாக்கி தூக்க வேண்டுமா என்ன? பயங்கரவாதத்தை அரசு ஊக்குவிக்கிறது என்றுதான் இதைக் கருத வேண்டும்" என்கிறார் பிச்சோடி.

'நோ டேம்' (No Dam) என எழுதப்பட்ட நூற்றாண்டுப் பழமை வாய்ந்த ஒரு வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வரும் ஷாந்தா பெஹன் உணர்ச்சிவயப்பட்டவராகத் தென்படுகிறார். "இயற்கையோடு மோதுபவர்களை இயற்கை சும்மா விடாது. வானத்தில் பறப்பவர்கள் தங்களுடைய விமானங்களிலிருந்தும் ஹெலிகாப்டர்களிலிருந்தும் இறங்கிவந்து இந்த மண்ணை மிதித்துத்தான் தீர வேண்டும். இயற்கையின் குழந்தைகளான எங்களைத் துரத்திய பாவத்திற்கு அப்பொழுது அவர்கள் இயற்கைக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும்" என அவர் சொன்னபொழுது அதிர்ந்துபோனேன்.

அணையின் மட்டம் உயர உயர வெளியேற்றப்படும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டு போகிறது. பெயரளவிலான புனர்வாழ்வு மையங்களில் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? அவர்களுடைய எதிர்காலம்தான் என்ன?

மூழ்கடிக்கப்பட்டுவிட்ட தோம்கேடி கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வடிச்சில் ஷோபா நகர் புனர்வாழ்வுக் குடியிருப்பில் வசிக்கும் ஆசிரியர் கேவல்சிங் குருஜி சொல்வதைக் கேளுங்கள். "இப்படித்தான் பார்கி அணையைக் கட்டினார்கள். அந்தப் பழங்குடி மக்கள் இப்பொழுது சூரத் நகரின் தெருக்களில் ரிக்ஷா இழுத்துக்கொண்டு திரிகிறார்கள். காட்டுப் பூக்களான எங்களுடைய பெண்கள் விபச்சாரச் சந்தைகளில் உடல்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். முன்பு இதெல்லாம் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிட்டார்கள் இவர்கள். புனர்நிர்மாணம் என்ற பெயரில் என்னதான் கொட்டிக்கொடுக்கட்டுமே, அதனால் எங்களுக்கு என்ன பயன்? பணம் என்ற ஒன்றே தேவைப்படாத எங்களுடைய வாழ்வை பணத்தின் மூலம் எப்படி இவர்களால் புனரமைக்க முடியும்?"

எண்ணற்ற கேள்விகள் அவர்களிடம் இருக்கின்றன. பதில் சொல்லத்தான் யாருமில்லை.

மேதா பட்கரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வந்த அமைச்சர் குழுவுடன் சென்று வந்த போராட்டக்காரர்கள், புனர்வாழ்வுப் பணிகள் என்பவை ஒரு கண் துடைப்பு நாடகம் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். ஆனால் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் 'இடைக் காலப் புனர்வாழ்வுத் திட்டம்' ஒன்றைச் செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் கூறுகிறார் மைய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம்.

ஆனால் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, இருண்ட முகத்தோடு அமர்ந்திருக்கும் ஜீஜீக்கும் பிஞ்சரி பாய்க்கும் இடைக்காலப்
புனர்வாழ்வுத் திட்டம் என்றால் என்ன என்று யாரால் விளக்கிச் சொல்ல முடியும்?

விவரிக்க முடியாத ஏமாற்றத்துடன் உச்ச நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் வந்த ஒரு பழங்குடி மனிதர் சொன்னார்:  "வாருங்கள், இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் நாம் ஒன்றாகத் திரளுவோம். நேராகப் பிரதமரின் வீட்டுக்குப் போகலாம். தேசத்தைப் புனர்நிர்மாணம் செய்துகொண்டிருக்கும் அந்தப் பெரிய மனிதரிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கலாம். தயவுசெய்து எங்கள் எல்லோரையும் கொன்றுவிடுங்கள் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்கலாம். உங்கள் வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையாய் இருக்கும் எங்கள் ஒவ்வொரு கிராமத்தையும் மூழ்கடிப்பதைக் காட்டிலும் எங்களை இந்த அரசே கொன்று, எங்களுக்கு ஒரு கௌரவமான இறுதிச் சடங்கையாவது நடத்துங்கள் எனக் கேட்கலாம்."

கண்ணீராலும் துக்கத்தாலும் வடிவமைக்கப்பட்ட இந்த அறப் போராட்டம் தொடரும் என்கிறார் மேதா பட்கர். பிஞ்சரி பாய் அளித்த பழ ரசத்தைக் குடித்துத் தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மேதா செய்தியாளர்களிடம் சொன்னார்: "நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நிச்சயமாக நாங்கள் தோல்வியைத் தழுவ மாட்டோம். தோற்றுப்போய் வாழ்வதைக் காட்டிலும் போராடி மரணத்தைத் தழுவுவது நல்லது."

உள்ளடக்கம்

Google Ads.....


Google