|
அஞ்சலி:
கன்னடத் திரை உலகின் முதல்
புரட்சிக்காரர்
யூ.ஆர். அனந்தமூர்த்தி
பட்டாபி ராம ரெட்டி ஒரு வித்தியாசமான கலைஞர்.
அவர் படித்தது தாகூரின் சாந்தி நிகேதனில். தாகூரின் கவிதையால்
பாதிப்புற்றவர். அதேபோல, தம் சமகாலத்தின் மற்ற எல்லா
எழுத்தாளர்களைவிடவும் முதலாவதாக அந்தப் பாதிப்பிலிருந்து
விடுபட்டவரும் பட்டாபிதான்.
அவரது 'பிடில் ராகாலு டஜன்' தொகுப்பின்
கவிதைகளின் தீவிரமான நவீனத்துவம் கன்னடத்தில் வெளிப்பட்டது
பட்டாபி தெலுங்கில் எழுதியதற்கு இருபது அல்லது முப்பது
ஆண்டுகளுக்குப் பிறகு. தெலுங்குக் கவிதையின் வரலாற்றையே அவர்
மாற்றினார். பட்டாபியைப் போன்ற புரட்சிகரமான மனிதனுக்கு எவ்வளவு
காலத்துக்கு முன்பே தெலுங்குபோல இசைமயமும் உணர்ச்சிபூர்வமுமான
ஒரு மொழி எப்படி வாய்ப்பளித்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பட்டாபி
சினேகலதாவைத் திருமணம் செய்துகொண்டு தன் மொத்தக்
குடும்பத்திலிருந்தே விலகி ஸ்பெயினுக்குப் புறப்பட்டுப் போனார்.
நான் பார்த்த மிக அழகான பெண்களில் ஒருத்தியான சினேகலதா அங்கே
நாட்டியம் கற்றார். திரும்பி வந்து சென்னையில் இருந்தபோது
அந்தக் குடும்பம் ஒர் அமெச்சூர் நாடகக் குழுவை உருவாக்கியது.
பட்டாபி மிக மௌனமான எழுத்தாளர். பத்துப்
பதினைந்து பேர் தன்னைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு
பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் பேச்சைக் கிரகித்தபடி
சாவதானமாக இருந்த மனிதர். அவரைப் போன்ற சாவதானமான வேறொரு மனிதரை
நான் பார்த்ததில்லை. பட்டாபி நிஜமாகவே நிறைகுடம்தான்.
அவர் வீடு என்றைக்கும் எந்த நேரமானாலும்
நண்பர்களுக்குத் திறந்தேயிருந்தது. பெங்களூரில் அவர்
நிலைத்தபோது அரசியல், திரை உலகம், இலக்கியம் ஆகியவற்றில் புகழ்
பெற்றவர்களை மிகச் சாதாரணமாகப் பார்க்க முடியும். பட்டாபியின்
வீட்டுக்கு வருபவர்கள் சாப்பிடாமல், அரட்டை அடிக்காமல் போனதே
இல்லை. என்றைக்கும் பேசாத பட்டாபி பேசிய நான்கைந்து வார்த்தைகள்
என் வாழ்க்கையில் இன்றைக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக
இருக்கின்றன.
பட்டாபிக்கு ஆர்வமிருந்த துறைகளில் கணிதமும்
ஒன்று என அவருடைய எல்லா நண்பர்களுக்கும் தெரியும். பட்டாபி
வெறுமனே உட்கார்ந்திருந்தபோது, அவர் ஏதோ ஒரு கணக்குக்கு விடை
கண்டுபிடித்துக்கொண்டிருக்கலாம் என்னும் எண்ணம்
நண்பர்களுக்கெல்லாம் இருந்தது. உண்மையாகவே சமூக அக்கறை கொண்டது
அவர் குடும்பம். மிகப் பெரிய நிலச்சுவான்தார் குடும்பத்தைச்
சேர்ந்த பட்டாபி அந்தச் சொத்து எதுவும் தன்னுடையதல்ல என்பதைப்
போலத் தன் நண்பர்களுக்காகச் செலவு செய்தபடி தன் குடும்பத்தை
மிகுந்த உதார குணத்தோடு நடத்தினார். அவருடைய மேன்மை அவர்
வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பாரமாகத் தெரிந்ததேயில்லை.
பட்டாபி உயரமானவர்; கவர்ந்திழுக்கும் கண்களைக்
கொண்டிருந்தவர். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும்
ஆராய்ந்தபடி அமைதியாக அவர் உட்கார்ந்திருந்ததை நான் என்றைக்கும்
மறக்க மாட்டேன்.
எல்லா வகையிலும் செல்வந்தராக இருந்த மனிதர்
உடுத்தியது ஒரு சாதாரண வேட்டி; போட்டுக்கொண்டது ஒரு ஜிப்பா. என்
நாவல் சம்ஸ்காராவை மிகவும் குறைந்த செலவில் மிகச் சிறந்த
கலைஞர்களைச் சேர்த்துக்கொண்டு தயாரித்த பட்டாபி கன்னடத்
திரையுலகின் முதல் புரட்சிக்காரரானார். அவருடைய பொறுமை,
நற்பண்பு, மற்றும் எளிமை எப்படிப்பட்டவையென்றால் ஒரு
கட்டில்கூட இல்லாத எங்கள் கிராமத்து வீடொன்றில் அவர் நான்கைந்து
தினங்கள் தங்கியிருந்து என் அம்மா பரிமாறிய கிராமத்து உணவைச்
சாப்பிட்டுக் கிராமத்திலிருந்த எல்லோருக்கும் பிரியமானவரானார்.
இறுதிவரைக்கும் அவர் ஒரு கவிஞராகவே இருந்தார்.
தன் கவிதைகளில் எவ்வளவு புதுமைகளைச் செய்தாரோ அதே அளவுக்குத்
தன் சாவித்திரி நாடகத்திலும் தான் தயாரித்த சில சினிமாக்களிலும்
செய்தார். பட்டாபியின் மனைவி சினேகலதாவின் படைப்பாற்றலை
அவர்களுடைய மகள் நந்தனாவிடமும் நாம் காண்கிறோம். அதேபோலப்
பட்டாபியின் அமைதி, மௌனம், மற்றும் வித்தியாசமான ஒன்றிணைக்கும்
கலைத் திறனையும் அவர்களுடைய மகன் கோனார்க்கிடம் நாம் காணலாம்.
நான் நெருக்கமான மூத்த நண்பர் ஒருவரை இழந்திருக்கிறேன்.
+ + +
|
லோஹியாவாதியும் சிறந்த கன்னட, தெலுங்குப்
படங்களைத் தயாரித்தவருமான பட்டாபி ராம ரெட்டி 87ஆம் வயதில்
பெங்களூரில் கடந்த 6ஆம் தேதி காலமானார். யூ.ஆர்.
அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலைத் திரைப்படமாக இயக்கித்
தயாரித்தவர் பட்டாபி ராம ரெட்டி. ஜனாதிபதியின் தங்கத் தாமரை
விருது பெற்ற முதல் கன்னடத் திரைப்படம் சம்ஸ்காரா தான்.
எமர்ஜென்சி என்றதும் பலருடைய நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று
சினேகலதா ரெட்டி.
பட்டாபி ராம ரெட்டியின் மனைவியான சினேகா
கர்நாடகத்தின் மிக முக்கியமான சமூக சேவகியாயிருந்தார்.
எமர்ஜென்சியின்போது கைதாகிச் சிறைக் கொடுமைகளை அனுபவித்த
சினேகா, சிறையிலிருந்து வெளிவந்தவுடன் இறந்தார். எமர்ஜென்சி
காலத்தில் பட்டாபி ராம ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் ஜார்ஜ்
ஃபெர்னாண்டஸ் தலைமறைவாக இருந்தார்.
|
குறிப்பும் மொழிபெயர்ப்பும்: நஞ்சுண்டன்
உள்ளடக்கம்
|