Google   www kalachuvadu.com

அஞ்சலி
அஸ்கர் அலி எஞ்சினீர்
நேர்கொண்ட சிந்தனை
க. திருநாவுக்கரசு

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகேயுள்ள சலம்புர் நகரில் தாவூதி போரா முஸ்லிம் குடும்பத்தில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினீர். அந்நகரிலிருந்த போரா முஸ்லிம் சமூகத்தின் மதகுருவாக இருந்தவர் இவரது தந்தை ஷய்க் குர்பான் உசைன். தந்தையிடமிருந்து அரபு மொழியையும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் கற்றார். சிறு வயதிலேயே இஸ்லாமியக் கல்வியுடன் மதச்சார்பற்ற கல்வியும் போதிக்கப்பட்டு கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்றார். சுமார் 20 ஆண்டுகள் மும்பை மாநகராட்சியில் பொறியியல் அதிகாரியாக பணியாற்றிய பின்னர் வாழ்க்கையை இஸ்லாமிய சீர்திருத்தம், மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், ஜனநாயகம், முஸ்லிம் பெண்கள் உரிமை ஆகிய விஷயங்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.

குரான் குறித்தும், இஸ்லாம் குறித்தும் இவர் கொண்டிருந்த புரிதல் மிக ஆழமானது, நவீன காலகட்டத்திற்கு உகந்தது. இவரது கட்டுரைகளை வாசித்து பலன் பெற்ற பல ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இவரது எளிமையான நடையே என்னை அவரது கட்டுரைகளை தொடர்ந்து படிக்கத் தூண்டியது. இஸ்லாம் பற்றி, மீண்டும் மீண்டும் பலரால் இஸ்லாம் பற்றிச் சொல்லப்படும் ஒரே விதமான குற்றச்சாட்டுகளைக் கேட்டே வளர்ந்திருந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்கு இவரது எழுத்துக்கள் முற்றிலும் புதிய பார்வையை அளித்தன.

இந்துமதம், கிறித்துவம், பௌத்தம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகிறபோது இஸ்லாம் மிகவும் இறுக்கமான, மாற்றங்களை ஏற்க மறுக்கிற, மதச்சார்பின்மைக்கு எதிரான, பெண்ணுரிமைக்கு எதிரான மதம் என்ற புரிதலே பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இத்தகைய கருத்துக்கள் உருவாகி நடைமுறையில் நிலைபெற்று போனதற்குக் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் நவீனத்துவ சிந்தனைகள் காரணமாக தங்களது அதிகாரம் பறிபோய்விடும் என்று கருதிய நிலப்பிரபுத்துவ சக்திகளுமே. எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை உள்வாங்கிக்கொண்டு நீடிக்க முடியும் என்பதை அஸ்கர் அலியின் எழுத்துக்கள் உணர்த்தின.

இன்று அறிவியலும் மதச்சார்பின்மையும் பெண் ணுரிமையும் மிக வலுவாக உள்ள ஐரோப்பா 17ஆம் நூற்றாண்டு வரை கிறித்துவ மத ஆதிக்கத்தின் கீழ் எப்படி யிருந்தது என்பதை பார்க்கிறபோது அஸ்கர் அலியின் கருத்துக்கள் எவ்வளவு உண்மை என்பது புரியும். திருமணபந்தத்திற்கு வெளியிலான உடலுறவுக்கும், திருட்டு போன்ற சிறு குற்றங்களுக்கும் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஐரோப்பிய நாடுகளில் மிகச் சாதாரணமாக இருந்தது. அறிவியல் மற்றும் அரசியல் சமத்துவம் தொடர்பான கருத்துக்கள் தேவாலயங்களால் மிகவும் தீவிரமாக நசுக்கப்பட்டன. ஆனால் இந்த நிலை அறிவொளிக்கால புரட்சியின் காரணமாக மாறியது. இத் தகைய ஓர் புரட்சி இஸ்லாமிய நாடுகளில் நடைபெறாது போனதற்குக் காரணம் அங்கு நிலவிய பொருளியல், சமூகக்காரணிகளே தவிர இஸ்லாமின் உள்ளார்ந்த இயல்பு அல்ல என்ற அஸ்கர் அலியின் வாதம் மிகவும் சரியானதே. 12ஆம் நூற்றாண்டு வரை அறிவியல் மற்றும் கணிதத் துறைகளில் இஸ்லாமிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளை விட பல படிகள்முன்னணியில் இருந்ததைப் பார்க்கிறபோது இது புரியும்.

ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து அனைத்து இஸ்லாமிய நாடுகளும் மதச்சார்பின்மையை நிராகரித் ததற்கான காரணம் இஸ்லாமின் இறையியலில் இல்லை, மாறாக அது வரலாற்று ரீதியானது என்று அஸ்கர் அலி ஏராளமான ஆதாரங்களுடன் வாதிடுகிறார். இஸ் லாமும் அரசியலும் பிரிக்க முடியாதவை என்ற நிலை காலப்போக்கில் உருவானது. அரசு பற்றிய கருத்தாக்கம் ஏதும் குரானில் கிடையாது. இஸ்லாமிய சமூகங்களில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஓர் அரசு உருவாவது என்பது நபிகள் மறைந்து ஓரிரு நூற்றாண்டு கழித்தே தொடங் குகிறது. குரானின் அக்கறை தார்மீகம் மற்றும் விழு மியங்கள் சார்ந்ததேயன்றி அரசியல் சார்ந்ததல்ல என்கிறார் அஸ்கர் அலி. நபிகள் காலத்திற்குப் பிறகு பெரும் அரசுகள் உருவான போது குரான் வலியுறுத்தும் விழுமியங்கள் நீடித்து நிலைபெற வேண்டுமானால் இஸ்லாமும் அரசியலும் பிரிக்கப்பட முடியாத விஷயங் களாக இருந்தாக வேண்டும் என்று இஸ்லாமிய மத குருக்கள் (உலிமா அல்லது உலமா) கருதியதே மதச்சார்பற்ற அரசு என்ற கருத்தாக்கத்திற்கே இஸ்லாம் எதிரானது என்று நிலை தோன்றியதற்குக் காரணம் என்று அஸ்கர் அலி வாதிடுகிறார். குரான் குறித்த இவரின் முற்போக்கான, நவீன காலத்திற்கேற்ற விளக்கங்கள் இவரை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிரியாக்கின.

எல்லா சீர்திருத்தவாதிகளையும் போலவே இவரும் தான் பிறந்த சமூகமான, குஜராத் மாநிலத்தைத் தளமாகக் கொண்ட தாவூதி போரா முஸ்லிம் சமூகத்தை சீர்திருத்தும் பணிக்காகத் தன்னை அர்பணித்துக்கொண்டார். இதற்காக தனது வேலையை 1983இல் ராஜினாமா செய்தார். தாவூதி போரா முஸ்லிம்கள் பெரும்பாலும் வர்த்தகர்கள். இவரது சீர்திருத்தக் கருத்துக்களால் பெரிதும் கோபமுற்றவர் இச்சமூகத்தின் தலைமைக் குருவான சயீத்னா மொகமத் பராஹுதின். அவர் தனது சமூக மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் சயீத்னா ஏராள மான பணம் வசூலித்து வந்தார். அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தார். சயீத்னாவும் அவரது சீடர்களும் வசூலித்தப் பணத்திற்குக் கணக்கு கேட்டதுடன் இஸ்லாம் பெயரால் சயீத்னா விதித்திருந்த கட்டுப்பாடுகளுக்கு குரானில் எந்த அடிப்படையும் இல்லை என்பதையும் அஸ்கர் அலி அம்பலப்படுத்தினார். இதன் காரணமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் உடல் ரீதியாவும் தாக்கப்பட்டார். மும்பையில் சான்டா குரூஸ் பகுதியிலுள்ள இவரது அலுவலகம் சயீத்னாவின் உறவினர்கள் மற்றும் சீடர்களால் பெரும் தாக்குதலுக் குள்ளாகியிருக்கிறது. சயீத்னாவிற்கு எதிரான அஸ்கர் அலியின் போராட்டம் ஒரு வகையில் அவரது சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. இவர் சிறுவனாக இருந்தபோது இவரது தந்தை இவரை சயீத்னாவின் பாதத்தை முத்தமிடும் சடங்கிற்காக மும்பை அழைத்துச் சென்றார். ஆனால் அஸ்கர் அலி அந்தச் சடங்கைச் செய்ய மறுத்துவிட்டார்.

அஸ்கர் அலியின் அறிவுலகப் பணியின் பெரும் பகுதியை வகுப்புவாத கலவரங்கள் குறித்த ஆய்வே ஆக்ரமித்துக்கொண்டது. அவரது மிக இளம் வயதில் தேசப்பிரிவினையின் போது நடந்த கலவரங்கள், படுகொலைகள் மற்றும் அவற்றிற்கு பின்னணியில் இருந்த மத மோதல்கள் அவரது மனதை மிகவும் பாதித்திருந்தன. அத்துடன் 1961இல் அவரது கல்லூரிக் காலத்தில் நடந்த ஜபல்பூர் கலவரம் அவரை உலுக்கி விட்டது. நேர்மையான நடத்தை, நீதி, இரக்கம் போன்ற விழுமியங்களைப் போதிக்கும் மதங்கள் இந்த கலவரங் களுக்கு காரணமாக இருக்க முடியாது; மாறாக மதங்களை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அல்லது ஏற்கனவே இருக்கும் தங்களது அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக பயன்படுத்தும் சக்திகளே காரணமாக இருக்கமுடியும் என்பதை இளைஞனாக இருந்தபோதே அஸ்கர் அலி உணர்ந்திருந்தார். பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 1992 - 93இல் நடந்த கலவரத்தையும், 2002 குஜராத் கலவரத்தையும் மிகத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தினார். கலவரங்கள் பெரும்பாலும் முன் கூட்டியேத் திட்டமிடப்படுகின்றன என்பதையும் சிறுபான்மை மக்களைப் பற்றிப் பொதுமக்களிடையே பரப்பப்படும் வதந்திகள் எப்படி கலவரங்களுக்கு ஆதரவாக அமைகின்றன என்பதையும், அரசும் காவல் துறையும் எப்படி கலவரங்களுக்கு சில சமயங்களில் நேரடியாகவும் பல சமயங்களில் மௌனமாகவும் ஒத்துழைப்பு நல்குகின்றன என்பதையும் இவரது ஆய்வுகள் தோலுரித்துக்காட்டுகின்றன.

இன்று இஸ்லாம் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று அது பாலின சமத்துவத்திற்கு, அதாவது பெண்ணுரிமைக்கு எதிரானது என்பது. இன்று பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் மற்றும் அமைப்புகள் பெண்ணுரிமைக்கு எதிராக இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் இதற்கு குரானில் எந்த அடிப்படையும் இல்லை என்று அஸ்கர் அலி வாதிடுகிறார். குரான் பாலின சமத்துவத்திற்கு ஆதரவானது என்பதே அஸ்கர் அலியின் கருத்து. முஸ்லிம் பெண்கள் குரான் படிப்பதையும் அதை தங்கள் பார்வையிலிருந்து, தங்கள் உரிமைகளுக்கு ஆதரவாக விளக்கு வதையும் அவர் ஊக்குவித்தார். கடந்த முன்னோர்களின் பாரம்பரியங்களையும் கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வதைக் கடுமையாக எதிர்த்த அஸ்கர் அலி எல்லா கருத்துக்களும் கோட்பாடுகளும் காலத்திற் கேற்ற மாற்றங்களை அடைய வேண்டும் என்று வலி யுறுத்தினார். குரான் இறைவனால் நபிகள் வழியே அருளப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அது பல விதங்களில் வாசிக்கப்பட முடியும், விளக்கப்பட முடியும் என்பதையும், அது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆண் - பெண் சமத்துவத்திற்கு எதிரான கருத்துக்களைக் குரானிலிருந்து பழைமைவாதிகள் மேற்கோள் காட்டுவதைப் பற்றி கூறும் போது சில கருத்துக்கள் கூறப்பட்ட சூழல் மற்றும் பின்னணியை நாம் மனதில்கொண்டே அவற்றை ஏற்கவோ நிராகரிக்கவோ வேண்டும் என்று அஸ்கர் அலி வாதிடுகிறார். பாலின சமத்துவம் குறித்த குரானின் சில செய்யுள்கள் எப்படி இஸ்லாமிய அறிஞர்களால் நேரெதிர் விளக்கங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதையும் அஸ்கர் அலி காட்டுகிறார்.

இஸ்லாமுக்கு எதிராகக் கூறப்படும் மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டான, இஸ்லாம் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற கருத்தையும் அஸ்கர்அலி முற்றாக நிராகரிக்கிறார். எந்தவொரு மதத்தையும் ஜனநாயகப்பூர்வமானது அல்லது ஜனநாயகப்பூர்வமற்றது என்று விளக்கப்படுவதை அவர் எதிர்க்கிறார். மதம்அதன் உருவாக்கத்தில் அல்ல மாறாக சமூக அமைப்பில் வேர்கொண்டிருக்கிறது; மதம் தான் உருவாகும் கால கட்டத்தைத் தாண்டிய சமூகத்திற்கான தொலைநோக்கை அளித்த போதிலும் அவை அப்போது நிலவும் சமூகச் சூழலை முற்றிலுமாகத் தகர்த்துவிடுவதில்லை என்கிறார். ஒரு சமூகத்தில் வேர்கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகள் மதத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றன. மதத்திற்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தங்கள் நலன் களுக்கு எதிராக எழும் குரல்களை நசுக்குகின்றன. குரானின் கருத்துக்கள் ஜனநாயகத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றன என்று வாதிடும் அஸ்கர், உலக விவகாரங்கள் குறித்த விஷயங்களில் நபிகள் தனது ஆதரவாளர்களை கலந்தாலோசித்து செயல்பட வேண்டும் என்று அல்லா நபிகளிடம் கூறியதையும் சாராம்சத்தில் நபிகள் பலரையும் கலந்தாலோசிக்கும் ஜனநாயகவாதியாக இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். ஆக இஸ்லாமிய நாடுகளில் முழுமை யான மக்களாட்சி மலராது (சில முஸ்லிம் நாடுகளில் அரைகுறையான மக்களாட்சி இருக்கிறது) போனதற்கான காரணத்தை அங்கு நிலவும் சமூக - அரசியல் - பொருளியல் சூழலிலும், சர்வதேச அரசியல் சூழலிலும் தேட வேண்டும்

என்கிறார். இஸ்லாமிய நாடுகளின் எண்ணெய் வளம் தன் வசம் இருக்க வேண்டும் என நினைக்கும் அமெரிக்கா அந்நாடுகளில் சர்வாதிகார அரசுகள் இருப்பதையே எப்போதும் ஆதரித்து வந்திருப்பதைப் பார்க்கிறபோது சர்வதேச அரசியல் இவ்விஷயத்தில் வகிக்கும் பங்கைப் புரிந்துகொள்ளலாம்.

21ஆம் நூற்றாண்டிலும் முஸ்லிம் நாடுகளால் மக்களாட்சி தத்துவத்தின் கீழ் வர முடியாது இருக்கும் நிலையை மாற்றுவதில் இஸ்லாமிய அறிவுஜீவிகள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்றும் அஸ்கர் கோரிக்கை விடுக்கிறார். ஜனநாயகத்திற்கு ஆதரவான பல்வேறு இயக்கங்கள் முஸ்லிம் நாடுகளில் உருவாகிவருவதையும், அவை அந்நாடுகளிலுள்ள சர்வாதி காரிகளுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தி வருவதையும் அஸ்கர்அலி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். சமீபத்தில் முஸ்லிம் நாடுகளில் உருவான அரபு வசந்தம் Arab Spring) பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதில் தோல்வியுற்றாலும் இஸ்லாம் உள் ளார்ந்த வகையில் ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல என்பதற்கான சான்றாக இருக்கிறது.

காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அஸ்கர் அலி வரலாற்றைப் புரிந்துகொள்ள மார்க்ஸின் கோட்பாடுகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. தனது இளமைக் காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை நிராகரிப்பவராக இருந்தபோதிலும் திறந்த மனது மற்றும் நேர்மையான அறிவுச் செயல்பாடு கொண்டவராக அஸ்கர் அலி இருந்த காரணத்தால் பிற்காலத்தில் அவர் மார்க்ஸின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான (Eclecticism) ஒரு சிறந்த உதாரணம் அஸ்கர் அலி. அவரது இழப்பு இன்று இந்தியா இருக்கும் நிலையில் ஒரு பேரிழப்பு.

உள்ளடக்கம்