Google   www kalachuvadu.com

சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம்
இணையமும் நானும்
பி. ஏ. கிருஷ்ணன்

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியில் என் நண்பன் ரகு ஆஸ்திரேலியாவிலிருந்து தில்லிக்கு வந்திருந்தான். அவன் அங்கு மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தான். கணினியின் பெருமைகளை அவன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது மின்னஞ்சலைப் பற்றிக் குறிப்பிட்டான்.

‘உனக்கு நான் கடிதம் எழுதினால் அது உன்னை வந்தடைவதற்கு ஒரு விநாடிகூட ஆகாது’ என்றான்.

‘நான் எப்படிப் படிப்பேன்?’

‘கணினி மூலம்.’

‘கணினியின் ஆனா ஆவன்னாகூட எனக்குத் தெரியாதே?’

‘கணினியை எல்லோரும் எளிதாகப் பயன்படுத்தும் காலம் ஒன்று வரும். கடிதங்கள் மட்டும் அல்ல. உலகத்தின் எல்லா அறிவுக் கருவூலங்களையும் கணினி மூலம் நீ வீட்டிலிருந்தே திறந்து, பார்த்து, பயனடைய முடியும்.’

எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இது பணம் அதிகம் உள்ளவர்களின் விளையாட்டுப் பொருளாக இருக்குமே தவிர, சாதாரண மனிதர்களை வந்தடைய முடியாது என்று நினைத்தேன். கைப்பேசியைப் பற்றி அப்போதுதான் கேள்விப்பட்டிருந்தேன். எட்டாத உயரத்தில் அது இருந்தது. கணினியின் விலையும் அப்போது அதிகம்.

‘இன்று நீ நம்பமாட்டாய். இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு நாம் பேசுவோம்’ என்றான்.

பத்து வருடங்கள் தேவைப்படவில்லை. எனக்கு மூன்று வருடங்களில் முழுநம்பிக்கை வந்துவிட்டது.

என் நண்பன் அப்படிச் சொல்லி இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்று உலகம் முழுவதிலும் இணையம் பரந்துவிரிந்திருக்கிறது. 200 கோடிக்கும் அதிகமானவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் - உலக மக்கள் தொகையில் 30 சதவீத்திற்கும் மேல். இந்தியாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வலையில் விழுந்திருக்கிறார்கள்.

மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் இணையம் ஒன்று என்பதில் ஐயம் இல்லை.

மனித வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்ததில் இதற்கு ஈடான கண்டுபிடிப்பைத் தேட வேண்டுமானால் பதினான்காம் நூற்றாண்டிற்குச் செல்ல வேண்டும். அக்காலகட்டத்தில் கூடன்பெர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரத்திற்கு நிகரானது இது. அச்சு கண்டுபிடிக்கப்பட்டு நானூறு ஆண்டுகளுக்குப் பின்னரே அது இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. படிப்பறிவு சாதாரண மக்களைச் சேர்ந்தடைவதில் அச்சு இயந்திரத்தின் பங்களிப்பு அளவிட முடியாதது. கமில் சுவலபில் தனது முருகனின் சிரிப்பு (The Smile of Murugan) என்னும் நூலில் வியப்பைத் தரும் தகவலொன்றைத் தருகிறார். 1835ஆம் ஆண்டிற்கு முன்னால் வீரமாமுனிவருடைய சதுரகராதி ஓலைச்சுவடியின் விலை 10 பிரிட்டிஷ் பவுண்டுகள். ஆனால் அந்தப் புத்தகம் அச்சில் வந்த பிறகு அதன் விலை சுமார் நூறு மடங்கு குறைந்து இரண்டு ஷில்லிங்குகளுக்கு வந்துவிட்டது என்கிறார்.

அச்சின் நன்மைகள் நம்மை வந்தடைய நானூறு ஆண்டுகள் ஆயின. இணையம் வந்தடைய நானூறு நாட்கள்கூட ஆகவில்லை.

2

1992ஆம் ஆண்டு நான் ஒரு பயிற்சிக்காக இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்குதான் முதன்முதலாகக் கணினியின் முன் உட்கார்ந்தேன். கண் முன்னால் பூச்சிகள் பறப்பதுபோல இருந்தது. எழுத்துகள் தாமே ஓடியாடி வேலைசெய்வது ஆச்சரியமாக இருந்தது. அழிப்பது எளிது. அழித்த சுவடே தெரியாமல் அழிக்கலாம். தட்டச்சு கற்றுக்கொண்டு கணினியின் நெளிவுசுளிவுகளை அறிய வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எனக்கு வந்துவிட்டது.

ஹாலிஃபாக்ஸ் என்ற நகரத்தில் முதல்முதலாக மின்னஞ்சல் பரிமாற்றத்தைப் பார்த்தேன். அலுவலகத்திற்குள் ஒருவருக்கொருவர் அஞ்சல் பரிமாற்றம் நடத்திக்கொள்வதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘காகிதம் இல்லாமல் கடிதம் எழுதுவது ஆண் பெண் உறுப்புகள் இல்லாமல் போகிப்பதுபோல’ என்று என்னுடன் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த சியரா லோன் (ஆப்பிரிக்க நாடு) நாட்டைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்.

மற்றொருவர், ‘எல்லாம் பெருவெளியில் மறைந்துவிடும். நிலைத்து நிற்காது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதங்களை நாம் இன்று படிக்க முடியும். மின்னஞ்சலில் அது எப்படி முடியும்?’ என்றார்.

‘மின்னஞ்சல்களை உலகம் அழியும்வரை பத்திரப்படுத்திவைக்க முடியும்’ என்று எங்கள் பயிற்றுநர் சொன்னார். ‘உலகத்தில் இதுவரை எழுதப்பட்ட அனைத்தையும் மின்பதிவுசெய்து இந்த அறைக்குள் அடைத்துப் பூட்டி வைக்கலாம். பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் அறையைத் திறந்து எழுதப்பட்ட அனைத்தையும் அப்படியே மீட்கலாம் - இன்னும் சில ஆண்டுகளில் அவ்வாறு செய்யக்கூடிய திறன் மனிதகுலத்திற்கு வந்துவிடும்.’

இது என்ன விக்கிரமாதித்தன் கதையா? எனக்குத் தலைசுற்றியது. இது புதிது. புதிதை நாம் ஏற்றுக்கொள்ள எப்போதுமே தயங்குவோம். தயக்கத்திலிருந்து வெளிவரும்போது மற்றொன்று புதிதாக வந்துவிடும். இப்படித் தயங்கித் தயங்கியே காலத்தைக் கழித்துவிடுவோமோ என்ற பயம் என்னைப் பிடித்துக்கொண்டது. தட்டச்சு கற்றுக்கொள்ளும் தீர்மானத்துடன் இந்தியா திரும்பியதும் ஒரு கணினி வாங்கிவிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் சேர்த்துக்கொண்டேன்.

நான் சொந்தமாகக் கணினி வாங்கும் தேவை ஏற்படவில்லை. நான் சேர்ந்த நிறுவனத்தில் எனக்கு மடிக்கணினி ஒன்று கொடுக்கப்பட்டது. Leo என்னும் மடிக்கணினி. எனக்குத் தட்டச்சு கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். என் நண்பர் ஒருவர் type tutor மென்பொருளை என்னுடைய கணினியில் பதிவேற்றிக் கொடுத்தார். பதினைந்தே நாட்களில் நான் தட்டச்சுக் கற்றுக்கொண்டேன். அந்தச் சமயத்தில் கூகிள் வரவில்லை. லைகோஸ், அல்டாவிஸ்டா, ஹாட்பாட் போன்ற தேடுபொறிகள் இருந்தன. அவற்றை வைத்துக்கொண்டு தேடியதில் உலகம் என் கண் முன்னால் சுருங்குவதைக் காண முடிந்தது.

எனது முதல் ஆங்கில நாவலைக் கணினியைப் பயன்படுத்தத் தெரியாமல் எழுத முடிந்திருக்குமா? முடிந்திருக்காது என்று நினைக்கிறேன். தாளில் எழுதி எழுதி அடித்து மறுபடியும் எழுத எனக்குப் பொறுமையும் நேரமும் இருந்திருக்காது. தமிழில் எழுதக் கைகொடுத்தது e-kalappai என்ற மின்பொருள். இணையம் இல்லாமல் இது என்னை வந்தடைந்திருக்க முடியாது.

3

ஆங்கிலத்தில் bottomless cornucopia என்று சொல்வார்கள். தமிழில் அழகாக அட்சயப் பாத்திரம் எனச் சொல்லலாம். அள்ள அள்ளக் குறையாமல், அதிகரித்துக்கொண்டே இருக்கும் அட்சயப் பாத்திரம் இணையம். அறிவின் கருவிகளை மக்களிடம் எளிதாகக் கொண்டுசேர்த்ததில் இணையத்தின் பங்கு அளவிட முடியாதது. தகவல்களையும் அறிவுசார்ந்த எல்லா விவரங்களையும் ஒரு சொடுக்கில் கிடைக்கச் செய்தது மட்டுமல்ல, அறிவுத் தேடலையும் அறிவுசார்ந்த விவாதங்களையும் ஜனநாயகப்படுத்தியது இணையமே. யாரும் எதைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம் விவாதிக் கலாம் என்பது உலக அளவில் இன்று நடைபெற்று வருவது இணையத்தின் தயவால்.

பல வருடங்களுக்கு முன்னால் நான் பக்ரா நங்கல் அணைக்கட்டைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது Coffer dam (காப்பணை) என்ற சொற்றொடரை அணையைப் பற்றி எழுதியிருந்த விவரப் பலகையில் படித்தேன். Coffer dam என்றால் என்ன என்பதைத் தில்லி வந்ததும் நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். சரியான பதில் கிடைக்கவில்லை. பிறகு பாதுகாப்பு அமைச்சத்தின் நூலகத்திற்குச் சென்று பிரித்தானிய கலைக்களஞ்சியத்தில் படித்த பிறகுதான் காப்பணை என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. இன்று கைப்பேசியில் தட்டினால் போதும். விவரங்களின் கூட்டம் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். இணையம் நடத்திக்கொண்டிருக்கும் இந்தப் புரட்சியின் பரிமாணங்களை நம்மால் அளவிட முடியாது. நாம் அதன் நடுவில் இருக்கிறோம்.

இணையத்தின் நன்மைகள் பலமுறை, பல இடங்களில் பட்டியலிடப்பட்டுவிட்டன. என்னைப் பொறுத்த அளவில் காகிதத்தில் வரிந்து வரிந்து எழுதுவது வேகமாக மறைந்துவருகிறது என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் உறுதிபெற்றுவருவதை இணையத்தின் முதல் நன்மையாக நான் கருதுகிறேன். இன்று நான் பணிபுரியும் அலுவலகத்தில் காகிதம் பெரும்பாலும் கை துடைப்பது மற்றும் வேறு இடங்களைத் துடைப்பது போன்ற காரியங்களுக்குப் பயன்படுகிறது. கையால் எழுதுவது என்பது அநேகமாக மறைந்துவிட்டது. மின்னஞ்சல்கள் பறக்கும் வேகத்தில் வேலையை உடனுக்குடன் செய்ய வேண்டிய கட்டாயம். தள்ளிப் போடுவது சாத்தியமல்ல. சில வருடங்களுக்கு முன்னால் நான் வேலைபார்த்துக்கொண்டிருந்த அரசு அலுவலகத்தில் தாள்வெள்ளத்தில் தினமும் நீந்திக் கரைசேர வேண்டிய கட்டாயம். மூச்சுவிடுவதற்குக் கூடக் காகிதத்தில் எழுத்து மூலம் தெரிவித்து டைரக்டர் ஜெனரலின் ஒப்புதல் வாங்கும் தேவை இருந்தது. இன்று தாள் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். தாள்வெள்ளம் குறைந்துகொண்டுவருவது மரங்களின் ஆயுள்காலத்தை அதிகப்படுத்தும் என்ற நம்பிக்கையும் இன்று வலுப்பெற்றுவருகிறது.

இணையத்தின் மற்றொரு நன்மை அதன் அதிசயத்தக்க வேகம். இந்த வேகமே பலரின் தயக்கத்திற்கு மாற்று மருந்தாக இருக்கிறது என்பதில் எனக்கு ஐயம் இல்லை. இணையத்தின் வரவிற்கு முன்பு, எழுதியதை அனுப்புவதா வேண்டாமா என்ற தயக்கம் அஞ்சல் பெட்டியில் கையை நுழைத்துக் கடிதத்தைப் போடும் வரை இருக்கும். இன்று எழுதியவுடன் பதிவு விசையில் கை தெரியாமல் பட்டால்கூடப் போதும். எழுதியது சேர வேண்டிய இடத்திற்குச் சென்றுவிடும். இந்த வசதி தமிழில் புதிய எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிப் பத்திரிகை ஆசிரியர்களின் தலைவலியை அதிகப்படுத்தி வருகிறது. இசை மேதைகளின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, பாடினால் கல்லடி விழும் என்று முன்னால் பயந்துகொண்டிருந்தவர்கள் இன்று துணிச்சலோடு பாடி இணையத்தில் பதிவு செய்துவிடுகிறார்கள் - கேட்கும் பேறுபெற்றவர்கள் முகவரியைக் கண்டுபிடித்து வீடு தேடிவந்து அடிக்க மாட்டார்கள் என்ற வீண்போகாத நம்பிக்கையுடன்.

இந்த வேகத்தின் பலன் உலகமே விரல் நுனியில் என்ற உறுதியைப் பலருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குறுகிய வட்டத்திற்குள் உழன்றுகொண்டிருந்தவர்கள் உலக மக்களில் பலர் தங்களைக் கவனிப்பார்கள் என்ற திடத்தோடு செயல்படுகிறார்கள். மக்களின் குரல்களுக்கு இத்தனை வலு மனித குலம் தோன்றிய நாளிலிருந்து இருந்ததில்லை. இணையம் செய்த மாயம் இது.

கணினியில் பாட்டுகளையும் படங்களையும் இறக்கிக்கொள்ளலாம் என்பதையோ கணினியின் மூலம் பொருட்களை வாங்கலாம் என்பதையோ கணினி வந்த புதிதில் நம்மால் கற்பனைசெய்துகூடப் பார்த்திருக்க முடியாது. இந்தத் துறையில் தொழில்நுட்பம் வளர்ந்த வேகம் இணையத்தின் வேகத்திற்கு நிகரானது. இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு ஆண்டுகள்வரை இணையம் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் தளங்களில் உலாவுவதற்கும்தான் முக்கியமாகப் பயன்பட்டுக்கொண்டிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது ஊடாடும் சாதனமாக மாறியது 2002ஆம் ஆண்டிற்குப் பிறகுதான்.

இணையம் நம்மிடம் விளைவித்த இன்னொரு மாற்றம் ஆண் பெண் உடல் சார்ந்த மர்மங்கள் எல்லாம் விடுபட்டுப்போனதுதான். இன்று கலவியின் எல்லாப் பரிமாணங்களும் இணையத்தில் எந்தச் சலனமும் இன்றிக் காட்டப்படுகின்றன. பெண்களிடம் தங்கள் உடல் சார்ந்து இருந்த சில இறுக்கங்கள் வேகமாகத் தளர்ந்துவருகின்றன. நாளைய சமூகம் ஆண் பெண் உறவுகளைப் பார்க்கும் விதம் நமது இப்போதைய பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்திருப்பது இணையம். இந்த நம்பிக்கை தொலைக்காட்சித் தொடர்களில் திரும்பத் திரும்பக் காட்டப்படும் பெண்ணை ஒடுக்கும் வழிமுறைகளைத் தகர்த்துப் பொடியாக்கும் சம்மட்டியாக ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நண்பர் கல்யாண் ராமன் தனது முகநூலில் இணையத்தால் நடக்கப்போகும் மற்றொரு முக்கியமான புரட்சியைப் பற்றிச் சமீபத்தில் பேசியிருந்தார். E governance - அதாவது மின் ஆளும்முறை (மின் ஆளுகை?) - இன்று உலக முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருகிறது. இந்தியாவிலும் இதை இன்னும் சில ஆண்டுகளில் முழுவதுமாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படப்போவது உறுதி. அண்ணா ஹஜாரேயும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் இதைப் பற்றி எந்தக் கேள்வியையும் எழுப்பாதது ஏன் என்று அவர் கேட்டிருந்தார். கேட்டது நியாயமானது. ஆனால் இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியவை நமது ஊடகங்களும் இணையத்தில் விவாதம் செய்பவர்களும்தாம் என்று நான் நம்புகிறேன். வெளிப்படையான செயல்முறை ஒரு வலுவான ஊழற்கொல்லி. இதனாலேயே அரசுகள் மின் ஆளுகையைச் செயல் முறைப்படுத்தத் தயக்கம் காட்டிவருகின்றன. நாளை நாம் அனைவரும் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் வரும்.

உலக அரசியலில் ட்யுனிசியாவில் ஆரம்பித்து ரஷ்யாவரை மக்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராகப் போராட உறுதுணையாக நிற்பது இணையமும் அதில் செயல்படும் மின்னஞ்சல், முகநூல், ஆர்குட், ட்விட்டர், யூ ட்யூப் போன்ற சாதனங்களே. அரசுகள் மக்களுக்காக இயங்க வேண்டிய நிலைமை உலகம் முழுவதும் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்காக நாம் இணையத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

4

இணையம் பல கழுதைகளுக்கு மின் எழுதுகோல்களைக் கொடுத்திருக்கிறது. கழுதைகள் தீவிரமாக எழுத முனைந்தால் கழுதைக்குரல்களின் அச்சு வடிவாக எழுத்து மாறிவிடும். இதனால் இசைக்கு ஏற்பட்டிருக்கும் ‘கொலைவெறி’ எழுத்துக்கும் ஏற்படலாம்.

எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் எந்தப் பொருளையும் பற்றிப் பேசலாம் என்று நினைத்துப் பேச முற்பட்டால் கேட்பவர் காதில் விழுவது கூச்சலாகத்தான் இருக்க முடியும். இணையத்தில் நடைபெறும் பல விவாதங்களில் இந்தப் புரியாத பெருங் குரலே கேட்டுக்கொண்டிருக்கிறது. புதுக்கருவி கிடைத்த உற்சாகத்தில் எல்லோரும் பயன்படுத்த நினைப்பதால் நிகழ்வது இது. நாளாக நாளாக இக்கூச்சல் மறைந்து சொல்வது தெளிவாகக் கேட்கும் நிலைமை உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு வரவில்லை. அந்த நிலைமை உருவாகாவிட்டால், பைபிளில் கூறப்படும் பேபல் கோபுரத்திற்கு நிகழ்ந்தது இணையத்திற்கும் ஏற்படும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது.

இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் பலருக்கும் இருக்கும் - ‘தங்களுக்குத் தெரியாதது ஏதும் இல்லை’ என்ற - ஆணவம் இந்த அபாயத்தை வலுப்படுத்துகிறது. அறிவைக் கூர்மையாக்கும் சாதனங்களைத் தேட அதிக முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாததால், தேடாமலே காலத்தைத் தள்ளிவிடலாம் என்ற முடிவை இவர்களில் பலர் எடுக்கிறார்கள். இந்த முடிவு அறிவுச் சோம்பேறித்தனத்தை வளர்க்கிறது. இந்த வியாதி பரவுவது அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும்.

இணையத்தின் தயவால் உலகெங்கும், குறிப்பாகத் தமிழகத்தில், போலி அறிவாளிகள் பலர் உலாவிவருகிறார்கள். தமிழ்த் தீவிர இதழ்களில் வரும் பெரும்பாலான படைப்புகள் இணையத்திலிருந்து திருடப்பட்ட கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகளே. வாசகர்களுக்கு நல்ல விஷயங்கள் போய்ச் சேர்ந்தாலும் அசல் அறிவாளிகளை உருவாக்க இந்த உத்தி பயன்படாது.

மொழியின் பல அழகுகள் இணையத்தால் அழிக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். முன்னால் தந்தியில் எழுதப்பட்டவை இன்று பல வடிவங்களில் இணையத்தில் எழுதப்படுகின்றன. இணையத் தமிழுக்கும் (எந்த மொழிக்கும் இது பொருந்தும்) உண்மைத் தமிழுக்கும் இடையே உள்ள பிளவு தாண்ட முடியாத அளவு அதிகமாவதற்கு வெகுநாட்கள் ஆகாது எனத் தோன்றுகிறது.

இணையத்தால் உலகிற்கு ஏற்படக்கூடிய மற்றொரு அபாயம் மதங்களில் பெயரால் இயங்கும் தளங்கள். மனப்பிறழ்வின் விளிம்பிலும் அதற்கு அப்பாலும் நின்றுகொண்டிருப்பவர்கள் இந்தத் தளங்களில் எழுதுபவை நாம் நினைப்பதைவிட அநேகரைச் சென்றடைகின்றன. நண்பர் கல்யாண ராமன் ஒரு கருத்தரங்குக்கு எழுதிய கட்டுரையில் இந்தத் தகவலைத் தருகிறார்:

இணையத்தைப் பயன்படுத்துவர்களில் 25 சதவீதத்தினர் (சுமார் 50 கோடி பேர்) மதம்சார்ந்த தளங்களைப் பார்வையிட்டிருக்கின்றனர். இவர்களில் 67 சதவீதத்தினர் தங்கள் மதம் சார்ந்த தளங்களுக்கும் 50 சதவீதம் மற்ற மதங்கள் சார்ந்த தளங்களுக்கும் சென்றிருக்கின்றனர்.

மதங்களின் பெயரால் இணையத்தில் செய்யப்படும் நச்சுப் பிரச்சாரங்களை ஒழிக்கவோ குறைக்கவோ எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இன்றுவரை தோல்வியே அடைந்திருக்கின்றன.

5

இணையத்தினுடைய எதிர்காலம் என்ன?

முகநூல்களும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய சாதனங்களும் ‘மேக முதலாளித்துவம்’ cloud capitalism

என்னும் கோட்பாட்டிற்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருக்கின்றன என கார்டியன் இதழ் கூறுகிறது. இதனால் நமது முதலீடுகள், ஊடகங்கள், தகவல்கள், மென்பொருள்கள், திட்டங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு நிர்வாகிக்கிறோம் என்பதைத் தனியார் நிறுவனங்கள் நமக்காக முடிவுசெய்யும் நிலை உண்டாகலாம். நமது படுக்கை அறைகளுக்குள் அவர்களால் நமக்கே தெரியாமல் நுழைய முடியும். நாம் மற்றவர்களுடன் எதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம் என்பதையும் இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கலாம்.

இந்த அபாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அஸாஞ். இத்தகைய குரல்கள் அதிகரித்து அவற்றிற்கு மக்களின் ஆதரவு கிடைத்தால் எல்லா மக்களுக்கும் இலவசமாகச் சென்றடையக்கூடிய திறந்த வலை (open web) சாத்தியமாகலாம். மக்களுக்கு அறிவு உண்மையாகச் சொந்தமாக்கப்படலாம்.

இல்லையென்றால் அறிவுக்கு அதிக விலை கொடுப்பவனே அதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைமை உருவாகலாம்.

எது நடக்கப்போகிறது என்பதைச் சொல்வது கடினம்.

உள்ளடக்கம்