|
இந்தியாவில் நதிநீர் மோதல்கள் குறித்த கொள்கைகளின் உரையாடலுக்கான அமைப்பு (The
Forum for Policy Dialogue on Water Conflict) கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு
பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. இப்பிரச்சினை குறித்த கண்ணோட்டங்களில்
ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் கடந்த சில ஆண்டுகளில் இறுக்கமடைந்து வருகின்றன. முல்லைப்
பெரியாறு அணை பாதுகாப்பானது என்றும் ஒப்பந்தப்படி அணையின் நீர்மட்டம் அதிகபட்ச
அளவில் பராமரிக்கப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. தற்போதுள்ள
அணை பாதுகாப்பற்றது என்பதால் அந்த அணையின் கீழ்ப்பகுதியில் புதியதொரு அணை கட்டப்பட
வேண்டுமென்று கேரள அரசு வலியுறுத்துகிறது. அணைக்கு அருகே உள்ள நிலநடுக்க மையங்களில்
சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளாலும் இரு தரப்பிலும் அவநம்பிக்கையும் அச்சமும்
அதிகரித்திருப்பதாலும் கவலைக்குரிய சூழல் உருவாகியிருக்கிறது. இதை உடனடியாகக்
கவனித்தாக வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரும் சந்தித்துப்
பேசுவதற்காக நீங்கள் எடுத்துள்ள முன்முயற்சி வரவேற்கத்தக்கது.
இரு தரப்பினரின் நிலைப்பாடுகளுமே குறைபாடுள்ளவை என்றும் இவற்றுக்கு அப்பால்
சிந்திக்க வேண்டுமென்றும் நாங்கள் நம்புகிறோம். 115 வயதான இந்த அணை காலம்
ஏற்படுத்தும் சிதிலங்களின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பு
குறித்த வல்லுநர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. மராமத்து வேலைகளைச் செய்தால் அணை
பாதுகாப்பாக இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். நீரியல் ஆய்வுகள், அணை
கட்டுவதற்குப் பயன்பட்ட பொருள்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில்
பார்க்கும்போது அணை பாதுகாப்பற்றதாக உள்ளது என்று வேறு சிலர் கருதுகிறார்கள். அணை,
நிலநடுக்க அபாயத்துக்கு உள்ளாகக்கூடிய இடத்தில் உள்ளது. அணைக்கு அருகிலுள்ள இடங்களை
மையமாகக் கொண்ட தொடர் நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, இந்த அணை மட்டத்திற்குச் சுமார் 400 மீட்டர்கள்
கீழ்ப்புறத்தில் கூடுதல் நீர்த்தேக்க வசதியுடன் புதிய அணை ஒன்று கட்டுவதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது. இது கடும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். அத்துடன் பெரியார்
புலிகள் சரணாலயத்தின் கணிசமான பகுதியை மூழ்கடிக்கும். சரணாலயத்தினுள் நிரந்தரமான
பெரிய கட்டுமானமும் எழுப்பப்பட வேண்டியிருக்கும். இதைக் கட்டுவதற்கான காலகட்டத்தில்
இப்பகுதியில் பெருமளவிலான குறுக்கீடுகளும் தொல்லைகளும் ஏற்படும். இதுவும் நில
நடுக்க அபாயத்திற்கு உட்பட்ட பகுதியாகவே இருக்கும். இந்த அணையிலிருந்து தமிழகத்தின்
நீர்த் தேவையைப் பூர்த்திசெய்வது கேரளத்தின் சுற்றுச்சூழலை மேலும் பாதிக்கும்.
அணையின் அடிவாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு குறித்து மிகவும் அஞ்சுகிறார்கள்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடித்து நீர்மட்டத்தை 120 அடி அளவில் வைப்பதே
நல்லது. 120அடி மட்டத்திலிருந்தே தமிழகத்திற்குத் தேவையான நீரைத் தர முடியும். எந்த
அளவு முடியுமோ அந்த அளவுக்கு நீரைத் திசைதிருப்பவும் தமிழகத்திலுள்ள
நீர்த்தேக்கங்களிலும் இதர நீர்ச் சேமிப்பிடங்களிலும் முடிந்த அளவில் நீரைத்
தேக்கிவைக்கவும் அம்மாநிலம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
கீழ்க்காணும் வழிமுறைகளில் தொலைநோக்குச் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன:
1. தமிழகத்திற்குத் தற்போது கிடைக்கும் நீர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற
கேரளத்தின் கடப்பாட்டை மறு உறுதி செய்தல். கேரள அரசு இதைப் பகிரங்கமாகவே
உறுதிப்படுத்தியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
2. முல்லைப் பெரியாறு அணையை, நீரைத் திசைதிருப்பும் அணையாகப் பார்க்க
வேண்டும்-தேக்கிவைக்கும் அணையாக அல்ல. தமிழகத்துக்குத் தேவையான நீர்ச் சேமிப்புத்
திறன் மத்திய அரசின் உதவியுடன் அந்த மாநிலத்துக்குள்ளேயே உருவாக்கப்பட வேண்டும். இவை
பற்றிய பொதுவான ஒரு புரிதலுக்கு வர வேண்டும்.
3. பின்வரும் அம்சங்களில் உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: (அ)
தமிழகத்திற்குள் தேவைப்படும் நீர்த்தேக்கக் கொள்ளளவு, (ஆ) மடைமாற்றம் மற்றும் நீர்ப்
போக்குவரத்து அமைப்புகளின் மறு-வடிவமைப்பு, (இ) அணைக்குப் பின்புறம் சேமிக்கப்படும்
நீரின் அளவை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குக் குறைந்தபட்ச அளவில் வைத்திருத்தல்
மற்றும் புதிய மட்டத்திற்கு ஏற்ப அணையை வலுப்படுத்தல், (ஈ) அணைப் பகுதியில் நீரியல்
ஆய்வு மற்றும் முறைப்படுத்தப்பட்ட சேமிப்புக்கான கால நிர்ணயம், (உ) மாற்றத்திற்கான
ஏற்பாடுகளைத் திட்டமிடுதல்.
4. அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலைமை நீடிக்கலாம் என்றாலும் தமிழக
அரசு, கேரள அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக் குழு
ஒன்று நீர்த்தேக்கச் செயல்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட்டு
ஆண்டு முழுவதும் அதைக் கண்காணித்து மேம்படுத்த வேண்டும் என்பது எங்கள் யோசனை (துங்கபத்ரா
நதி விஷயத்தில் இருப்பதுபோல).
இது நியாயமானதும் சாத்தியமானதுமான தீர்வாக இருக்கும் என்று நம்புகிறோம்.
பொருளாதாரரீதியாகவும் இது சாத்தியமாகும். மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகள்
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் குறைந்தபட்சத் தேவை என்ற கருதுகிறோம். இவற்றைப்
பலவிதங்களிலும் மேம்படுத்த முடியும். உதாரணமாக உள்ளூரில் நீர்ச் சேகரிப்பு
வழிமுறைகளை ஏற்படுத்துல், பாசனத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் முல்லைப்
பெரியாறு அணையின் மீதான சார்பை நாளடைவில் குறைக்க முடியும். நதிப்படுகை பற்றி நாம்
தீட்டும் எந்தச் செயல்பாடும் சூழலமைப்பைச் சார்ந்தே இருக்க வேண்டும்.
அணையின் கடைமட்டத்தில் உள்ளவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின்
நீர்மட்டத்தைக் குறைப்பதும் தற்போதுள்ள கட்டுமானத்தை வலுப்படுத்துவதும் புதிய அணை
கட்டும் திட்டத்தைக் கைவிடுவதுமான உடனடி நடவடிக்கைகள் முக்கியமானவை என்பதை மீண்டும்
வலியுறுத்துகிறோம். வருமுன் காத்தல் என்னும் கோட்பாட்டின் அடிப்படையிலும்
நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கின் அடிப்படையிலும் இவை முக்கியமானவை.
னீ
அமிதா பவிஸ்கர், பாரத் படங்கர், பிக்ஷாம் குஜ்ஜா, சந்தன் மஹந்தா, துலால் சந்திரா
கோஸ்வாமி, ஏகலவ்ய பிரசாத், ஜெயந்த பந்தோபாத்யாய, கே.ஜே. ஜாய், மேதா பட்கர், பார்த்தா
தாஸ், ஃபிலிப் கல்லட், பிரணாப் சௌத்ரி, எம்.கே. பிரசாத், ரோஹிணி நிலேகானி, ஸ்ரீபத்
தர்மாதிகாரி, ஸ்ருதி விஸ்புடே, சுனிதா நாதமுனி, வினோத் காட், ஒய்.கே. அலாக், ஏ.
வைத்தியநாதன் மற்றும் பி.என்.யுகாந்தர் (இந்தியாவில் நதி நீர் மோதல்கள் குறித்த
கொள்கைகள் உரையாடலுக்கான அமைப்பு)
நன்றி : எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி,
டிசம்பர் 17, 2011
|