|
பத்து அல்லது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நடந்தது இது. சென்னையில் செய்தித்
துறையில் அதிக மலையாளிகள் காணப்படுவது குறித்து, “ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு டீ குடுத்த
நாயர் கதையா எல்லா எடத்துக்கும் வந்துடறீங்க” என ஒருவர் தன் நண்பரைக் கிண்டல்செய்ய,
பொதுவாக இனிமையாகப் பேசும் அவர் சூடாகி, “ஒங்களால் முடியல்லேன்னுதானே எங்களைக்
கூப்பிட்றாங்க” என்றார். தர்மசங்கடமான மௌனம் நிலவியது. அப்புறம் பேச்சு வேறெங்கோ
திரும்பியது.
இன்று அப்படி யாராவது ஒரு தமிழர் கிண்டல் செய்தால், தமிழகத்தில் உள்ள மலையாளிகள்
அப்படிப் பதிலடி கொடுக்கத் துணியமாட்டார்கள். கோபம் வந்தாலும் நகர்ந்துவிடுவார்கள்.

அப்படியாகிவிட்டது நிலைமை. பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் சொந்த மாநிலத்தில் இல்லாத
நிலையில் திரைகடலோடியும் பிழைக்க வேண்டிய கட்டாயம் கேரள மக்களுக்கு. அவர்கள்
நாலைந்து பேரைச் சேர்த்துப் பார்த்துவிட்டால் “இங்கும் வந்துவிட்டார்களா?” என்று
தான் தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்தினர் முகம் சுளிப்பது வழக்கம். ஆனால்
பகிரங்கமாகக் காட்டிக்கொள்ளத் தயங்குவார்கள். இப்போதும்கூடத் தயங்கலாம், சபை
நாகரிகம் தடுக்கலாம். ஆனால் கேரளத்தினர் அனைவருமே மிரண்டு போயிருப்பது உண்மை.
முல்லைப் பெரியாறு பிரச்சினை விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இரு தரப்பிலுமே இதைப்
பெரிதுபடுத்திப் பலர் குளிர்காய முயல்கின்றனர். ஆனால் பெரியாறு அணையின் உயரத்தை
152இலிருந்து 136ஆகக் குறைத்ததால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மேலூர்,
சிவகங்கைப் பகுதி விவசாயிகளின் நிலைமை குறித்து எவருமே சரியாக ஆராய்ந்து எழுதாதது,
அது பற்றி அரசும் சரியாக விளக்காதது, உரிமையின் அடிப்படையிலேயே தமிழகம் பேசிவருவது,
கேரளாவின் பக்கம் மிக மோசமான பீதியைக் கிளப்பும் பிரச்சாரம் போன்ற இவையே இன்றைய
சிக்கலுக்கு வழிவகை செய்துள்ளதாக நினைக்கிறேன்.
70களின் இறுதியில் அணை பலவீனமடைந்துவிட்டதாகவும் கசிவு ஏற்படுவதாகவும் செய்திகள்
வெளியாக, 1979ஆம் ஆண்டு பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதென்றும் இடைப்பட்ட காலத்தில்
நீர்த்தேக்க மட்டத்தை 152இலிருந்து 136 அடியாகக் குறைப்பதென்றும் இரு மாநிலங்களும்
ஒத்துக்கொண்டன.
நீண்டகாலம் முல்லைப் பெரியாறு அணைக்குப் பொறுப்பாக இருந்த பொறியாளர் சுதந்திர
அமல்ராஜ் மராமத்துப் பணிகளின்போதே பல்வேறு தடைக்கற்கள் ஏதாவது காரணம் காட்டித்
தாமதப்படுத்திக்கொண்டே வந்தன என்கிறார்.
1979 ஒப்பந்தப்படி ஒரு பகுதிப் பணிகள் முடிந்தவுடனேயே நீர்த் தேக்க மட்டம் 142
அடியாக உயர்த்தப்படலாம். ஆனால் பணிகள் அனைத்தும் நிறைவுற்று இப்போது
பத்தாண்டுகளுக்கு மேலாகியும் 136 அடியிலிருந்து ஓர் அடிகூட உயர்த்த முடியவில்லை.
இப்போதோ 120 அடி என்று ஆரம்பித்துவிட்டார்கள். 136 அடியாகக் குறைத்ததன் விளைவாக
மேலூர், சிவகங்கைப் பகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேலான ஏக்கருக்கு நீர்ப்பாசனம்
நிச்சயமற்றுப் போய்விட்டது. பொதுவாகவே விவசாயம் சூதாட்டமாகவிருக்கும் நிலைமையில்
முல்லைப் பெரியாறு அணையை நம்பிய விவசாயம் மேலும் மோசமாகிவிட்டது.
தண்ணீர் வருகிறது. ஆனால் எப்போது வரும், வராது என்று உறுதியாகக் கூறவியலாது. நம்பி
நாற்று விட்டால் கருகிவிடக்கூடும். போட்ட முதல் வீண். இப்போது நாள்தோறும் பேரணிகளும்
ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்பும் மாமூலாகிவிட்ட கம்பம் செழித்தே இருக்கும் நிலைமையில்,
மதுரை, சிவகங்கையில்தான் மிகக் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால்
அவர்களின் நிலைமை குறித்து அரசோ அரசியல் கட்சிகளோ அதிக அக்கறைப்பட்டதாகத்
தெரியவில்லை.
சிவகங்கைச் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் குறிப்பிட்டார்: மக்கள் விவசாயத்தைவிட்டு
விலகிப் போய்க்கொண்டிருக்கின்றனர். இதில் பிழைக்க முடியும் என்னும் நம்பிக்கையை
இழந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தண்ணீருக்காக எங்கே சண்டையிடப்போகிறார்கள்?
எப்படியும் எதுவும் உதவப்போவதில்லை. வந்தால் இலாபம், வராவிட்டால் ஒரு நாள் ரியல்
எஸ்டேட், அவ்வளவுதான். 30 ஆண்டுகளுக்கு முன், 152 அடியை 136ஆகக் குறைக்க எம். ஜி.
ஆர். அரசு முன்வந்த நேரத்தில் கேரளாவில் அணை தகர்க்கப்பட வேண்டும் எனக் குரல்
எழுந்திருந்தால், விவசாயமே தங்கள் வாழ்க்கை என்ற அன்றைய நிலையில் மக்கள் பெரும்
போராட்டங்களில் இறங்கியிருப்பார்கள்-இப்போது கம்பத்தில் நடப்பதைப் போல. ஆனால்
அப்போது அது ஒரு தற்காலிக ஏற்பாடுபோலத் தோன்றியதால்- அதுவும் கசிவு உண்மையிலேயே
ஏற்பட்டிருந்ததால்- மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
இனி நீர்த்தேக்க மட்டம் உயர்த்தப்படப்போவதில்லை என்று தெரிந்த பிறகும் அம்மக்கள்
போராடவில்லை. காரணம், மெல்ல மெல்ல அம்மக்கள் வறியவர்களாகிக்கொண்டிருக்கின்றனர்.
வெவ்வேறு பிழைப்புகளைத் தேடிப்போய்க்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் போராட்ட குணம்
எங்கிருந்து வரும்?
இப்பகுதிகளிலிருந்தெல்லாம் கம்பத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடக்கும்
போராட்டங்களுக்கு ஆளனுப்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால் உங்களுக்கென்ன பயன்? கம்பம்
போராட்டத்தால் தண்ணீர் அளவை உயர்த்தி “உங்களுக்கு வரப்போகிறதா என்ன?” என்று
கேட்டபோது, சற்று நேரம் விழித்துவிட்டு ஒரு விவசாயி சொன்னார்: “என்ன செய்வது சார்
எங்கள் ஆத்திரத்தை வெளிக்காட்ட ஏதோ ஒரு வழி. இப்போதாவது எங்கள் பிரச்சினைகளை
எல்லோரும் புரிந்துகொள்ளட்டுமே. கம்பம் ஆட்களும் நம்மவர்கள்தானே. அவர்களுக்கு எங்கள்
நிலை வராமலிருக்கட்டுமே. . .”
பரபரப்பாக ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் மலையாள நிறுவனங்கள்மீதான தாக்குதல்கள்
பற்றியும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மேலூர்ப் பக்கம் தலைகாட்டுவதில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பாழாகிக்கொண்டிருப்பதைப் பற்றித் தொடர்ந்து
பத்திரிகைகள் எழுதியிருக்குமானால், இரு பயன்கள் கிட்டியிருக்கும். ஒன்று, ஏதோ
ஓரளவில் விவசாயப் பிரச்சினைகள் பக்கம் அரசின் கவனம் திரும்பியிருக்கலாம்.
மேலூருக்கும் சிவகங்கைக்கும் குறைந்தபட்ச நிவாரணம் கிடைத்திருக்கும். இரண்டு,
இச்சோகக் கதை இந்திய அளவில் அறியப்படும்போது அணையை உடைப்போமென்று குரலெழுப்பக்
கேரளப் பகுதித் தலைவர்கள் சற்றுத் தயங்கியிருப்பார்கள்.
ஏன் அவர்களிடம் அப்படியெல்லாம் கெஞ்ச வேண்டும்? இது நமது உரிமையல்லவா? 999
ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை 116 ஆண்டுகளில் புறக்கணிப்பதா என்று
கேட்கப்படுகிறது. ஆனால் உண்மை என்ன? நீர்த்தேக்கத்தைக் கட்டுவதற்கான இடத்தை அவ்வளவு
நெடுங்காலம் ஒத்திக்குவிட்டது பொம்மை ராஜாவாகவிருந்த திருவிதாங்கூர் மன்னர். அதை
ஏன் இன்றைய ஜனநாயகக் காலத்தில் கேரள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்? எங்களுக்குத்
துளியும் உடன்பாடில்லை என்று கூற அவர்களுக்கும் உரிமை இருக்கத்தானே செய்கிறது?
காவிரிப் பிரச்சினையிலும் இப்படித்தான். பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த சென்னை ராஜதானி
நிர்வாகத்திற்குப் பணிந்துபோக வேண்டிய சூழல் மைசூர் மன்னருக்கு. இன்று
தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகள் சமனற்ற அவ்வொப்பந்தத்தை முற்றிலுமாக
நிராகரிப்பதில் தவறென்ன?
இரு பிரச்சினைகளிலும் ஒப்பந்தங்களை நிராகரிப்போரின் நோக்கங்கள் கேள்விக்குரியவைதாம்.
ஒப்பந்தத்தை முற்றிலுமாக மறுதலிப்பதால் ஏற்படும் இழப்புகளைக் கருத்தில்கொள்ளாமல்
தீர்வுகாண முயல்வது மனிதாபிமானமாகாதுதான். ஆனால் அவையெல்லாம் வெவ்வேறு தளங்கள்.
உரிமை என்று தமிழர்கள் முழங்குவது அபத்தம் என்பதை மட்டுமே இங்கே சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
கர்நாடகப் பிரச்சினைக்கும் கேரளப் பிரச்சினைக்கும் ஒரு முக்கிய வேறுபாடுமிருக்கிறது.
காவிரித் தண்ணீரை எந்த மாநிலம் விவசாய, மற்றும் குடிநீர்த் தேவைகளுக்காக அதிகமாகப்
பயன்படுத்தலாம் என்பதுதான் காவிரிப் பிரச்சினை. முல்லைப் பெரியாற்று நீரைப்
பொறுத்தவரை, அதை விவசாயத்திற்குப் பயன்படுத்த அல்ல, மின் உற்பத்திக்காகத்தான் கேரள
மக்கள் கோருகிறார்கள் என்பதே பொதுவான புரிதல்.
இடுக்கியில் போதுமான அளவு நீரைத் தேக்கித் தேவைப்படும் அளவு மின்சாரத்தை
உற்பத்திசெய்ய முடியவில்லை. பெரியாறு அணை இல்லையென்றால் அனைத்து நீரும்
இடுக்கிக்குப் போகும். புதிய அணை கட்டினாலும் தங்கள் மின் உற்பத்தித் தேவைக்கு
வேண்டியதை எடுத்துக்கொண்டு எஞ்சியிருப்பதையே தமிழகத்திற்குத் தருவார்கள் என்று இங்கே
பலர் கருதுகின்றனர்.
தவிரவும் முல்லையாற்றின் நீர்த் தேக்க மட்டத்தைக் குறைத்த பிறகு, படுகையை ஒட்டிய
பகுதிகளில் குடியிருப்புகள், சுற்றுலா விடுதிகள் உருவாகிவிட்டன. அவர்கள்தாம் அணை
பலவீனமாகிவிட்டது, அதிகமாக நீரைத் தேக்கக் கூடாது எனப் பீதியைக் கிளப்புபவர்கள்
என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவற்றையெல்லாம் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. கேரளச்
சிந்தனையாளர்கள் பலரிடமும் பத்திரிகையாளர்களிடமும் பேசிப் பார்த்தேன். அநேகமாக
எல்லோரும் மட்டையடியாக மறுக்கின்றனர். நடுநிலையாளர்கள், முன்னேற்றக்
கருத்துடையவர்களாயிருப்பவர்கள்கூட அணை பலவீனம் என்பது வெறும் பிரச்சாரமாக இருக்கலாம்
என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். “உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே
அணை பாதுகாப்பானது எனச் சொல்லிவிட்டதே” என்றால் “இல்லை, இல்லை, இப்போது பூகம்பங்கள்
நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன” என்கின்றனர்.
சசி தரூர் அரசியல்வாதிதான். ஆனாலும் அடிப்படையில் எழுத்தாளர். “அணை இடியும் அபாயம்
இருக்கிறது. அப்படி இடிந்து வெள்ளம் சீறிப்பாய்வது 60 அணுகுண்டுகள் வெடிப்பதற்குச்
சமம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் அப்படி ஓர்
அச்சமிருப்பதை மறுக்க முடியாது” என எழுதுகிறார். சசி தரூரென்ன, மனித உரிமைப்
போராளியாகக் கொண்டாடப்படும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரும்
ஏறத்தாழ அப்படித்தானே பேசுகிறார்?
கடந்த சில வருடங்களாகப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் அச்சுதானந்தன்தான். அணையின் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை
142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு எம்மைக் கட்டுப்படுத்தாது என்ற
வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவந்ததே அவரது தலைமையிலான அரசுதான்.
அறிவுஜீவிகள் அதிகமிருப்பதாகக் கருதப்படும் கேரளத்தில், பொதுவுடைமைக் கருத்துகளின்
வீச்சு அதிகமெனக் கருதப்படும் அம்மாநிலத்தில், கேரளத் தேசியம் என்பதே அதிகம்
பயன்படுத்தப்படாத அம்மாநிலத்தில், அணை விஷயத்தில் அனைவரும் ஏறத்தாழ ஒன்றாகவே
இருக்கிறார்கள். தனிப்பட்டமுறையில் பேசும்போதுகூட அணை தகர்ந்துவிடக் கூடும் என்ற
பொதுவான அச்சத்தைப் புறந்தள்ள முடியாது என்றே அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ் ஊடகங்களும் இணையதளங்களும் இனவெறிக்குத் தூபம் போடுவதைப் போன்று மலையாள
ஊடகங்கள் தமிழருக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்குவதில்லை. ஆனால் அவை
அனைத்தும் அணை குறித்த அபத்தமான ஊகங்களைக் கிளப்பிப் பீதியை வளர்க்கின்றன. இறுதியில்
அத்தகைய செய்திகள் தமிழர்கள்மீது கடும் வெறுப்பைத்தான் உருவாக்கும். அந்த அளவில் இரு
தரப்பு ஊடகங்களும் சமூக விரோதச் சக்திகளாகவே செயல்படுகின்றன.
டாம் 999 திரைப்பட இயக்குநர் சோஹன்ராய் பேரழிவு வரும் என்று நம்பக்கூடிய நபராகத்தான்
தோன்றுகிறார். எனவே சற்றும் பொறுப்பில்லாமல் உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருக்கும்
நிலையில் படத்தை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வெளியிட முயன்றால் என்னவாகும் என்ற சிந்தனை அவருக்கு கடுகளவும் இல்லை.
இருந்திருந்தாலும் அதைப் பயன்படுத்திப் பரபரப்பைக்கூட்டிக் காசுபார்க்கலாம் என
நினைத்திருக்கக்கூடும். அப்படம் பற்றித் தினமணியில் பரபரப்பாகச் செய்தி வெளியாக
மதிமுகவினர் தங்கள் தமிழ்ப் பற்றைக் காட்டும்வகையில் ஸ்டூடியோவிற்குள் புகுந்து
திரைப்படச்சுருளைக் கைப்பற்றி நாசப்படுத்த, தமிழ்நாடு தீப்பற்றிக்கொண்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத கேரளப் பத்திரிகையாளர் ஒருவர் தங்கள் மாநில ஊடகங்கள்,
அரசியல்வாதிகள் அனவரையும் கடிந்துகொண்டார். மக்களின் வாழ்வோடு விளையாடுகின்றனர்
என்றார். அதே நேரம் அண்மையில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் எட்டுமுறை
நிகழ்ந்திருப்பது பரவலாகக் கிலியைக் கிளப்பியிருப்பதும் உண்மை என்றார் அவர். இன்னொரு
புறம் இயற்கை ஆர்வலர்கள் இயற்கையுடன் விளையாடக் கூடாது என்பவர்கள். அவர்களில் ஒருவர்
முன்னாள் மத்திய நீர்வளத் துறைச் செயலர் ராமசாமி அய்யர். அவர் கேரளக்காரர் அல்ல.
ஆனால் இயற்கைமீதான அவரது பற்று எங்கெங்கோ அவரை இட்டுச் செல்கிறது.
மேற்குநோக்கிப் பாயும் ஆற்றைத் தடுத்துத் திருப்பிவிட்டதே மாபெரும் தவறு என்கிறார்.
அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். அணை காலாவதியாகிவிட்டது என்கிறார் ராமசாமி. உச்ச
நீதிமன்ற நிபுணர் குழு பாதுகாப்பு குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை எனக்
கூறியிருக்கிறதே என்றால், “அதனால் என்ன, எத்தனை நாளைக்கு உத்தரவாதம் கொடுக்க
முடியும்? என்றேனும் ஒரு நாள் அது பழுதடைந்து பயன்படுத்தப்பட முடியாமல்தானே போகும்?”
என்று பதிலளிக்கிறார்.
“பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமல்லவா முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம்?”
என்று சுட்டிக்காட்டினால், “என்றோ ஒருநாள் அதை நம்ப முடியாமல் போகும் நிலைமை
வரத்தான் போகிறது. எனவே இப்போதே மக்களைத் தயார்செய்யுங்கள். அணையை முடக்கும் பணியைத்
தொடங்குங்கள்” என்கிறார் சர்வ அலட்சியமாக.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா சந்தித்த தாது வருடப் பஞ்சம் மிகப்
பெரும் அழிவு. இன்னொரு புறம் குற்றப்பரம்பரையினரை அடக்க வழியில்லாமல் தவித்த
பிரிட்டிஷ் நிர்வாகம். அத்தகைய சூழலில் உருவானது பெரியார் அணைத்தேக்கம் என்று
சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர் சு. வெங்கடேசன்.
காவல் துறை சாதிக்க முடியாததைப் பொதுப்பணித் துறை சாதித்ததென்கிறார் அவர்.
அப்பெரியாற்று நீர் இல்லயென்றால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பார்க்கவே
பயங்கரமாயிருக்கிறது என்கிறார் அவர். ஆனால் இப்பிரச்சினை சரியாகக் கேரள
மாநிலத்தவருக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை.
சொன்னால் கேட்பார்களா என்பது அடுத்த கேள்வி. இப்போது இரு தரப்பிலும் உணர்வுகள்
கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன.
காலவரையற்ற பொருளாதாரத் தடை கோருகின்றனர். செய்யலாம். இங்கிருக்கும் மலையாளிகளையும்
தாக்கலாம். ஆனால் நிலைமை முற்றி எவராவது அணையையே தகர்த்துவிட்டால்?
ஏற்கனவே பொருளாதாரத்தடையால் தமிழக விவசாயிகளுக்கு இழப்பு. அங்கே சென்று கூலிவேலையில்
ஈடுபட முடியாமல், வீட்டில் முடங்கி அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு என்ன வழி என்று
பரிதவிக்கின்றனர் கம்பம் பகுதி அடித்தட்டு மக்கள். எத்தனை நாள் தாங்க முடியும்
இவர்களால்?
இப்போது கூலிவேலை வாய்ப்பை ஒரு பகுதியினர் இழந்திருக்கின்றனர். தங்கள் காய், கனிகளை
அனுப்ப முடியாததால் விவசாயிகள் பலருக்கும் நட்டம். அணை காணாமல் போனால் ஒட்டுமொத்தக்
கம்பம் பள்ளத்தாக்குச் சமூகமும் மிக மோசமாகப் பாதிக்கப்படும். மீண்டும் ஒரு தாதுப்
பஞ்சம் வரலாம், குற்றப் பரம்பரையினர் உருவாகலாம்.
அணை தகர்ந்தால் இந்திய தேசியமும் நொறுங்கும் என்றும் மிரட்டுகின்றனர். ஆனால் இந்திய
அரசு அப்படியெல்லாம் நடக்கவிட்டு விடுமா என்ன?
தம்பி பிரபாகரனின் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்
என்றனர் பெரும் கரவொலிக்கிடையே. ஆனால் முள்ளி வாய்க்காலில் குருதிப்புனல் பாய்ந்தது.
இன்னுமொரு சுவையான விஷயம்: புதிய அணை எதுவும் இடுக்கிப் பகுதியில் கட்டவே
முடியாதென்கிறார் பொறியாளர் அமல்ராஜ். பல வாரங்கள் மண் பரிசோதனை செய்துவிட்டுத்தான்
தற்போதைய இடத்தில் பெரியாறு அணை கட்டப்பட்டது. அது போன்ற கடினப் பாறை பூமி
அப்பகுதியில் வேறு எங்குமில்லை. முடிந்தால் கட்டிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டாலே
அடங்கிவிடும் என்கிறார் அமல்ராஜ்.
இன்றைய நிலையில் புலி முதுகில் ஏறிய கதைதான் கேரளத்தவருக்கு. அணை பாதுகாப்பானது
என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. பிரிட்டிஷ் கால ஒப்பந்தத்தைச் சட்டபூர்வமாக
நிராகரிக்க முடியாது.
இன்னொரு புறம், தமிழகத்திலிருந்து சரக்குப் போக்குவரத்து முற்றிலும்
நின்றுபோய்விட்டால் அன்றாட வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
தமிழகத்திலிருக்கும் கேரள மக்களைத் தாக்கினால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.
ஆனால் பீதியை வரைமுறையில்லாமல் கிளப்பியாகிவிட்டது. எப்படிப் பின்வாங்குவது?
காவேரிப் பிரச்சினையில் போன்று தமிழகம் முல்லைப் பெரியாற்றில் கையறு நிலையில் இல்லை.
தன் பங்கிற்கு அதுவும் கேரளாவிற்குப் பல்வேறு சிக்கல்களை உருவாக்க முடியும். தமிழகம்
ஒத்துழைத்தால் தான் கேரளாவின் புலி சவாரி ஒரு முடிவுக்கு வரும். ஏதோ ஒருவித
சமாதானத்திற்குத் தமிழகம் முன்வந்திருக்கிறது எனச் சொல்லிக் கீழிறங்கலாம். அதே நேரம்
அவர்கள் அப்படி இறங்க முடியாவிட்டால் பாதிக்கப்படப்போவது கேரளத்தவர் மட்டுமல்ல
என்பதைத் தமிழர்கள் மனத்தில் கொள்வதும் நல்லது.
விட்டுக்கொடுக்கும் தன்மை, நல்லிணக்கத்தை முன்னிறுத்துவது, தொலைநோக்குப் பார்வை
இவையெல்லாம் பல சமூகங்களில் அருகிவிட்டன. நம்மிடமும்தான். சில காலங்களாவது பெரும்
துயரங்களைச் சந்திக்காமல் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனத் தோன்றவில்லை.
|