|
சமூகத்தளத்தின் வாழ்வாதாராத்தோடும் உற்பத்தியோடும் இறுக்கமான உறவைக் கொண்டுள்ளவர்கள்
அடித்தள மனிதர்கள். அவர்களின் சமூக, பண்பாட்டு, உளவியல் ஆகிய கட்டமைப்புகளில்
ஆழமாகப் பதிந்திருக்கும் நாட்டுப்புறவியல் துறையும், மனிதர்களின் உணர்வுகளுடனும்
வெளிப்பாடுகளுடனும் கருத்தியல்ரீதியாகத் தமது ஆளுமையைச் செலுத்திக்கொண்டிருக்கும்
நாடகமும் இணைந்திருப்பது மிகவும் முக்கியமான சமூகக் கலைச் செயற்பாடு. அவ்வகையில்
புதுதில்லி தேசிய நாடகப் பள்ளியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின்
நாட்டுப்புறவியல் துறையும் நிகழ் நாடக மய்யமும் இணைந்து நாடக உருவாக்கப் பயிலரங்கை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திவருகின்றன. இப்பயிலரங்கு 03. 12. 2011
தொடங்கி 03. 01. 2012 வரை ஒருமாத காலம் நடைபெறுகிறது. இப்பயிலரங்கில்
கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள்.
நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், இலக்கியம், சமூகவியல், நாட்டுப்புறவியல்
மாணவர்கள் எனப் பலதளங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
நாடக உருவாக்கம் என்னும் கருத்தே இப்பயிலரங்கின் நோக்கம். அவ்வகையில் பயிற்சிக்
கலைஞர்களின் உடல், மனம், குரல்,லயம், நடிப்பு ஆகியவற்றில் தங்களது ஆளுமைகளை
வளர்த்துக்கொள்ளும்விதத்தில் பயிலரங்கு இயங்கிவருகிறது. அத்துடன் சொற்பொழிவுகள்,
திரைப்படங்களைக் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் வழியாகக் கருத்தியல்ரீதியாகக்
கலைஞர்களைத் தயார்படுத்துவதிலும் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்நாடக உருவாக்கப்
பயிலரங்குடன் இணைந்ததாக 20, 21ஆம் தேதிகளில் நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள்,
நாடகங்கள் குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது. தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த
தியாகராஜன் அவர்களின் புகைப்படங்கள் சந்ரு அவர்களின் ஓவியங்கள், கதிர் அவர்களின்
நாட்டுப்புறத் திரு விழா பற்றிய புகைப்படங்கள் ஆகியவை இதில் இடம்பெறயிருக்கிறது.
நாடகத்தின் உருவாக்கும் முறை குறித்துப் பயிற்சியளித்த சண்முகராஜா பிரதிகளைத்
தேர்வுசெய்தல், தகவல்களைத் திரட்டுதல், பிரதியின் வரவாற்றைத் தெரிந்துகொள்ளுதல், கள
ஆய்வு, நிகழத்துதல், காட்சிப்படுத்தல், திட்டமிடுதல், பயிற்சி மேற்கொள்ளும் முறை என
நாடக உருவாக்கம் அமைய வேண்டும் என நாடகத்தின் தொழில்நுட்பங்களை நுட்பமாக விளக்கினார்.
நாடக உருவாக்கத்தில் நிகழ்த்துதல் வெளி மற்றும் அரங்கின் செயல்பாடுகள் குறித்தாக
அனிஷின் வகுப்பு இருந்தது. படைப்பாளி, படைப்பு, நிகழத்துநர்கள், பார்வையாளர்கள்
ஆகிய நான்கு புள்ளிகளையும் தொடர்புபடுத்தும் பணியைச் செய்வதுதான் நாடகத்தின்
செயற்பாடு எனவும் நாடகத்தில் நிகழ்த்துதல் வெளியும் புனைவும் பார்வையாளர்களின்
மனவெளியோடு ஏற்படுத்தும் உறவுகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.
நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் குறித்து விளக்கவந்த இ. முத்தையா, நாடகம் என்பது
மனிதர்களின் நடிப்புகளைக் கட்டவிழ்ப்பது, அதன் மூலம் சமூக விழிப்புணர்வை
ஏற்படுத்தவும் முயல வேண்டும் என்றார். ரிச்சார்டு, செக்னரின் நிகழ்த்துதல் கோட்பாடு
பற்றிப் பேரா. டி. தருமராஜ் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். நிகழ்த்துதலில்
பயன்படுத்தப்படும் சடங்கு, நாடகம், விளையாட்டு, கேளிக்கை, நடனம், இசை ஆகியவற்றில்
வெளிப்படும் அர்த்தங்கள், செயல்படும் விதம், பயன்படுத்தும் முறை ஆகியவை பற்றி அவர்
விளக்கிய முறை பயனுள்ளதாக இருந்தது.
|