Google   www kalachuvadu.com

கிரிஷ் கார்னாடின் நாடகங்கள்
வெளி ரங்கராஜன்

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டம்வரை நம்முடைய நாட்டுப்புற நாடகங்களின் வடிவாக்கத்தையே சார்ந்திருந்த இந்திய நாடகம் நகர்ப்புறங்களின் உருவாக்கம், மேற்கத்திய நாடகங்களின் அறிமுகம் மத்தியதர படித்த வர்க்கத்தின் எழுச்சி IPTA தோற்றம் ஆகிய காரணிகளால் நம்முடைய கலை இலக்கியப் பார்வைகளிலும் அணுகு முறைகளிலும் ஏற்பட்ட பல மாற்றங்களை உள்வாங்க நேர்ந்தது. வங்கத்தில் பாதல் சர்க்காரும் மராட்டியில் விஜய் தெண்டுல்கரும் இந்தியில் மோகன் ராகேஷூம் இந்தப் புதிய உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்ததுபோல் கன்னடத்தில் கிரிஷ் கார்னாட் இந்தியச் சூழலில் நாடக உருவாக்கம் குறித்து ஒரு புதிய எழுத்து முறையும் நவீனப் பார்வையும் ஏற்படக் காரணமாக இருந்தார். நம்முடைய வரலாற்றுப் பின்புலம் மற்றும் சூழல் தன்மைகளின் அடிப் படையிலேயே அவை உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் வடிவமும் கட்டுமானமும் ஒரு நவீன மனத்தின் புதிய சாயலைக் கொண்டிருந்தன. பாதல் சர்க்கார். விஜய் தெண்டுல்கர் போன்றவர்கள் சமகால சமூக, அரசியல் பிரச்சினைகளைத் தங்கள் நாடகப் பிரதிகளில் நேரடியாக எதிர்கொண்டபோது கிரிஷ் கார்னாட் கலைத்தேர்வு மற்றும் அழகியல் மற்றும் அழகியல் செறிவு கொண்ட ஓர் அணுகுமுறையை முன்நிறுத்தினார். நம்முடைய புராணம், வரலாறு மற்றும் நாட்டுப்புறத் தன்மைகளின் அடிச்சரடுகளில் இழையோடும் ஆழ்ந்த தொடர்புகளை நினைவுபடுத்தியும் அவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களோடு நடுவே அம்மதிப்பீடுகளில் தென்படும் மோதல்களைக் கவனப்படுத்தியும் சமகால அரசியல் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளின் இடைவிடாத தொடர்ச்சியை அவற்றில் கண்டு உத்வேகம் பெறவும் அவருடைய நாடகப் பிரதிகள் ஒரு வலிமையான குரலை முன்வைத்தன. நாம் உயர்த்திப் பிடித்திருக்கும் மரபான பிம்பங்களையும் வரலாற்று நாயகர்களையும் அவர்களுக்குரிய இயல்பான முரண்களுடன் உலவ விடுவதன் மூலம் யதார்த்தம் பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வையைத் தம்முடைய பிரதிகளில் இவர் உருவாக்குகிறார்.

அன்று நேருவின் சகாப்தம் போன்று ஒரு பேராசை கொண்ட லட்சியவாதத்தின் வீழ்ச்சியாகத் துக்ளக்கின் சீர்திருத்த நடவடிக்கைகளை துக்ளக் முன்நிறுத்துகிறது. சமத்துவத்தைப் போதித்த பசவண்ணாவின் வீரசைவ இயக்கம் அடிப்படையான சாதீயப் பிரச்சினைகளைச் சந்திக்க நேர்கிறது. உடலாகவும் மனமாகவும் அலைவுறும் இருத்தலின் பிரச்சினைகளை ஹயவதனாவிலும் பாலியல் வாசம் வீசும் இருத்தலின் அகமும் புறமுமாகிய இரட்டைத் தன்மைகளை நாகமண்டலாவிலும் இளமையின் துடிப்பும் முதுமையின் இயலாமையும் கொள்ளும் மோதல்களை யயாதியிலும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கும் இன்பத்துக்கான விழைவுகளுக்குமிடையே ஊசலாடும் மனித வாழ்க்கையின் தகிப்பையும் குளிர்ச்சியையும் அக்னியும் மழையும் நாடகத்திலும் முன்னிலைப்படுத்துவதன் மூலம் வாழ்வின் நெருக்கடிகளும் அழகியல் நிர்ப்பந்தங்களும் ஒரு முடிவற்ற நிலையில் பின்னிப்பிணைந்து தொடர்ந்து கொண்டிருப்பதை கிரிஷ் கார்னாட் கவனப்படுத்துகிறார். நித்திலை, விசாகை, கலாவதி, ராணி போன்ற பெண் பாத்திரங்கள் தங்களுடைய உறுதியான எதிர்ப்பின் மூலம் இந்தப் போராட்டத்துக்கு ஒரு மதிப்பை உருவாக்குகிறார்கள்.

ஆனால் வெறும் கருத்துகளுக்கான களன்களாகவோ கோஷங்களின் பிரகடனங்களாகவோ அவருடைய நாடகங்கள் வடிவம் கொள்வதில்லை. வாழ்க்கை ஒழுங்கின்றிக் கலைந்து கிடப்பதுபோலவே அவருடைய நாடகங்களும் எந்தவித சம்பிரதாயமான கட்டுக் கோப்பும் இன்றி இங்கும் அங்குமாகச் சிதறிக்கிடக்கின்றன. சம்பவங்களின் தேர்வும் உரையாடல்களின் நேர்த்தியும் கலைத்தன்மையும் கவித்துவச் சாயல்களும் கொண்டிருக்கின்றன. பாத்திரங்கள் தங்களுடைய பலங்களுடனும், பலவீனங்களுடனும் ஆனால் வாழ்வுக்கான விழைவுகளுடன் இயங்குகிறார்கள். எதிர்கொள்ள வாய்ப்புள்ள கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் பாத்திரங்களின் இயக்கம் இயல்பானதாகவே உள்ளது. உதாரணமாகப் பலிபீடம் நாடகத்தில் தலித்-பிராமண விவாகம் குறித்து நிகழும் வாக்குவாதங்களும் துக்ளக் நாடகத்தில் துக்ளக்குக்கும் மந்திரிக்கும் இடையே நிகழும் அரசியல் நடவடிக்கைகளின் உள்நோக்கங்கள் குறித்த விவாதங்களும் இயல்பான கூர்மை கொண்டுள்ளன. பாத்திரங்கள் விவேகத்துடன் இயங்குவது போன்ற தோற்றம் கொண்டாலும் தவிர்க்க இயலாததைத் தடுக்கும் சக்தியற்றவையாகவே உள்ளன.

ஆனால் நாடகத்தில் அவர் சித்தரிக்கும் வாழ்க்கை வீரியத்துடனேயே இயங்குகிறது. எங்கும் பாடல்களும் இசையும் வன்மமும் நிறைந்து ஒரு வன்மையான தோற்றம் உள்ளது. வாழ்வும் மரணமும் தங்களுக்கான நடனங்களைத் தொடர்ந்து நிகழ்த்தியபடி உள்ளன. அக்கணங்களின் துடிப்பை உணர்ந்தவராக கிரிஷ் கார்னாட் அவற்றைச் சூழ்ந்துள்ள நாடகத்தன்மைகளைப் பின்பற்றிச் செல்கிறார். சிறு வயதிலிருந்தே நாட்டுப்புற நாடக வடிவங்களுடன் அவர் கொண்டிருந்த உறவு பௌரானிகம் குறித்த நம்முடைய சூழல் கொண்டுள்ள அதீதமான ஈடுபாடு, யக்ஷகானம் போன்ற நிகழ்த்து கலைகளுடன் அவருடைய பரிச்சயம். உலக நாடுகளின் தொடர்பு இவை எல்லாம் கிரிஷ் கார்னாடின் நாடகங்களுக்கான உத்வேகங்களையும் கட்டமைப்பையும் கருத்துப் பின்புலத்தையும் அவருக்கு வழங்கியுள்ளன.

பாவண்ணனின் மொழிபெயர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாக உள்ளது. அவர் வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் கன்னட இலக்கிய நீரோட்டங்களின் அடிச்சரடுகளை நெருக்கமாகப் பின்பற்றிச் செல்பவராக இருக்கிறர். முக்கியமாக கிரீஷ் கார்னாடின் நாடகங்களுடைய தத்துவார்த்த மற்றும் அழகியல் அடிப்படைகளை நன்கு உள்வாங்கியவராக இருக்கிறார். அதுவே இந்த மொழிபெயர்ப்புக்கு இத்தகைய சரளத்தையும் செறிவையும் வழங்கி இந்த மொழிபெயர்ப்பைத் தமிழ் மனத்துக்கு அருகில் கொண்டுவந்திருக்கிறது. றீ


வெளியீட்டு நிகழ்வில் வெளி ரங்கராஜன் வாசித்த உரையின் சுருக்கப்பட்ட வடிவம்

உள்ளடக்கம்