|
கிரிஷ் கார்னாடின் நாகமண்டலா நாடகத்தை நாடகத் திறனாய்வுப் பாடத்திற்காகவும் பலிபீடம்
நாடகத்தை அரங்க வடிவமைப்புப் பாடத்திற்காகவும் முழுமையாகப் படித்தறியும் வாய்ப்பு
புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியில் முதுகலை நாடகவியல் படித்தபோது
எனக்குக் கிடைத்தது. பனுவல் வாசிப்பால் என்னுள் எழுந்த புரிதலும் விரிவுரையாளர்
பிரேமின் (ரமேஷ்) திறனாய்வு எடுத்துரைப்பும் என்னுள் நவீனப் பனுவலாக்கச்
சிந்தனையையும் கிரிஷ் கார்னாடின் படைப்புகளை அறியும் ஆவலையும் தூண்டின.

காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாகக் கடந்த 11.12.2011 மாலை சென்னை புக்பாயின்ட்
அரங்கில் நடைபெற்ற கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் அடங்கிய அக்னியும் மழையும்
தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் கார்னாட், கன்னடத்திலிருந்து அவற்றை மொழி
பெயர்த்த எழுத்தாளர் பாவண்ணன், தமிழ் நவீன நாடக முன்னோடிகளான இந்திரா பார்த்தசாரதி,
ந. முத்துசாமி ஆகியோர் பங்குபெற்றனர். அந்த முதுகுடி விழாவிற்குச் செல்வது குறித்த
பரவசத்துடன் அங்குச் சென்றேன்.
பலரும் பலகாலமும் பதித்துச் சென்றிருந்த குத்தானிச் சுவடெனக் காலச்சுவடின்
நீள்பரப்புகளில் பல் உருவென நாடக மொழிகள் பொங்கி நிரம்பின. குரு-சீடன் மரபில் தொடர்
வழிநகர்வோடு வாய்மொழிப் பதிவுகள் தாங்கிய குழுவிடைப் பனுவலாய்ப் பயணித்த தமிழ்
நிகழ்வு மரபு, மேலை இலக்கியத் தாக்கம் வந்த பின்னர் வடிவுடைய எழுத்து மரபுக்குள்
தாய் சங்கரதாஸ், தந்தை பம்மல் சம்பந்தம் வழியே கட்டமைப்புப் பனுவலாக்க மரபாகத்
தொடங்குகிறது.
தொன்மம், இதிகாசம், நாட்டார் கதை, புராணம் எனக் கலைக்குள் இருந்த கதை வடிவங்களை அதன்
போக்கில் வடிவமாக்கிய சங்கரதாஸ் சாமியும் மேலை மரபுகளை எடுத்தாண்டு இந்தியச் சமுகம்,
புராணம், வரலாறு ஆகிய வடிவங்களை அடியொற்றிப் பனுவல்களை உருவாக்கிய சம்பந்தனாரும்
மூலமுன்னவர்களாக அறியப்படுகின்றனர். இதை அடிப்படையாகக்கொண்டு வளர்ந்த
நிகழ்த்தலுக்கான நாடகப் பனுவல் மரபு ஒரு புறமும் மனோன்மணியத்தை அடியொற்றி எழுந்த
வாசிப்பு நாடகப் பனுவல் மரபு ஒரு புறமும் இணைகோடுகளாய்ப் பெருகி நீண்டன.
எழுபதுகளின் இறுதியில் பனுவல்களின் வடிவம் தடம் மாறியது. அரங்கமும் களமும் ஒன்று
கலந்து காட்சிகள் குறைந்தன. தொடக்கம், உணர்ச்சி, முரண், உச்சம், வீழ்ச்சி ஆகிய வளை
கோடுகள் நேர்க்கோடாய் மாறின. இம்மாற்றத்தைத் தமிழில் செய்தவர்கள் ந. முத்துசாமியும்
இந்திரா பார்த்தசாரதியும்தான். இவர்கள் இருவருடன் மரபு, தொன்மம், நாட்டார் கதை,
நவீனம், மேலைப் போக்கு எனப் பல வழிகளை ஒருமையாக்கி எழுபதுகளில் புதிய நாடகப் பனுவல்
முறையை இந்திய நாடகத் துறைக்கு வழங்கிய கிரிஷ் கார்னாடையும் நிகழ் களத்தில் மெய்மைப்
பாத்திரங்களாக நிறுத்தியது தமிழ் நாடகீயத்தின் முக்கியக் கூடலாக அமைகிறது.
பாவண்ணனின் வரவேற்புடன் விழா தொடங்கியது. அவர் மொழிபெயர்த்த நாடகப்
பனுவல்களுக்குள்ளிருந்து கதைமாந்தர்களின் அசைவுகள் எழத் தொடங்கின. அக்னியும் மழையும்
ஒன்று சேர்ந்த நடுநிலைக் கதகதப்பில் தியேட்டர் சீயின் கட்டியக்காரன் பூசை (சமய)
மணியை ஒலித்தபடி கதை வாசிப்புக்கு நடிகர்களை அழைத்தான்.
அரங்கில் எழுத்தாளன் முன்னிலையில் கதை மாந்தர்களாகிய பனுவல் வாசிப்போர் பிரதியைப்
பார்த்து வாசித்தனர். நடிகர்களாகிப் படிப்பதுபோல நடித்தும் நடிப்பது போன்று பேசியும்
நாடக நிகழ்த்தலா? பிரதி வாசிப்பா? என்ற குழப்பத்தை எழுப்பியவரே நிகழ்வைச் செய்து
முடித்தார். ஆறு நாடகங்களின் சிறு பக்கங்கள் இணைந்த வாசிப்புப் பனுவல் புது
நாடகமாகத் தெரிந்தது. நாடக வாசிப்பு திடீர் என நிறுத்தப்பட்டபோது கட்டியக்காரன்
அரங்கில் தோன்றி “மீதக் கதை நாடக நூலாக வாசலிலே இருந்து வாங்கிப் படிச்சுக்குங்க”
எனக் கூறி முடித்த சூழல் நிகழ்வின் தொடர்ச்சிப் போக்கின் குறியீடாக அமைந்தது.
மேடைக்கு இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, கிரிஷ் கார்னாட், வெளி ரங்கராஜன்,
சண்முக ராஜா ஆகியோர் அழைக்கப்பட்டனர். இந்திரா பார்த்த சாரதி நூலை வெளியிட, ந.
முத்துசாமி நூலைப் பெற்றது நாடக நூல் வெளியீட்டு விழாக்களுக்கு ஓர் ஆவணமாக நின்றது.
பனுவலை வெளியிட்டுப் பேசிய இந்திரா பார்த்தசாரதி பாவண்ணனின் மொழிபெயர்ப்பைப்
பாராட்டினார். பிறகு நவீன நாடகம் பரவலாக இந்தியா முழுவதும் சென்றடைய சங்கீத நாடக
அகாதெமி ஆற்றிய பங்குபோல் சாகித்ய அகாதெமி நாடகப் பனுவல்களைக் கொண்டுசேர்க்கப்
பங்காற்றவில்லை என்றார். அவ்வாறு ஓர் அரசு செய்ய வேண்டியதைக் காலச்சுவடு போன்ற
பதிப்பகங்கள் செய்துகொண்டிருக்கின்றன எனத் தன் உரையை நிறைவு செய்தார். ந. முத்துசாமி
மீசையைத் தடவியவாறு நாடகக் குரலில் பேசத் தொடங்கினார். மெட்ராஸ் பிளேயர் என்னும்
நாடகக் குழு எழுபதுகளில் நிகழ்த்திய நாகமண்டலம் நாடகத்தைச் சென்னையில் பார்த்த
அனுபவத்தையும் அதை அடுத்து கிரிஷ் கார்னாடின் பனுவல்களின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு
பற்றியும் விவரித்துக்கொண்டே நடிகர்களின் வசன வெளிப்பாட்டு நிலைமையை விவரிக்கத்
தொடங்கினார். வட்டார வழக்கத்திற்கு உரிய பேச்சு மரபை இழந்து செயற்கை மரபில்
பேசுவதையும் தமிழ் ஆசிரியர்களும் பள்ளிகளின் மௌன வாசிப்பு முறைகளும் இளம்
தலைமுறையினரைப் பேசும் ஆற்றலில்லாதவர்களாக உருவாக்குவதையும் கடுமையாகச் சாடினார்.
பாவண்ணன் தமிழுக்கு முக்கியமான பணியைச் செய்திருக்கிறார் என்றும் இத்தகைய நாடகப்
பனுவல்களைப் பாடத்திட்டமாக வைக்க அரசுகள் முன்வர வேண்டுமென்றும் கூறினார். அடுத்துப்
பேசவந்த வெளி ரங்கராஜன், கிரிஷ் கார்னாட் தொன்மம், நாட்டார் வழக்காறு, புராணம்,
சமகால வாழ்வியல் எனப் பல்நிலைக் கூறுகளைக் கொண்ட பனுவல்களைப் படைப்பதில்
முதன்மையானராக விளங்குகிறார் என்றார். அடுத்துப் பேசிய சண்முக ராஜா, தேசிய நாடகப்
பள்ளியில் படித்த காலத்தில் சந்திக்க நினைத்த ஒரு வரைச் சகவிருந்தாளியாகக் காண்பது
எல்லை இல்லாத மகிழ்வளிக்கிறது என்றார். ஒரு நாடகத் தயாரிப்பு நிகழ்வில் பி. வி.
காரந்திடம் அரங்க மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது கிரிஷ்
கார்னாட் பற்றிக் காரந்திடம் கேட்ட செய்திகளை வரிசைப்படுத்தினார். பழமை மிகுந்த
கதைகளைக் கொண்ட கார்னாடின் நாடகங்கள் எப்போது நிகழ்த்தினாலும் சமகாலத்தின்
பிரச்சினைகளைப் பேசும் தன்மை உடையன என்றார்.
இறுதியாக ஏற்புரைக்காக ஒப்பனை இல்லாக் கூத்தன்போல் சிரித்த முகத்துடன் ஒலிவாங்கி
முன் கார்னாட் நின்றார். ஆங்கிலக் கவியாக வேண்டும் என்னும் கார்னாடின் விருப்பம்
யயாதி நாடகப் பனுவலை எழுதிய பின் மாறி நாடகப் படைப்பாளியாகிவிட்டேன் எனப் பேச்சைத்
தொடங்கினார். தன் ஒவ்வொரு நாடகப் பனுவலும் அது நிகழ்த்தப்படும் காலத்தின் சமூக
வெளிப்பாட்டைக் காட்டத் தவறியதில்லை எனச் சண்முகராஜா கூறியது போல் இயக்குநர்கள் பலர்
கூறிய செய்திகளைப் பதிவுசெய்தார். இந்தியாவின் அரசியல்சார்ந்த படைப்பாகிய துக்ளக்
மதம், அரசியல், வாழ்க்கை மூன்றுக்குமான போராட்டத்தைத் தெளிவுபட அமைந்திருந்த சூழலை
விளக்கினார். ஹயவதனா, பலிபீடம் ஆகிய பனுவல்கள் ஒற்றை நோக்கை மட்டுமே காட்டாது
பன்முகத் தன்மைகளை வெளிக்காட்டும் போக்கை உடையன என்றார். முடிவில் தமிழில்
மொழிமாற்றம் செய்த பாவண்ணன், அவருடைய நாடகங்கள் பற்றி விமர்சனங்கள் எழுதிவரும் கே.
மருள சித்தப்பா, காலச்சுவடின் நிர்வாக இயக்குநர் கண்ணன் மற்றும் நூல்
உருவாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். இதற்குப் பின்னர் கண்ணனின்
நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. இலக்கிய, நாடக ஆர்வலர்கள், வாசகர்கள் திரளாக
வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். அண்டை மொழியிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும்
ஒரு கலைஞனைச் சிறப்பாக வரவேற்கும் எளியதொரு கொண்டாட்டம் என்று இந்நிகழ்வை வேறு
பெயரிட்டு அழைக்கலாம். னீ
சி. கார்த்திகேயன் செம்மொழி உயராய்வு நிறுவனத்தில் நாடகத் துறையில் முதுமுனைவர்
ஆய்வை மேற்கொள்ளும் நாடகவியலாளர்.
|