|
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவ் ஆனந்த் சென்னை வந்திருந்தார். இரு கூட்டங்கள்.
ஒன்று சினிமாத் துறையினர் நடத்தியது. இரண்டாவது, கிட்டத்தட்டப் பொதுக்கூட்டம் போல.
அன்றுதான் சென்னையில் அவரால் படைக்கப்பட்ட ரொமான்சிங் வித் லைஃப் (வாழ்க்கையோடு
விளையாடியபடி) நூல் வெளியிடப்பட்டது. அதில் புகைப்படங்கள் இருந்தன. முன்னூறு பக்கப்
புத்தகத்தில் இருபது படங்கள்; மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட குறிப்புகள். நூலே
பொறுப்போடு எழுதப்பட்டிருந்தது. தேவ் ஆனந்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள்
இருந்திருக்கும். வாக்கு கொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது முப்பத்தைந்து
ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லை. ஆனால் புத்தகத்தில்
ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறைகூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு
இடமில்லை.
அவரை 1955இல் நான் பார்த்துச் சில வார்த்தைகள் பரிமாறிக்கொள்ள நேர்ந்த தருணங்களிலும்
அவர் அதே பண்புடன்தான் இருந்தார். நான் பணி புரிந்த ஜெமினி ஸ்டூடியோவுக்கு இருந்த
மூன்று தொலைபேசி இணைப்புகளில் ஒன்று என்னிடம் இருந்தது. ஒரு மேடைமீது என் மேஜை
நாற்காலி இருந்ததால் தொலைபேசியைப் பயன்படுத்த வருபவர்கள் நின்றுகொண்டுதான் பேச
வேண்டும். அவர் வந்தது ஜெமினியின் பெரிய படமான இன்ஸானியத்துக்காக. அது ஷெரிடன்
எழுதிய நாடகத்திலிருந்து பெறப்பட்டது என்றாலும் நான்கு மணிநேர பல்லடூரி பில்லா என்ற
தெலுங்குப் படத்தின் பிரதி அது. தெலுங்குப் படத்தில் நாகேஸ் வர ராவ், என். டி.
ராமராவ் என்ற நட்சத்திரங்கள். இந்தியில் அவர் களுக்கு இணையாகத் திலீப்குமார், தேவ்
ஆனந்த். அந்த இரு நட்சத்திரங்களும் சேர்த்து நடித்த ஒரே படம் இன்ஸானியத்தான். திலீப்
குமாரின் வசதிக்காகத் தேவ் ஆனந்த் வேறு பல படப்பிடிப்புகளை ஒத்திப் போட்டதாகத்
திலீப்குமார் கூறியிருக்கிறார். போட்டா போட்டி நிலவும் துறையில் தேவ் ஆனந்த் பல
தியாகங்கள் செய்திருக்கக்கூடும்.
இருபத்தைந்து வயது இளைஞனாக இருந்தபோது அவர் மனதார மணக்க விரும்பிய பெண் ஒரு முஸ்லிம்.
பெண்ணின் பாட்டி முடியவே முடியாது என்று கூறிவிட்டார். தேவ் ஆனந்த் குடும்பமே துளசி
ராமாயணத்தைத் தெய்வமாக வணங்குவது. மேலும் அந்தப் பாட்டி முஸ்லிம் பெற்றோருக்குப்
பிறந்தவன் தான் வீட்டு மருமகனாக வர முடியுமென்றும் கூறிவிட்டார். இந்த மாதிரிச்
சங்கடம் கிஷோர் குமாருக்கும் நேர்ந்தது. அவர் மதம் மாறினால் போதும் என்று
கூறிவிட்டார்கள். ஆனால் அப்துல்லாவும் மதுபாலாவும் ஐந்து ஆண்டுகள்கூடச் சேர்ந்து
வாழவில்லை.
தமிழில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என மூன்று நட்சத்திரங்கள்
இருந்ததுபோல இந்தியிலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மூவர்: திலீப்குமார்,
ராஜ்கபூர், தேவ் ஆனந்த். மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் தொடக்கம்.
ஆனந்த் சகோதரர்கள் இலட்சியங்களோடு சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்கள். அன்று முற்
போக்கு அணியின் கலை அமைப்புக்கு ‘இப்டா’ அல்லது இந்தியன் பீப்பில்ஸ் தியேட்டர்
அசோஷியேஷன் என்று பெயர். இந்த அமைப்பு நூற்றுக்கணக்கில் நாடகங்களை அரங்கேற்றியது.
வட இந்தியாவின் முக்கியமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் ‘இப்டா’வில் அங்கத்தினர்கள்.
இந்த அமைப்பு சென்னைக்கு ஒருமுறை வந்தது. மிகக் குறைந்த அரங்க ஏற்பாட்டுடன் அவர்கள்
ஏராளமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் காட்டுவார்கள். இவர்களுடைய பாணி சேவா ஸ்டேஜ்
குழுவினரால் பின்பற்றப்பட்டாலும் தமிழ் நாடகங்கள் பொதுவாக ‘மேடைப் பொருள்க’ளை
நிறையப் பயன்படுத்தின. ‘இப்டா’ ஒரே ஒரு திரைப்படத்தை எடுத்தது. அதில்தான் தேவ்
ஆனந்தின் திரைப்பட வாழ்க்கை தொடங்கியது.
தேவ் ஆனந்துக்கு உண்மையான வாய்ப்பை அசோக்குமார்தான் அளித்தாகக் கூறுகிறார்கள்.
ஜித்தி என்ற அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். அன்றைய இந்தி சினிமாவின்
தியாகய்யா என்று சொல்லக்கூடிய கேம்சந்த் பிரகாஷ் என்பவர் இசை அமைத்திருந்தார். சைகல்
நடித்த தான்சன், மதுபாலா ஒரு நட்சத்திரமான மஹல் முதலிய படங்களுக்குக் கேம்சந்த்
பிரகாஷ்தான் இசை. ஆனால் ஆனந்த் சகோதர்கள் தொடங்கிய நவ்கேதன் என்ற அமைப்புதான் தேவ்
ஆனந்துக்கு பாஜி என்னும் படத்தின் மூலம் மிக முக்கியமான வாய்ப்பைத் தந்தது.
ஆனந்த் சகோதரர்களுக்குப் பெரிய நடிகர்களைவிடத் துணைப்பாத்திரங்களில்
நடிப்பவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் என்ற கொள்கை. அந்த விசுவாசம்
கடைசிவரை இருந்தது. இந்தியாவில் முதல் திரைப்படப் பயிற்சிப் பள்ளியை இவர்கள்
நடத்தினார்கள். சீனப் படையெடுப்பைப் பின்னணியாகவைத்துச் சேதன் ஆனந்த் ஹக்கீகத்
என்னும் படம் எடுத்தார். இதற்குப் பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் இந்தித்
திரைப்படத் துறையினர் இன்றும் பெயர் சொல்லியே இப்படத்தை
நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தேவ் ஆனந்தின் புகழ்பெற்ற ஹம் தோனோ படமும் போர்ப்படை வீரர்கள் இருவரின் கதையைச்
சொல்வதுதான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது இப்படி ஒரு சிக்கல் இங்கிலாந்தின் பல
சிற்றூர்களில் நடந்தது. நண்பர்களாக இருந்தவர்கள் அவர்களுடைய அந்தரங்கங்களை எல்லாம்
ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். உயிருடன் ஊர் திரும்புபவன் இந்த
அந்தரங்கங்களைத் தவறாகப் பயன்படுத்தமாட்டான் என்பது என்ன நிச்சயம்? ஒருவன்
இறந்துவிட்டான் என்ற அடிப்படையில் இன்னொருவன் ஏதேதோ குழப்பங்ளை ஏற்படுத்திவிடுவான்.
ஹம் தோனோ படத்தில் உருவ ஒற்றுமையுடைய இருவர்களுக்கு நேர்வது ஒழுக்க நெருக்கடி.
ஆனந்த் சகோதரர்கள் பிறந்த மண்ணைவிட்டு வேரிடத்தில் குடியேற வேண்டிய நிர்பந்தத்தைச்
சந்தித்தவர்கள். இழந்தவற்றின் மதிப்பை லேசில் அளவிட முடியாது. இப்படிப்பட்ட
விபத்துக்குப் பிறகு எப்படி இவர்களுக்குத் தெய்வ நம்பிக்கையும் தர்ம வாழ்க்கையில்
உறுதியும் இருக்க முடியும்? ஹம் தோனோ இது சாத்தியம் என நிரூபிப்பது போன்ற படம்.
அசோக்குமார் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்; தயாரிப்புகளுக்கு
உதவியிருக்கிறார். அவரைச் சூழ்ச்சிக்காரனாகவும் நிராதரவான பெண்ணை
வாட்டிவதைப்பவனாகவும் ஆள் மாறாட்டம்செய்து திருடுபவனாகவும் பாத்திரமேற்க வைத்தது
ஆனந்த் சகோதரர்களின் ஜுவல் தீஃப் (நகைத்திருடன்). சாதாரண நகையல்ல. அரச
குடும்பத்தினரின் நகைகள். இப்படத்தில் அந்தப் பாத்திரம் எந்தளவு கயமை கொண்டது என்பது
கடைசி ஐந்து நிமிடங்களில்தான் தெரியவரும். இதுவும் தேவ் ஆனந்தின் புகழ்பெற்ற
படங்களில் ஒன்று. முகத்தோடு ஒட்டி ஆள் மாறாட்டம் செய்யக்கூடிய முகமூடி இந்தியப்
படங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது இதில்தான். இதில் பூடான் அரசவையில்
வைஜயந்திமாலா ஆடும் நடனம் புகழ்பெற்றது. சுமார் நூறுபேர் ஆடுவார்கள். ஒரு மேதையின்
ஓவியம்போல இருக்கும். இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த இத்திரைப்படம்
இசையிலும் நடனத்திலும் திரைக்கதை சொல்வதிலும் நாம் இன்று எவ்வளவு இழந்துவிட்டோம்
என்பதை விளக்கும்.
கடைசிவரை நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பண்பையும் இழக்காமல் தேவ் ஆனந்த் 2011
டிசம்பர் 4 அதிகாலை லண்டனில் உயிரை விட்டிருக்கிறார். உயிரற்ற தன் முகத்தைப்
புகைப்படம் எடுக்கக் கூடாது என அவர் முதலிலேயே கூறியிருக்கிறார். இருக்கும்போதுதான்
தோற்றம் தேவை, இறந்தபிறகு என்ன என்று கேட்கலாம். ஆனால் பொதுவாழ்க்கையில் அரை
நூற்றாண்டுக் காலத்துக்கு ஓர் உணர்வை நினைவுபடுத்திய கலைஞனை நாம் கௌரவிப்பது அந்தத்
தோற்றத்தைப் போற்றுவதுதான்.
என்னதான் சிறந்த திரைப்படங்கள் என்றாலும் அவை போல முதுமையடைவதும் வேறெதுவும்
கிடையாது. தேவ் ஆனந்துடைய படங்களும் இந்த விதிக்குட்பட்டவைதான். அவர் இலக்கியத்தில்
பட்டம் பெற்றவர். ஆனந்த் சகோதரர்களும் இலக்கியம் பயின்றிருக்கிறார்கள். மூத்த, இளைய
சகோதரர்கள் எல்லோரும் பல ஆண்டுகள் முன்பே மறைந்துவிட்டார்கள். தேவ் ஆனந்த்
ஒருவர்தான் சுயசரிதம் நூலை எழுதியவர். நூல் என்று விசேஷமாக அதிகம் சொல்வதற்கில்லை.
ஆனால் நூலாசிரியர் எந்த விதமான மனக்கசப்பும் இல்லாமல் எழுதியிருப்பதை உணரலாம். ரஜினி
காந்த் தன்னுடைய பாபா படம் சரியாக ஓடாதிருக்க முயற்சி எடுத்த ஓர் அரசியல் கட்சியின்
தலைவர் பெயரைச் சொல்லி, “நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? ஏன் என் படத்தின்
வாய்ப்பைப் பறித்தீர்கள்?” என்று பகிரங்கமாகக் கேட்டார்.
கைடு என்ற படத்துக்குத் தேவ் ஆனந்துக்கு அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படத்தின்
அடிப்படையாக அமைந்த நூலின் ஆசிரியர் அத் திரைப்படம் பற்றி எழுதிய கட்டுரைகளால் கைடு
ஆங்கிலமொழிப் படம் பெரும் தோல்வி அடைந்தது. தேவ் ஆனந்த் மிகுந்த ஆர்வத்துடன் அந்த
நூலின் உரிமைகளை வாங்கி ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரித்தார்.
ஆங்கிலமொழிப் படத்துக்கு இணையாசிரியராக அவர் அமர்த்தியவர் நோபல் பரிசு பெற்ற ஆசிரியை
பெர்ல்பக். கைடு இந்திப் படம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிறந்த ஐந்து இந்திப்
படங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. ஆனால் தேவ் ஆனந்த் ஆங்கில வடிவத்தை
முற்றிலுமாகப் ‘புதைத்து’விட்டார். அவருக்கு அந்த அனுபவம் பொருளிழப்புடன்
மனவருத்தத்தையும் தந்திருக்கும். ஆனால் அதைப் பற்றிக்கூட அவருடைய சுயசரிதையில்
குறைகூறாமல் எழுதியிருக்கிறார்.
இந்தியத் திரைப்படங்கள் பேச ஆரம்பித்த நாளிலிருந்தே தனி பாணியை உருவாக்கின. அதில்
பாடல்களுக்கு இடம் உண்டு. சில அயல் படங்கள் இசைப்படங்கள் என்ற பெயரில்
தயாரிக்கப்பட்டவை. அவற்றில் பாடல்கள் உண்டு. ஆனால் அவை திரைக்கதையை எடுத்துச்
செல்லமாட்டா. அதிலும் குறிப்பாக இந்தியப் படங்களில் ‘மாண்டேஜ்’ காட்சிகளில்
பாடல்களைப் பயன்படுத்துவதில் இந்திய டைரக்டர்கள் சிறந்தவர்கள். கைடு படத்திலும்
அப்படியொரு ‘மாண்டேஜ்’ உண்டு. தேவ் ஆனந்த் படங்களில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்.
எந்தப் பாடலும் சோடை போகாது. ஓர் அடிப்படைக் காரணம், போலி உணர்வுகள் - அதாவது
நாட்டைச் சீர்ப்படுத்துகிறேன், சாஸ்திரிய இசையை அல்லது நடனத்தை நிலைநாட்டுகிறேன்
என்பது போன்ற பாவனைகள் - கிடையாது.
கதை, நாவல் முதலியவற்றைத் திரைப்படமாக எடுக்கும்போது சில மாற்றங்கள் தவிர்க்க
முடியாதவை. கைடு படத்தில் தேவ் ஆனந்த் அதைத்தான் செய்திருந்தார். நூல்களை
விமர்சிப்பவதுபோலத் திரைப்படங்களை மதிப்பிடக் கூடாது.
தேவ் ஆனந்த் காலப்போக்கில் மறந்துவிடப்படுவாராயினும் அவருடைய 65 ஆண்டுத்
திரைவாழ்க்கை பல நுண்ணிய விவாதங்களுக்கு இடமளிக்கும். தனிப்பட்ட நடிகனாக அவர்
இந்திரா காந்தியின் ‘எமர்ஜன்சி’யை எதிர்த்தார். விளைவு தூர்தர்ஷன் அவருடைய படங்களைத்
தடைசெய்தது.
இந்திய வெகுஜனப் படங்களைக் கடுமையாக விமர்சிக்கும் நடிகர் நஸிருத்தீன் ஷா தேவ்
ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்! ‘அவருடைய படங்களைப் பார்த்தும்
பாடல்களைக் கேட்டும்தான் நான் வளர்ந்தேன்’ என்று கூறியிருக்கிறார். நஸிருத்தீன்
ஷாவின் நடிப்புத் திறனுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுத் திரைப்படங்கள் உள்ளன. மேடை
நடிப்பிலும் அவர் விசேஷத் திறமை படைத்தவர். காந்திக்கு எதிராகக் காந்தி என்ற நாடகம்
சென்னையில் நடத்தப்பட்டபோது அதில் நஸிருத்தீன் ஷா காந்தியாக நடித்தார். அநேகமாக
இரண்டு மணிநேரமும் மேடையில் காந்தியாகக் காட்சியளித்தபடி இருந்தார். பன்றி
மேய்ப்பவனாக, 1857 புரட்சியில் ஆங்கிலேயர்களைக் கொன்றுகுவிப்பவனாக, காவல்
அதிகாரியாக, ஆயுள் கைதியாக நஸிருத்தீன் நடித்திருக்கிறார். இவருக்கு தேவ் ஆனந்த்
ஆதர்சமாக இருந்திருக்கிறார்!
தான் முதலில் மணக்க விரும்பிய பெண் 2004இல் இறந்தபோது தேவ் ஆனந்த் இரங்கல்
தெரிவித்தார். அந்தப் பெண் மணமே புரிந்துகொள்ளவில்லை. அவருடைய பாட்டி, அம்மா, அத்தை
எல்லோரும் போயாயிற்று. தன்னந்தனியாக மாளிகையில் காலம் கடத்திய அவள் இறந்ததே ஒரு நாள்
கழித்துத்தான் தெரிந்தது.
சுரையா என்னும் பெயரில் ஒரு காலத்தில் கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களின் செல்லப்
பெண்ணாக இருந்த அவளுடைய உடலைத் தேவ் ஆனந்த் பார்க்க விரும்பவில்லை.
தன்னுடைய உடலையும் யாரும் பார்க்க முடியாதபடி தேவ் ஆனந்த் வெளிநாட்டில்
உயிரைவிட்டார். இறுதிச் சடங்குகள் லண்டன் நகரிலேயே நடத்தப்பட்டுவிட்டன. அவருடைய
திரைப்படங்களில் கூசவைக்கும் விரசம் இருக்காது. சாவிலும் தன் இந்திய ரசிகர்களை மனம்
கூசவைக்காது தன் மரணத்தை அமைத்துக்கொண்டு விட்டார். றீ
|