|
உண்மைச் சொல்லிவிடுகிறேன். சென்ற ஆண்டு நான் வாங்கிய புத்தகங்களில் எல்லாவற்றையுமே
முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை வாசித்ததாகச் சொல்லமாட்டேன். பத்தாம் பக்கத்திலும்
பாதியிலும் நிறுத்திவிட்ட நூல்கள் அநேகம். அவற்றை ஏன் அரைவாசியில் விட்டுவிட்டேன்
என்பதைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம். ஆனால் இப்போதைக்கு நான் முழுக்க வாசித்து
முடித்த நூல்களில் ஐந்தைப் பற்றி இங்கே எழுதுகிறேன். இவை என்னுடைய சொந்தத் தெரிவுகள்.
இவற்றைச் சென்ற ஆண்டின் சிறந்த நூல்களாகச் சொல்லமாட்டேன். இவற்றை நான் இங்குச்
சேர்த்திருப்பதற்கான காரணங்களையும் கூறியிருக்கிறேன். இந்தப் பட்டியலை நீங்கள்
படிக்கும்போது இரண்டு காரியங்கள் உங்களுக்குப் புலனாகும். ஒன்று இவை எல்லாம்
ஆங்கிலேயரல்லாதவர்களால் எழுதப்பட்ட கதைகள். மற்றது இந்தப் புத்தகங்கள் எல்லாம்
ஒருவிதத்தில் தேடுதல் பற்றியவை.
எகிப்திய நாவல்
நாவலின் பெயர்: சைனா (Zeina). எழுதியது யார்? நவ்வல் எல் சாத்வி (Nawal el Saddawi).
எகிப்தியப் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி. வைத்தியர், உளநோய் மருத்துவர், கல்வியாளர்.
அவருடைய அரசியல் கருத்துகளுக்காகப் பழைய எகிப்திய ஜனாதிபதி அன்வார் அல் சாத்தால்
சிறைவைக்கப்பட்டவர். பெண்களின் பாலியல் பிரச்சினை பற்றி ஆராய்ந்தவர்.
இங்கே இடம்பெறக் காரணம்
பொதுவாழ்வில் போராட்டத்திற்கு எடுத்த விஷயங்களை நவ்வல் எல் சாத்வி தன்னுடைய
கதாபாத்திரங்கள் மூலம் இந்த நூலில் உயிரூட்டுகிறார். அராபியச் சமூகத்தில்
முக்கியமாக இஸ்லாமியப் பெண்கள் நல்ல நிலைமையிலும் படித்தவர்களாயிருந்தாலும்
அவர்களின் வலுவற்ற தன்மை, புனித நூல்களைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தியும்
கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்கும் மதகுருக்களின் மாய்மாலம், பதவியிலிருக்கும்
ஆண்கள் மக்களை - முக்கியமாகப் பெண்களை - இறுக்கி முடுக்கும் தன்மை நாவலில் மிகத்
துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்குக் கதைச் சுருக்கம்
சைனா இந்த நாவலின் முக்கியப் பாத்திரமல்ல. ஆனால் அவள் மற்ற பாத்திரங்கள்மீது
ஏற்படுத்தும் பாதிப்பில்தான் கதை சொல்லப்படுகிறது. இன்னுமொரு முக்கியப் பெண்
கதாபாத்திரமான பாடூருக்கும் அவளுடைய பல்கலைக்கழகக் கூட்டாளியான நாசீமிற்கும் மிகு
காமவெறி ஏற்பட்ட இரவின் விளைவால் பிறந்த குழந்தைதான் சைனா. அரசியல் போராளியான நாசீம்
காவல் துறையினரால் கைதுசெய்யப்படுகிறான். தனியாக விடுபட்ட பாடூர் குழந்தையைக் கைரோ
தெருவில் விட்டுவிடுகிறாள். பிறகு சங்கடமான ஒரு விவாக உறவில் சார்கரியட் என்ற
ஆர்வமிக்க இதழாளருடன் சிக்கிக் கொள்கிறாள். இவர்களுக்கு மக்கீடா என்ற ஒரு பெண்
குழந்தை பிறக்கிறது. இந்த மக்கீடாவும் சைனாவும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்,
நட்புகொள்கிறார்கள். சைனா எகிப்தின் பிரபலப் பாடகியாகப் புகழடைகிறாள். மக் கீடா
அவளுடைய தாய் பாடூரைப் போல் இலக்கிய விமர்சகியாகிறாள். இதற்கிடையில் பாடூர் எழுதிய
சுயசரித நாவல் மர்மமாகக் காணாமல் போய்விடுகிறது. இது ஏதோ தமிழ்ப் படத்திற்கு
எழுதப்பட்ட கதைபோல் தெரிகிறது. ஆனால் இது உங்கள் அபிமானத் திரை அரங்கில் வருவது
சாத்தியமல்ல. இந்தக் கதையில் வரும் முக்கியப் பாத்திரங்கள் எல்லாம் பெண்கள். ஆகையால்
அரிவாளும் சரிகை வேட்டி கட்டிய ஆண் நாயகர்களைத் தொழுகை செய்யும் இந்நாளில் இது
உங்கள் வெள்ளித் திரைகளை அலங்கரிக்க வாய்ப்பில்லை.
மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பின் நாவலுக்குள் நுழைவேனா?
நவ்வல் எல் சாத்வி தான் சொல்லவந்த விஷயத்தை நிரூபிக்கத் திருக்குரானிலிருந்து ஒரு
நீண்ட பகுதியை எடுத்துக்காட்டாகக் கையாண்டிருக்கிறார். இந்தப் பக்கங்களில் மதம்
பற்றியும் குருமார் பற்றியும் அவருடைய கடுகடுத்த கருத்துகளைத் திரும்பவும்
வாசிக்கலாம்
பாதியில் வாசிப்பதை நிறுத்திவிடக்கூடிய அமைப்பு, நடை, கருத்தியல் கோளாறுகள்?
பொழுதுபோக்குக்காக மட்டும் வாசிப்பவர்களுக்கு நவ்வல் எல் சாத்வின் பெண்ணுரிமை ஆதரவு
பற்றிப் பிரதியில் சிதறிக்கிடக்கும் வலிந்த புகுத்தீடுகள் இடைஞ்சலாயிருக்கக்கூடும்.
மேலும் அத்தியாயங்கள் இல்லாமல் தொடர்ந்து கதை போய்க்கொண்டிருப்பது உங்கள் கண்களின்
அழுத்தத்தை அதிகப்படுத்தலாம். கதாபாத்திரங்கள் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுவது,
ஒரு பக்கத்திலேயே கதை முன்னுக்கும் பின்னுக்கும் நகர்வது ஆகியவற்றால் நீங்கள்
கொஞ்சம் விழிப்புடன் இல்லாவிட்டால் குழப்பமாக இருக்கும்.
என்னுடைய கடைசி யோசனை
மேலே சொன்ன இந்தச் சின்னக் குறைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு நாவல் தரும் செய்தியைக்
கவனியுங்கள். இந்த நாவல் எகிப்தியப் புரட்சிக்கு முன் எழுதப்பட்டது. ஆனால் இந்தப்
புரட்சிக்கான தடயங்கள் இந்த நாவலில் உண்டு. சென்ற வசந்தத்தில் நீங்கள் தொலைக்
காட்சியில் பார்த்த எகிப்திய எழுச்சியில் பெண்களின் பங்கைப் பார்த்திருப்பீர்கள்.
முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின் பெண்கள் ஒதுக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும்.
பெண்கள் ஏன் தள்ளி வைக்கப்பட்டார்கள் என்று தெரிந்துகொள்ள இந்த நாவல் உதவும்.
காணொளிக் காட்சிகளுக்குப் பின்னால் புதைந்திருக்கும் எகிப்தியத் தந்தைமை ஆதிக்க
(patriarchal) உலகம் மிகவும் பொல்லாங்கானது.
அமெரிக்க ஆங்கில நாவல்
நாவலின் பெயர்: சரணடைதல் (The Submission) எழுதியது யார்? Amy Waldman. இவர் New
York Times கிழக்கு ஆசியப் பிரிவில் வேலை பார்த்திருக்கிறார். இதற்கு முன்பு சில
சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். வியத்நாமில் உயிர் துறந்த படைத் துறை வீரர்
நினைவுச் சின்னத்திற்கான போட்டியில்
Maya Lin என்ற அமெரிக்க ஆசியப் பெண்
கலைஞர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பம் சிறந்தது எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே
மாதிரி 9/11 தாக்குதலில் இறையானவருக்குக் கட்டப்படவிருக்கும் நினைவாலயத்திற்கு ஒரு
அமெரிக்க முஸ்லிம் அனுப்பீடு செய்த உருவரைப் படம் தெரிவுபட்டிருந்தால் என்ன
மாதிரியான எதிர் விளைவுகளை எற்படுத்தும் என்ற யோசனைதான் இந்த நாவலை எழுதத் தூண்டியது
என்று கூறுகிறார்.
இங்கே இடம்பெறக் காரணம்
9/11 பற்றிய நாவல்களில் இது சற்று வித்தியாசமானது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதால்
நேரடியாகப் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதர்களின் துயரம், கடும்வெறுப்பு மற்றும் இந்த
நிகழ்ச்சியால் ஏற்பட்ட அரசியல் விளைவுகள், ஊடகப் புரளிகள் ஆகியவை வழமையான
பரிமாணத்தில் பார்க்கப்படாமல் பல நேர்மாறுபாட்டுக் கோணங்களில் நாவலின் பல
பாத்திரங்களுக்கூடாகப் பரிசீலிக்கப்படுகிறது. இரட்டைக் கோபுரங்கள் நின்ற சூன்ய-
நிலத்திற்கு (Ground -Zero) அருகே இஸ்லாமியக் கலாச்சார மையம் வரப்போகிறது என்ற
செய்தி எழுப்பிய புரளிக்கு முன் இந்த நாவல் எழுதப்பட்டது. ஆனால் இந்தத் தகவல்
ஊக்குவித்த அன்னியர் பற்றிய வெறுப்பு, இஸ்லாமியப் பீதி பற்றி இந்நாவல் முன்னதாகவே
பதிவுசெய்கிறது.
தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்குக் கதைச் சுருக்கம்
நியூயோர்க் நகரில் 9/11இல் இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய ஒரு நினைவாலயம் உருவாக்கப்
பல கட்டடக் கலைஞர்களிடம் இருந்து கட்டடத் திட்டங்கள் வரவழைக்கப்படுகின்றன. நடுவர்
குழு மிகப் பொருத்தமான விண்ணப்பத்தைத் தெரிந்தெடுக்கிறது. இங்கே தான் பிரச்சினை
ஆரம்பிக்கிறது. தகுதியான கட்டடக் கலைஞர் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது
பெயரும் மதமும் தவறானவை. வெற்றியடைந்த கட்டடக் கலைஞர் சமயப் பற்றில்லாத அமெரிக்க
முஸ்லிம். அவர் பெயர் முகமது கான்.
இந்த முடிவை 9/11இல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்,
அமெரிக்க ஊடகம் எப்படி நடந்துகொண்டது, அரசியல்வாதிகள் எப்படித் தங்கள் அரசியல்
ஆதாயத்திற்காகப் பாவித்துக்கொண்டார்கள், முஸ்லிம் மத சங்கங்கள் எப்படித் தங்கள்
கருத்தை நிலை நிறுத்த முகமது கான் விவகாரத்தைச் சாதகமாக்கிக்கொண்டார்கள் என்பதை
நாவல் சித்தரிக்கிறது.
மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பின் நாவலுக்குள் நுழைவேனா?
நிச்சயமாக. நகர் மண்டபத்தில் நடக்கும் விசாரணைக் கூட்டத்தில் இன, மத வெறியர் ஆளுக்கு
ஆள் விஞ்சிக்கொண்டு வெளிப்படுத்திய துவேஷத்தில் மண்டபமே படுசூடாக இருக்கிறது. அந்த
வெப்பத்தில் முட்டை பொரித்திருக்கலாம். உணர்ச்சிவசமான அந்தக் கட்டத்தில் வங்காள
தேசப் பெண்ணான அஸ்மா அன்வார் அமெரிக்க வாழ் முஸ்லிம்களின் எண்ணத்தை மிக அமைதியாக
எடுத்துச் சொல்கிறாள். இவளுடைய கணவன் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் மடிந்தவன்.
சாதாரண முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முக்கியமாகச் சமயத்தை
அரசியல் காரணங்களுக்காகப் பாவிப்பவர்கள் படிக்க வேண்டிய உரை ஒன்று.
பாதியில் வாசிப்பதை நிறுத்திவிடக்கூடிய அமைப்பு, நடை, கருத்தியல் கோளாறுகள்?
சம்பவம் நடந்து 20 வருடங்களுக்குப் பின் நடப்பதை விவரிக்கும் முடிவுரையில்
காணப்படும் மட்டற்ற உணர்ச்சிக் கனிவு தமிழ்ப் படக் கதா நாயகர், நாயகிகள், அம்மாக்களை
நினைவூட்டுகிறது. 280 பக்கங்களுக்கு மேல் உணர்ச்சிவயப்படாத நடை கடைசி இருபது
பக்கங்களில் அதீத உள எழுச்சியால் கசிந்து ஒழுகிறது.
என்னுடைய கடைசி யோசனை
இந்த நாவல் கட்டாயம் அமெரிக்க வணிக சினிமாவின் கருணையால் திரைக்கு வரும். இந்தப்
பிரதியில் ‘இஸ்லாமின் பிரச்சினையே இஸ்லாம்’ என்ற வசனம் இரண்டுமுறை வருகிறது. இதை
மிகவும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சினிமா முதலாளிகள் இந்தக் கதையைப் பாழாக்கி
இஸ்லாமிய வெறுப்புப் படமாக எடுக்க வாய்ப்புண்டு. அதற்கு முன் நாவலை வாசிப்பது உங்கள்
இலக்கிய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆகையால் உங்களுக்கு அருகிலிருக்கும் புத்தகக்
கடைக்கு நடக்காதீர்கள். விரைந்து செல்லுங்கள்.
அமெரிக்க ருஷிய
எழுத்தாளரின் நாவல்
நாவலின் பெயர்: மிக வருத்தமான நிஜக் காதல் கதை (Super Sad True Love Story) எழுதியது
யார்? கேறி ஷ்ட்யின்கார்ட் (Gary Shteyngart) இவர் இரண்டாம் தலைமுறை அமெரிக்க
ருஷியர். இவருடைய பெற்றோர் காசையும் கடவுளையும் தேடி ருஷியாவிலிருந்து
அமெரிக்காவுக்குக் குடியேறியவர்கள். ஏற்கனவே இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். அவை
ருஷிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை மிகுந்த எக்களிப்புடனும் கோமாளித்தனத்துடனும்
விவரிக்கிறது. இதுவே இவரை இலக்கிய வட்டாரங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளக்
காரணமாயிருந்திருக்கலாம். இந்தப் புதிய நாவல் அமெரிக்க வல்லரசின் வல்லமை குறைந்தால்
என்ன நடக்கும் என்ற கதாசிரியரின் கற்பனை.
இங்கே இடம்பெறக் காரணம்
இந்த நாவலின் கதாநாயகன் லெனினைப் போல் அச்சுப் பிரதி பிரியன். எல்லாமே
இலக்கமாக்கப்பட்டு தாள்கள் இல்லாமல் äppärät என்ற மின்சாதனத்தினூடாகத்
தொடர்புவைத்துக்கொள்ளும் நாட்களில் அச்சுப் புத்தகங்களின் நம்பிக்கை உள்ளவனாக லேனி
இருக்கிறான். உலகின் மூலை முடுக்கில் உள்ள கேவலமான செய்திகளை äppärät
சேகரித்துவைத்திருக்கிறது. ஆனால் என்னுடைய புத்தகங்கள் ஆசிரியரின் மனத்தை
மட்டுந்தான் அறிந்திருக்கின்றன என்று அங்கலாய்க்கும் இவன் அச்சுப் புத்தகங்களைப்
பாதுகாப்பது மட்டுமல்ல எதிர்காலத்தில் அவற்றை மறுபடியும் பிரபலமாக்கத்
தீர்மானிக்கிறான். மின்நூல்களின் விற்பனை அச்சுப் புத்தகங்களைவிட அதிகரிக்கும் இந்த
நாட்களில் இது சாத்தியமானதல்ல. இன்றைய அமெரிக்காவின் நுகர் கலாச்சாரம், இணையத்தின்
ஆக்கிரமிப்பு, வடிவமைக்கப்பட்ட உடுப்புகள் பற்றி அங்கதமான பார்வைகள் நிறைய உண்டு.
இன்று பிரபலமான சில பெயர்ச்சீட்டு ஆடைகளை (labelled clothes) கேலிசெய்யும் வண்ணம்
அவர் கொடுத்த பெயர்களைப் பாருங்கள் Total Surrender, Ass Doctor, and Juicy Pussy.
தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்குக் கதைச் சுருக்கம்
கதை எதிர்காலத்தில் நிகழ்கிறது. அமெரிக்காவின் அரசியல் பலம் தளர்ந்திருக்கிறது.
சீனர்கள்தாம் இப்போது அகிலத்தை ஆள்கிறார்கள். சனங்களின் கைகளில் äppärät என்ற கருவி
இருக்கிறது. இது இப்போது இருக்கும் இ-தட்டு (ipad), சாமர்த்திய தொலைபேசிகளைவிட
(smart phones) மிக வலுவானது. எல்லா அலுவல்களும் இப்போது இணையம் மூலந்தான் புனல்
(stream) செய்யப்படுகின்றன. மக்கள் கதைப்பதைத் தவிர்க்கிறார்கள். வாசிப்புப் பழக்கமே
இல்லை. எல்லாமே இந்த äppärät மூலம் இயக்குவதால் மக்கள் அவர்களுடைய தனித்தன்மையையும்
அந்தரங்கத்தையும் ஏன் மானிடத்தையும் இழந்துவிடுகிறார்கள். இதுவரை நீங்கள் வாசித்தது
இது ஏதோ ஒரு அரூபமான விஷயங்கள் பற்றிய ருஷிய நாவல்போல் தென்படலாம். ஆனால் இந்த
நாவலுக்கு உத்வேகம் கொடுப்பவர்கள் லேனி என்ற அமெரிக்க ருஷியரும் யூனிஸ் என்ற
அமெரிக்கக் கொரியன் பெண்ணும். இவர்களுக்கிடையே நிகழும் காதலின் பின்னணியில் கதை
சொல்லப்படுகிறது. இருவருமே இரண்டாம் தலைமுறைக் குடியேறிகள். லேனி மத்திய வயதான
வழுக்கைத் தலையன். யூனிஸ் அழகிய மாது. இவள் கணினி உலகின் கன்னிகை. அவளுடைய வாழ்வின்
காரியங்கள் முழுக்க இணைய உலகம் மூலந்தான் நடைபெறுகின்றன. லேனி பழைய பஞ்சாங்கம்.
இன்னமும் காகிதங்களையும் புத்தகங்களையும் நம்பியிருக்கிறான். பாதுகாப்பில்லாத இந்த
உலகில் பத்திரமான உறவை இவர்கள் இருவரும் எப்படி உருவாக்க முயல்கிறார்கள் என்பதுதான்
கதை.
பாதியில் வாசிப்பதை நிறுத்திவிடக்கூடிய அமைப்பு, நடை, கருத்தியல் கோளாறுகள்?
நாவலில் ஊரிப்பட்ட தலைப்பெழுத்துச் சொற்கள் (acronym) உண்டு. ஆகையால் முதல்முறை
படிக்கும்போது சரியாக மனத்தில் குறித்து வைக்காவிட்டால் மறுபடியும் அந்த
முதலெழுத்துப் பெயர் வார்த்தைகள் வரும்போது திணற வேண்டியிருக்கும்.
மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பின் நாவலுக்குள் நுழைவேனா?
யூனிஸின் அம்மாவின் கொச்சை ஆங்கில மின்னஞ்சல்கள், லேனியின் எண்ணங்களைப்
பதிவுசெய்யும் குறுகுறுப்பான நாட்குறிப்புகள் மற்றும் பிரதியில் வரிக்குவரி பொதிந்து
கிடக்கும் நகைச்சுவைக்காகவே மறுபடியும் வாசிக்கலாம். இவற்றைவிட இன்னுமொரு காரணமும்
உண்டு. எந்த அங்கதமுமே அதிகாரம் செலுத்துகிறவர்களை அல்லல்படுத்தும்;
காயப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும். இந்த நாவலில் இவை இரண்டும் நிறையவே உண்டு.
என்னுடைய கடைசி யோசனை
நம்முடைய வாழ்வில் தினமும் சந்திக்கும் வணிகக் கலாச்சாரத்தின் சூறையாடும் உத்திகள்,
பெரிய-அண்ணனின் கடுங்கண்காணிப்புகள், இணையத்தின் உபாயங்கள் என்ற இந்தக் கனமான
விஷயங்களைக் கேலியாகவும் விளையாட்டாகவும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இதைப்
படியுங்கள்.
சீன நாவல்
நாவலின் பெயர்:
கொழுத்த ஆண்டுகள் (The Fat Years). எழுதியவர் யார்? சான் கூன்சுங்
(Chan Koonchung) ஊடகத்தில் பல ஆண்டுகள் வேலைசெய்தவர். பசுமை மற்றும் சுற்றுப்புற
அரசியலில் அக்கறையும் ஈடுபாடும் உடையவர்.
இங்கே இடம்பெறக் காரணம்
சீனா அரசால் தடைசெய்யப்பட்ட நாவல் என்ற ஒரு காரணமே போதும். சீன ரகசிய
இயக்கத்தவர்களிடையே அதிகம் கைமாறப்பட்ட நாவல் இது. இன்றைய சீனாவின்
வல்லரசுத்தன்மையையும் ஆட்சியாளர்கள் எப்படிப் போலியான மகிழ்ச்சியை உற்பத்திசெய்து
மக்களை மயக்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள் என்பதையும் அறிய
விரும்புகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது.
தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்குக் கதைச் சுருக்கம்
கதை நிகழும் காலம் 2013. ஆனால் 2008இன் மேற்குச் சந்தைகள் வீழ்ச்சிக்குப் பின்
எழுதப்பட்ட நாவல் இது. சீனா மிகப் பலமுள்ள நாடாக இருக்கிறது. மக்கள் மிக
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சாதாரண மக்களிடையே செலவிடப் போதுமான பணம் இருக்கிறது.
ஒரு வளமான சமுதாயத்தில் சர்வாதிகாரத்தைவிட ஒழுங்கற்ற குழப்ப நிலைமையே ஆபத்தானது
என்று மக்களை அரசு எண்ணவைக்கிறது. இப்படியான மயக்கத்திலிருக்கும் சனங்கள் ஒன்றைக்
கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். சீனாவின் அலுவல்சார் ஆவணங்களில் 2011ஆம் ஆண்டில் ஒரு
மாதம் முக்கியமாக 28 நாட்கள் நாள்காட்டியிலிருந்து மர்மமாக நீக்கப்பட்டுவிடுகிறது.
ஒரு மாதம் துடைத்தழிக்கப்பட்டது மட்டுமல்ல மாவோயிஸ்டுகள் விளைவித்த விடாத்
துயரளிப்புகள், 1959-1961இல் 45 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் மடிந்தது மற்றும்
தின்னமன் சதுக்கப் புரட்சி எவையும் மக்கள் ஞாபகத்தில் இல்லை. இந்தப் பொது
நினைவிழப்புப் பற்றி ஒருவருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இருவரைத் தவிர. ஒருவர்
தைவானைச் சேர்ந்த ஆனால் இப்போது பேஜிங்கில் வசிக்கும் - குற்றங்களைத் துப்பறிந்து
பத்திரிகையில் எழுதும் - சேன் மற்றொருவர் முன்னாள் நீதிபதியும் அரசியல் உழைப்பாளரும்
மிகத் தீவிர இடதுசாரிப் பார்வையுள்ள லிட்டில் சை என்ற பெண். இவள் அரசின்
அடக்குமுறைக் கொள்கைகளைச் சகிக்க முடியாமல் பதவியிலிருந்து விலகியவள். இந்த
இருவருடன் நாடு கடத்தப்பெற்ற ஃபெங் என்கிறவனும் சேர்ந்துகொள்கிறான். சீன மக்களின்
நினை விழப்புக்கு என்ன காரணம் என்ற இவர்களின் தேடலே இந்த நாவலின் முக்கியக் கரு.
இந்தத் தேடுதலில் சீனாவின் வணிகப் பலத்தால் செல்வப்பேறு பெற்றவர்களையும் அதேபோல்
சீனாவின் வெற்றியில் பங்கடையாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களையும் இவர்கள்
சந்திக்கிறார்கள். சீன அரசின் உயர் அதிகாரியான டொங்ஷெங்கையைக் கடத்திவந்து உண்மையைச்
சொல்லிவிடுமாறு இவர்கள் மிரட்டுகிறார்கள். அவர் சொன்னது இவர்களை அசத்திவிடுகிறது.
சீனாவின் தலைவர்களைப் பற்றி மட்டுமல்ல சீன மக்களின் மனப்பாங்கு பற்றியும் வாசகர்கள்
அறிந்துகொள்ள முடியும்.
மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பின் நாவலுக்குள் நுழைவேனா?
அரசு ஊழியராக இருக்கும் லிட்டில் சை அதே அரசின் உபாயங்களை உபயோகித்து அரசுக்கு
எதிராகச் செயல்படும் கட்டங்கள் ரசிக்கத்தக்கவை. ஓர் உதாரணம் தூக்குத்தண்டனை
விதிக்கப்பட்ட கைதிகளை அரசின் கொள்கைக்கு எதிராக விடுதலைசெய்தது.
பாதியில் வாசிப்பதை நிறுத்திவிடக்கூடிய அமைப்பு, நடை, கருத்தியல் கோளாறுகள்?
டொங்ஷெங் உண்மையைச் சொல்லும் முன் சீனச் சரித்திரம் பற்றி நீண்ட பிரசங்கம் செய்வார்.
நீங்கள் சீன அரசியலில் பிரியமில்லா தவராயிருந்தால் இந்தப் பகுதி வரும் பக்கங்களைப்
புரட்டுவதற்குப் பதிலாக உங்கள் விரல்கள் கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பத்
துடிக்கும்.
என்னுடைய கடைசி யோசனை
உண்மையும் பொய்யும் மங்கலாகத் தெரியும் இந்த நாட்களில் நாங்கள் எந்த மாதிரியான
நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தும் நாவல் இது. கதாசிரியர்
சீன மக்களைக் கேட்கும் கேள்வி இதுதான்: “Between a good hell and a fake paradise -
which one would you choose?” இதைத்தான் அரேபியப் புரட்சியாளர்களும் கேட்கிறார்கள்.
சிங்கள நாவல்
நாவலின் பெயர்: Chinaman. இந்தத் தலைப்பைத் தமிழில் மொழிபெயர்த்தால் ஏதோ சீனாக்காரன்
கதை என்று தோன்றும். சீனாவிற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமே இல்லை. Chinaman
என்பது கிரிக்கட் விளையாட்டில் இடது கைச் சுழல்பந்து வீச்சுக்காரன்
துடுப்பாட்டக்காரர்களைத் திக்குமுக்காடவைக்கும் ரகசிய ஆயுதம். எழுதியவர் யார்?
Shehan Karunatilka. இது இவரது இரண்டாம் நாவல். ஏற்கனவே ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
அது அச்சில் வரவில்லை. சிறிலங்காவில் நடத்தப்படும் நாவல் போட்டியான Gratiaen
Prizeäப் பெற்றது.
இங்கே இடம்பெறக் காரணம்
நான் கிரிக்கட்டை ஆராதிக்கிறவன் என்பது மட்டுமல்ல. கீழே நான் தந்திருக்கும் வசனத்தை
வாசியுங்கள் காரணம் விளங்கும். கிரிக்கட்டையே தெய்வமாக மதிக்கும் இந்தியத்
துணைக்கண்ட பக்தர்கள் தினமும் சொல்ல வேண்டிய சுலோகம் இது. கருனசேனா என்ற
கதாபாத்திரம் குடிவெறியனாக இருந்தாலும் அவனது உளறல்களில் சின்ன உண்மை இருக்கவே
செய்கிறது. படித்துப் பாருங்கள்: ‘இந்த விளையாட்டால் ஒருவிதமான பிரயோசனமும் இல்லை.
இடது கைச் சுழல்பந்துவீச்சாளரால் உங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத்தரவோ
உங்களுடைய நோய்களைக் குணப்படுத்தவோ முடியாது. ஆனால் அவரால் சிலமுறை மந்திரமான பந்தை
வீச முடியும். அந்த நேரத்தில் நம் தேசம் முழுவதுமே இன, மத, மொழி வித்தியாசங்களை
மறந்து ஒன்றுபடும். இந்தச் செயல் ஏற்படுத்தும் தற்காலிக ஒற்றுமையைவிட அந்தப் பந்து
எதையுமே சாதிக்கப்போவதில்லை. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஒரு ஓவருக்கு இரண்டு
ஓட்டங்களுக்கு மேல் நம்மால் எடுக்க முடியாது. அதுமட்டுமல்ல பத்து வருடத்திற்கு
ஒருமுறை நம் வாழ்வில் ஐயத்துக்கிடமான நடுவரின் தீர்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்’.
இந்த ஆட்டத்தைப் பற்றி இதைவிட ஆழமான கருத்து வேறு என்ன வேண்டும்?
தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்குக் கதைச் சுருக்கம்
கிரிக்கட் விளையாட்டின் பின்னணியில் ஒரு தேசத்தின் கதை சொல்லப்படுகிறது. கருனசேனா
என்ற முதிய இதழாளரும் (வயது 64) அவருடைய கூட்டாளியும் கிரிக்கட் விசரருமான ஆரியரட்ன
பிரைட் என்பவரும் எல்லோருடைய பார்வையிலுமிருந்து மறைந்துவிட்ட பழைய சிறிலங்கரான
சுழல் பந்து வீச்சாளர் பிரதிப் சிவானந்தன் மத்தியூவை மீள்கண்டுபிடிப்பதுதான் இந்த
நாவலின் மைய நோக்கு. சுழல் பந்துவீச்சாளர் என்றதும் ஏதோ முத்தையா முரளிதரன் பற்றி
என்று எண்ணிவிடாதீர்கள். இந்த நாவலில் முரளியும் வருகிறார். முரளியின் பந்துவீச்சு
முறையை ஓர் அங்குலம்கூட மாற்ற வேண்டாம் என்று மத்தியூ புத்திமதிக் கடிதம்
எழுதுகிறான். இந்தக் கதையில் கற்பனைப் பாத்திரங்களும் நிஜ மனிதர்களும் வருகிறார்கள்.
ஆகையால் இவர்களில் யார் புனைவு, யார் மெய் என்று தெரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டமாக
இருக்கிறது. மத்தியூ 1985-1995 இடையான ஆண்டுகளில் கிரிக்கட் உலகையே ஆட்டிப்படைத்தவன்.
குறுகிய காலத்தில் விரைவேகமாக முன்னேறியவன் திடீரெனக் காணாமல்போய்விடுகிறான். அவர்
சிங்களத் தாய்க்கும் தமிழ்த் தகப்பனுக்கும் பிறந்தவன். 2,500 பேர் படிக்கும்
அவருடைய பள்ளியில் எட்டுத் தமிழர்கள். ஆகையால் அவருக்கு இன அடையாளப் பிரச்சினை.
சிங்கள மாணவர்களின் ஆக்கினையிலிருந்து தப்புவதற்குத் தன்னுடைய அம்மா சிங்களம் என்று
கூறிச் சமாளித்துவிடுகிறான். அவனுக்குச் சிராளி என்ற காதலி இருந்திருக்கிறார். அவன்
இப்போது உயிருடன் இருக்கிறானா என்றும் தெரியாது. அது மட்டுமல்ல அவனுடைய சாதனைகள்
எல்லா உத்தியோக ஆவணங்களிலிருந்தும் நீங்கப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக அவன்
உலக சாதனை புரிந்த கண்டி ஆஸ்கிரிய மைதானத்தில் நடந்த சிறிலங்க-நியூசிலாந்து போட்டி
எந்தக் கிரிக்கட் ஆதார ஏட்டிலும் பதிவுசெய்யப்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை. இது
சிறிலங்காவைப் பற்றிய நாவல் ஆகையில் ஈழப் பிரச்சினை, எல்டிடிஈ, குண்டுதாரிகள்
எல்லாம் உண்டு. புலிகளின் அனுதாபியும் கிரிக்கட் பிரியருமான குகராஜ் என்ற
பாத்திரமும் வருகிறது. அதேபோல் கிரிக்கட் இடம்பெறுவதால் அந்த ஆட்டத்திற்கே உரிய
தீச்செயல்களான ஆட்ட முடிவுகளை உறுதிசெய்தல் (match fixing), வார்த்தைசார் வசவுகள்
(sledging) எள்ளல்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பின் நாவலுக்குள் நுழைவேனா?
வாசித்த பிறகும் ஒரு வசனம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. சிங்களவருக்கும்
தமிழருக்கும் என்ன வித்தியாசம் என்ற கேட்டபோது கருனசேனா சொன்ன பதில்: “The truth
is, whatever differences there may be, they are not large enough to burn down
libraries, blow up banks, or send children onto minefields. They are not
significant enough to waste hundreds of months firing millions of bullets into
thousands of bodies.” இதன் தாத்பரியத்தை விளங்கிக்கொள்ள இன்னுமொரு வாசிப்பு
வேண்டியிருக்கிறது.
பாதியில் வாசிப்பதை நிறுத்திவிடக்கூடிய அமைப்பு, நடை, கருத்தியல் கோளாறுகள்?
சில பகுதிகள் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிபோல் மிக மெதுவாக ஊர்ந்துபோகின்றன. T20 போல்
விறுவிறுப்பை எதிர்பார்ப்பவர்கள் சற்றுச் சோர்வடைவார்கள். இவற்றைவிட ஈழ அரசியலில்
ஈடுபாடு உள்ளவர்கள் இந்த நாவல் போதிக்கும் பின்-இன அரசியலை ஒத்துக்கொள்ள
மாட்டார்கள். இன அடையாளங்களை மீறி ஒருமித்த சிறிலங்கா உருவாக வேண்டும் என்பதே
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு இந்த நூல் தரும் விடை. இதைத்தான் ராஜபக்ஷவும்
சொல்கிறார். இது எப்படிச் செயல்பட வேண்டும் என்ற உதாரணங்கள் நாவலில் உண்டு.
அங்கீகாரம் பெற மத்தியூ தன்னுடைய தமிழ் நடுப்பெயரான சிவனந்தனை அகற்றிவிடுகிறான்.
வேறு சில தமிழர்களும் அணியில் சேர்ந்துகொள்வதற்காகச் சுத்த தமிழ்ப் பெயர்களை
மாற்றிப் பொதுப்பெயர்களைச் சூட்டுகிறார்கள். முன்னுக்குவர ஒரு தமிழன் சிங்களவரைவிட
இரண்டுபங்கு திறமைசாலியாக இருக்க வேண்டும் என்றும் நாவல் சொல்கிறது. புதிதாக
உருவாக்கப்படும் சிறிலங்கத்தன்மைக்காக (Sri Lankenevv) தங்களுக்குரிய அடையாளங்களைத்
தமிழர்கள்தாம் விட்டுக்கொடுக்கிறார்கள். சிங்களவர்கள் அவர்களுடைய மரபுவழி
அதிகாரங்களை, உடைமைகளை இழந்தகாக இந்தக் கதையில் ஒன்றுமே இல்லை. இன்றைய சிங்கள
அரசின் செயலிலும் இல்லை.
என்னுடைய கடைசி யோசனை
நீண்ட விமானப் பயனம் மேற்கொள்ளப் போவதாயிருந்தால் பொழுதைப் போக்குவதற்கு இந்த
நாவலின் அரசியலை ஒதுக்கிவிட்டு நாவலில் பக்கத்துக்குப் பக்கம் சிதறிக்கிடக்கும்
நக்கலையும் வட்டாரப் பேச்சுமொழி ஆங்கில (vernacular English) நடையையும் ரசியுங்கள்.
முக்கியமாகக் கிரிக்கட் ஆட்டத்தில் விரைப்பான கட்டங்களில் வீரர்கள் ஒருவருக்கொருவர்
பரிமாறும் வார்த்தைசார் வசவுகள் நீங்கள் இந்த ஆட்டத்தைப் பற்றி அறிந்திராவிட்டாலும்
வாய்விட்டுச் சிரிப்பீர்கள். முக்கியமாகப் பாகிஸ்தானின் மியந்தாதின் தூஷன மொழி.
ஆனால் இன்றைய ஜசிறிலங்காவின் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் Gordon
Weissஇன் The Cage ஐப் படியுங்கள்.
The Cage காலச்சுவடு பதிப்பக வெளியீடாகத் தமிழில் வரவிருக்கிறது.
|