|
அக்கரைப்பற்றில் உள்ள சந்தை அது. எல்லாச் சந்தைகளுக்குமுரிய உயிர்த் துடிப்புடன்
இயங்கிக்கொண்டிருக்கும் இச்சூழலில்தான் அங்குள்ள அன்றாடங்காச்சிகளின் வாழ்வின்
வேரும் ஊடுரு வியுள்ளது. அன்றாட விளைபொருட்களையே மூலதனமாகக் கொண்ட உதிரி
உழைப்பாளிகளுக்கான பொருளாதார மையமும் இதுதான். இந்த அன்றாடங்காச்சிகளின் நாளாந்த
வாழ்வையும் அவர்கள் புறச் சூழலால் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மிகுந்த செறிவுடன்
தன் கசகறணம் நாவல்மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் விமல் குழந்தைவேல்.
நாட்டார் பாடல்கள் மூலம் நெத்தியடியாகப் பதில் சொல்லும் வெள்ளும்மாவுக்கு,
‘ஆஸ்பத்திரிக் கட்டிலுக்கு விரிக்கிற வெள்ளைச் சீலை’ போன்ற துணிதான் ஆடை. அவளுடைய
சுருக்குப் பைகளில் எந்தெந்தப் பையில் என்னென்ன இரகசியங்கள் இருக்கின்றன என்பதை அவள்
மட்டுமே அறிவாள். பாய்தான் வியாபாரம். ஆனால் பனையோலையில் செய்கின்ற அனைத்துப்
பொருட்களையும் வாங்கலாம். ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டிப் பாயை நிமிர்த்தி அவள்
விலை சொல்லுதல், மீராவின் படத்தை ஞாபகப்படுத்துமென ஆசிரியர் அவளை
அறிமுகப்படுத்துகிறார். அதே போன்று அக்கரைப் பற்றிலிருந்து ஐந்து மைலுக்கு
அப்பாலுள்ள ‘மொட்டையாபுரத்தில்’ இருந்து வருபவள்தான் மைதிலிப்பெத்தா. இவள் சேனையில்
விளையும் பொருட்கள்தாம் இவளது மூலதனம். சந்தையிலிருந்து தொடங்கும் நாவல் இவள்
மூலம்தான் விகாசம்கொள்கிறது. வெள்ளும்மாவிடமும் மைதிலிப்பெத்தாவிடமும் தினமும்
திட்டுகள் வாங்கியபடியும் அனுதாபத்தைப் பெற்றபடியும் தாமரைக் கொட்டை, முள்ளிக்
கிழங்கு, நுரைப்பணியாரம் போன்றவற்றை விற்கும் குலத்தழகிக்கு மன ஈர்ப்பு என்னவோ
சினிமாவில்தான். வியாபாரம் அவளுக்கு முக்கியமல்ல. இவளது சினிமாமீதான அபரிதமான
ஈடுபாடு என்பது ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு குறுநாவலை வாசகர்களுக்கு
நினைவூட்டக்கூடும். ஆனால் அதில் வருபவள் அல்ல இவள். வாத்தியாரை நாயகனாக வரிக்கும்
போக்கும் இவளிடம் இல்லை. அந்த அளவிற்கு இவள் நிதானமானவள்தான். சினிமா பார்க்க
வேண்டும், அதுவும் முதல் நாள் காட்சியை. அவ்வளவுதான்.
இவர்களுடன் குறளிக் காக்கா. முளங்கால்வரை கட்டிய சாரம், அதை இறுகப் பிடித்திருக்கும்
பெல்ட். கர்ணனின் கவச குண்டலம் போல் எப்போதும் இருக்கும் அந்த பெல்ரில் சின்னச்
சின்ன அறைகள். மேலாடை என்பது இவருக்கு கலர் துவாய்த் துண்டுதான். ஆசிரியரின்
கூற்றுப்படி ‘கையில் துவக்குமட்டும் இருந்தால் அசல் வேட்டைக்காரன் தான்’. சந்தையில்
கோழி வியாபாரம் தான் தொழில். கைரேகை பார்ப்பதும் முகத்தைப்பார்த்துக் குறிசொல்வதும்
கண்ணுறுகளுக்கு ஓதுவதும் இவருக்கு வாலாயமானவையே. இந்த நால்வருக்கும் சந்தைதான்
மூச்சு. ஒரு நாள் சந்தைக்குப் போகாவிட்டாலும் இவர்கள் மனத்துள் ஏக்கம், தவனம்.
இவர்களே இந்த நாவலில் முக்கியமானவர்கள்.
இரவில் ‘கப்பல் லாம்பு’டன் நடமாடுவதும் காலைப் பனி தாங்கிய புல்லுகள் வெள்ளிக்
கம்பிகள்போல் மின்னியபடி நடமாடும் கால்களை ஈரமாக்குவதும் சோளக்கொல்லைகளில் மந்திகள்
களிப்பதுமான அந்த அக்கரைப்பற்று மக்கள் வாழ்வில் திருவிழாக்கள், கொழும்பில் இருந்து
வந்து நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியான நாட்களே. மந்திரிகளின்
வருகைக்காக மேலதிகமாக வழங்கப்படும் நீர் வழங்கல்களினாலும் அந்த மண் செழித்தது.
தியேட்டர்களில் நடைபெறும் சண்டைகளால் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில்
தற்காலிக விரிசல்கள் விழுந்தாலும் பகையை மறந்துவிடுவதும் ஒருவருக்கு ஒருவர்
ஒத்தாசையாக இருப்பதுமான இயல்புகள் இருந்தன. இந்த இயல்பான வாழ்க்கையைப் போர் மேகங்கள்
சூழ்ந்தன. அது ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன’ என்ற சுவரொட்டிகளுடன்
இந்நாவலில் ஆரம்பமாகிறது. ஆனால் அதற்கு முன்னமே அதுவரை இருந்த மரபுரீதியான அரசியல்
அதிருப்தியின் வெளிப்பாடுகள் அங்கு ஆரம்பமாகிவிட்டதையும் நாவல் பதிவுசெய்கிறது.
பொத்துவில் தொகுதி எம்பியின் படுகொலை, யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று இராணுவத்தினர்
கொல்லப்பட்ட சம்பவத்தைச் சிங்களம் எதிர்கொண்ட விதம், வெலிகடைப் படுகொலைகள்
என்பனவற்றின் எதிரொலிகள் அவ்வாறான பதிவுகள்.
இந்த அரசியல் அதிர்வுகளின் தொடர்ச்சியாகவே யாழ்ப்பாணத்திற்குக் கல்வி கற்கப்போன
முஹமதும் இந்தியாவிற்கு ஓடிப்போன கேசவனும் போராளிகளாகத் திரும்பி வருகிறார்கள்.
“தேவகுமாரர்கள் போல் வந்தார்கள் இராஜகுமாரர்கள்போல் உபசரிக்கப்பட்டார்கள்” இந்த
நிலைமை நீடித்து நிலைக்காத அளவிற்கு அவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள். ‘கிழக்கு
மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களை எதிர்த்து அரசியல் நடத்தவோ போராடவோ முடியாது’
எனவும் ‘அரசக் கூலிப்படைகளோடு சேர்ந்து இயங்குவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க
ஏலாது’ எனவும் கருத்து முரண்பாடுகள். ஒன்றாகச் சாப்பிட்டு ஒன்றாக உறங்கியவர்கள்
எதிரும் புதிருமானார்கள். ஒருவரை ஒருவர் ‘போட்டுத் தள்ளுவதற்காக’ தேடித்
திரியலானார்கள். விளைவு, ‘புட்டம்பையில்’ உள்ள முஸ்லிம் மக்கள் வெளியேற்றம். ஆயுத
முனையில் வெளியேற்றப்படும்போது சாதாரண சனங்களால் என்ன செய்ய முடியும்? “நீங்க
மட்டும் நல்லா இரியுங்க நாங்க வாறம் சொல்லுகா எங்களுக்கும் ஒரு காலம் வருமென்டு”
மனம் வெதும்பி அவர்களால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான். அதே போன்று அக்கரைப்பற்று
எரித்துச் சாம்பலாக்கப்பட்டபோதும் மக்களால் வெதும்பத்தான் முடிந்தது. தமிழ்,
முஸ்லிம் மக்களின் மனங்கள் எதேச்சையான சம்பவங்களிலெல்லாம் காரண காரியங்களைக்
கண்டறிய முனைந்தது. சந்தேகம் எல்லோர் கண்களிலும் வலையாய்ப் படர்ந்திருந்தது.
வெள்ளும்மா, மைதிலிப்பெத்தா இவர்கள் வாழ்வில் விரிசல்களும் பகைகளும் இல்லை என்றாலும்
புறத்தே நிகழ்ந்தவற்றின் பாதிப்புகளை அவர்கள் அறிந்துதான் இருந்தார்கள். ஆனால்
அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்ணீருடன் கையறு நிலையில் அவற்றைப்
பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்திருந்தது.
தேவதூதர்கள்போல் வந்தவர்கள் செயற்பாட்டை அரச இயந்திரம் தனது வழமையான வழிகளில்
எதிர்கொண்டது. இந்த எதிர்விளைவால் மைதிலிப்பெத்தா தன் உறவுகளைப் படிப்படியாக
இழந்தாள். அவள் வாழ்வில் எல்லாமுமாக இருந்த அந்தச் சந்தையின் எரிந்த இடிபாடுகளுக்கு
இடையில் இராணுவ வாகனத்துள் இருக்க, அவளது தோழர்கள் வெள்ளும்மாவம் குறளிக் காக்காவும்
அவள் கைதுசெய்யப்பட்டிருப்பது பற்றி எதுவும் அறியாது அவளைக் கடந்து செல்கின்றனர்.
பெரும் சோகத்தை எழுப்பும் இந்த நாவலில் ஆசிரியர், கதை சொல்லியாகக் கிராம மக்களில்
ஒருவராகவே வருகிறார். அந்த மக்கள்மீது இடியென இறங்கியுள்ள இனக் குரோதங்கள்மீது,
அறிவுசார்ந்த பகுப்புகளும் பக்கச் சார்பான முடிவுகளும் இன்றி இரு சமூகங்களின்
பாதிப்புகளையும் துயரங்களையும் பதிவுசெய்துள்ளார். அந்தத் துயரங்களின் மீது
அவருக்குத் தனித்த அபிப்பிராயங்கள் இருக்கலாம். இருக்கிறது என்பது அவரது
‘என்னுரை’யில் ஒரு கோடாக வெளிவருகிறது. ஆனால் அவரது கருத்துகள் எதுவும்
திணிக்கப்படவில்லை. வாழ்நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட முஸ்லிம்
மக்களது துயரங்களுக்கும் அவலங்களுக்கும் அப்பால் அவர்கள் வெளியேற்றம் அரசியல்
காரணங்களுக்காகவே அதிகம் அழுத்தம் பெற்றது. அந்த அரசியல் பிரசார ஓசைகள் இந்த நாவலில்
இல்லை. எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினையை நேர்மையுடன் பதிவு செய்துள்ளார்.
வெள்ளும்மாவால் பாடப்படும் பாடல்களில் சிலவற்றை நாட்டார் பாடல்களில் படித்தது
நினைவிற்கு வருகிறது. இவ்வாறானவற்றைத் தவிர்த்திருக்கலாம். ‘கக்கூசுக்குப் போனவன்
சறுக்கி உழுந்தாப்போல்’ எம்.ஜி.ஆர். வாளை நிலத்தில் குத்தி நிற்பது என்ற உவமானம்
பொருத்தமானதாக இல்லை. இரண்டாம் அத்தியாயத்தில் காலை ஒன்பதரை மணிக்குப் பின்னர் (பக்.
32) வரும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே வெள்ளும்மாவுக்கும் மிரிசாவுக்குமான உரையாடல்
நடைபெறுகிறது. அப்போது “பள்ளிக்கூடம் விட்டு புள்ளகளெல்லாம் வஸ்ஸடிக்கு வர” எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. காலை ஒன்பதரை மணியும் பள்ளிக்கூடம் விடும் நேரமும்
முரண்பட்டே தெரிகின்றன. இந்நாவலில் தமிழர்களின் துன்பங்களின்போது முஸ்லிம்களும்
முஸ்லிம்களின் துன்பங்களின்போது தமிழர்களும் உதவுதல் வலிந்த செயற்பாட்டுத்தனத்தை
உணர்த்தக்கூடும். ஆனால் இரு சமூகங்கள் கலந்து வாழும் சூழலில் அந்தச் சாத்தியத்தை
மறுப்பதற்கில்லை.
மார்க்சிய முற்போக்குச் சிந்தனைகள், இயக்கங்களுக்கு ஆதரவான, எதிரான சிந்தனைகள்,
தலித்தியச் சிந்தனைகள் ஆகிய சுமைகளால் ஈழத்துப் படைப்பிலக்கிய மரபு கழுத்தொடிந்து
வரும் பாத்திரங்களையே அதிகம் கொண்டுள்ளது. கசகறணம் அந்த வகையைச் சேர்ந்த நாவல் அல்ல.
எஸ். பொன்னுத்துரையின் சடங்கு நாவலில் வரும் செல்லப்பாக்கிய ஆச்சி ஒரு குறிப்பிட்ட
கிராமத்தின் பண்பாட்டுச் சாரத்தின் முக்கியக் குறியீடாகக் கருதப்பட்டது. கசகறணத்தில்
வரும் மைதிலிப்பெத்தா, செல்லப்பாக்கிய ஆச்சியையும் தாண்டி வந்து நிற்கிறாள். இந்த
நாவலில் கையாளப்படும் பேச்சு வழக்கு பலருக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம். வாசக
சிரமத்திற்காக மண்ணின் வாசனையை மாற்றிவிட முடியுமா? அல்லது விட்டுவிடத்தான் முடியுமா
என்ன? அத்துடன் மண்ணோடுள்ள ஆசிரியரின் பிணைப்பையும் அது வெளிப்படுத்துகிறது. அழகிய
உவமானங்களாலும் எள்ளல்களாலும் நாவல் மெருகூட்டப்பட்டுள்ளது.
எந்தப் போக்கு இலக்கியத்தில் மேலோங்கியுள்ளது, எதை எழுதினால் அரசியல்ரீதியாக அதிகக்
கவனத்தைப் பெறலாம் போன்ற மலிவான முனைப்பு மேலோங்கியுள்ள புலம்பெயர் சூழலில் இந்த
நாவல் வித்தியாசமானதும் முக்கியமானதுமான வரவுதான். தனது இரண்டாம் நாவலான
வெள்ளாவியில் மிகுந்த கவனம்பெற்ற விமல் குழந்தைவேல், தனது மூன்றாவதான இந் நாவலில்
மேலும் அதிக கவனத்தைப் பெறுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் கசகறணம் அழுத்தமான
தடத்தைப் பதித்துள்ளது.
|