Google   www kalachuvadu.com

சிறப்புப் பகுதி

நேர்காணல்: “ஒரு புத்தகமே போர்க்குற்ற வழக்கிற்கு வழிசெய்துவிடும் என எதிர்பார்ப்பது பிழை” - கார்டன் வெய்ஸ்

தொகுப்பு: கானகன்

தற்போது ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் கார்டன் வெய்ஸ் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிரவாதம் மற்றும் மனிதநேயச் சட்டத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். இயற்கைப் பேரிடர்களுக்கும் போர்ச் சிக்கல்களுக்கும் உள்ளான போஸ்னியா, கொஸாவா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், டார்ஃபூர், காங்கோ, வடக்கு உகாண்டா, காஸா, அஸே, ஹைட்டி போன்ற பல பகுதிகளில் பணியாற்றியவர். வானொலி மற்றும் அச்சு ஊடகங்களுக்குச் சுயேச்சையான செய்தியாளராகவும் இருந்தவர். ஸ்ரீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளராக 2007 முதல் 2009வரை வெய்ஸ் செயல்பட்டார். அப்பாவி வெகுமக்களை இலங்கைப் படையினர் கொன்றுகுவித்ததற்கான ஆதாரங்களைச் செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட ஏராளமான தளங்களிலிலிருந்து திரட்டிய முக்கியமான நால்வரில் வெய்ஸ் ஒருவர்.

நான்காம் கட்ட ஈழப் போர், விடுதலைப் புலிகளின் இறுதிநாட்கள் ஆகியவை பற்றி கார்டன் வெய்ஸ் எழுதிய The Cage என்னும் நூல் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கானகன் எழுப்பிய கேள்விகளுக்கு கார்டன் வெய்ஸிடமிருந்து மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்ட பதில்கள் இவை.

நீங்கள் ஐ.நாவிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?

நான் ஒன்றும் விலக்கப்படவில்லை, ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தப்படவும் இல்லை. 2010 ஜனவரியில் எனது இலங்கை விசாவைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. நடந்து முடிந்திருந்த போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நான் தொடர்ந்து கூறிவந்திருந்ததால் என் விசா புதுப்பிக்கப்படமாட்டாது எனப் பகிரங்கமாகவே ஸ்ரீலங்கா அரசு அறிவித்திருந்தது. அந்நிலையில் எனக்குப் பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்ய ஐ. நா. முன்வந்தது.

ஆனால் நான் ஏற்கெனவே போர் குறித்த The Cage* நூலை எழுதத் தீர்மானித்திருந்தேன். எனவே டிசம்பர் 2009இல் பதவிவிலகி ஆஸ்திரேலியா திரும்பி எழுதத் தொடங்கினேன். ராண்டம் ஹவுஸ் புத்தக வெளியீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் புத்தகத்தை முடித்துத்தர வேண்டுமென்றனர். நான் என் குடும்பக் கடமைகளையும் கவனித்துக்கொண்டு புத்தகத்தையும் முடிக்க வேண்டுமென்றால் ஐ.நா. அலுவல்களை மேற்கொள்ளவியலாது.

நான் பதவிநீக்கம்செய்யப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. அதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.

தற்போது எத்தகைய பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்? இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். அதில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது?

புத்தகம் எழுதி முடித்த பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்தேன். ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா எனப் பல பகுதிகளில் புத்தகம் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். தற்போது ஆஸ்திரேலியாவில் ஓர் ஊடக நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அடுத்த சில ஆண்டுகளில் ஐ.நாவிற்குத் திரும்புவேன் எனவும் நினைக்கிறேன்.

இலங்கையைப் பொறுத்தவரை அங்கிருந்து வந்த பிறகு பெரிதாக எனக்குத் தொடர்பேதுமில்லை. கூண்டு நூலை எழுதியவன் என்ற முறையில் ஏதாவது பல்கலைக்கழக மற்றும் சிந்தனை மைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். விமர்சகன் என்பதைத் தவிர எனக்கும் இலங்கைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

நீங்கள் உங்கள் புத்தகத்தில் விடுதலைப்புலிகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கும் தீவிர விடுதலைப்புலி ஆதரவாளர்களுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

என்னுடைய ஆய்வுக்காகப் புலம் பெயர்ந்த புலிகளின் ஆதரவாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்களை அவ்வளவு எளிதில் நெருங்கிவிடவும் முடியாது. அவர்கள் வாழும் நாட்டுப் புலனாய்வுத் துறையினர்கூட யார் என்ன செய்கிறார்கள் என்பதை எளிதில் கண்டறிய முடிவதில்லை. என்னைப் பொறுத்தவரை நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தனிநபர் வழிபாட்டையும் போரின்போது அவர்கள் கையாண்ட வழிமுறைகளையும் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன்.

போரின் இறுதிக்கட்டங்களில் ஐ.நா. பொதுமக்களைக் கைவிட்டுவிட்டதாகவே நீங்கள் கூறுகிறீர்கள். இப்போது ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த குழுவின் அறிக்கை, ஸ்ரீலங்கா அரசு மீதான உங்கள் குற்றச்சாட்டுகளை ஏறத்தாழ வழிமொழிந்திருக்கிறது. இந்நிலையில் அவ்வறிக்கை பற்றி உங்கள் கருத்தென்ன?

நான் ஐ.நாவைக் குறைகூறியிருக்கிறேன் என்பது உண்மைதான். அதே நேரம் அது தனது பணியைச் சரிவர நிறைவேற்ற முடியாமல் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருப்பதாக நினைக்கிறேன். இலங்கையில் ஐ. நாவின் செயல்பாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. விசாரணைக் குழு என் விமர்சனங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டுள்ளது. அவற்றை உறுதிப்படுத்தும் சில புதிய ஆதாரங்களையும் கண்டடைந்துள்ளது.

அறிக்கையின் பரிந்துரைகள்மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு திருமதி தோராயா ஓபெய்து பணிக்கப்பட்டிருக்கிறார். அவர் என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்?

ஓபெய்து நீண்ட அனுபவம் மிக்கவர். வெளிப்படையாகப் பேசுபவர். நிச்சயமாக அவரது அறிக்கை மிகப் பயனுள்ளதாகவிருக்கும் என நம்புகிறேன். ஆனால் திட்டவட்டமாக ஏதாவது பரிந்துரைப்பாரா, அப்படிச் செய்தாலும் அவற்றை அமல்படுத்துவதெப்படி என்பனவெல்லாம் முக்கியக் கேள்விகள். ஐ.நா. தன்னுடைய பணிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போவதற்கு அமைப்புரீதியான காரணங்கள் பல உண்டு என்பது அதனுடன் தொடர்புடைய அனைவர்க்கும் தெரியும்.

உங்கள் புத்தகத்திற்கு இலங்கையில் எத்தகைய வரவேற்பு இருந்தது? அரசு எப்படிப் பார்த்தது? சிவில் சமூகம் உங்கள் விமர்சனங்களை எந்த அளவு ஏற்றுக்கொள்கிறது?

புத்தக விற்பனை ஓர் அளவுகோலென்றால் கொழும்புவில் என் புத்தகம் பரவலான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது எனலாம். தமிழ்த் தேசியவாதிகளாகப் பார்க்கப்படுவோரைப் பொறுத்தவரை போர்க் குற்றங்களுக்காக வழக்குத் தொடுக்க அதை மேலுமொரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

சிங்களத் தேசியவாதிகளோ தங்கள் அரசை எதிர்த்துப் புலம் பெயர் தமிழர்களும் மேல்நாட்டு மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து பின்னும் சதிவலையில் மேலும் ஓர் இழை அந்த நூல் என நினைக்கின்றனர்.

ஆனாலும் போர் குறித்து எவ்வித விமர்சனத்தையும் அனுமதிக்காத, கேள்விகள்கூட எழுப்ப முடியாத தற்போதைய சூழலில் புத்தகம் வெளியாகியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக எனக்குப் பலர் கடிதம் எழுதியிருக்கின்றனர். எனக்கும் அது நிறைவைத் தருகிறது.

அமெரிக்க, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை வம்சாவளியினர் பலர் தங்கள் பெற்றோர்கள் தங்களுக்குச் சொல்லத் தவறும் ‘மறுபக்கத்தை’ நான் கூறியதற்காக நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

உங்கள் புத்தகத்தில் தவறுகள் இருப்பதாகக் கூறுகின்றனரே?

என்ன பெரிதாகத் தவறைக் கண்டுவிட்டனர்? எனக்குப் புரியவில்லை. பதினோரு மாதங்களில் இதை எழுதி முடித்தேன். இத்தகைய நூலை அவ்வளவு குறுகிய காலத்தில் எழுதுவதென்பது எளிதல்ல. அப்படி எழுதும்போது சில தவறுகள் நேர்ந்திருக்கலாம். எழுதியபின் சரிபார்க்கும்போதுகூட அத்தகைய பிழைகள் ஏற்பட்டிருக்கும். கோத்தபயா ராஜபக்ஷவுக்குக் குறிவைக்கப்பட்டபோது அவர் பயணித்த வாகனத்தைத் தவறாக அடையாளம் கண்டிருப்பதாகக் குறைகூறுகின்றனர். அதுபோல் பல சிறிய பிழைகள் இருக்கலாம், ஆனால் நான் சொல்லவந்த வரலாற்றைத் திரிக்காமல் சொல்லியிருக்கிறேனா என்பதுதான் முக்கியம். அதில் நான் பிழைபடவில்லை என நம்புகிறேன்.

பொதுவாக உங்கள் நூலுக்கு மேற்கத்திய நாடுகளில் நல்ல வரவேற்பிருப்பதாகத் தெரிகிறது. உங்கள் புத்தகத்தின் தாக்கம் மஹிந்த ராஜபக்ஷ அரசுமீது போர்க்குற்றங்கள் புரிந்ததற்காக வழக்கு தொடுப்பதில் முடியுமா?

இதைவிடவும் சிறந்த புத்தகம் எழுதப்படும்வரை இலங்கை இனமோதல் குறித்தும் 2009ஆம் ஆண்டு நிகழ்வுகள் குறித்தும் எனது கூண்டுதான் நம்பகமான வரலாறு எனலாம். அந்த அளவில் மெல்ல மெல்ல மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பும் என நினைக்கிறேன்.

ஒரு புத்தகமே போர்க்குற்ற வழக்கிற்கு வழிசெய்துவிடும் என எதிர்பார்ப்பது பிழை. ஆனால் இலங்கை நிகழ்வுகள் குறித்து உலகம் புரிந்துகொள்ள வழிசெய்யும். போரில் பொது மக்கள் அதிக அளவில் கொல்லப்படவில்லை என்றும் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகளின் கொடூரங்களே காரணம் என்றும் இலங்கை அரசு சொல்லும் கதைகளுக்குச் சவாலாக எனது நூல் இருக்கிறது.

தமிழரின் எதிர்காலம் குறித்துத் தங்கள் அச்சம் சரியானதே. ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற ரீதியில் அண்மைக்காலமாக இலங்கை அரசு கூறிவருகிறதே, அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர்களின் எதிர்காலத்திற்கும் போர்க்குற்றங்களுக்குத் தண்டனை அளிப்பதற்கும் பெரிதாகத் தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆனால் தவறேதும் நிகழவில்லை என்று சாதிக்கும் அரசுக்குச் சரியான பதிலளிக்க வேண்டும். அரசியல், இராணுவ மற்றும் வரலாற்றுத் தளங்களில் நிகழ்ந்துள்ள தவறுகளுக்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இலங்கையில் மறுவாழ்வுப் பணிகள் எப்படி நடக்கின்றன என்பது குறித்து உங்களுக்குத் தகவல்கள் வருகின்றனவா? நீங்கள் குறிப்பிடும் வன்னி மருத்துவர்கள் எப்படியிருக்கிறார்கள்?

முன்பு நான் கூறியதுபோல் இலங்கையுடன் எனக்கு இப்போது நெருக்கமான தொடர்பெதுவும் கிடையாது. நான் வெவ்வேறு பணிகளில் இறங்கிவிட்டேன். ஏதோ சில தொடர்புகள் இன்னமும் இருக்கின்றன அவ்வளவுதான்.

அடுத்த ஆண்டு மார்ச்மாதத்தில் நடைபெறவிருக்கும் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் ஏதேனும் புதிய திருப்பத்தை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது வழக்கம்போல் இலங்கைப் பிரச்சினையில் சடங்கிற்காகச் சிலவற்றைக் கூறிவிட்டு அமைதியாகிவிடுவார்களா?

எதுவும் விரைவில் நடக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. நெறிமுறைகளை முழுதாகக் கடைப்பிடிக்கும் சமூகங்களில் சட்டம், வழக்கு எல்லாம் முறையாக நடக்கும். ஆனால் பன்னாட்டு அமைப்புகளில் எத்தனையோ சிக்கல்கள். நாளுக்கு நாள் நிலைமை மாறும்.

நடந்த கொடுமைகள் குறித்த வழக்கு தொடுக்கும் முயற்சி வெற்றி பெற ஐந்திலிருந்து பத்தாண்டுகள் ஆகலாம். அதே நேரம் இலங்கை அரசு தன்னைக் காத்துக்கொள்வதற்காக அமைத்துள்ள நல்லிணக்கக் குழுவால் ஆகப்போவது எதுவும் இல்லை. =


*‘கூண்டு: இலங்கைப் போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும்’ என்னும் தலைப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வரவுள்ளது.

உள்ளடக்கம்