Google   www kalachuvadu.com

கட்டுரை
மேற்கில் எழுமோ சூரியன் !
2011 - அந்தியில் சிதறும் சிந்தனைகள்
வே. வசந்தி தேவி

2011 ஆண்டின் நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் எவை? சில மெல்லிய ஒளிக் கீற்றுகளைப் பற்றிப் பேசுவோம்.

ஆண்டுதோறும் மனித உரிமை தினமான டிசம்பர் 10க்கு முன் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து சிந்தனைக்கான ஒரு செய்தி அனுப்பப்படுவதுண்டு. அதன் மனித உரிமைக் கழகத் தலைவர் நவனீதம் பிள்ளை இவ்வாண்டின் வரலாற்று மகத்துவம் ‘அரேபிய வசந்தம்’ ‘Arab Spring’ என்றும், அதன் மூலம் ‘அதிகாரம்’ என்பதே இடம்பெயர்ந்தது என்றும் கூறுகிறார். “சிறப்புமிக்க இவ்வாண்டில் அதிகாரம் என்பது பளிங்கு மாளிகைகளில் வீற்றிருக்கும் வல்லமைமிக்க நிறுவனங்களின் கைகளிலிருந்து, தங்கள் உரிமைகளைப் பெறத் துணிந்தெழுந்த சாதாரண மக்களின் கைக்கு மாறியது”. எதிர்பாராத அந்த எழுச்சி மாற்றத்திற்கான உலகம் தழுவிய பிரவாகமாக வேண்டுமென்றும் மறுக்கப்பட்டவர்கள், தங்கள் உரிமைகளை அறியவும் பெறவும் காக்கவும் இத்தருணம் பயன்பட வேண்டுமென்றும் கூறுகிறார் அவர்.

எனக்கு என்னவோ 2011இன் வரலாற்று மகோன்னதம் அரேபிய வசந்தத்தைவிட ‘வால்ஸ்ட்ரீட்டைக் கைப் பற்றுவோம்’, ‘Occupy Wall Street’ என்ற இயக்கத்திற்கு என்று தோன்றுகிறது.

முதலாளித்துவத்தின் வயிற்றிலிருந்து போர் முழக்கம் பீறிட்டெழுந்திருக்கிறது. நிதி மூலதனத்தின் மூலஸ்தானத்தில் ‘வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’ என்ற கோஷங்கள். ‘கார்ப்பொரெட் பேராசைக்கு முடிவுகட்டுவோம்’ என்ற சபதங்கள். ஏற்றத்தாழ்வுகளின் உச்சத்தை எட்டிவிட்ட உலகிலிருந்து ‘நாம்தான் 99சதவிகிதத்தினர்’ ‘We are the 99% ’ என்ற ஆத்திரக் குரல்கள். அமெரிக்காவின் ஆதிக்கக் கோட்டையிலிருந்து புறப்பட்டு, இன்று 82 நாடுகளில், 191 நகரங்களில் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியிருக்கின்றன. அநேகமாக அனைத்து வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அனைத்துக் கொடுமைகளுக்கும் மூலாதாரம் மூர்க்கத்தனம் கொண்ட இன்றைய முதலாளித்துவம்தான் என்னும் உண்மை புரியத் தொடங்கியிருக்கிறது.

அரேபிய வசந்தத்தின் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பதாகக் கொள்ளக் கூடாது. மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளின் எதேச்சாதிகார எதிர்ப்பு எழுச்சிகள் நிச்சயம் ஜனநாயகத்தை நோக்கிய நெடும் பயணத்தின் படிகள்தாம். ஆனால் அவை ஒரு வரம்பிற்குள் அடங்கியவை. கண் முன் கண்ட உள்ளூர் எதேச்சாதிகாரத்தை, எளிதில் அடையாளம் கண்டு, புரிந்த எதிரியை எதிர்த்த எழுச்சிகள் அவை. ஆனால் உலகை ஆட்டிப்படைக்கும் அசுர எதிரியை இனம்காண இயலாத எழுச்சிகள். பல நாடுகளில் எழுச்சிகளைத் தூண்டுவதிலும் தூக்கிவிடுவதிலும் அந்த உலக எதேச் சாதிகாரத்திற்குப் பெரும் பங்கு உண்டு. அந்நாடுகளின் வளத்தை அள்ளிச்செல்வதற்கு ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்த இன்னுமொரு வாய்ப்பாக இவ்வெழுச்சிகள் அமைந்துவிடக் கூடாது.

இன்று ஜனநாயகத்தின் எதிரியைச் சுட்டுவது அத்தனை எளிதல்ல. ஆள்காட்டி விரல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது. ஜனநாயகத்திற்கான போராட்டம் பலப் பல முனைகளில், சிறிதும் பெரிதுமான ஆயிரக்கணக்கான போராட்டங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று. ஆணாதிக்கத்திற்கெதிரான போராட்டத்திலிருந்து, உலக முதலாளித்துவ எதிர்ப்புவரை அத்தனை உரிமை மீட்புப் போராட்டங்களுக்கும் தேவையும் இடமும் அர்த்தமும் உண்டு.

வால்ஸ்ட்ரீட் போராட்டம் ஒரு முழுமையான, சிந்தாந்த அடிப்படையிலான புரிதலில் பிறந்தது அல்ல. பல போராட்டங்களைப் போன்று அமெரிக்க மக்களின் இன்றைய தேவைகளிலிருந்து, ஓரளவு திடீரென்று ஏற்பட்ட இழப்புகளிலிருந்து, அதன் அதிர்ச்சியிலிருந்து பிறந்தது தான் வால்ஸ்ட்ரீட் போராட்டமும். வேலையின்மை, குறிப்பாகப் படித்த இளைஞரைக் களத்தில் இறக்கியிருக்கிறது. வங்கிகளுக்குக் கடன் செலுத்த இயலாததால் வீடுகளை இழந்த தவிப்பு, கல்விக் கடன் கிடைக்காமல் ஏமாந்த மாணவர் என்று பல பாதிப்புகள் போராட்டக் களத்தில் இணைந்துள்ளன. அத்துடன் கண் முன்னால் காணும் பெரும் முதலாளிகளின் சகிக்க முடியாத ஆடம்பர வாழ்க்கை, ஏற்றுக்கொள்ளவே இயலாத ஏற்றத்தாழ்வுகள் மக்களின் கடும் கோபத்திற்கு இலக்காகியுள்ளன. அமெரிக்காவின் மக்கள்தொகையில் உச்சியிலுள்ள ஒரு சதவிகிதப் பெரும் பணக்காரர்கள் கடைநிலையிலுள்ள 60 சதவிகிதத்தினரின் மொத்த ஆண்டு வருமானத்திற்கு இணையாகச் சம்பாதிக்கின்றனர். அந்த ஒரு சதவிகிதத்தினரின் சொத்து கடைநிலை 90 சதவிகிதத்தினரின் சொத்துக்குச் சமம். கார்ப்பொரேட்டுகளுக்காக கார்ப்பொரேட்டுகளால் நடத்தப்படும் அரசு, அவர்களுக்கென்றே வகுக்கப்படும், வளைக்கப்படும் அரசின் கொள்கைகள் . . . இவை அனைத்தும் தீக்கு நெய் வார்த்தன.

வால்ஸ்ட்ரீட் போராட்டம் தொடங்கியபோது, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பிசுபிசுத்துவிடும் என்று நினைத்த அமெரிக்கா இப்பொழுது போராட்டக்காரர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிடுகிறது. அரேபிய வசந்தத்தின்போது அந்நாட்டு அரசுகள் ஜனநாயகக் குரல்களை நசுக்குகின்றன என்று கண்ணீர் வடித்து, போராட்டக்காரர்களுக்கு அனைத்து உதவிகளையும் அள்ளித்தந்த அமெரிக்காவால் இப்போது தன் நாட்டு மக்களின் எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

முதலாளித்துவம் பெரும் சவால்களைச் சந்திப்பது அமெரிக்காவில் மட்டுமல்ல. பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. வால்ஸ்ட்ரீட் போராட்டத்திற்கு முன்பே ஐரோப்பியப் பிரச்சினைகள் பல நாடுகளைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. ஐரோப்பாவின் விளிம்பிலிருந்து தொடங்கி, அயர்லாந்து, போர்ச்சுகல், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் என்று ஒவ்வொரு நாடும் கடுமையான நெருக்கடியில், பொருளாதார மந்தத்தில், சிக்கித் தவிக்கின்றன. இந்நாடுகளை இன்று சுழற்றியடித்துக்கொண்டிருக்கும் பிரச்சினை, அரசுகளின் கடன் சுமை, ஐரோப்பிய யூனியனுக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கே மீள முடியாத சோதனையாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் ஏற்பட்ட நெருக்கடிகளிலிருந்து மீண்டு வந்ததைப் போல் முதலாளித்துவம் இம்முறை தப்ப முடியாதோ என்ற ஐயப்பாடுகள் தோன்றியுள்ளன. இன்று பெரும் பணக்காரர்களால், கார்ப்பொரேட்டுகளால், ஆளப்படும் அமெரிக்கா முதலான முதலாளித்துவ நாடுகள் அந்தப் பணக்காரர்கள்மேல் விதிக்கும் வரியை ஏற்றுவதைக் கடுமையாக எதிர்க்கின்றன. அமெரிக்கக் குடியரசுக் கட்சி கோடீசுவரர்கள்மீது வரிசுமத்தக் கூடாது என்பதைத் தன் மிக முக்கியக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் அடித்தட்டு, நடுத்தர மக்களின் மீதுதான் சுமை ஏற்றப்பட வேண்டும். சமூக நலத் துறைகளான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான செலவினம் குறைக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துதான் தீரும். குறிப்பாக, மேலை ஐரோப்பிய நாடுகளில் பல காலமாக நிலவிவந்த நல அரசு (welfare state) கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் பல அடிப்படைத் தேவைகளை அரசின் பொறுப்பில், அரசின் செலவில் நடத்தி வந்தன. இன்று அவற்றை மறுக்கும் அரசாங்கங்கள் தூக்கியெறியப்படுகின்றன. ஆகவே முதலாளித்துவம் தனக்குள்ளிருந்தே தீர்வுகளைக் காணும் சக்தியை இழந்துவிட்டது என்று கருதப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக உலகை ஆக்கிரமித்திருக்கும் ஒற்றை ஏகாதிபத்தியம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. சோவியத் யூனியன் சிதறுண்டதும் பெர்லின் சுவர் வீழ்ச்சியும் இனி ஏகபோக முதலாளித்துவத்திற்கும் அதன் இன்றைய வடிவமாகிய நியோ லிபரலிஸத்திற்கும் (Neo-liberalism) மாற்று இல்லை என்ற ஆணவத்தை உருவாக்கி இருந்தது. வரலாறு அதன் முடிவை அடைந்துவிட்டது.

முதலாளித்துவத்தால் பரப்பப்பட்ட நம்பிக்கை ‘TINA’ (There is no Alternative) முதலாளித்துவத்திற்கு மாற்று வேறு இல்லவே இல்லை என்பதற்கான சவால்கள் உலகெங்கும் புறப்பட்டுக்கொண்டிருக்கிறன. “இவ்வுலகம் விற்பனைக்கு அல்ல.” “மற்றொரு உலகம் சாத்தியமே” என்ற அறைகூவல்கள் சர்வதேச வானில் இன்று எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. மாற்று தேடுவதற்கான தேவை இன்று அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா என்ற உலக ஆதிக்கம் செலுத்தும் இவ்விரு பகுதிகள் பாதை தெரியாது தவிக்கும்போது, லாப வேட்டையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றுப் பாதையைப் படைக்கும் பரிசோதனைகள் வரலாற்று மகோன்னதமாகப் பரிணமித்துக்கொண்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுகளாக ஒரு இடதுசாரி ‘வெளிர் சிகப்பு வெள்ளம்’ ‘Pink Tide’ பரவிக்கொண்டிருக்கிறது. இது 2011இன் புதுமை அல்ல. கியூபா 1960களில் ஏற்றிவைத்த அகல் விளக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரத் தாக்குதலிலிருந்து, தன் சின்னஞ்சிறு கைகளால் அணையாமல் காத்த ஒளி, கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க நாடாகப் பரவிவருகிறது. வெனிசுவேலாவில் ஹ்யூகோ சாவிஸின் தலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குக் கடுமையான சவால் விடப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகச் சென்ற மாதம் நிகராகுவாவிலும் அர்ஜெண்டீனாவிலும் இடதுசாரி அரசுகள் மீண்டும் பதவிக்கு வந்திருக்கின்றன. அங்கெல்லாம் மாற்றுப் பாதைக்கான தீவிர முயற்சிகள் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அவை உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் திணிக்க முயன்ற சிக்கனக் கொள்கைகளை ஏற்க மறுத்தும் குறைந்தபட்சக் கூலியைப் பெருமளவு உயர்த்தியும் கல்வி, சுகாதாரம் போன்ற மக்கள் நலத் துறைகளுக்குப் பெருமளவு செலவழித்தும் மக்களின் கையில் வாங்கும் சக்தியை அளித்தும் இவற்றின் மூலம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தும் மாற்றுப் பாதையைக் கடைப்பிடிக்கின்றன. அந்த நாடுகள் தனித்தனியாக மட்டுமல்ல. சக்தி கூட்டும் கூட்டமைப்புகளையும் அமைத்துக்கொண்டுள்ளன. வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பேருதவியாக, குறைந்த விலைக்குக் கிடைக்கும் எரிபொருளாக, அவற்றின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறது. தங்களது தென் அமெரிக்கக் கூட்டமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றியுள்ளன.

ஆரம்ப கால மார்க்ஸியவாதிகளின் விளக்கம் வரலாற்றின் முன்னேற்றம் ஒரு நேர்கோட்டுப் பாதையில் பயணமாகத்தான் இருக்கும் என்பது. ஒவ்வொரு சமுதாயமும் முதலாளித்துவக் கட்டத்தை அடைந்து, அதன் வளர்ச்சியையும் முரண்பாடுகளையும் அனுபவித்து, அவற்றை வென்று எழும்போதுதான் சோஷலிஸச் சமுதாயம் அமைக்க முயல முடியும். ஆகவே, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருந்த மேலை ஐரோப்பிய நாடுகளில்தாம் அதன் முடிவும் சோஷலிஸத்தின் பிறப்பும் சாத்தியமாகும் என்று நம்பப்பட்டது. ஆனால் வரலாற்று யதார்த்தம் அதைப் பொய்யாக்கிவிட்டது. முதலாளித்துவத்தின் “பலவீனமான சங்கிலி” என்று கருதப்பட்ட ரஷ்யாவில் முதல் புரட்சி எழுந்தது. அதைத் தொடர்ந்து வெகு விரைவில் மேற்கு நாடுகளில் புரட்சி எழும் என்று லெனினும் மற்றோரும் எதிர்பார்த்திருந்தது நடைபெறவில்லை. வரலாற்று மாற்றம் கிழக்கு நோக்கி, ரஷ்யா, சீனா என்று திரும்பிற்று. இப்பொழுது மீண்டும் மேற்கு நோக்கிக் காற்று வீசுகிறதா?

ஆரம்ப கால மார்க்ஸியமும் சோவியத் யூனியனில் உருவான மார்க்ஸியமும் பெரும்பாலும் ஐரோப்பாவை மையம்கொண்டவை. குறிப்பாக, விவசாய மக்களின் பிரச்சினை அதில் சரியாகக் கையாளப்படப்படவில்லை என்ற வலிமையான விமர்சனம் அதன் மேல் உண்டு. செஞ்சீனாவின் எழுச்சியும் அங்குச் செய்யப்பட்ட பரிசோதனைகளும் சில புதிய பரிமாணங்களை வெளிக்கொண்டுவந்தன. ஐரோப்பியப் புரட்சி போன்று பாட்டாளி வர்க்கம், தொழிற்சாலைகளின் உழைக்கும் வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கம் என்பதை மாற்றி சிறு விவசாயிகளையும் புரட்சிகர வர்க்கமாக சீனப் புரட்சி மாற்றி வரலாறு படைத்தது.

முதலாளித்துவம் பல நெருக்கடிக் காலங்களை வெற்றிகரமாகக் கடந்து வந்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. பல அவதாரங்களை எடுத்து இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் முக்கியக் காரணம் முதலாளித்துவ நாடுகள் நிறுவிய காலனிய சாம்ராஜ்யங்கள். உலகெங்கும் பரவிச் சென்று அளவிலா செல்வங்களைக் கொள்ளையடித்து, தங்கள் நாடுகளில் குவித்தன. இந்த ஏகாதிபத்தியக் கொள்ளையில் முதலாளித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்கமும் பங்குபெற்றுச் செழித்தது. ஆகவே அந்நாடுகளில் எழுந்திருக்க வேண்டிய வர்க்கப் போராட்டம் நடைபெறாமலேயே தடைபட்டது. முதலாளித்துவ மைய நாடுகளின் வளர்ச்சியும் காலனிய நாடுகளின் தேய்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாயின. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஆதார இயக்கம் இதுவே என்று லத்தீன் அமெரிக்க Dependency Theorists வலியுறுத்துகின்றனர். இன்றைய விடுதலை இயக்கங்கள் மைய நாடுகளிலும் விளிம்பு நாடுகளும் ஒரு சேர நடத்தல் வேண்டும்.

இன்று முதலாளித்துவத்தின் முடிவும் சோஷலிஸத்தின் எழுச்சியும் எங்கு நடைபெறும் என்பதைக் காட்டிலும் எவ்வாறு நடைபெறும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு மார்க்ஸியத்தின் அடிப்படைகளுக்குத் திரும்பிப் போக வேண்டும்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்ஸியம் உருவாக்கிய அரசியல்-பொருளாதார சித்தாந்தத்தின் ஆன்ம லட்சியம் என்ன? மனித சுதந்திரத்தின் முழுமையை உணர்வதுதான். மனிதன் வர்க்க சமுதாயத்தின் விலங்குகளை, தளைகளை உடைத்து எறிந்துவிட்டு, சுதந்திர மனிதனாகப் பரிணமிப்பான்; தனது வரலாற்றின் நாயகனாவான். இதுதான் மார்க்ஸிய தீர்க்கதரிசனம்.

அந்த மகத்தான மானுட விடுதலை முதலாளித்துவ சமுதாயத்தில் பிறக்கவே இயலாது. முதலாளித்துவம் மானுட விடுதலைக்கு முற்றும் முரண்பட்டது. அதன் தொடர்ச்சியும் மறு உற்பத்தியும் மனித இனத்தின் பெரும் பகுதியை மூலதனத்தின் மூர்க்க ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவதில்தான் உள்ளது. ஒரு பக்கம் பெரும் செல்வக் குவிப்பும் மறு பக்கம் சுரண்டலும் மறுப்பும் பரந்துபட்ட துன்பமும் வேதனையும் உருவாக்குவது அதன் இயக்க நியதி. அது உருவாக்கும் கொடிய ஏற்றத்தாழ்வுகள், பாதுகாப்பின்மை, பெரும்பாலான மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயலாமை இவை அனைத்தும் மானுட விடுதலை மலரும் சூழலை உருவாக்க இயலாதவை. இச்சூழல் உருவாகாத நிலையில் மனிதனிடம் புதைந்துகிடக்கும் பிரம்மாண்ட உற்பத்திச் சக்தியும் அற்புதப் படைப்புத் திறனும் நிதர்சனமாகும் வாய்ப்பே இல்லை.

முதலாளித்துவம் அதன் சாத்திய எல்லைகளை எட்டிவிட்டது. அந்த எல்லைகளைத் தாண்டிய பெரும் வரலாற்றுப் பாய்ச்சல் ஏற்பட வேண்டுமென்றால், முதலாளித்துவக் கூட்டை உடைத்தெறிந்து சோஷலிஸச் சமுதாயம் உதயமாக வேண்டும். அந்தச் சமுதாயத்தில் மனிதன் உற்பத்தியிலும் ஆற்றலிலும் புதிய பிரம்மாண்டங்களைப் படைப்பான். மார்க்ஸின் அந்தத் தீர்க்கதரிசனம் பல காரணங்களால் 20ஆம் நூற்றாண்டில் பொய்த்துவிட்டது. 21ஆம் நூற்றாண்டில் அது மெய்யாகுமா?

அப்படியென்றால் அது இருபதாம் நூற்றாண்டின் சோஷலிஸமாக இருக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் இமாலயத் தவறுகளையும் மனித உரிமை மீறல்களையும் ஸ்டாலினிசத்தையும் தவிர்த்த சோஷலிஸம்தான் இருபத்தியோராம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கும் நீதிக்கும் மானுட விடுதலைக்கும் சித்தாந்தத்தளமாக முடியும். அத்துடன், 20ஆம் நூற்றாண்டின் சோஷலிஸ அரசுகள் முதலாளித்துவ நாடுகளுடன் முதலாளித்துவத் தளத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு அவற்றை எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்ற கோட்பாடுடன் செயல்பட்டன தங்களுக்கென்ற தனிப் பாதையை வகுக்கத் தவறிவிட்டன. அது தற்கொலைப் பாதையாயிற்று.

முதல் பாடம் . . . சோஷலிஸமும் ஜனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஜனநாயகமின்றி சோஷலிஸமில்லை; சோஷலிஸமின்றி ஜனநாயகம் இல்லை. இதனை மறுத்துச் செய்துகொள்ளும் சமரசங்கள் மார்க்ஸியத்தின் மன்னிக்கவியலா திரிபுகள். மார்க்ஸைப் புரிந்துகொள்ளத் தவறியதன் கொச்சைப்படுத்தல்கள். சோவியத் யூனியனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வர்க்க சமுதாயத்தை ஒழிப்பதை விட்டு, ஒரு மோசமான மேலாண்மை வர்க்கத்தை உருவாக்கிவிட்டது. இந்த விமர்சனங்கள் சோவியத் யூனியனுக்கு மட்டும் பொருந்தியவையல்ல. பல நாடுகளின் கம்யூனிஸக் கட்சிகளுக்கும் பொருந்தும். பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களைப் புரட்சியின் முன்னணிப் படை என்று அறிவித்துக்கொண்டன. அந்தக் கட்சி உருவாக்குவதுதான் ஒரே சரியான பாதை; அதனிலிருந்து மீறுதல்கள் ஒடுக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகச் சிந்தனைகளும் விவாதங்களும் பங்கேற்பும் மடிந்தன. 21ஆம் நூற்றாண்டின் சோஷலிஸம் இத்தவறுகளையெல்லாம் விடுத்துப் பன்முக ஜனநாயகத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

மானுட சுதந்திரமும் விடுதலையும் சோஷலிஸச் சமுதாயத்தில்தான் உதயமாக இயலும். அதற்கு அடிப் படைத் தேவை தனி மனித உடைமை உடைக்கப்பட்டு, உற்பத்திச் சக்திகள் சமுதாயத்தின் பொதுவுடைமை ஆவது தான். ஆனால் அத்துடன் நின்றுவிட்டால், சோஷலிஸச் சமுதாயம் உருவாகிவிடாது. உற்பத்திச் சக்திகளின் மிக ஆதார அம்சம் புரட்சிகர வர்க்கம். அந்த வர்க்கம் உருவாகவே இல்லை.

மார்க்ஸியத்தைக் குறுக்கி, கொச்சைப்படுத்தியதன் மிக முக்கிய விளைவு மார்க்ஸியம் மானுட விடுதலையின் மகத்தான சித்தாந்தம், அரசியல் கொள்கை, அதன் சங்க நாதம் என்பதை மறந்தது. மார்க்ஸியம் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறது என்னும் திரிபுகள். சோஷலிஸச் சமுதாயம் வடிவெடுக்கும்போது, அதன் உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியுடன், அதன் கூடவே உருவாக வேண்டியவன் சோஷலிஸ மனிதன். அவன் என்றோ, எங்கோ வரலாற்றின் இறுதியில் அவதரிக்கப்போகும் யுக புருஷன் அல்ல. உற்பத்திச் சக்திகள் வேறு, புரட்சிகர வர்க்கம் வேறு என்று பிரிக்க முடியாது. புரட்சிகர வர்க்கம்தான் மிகப் பெரும் உற்பத்திச் சக்தி. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம்தான் உற்பத்திச் சக்திகளின் உன்னத உச்ச வளர்ச்சியைக் குறிக்கிறது. இதை மறந்து, சோவியத் யூனியனும் மற்ற புரட்சிக்குப் பிந்தைய சமுதாயங்களும் உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியில் மட்டும் கவனத்தைச் செலுத்தின.

முதலாளித்துவம் முடிவுறும் என்ற எண்ணமே சுகமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு முன் ஒரு பயங்கர ஊழித் தாண்டவம் ஆடிவிட்டுத்தான் அது சாகும். இன்றைய நிதி மூலதனம் உண்மைப் பொருளாதாரத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. சூதாட்டம் தான் இன்று அதன் பிரதான வடிவம். அதன் மாய வலையில் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டிருக்கிறது. அதிலிருந்து தப்புவது எளிதல்ல. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அச்சாணி ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி. அதற்கான மார்க்கெட் உலகெங்கும் வியாபித்துள்ளது. அதன் வியாபாரம் செழிக்க வேண்டுமென்றால், இலாபம் பெருக வேண்டுமென்றால் போர்கள் மூண்டுகொண்டே இருக்க வேண்டும். போர்களைத் தூண்டுவதும் ஒற்றுமையை உடைப்பதும் விரோதங்களை வளர்ப்பதும் அந்தப் பேரழிவில் முதலீடு செய்வதும் அதன் வியாபாரத் தேவைகள் வியாபாரத் தந்திரங்கள். இன்று உலகாளும் முதலாளித்துவம் வன்முறையின் பாதுகாவலன், அமைதியின் பேரெதிரி.

இன்று முதலாளித்துவ நாடுகளில் அதன் அடிப்படைகளை எதிர்த்து ஆத்திரக் குரல்கள் எழுந்திருக்கும்போது, இந்தியாவிலும் வளரும் நாடுகள் சிலவற்றிலும் அரசாங்கங்கள் நியோலிபரலிஸக் கொள்கைகளை ஆரத் தழுவி, அது ஒன்றே உய்வுக்கு வழி என்று சாதித்துவருகின்றன. இந்தியாவில் ‘பொருளாதாரச் சீர்திருத்தம்’ என்பதன் பொருள் மார்க்கெட்டின் மகிமையைத் தாரக மந்திரமாக ஓதுதல், தங்குதடையற்ற தனியார்மயமாதல், பொதுத் துறையையும் நாட்டின் வளங்கள் அனைத்தையும் லாப வேட்டைக்கு உள்ளாக்குதல், உலகக் கார்ப்பொரேட்டுகளுக்கு நாட்டின் அனைத்துக் கதவுகளையும் திறந்துவிடுதல் என்று கொள்ளப்பட்டுவிட்டது. வளர்ந்த நாடுகள் இன்று கடுமையான பொருளாதாரத் தேக்கத்தில் சிக்கித் தவிக்கும்போது, அதிலிருந்து நாம் பாடம் கற்றபாடில்லை. ஆகவே வரலாற்றின் அடுத்த கட்டப் பாய்ச்சல் நம்மைப் போன்ற நாடுகளைக் காட்டிலும், முற்றிய முதலாளித்துவ நாடுகளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாமா?

எங்குத் தொடங்கினும் எதிர்ப்பும் எழுச்சியும் இன்று உலகமயமாதல் அவசியம். முதலாளித்துவ மைய நாடுகளின் எதிர்ப்பு இயக்கங்களுக்குத் தோழமைக் கரம் நீட்டுவதும் தோள் கொடுப்பதும் உலகின் மற்ற நாடுகளின், விளிம்பு நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தின் கடமை மட்டுமல்ல. தங்கள் நாடுகளில் ஜனநாயகமும், சமத்துவ சமுதாயமும் தோன்றுவதற்கும் அதுவே வழி. இன்று ஆதிக்கம் உலகமயமாகி இருக்கிறது. அதற்கான எதிர்ப்பும் உலகமயமாக வேண்டும். அமெரிக்காவின் ‘99சதவிகித’மும் இந்தியாவின் ‘99சதவிகித’மும் கரம் கோக்க வேண்டும். இன்று அதற்கான யதார்த்த சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தொழிற்நுட்ப வளர்ச்சி முன்பு எப்போதையும்விடச் சக்தி வாய்ந்த கருவிகளை மனித இனத்தின் கையில் அளித்திருக்கிறது. அரேபிய வசந்தத்திலும் வால்ஸ்ட்ரீட் போராட்டத்திலும் போராளிகளை ஒன்றிணைப்பதில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. ஒரு காலத்தில் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்” என்று ஒலித்த அறைகூவல் நிதர்சனமாவதற்கான அறிகுறிகள் இன்று தோன்றியுள்ளன.

பிரம்மாண்டமான இந்த யுகப் புரட்சியை வழிநடத்தும் தலைவன் எங்கே? அரேபிய வசந்தம், வால்ஸ் ட்ரீட் போராட்டம் இரண்டிலும் ஒரு வியத்தகு பொதுமை. இரண்டும் படர்ந்த பன்னாட்டுக் களங்களில் எந்தத் தலைவனும் தோன்றவில்லை. வரும் காலங்களிலும் தொண்டர்கள் அடிபணியும் தெய்வத் தலைவர்கள் தேவையில்லை. வால்ஸ்ட்ரீட்டின் பல வாசகங்களில் ஒன்று “நாம் காத்துத் தவமிருந்தவர் நாமேதான்.” எந்த அவதார புருஷனும் இரட்சகனும் தேவையில்லை. ‘முப்பது கோடி முகங்களும்’, முவ்வாயிரம் செப்புமொழிகளில் உதிக்கும் ஞாயிறைப் போற்றி வணங்குவோம். அது மேற்கில் உதித்தாலும் சரி, கிழக்கில் உதித்தாலும் சரி.

உள்ளடக்கம்