Google   www kalachuvadu.com

சுகிர்தராணி கவிதைகள்

ஓவியங்கள்: ரோஹிணி மணி

கவிதைப் பனிக்குடம்

பின்பனிக் காலத்துக் குளிர் இரவு
நிறம் உலராத பிரம்பு மேசையில்
படபடக்கிறது ஒரு வெள்ளைத் தாள்
காற்றின் கள்ளம்பட்டு
உரசிக்கொள்ளும் மூங்கில்களென
நானும் கவிதையும் தனித்திருக்கிறோம்
என்னுள்ளிருந்து அது பிறப்பதைத்
தன் குவளைக் கண்களால் காண
கலவிக் கால விலங்கினைப் போல்
என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது
ஒரு பிரசவத்தை நிகழ்த்திக்கொள்ளும்
பரவசம் என்னுள் வேர்பிடிக்கிறது
இயல்பு கூடியவளாக நிற்கையில்
வெடித்த பருத்தியின் விதையென
நினைவு தப்புகிறது
உன் மகன் சான்றோன் என
உரைத்தபடி யாரோ ஓடுகிறார்கள்
தலைவியை வரைவு கடாய
வலிய மலைநாடனிடம் கெஞ்சுகிறேன்
பாடுபொருள் ஆகின்றன
என் தேமல்சூழ் அல்குலும் மாமையும்
முச்சந்தியில் வீசப்படும் சவுக்கடிகள்
முதுகை ஓவியக் களமாக்குகின்றன
ஆணொருவன் வன்புணர்வு செய்கையில்
உடைகிறது என் பனிக்குடம்
கண் விழித்துப் பார்க்கிறேன்
கவிதைக்குள்ளிருந்து கழிவுகளோடு
வெளிப்படுகிறது என் தலை.

இரவுக்குறி

சரிந்த மலையின் அடிவாரத்தில்
நிலவு உறங்கி இருந்தது
கழுத்து நீண்ட பெண்மயில் ஒன்று
கற்களையும் முட்டைகளென
அடைகாக்கும் பாறையைக்
கடந்து போகிறேன்
இருளின் வெளிச்சத்தில் புலப்படும்
கருத்த பாதையில்
வண்டுகள் மொய்த்துக் கிடக்கின்றன
தொடரும் நீர்த்த நிழலைப் போல
நரந்தம் பூவின் வாசனை
பயணிக்கிறது என்னோடு
கணுநீண்ட மூங்கில்களுக்கிடையே
வளைந்து செல்லும் வாடைக்காற்றாய்
எந்நெஞ்சம் நெகிழ்ந்து ஓட
மெய்யுறு புணர்ச்சியில் நீண்டு
களித்துக் கிடந்த காலம்
முன்னே நகர்கிறது
பிரப்பங்கொடி சுற்றிய கால்களை
விடுவித்துக்கொண்டு
காவல் சூழும் அவ்வீட்டை அடைகிறேன்
மேன்மாடத்தில் விளக்கெரிய
பூப்பந்தைச் சாளரத்தில் வீசுகிறேன்
எந்தன் இரவுக்குறி உணர்ந்து
எட்டிப் பார்க்கிறான் அவன்.

உள்ளடக்கம்