|
தோப்பாகும் எனது வேர்
இனியும் பொறுக்கமுடியாது
ஆதலினாலே
முடிவாகத் தீர்மானித்துவிட்டேன்
பொறித்தே தீர்வதென
அடைகாக்கும் வரையிலென
மட்டிடப்பட்ட உரிமையைக்
கொண்டாட முடியாதென்னால்
சுயமிழந்து இருப்பது
சோதியிழந்திருப்பதுபோல
நிறமூர்ந்து செழிக்க
ஒளி வேணுமெனக்கு
சோளக் காட்டின் நடுவிருக்கும்
வைக்கோல் பொம்மைக்கஞ்சி ஓடுவதும்
இருளையும் கூர் ஒளியையும்
கண்டு மிரள்வதும் எனக்குரிய பண்பன்று
இருள்
விடியலுக்கான சமிக்ஞையென்றே
என் அறிவுக்கு விளங்குகிறது
யார் குற்றம் கூறினும்
நான் இப்படித்தான் இருப்பேன் நிமிர்ந்து
சுற்றிலும் சூட்சுமங்கள்
என்னை வியாபித்திருக்கும்
பவித்திரமான உணர்வுகளைக்
களைந்தெறிய பலவழி பிரயத்தனங்கள்
ஆயினும் தடுமாறாதென்
நிமிர்ந்த நெஞ்சம்
எனக்குள் ஊடுறுவியிருப்பதும்
அடித்துச் செல்ல முடியாத
நாணலதையொத்த வேரொன்றே
ஆணிவேர்!
சுகந்த மணம் கமழும்
தோப்பொன்றை ஆக்கவே
இந்தச் செப்பனிடுதலும்
களனி செய்தலும்
புதர் மண்டிக் கிடக்கும்
இந்த வெளி தோப்பாகும்
குருவிகளும் கிளிகளும்
கூடுகட்டிக் குலாவும் அதில்
குயில்களும் மைனாக்களும்
என் பெயர் கூவிப் பாடும்
எனது வேர் தோப்பான
அதியம் கண்டு வையகமே வியக்கும்!
வடிவம் கூட்ட வருமொரு பொழுதில்
கறுப்பு நானும் சிவப்பு அவனுமாக
ஒரு சேலையில்
எங்களிருவர் முகங்களும் அப்பியிருந்தன
சுவரோவியங்களில் இருக்கும்
தேவதைகளினுடையதென
எனது விழிகளை உவமித்தான்
அவனது மென் தீண்டல்
என் மேனியில் பூக்களாய்ச் சொரிந்தது
சூடேறிய அவனது உதடுகளால்
பனிப்பாறையென இறுகியிருந்த நான்
கரையத் தொடங்கிய கணத்தில்
அவன் வடிவம் கூட்டத் தொடங்கினான்
முழுவதும் பிரிந்துகிடந்த என்னில்
பரிச்சயமான சாயங்களைத்
திட்டுத் திட்டாய்த் தடவி
ஓவியம் புரிந்தான்
ஒவ்வொரு புள்ளியும்
ஒவ்வொரு கோடும் திகைப்பிலாழ்த்த
என்னை முழுவதும் சமர்ப்பிக்கிறேன்
சுகமாய் விடிந்தது இரவு
நெளிந்தாடும் மெழுகும்
நீல வெளிச்சம் நிரம்பிய
மூடிய அறையுள்
நானும் காத்திருக்கிறோம்
தடித்த கறுப்பங்கியினுள்
பதுங்கியிருந்த இரவு
அவிழ்ந்து பிரிந்து நகர்ந்தது
அவன் மட்டும் வருவதாயில்லை
அவனுக்கான ஒரு வெற்றுத்தாள்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும்
ருசியூறும் ஓவியமொன்றை வரைதலில்
சாயமிடுதலில் தீவிர கவனமாய் இருப்பான்
இன்றேல்,
இன்னுமொரு பாறையைப்
பனியாய்க் கரையச் செய்வதில் மூழ்கியிருப்பான்
எப்படியும் ஓவியம் தீட்டுவதை நிறுத்தமாட்டான் அவன்
ஆனபோதும்,
நான் காத்திருக்கிறேன்
அவன் வடிவம் கூட்டவரும்
பிறிதொரு பொழுதில்
அவனிடம் என்னை சமர்ப்பிக்க!!!
|