Google   www kalachuvadu.com

கடிதங்கள்

விலை கொடுக்கும் மக்கள் தலையங்கம் தமிழகத்தின் தற்போதைய நிலை யைப் படம்பிடித்துக் காட்டியது, இலவசம் என்பது நமது வரிப் பணமே என்பதை மக்கள் உணர்ந்து தெளிதல் நன்று. சென்ற ஆட்சியினர் செய்த நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்து நல்ல நிர்வாகத்தை நடத்த தமிழக அரசுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை. புலிகளின் வீழ்ச்சி குறித்த கட்டுரை பல்வேறு நினைவுகளை அசைபோட வைத்தது. பிரபாகரன் தனது கடைசிக் காலத்திலும் இந்திய அரசை அதுவும் குறிப்பாகத் தமிழக மக்களைப் பெரிதும் நம்பியுள்ளார். அவரது தன்னம்பிக்கை தகர்ந்துபோனதால் தான் வீழ்ச்சி இலகுவாயிற்று. அந்தக் காலக்கட்டத்தில் இந்திய அரசையே மிரட்டிப் பணியவைக்கும் சக்தி தமிழக ஆட்சித் தலைமைக்கு இருந்த போதும், தம் மக்கள் நலன் என்பது மட்டுமே தமிழகத் தலைமைக்கு முக்கியமாகப்பட்டதால் துரோகத்தின் துணையோடு புலிகள் ஒடுக்கப்பட்டனர்.

கா. இர. குப்புதாசு
செஞ்சிக் கோட்டை

டிசம்பர் இதழில் யதீந்திராவின் கட்டுரையில் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களாக அவர் குறிப்பிடும் பலவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்கனவே பலரும் சொன்னதுதான். யானைக்குத் தன் பலம் தெரியாது. பலவீனம் தெரியும் என்பார்கள். ஆனால் புலிகளுக்கு அவர்களின் பலம் மட்டுமே தெரியும். பலவீனம் தங்களிடம் இல்லவே இல்லை என்று நம்பினார்கள். மூர்க்கத் தனமும் பிடிவாதமும் மட்டுமே தங்களின் பலம் என்று அவர்கள் மனதார நம்பினார்கள். அந்த நம்பிக்கையில்தான் செயல்பட்டார்கள். இறுதியில் அழிந்துபட்டார்கள்.

இந்தியக் கடற்படையின் தீவிரக் கண்காணிப்பின் பலனாகக் கடல்வழி ஆயுதவரத்து தடைபட்டதும் கிழக்கே கருணாவின் பிரிவுமே புலிகளின் இறுதி அத்தியாயத்தின் ஆரம்ப வரிகளை எழுதின. இன்னும் கூர்மையாகச் சொல்லப் போனால் புலிகள் ராஜீவை என்று படுகொலை செய்தார்களோ அன்றே புலிகளின் அழிவுக்கு அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டு விட்டது. பிற்கால நிகழ்வுகள் அதை நிரூபித்தன.

2004இல் சோனியாகாந்தியின் முழு முயற்சியால் இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு ராஜீவ் கொலையாளிகளை அழித்தொழிக்க அரசு மட்டத்தில் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இலங்கையில் ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு இந்நிலையில் தீவிர முன்னேற்றம் ஏற்பட்டுப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர். ராஜீவின் கொலைக்குப் பிறகும்கூட இருபதாண்டுகள் புலிகளின் நீடித்த ஜீவிதத்தின் சுருக்கமான வரலாறு இதுதான்.

எனவே புலிகள் அவர்களின் அழிவை அவர்களே தேடிக்கொண்டனர். புலிகளின் தோல்விக்கு இன்று நாம் காரணங்களைக் கண்டுபிடித்து அடுக்குவதெல்லாம், நோயாளி இறந்த பிறகு ‘அந்த மருத்துவரிடம் போயிருக்கலாம்’ ‘இந்த டாக்டரிடம் காட்டியிருக்கலாம்’ என்று புலம்புவதுபோல்தான். எந்த டாக்டரிடம் கொண்டுபோயிருந்தாலும் அவர் பிழைத்திருக்க மாட்டார் என்பது வேறு விஷயம். புலிகளின் முடிவும் கிட்டத்தட்ட இது மாதிரிதான் அமைந்தது.

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்

‘புலிகளின் வீழ்ச்சியும் தமிழக ஆதரவு சக்திகளின் அரசியல் புரிதலும்’ (டிச. 11) கட்டுரையை வெகு சிறப்பாகவே யதீந்திரா எழுதியிருக்கிறார். புலிகளின் தவறுகள் தீர்க்கமாகவே கட்டுரையில் அலசப்பட்டிருக்கிறது. அப்படிப் புலிகளின் தவறுகள் அலசப்படும்போது, ஈழத்துக்கான ‘தமிழக ஆதரவு சக்திகள் தங்களைச் சுயவிமர்சனத்துக்கு ஆட்படுத்திக்கொள்ள’ வேண்டும் என்று எதற்காகக் கேட்கிறார் என்பது புரியவில்லை.

சொல்வதானால் ஈழத்துக்கான தமிழக ஆதரவு சக்திகள் என்பதாக ஏதும் கிடையாது. சில உதிரிக் கட்சிகளும் தனி நபர்களும் தன்னலம் காரணமாகவே கடைசிக் கட்டத்தில் ஆதரவு ஓலமிட்டனர். தொடக்கக் காலத்தில் தமிழ் மக்கள் அனை வரும் கட்சி அரசியல் வேறுபாடு இல்லாமல் ஈழ மக்களுக்குப் பெரும் ஆதரவு தந்தபோது, எவ்விதத் தொலை நோக்குச் சிந்தனையும் இல்லாத பிரபாகரன், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைக் கொலை செய்ததும் ராஜீவ் காந்தி கொலைக்கு வழிவகுத்ததும் தமிழக மக்களை வெகுவாக வெறுப்படையச் செய்தது. புலிகள் தம்மீது தாமே சேற்றை வாரி இறைத்துக்கொண்டனர். இவர்களுக்கு உதவ இயலாது என்றே தமிழ்மக்கள் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, எந்த அளவுக்கு ஆதரவு தரப்பட்டதோ, அந்த அளவுக்குத் தமிழ் மக்கள் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.

ஈழத் தமிழர்களின் இன்றைய பரிதாப நிலைக்கு முற்றிலுமாகப் பிரபாகரனே காரணம். தமிழக மக்களின் ஆதரவு அவருக்குத் தூசாக அன்று பட்டது. விவரம் இப்படி இருக்க, ‘தமிழக ஆதரவு சக்திகள் தங்களைச் சுய விமர்சனத்துக்கு ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கட்டுரையாளர் சொல்வது, கட்டுரையின் அத்தனை உண்மைகளையும் நீர்த்துப்போகவைத்துள்ளது.

சா.சீ. ஸ்ரீராம், கோவை

க. நா. சு. ஓர் எழுத்தியக்கம் கட்டுரை வாசித்தேன். க. நா. சுவின் ஆளுமை, அவரது இலக்கியப் படைப்புகள், விமர்சனத் துறையில் அவர் ஆற்றிய பங்கு ஆகியவற்றை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. க. நா. சுவால் அடையாளம் காட்டப்பட்ட எழுத்தாளர்கள் பலர். அது அவரது இறுதிக் காலம்வரை தொடர்ந்தது. க. நா. சுவின் படைப்புகளை மறுவாசிப்பு செய்வதற்கான உந்துதலை இக்கட்டுரை வழங்கக்கூடும்.

கு. இரவிச்சந்திரன்
ஈரோடு

மதுரையில் 16.10.2011 அன்று நான் கலந்துகொண்ட அற்றைத் திங்கள் நிகழ்ச்சி குறித்து காலச்சுவடு டிசம்பர் 2011 இதழில் வெளியாகியுள்ள பதிவில் இடம்பெற்றிருந்த இரு தகவல்கள் குறித்த விளக்கம் இது.

எனது பிறந்தநாளாக ஆரம்பப் பள்ளியில் 10.01.1946 எனப் பதிவு செய்துவிட்டதைக் கூட்டத்தில் குறிப்பிடும்போது 1944 எனச் சொன்னேனா என்பது நினைவிலில்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் அது பிழையே. இது இதழில் 10.01.1944 எனப் பிரசுரமாகியுள்ளது. சரியான தேதி 10.01.1946என்பதே.

அடுத்ததாக நான் சட்டம் பயின்றபோது 1974இல் சக மாணவர்களோடு கருணாநிதியைச் சந்தித்துத் தமிழ்வழியில் சட்டம் பயிலவும் தேர்வு எழுதவும் வசதிசெய்து தரக்கோரி மனுகொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் அப்படிச் சொல்லவில்லை. சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலருடன் சட்டமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நாளில் தலைமைச் செயலகம் சென்றிருந்தோம். கல்லூரிப் பேருந்தில் அமர்ந்தபடி தமிழ் வாழ்க என முழங்கினோம். இதை அறிந்த சட்ட அமைச்சர் மாணவப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். சட்ட அமைச்சர் முதல்வரிடம் பேசியதாகவும் வகுப்பு தமிழில் நடைபெறும் என்றும் தேர்வு ஆங்கிலத்தில்தான் எனவும் தெரிவித்தார். நாங்கள் மாணவர்களுடன் விவாதித்து விட்டுச் சில நாள்கள் கழித்து மீண்டும் பேருந்தில் சட்டமன்றம் செல்ல முற்பட்டபோது காவல் துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்திப் பேருந்தை வேப்பேரி காவல் நிலையம் கொண்டு சென்றனர். மற்ற மாணவர்கள் சட்டமன்றம் சென்று கூடி முழக்கமிட அரசுத் தரப்பினர் சட்டக் கல்லூரித் தேர்வைத் தமிழில் எழுதலாம் என அறிவித்தனர். வேப்பேரி காவல் நிலையத்திலிருந்து நானும் எனது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டோம். இதைத்தான் நான் சொல்லியிருந்தேன். கருணாநிதியைச் சந்தித்ததாகவோ அவரிடம் மனுக்கொடுத்ததாகவோ நான் சொல்லவில்லை.

பொ. ரத்தினம்
வழக்கறிஞர், மதுரை

உள்ளடக்கம்