|
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகம் சந்தித்துவரும் அரசியல், பொருளாதார நெருக்கடிகள்
தற்போது தீவிரமடைந்துள்ளன. ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவதற்கெதிரான மக்கள்
போராட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கெதிரான கிளர்ச்சிகள், முல்லைப்
பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக எழுந்துள்ள கோபம் ஆகியவற்றை இந்த
நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளாகவே கொள்ள வேண்டும். தொடர்ந்துவரும் அரசுகளாலும்
அதிகார மையங்களாலும் பல பத்தாண்டுகளாக ஏமாற்றப்பட்டுவரும் மக்கள் மிக உணர்ச்சிகரமாக
இப்போராட்டங்களில் பங்கெடுத்துவருகிறார்கள். தம் வாழ்வாதாரங்கள்
பாதிக்கப்பட்டுவிடுமோ என்னும் சந்தேகமும் உரிமைகள் பறிபோய் விடுமோ என்னும் அச்சமும்
தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. இப்போராட்டங்களின் பின்னுள்ள சந்தேகங்களும் அச்சமும்
அடிப்படையற்றவையல்ல. சந்தேகங்களைப் போக்கி மக்களை அச்சத்திலிருந்து விடுவிக்கும்
பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய மைய, மாநில அரசுகள் தம் அலட்சியத்தாலும் பிடிவாதத்தாலும்
போராட்டக்காரர்களின் கோபத்துக்கு இலக்காகியிருக்கின்றன. முல்லைப் பெரியாறு அணை
விவகாரத்தில் மைய -மாநில அரசுகளின் பொறுப்பின்மையால் தமிழக- கேரள மக்களுக்கிடையே
வெறுப்பும் பகைமையும் மூண்டிருக்கின்றன.
பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்துவரும் மக்கள்
ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வருந்தத்தக்க நிலை உருவாகியிருக்கிறது. உச்ச
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கெதிராகக் கேரள அரசால் தன்னிச்சையாக
மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் தமிழக மக்கள் தாம் வஞ்சிக்கப்படுவதாகக்
கருதுகிறார்கள். அணையின் பலவீனம் குறித்த ஆய்வுகள் உரிய வல்லுநர் குழுவால்
மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில் கேரள அரசும் அரசியல்வாதிகளும் தம் மாநில மக்களின்
உணர்ச்சிகளைத் தூண்டும், அவர்களுக்கு அச்சமூட்டும் உரையாடல்களைப் பரப்ப முற்பட்டதே
இன்றைய கசப்பான நிகழ்வுகளுக்குக் காரணம். டேம் 999 திரைப்படத்தைத் தடைசெய்தது,
அப்படத்திற்கெதிராகத் தமிழ் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்
ஆகியவற்றின் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்த உணர்ச்சிகரமான எதிர்வினைகள் நிலைமையை
மேலும் சிக்கலாக்கின. தடைகளின் அரசியல் மிகவும் ஆபத்தானது. நமக்கு விரோதமான
கருத்துகளுக்கும் இடமளித்து, மறுத்து, விவாதிப்பதே தன்னம்பிக்கைகொண்ட மக்களின்
செயல்களாக இருக்க வேண்டும். கேரள - தமிழக அரசுகள் இந்த உணர்ச்சிகரமான போராட்டங்களை
ஊக்குவிப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் நலன்கள் பரிசீலனைக்குரியவை. இரு
மாநிலங்களிலுமுள்ள சில அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையைத் தமது அரசியல்
ஆதாயத்திற்கான கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது நிலைமையை மோசமாக்கிவிட்டது.
தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தாக்கப்படுகின்றனர். அவர்களுடைய கடைகள்
நொறுக்கப்படுகின்றன. கேரளத்தில் வசிக்கும், பயணிக்கும் தமிழர்களின் நிலையையும்
பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. அவர்கள் தாக்கப்படுவதாகப் பல செய்திகள் ஊடகங்களில்
வெளிவந்து இங்குள்ள கொந்தளிப்பின் உஷ்ணத்தை அதிகரிக்கின்றன. தமிழகத்திலிருந்து
கேரளாவுக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் மூட வேண்டும், கேரளத்திற்குக்
காய்கறிகள் முதலான அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதைத் தடைசெய்ய வேண்டும்,
கேரளத்தின் மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்துத்
தமிழ் ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டங்கள் இப்பிரச்சினைக்கு அபாயகரமான பரிமாணத்தை
அளிக்கும் நடவடிக்கைகள். பிரச்சினைகளுக்கு அரசியல் சாசனரீதியில் தீர்வுகாண்பதற்கான
வாய்ப்புகளை இது குறைத்துவிடும். உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையைப் பக்கச் சார்புடன்
அணுகியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கேரள அரசு தான் விரும்பும் முடிவை எந்த
வகையிலும் எட்டிவிட முடியாது என்னும் உண்மையை மறைக்கும் பதற்றம் தமிழ் ஆர்வலர்களின்
போக்கில் தென்படுகிறது. அணையின் நீர்த் தேக்க மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக்
கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பதை இந்தத் தருணத்தில்
நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.
இந்தப் பிரச்சினையை முன்வைத்துத் தமிழகம் எங்கும் எப்போதும் வஞ்சிக்கப்படுவதாகவும்
தமிழர்கள் பாதுகாப்பற்றவர்கள் என்பதாகவும் குற்றம் சுமத்தும் தமிழ் ஆர்வலர்கள்,
தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா என்னும் கேள்வியையும்
எழுப்பிவருகின்றனர். நதிநீர்ப் பங்கீடு குறித்துத் தமிழகத்துக்கும் அதன் அண்டை
மாநிலங்களுக்கும் பிரச்சினை ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் அது உணர்ச்சிகரமான
தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதும் அதன் விளைவாகச் சம்மந்தப்பட்ட பிரச்சினையின்
மையம் புறக்கணிக்கப்பட்டுப் பகைமையும் வெறுப்பும் வளர்க்கப்படுவதுமான போக்கே
தென்படுகிறது. காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினை இதற்குச் சரியான உதாரணம்.
இந்தப் போக்கு தமிழர்களின் உலகளாவிய அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஊறுவிளைவிக்கக்
கூடியது மட்டுமல்ல, பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவும் கூடியது. இன்று தமிழ்ச்
சமூகம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு வரலாற்றுரீதியிலான காரணங்களும் உலகளாவிய
அரசியல் பொருளாதாரப் பின்புலங்களும் உள்ளன. உணர்ச்சிகரமான அணுகுமுறை அவற்றைப்
புரிந்துகொள்வதற்கு எதிரானது. தமிழ்ச் சமூகத்தைப் பலவீனப்படுத்தியிருக்கும் பல்வேறு
அரசியல் தவறுகளுக்கு உணர்ச்சிகரமான இந்தப் போக்கே அடிப்படை.
சற்றே முற்பட்ட காலத்தில் திராவிட அரசியலை முன்னிறுத்திய தமிழகத்தில் மற்ற அனைத்து
சகோதர மொழியினர் அனைவரும் விரோதிகளாகத் தெரிகின்றனர். எல்லாக் காலங்களிலும் எல்லாப்
பிரச்சினைகளிலும் நம் தரப்பு மட்டுமே சரி, பிற அனைத்துக் கருத்துகளும் துரோகங்கள்
என நம்பும் மனநிலை ஆபத்தானது. தமிழ் இனவாதிகளிடம் எதிர்ப்பு அரசியல் மட்டுமே உள்ளது.
தொலைநோக்கு இல்லை, தந்திரோபாயங்கள் இல்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்கள்
இல்லை. தமிழ்ச் சமூகம் முன்னேற தீர்க்க தரிசனம் இல்லை. வெறுப்பைக் கக்கும்
உள்ளீடற்ற கிணற்றுத் தவளை அரசியல் நம்மை விடுவிக்காது, வீழ்த்திவிடும்.
ஈழப் போரில் ஏற்பட்ட தோல்வி, லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது
முதலான காரணங்களால் ஓர் இனம் என்ற ரீதியில் தனிமைப்பட்டுப் போயிருப்பதாகவும்
தமிழர்களை அழிப்பதற்கு உலக அளவிலான சதிகள் வகுக்கப்படுவதாகவும் கடந்த சில
வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சாரங்களுக்கும் முல்லைப் பெரியாறு அணைப்
பிரச்சினையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளுக்கும் உளவியல்சார்ந்த தொடர்புகள் உண்டு.
ஈழப் போரில் ஏற்பட்ட தோல்விக்கான அக, புறக் காரணிகளை அரசியல்ரீதியிலும்
வரலாற்றுரீதியிலும் பரிசீலிக்காததும் சுயவிமர்சன மறுப்புமே தற்போதைய உணர்ச்சிகரமான
பிரச்சாரங்களுக்கு அடிப்படை. அத்தகைய பரிசீலனைகளும் சுயவிமர்சனங்களும் இல்லாமல்
எந்தவொரு இயக்கத்தாலும் தன் இலக்கை எட்ட முடிந்ததில்லை. ஈழப் போரின் பல்வேறு
கட்டங்களில் போராளி இயக்கங்கள் இழைத்த அரசியல், ராணுவரீதியான தவறுகளைச்
சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதற்கும் தவறுகளைக் களைந்து சரியான அரசியல்
தந்திரங்களின் மூலம் சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெறுவதற்கும் தடையாக இருந்தது
கற்பிதங்களின் மீது கட்டப்பட்ட இந்தக் கொந்தளிப்பு தான். இயக்கங்களிலிருந்து
வெளியேறியவர்கள், அவற்றின் மீது அக்கறைகொண்ட அரசியல் விமர்சகர்கள் முன்வைத்த
விமர்சனங்கள் தமிழினத்துக்கு எதிரானவையாகப் புரிந்துகொள்ளப்பட்டதையும் அதன் விளைவாக
ஈழத் தமிழர்கள் உலகளாவிய ஆதரவை இழந்ததையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது
அவசியம். தமது உணர்ச்சிமயமான கொந்தளிப்பு அரசியல், சிந்தனையோ சாரமோ அற்ற மேடைச்
சவால்கள், மொண்ணையான புரிதல்களின் வழி ஈழப் போராட்டத்தை அதன் அழிவின் பாதைக்கு
வழிகாட்டியவர்கள் இன்று அதே பாதையில் தமிழக மக்களுக்கும் வழிகாட்டுகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தமிழினத்தை அழிக்க முற்படும் உலகளாவிய சதியின்
ஒரு பகுதி எனப் புரிந்துகொள்வதும் அந்தத் திசைவழியில் இந்தப் பிரச்சினையை அணுகுவதும்
ஆபத்தானது. நூற்றாண்டுப் பழமைகொண்ட இந்த அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான
ஆய்வுகளை நடுநிலையான வல்லுநர் குழுவைக்கொண்டு மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பற்றியே
யோசிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி அணையின் மட்டத்தை
உயர்த்துவதற்கும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவைப் போராடிப்
பெறுவதற்கும் நமக்குள்ள அரசியல் சாசனரீதியான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமென்பது
இதற்கு அர்த்தமல்ல. பகைமைக்கும் வெறுப்புக்கும் இடமளிக்காமல் உரிமைக்காகப் போராட
நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெறும் மக்கள்
போராட்டங்கள் நாடெங்கிலுமுள்ள பல தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதற்கும் நாம்
தனிமைப்பட்டிருப்பதற்குமான காரணங்கள் குறித்த சுயபரிசீலனை அவசியம்.
இந்தியாவிலிருக்கும் எந்தப் பெரிய அணையை விடவும் முல்லைப் பெரியாறு அணை வலு
குறைந்தது எனக் கருதுவதற்குப் பொறியியல் காரணிகள் எதுவும் இல்லை. இயற்கைப்
பேரிடர்களால் கூடங்குளத்து மின்நிலையத்துக்குப் பெரும் ஆபத்து என உணர்ச்சி பொங்கப்
பேசியவர்கள் அடுத்த மாதமே முல்லைப் பெரியாறு அணை எக்காலத்திலும் உடையாது எனச் சவடால்
விடுவது பகுத்தறிவுக்கே புறம்பானது. மாபெரும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே
சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தானவைதாம், ஓர் அணையைவிட அணுமின் நிலையம்
ஒப்பிடவே முடியாத அளவுக்கு அதிக ஆபத்தானது என்றபோதிலும். நமக்கிருக்கும்
நீராதாரங்களைச் சேமித்தல், நீரை விரயமின்றிப் பயன்படுத்தல், மழைநீர்ச் சேமிப்பு,
சுற்றுச்சூழலுக்குக் கேடுசெய்யாத பாசன, மின் உற்பத்தி முறைகள் எனத் தொலைநோக்கோடு
செயல்படுவது அவசியமானது.
நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள நமக்குத் தேசிய அரசியலில் உள்ள
முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி மைய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தருவதற்கான
வாய்ப்புகள் உள்ளன. தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் தங்கள் மாநில நலன்களை
மட்டுமே மையப்படுத்தித் தாம் விரும்பும் முடிவை எட்டும் நோக்கத்துடன் இந்தப்
பிரச்சினையை அணுகுவதைக் கைவிட வேண்டும். அணையைக் கட்டுவது அல்லது இருக்கிற அணையை
உடைப்பது இரண்டுமே அவற்றை முன்வைத்துப் பரப்பப்படும் பீதியைப் போல் எளிய காரியங்கள்
அல்ல. தற்காலிக அரசியல் நலன்களிலிருந்து விலகி, இரு மாநில மக்களின் நலன்களைப்
பாதுகாப்பது பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன் இப்பிரச்சினையை அணுகுவதற்கு நம்
தலைவர்களால் முடியும் என்றால் தீர்வு மிக எளிமையானதாகிவிடும். நம்மால்
தர்க்கரீதியாகவும் பகுத்தறிவோடும் சிந்திக்க முடியாததுதான் துரதிர்ஷ்டம். சுயநல
அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை முன்னிறுத்திச் சிந்திக்கக்கூடிய ஒரு
தலைமைக்காக நாம் இன்னும் காத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
|