Google   www kalachuvadu.com

தேவேந்திர பூபதி கவிதைகள்
ஓவியங்கள்: செ. சீனிவாசன்

நீர்த் தாமரை மணல்

முதல் கப்பல் இன்னும் வந்து சேரவில்லை
கலங்கரை விளக்கருகே
மாலையின் பொன்வண்ணக் கிரணங்கள்
கரை மீனவர்களின் படகு
அதில் மிளிர்கிறது

கால்கள் மணல் புதைய
அலைவீசும் காற்றில்
மண் கண் விழுந்து எரியும்
வெகு நீளக்கரை
நண்டுகள் காய்ந்த குழிகளுக்குள்
ஓடி இறங்குகின்றன

நெய்தலைப் பாடிய புலவன்
நீர்த் தாமரை மணலில்
எவளோடு கூடியிருப்பான்
கள் பானைகள் உருட்டி
எச்சாமம் மரக்கலம் தள்ளியிருப்பான்

இந்நிலத்துப் பாணன் வழியிலோர்
கவிஞன் என்னை
ஆழ்கடல் வெருட்டுகிறது
முன்னிரவில் வருவேன் என்றவள்
நகரத்தின் எச்சாலை நெருக்கடியில்
காத்திருக்கிறாளோ

தொலைவில் எரியும் கட்டடம் போல் ஒரு கப்பல்
மீனவர்கள் மறைந்துவிட்ட இருள்
வீடு திரும்பச்சொல்லி இரைச்சலிட்டு
உறுமுகிறது கடல்

ஒரு நண்டுவளைக்குள் குதித்து
தாமதமாக வீடு வந்துசேர்ந்தேன் நான்

அறையெங்கும் கடல் வாசனை.

நெடுந்தூரம் போக வேண்டியவன்

நடு வழியில் அழைப்பதால்
என்ன சொல்லிக் கடந்து போவது
ஆரம்பம் முடிவும்
தெரியும் என்று சொல்கிறீர்கள்
எதற்காகக் கடக்கிறேன் என்ற
யூகமும் உங்களிடமே இருக்கிறது

எங்கிருந்து எதை
எப்படி ஏன்
அதை எக்காலத்தில் கடக்கிறேன்
என்பதற்கு உங்கள் பழைய கூண்டில்
அகப்படும் வகையில்
ஏதேனும் நான் சொல்லப் போய்
இவ்வளவுதானா எனக் கேட்கவும்
தயாராய் இருக்கிறீர்கள்

நடுநிசியில் நின்று விழித்து மௌனமாய்
ஒளி பயில்கிறது
நெடுந்தூரம் போக வேண்டிய
நிலா.

o

மொட்டை மாடியில் கிடந்தேன்
சும்மாத்தான்
மழைக்காலப் பகல்
வெயிலும் இல்லை வெக்கையும் இல்லை
கட்டாந்தரையில் அழுந்திய முதுகின் கீழ்
அழுந்திய பருக்கைக் கற்கள்
கண்ணில் நிறைவது வானம் இல்லை
பார்வையின் அளவே பரந்து கிறங்கிய
மனம் என்றது மனம்
அளப்பரிய விரிவின் முன்
அடையாளம் எதுவுமற்று
நசுங்கிக் கிடக்கும்
பருக்கைக் கல்லென உணர்ந்தேன்
அற்பன் அற்பன் என்று துடித்தது நாடி
கொதிக்கும் வாழ்வு பலிகொண்ட தருணங்களும்
தினசரியின் பூகம்பத்தில் புதைந்த ஆசைகளும்
நிலவு உறங்கிய நேரத்தில்
கொள்ளைபோன கனவுகளும்
இன்னும் இன்னுமென்று வழக்கம்போல்
துயரத்தின் புதைகுழியில்
அமிழ்ந்துகொண்டேயிருந்தேன்
மதகுடைந்து பெருகியதில்
அணை முழுதும் வெளியோடி
நீர்க்கொடிகளின் பசுமை மண்டி
வறளவும் தொடங்கியது
துரிதமாய்ப் படர்ந்த பாலையின் பரப்பில்
தகித்து ஊர்ந்தபோது
நெற்றியில் சொட்டியது
ஈரத்தின் குளுமையொன்று
எச்சமோ
- என்று விதிர்த்தேன்.
இல்லை, நீர்த்துளி.
பெயரற்ற பெருங்கருணை
விரலால் தீண்டியதோ?
விம்மியது மனம்
அற்பன்தான் நான். ஆனாலும்
அவ்வளவு அற்பமில்லை.

உள்ளடக்கம்