Google   www kalachuvadu.com

சிற்றிதழ் அறிமுகம்
மண்குதிரை

அடவி

சிற்றிதழ்களின் எண்ணிக்கை பெருகி வரும் இன்றைய சூழலிலும் பொருளாதாரச் சிரமங்களுக்கு அப்பாற்பட்டு எந்தச் சமரசங்களுக்கும் இடமளிக்காமல் தொடர்ந்து ஒரு தீவிர இலக்கிய இதழாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்வதென்பது எளிய காரியமல்ல. அடவி அதைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறது. படைப்பிலக்கியம் சார்ந்து இயங்கிவரும் இவ்விதழ் செறிவான அரசியல் கட்டுரைகளுக்கும் இடமளித்து வருகிறது. சென்ற இதழில் த கேரவேனில் வெளிவந்த ராமச்சந்திர குஹாவின் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. செப்டம்பர் இதழ் சிறுகதைக்கான சிறப்பிதழ்போல் வெளிவந்திருக்கிறது. எளிய விவரணைகளையும் நுட்பமும் ஆழமும் மிக்க படிமமாக மாற்றும் தேவிபாரதியின் கதை சிறந்த வாசிப்பனுபவம் தருகிறது. ஸீஷீஸீ-றீவீஸீமீணீக்ஷீஇல் உள்ள ராகவனின் கதை துண்டுத் துண்டான சித்திரங்களிலிருந்து துலக்கமடைகிறது. சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கும் காஃப்காவின் கதை பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கிறது. தார்க்கோவஸ்கியின் மிரர் பற்றிய ஜீ. முருகனின் கட்டுரையும் பெருமாள்முருகனின் புதிய பத்தியும் கவனம்கொள்ளத்தக்கவை.

ஆசிரியர் : தில்லை முரளி,
தொடர்புக்கு : 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம்-606806.
பேச:9994880005 adavimagazine@gmail.com


பவளக்கொடி

பவளக்கொடி செறிவான வடிமைப்புடன் காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், நாவல் பகுதிகள் என உரைநடை இலக்கியத்தின் பல்வேறு எழுத்து வடிவங்களை வாசகனின் பார்வைக்கு வைக்கிறது. சிறுகதைகளில் பாலைநிலவனின் நிழல் பூனை யூகிக்கமுடியும் எளிய பிரதிதான் என்றாலும் விவரணைகளில் சிறப்புடையதாகிறது. எஸ். சண்முகம் மொழிபெயர்த்துள்ள தாஸ்தாவஸ்க்கியின் இடியட் நாவல் பகுதி இளம் வாசகர்களிடம் ஆர்வத்தைத்தூண்டக் கூடியது. கோணங்கியின் ஆயிரம் வயதான ஆமையும் ஒரு சாக்கியன் என்னும் புதிய நாவலின் பகுதியும் இடம்பெற்றுள்ளது. கவிதைகளில் ஸ்ரீசங்கரின் கவிதையும் வியாகுலனின் கவிதையும் கவனத்தை ஈர்க்கின்றன. சீன நாவலான மைமோசா நாவல் பற்றிய ஹரணியின் கட்டுரையும் குறிப்பிடத்தகுந்தது. இரா. சேதுராமன் தொகுத்துள்ள குழந்தைகளின் வாய்மொழிக்கதைகள் வாசிப்புக்குப் புத்துணர்வளிக்கின்றன. புதிய இளம் படைப்பாளிகளுக்கான வெளியாக உருவாகியிருக்கும் பவளக்கொடி நம்பிக்கைகையளிக்கும் சிற்றிதழ்.

ஆசிரியர் : வியாகுலன்,
தொடர்புக்கு : 8/37, பி. ஏ. ஒய். நகர், குழந்தை இயேசுகோவில் அருகில்,
புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 5.
பேச: 9442346504

உள்ளடக்கம்