|
2010 ஆண்டு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது தமிழ் லினக்ஸ் கேடிஈ
குழுவினருக்கு அளிக்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் டொராண்டோ தமிழ்
இலக்கியத் தோட்டமும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து தமிழ்க் கணிமைக்கான
முக்கியப் பங்களிப்பிற்காக இவ்விருதை வழங்குகின்றன.
தமிழ்க் கணினி வரலாற்றில் 2001ஆம் ஆண்டில் கேடிஈயின் (KDE) முதல் வெளியீடு ஒரு
முக்கிய நிகழ்வாகும். பல தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 2002ஆம் ஆண்டில் தென்னாசிய
மொழிகளிலேயே முதன் முறையாகத் தமிழில் முழுமையான இடைமுகம் (interface) கொண்ட
பயனுக்கேற்ற தமிழ்க் கணினி வெளியானது. இதன் மூலம் கணினியைப் பயன்படுத்த ஆங்கிலம்
தெரிந்திருக்க வேண்டும் என்ற தடை ஓரளவிற்கேனும் நீக்கப்பட்டது. கோப்புகள்
எழுதுதல், இணையம் உலாவல், மின்னஞ்சல் செலுத்தல், நிழற்படங்களைத் திருத்தல்,
ஒலி/ஒளிக் கோப்புகளைக் களித்தல் போன்ற அன்றாடப் பயன்பாடுகளை முற்றிலும் தமிழிலேயே
நிறைவேற்றல் சாத்தியமானது.

தமிழ் லினக்ஸ் அமைப்பு 2000 ஆண்டுவாக்கில் ஆங்காங்கே தனித் தனியாகச்
செயல்பட்டுக்கொண்டிருந்த சிலர் ஒன்றிணைய உருவானது. இவர்களில் துரையப்பா வசீகரன்,
தினேஷ் நடராஜா, சிவராஜ், சிவக்குமார் சண்முகசுந்தரம் போன்றவர்கள் மிகவும்
முக்கியமானவர்கள். இவர்களில் பலர் இந்தியாவிற்கு வெளியே அமெரிக்கா, கனடா, ஜப்பான்
போன்ற நாடுகளில் வசித்திருந்தார்கள். லினக்ஸ் உலகைத் தாண்டி, ஆரம்பக்
கட்டத்திலிருந்த மிகச் சிக்கலான தமிழ்க் கணினி நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்ததில்
இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. எந்தவொரு நிறுவனரீதியான அமைப்பின் உதவியின்றி
முழுமையான தன்னார்வலர் பங்களிப்புடன் மட்டுமே முதல் தமிழ்க் கணினி
சாத்தியமாக்கப்பட்டது. இதற்கு உலகளாவிய திறமூலம் (open source), தளையறு மென்கலன்
(free software) கொள்கைகள் பேருதவியாக இருந்தன. கணினியில் செயலிகளை
வெளியிடும்பொழுது அவற்றின் ஆணைமூலங்களையும் (source codes) வெளியிட வேண்டும்
என்பது திறந்த மூல வழிமுறையின் கொள்கை; தொடர்ச்சியான நுட்ப வளர்ச்சிக்கு இது
முக்கியமென இந்த வழிமுறைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் கருதுகிறார்கள். கூடவே எவ்விதக்
கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயனாளர் தன் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளவும்
அம்மாற்றங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் தளையறு மென்கலன்கள் வழிவகுக்கின்றன.
மென்கலனைத் தயாரிப்புரீதியான பொருள்களாகக் கொள்ளாமல் அறிவுரீதியான பொருளாகப்
பார்க்க வேண்டும் என்பது தளையறு மென்கலன் அமைப்பின் கொள்கை. சுந்தர ராமசாமி
விருதுக் குழு தமிழ்க் கணினியின் ஆரம்ப நாட்களில் இந்தத் தன்னார்வலர்கள் சந்தித்தத்
தீவிர நுட்பப் பிரச்சினைகளுக்கு இவர்கள் கண்ட தீர்வுகளைப் பெரிதும் பாராட்டுகிறது.
இவை வருங்காலத்தில் செல்பேசி, மின்னூல்கள் படிப்பிகள், உள்ளிட்ட பல
முன்னேற்றங்களுக்கு முன்னோடியாகவிருக்கும் என்பது உறுதி. நிறுவன உதவிகள் இல்லாமல்,
பெரிதும் யாதொரு தனிநபரின் அடையாளமுமின்றிச் செயல்ரீதியான இக்குழுவின் சாதித்தல்
போற்றத்தக்கது. இதை அங்கீகரித்துப் பாராட்டுமுகமாக இவ்வாண்டின் விருது தமிழ் கேடிஈ
குழுவிற்கு வழங்கப்படுகிறது. கணினி உலகைத் தாண்டிப் பல குழுரீதியான தன்னாவ சமூக
அமைப்புகளுக்கும் இவ்விருது ஊக்கமளிக்க வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.
வெங்கட்
|