|
காந்தி: நீங்கள் சொற்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
(நாஸ்திகரான கோராவுடனான உரையாடல் ஒன்றில், காந்திஜியின் சம்பாஷணைகள், 1965)
காலச்சுவடு இதழ் 127இல் வெளியான ‘மகாத்மா சொல்லும் உடலும்’ கட்டுரையை பிரேம்
இவ்வாறு தொடங்குகிறார்.
‘காந்தியை “மகாத்மா” எனச் சுட்டுவதற்கு எனது மொழிப்புலன் இடம் தரவில்லை. அதில்
உள்ள முரண் என்னை வெறுமையாக்குகிறது... மகாத்மா என்பதில் உள்ள உயர்தனி நிலை எனக்கு
ஏற்புடையதல்ல. பாபாத்மா என்னும் எதிர் நிலையை அது கொண்டிருக்கிறது.’
மகாத்மா காந்தியின் விமர்சகர் பலரும் தத்தமது அரசியல் முன்னுரிமைகளின் அடிப்படையில்
காந்தியின் செயல்பாடுகளில் தாங்கள் உணர்ந்த முரண்பாடுகளையும் குறைகளையும்
சுட்டிக்காட்டி காந்திக்கு ‘மகாத்மா’ என்ற ‘உயர்தனி நிலை’யை அளிக்க
மறுத்திருக்கின்றனர். சிலர் ‘திரு. காந்தி’ என்று அந்நியோன்யம் தவிர்க்கப்பட்ட
விதத்தில் குறிப்பிட்டனர். தமிழ்நாட்டில் காந்தியின் விமர்சகர்கள் நாகரிகமான
விளிப்பா கேலியா எனப் பிரித்தறிய முடியாத விதமாக ‘காந்தியார்’ என்று சுட்டினர்.
ஆனால் மகாத்மாவுக்கு அந்த அடையாளத்தைத் தர மறுப்பதற்காகப் பிரேம் கூறும் காரணம்
வினோதமானது. இத்தகைய பார்வைக்கு முன்னோடியாகப் பிரேம் இருப்பார் என எண்ணுகிறேன்.
முதலில், ‘மகாத்மா’ என்பது ‘பாபாத்மா’ என்ற எதிர்நிலையை எப்படிக்
கொண்டிருக்கமுடியும்? மரபான வழக்கத்திலும் ‘பாபாத்மா’வின் எதிர்நிலை
‘புண்ணியாத்மா’. ‘மகாத்மா’ என்பது எதிர்நிலை ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று
கருதினாலும் அந்த எதிர்நிலை ‘அற்ப ஆத்மா’. இது பற்றி காந்தியே குறிப்பிடுகிறார்.
‘நானும் உங்களைப் போலவே தவறிழைக்கக் கூடிய சாதாரண மனிதன்தான். நான் என்னை மகா
ஆத்மா என்றோ பிறரை அற்ப ஆத்மாக்கள் என்றோ என் கனவில் கூட ஒரு போதும்
நினைத்ததில்லை. படைத்தவனின் முன்னிலையில் நாம் அனைவரும் சமம்’ (ஹரிஜன் இதழ் 30
மார்ச் 1940).
இரண்டாவதாக, ‘பாவம்’ என்ற சொல்லை நிரந்தரத் தன்மை பெற்ற பொருளில் காந்தி
கையாண்டாரா? ‘பாவம்’ என்பதற்கு பிராமணீயம் உருவாக்கிய சாதியச் சடங்காச்சாரங்களை
அடிப்படையாகக் கொண்ட, மறுமையில் தண்டனைக்குரியது என்ற பொருளிலோ கிறித்தவத்தின்
‘ஆதி பாவத்தின்’ விடுபடாத தொடர்ச்சி என்ற பொருளிலோ காந்தி பயன்படுத்தியதாகத்
தெரியவில்லை. ‘ஆண்டவன்தான் அருள் ஒளி, அந்தகாரமல்ல; ஆண்டவன்தான் அன்பு, துவேஷமல்ல;
ஆண்டவன்தான் சத்தியம், அசத்தியமல்ல’ என்று ஆண்டவனை உயர்ந்தநெறிகளின் பூரண வடிவமாகக்
கண்ட காந்தி இந்த நெறிகளுக்கு எதிரான மனிதச் செயல்களைக் குறிப்பிடும் அரிய
தருணங்களில் மட்டுமே ‘பாவம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தீண்டாமையை
மிகப்பெரிய பாவமாக அவர் குறிப்பிட்டது இந்த அடிப்படையில்தான்.
மூன்றாவதாக, இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதநேயரில் ஒருவரும் நுண்ணுணர்வு
பெற்ற கவிஞருமான ரவீந்திரநாத் தாகூர், காந்தியைத் தவிர்த்து பிற மனிதர்கள்
‘பாபாத்மாக்கள்’ என்று எதிர்மறைப் பொருள் கொள்ளும்படியான அடையாளத்தைக் காந்திக்கு
வழங்கியிருக்கிறார் என்ற வாசிப்பு துரதிருஷ்டவசமானது.
பொது வாழ்வில் ஈடுபடும் ஆளுமைகளுக்கு அளிக்கப்படும் ‘உயர் தனிநிலை’ அடையாளங்கள்
உணர்ச்சியிலிருந்து பிறப்பதால் உயர்வு நவிற்சித் தன்மை கொண்டவை.
சொல்லாராய்ச்சியின் அறிவுச் சட்டகத்திற்கு அப்பாற்பட்டவை. இதனால்தான் நவீன
அறிவாளிகளால் பரிசுகளை வழங்க முடிகிறது; பட்டங்களை வழங்க முடிவதில்லை.
தி.அ. ஸ்ரீனிவாசன்
|