Google   www kalachuvadu.com

கடிதங்கள்

போபால் பாழ் நிலத்தின் கண்ணீர் எனும் தலையங்கம் படித்தேன். மக்கள் நலத்தில் கரிசனமுள்ள சில பத்திரிகைகள் “இது ஒரு மரணம் பரப்பும் கம்பெனி இதை இந்தியாவிலிருக்கவிட்டால் பெரும் விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பலரின் உயிருக்கு ஆபத்து விளையும் வாய்ப்பிருக்கிறது என எச்சரித்தன. ஆனால் இந்த எச்சரிக்கைகள் நமது அரசைப் பொறுத்தவரை ‘செவிடன் காதில் ஊதிய சங்கொலி’யாக மாறியது தான் மிச்சம். கம்பெனி ‘முதலாளி ஆண்டர்சனை’ பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்ததில் காண்பித்த வேகத்தை விபத்தில் சிக்கி மரணமும் ஊனமும் அடைந்த அப்பாவி மக்களிடத்தில் நமது அரசு காட்டவில்லை. விபத்தில் மரணமடைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என நினைக்குமளவுக்கு ஊனமுற்றவர்களில் பலர் இன்றும் அவதிப்பட்டு வருகிறார்கள்! 25 வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் “நீதி”யைப் பார்த்தால் அழுவதா அல்லது வியப்பதா என்றே தெரியவில்லை. ஆண்டர்சன் இன்று அமெரிக்காவில் சகல வசதிகளுடன் வாழ்ந்துவருகிறார்! மிகத் தாமதமாகக் கிடைத்த நீதி மிகப் பரிதாபமான நிலையிலிருக்கிறது!

கே.எஸ். கீழாம்பூர் ராமையா
புதுச்சேரி

போபால் பாழ் நிலத்தின் கண்ணீர் தலையங்கம் ஏராளமான, விவரங்களுடன், மிகச் சிறப்பாக எழுதப்பெற்றுள்ளது. போபால், பாழ் நிலம் ஆகிவிட்டது. தாமதமாக வழங்கிய தீர்ப்பு. நீதியும் மறுக்கப்பட்டு உள்ளது. எவ்வளவு உதவிகள் செய்தாலும் நிதி வழங்கினாலும் ஆபத்தான அரைகுறைக் குழந்தைகள், எவ்வளவு பெரிய அவலம், ஏன் நம் அரசுகள் இம்மாதிரி நடந்துகொள்கின்றன? நினைத்தால், நெஞ்சு பொறுக்கவும் இல்லை தன் சொந்த அரசாங்கத்தாலும் நீதித் துறையாலும் போபால் மக்கள், மோசமாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதால் அவர்களுக்கு நியாயம் வழங்குவதில் அக்கறைகாட்டவில்லை என மனித உரிமை அமைப்புகள், அரசைக் குற்றம் சாட்டுகின்றன. துயருற்று வாடும் போபால் மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள், முதுகு எலும்பு இல்லாத அரசும் உணர்ச்சி இல்லாத நிர்வாகமும் நம்நாட்டின் பெரிய சாபக்கேடு.

எஸ்.எஸ்.ஆர். லிங்கம்
திருவில்லிபுத்தூர்

நமது கல்விச் சூழல் குறித்து தொடர்ந்து விவாதங்களையும் செறிவான கட்டுரைகளையும் காலச்சுவடு வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது.

நமது அரசைப் பொறுத்தவரை ஒரு கார்ப்பரேட் முதலாளி மனோபாவத்துடனே செயல்படுகிறது. அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரமான குடிநீர், மருத்துவம் போன்றவற்றைத் தனியார் வசம் அளித்துவிட்டு, மதுபானக் கடைகளை வீதிதோறும் கடைவிரித்து நடத்துவது கேவலமான செயல். வணிகமயமாக்கப்படுவதில் இருந்து கல்வியைக் காப்பாற்ற எத்தனையோ காரணிகள் இருந்தாலும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது மிக முக்கியம். பெரும்பான்மையான பள்ளிகள் சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதி இன்றி மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன.

பாடத்திட்டங்களை மட்டும் சமச்சீராக்கினால் போதாது கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளது போல் சமத்துவம் வளரக்கூடிய இடம் பள்ளிக்கூடம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சமத்துவபுரத்தாலோ பேருந்து படிக்கட்டுகளில் வசனங்களை எழுதிவைப்பதாலோ சாதிக்க முடியாததை இது சாதிக்கும்.

அரசுப் பள்ளி ஆசிரியர் சுமார் ரூ. 20,000 சம்பளம் பெற்றுக்கொண்டு தன் குழந்தைகளை அவர் வீட்டின் அருகிலேயே இருக்கும் அவர் நடத்தும் பள்ளியில் பயிலச் செய்யாமல் ரூ. 2,500 சம்பளம் பெறும் ஆசிரியர் நடத்தும் தனியார் பள்ளிகளில் பயிலச் செய்கிறார்கள். இவர்களுக்கு எதற்காக அரசு வரிப்பணத்தை வாரி இறைக்க வேண்டும்? ஓட்டு வங்கியைத் தவிர வேறென்ன?

ஆசிரியர்களுக்குத் தரத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கலாம். மேலைநாடுகளைப் போல் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு மதிப்பெண் இடச்செய்யலாம். நல்ல ஆசிரியர் பல பள்ளிகளுக்குச் சென்று வகுப்பெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும். முழுநேர ஆசிரியர்கள் இல்லாமல் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பகுதிநேர (Guest Lecturer) வகுப்பு எடுக்கலாம். அறிவுத் துறையின் எதிர்காலம் குறித்துக் காலச்சுவடு தவிர இங்கே கவலைப்படுபவர்கள் யாரும் இல்லை.

க. அருணாசலம்,
கோவை

‘தமிழ்ப் பாடநூல்கள் சமமாய்ச் சீரழிந்தவை’ என்று பிரபஞ்சன் பட்டியலிடும் குறைகள் நியாயமானவை; கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டியவை. அவர் ஒன்பதாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைப் பாடங்களைக் குறிப்பிட்டுத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் ஒன்பதாம் வகுப்புத் துணைப்பாடம் (மறுபதிப்பு 2007) நற்கதைகள் பகுதியில் பிரபஞ்சன், அசோகமித்திரன், பா. செயப்பிரகாசம் உள்ளிட்டோரது கதைகள் இடம் பெற்றுள்ளன.

பிரபஞ்சன் குறிப்பிட்ட மற்றொரு நூல் மேல்நிலை முதலாமாண்டு துணைப்பாடம். அது (மறுபதிப்பு 2008) புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நீல. பத்மநாபன், தோப்பில் முஹம்மது மீரான், வண்ண நிலவன் போன்றோரது சிறுகதைகளுடன் காணப்படுகிறது.

இது தவிரப் பத்தாம் வகுப்புத் துணைப்பாடத்தைப் (மறுபதிப்பு 2008) பார்க்கையில் தி. ஜானகிராமன், கி. ரா, அசோகமித்திரன், பிரபஞ்சன், சோலை சுந்தர பெருமாள் உள்ளிட்டோரது கதைகள் நிறைந்துள்ளன.

மேலே குறிப்பிட்டவர்களுள் பெரும்பான்மையோர் வெகுசன எழுத்தாளர்கள் அல்ல; ஆனால் சமகாலத் தமிழ்ச் சிறுகதை பங்களிப்பில் இன்றியமையாதவர்கள். அவர்கள் கதைகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட நிகழ்வைப் பிரபஞ்சன் மறைத்துவிட்டு ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். ஒன்பதாம் வகுப்புப் பாடநூலை ஆராய்ந்து குறைகளைப் பட்டியலிட்ட அவருக்கு அதில் தன்னுடைய கதை இடம்பெற்றதுகூடத் தெரியவில்லையா?

மு. இளங்கோ,
கருப்பூர்

தமிழ்ப்பாட நூல் இறைவாழ்த்துடன் தொடங்குவதைப் பிரபஞ்சன் சொல்லியிருந்தார். அது இறை வாழ்த்தல்ல; இறைவன் வாழ்த்து. கண்ணில் கருத்தில் கலந்த கருணைமிகு ஈசனின் இணையடி நீழலின் பெருமையைப் பாடுவது. மேற்படி கடவுள்மார் சமற்கிருத மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு இருள் நிறை கோயில்களில் உறைபவர்கள். அப்பம், அவல், பொரி அறியாத வடக்குவாய்ச் செல்வி, வேப்பிலைக்காரி, இசக்கி-ஏன் அறம் வளர்த்த நாயகி, மீனாட்சி, காந்திமதியைக்கூட வாழ்த்துவதில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

அவனின் புகழைக் கண்டும் கேட்டும் ‘சொல்லியும்’ வரும் தமிழாசிரியன் நான். பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம்வரை இறைவியை வாழ்த்தும் பாடலைக் கண்ணால் கண்டதில்லை. தமிழன்னைக்குப் பாடல் புனையும் புலவர் பெருமகனார் இறைவியை விடுத்து இறைவனைப் போற்றுதல் ஆண் என்பதற்கன்றி வேறெதற்கு.

திருவரங்கப் பெருமாளின் சிறப்புத் தரிசனத் திருக்கூட்ட வரிசையில் இடம்பெற 250 ரூபாயும் அதே வளாகத்தில் தாயார் சந்நிதியை வணங்க ஐந்து ரூபாயும் வசூலிக்கும் அறநிலையப் பேதம் உறுத்தாத தமிழ்க் கூட்டத்துக்கு இறைவியைப் பற்றி என்ன கவலை?

காளையங்கன்றுகளிடமிருந்து எந்தப் பாலையும் பெற முடியாது என்றாலுங்கூட ஐம்பால் பற்றி விளக்கும் இலக்கணச் சான்றோர் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பாலென ஆணுக்குப் பின் பெண்ணை நிறுத்துவர். படர்க்கை பற்றிச் சொன்னாலும் அவன் அவள் அதுதான். அவளுக்குப் பின் அவன் வரமாட்டான்.

தனியார் ஆங்கிலப் பாடநூல்களில் சாதனைச் சிறுமியரைப் பாராட்டும் ‘from the girl star series’ என்ற வகையிலான கதைகள் உண்டு. தமிழ்ப்பாட நூல்களில் சிறுமியர், நட்சத்திரம் ஆக முடியாது. ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் ஒரு பாடம் - அண்ணன் எல்லாம் அறிந்தவன். அண்ணன் விஷயத்தைச் சொல்லத் தங்கை கேட்பாள். அமுதா கேட்கிறாள் செழியன் சொல்கிறான் செழியன் கேட்க அமுதா விளக்குவது எந்நாளிலோ?

செய்யுள் பகுதி முழுவதும் ஆண் புலவர் ராஜ்ஜியந்தான். போனால் போகிறது என்று ஔவையார் பாடல் ஒன்று உண்டு. ஆடவர் வாழும் நிலமே நல்ல நிலம் என்று ஔவைஆண் பெருமை பேசுகிறாள் அந்தப் பாடலில். ‘பத்தினிமார்களைப் பழியாதே’ என்கிறார் சித்தர். யாரெல்லாம் பத்தினிமார் என்று விளக்குவதில் தமிழாசான்களுக்குச் சிரமம் இராது. குழந்தைகள்தாம் பாவம். ஐந்தாம் வகுப்புவரை ஆசிரியைகள்தாம் பாடம் நடத்த வேண்டும் என்கிறது அரசு. பாடநூல் தயாரிப்புக் குழுவில் பெண்களுக்குப் பெரிய இடமில்லை.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’. ‘ஆதிபகவன் முதற்றே உலகு’, ‘கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தானாம்’ என்று உலகமே இறைவரை ஆணாகக் காணும்போது அடுப்பூதாப் பெண்டிர்க்குப் படிப்பு இருக்கு; பாடநூல்களில் இடம் எதற்கு என்கிறார் திருவாளர் ஆண். அல்ல ஆணார்.

க. காசி மாரியப்பன்,
திருச்சி

தமிழ்வழிக் கட்டாயக் கல்வி பயின்றவர்களுக்குத் தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் இனி முன்னுரிமை வழங்கப்போவதாகவும் அதற்கான சட்டம் விரைவில் கொண்டுவரப்படுமெனவும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 நிறைவையொட்டி முதல்வர் கருணாநிதி இடம், பொருள், காலம் கருதி ஒரு அறிவிப்புச் செய்திருந்தார். பொறியியல் மருத்துவம் முதலான உயர்கல்வி தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்க் கல்விக்கும் இது பொருந்தும். இல்லையென்றால் வெறும் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழைப் பயிற்றுவிப்பதா என்று பரிகாசத்திற்குள்ளாகிவிடும்.

தமிழோடு பண்பாடு ஒழுக்கமும் கற்றுத்தர வேண்டிய கட்டாயத்தைக் கல்வி சிறப்புப் பகுதி கோடிட்டுக் காட்டியிருந்தது. சித்த மருத்துவம் என்றால் தமிழில் மட்டுமே சாத்தியம். ஆங்கில மருத்துவத்தையும் அதி நவீன விஞ்ஞானத்தையும் பயிற்றுவிக்கத் தயாராக வளர்ந்து வந்திருக்கிறதா தமிழ் மொழி? கல்வியியல் கல்லூரிகளில் கலாச்சாரத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மாறாகக் குறைந்த முதலீடு அதிக லாபம் என்று கின்டர் கார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே முகமூடிக் கல்விக் கொள்ளையர்களின் வேட்டைக்காடானது குறித்துப் பெருமாள்முருகன் கூறிய குற்றச்சாட்டு அர்த்தம் மிக்கது.

தமிழில் படித்தால்தான் அரசாங்க வேலை என்னும் கவர்ச்சிகரமான திட்டத்தால் தமிழர்களுடைய முழு எதிர்காலமே சந்தோஷக் கடலுக்குள் தள்ளி விட்டாற்போல் தள்ளாடவைக்கின்ற ஒரு டாஸ்மாக் தந்திரமாகத் தெரிகிறது. ஏட்டுச் சுரைக்காய்ப் பாடத்திட்டம் எப்படி நடைமுறைக்கு உதவும் என்பது புரியவில்லை.

சாமி,
திருவண்ணாமலை

நம் கல்வியமைப்பு மீது காலச்சுவடு தொடர்ந்து கவனம் குவித்துவருவது வீண்போகாது. கடலூர் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உண்டு. அப்துல்கலாம் வருகைதர சம்மதிக்காத பல்கலைக்கழகம். கஸ்டமர்கள் பண மூட்டையுடன் உள்ளே சென்று, தெரிந்ததை மட்டும் எழுதிவைத்துவிட்டு, விரும்பிய பட்டத்துடன் வெளியேறலாம். பணமூட்டையின் எடைக்குத்தக்க பட்டங்கள் கிடைக்கும். அங்கே எம். பி. ஏ பட்டம் “வாங்கிய” என் நண்பருக்கு, ஆங்கிலத்தில் வேலைக்கான விண்ணப்பம்கூட எழுதத் தெரியாது. சிபிசி சிலபஸ் பள்ளியில் நண்பரின் குழந்தையைச் சேர்க்கச் சென்றிருந்தோம். அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் சிறுவனை விசாரித்தேன். ஒன்றாம் வகுப்பு முழுவருடச் செலவு 40,000 ரூபாய். கோடை விடுமுறை கிடையாது. பண்ருட்டி அருகே கிராமமொன்றில் கைவிடப்பட்ட ஆரம்பப் பள்ளி ஒன்றைப் பெற்றோர்கள், ஆர்வமிக்க ஆசிரியர்கள் சிலர் இணைந்து சிறப்பாக நடத்துகிறார்கள். அரசாங்கமே அப்பள்ளியை ஏற்று நடத்தக்கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

குறிஞ்சிப்பாடி அருகே எந்த உயரதிகாரியும் எட்டிப்பார்க்காத ஒரு குக்கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. அதில் உதவியாசிரியர் ஒருவர், தனக்குப் பதில் வேறு ஒருவரை 3,000 ரூபாய் சம்பளம் தந்து, தன் பணியைக் கவனிக்கப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். 2000 ரூபாய் தலைமை ஆசிரியருக்கு, மீதி சம்பளம் அவருக்கு. அந்தப் பள்ளியில் ஏனையோர் ஆசிரியைகள் என்பதால், ஒரு பிரச்சினையும் நேரவில்லை. மிக சமீபமாகத்தான் கல்வி அலுவலகம் விழித்துக்கொண்டு, தலைமை ஆசிரியருக்கு மெமோ அனுப்பியுள்ளது. உதவியாசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறது (மெமோ கொடுக்க). 3,000 ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்தவரை என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். சில கிராமங்களில் இன்னும் “ஆண்டைகள்” இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளின் யூனிபார்ம் முதல், ஆசிரியர்கள் வருகை, பிற்படுத்தப்பட்டோருக்கான உதவித் தொகை என எதுவும் இந்த “ஆண்டைகள்” மனது வைத்தாலே பிள்ளைகளுக்குப் போய்ச் சேரும். இந்த நவீன ஆண்டைகளை “ஊர் பிரசிடெண்ட்” என்றும் அழைக்கிறார்கள். கருப்புப் பணம் மூலம் அரசியல்வாதிகளையும் தேர்தலையும் விலைக்கு வாங்கும் பெருமுதலாளிகள், பினாமி பேரில் சொத்து வாங்கிக் குவிக்கும் மூன்றாம் தர அதிகார வர்க்கம் (இவர்கள் கையில்தான், PRE KG முதல் மருத்துவம்வரை சகல கல்வியும் சிக்கிக் கிடக்கிறது.)

தன்னம்பிக்கையும் சுதந்திரச் செயல்பாடுகளையும் கொண்டவனாக மனிதனை உருவாக்கும் கல்வியமைப்பை இவர்களிடம் இருந்து பெறப் போராடும் கையறு நிலையே இன்று நம்முன் நிற்கும் மிகப் பெரிய சவால். கடந்த +2 தேர்வில், பிரபல பள்ளிகள் முக்கி முனக, 100% தேர்ச்சி காட்டியது கடலூர் அரசுப் பெண்கள் பள்ளி. சகல முனைகளிலும் செயல்பாட்டை நம்பிக்கையுடன் முன்னெடுப்போம்.

சீனு,
கடலூர்

“உலகம் தேடும் தமிழ்” கட்டுரையில் கி. நாச்சிமுத்து, பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்பதோடு தமிழ்நாட்டுச் சாத்திரங்கள் பிறநாட்டு மொழிகளில் மொழியாக்கம் பெற வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தமிழ் மொழி ஒன்றை மட்டுமே முதுகலையில் படித்துவிட்டு வி.றிலீவீறீ, றிலீ.ஞி பட்டம் பெற்றவர்கள் இனி இந்திய மொழிகள், பிறநாட்டு மொழிகள் ஏதேனும் ஒன்றில் புலமைபெற்றால் மட்டுமே ஆய்வுப் பட்டங்கள் பெறலாம் என்பதைத் தமிழகப் பல்கலைக்கழகங்களிலுள்ள தமிழ்த் துறையினர் சிந்தித்து அதைச் செயல்படுத்தும் வகையில் பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது சிறப்பாக இருக்கும். தமிழக அரசும் உயர்கல்வித் துறையும் இதற்கான சட்ட வழிமுறைகளை இச்சமயத்தில் கொண்டு வருவது நல்லதுதான். திட்டமிட்டால் ‘உலகம் தேடும் தமிழ்’ உண்மையாகி விடும்.

‘பாலியல் கல்வி’ கட்டுரை உண்மைகளை உயர்கோபுரமாக்கிச் சிந்திக்கவைக்கும்படி அமைந்துள்ளது.

தே. சுவாமிநாதன்
அரக்கோணம்

பாலியல் கல்வி என்பது சுகாதாரம் பேணுவது என்பதாகப் புரிந்து கொள்ளப்படும் சூழலில் முழுமையான பாலியல் கல்வியைப் பாடநூல்களின் வழியாக என்பதைவிட இலக்கியம், நுண், நிகழ்த்து கலைகளின் மூலமே நன்கு சாதிக்க முடியுமெனத் தோன்றுகிறது. பாலியல் கல்வி குறித்த சிந்தனைகளை மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் கலைகளையுங்கூட அல்லவா நமது ஆசிரியர்களுக்கே பரிச்சயப்படுத்த வேண்டியுள்ளது. எனினும் அனிருத்தன் வாசுதேவன் ‘இது’ விஷயத்தில் காட்டி வரும் ஈடுபாடு, உழைப்பு, விடாமுயற்சி போன்றே, பலரது தொடர்ந்த செயல்பாட்டின் மூலமே மாற்றுத் திறனாளிகள், அரவாணிகள் சார்ந்து சமூகத்தின் மனப்போக்கு மாறிவருகிறது. பாலியல் சார்ந்த நமது நோய்க்கூறுகளையும் களைவதற்கு ஒவ்வொருவரும் அவரவரது பங்களிப்பைச் செய்வது அவசியமாகிறது. குறைந்தபட்சம் தன்னளவிலாவது விழிப்படையத் தேவையிருக்கிறது.

நாங்கள் ஒருவருக்கொருவர் ‘உழுவைத் தலையன்’, ‘காக்காக் குஞ்சு’, ‘கோழி வெரட்டி’ எனப் பட்டப் பெயர் இட்டுக்கொண்டது எங்கள் தலை முறைக்குச் சூழலுடன் கொஞ்சமாவது தொடர்பிருந்ததைச் சுட்டுகிறது. சென்னையில் பக்கத்து வீட்டு ஆறுவயதுச் சிறுவன் வெள்ளாட்டைக் கழுதை என்றபோது என்னால் நம்பவே முடியவில்லை. அவனது அம்மா அவ்விலங்கை ஏறெடுத்தும் பார்க்காமல் donkey என்று சொல்ல வேண்டுமெனத் திருத்தினார். இன்னொரு நண்பர் அதுவரை 1,100 மதிப்பெண்களுக்குப் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளைச் சமச்சீர் கல்வி என்னும் பெயரில் வெறும் 500 மதிப்பெண்களுக்குக் குறுக்கிவிட்டதாகக் குறைப்பட்டுக்கொண்டார். சூழலியல் கல்விக்கு 100, உடற்கல்வி சுகாதாரக் கல்விக்கு 100, நுண் மற்றும் நிகழ்த்து கலைகளுக்கு இன்னுமொரு 100 என்று கணக்குக் காட்டுவதற்காகவாவது இவற்றை அறிமுகப்படுத்துமாறு அரசைத் தூண்டலாம்.

தமிழ்ப் படங்களுக்கு - மொழி மாற்றப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கும் சேர்த்து - பெயர்சூட்டுபவர்கள் சிங்கம், குருவி, சுறா என்று மொக்கையாகவும், மொட்டையாகவும் வைக்காமல் ‘இருதலை மணியன்’, தும்பை மனசு’, ‘தூதுவளை இலை அரைச்சு’, ‘செவ்வரளி’, ‘குடைக் காளான்’, ‘கற்றாழை முள்’, ‘வண்டுருட்டாம் பழம்’ என்றெல்லாம் பெயர்வைத்தால் பறவை, விலங்கு, பூச்சி போன்ற ஓரிரு சொற்கள் நீங்கலாக இவையும் தமிழில் நிலைபெற்றுவிடும்.

செல்வம்,
சென்னை

இன்றைய ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லூரிகளில் சில “பண வேட்டைக்கு மிக அற்பமான தந்திரங்களை வைத்திருக்கின்றன. மாணவர் கல்லூரிக்குத் தினசரி வர வேண்டியதில்லை. நிர்வாகம் சொல்லும் நாட்களில் வந்தால் போதும்” எனப் பெருமாள் முருகன் கூறுவது முற்றிலும் உண்மை. இப்படி மாணவர்கள் நடந்துகொள்ள சில ஆயிரங்களைக் கட்டணமாகக் கட்டிவிட்டால் போதும். “எங்காவது பணியாற்றி ஊதியம் பெற்றுக்கொண்டே பி. எட். படிப்பையும் முடித்துவிடலாம்.” பி.எட் மட்டுமல்ல எம். எட்டின் கதியும் இதேதான். இப்படிப் படித்த ‘ஆசிரியர்க’ளிடம் என்ன சுயசிந்தனை இருக்கும்? கல்வியைப் பற்றிய நல்லெண்ணமாவது இருக்குமா? விழுமியம் பற்றி உணர்வு தான் விளங்குமா? நம் அரசுகள் இந்த விஷயத்தில் உடனடியாக விழித்தெழ வேண்டும். கல்விமுறை சிதைந்து போனால் நாடு சிதைந்துபோகும்; பொருளாதாரச் சீரழிவு பெருகிவிடும். இதில் கட்சி, வேண்டியவர் என எண்ணாமல் உடனடியாக மத்திய மாநில அரசுகள் சுயநிதிக் கல்லூரிகள் என்ற வணிக மையங்களைக் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும். நாட்டின் மீதும் தமக்கு வாக்களித்த மக்கள் மீதும் உண்மையாகவே மதிப்பும் மரியாதையும் நம் அரசுகளுக்கு இருக்குமானால் கல்வி வணிகமயமாவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு தலைமுறை, இக்கல்வி அவலத்தைச் சுமக்குமானால் வரும் பல தலைமுறைகள் இதன் தாக்கத்திலிருந்து மீளுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை

போபால் மக்களின் துயருக்கு அப்போதைய ஆளும் வர்க்கமே துணை நின்றது; தற்போதைய நீதிமன்றமும் துணை நின்றுள்ளது என்பதுதான் உண்மை. மக்களின் வரிப்பணத்தில் மகனையும் மகளையும் முன்னிலைப்படுத்தி “மானாட மாநாடு” கண்டதும் அரங்கேறிய கொடுமையையும் கண்டோம். ராஜபக்சே அரசில் தமிழர் களுக்கு என்றுமே நீதி கிடைக்காது, இருப்பினும் போதிமரத்துப் புத்தன் போல் ஓநாய்க்கு இரத்தினக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசின் பித்துக் குளித்தனத்திற்கு என்ன சொல்வது? இலங்கையாக இருந்தாலும் காஸாவாக இருந்தாலும் வாய்மூடி மௌனியாக இருக்கும் மனிதன் சூடு சுரணையோடு நிமிர்ந்தால்தான் விமோசனம் உண்டு. தன்னை உணர்ந்த எவர் ஒருவருமே மகாத்மா என்பதுதான் மகாத்மாவின் வாழ்வு நமக்குக் காட்டும் படிப்பினை. சமச்சீர்க் கல்வி என்பது உளவியலின் அடிப்படையில் உயிர்ப்பித்து இருந்தால் வரவேற்கக்கூடியது. துர திருஷ்டவசமாக அவ்வாறு அமையவில்லை என்பதே எதார்த்த நிலை. கற்றலுக்கு எந்த அளவில் பொறுப்பு உள்ளதோ அதே நிலைதான் கற்பித்தலுக்கும் இருந்தாக வேண்டும். ஆனால் கற்பித்தல் பயிற்சிக் கூடங்கள் வணிகக் கேந்திரங்களாகத் தொடர்ந்து பயிற்சி பெறாவிட்டாலும் பட்டயம் பெறலாம் என்ற அவல நிலையில் உலாவருவதைக் காண முடிகிறது. வளரும் நாட்டின் செழிப்புக்குச் சுற்றுச்சூழல் கல்வியும் பெரிதும் ஏற்புடைத்து என்பது உணரப்படவில்லை. “கல்வி” குறித்த காலச்சுவடின் பங்காற்றல் உறுதிசெய்கிறது; பாடநூல்கள் குறித்த பிரபஞ்சன் கருத்துகள் சிறப்பு.

கா. இர. குப்புதாசு,
செஞ்சி

பத்திரிகை உலகில் “கருத்துச் சுதந்திரம்” பற்றிய உங்கள் எழுத்து பாராட்டப்பட வேண்டியது. உயர்சாதி என்னும் பார்வையில் உங்களைப் பார்க்கும் யாருக்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம். இலக்கிய ரசிகர்கள் உங்களை அந்தக் கோணத்தில் பார்க்கமாட்டார்கள். தொடர்ந்து உங்கள் உறுதியான கருத்துகளை எழுதுங்கள், இன்று, தமிழ் நாட்டில் கருத்துகளைத் தைரியமான முறையில் வெளியிடுவோர் மிகக் குறைந்துவிட்டார்கள். அரசு தரும் விளம்பரம், பட்டம், பதவி இவற்றில் தங்களை இழந்துவிட்டவர்கள் அதிகம். 400 கோடி செலவழித்துக் கருணாநிதி என்ற தனிமனிதனைப் புகழ, கவிதை பாட, கட்டுரை எழுத எத்தனை பேர்? தமிழ் மாநாடு என்னும் பெயரில் நடத்திய நாடகங்களை விலாவாரியாகத் தமிழ் மக்களுக்கு எழுதுங்கள். முதல்வர் அவர் குடும்பம் அவரது கட்சிக்காரர்கள், ஒப்பந்தக்காரர்கள். இவர்கள் மக்கள் வரி பணத்தைச் சூறையாடினார்கள் என்பது உண்மை.

ஆவுடையப்பன்
இலத்தூர்

இரக்கம், அறம், மனிதநேயம், நாகரிகம் முதலானவற்றைத் தங்களது சொந்த நலன்களுக்காக, அந்நிய தேசத்தின் காலடியில் தாரைவார்த்துக்கொடுத்து விட்டு, சொந்த தேசத்து மக்களை வெறும் நடைப் பிணங்களாக்கிய பேராயக் கட்சியினரின் முகத்தை அம்பலப்படுத்தியது ‘போபால் - பாழ் நிலத்தின் கண்ணீர்’ தலையங்கம்.

மனித உயிர்களை, மறைமுகமாகவோ நேரடியாகவோ போர், வன்முறை மூலம் கொன்றழிக்கும் எந்தக் கொடியவரும் இங்கு எளிதாக நுழையலாம் கைகுலுக்கலாம் குடிமக்களின் குருதியைக் கோப்பைகளில் ஏந்திக் குதூகலமாகப் பருகலாம் எனும் நிலை குறித்து இங்கு எவருக்கும் வெட்கமில்லை. எதிர்வரும் தேர்தலில் நமக்கு எத்தனை இடங்கள் வேண்டும் என்ற கணக்குகளோடு, அரசியல்(!) கட்சிகள் அணிமயமாகிவருவது கண்கூடு.

சுகிர்தராணியின் ‘யாதும் ஊரே... யாவரும் கேளிர்...’ கவிதை, சொரணையற்றவர்கள்மீது விழும் சாட்டையடியாக இருக்கிறது. சொற்களில் தகிக்கும் சீற்றம் பொய்களையும் போலிகளையும் சுட்டெரிக்கின்றது.

‘தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடி’ கட்டுரை, ஈழத்தமிழர்களின் தற்போதைய அவலச் சூழலையும் போர் முடிந்த பிறகும் அவர்களுக் கேற்பட்டுள்ள பாதுகாப்பின்மையையும் குறித்துப் பேசுகின்றது. சிங்களப் பேரினவாதத்தின் காரணமாக நிம்மதியிழந்து வாழ்கின்ற மக்களின் அவலம் குறித்து, எழுதியும் பேசியும் அவை தீராத கதைகளாகவே உள்ளன.

கு. இரவிச்சந்திரன்
ஈரோடு

உள்ளடக்கம்