|
வெட்டப்படும்போது மரம் கண்ணீர் சிந்துகிறது. துன்புறுத்தப்படும்போது நாய்
ஊளையிடுகிறது. அவமானப்படுத்தப்படும்போது
மனிதன் பக்குவப்படுகிறான்.
- ஜோசே சரமாகுவின் யேசு எழுதின சுவிசேஷம்
இருவரும் வெவ்வேறு ஆளுமைகள். இருவரின் பின்புலங்களும் வேறுபட்டவை. எனினும் ஜோசே
சரமாகு என்ற போர்த்துக்கீசிய
எழுத்தாளரைக் கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸுடன் தொடர்ந்து
ஒப்பிட்டுவந்திருக்கிறேன். இந்த
ஒப்பீட்டுக்குத் தர்க்க அடிப்படையிலான காரணம் கூறுவது எளிதல்ல. இலக்கிய வேட்கையுடன்
இருவரையும் பின்தொடரும்
ஆர்வலனின் வாசிப்பு நெருக்கம் அல்லது வாசகக் கிறுக்கு இந்த ஒப்பீட்டுக்கு அடிப்படை.
கடந்த முப்பது ஆண்டுகளில்
நோபெல் விருது பெற்ற இலக்கியக் கலைஞர்களில் மார்க்கேஸுக்கு இணையானவர் யாருமில்லை
என்பது என்
‘மூடநம்பிக்கை’. இந்தக் கால அளவில் நோபெல் பரிசு பெற்றவர்களின் பட்டியலில் என்னைப்
பெரிதும் பாதித்த கவிஞர்கள்
சிலர் இருந்தும் நம்பிக்கைக்கு ஊறு நேரவில்லை - ஜோசே சரமாகுவை வாசிக்கும்வரை.
மார்க்கேஸுக்குப் பிறகு காத்திருந்து தேடிச் சேர்த்ததும் ஆவேசத்துடன் வாசித்ததும்
சரமாகுவின் புத்தகங்கள். அவற்றை
வாசிக்கும் தருணங்களிலெல்லாம் மனதுக்குள் தர்க்கமற்ற இந்த ஒப்பீடும்
நிகழ்ந்துகொண்டிருந்தது. அதில் காப்ரியேல் கார்சியா
மார்க்கேஸைக் காட்டிலும் எப்போதும் ஒரு வாக்கு வித்தியாசத்தில்
பின்தள்ளப்பட்டவராகவே இருந்தார் ஜோசே சரமாகு. இந்த
எண்ணம் படரும்போதெல்லாம் ‘அறியப்படாத தீவின் கதை’ (The Tale of the Unkonwn
Island) என்ற சரமாகுவின்
நெடுங்கதையில் வரும் வாசகம் கேலியாக மனதுக்குள் ஒலிக்கும். ‘விருப்பம்தான் அநேகமாகச்
சொந்தம் கொண்டாடுவதன்
சிறந்த முறை; சொந்தம் கொண்டாடுவதுதான் விரும்புதலின் மோசமான வழி’ (Liking is
probably the best form of
ownership and ownership is the worst form of liking). இருப்பினும் என்னுடைய வாசகக்
கிறுக்குக்கு இந்தச் சொந்தம்
கொண்டாடல் நெருக்கமானதாக இருக்கிறது.
மார்க்கேஸைப் போல அல்லது அவரைவிடவும் சரளமான எழுத்தாளர் சரமாகு. மார்க்கேஸ்
வெவ்வேறு வடிவங்களில் தனது
புனைவுகளை உருவாக்கியவர். சரமாகுவுக்கும் அது பொருந்தும். இருவரும் எதார்த்தத்தின்
மீது மாயத் தன்மையைப்
போர்த்தியவர்கள். அல்லது மாய நிகழ்வுகளின் ஆழங்களில் உறைந்திருக்கும் எதார்த்தத்தை
வெளிக்கொணர்ந்தவர்கள்.
அவரைப் போலவே இவரும் ஒரே சமயத்தில் சுதந்திரமான இலக்கியவாதியும் மரபைப்
போற்றுகிறவருமாக இருந்தவர்.
மார்க்கேஸின் காலரா காலத்தில் காதல் (Love in the Time of Cholera) சுதந்திரமான
நவீனப் புனைவு. தனிமையின் ஒரு நூறு
ஆண்டுகள் (One Hundred Years of Solitude) செவ்வியல் குணம் கொண்டது. சரமாகுவின்
அந்தகம் (Blindness), பார்த்தல்
(Seeing) போன்ற நாவல்கள் நவீனமானவை. லிஸ்பன் முற்றுகையின் வரலாறு ( The history of
the siege of Lisbon),
யேசு எழுதின சுவிசேஷம் (The gospel according to Jesus Christ) ஆகியவை செவ்வியல்
ஆக்கங்கள்.
இருவரும் தேர்ந்த கதைசொல்லிகள். கதைசொல்லலில் மார்க்கேஸ் குறுக்கிடுவதில்லை.
சரமாகுவின் கதையாடலில்
ஆசிரியருக்குக் காத்திரமான பங்கு உண்டு. கதைப் போக்கின் இடையில் அவர் தலையை
நுழைப்பார். இடதுசாரி மனப்பாங்கு
இருவருக்கும் பொதுவானது. மார்க்கேஸ் இடதுசாரி ஆதரவாளர். சரமாகு அதிகாரபூர்வமான
கட்சி உறுப்பினர். இருவரும் பொது
அறிவாளிகள் என்ற நிலையில் மானுடப் பிரச்சினைகளுடன் எதிர்வினை நிகழ்த்தியவர்கள்.
இதில் சரமாகு, மார்க்கேஸைவிட
வெளிப்படையானவர்.
மார்க்கேஸுக்குக் கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் பாலுள்ள நட்பு
ஒருவிதமான பக்கச் சார்புக்குக்
காரணமாக இருந்திருக்கிறது. காஸ்ட்ரோவுக்கு விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட சலுகை
எதையும் சரமாகு வழங்கியதில்லை.
சரியான பொருளில் ஜோசே சரமாகுவின் மறைவோடு மேற்குலகில் மிஞ்சியிருந்த ஒரே
கம்யூனிஸ்டு இலக்கியவாதியும்
விடைபெற்றிருக்கிறார்.
இருவருக்குமான ஒப்பீட்டை வரிசைப்படுத்திச் செல்வதற்கான சாத்தியங்கள் இன்னும்
இருக்கின்றன. அது வாசகக் கிறுக்கின்
உச்சமாக விரியும். இந்த ஒப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் இலக்கிய ஆளுமைகளுக்கிடையில்
நிலவிய உறவு என்னவாக
இருந்திருக்கும் என்ற கேள்வியையும் அது எழுப்பும். வாசித்து அறிந்தவரையில்
சரமாகுவைப் பற்றி மார்க்கேஸ் அதிகம்
குறிப்பிட்டிருப்பதாகப் பதிவில்லை. கியூபப் புரட்சியின் நாற்பதாம் ஆண்டு
நிறைவையொட்டி ஃபிடல் காஸ்ட்ரோ அழைத்திருந்த
ஒரு கூட்டத்தில் இருவரும் பங்கேற்றிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மாட்ரிட்டில்
நடந்த கலாச்சார நிகழ்ச்சியிலும்
இருவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இருவரும்
பேசியிருக்கிறார்கள். இருவரும் தங்கள் கதைகளை
வாசித்திருக்கிறார்கள். ஜெரால்ட் மார்ட்டின் எழுதிய காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
( Gabriel Carcia Marquez ) என்ற
வாழ்க்கை வரலாற்று நூலில் இந்தக் குறிப்பு இடம்பெறுகிறது.
ஆனால் மார்க்கேஸ் மீதான தன்னுடைய மதிப்பைச் சரமாகு அழுத்தமாகவே
காட்டியிருக்கிறார். ஸ்பானிஷ் ராயல்
அக்காதெமியின் முதலாவது மாநாட்டில் மார்க்கேஸ் விவாதத்துக்குரிய ஒரு கருத்தைச்
சொன்னார். ‘ஸ்பானிய மொழி,
மரபான இலக்கணத்தையும் உச்சரிப்பு முறைகளையும் கைவிட வேண்டும்’. பழம் பெருமையில்
போதை கொண்டிருந்த
அக்காதெமிக்கு இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை. எனவே இரண்டாவது மாநாட்டில்
மார்க்கேஸைப் புறக்கணித்தது.
அர்ஜெண்டினாவில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிலும் அவரைப் புறக்கணிப்பதாகவே இருந்தது.
மார்க்கேஸுக்கு
வாய்த்திருந்த உலகப் புகழும் வாசக செல்வாக்கும் அதை நடைமுறைப்படுத்தத் தடையாக
இருந்தன. அதைவிடப் பெரிய
தடையாக இருந்தவர் ஜோசே சரமாகு. மாநாட்டுக்குப் பேராளராக அழைக்கப்பட்டிருந்த சரமாகு
‘மாநாட்டில் மார்க்கேஸ்
பங்குபெறவில்லையென்றால் தானும் கலந்துகொள்வதில்லை’ என்று அறிவித்தார்.
திகைத்துப்போன அக்காதெமி மார்க்கேஸை
அழைக்காமல் விட்டதற்குக் காரணம் கவனப் பிசகு என்று சாக்கு சொல்லிப் புதிய
அழைப்பிதழ்களை அவசரமாக உருவாக்கி
விநியோகித்தது. அர்ஜெண்டினாவுக்குப் போவதில்லை என்று முன் தீர்மானம் கொண்டிருந்த
மார்க்கேஸ் மாநாட்டில்
கலந்துகொள்ளவில்லை. எனினும் மாநாட்டில் சரமாகு நிகழ்த்திய உரையும் மார்க்கேஸின்
இலக்கிய முக்கியத்துவம் பற்றிய
விவாதமும் அக்காதெமியை மறுசிந்தனைக்குத் தூண்டின. செர்வாண்டிஸுக்குப் பின்பு
ஸ்பானிய மொழியின் மகத்தான
நாவலாசிரியர் மார்க்கேஸ்தான் என்று நிறுவினார். அதன் விளைவாக 2007இல் மார்க்கேஸின்
எண்பதாவது பிறந்த நாளையும்
தனிமையின் ஒருநூறு ஆண்டுகள் நாவலின் நாற்பதாம் ஆண்டையும் சிறப்பிக்கும் வகையில்
நாவலுக்கு ஒரு லட்சம் பிரதிகள்
அச்சிட்ட வெகுமக்கள் பதிப்பையும் ஸ்பானிஷ் ராயல் அக்காதெமி கொண்டுவந்தது.
o
உலகப் புகழ்பெற்ற ஓர் இலக்கியவாதியாக இன்று அறியப்படும் ஜோசே சரமாகு தன்னுடைய
எழுத்துப் பணிக்காக நீண்ட கால
ஆயத்தம் மேற்கொண்டிருந்தவர். 1922ஆம் ஆண்டு போர்ச்சுகலின் தலைநகரமான லிஸ்பனுக்கு
அண்மையிலுள்ள
அசின்ஹாகா கிராமத்தில் பிறந்தார். பதினாறு வயதுவரை தாத்தா பாட்டியின் பராமரிப்பில்
வளர்ந்தார். எந்த நிமிடமும்
இறந்துபோய்விடுவோம் என்ற தீராக் கவலையுடன் வாசற்படியில் உட்கார்ந்து ஆகாயத்தைப்
பார்த்துக்கொண்டிருந்த
பாட்டியையும் தத்துவ ஞானி என்று பாராட்டப்பட்ட தாத்தாவையும் கிராமத்தின்
களங்கமின்மையையும் அவற்றுக்கு
இடையிலான தன்னுடைய இளம் பருவத்தையும் சென்ற ஆண்டு வெளிவந்த சிறிய நினைவுகள் (Small
Memories) நூலில்
சுவாரசியமாக நினைவுகூர்கிறார் சரமாகு. பள்ளிப் படிப்பில் சமர்த்தரல்லாத மாணவரான
சரமாகு வாழ்க்கைத் தேவைகளுக்காக
உதிரித் தொழில்களில் ஈடுபட்டார். இருபத்தி மூன்றாம் வயதில் பாவத்தின் பூமி (The
Land of Sin) என்ற நாவலை எழுதி
வெளியிட்டார். ஆனால் அது அவர் உள்ளூர விரும்பிய எழுத்துப் பணிக்கான தொடர்ந்த
உற்சாகத்தை அளிக்கவில்லை.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் உதிரித் தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கையை நகர்த்தினார்.
நாற்பத்தியேழு வயதுவரை
ஆட்டோமொபைல் மெக்கானிக் முதல் பத்திரிகை உதவியாசிரியர்வரை பல வேலைகளைச் செய்தார்.
போர்த்துக்கீசியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பின்னர்தான் அவருக்குச்
சொல்லிக்கொள்ளும்படியான பணி அமைந்தது. கட்சிப்
பத்திரிகையில் உதவி ஆசிரியர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘எதிர்பாராத வகையில்’ அந்த
வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
தண்டனை என்று கட்சி மேற்கொண்ட நடவடிக்கை சரமாகுவுக்கு ஆதாயமாக அமைந்தது.
ஐம்பத்தியேழாவது வயதில் முழுநேர
எழுத்தாளரானார். தி மான்யுவல் ஆஃப் பெயிண்டிங் அண்ட் காலிகிராஃபி (The Manual of
Painting and Callygraphy) என்ற
நாவலை எழுதினார். கவனத்துக்குரியது என்று விமர்சகர்கள் கருதிய அந்த நாவல் மூலம்
இலக்கிய உலகத்தில் பெயர்
பெற்றார். அடுத்து வந்த பால்தசாரும் பிளிமுண்டாவும் (Baltasar and Blimunda)
சரமாகுவை நிரந்தரப் புகழுக்குரியவராகவும்
காத்திருந்து வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களில் ஒருவராகவும் நிலைநிறுத்தியது. அதே
ஆண்டில் வெளியான ரிக்கார்டோ
ரேயஸ் இறந்த ஆண்டு (The Year of Death of Ricardo Reis) நாவல் அவருடைய
படைப்பாற்றலின் உச்சமாகக்
கருதப்பட்டது. சரமாகுவின் பத்துக்கும் அதிகமான நாவல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில்
கிடைக்கின்றன. அவற்றில் ஆகச்
சிறந்த படைப்பு இந்த நாவல் என்று எண்ணுகிறேன். விமர்சனப் பரிந்துரைகளைத் தாண்டி
இந்த நாவலை மனதுக்கிசைந்த
படைப்பாகக் கருதக் காரணம். இது ஒரு கவிஞனைப் பற்றியது. போர்ச்சுகீசியக் கவிஞரான ஃபெர்னாண்டோ
பெஸோவாவின்
வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இந்த நாவலின் கதையாடல்.
சரமாகுவை உலகப் புகழ் வாய்ந்தவராகவும் விவாத ஆளுமையாகவும் மாற்றியதும் வாழ்க்கைக்
கதையை அடிப்படையாகக்
கொண்ட நாவல்தான். யேசுவின் வாழ்க்கையைச் சொல்லும் யேசு எழுதின சுவிசேஷம் அவரை
விவாத நாயகராக்கியது. யேசு
கிறிஸ்து என்ற மனிதனின் கதையாகவே நாவலை உருவாக்கியிருந்தார் சரமாகு. இதில் வரும்
யேசு மரியா மக்தலேனாவின்
கணவன். ஒரு மகனுக்குத் தந்தை. எளிய மகிழ்ச்சிகளில் தன்னை இழக்கும் மனித குமாரன்.
மனிதர்களின் பாவங்களுக்காகக்
கடவுளிடம் மன்றாடும் யேசுவைக் கடவுளின் பாவங்களுக்காக மனிதனிடம் மன்னிப்புக் கோரும்
யேசுவாக மாற்றியிருந்தார்.
கிறித்துவ மத விசுவாசிகள் கொந்தளித்து எழுந்தனர். தேவாலய நம்பிக்கைகளுக்கும்
வேதாகமத்துக்கும் எதிரான படைப்பு என்று
சீற்றமடைந்தனர். பெரும் போராட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. படைப்பாக்கத்தின்
இலக்கிய மேன்மையோ அதன்
மையப்பாத்திரமான யேசுவின் பாடுகளை ஓர் இலக்கிய ஆசிரியன், அதுவும் நாத்திகனான ஓர்
இலக்கியவாதி
வெளிப்படுத்தியிருந்த நுட்பமோ திருச்சபைக்குப் பொருட்டாக இருக்கவில்லை. சரமாகுவின்
நாவல் போர்ச்சுகலில்
தடைசெய்யப்பட்டது. அத்துடன் அவரும் நாட்டைவிட்டு வெளியேறினார். ஸ்பானியத் தீவுக்
கூட்டங்களில் ஒன்றான
லான்சரோட்டாவிலுள்ள கானரித் தீவில் குடியேறினார். மரணம்வரை அங்கேயே வாழ்ந்தார்.
அந்த வாழ்வனுபவத்திலிருந்து
ஸ்பெயினும் போர்ச்சுகலும் இணைந்து ஒரே நாடாக வேண்டும் என்று அவர் சொன்ன கருத்தும்
விவாதப் பொருளாயிற்று.
இடது சிந்தனையுள்ள ஓர் எழுத்தாளனின் உளறல் என்று நகையாடப்பட்ட அந்தக் கருத்து இன்று
தீவிரமான அரசியல்
விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. ஒருவேளை வரும் காலத்தில் போர்ச்சுகலும் ஸ்பெயினும்
இணைந்து ஒரு நாடு
உருவாகுமானால் கடந்த ஜூன் பதினெட்டாம் தேதி காலமான ஜோசே சரமாகுவின் நாத்திக ஆன்மா
பூரிப்புடனோ
கேலியுடனோ சிரிக்கக்கூடும்.
கல் தெப்பம் (The Stone Raft) என்ற நாவலின் கருப்பொருளை இந்தக் கருத்தின் கலை
வடிவமாகக் கருதலாம். ஸ்பெயினும்
போர்ச்சுகலும் இணைந்த ஐபீரியத் தீபகற்பத்தைப் பிரான்சிலிருந்து பிரிக்கும்
மலைத்தொடர் திடீரெனப் பிளக்கிறது. ஐபீரியா ஒரு
கல் தெப்பமாகக் கடலில் மிதக்கிறது. அதன் காரணமாக நிகழும் சிக்கல்களை ஆராய்கிறது
நாவல். புத்தகத்தின் முகப்பு
வாசகமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒற்றைவரி படைப்பின் இயல்பைச் சொல்லிவிடுகிறது.
‘இது கல் அல்ல; உண்மையில்
மரணத்தின் தெப்பம்’. இதன் இன்னொரு பக்கம் என்று ‘அறியப்படாத தீவின் கதையை’
விளங்கிக்கொள்ளலாம். அறியப்படாத
தீவைத் தேடிப் படகில் செல்லும் மனிதனும் அவனுடைய துணையும் தாவரங்கள் வளர்ந்து அந்தப்
படகே ஒரு தீவாக மாறும்
விந்தையைப் பார்க்கிறார்கள். கல் தெப்பம் மரணத்தின் குறியீடு. படகுத் தீவு வாழ்வின்
சின்னம்.
அந்தகம் சரமாகுவின் அடுத்த நாவல். படைப்புக் கற்பனையின் அதிகபட்ச வீச்சைக்
கொண்டது. வாசகனை உன்மத்தம்
கொள்ளச் செய்யும் வசீகரம் இந்த நாவலுக்கு உண்டு. பார்வையின்மை ஒரு தொற்றுநோயாக
ஒரு சமூகம் முழுவதையும்
பீடிக்கிறது. எந்த முன்னறிவிப்புமில்லாமல் மக்கள் குருடர்களாக மாறித்
தடுமாறுகிறார்கள். அலைமோதுகிறார்கள். அந்த
அவலநிலையிலும் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதமும் அவர்கள் காட்டும் வன்மமும்
தீவினைகளும் வாசகனைப்
பதறச்செய்யும் வகையில் சித்தரிக்கப்படுகின்றன. குருட்டு நோய் பீடித்தவர்களில்
ஒருவனுக்கு மீண்டும் பார்வை திரும்புகிறது.
சகமனிதர்கள் நெருக்கடியான தருணங்களில் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை
அறிவதற்காக அவனும் பார்வை
இழந்தவனாகப் பாவிக்கிறான். மனிதர்களின் கீழ்மைகளைப் பார்த்து அஞ்சுகிறான். அந்தத்
தற்காலிக நடிகனின் நிலையில்
வாசகனை நிறுத்துவதில்தான் இந்த நாவல் இலக்கிய அனுபவமாகிறது. இந்த நாவலின் தொடர்ச்சி
என்று சொல்ல
முடியாவிட்டாலும் ஏறத்தாழ இதே போன்ற மையத்தையே பார்த்தல் நாவலிலும் கையாளுகிறார்
சரமாகு. தேர்தலில் ஒரு
வாக்குச் சாவடியில் நண்பகல் வரைக்கும் சொற்ப வாக்குகளே பதிவாகின்றன. அதிகாரிகள்
குழம்புகிறார்கள். வாக்குப் பதிவு
நேரத்தை அதிகரிக்கிறார்கள். மாலையில் பதிவான வாக்குகளைப் பரிசோதித்தால் எழுபது
சதவீதமும் வெற்றுத் தாள்கள். தேசிய
சட்ட அமைச்சகம் எட்டு நாட்களுக்குப் பிறகு மறுதேர்தலை நடத்த உத்தரவிடுகிறது. அந்தத்
தேர்தலில் வெற்று வாக்குகளின்
எண்ணிக்கை எண்பத்து மூன்று சதவீதமாக உயர்கிறது. அதிகார வர்க்கம் பதறிப் போய்
நெருக்கடி நிலையை அமல்படுத்துகிறது.
அந்தகம் நாவலை மனித இருப்பின் சிக்கல்களைப் பற்றிய விசாரணையாகவும் பார்த்தலை அரசியல்
மனித இருப்பைக்
குலைப்பது பற்றிய விவாதமாகவும் கருதலாம்.
எல்லாப் பெயர்களும் (All the Names) நாவல் மிக நவீனமான ஒரு களத்திலிருந்து
மாந்திரீக எதார்த்தமாக விரிவடையும்
நாவல். ஓர் அநாமதேய நகரத்தின் பிறப்பு இறப்புப் பதிவு அலுவலகத்தின் கீழ்மட்ட
எழுத்தருக்கு செனோர் ஜோஸ் என்ற
அறியப்படாத பெண்ணின் பதிவேட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் பெயரால்
ஈர்க்கப்பட்டு அந்தப் பெண்ணைத்
தேடத் தொடங்குகிறார். நடுத்தர வயதாகியும் மணமாகாத அந்த எழுத்தர் அந்தத் தேடலைத்
தொடர்வதற்கு அவள்மீதான
ஊமைக் காமமும் காரணம். பிறந்தவர்களும் வாழ்பவர்களும் இறந்தவர்களும் ஒரே அலமாரியில்
குடியிருக்கும் பதிவு
அலுவலகம் இந்த உலகம். செனோர் ஜோஸ் என்ற பெயர் இன்னொருவருடையது அல்ல;
தன்னுடையதும்தான் என்பதை
உணர்கிறார் எழுத்தர். பெயர் என்பது நமக்குப் பிறரால் கொடுக்கப்பட்ட அடையாளம். எனில்
நாம் உண்மையில் யார்? இந்தக்
கேள்வியைத்தான் நாவல் நிகழ்ச்சிகளினூடே விவரித்துக்கொண்டுபோகிறது. மனித இருப்பின்
தத்துவப் பிரச்சினையை சரமாகு
எதிர்கொள்வது இந்த நாவலில்தான்.
o
‘மிகச் சிறந்த கட்டுரையாளன் ஆவதுதான் என்னுடைய விருப்பம். அதற்கான திறமை எனக்கு
இல்லை என்று
தெரிந்துகொண்டதும் நாவல் எழுதத் தொடங்கினேன்’ என்று எழுதியிருக்கிறார் சரமாகு.
இந்தக் கூற்று ஒரு நையாண்டியாகத்
தென்பட்டாலும் ஊன்றிக் கவனித்தால் மெல்லிய உண்மையின் இழை புலப்படும். சரமாகுவின்
எல்லா நாவல்களின்
மையங்களையும் விரிவான கட்டுரைக்கான பொருள்களாக மாற்ற முடியும். ஓரிரு நாவல்களின்
தலைப்புகள் தவிரப்
பெரும்பாலானவை கட்டுரைக்கான தலைப்புகள்தாம். இந்த மையங்களையும் தலைப்புகளையும்
புனைவுப் பொருளாக்கியதுதான்
சரமாகுவின் நாவல் கலையின் சிறப்பு. இந்தப் படைப்பாக்கத்தில் தனக்கான கருவிகளை அவரே
உருவாக்கினார். அதன் மூலம்
நாவல் கலையின் புதிய வகைமைகளை முன்வைத்தார். நிறுத்தல் குறிகளோ பத்திப் பிரிவினையோ
இல்லாமல் ஒரு பக்கம்
வரை நீண்டு செல்லும் வாக்கியங்களுடனும் பகுக்கப்படாத உரையாடல் பகுதிகளுடனுமான
எழுத்து முறையைக்
கடைபிடித்தவர் சரமாகு. மேம்போக்கான வாசகனுக்கு இது அயற்சியளிப்பது. தீவிர
வாசகனுக்கு ஒரு கண்டுபிடிப்பின்
பரவசத்தைத் தருவது. அப்படிக் கண்டுபிடிப்பவர்களுக்குச் சரமாகுவின் நாவல் உலகம்
விரிவானது. மனித சுவாசத்தால்
நிரம்பியது.
சரமாகுவின் படைப்புலகில் வாசகன் சந்திக்கும் மனிதர்கள் சாதாரணர்கள்.
அவர்களிடமிருந்துதான் பெரிய உலகம் உருவாகிறது
என்பதை அவனால் எளிதாக யூகிக்க முடியும். ஒருவிதத்தில் சரமாகுவுக்குள் இயங்கும்
கம்யூனிசச் சிந்தனையின் விளைவு இது
என்றும் சொல்லலாம். அதன் தொடர்ச்சியாகவே அவரது அரசியல் இடையீடுகளையும் காணலாம்.
சரமாகுவின் கலை
ஆனந்தமளிப்பதாக இருந்தபோது அவரது கருத்துகள் தொந்தரவு செய்பவையாக
இருந்திருக்கின்றன. அதைச் சார்ந்து கடும்
விமர்சனங்களுக்கும் ஆளானார். தான் கலைஞனாக இருப்பதாலேயே இடதுசாரியாக இருப்பதாகச்
சொன்னார். தன்னை ஒரு
ஹார்மோன் கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொண்டார். ஒரு நேர்காணலில் பின்வருமாறு
குறிப்பிட்டார்: ‘முன்பெல்லாம் மக்கள்
என்னை, அவர் நல்லவர்தான்; ஆனால் கம்யூனிஸ்டு என்பார்கள். இப்போது, அவர்
கம்யூனிஸ்டுதான், ஆனாலும் நல்லவர்
என்கிறார்கள்’.
|