Google   www kalachuvadu.com

தலையங்கம்
சகிப்புத்தன்மை என்னும் அரசியல் பண்பாடு

சகிப்புத்தன்மை ஜனநாயக நடைமுறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இன்றியமையாத பண்பாட்டுக்கூறு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்படும் எந்தவொரு அரசாங்கமும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை. சகிப்புத்தன்மையற்ற அரசாங்கத்தால் அரசியல் சாசனம் குடிமைச் சமூகத்துக்கு உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இன்று திமுக அரசு மாற்றுக் கருத்துகள் கொண்டவர்கள்மீது துரிதமாகப் பிரயோகித்துவரும் ஒடுக்குமுறைகள் ஜனநாயகவாதிகளின் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளன. பல்வேறு நுட்பமான வழிமுறைகளால் ஊடகங்களின் குரல்களை மவுனமாக்குவதில் வெற்றிகண்டுள்ள திமுக அரசாங்கம் தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் இதழியல், அறிவுத் துறைச் செயல்பாட்டாளர்களையும் ஆளுங்கட்சியின் முறைகேடுகளுக்குத் துணைபோக மறுக்கும் அரசு அதிகாரிகளையும் பழிவாங்கிவருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு, ஆளுங்கட்சியின் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் எழுதிவரும் பழ. கருப்பையா தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்களைக் கண்டுபிடிப்பதில் காவல் துறை அலட்சியம் காட்டிவருவது இது போன்ற தாக்குதல்களுக்குத் துணைபுரியும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் விமர்சகரும் செயல் பாட்டாளருமான எழுத்தாளர் தமிழருவி மணியனை அவர் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வசித்துவரும் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியக் குடியிருப்பிலிருந்து வெளியேற்ற முயன்றது திமுக அரசு. பொதுவாழ்வில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நேர்மை, ஒழுக்கம், தார்மீக நெறிமுறைகள் பற்றித் தன் இதழியல் கட்டுரைகளில் தொடர்ந்து வலியுறுத்திவரும் தமிழருவி மணியன் போன்றவர்களின் இருப்பு அரசை எவ்வளவு தூரம் பதற்றமடையச் செய்திருக்கிறது என்பதற்கு இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை ஒரு எளிய உதாரணம். தமிழருவி மணியன் நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.

குடியிருப்போருக்கும் தனக்குமிடையேயான வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது சார்ந்து நிர்வாகரீதியில் ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணம் காட்டித் தந்திரமான முறையில் அவரை வெளியேற்ற முயன்ற வீட்டுவசதி வாரியத்தின் செயல் அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சந்துருவின் கடும் விமர்சனத்திற்குள்ளாயிற்று. தமிழருவி மணியனை வெளியேற்றுவதற்குத் தடையாணை பிறப்பித்த நீதிபதி வீட்டுவசதி வாரியத்தின் கோபுரத்தில் ஒளிரும் ‘தமிழ் வாழ்க’ என்னும் வாக்கியம் பொறிக்கப்பட்ட நியான் விளக்கு அலங்காரத்தைக் கவனப்படுத்தி, தமிழ் எழுத்தாளர்களை வாழவிடாமல் தமிழை எப்படி வாழவைக்க முடியும் எனக் கேட்டார். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் கோலாகலமாகத் தொடங்கப்பட்டிருந்த நிலையில் கருணாநிதி அரசின் மீது உயர் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட இவ்விமர்சனம் அதன் தமிழ்ப் பற்றை அம்பலப்படுத்தியுள்ளது.

இவை தவிர இலங்கை ராணுவத்தினரின் தொடர் தாக்குதலுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரிப் போராடிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூட்டமொன்றில் இலங்கை ராணுவத்தை விமர்சித்து ஆற்றிய உரையின் சில பகுதிகள் இருபிரிவினருக்கிடையே பதற்றத்தைத் தூண்டுவதாகச் சொல்லித் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அவரைக் கைதுசெய்தது அரசு. ‘தலைமறைவாக’ இருந்த சீமான் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிப்பதற்காகச் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்திற்கு வந்துகொண்டிருந்தபோது தடுத்துநிறுத்தி அவரைக் கைதுசெய்த காவல் துறை, அச்சம்பவத்தைப் படம்பிடிக்க முயன்ற ஊடகத் துறையினரைத் தாக்கி அவர்களிடமிருந்த காமிராக்களைப் பறித்திருக்கிறது.

திமுக ஆட்சியில் காவல் துறையினரின் அத்துமீறல்களைப் படம்பிடிக்க முயன்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது திரும்பத் திரும்ப நிகழ்ந்துவருகிற ஒன்றுதான். ஒவ்வொரு தருணத்திலும் அரசு காவல் துறையினரின் அத்துமீறல்களுக்குத் துணைபோய்க்கொண்டிருப்பது பத்திரிகை சுதந்திரம் பற்றிய அரசின் அணுகுமுறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. நேரடியான தாக்குதல் தவிர பொய் வழக்குகள் மூலமும் பத்திரிகைகளின் குரல்வளையை நெரிக்க அரசு முயல்கிறது. ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்தப் போக்கின் சமீபத்திய உதாரணம் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கிரானைட் வெட்டியெடுக்கப்படுவதாகத் தன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகளை வெளியிட்டுவந்த தினபூமி நாளிதழின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு. ஒரு டீக் கடையில் நின்றுகொண்டிருந்த தம்மைத் தினபூமி ஆசிரியர் மிரட்டியதாகச் சொல்லி கிரானைட் அதிபர்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகக் காவல் துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் போலியானவை என்பதற்கு இந்தக் கைது நடவடிக்கை ஒரு உதாரணம். மற்றொரு உதாரணம் சமீபத்தில் சென்னையில் இணைய எழுத்தாளர் ‘சவுக்கு’ சங்கர் கைதுசெய்யப்பட்ட விதம்.

அமைச்சர் பூங்கோதைக்கும் முன்னாள் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையின் இயக்குநர் உபேந்திராவுக்குமிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு அம்பலமானதற்குப் பொறுப்பாக்கப்பட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் அத்துறையின் உதவியாளர் சங்கர், சாலைப் பயணத்தின்போது வாகன ஓட்டி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். வழக்கறிஞர் புகழேந்தியின் தலைமையிலான ‘தமிழக மக்கள் உரிமைக் கழகம்’ சார்பாக நடத்தப்படும் ‘சவுக்கு’ (www.savukku.net) இணையதளத்தில் அரசு, காவல் துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் செய்துவரும் முறைகேடுகள் குறித்து ஆதாரபூர்வமான பல கட்டுரைகளை எழுதி வந்ததே சங்கர் கைதுசெய்யப்பட்டதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. நக்கீரன் உதவி ஆசிரியர் காமராஜ், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ் மையம் அமைப்பாளர் ஜெகத் கஸ்பார், காவல் துறை உயரதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் குறித்துச் ‘சவுக்கு’ வெளியிட்ட சில பதிவுகள் பலரது கவனத்தையும் ஈர்த்தவை. இந்தப் பின்னணியில் அவரது கைதுக்கான காரணத்தை யூகிப்பது கடினமான காரியமல்ல. இந்தியாவில் இணைய எழுத்தாளர் ஒருவர் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை

அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உயரதிகாரிகளும் விதிவிலக்கல்ல. கடந்த காலங்களில் தான் பணிபுரிந்த துறைகளில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொணர்ந்ததற்காக, தவறிழைத்தவர்கள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்ததற்காகப் பலரது பாராட்டுகளைப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர்மீது சில வாரங்களுக்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கெதிராக நீதிமன்றத்தை அணுகிய உமாசங்கர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு பழிவாங்கும் உணர்வுடன் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர்மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து போலிச் சாதிச் சான்றிதழ் பெற்றுப் பணியில் சேர்ந்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் உமாசங்கர்.

உமாசங்கர்மீதான நடவடிக்கைகள் அரசியல் பின்னணி கொண்டவை என்னும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனச் சொல்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. முன்பு திமுகவுக்கும் மாறன் குடும்பத்தினருக்குமிடையேயான சண்டையில் சன் குழுமத்தைப் பலவீனப்படுத்துவதற்காக அரசால் தொடங்கப்பட்ட கேபிள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உமாசங்கர் பாரபட்சமற்ற முறையில் எடுத்த நடவடிக்கைகள் கருணாநிதி குடும்பத்தினரில் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் குடும்ப ஒற்றுமையில் அதிகாரத்தை மீளப்பெற்றவர்கள் உமாசங்கரைப் பழிவாங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவிர அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கில் உமாசங்கர் தாக்கல் செய்த அபிடவிட், தற்போது திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வ கணபதிக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்குக் காரணமாக இருந்ததால் உமாசங்கர்மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளில் செல்வ கணபதிக்கும் பங்கு இருக்கலாம் என்னும் யூகங்கள் எழுந்துள்ளன.

தவறு செய்யும் அதிகாரிகள்மீது பாரபட்ச நடவடிக்கை அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அந்த நடவடிக்கைக்குப் பின்னால் இவ்வளவு மர்மங்களும் யூகங்களும் சூழ்வதற்கு அரசின் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை இல்லாததே காரணம். அரசு சகிப்புத் தன்மையை இழந்துவருகிறது என்னும் குற்றச்சாட்டுக்குக் காவல் துறையின் மர்மமான நடவடிக்கைகள் வலுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

அரசு சகிப்புத்தன்மையற்ற விதத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருவதுதான் அதிகக் கவலை தரக்கூடியது. சமீபத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு ஒடுக்கியவிதம் இதற்கு உதாரணம். வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டதோடு வர்த்தகர்களும் தொழில் துறையினரும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம் என மிரட்டப்பட்டனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கெதிரான எந்தவொரு ஜனநாயக நடவடிக்கையையும் இந்த அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மாநாட்டை விமர்சித்து சுவரொட்டி ஒட்டிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்தகைய சுவரொட்டிகளை அச்சடிக்க வேண்டாம் எனச் சிவகாசியின் அச்சக உரிமையாளர்கள் பலருக்கு எச்சரிக்கைவிடப்பட்டது. தம் கண்டனத்தைத் தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்மீது சட்ட விரோதமான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது காவல் துறை. அரங்கக் கூட்டங்களை நடத்த முயன்றவர்கள்கூடக் காவல் துறையினரால் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. மாற்றுக் கருத்துகளுக்கான இடத்தைத் திமுக அரசு முற்றாக மறுத்துவருவதன் உச்ச அடையாளம் இது. அரசின் இந்தப் போக்கு நம் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, அரசின் மீதான தம் விமர்சனங்களை முன்வைப்பதற்குக் குடிமைச் சமூகத்திற்கு நம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையைப் பறிப்பதுமாகும். அரசின் பல்வேறு துறைகளும் சந்தேகங்களாலும் மர்மங்களாலும் சூழப்பட்டவையாக இருப்பதைக் காட்டிலும் மோசமான ஆபத்து வேறெதுவுமில்லை. ‘தர்மம் மறுபடியும் வெல்லும்’ என நாம் வாளாயிருக்க முடியாது. நம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஆணித்தரமான செயல்பாடுகளை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

உள்ளடக்கம்