|
அண்மையில் தனது சொந்த அலுவலொன்றின் நிமித்தம் கொழும்பு வந்திருந்த அநாமதேயனைத்
தற்செயலாகச் சந்தித்தவேளை யாழ்ப்பாண நிலவரம் குறித்துக் கலந்துரையாடியபோது அவர்
தெரிவித்திருந்த கருத்துகளை இங்கே தொகுத்துத் தருகிறேன்.
- முத்துராசரத்தினம்
யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது?
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது! 24 மணிநேரமும் ஏ-9 வீதியூடாக எவரும்
பயணிக்க முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கையின் எந்த மூலைக்கும் எந்த
நேரத்திலும் எவரும் சென்று திரும்ப வசதியாகப் பேருந்து, மகிழுந்து வசதிகள்
இருக்கின்றன. தென்னிலங்கையிலிருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் ஆரியக்குளத்து
நாகவிகாரைக்கும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். உல்லாசப் பயணத்தலம்
போன்றிருக்கிறது யாழ்ப்பாணம். தேடுவாரற்றுக் கிடந்த வீடுகள் எல்லாம்
தீந்தையடிக்கப்பட்டுத் தென்னிலங்கையிலிருந்து வந்து குவியும் சிங்களக் குடும்பங்கள்
தங்குவதற்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. ஆகக்குறைந்த வாடகை 5,000 ரூபாய்.
தென்னிலங்கையில் இருந்து மரக்கறிகள், பழவகைகள், பிளாடிக் பாத்திரங்கள் எல்லாம்
யாழ்நகர நடைபாதைகளில் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. யாழ்நகர வீதிகள் எந்நேரமும்
வாகனத் தொடரணிகளால் வீக்கமடைந்துகொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் புதிது புதிதாக
வங்கிக் கிளைகள் திறக்கப்படுகின்றன.
யாழ்ப்பாண மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டதாக மகிந்த அரசானது ஒரு
மாயையைத் தோற்றுவிக்க எத்தனித்துவருகிறது. உண்மையில் யாழ்ப்பாணத்தில் அப்பாவிப்
பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையென்பது அண்மைக் காலங்களில் நடந்துள்ள சில
சம்பவங்களால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபில்நாத் கப்பம் கோரும்
நோக்கில் கடத்தப்பட்டு ஒரு வாரத்தின் பின் 14/03/2010 அன்று சடலமாக
மீட்கப்பட்டிருந்தான். நிலைக்குத்தாக வெட்டப்பட்ட குழிக்குள்ளிருந்து அழுகிய
நிலையில் அவனது சடலம் மீட்கப்பட்டிருந்தது. கபில்நாத்துக்கு மிக நெருக்கமான
சிநேகிதனொருவனின் வீட்டுவளவிலேயே சடலம் புதைக்கப்பட்டிருந்தது. குறித்த
சிநேகிதனாலேயே கபில்நாத் தந்திரமாக வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்.
கபில்நாத்தின் தந்தையான திருச்செல்வம் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் கடையை நடத்தி
வரும் பெரும் வணிகர். கபில்நாத் கடத்தப்பட்ட பின்னர் தொலைபேசி மூலமாகத்
திருச்செல்வத்திடம் மூன்று கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன்
டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியின் சாவகச்சேரி முகாம் பொறுப்பாளர் ஜீவா
என்பவருக்கு நேரடித் தொர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஈபிடிபியினர்
விடுத்துள்ள மறுப்பறிக்கையில் ஜீவா என்பவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் எனக்
கூறப்பட்டுள்ளது. மேலும் வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் -
மானிப்பாய்ப் பகுதிக்கு வந்திருந்த இளம்பெண்னொருத்தி பேருந்துத் தரிப்பிடத்தில்
நின்றபோது அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப்பெண்ணிடம் தங்களை
இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவளை விசாரணைக்கு உட்படுத்த
வேண்டியிருப்பதால் தம்முடன் வருமாறும் கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று
ஒதுக்குப்புறமான வீடொன்றில் வைத்து இரவு முழுவதும் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அப்பெண் எதிர்பாராதவிதமாக அவர்களிடமிருந்து தப்பிச்சென்று தன் உறவினர்களுக்கு நடந்த
அசம்பாவிதத்தைத் தெரிவித்தமையையடுத்துக் குறித்த நபர்கள் இருவரும் அவ்வூர் மக்களால்
மடக்கிப் பிடிக்கப்பட்டுக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதிலொருவர்
நஞ்சருந்தியிருந்தார் என்பதால் சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் குறித்த சிலர் வந்து பார்த்துச் சென்ற பின்னர்
அந்நபர் தப்பித்துச் சென்றுள்ளார்.
இதைத் தவிர 20.04.2010 நவாலி மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த மகேந்திரன், மகேஸ்வரன்
ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று இலட்சம் ரூபா கப்பம் கேட்கப்பட்ட நிலையில் இவர்களது
உறவினர்கள் மேற்கொண்ட முயற்சியால் கடத்தல்காரர் காவல் துறையினரால் கைது
செய்யப்பட்டுக் கடத்தப்பட்ட இருவரும் சுண்டிக்குளிப் பகுதியிலுள்ள ஒரு
வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். இந்நிகழ்வு கபில்நாத் கொலை மற்றும் பாலியல்
வல்லுறவுச் சம்பவம் இரண்டினாலும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த யாழ்ப்பாண மக்களைத்
திசை திருப்புவதற்காகப் படையினராலும் ஈபிடிபியினராலும் மேற்கொள்ளப்பட்ட நாடகம்
என்றே மக்கள் கருதுகின்றனர். இத்தகைய சம்பவங்களால் யாழ்ப்பாண மக்களின் இயல்பு
வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25.04.2010 துன்னாலைப் பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஓர் இளம்
பெண்ணை வெள்ளை ஊர்தியில் வந்த சிலர் கடத்திச்சென்று அவளது தங்க ஆபரணங்களையும்
சைக்கிளையும் அபகரித்தபின் கழுத்தை நெரித்துத் தில்லையம்பலப் பிள்ளையார்
கோயிலுக்கருகிலுள்ள பற்றைக்குள் வீசிச்சென்றிருந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர்
தப்பிய அப்பெண் காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து நெல்லியடி -
கன்பொல்லை இராஜகிராமத்தைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்
பெண். இவ்விருவரது வீடுகளையும் சோதனையிட்டபோது கடத்தப்பட்ட அப்பெண்ணின்
சைக்கிளும் தங்க ஆபரணங்களும் சிக்கின. ஈபிடிபியினரின் உத்தியோகபூர்வப் பிரச்சார
ஏடான தின முரசுவில் இக்கடத்தல் சம்பவத்தை ‘எக்ஸ்ரே ரிப்போட்’டாக எழுதியுள்ள நரன்
என்பவர் “. . . ஈபிடிபி முக்கியஸ்தர் செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவரது வீட்டில்
வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர்
இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர்” என்றவாறாக மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடும் வகையில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரி வேலாயுதம் 13. 05. 2008 அன்று கரவெட்டி மேற்குக் கீரிப் பல்லியிலுள்ள தன்
வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம்
தொடர்பில் நெல்லியடி இராஜ கிராமத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில்
கைதுசெய்யப்பட்டனர். விசாரணையின்போது அவ்விருவரும் புலிகளால்
அனுப்பப்பட்டவர்களெனத் தெரியவந்தது. மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்ட
காலத்தில் புலிகளின் கை மேலோங்கியிருந்தது. ஆனால் இப்போதோ புலிகளை வேரோடு
அழித்துவிட்டதாக மகிந்த அரசானது முழக்கமிட்டுவருகின்ற நிலையில் அண்மையில் நடந்த
கடத்தல் சம்பவத்தை மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி
நரன் என்பவர் தினமுரசில் எழுதியிருந்தது நகைப்பிற்குரியது. இவ்வாறான சம்பவங்களுடன்
ஈபிடிபியினருக்கும் தொடர்பிருப்பதாக வலுவான சந்தேகம் மக்கள் மத்தியில்
நிலவிவருகிறது. தம் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொலைகளில் அம்பலமாகிறபோது அவர்களை
முன்னாள் புலிகளின் உறுப்பினர் என்று கூறி மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவது
டக்ளஸ் தேவானந்தாவின் பாணியாகும். ஈபிடிபியினர் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திவந்த
படுகொலைகளைப் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திவந்த பாராளுமன்ற உறுப்பினர்
தியாகராசா மகேஸ்வரன் படுகொலையின் சூத்திரதாரி ஈபிடிபி உறுப்பினர் என்பதை
நிரூபித்துள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து இவ்வாறு கூறிவருவது
நோக்கத்தக்கது. யாழ்ப்பாணத்தில் 2006 ஆகஸ்ட் முதல் - 2009 மே வரையான காலப்
பகுதியில் கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போன மூன்றாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள்
கொலையில் ஈபிடிபியினருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தமிழரசுக் கட்சியின்
மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதை மக்களும் அறிவர்.
இவ்வாறான கடத்தல், கொலை மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்குக்
காரணமானவர்கள் யாரெனக் கருதுகிறீர்கள்?
நிச்சயமாக அரசின் ஆதரவின்றி இச்சம்பவங்கள் நிகழ்வது சாத்தியமல்லை. பொதுவாக
மக்களிடையே மூன்றுவிதமான கருத்துகள் இச்சம்பவங்கள் குறித்து நிலவுகின்றன.
- தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் என்ற பேரில் யாழ்ப்பாணக்
குடாநாட்டிற்கு வந்து வாடகைக்கு வீடுகளை எடுத்துத் தங்கியிருக்கும்
சிங்களவர்களாலேயே இச்சம்பவங்கள் நடக்கின்றன.
- ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராலேயே இச்சம்பவங்கள் நடக்கின்றன.
- இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களாலேயே இச்சம்பவங்கள் நடக்கின்றன.
இம்மூன்றையும் தொகுத்து நோக்கினால் இச்சம்பவங்கள் அரசின் ஆதரவின்றி நிகழ்வது
சாத்தியமில்லையென்பது தெளிவாகப் புலனாகிறது. ‘புலிப்பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து
30 வருடகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இனி நாட்டில் எந்தவொரு
பிரச்சினைக்கும் இடமில்லை’யென மகிந்த ராஜபக்ச கிளிப்பிள்ளைபோல்
சொல்லிக்கொண்டிருக்கிறார். காலங்காலமாகப் பேரினவாத அரசானது கப்பம் கோருவதும்
ஆட்களைக் கடத்துவதும் பயங்கரவாதச் செயலென வரையறுத்துவரும் நிலையில் இப்போது
யாழ்ப்பாணத்தில் நடை பெற்றுவரும் கடத்தல் சம்பவங்களுக்கு அரசு கூறப்போகும்
பதிலென்ன? ‘இக்கடத்தல் சம்பவங்களுக்கும் படையினருக்கும் எவ்விதத்
தொடர்புமில்லை’யென ஐம்பத்தோராவது படையணித் தளபதி சரத் விஜயசிங்க
அறிக்கைவிடுத்துள்ளார். அவருக்குப் போட்டியாக டக்ளஸ் தேவானந்தா
‘ஈபிடிபியினருக்கும் இக்கடத்தல் சம்பவங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
இச்சம்பவங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என இன்னுமொருபடி மேலே போய்
அறிக்கைவிடுத்துள்ளார். இச்சம்பவங்களுக்கு யார் காரணமெனப் படைத் தளபதியிடமோ டக்ளஸ்
தேவானந்தா விடமோ எவரும் கேள்வியெழுப்பவில்லை. மேலும் இச்சம்பவங்கள் தொடர்பில்
அரசப்படையினர் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை.
இக்கடத்தல் சம்பவங்கள் ஒரு மூன்றாவது சக்தியால் (புலிகளால்) மேற்கொள்ளப்படுவதாக
இருந்தால் அரசப் படையினரின் நடவடிக்கை வேறுமாதிரியாக இருந்திருக்கும்.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துவிட்டால் கடத்தல் சம்பவங்கள் நடைபெறக் கூடாதா எனக்
கேள்வியெழுப்புவது போன்றிருக்கிறது படையினரின் போக்கு. இக்கடத்தல் சம்பவங்களில்
கைதுசெய்யப்படுவோர் குறித்த எவ்விதத் தகவலும் அரசத் தரப்பினரால்
வெளியிடப்படவில்லை.
யாழ்ப்பாணத்து ஊடகங்களில் கபில்நாத் கொலை வெளிப்படுத்தப்பட்டதா? பாராளுமன்றத்
தேர்தலில் ஊடகங்கள் மக்களது கருத்தைப் பிரதிபலித்தனவா? மக்களைச் சரியாக
வழிப்படுத்தினவா?
யாழ்ப்பாணத்தில் உதயன், யாழ் தினக்குரல், வலம்புரி ஆகிய மூன்று தினசரிகள்
வெளிவருகின்றன. கபில்நாத் கொலையின் முக்கிய சூத்திரதாரியான ஈபிடிபி உறுப்பினரான
ஜீவா என்பவரைக் கைதுசெய்யுமாறு நீதிபதி ரி.ஜே. பிரபாகர் பிறப்பித்த பிடியாணையையும்
அறிக்கையையும் நடுநிலையான பத்திரிகையெனத் தன்னைப் பீற்றிக்கொள்ளும் வலம்புரி
நாளிதழ் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தது. 2010 ஏப்பிரல் 8இல் நடைபெற்ற
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தமைக்கு
வலம்புரியின் செய்திக்கட்டுரைகளும் தலையங்கங்களும் ஒரு காரணம். நேரடியாக ஈபிடிபியை
ஆதரித்தால் தனது பத்திரிகை விலைபடாது என்பதை அறிந்து தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளைச் சிதைப்பதற்காகத் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை இந்திய அடிவருடிகள் என்று எழுதித் தீவிரத் தமிழ்த் தேசியம் பேசிய
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய முன்னணிக்குச் சார்பான அறிக்கைகளை
வலம்புரி வெளியிட்டுவந்தது. தேர்தலுக்கு மறுநாள் - ஏப்பிரல் 9, 2010 அன்று
இப்பத்திரிகை ‘வாருங்கள் கங்கையில் குளித்துக் காசியில் பிரதட்சணம் செய்வோம்’
என்று தலையங்கம் தீட்டித் தற்கொலை செய்திருந்தது.
இப்பத்திரிகை இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பதற்காக இரா.
சம்பந்தனுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பிவருவது மட்டுமன்றி வடக்கு (யாழ்ப்பாண)
மேலாதிக்கத்தைத் தனது தலையங்கங்களில் எழுதிவருகிறது. தன்னை அறத்தில் நிலை
நிறுத்திக்கொள்வதான ஒரு மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவரும் இத்தினசரி தீவிர
இந்துத்துவக் கொள்கையை முன்னெடுத்து மக்களை ஏமாற்றிவருகிறது. துச்சாதனனையும்
பான்கி மூனையும் ஒப்பிட்டுத் ‘துச்சாதனா நீ நல்லவன்’ என்று துதிபாடி நாலாந்தரப்
பத்திரிகையாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது. மட்டுமன்றித் தன்னை
விடுதலைப்புலிகளின் ஆதரவுப் பத்திரிகையாகக் காட்டி மக்களை வசப்படுத்த முனைகிறது.
இன்றைய நாளின் முக்கியப் பதிவுகள் என்ற பகுதியில் போரில் இறந்த புலிகளின்
முக்கியத் தளபதிகளின் பெயர்களை வெளியிட்டுவருகிறது. ஏனைய தினசரிகளில் இப்படியான
தகவல்களை எழுத முடியுமா? எழுதினால் படையினரின் விசாரணையை எதிர்கொள்வர்.
அப்பத்திரிகை படைத்தரப்பினருடனும் ஈபிடிபியுடனும் கொண்டுள்ள உறவை இதனூடு
விளங்கிக்கொள்ள முடியும். ஊடகப் பயங்கரவாதத் திற்கு வலம்புரி உதாரணமாக
விளங்குகிறது.
02.05.2010 அன்றிரவு ஏழு மணியளவில் நெல்லியடியில் மகாலிங்கம் சதீசன் என்ற இளைஞர்
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவங்குறித்துக் கொழும்பு வாழ் தமிழர்களிடையே புலிகள் இயக்கம்தான் சதீசனை
சுட்டுக் கொன்றதாக ஒரு கருத்து நிலவிவருகிறது. இதற்கு உங்கள் பதிலென்ன?
சுட்டுக்கொல்லும் கலாச்சாரத்தைத் தொடங்கிவைத்தவர்கள் புலிகள்தாம். அது புலிகளின்
தனி அடையாளம். ஆனால் ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், புளொட் போன்ற பிற
ஆயுதக் குழுக்களும் தமக்கு வசதியாக இக்கலாச்சாரததைப் பிரயோகித்துவிட்டுப்
புலிகள்மீது பழிசுமத்தக்கூடிய நிலைமைதான் மகிந்த அரசானது புலிப் பயங்கரவாதத்தை
முற்றாக ஒழித்துவிட்டதாக 2009 மே நடுப்பகுதியில் அறிக்கைவிடுக்கும்வரை நிலவி
வந்தது. இக்காலப் பகுதியிலிருந்து சுமார் ஒருவருடம்வரை இனந் தெரியாதோரால்
சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் ஓய்ந்திருந்தன. இவ்வோய்வுக்குப் புலிப்
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது காரணமல்ல. புலிப் பயங்கரவாதத்தை முற்றாக
ஒழித்துவிட்டதாக அறிவித்த பின்னர் இவ்வாறான சம்பவங்களுக்குப் புலிகள்மீது பழிசுமத்த
முடியாது என்ற அரசின் நிலைப்பாடுதான் பிரதானக் காரணம். எனினும் மிக அண்மைக்
காலங்களில் சிலர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் (வெட்டுக்காயங்களுடன்)
கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மக்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. என்னவெனில் புலிகளை முற்றாக
ஒழித்துவிட்டதாகக் கூறிவரும் மகிந்த அரசு தனது விரோதிகளைக் கொல்வதற்குத்
துப்பாக்கிப் பிரயோகம் செய்யாது. அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் முன்னைய
காலங்களைப் போலப் புலிகள்மீது பழிசுமத்த முடியாது. இப்போது படையினரிடமும்
ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், புளொட் போன்ற
மாற்றுக்குழுக்களிடமுந்தான் ஆயுதமுள்ளது. எனவே யாராவது சுட்டுக்கொல்லப்பட்டால்
அதற்குப் படையினரோ மாற்றுக்குழுக்களோதான் காரணமாயிருக்க முடியுமென மக்கள் எளிதாக
இனங்கண்டுகொள்வர். இது மகிந்த அரசுக்கும் அதைச் சார்ந்தியங்கும்
மாற்றுக்குழுக்களுக்கும் உவப்பானதல்ல. ஆனால் மகாலிங்கம் சதீசன்
சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களின் எதிர்பார்ப்பினைப் பொய்யாக்கி
அதிர்ச்சியிலாழ்த்தியுள்ளது.
இது ஒருபுறமிருக்க மகாலிங்கம் சதீசன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம்
உணர்த்தப்படும் சங்கதிதான் முக்கியமானது. மகாலிங்கம் சதீசன் பருத்தித்துறையிலுள்ள
தும்பளைப் பகுதியைச் சேர்ந்தவர். 2006 ஓகஸ்ற் மாதத்தின் பின் யாழ்ப்பாணத்தில்
நிலைமை மோசமடைந்தபோது விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பொறுப்பாளராக இயங்கி
அரசப் படையினருக்கெதிரான கிளைமோர் தாக்குதல்களை முனைப்புடன் மேற்கொண்டார்.
பருத்தித்துறைசார் வர்த்தகர்களிடமிருந்து புலிகளின் சார்பில் நிதிதிரட்டினார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக இவரைத் தேடித் திரிந்தபோது தனக்கு வலுவான
பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும் நோக்குடன் தும்பளைச் சிவப்பிரகாச வித்தியாசாலை
அதிபர் கணபதிப் பிள்ளையிடம் அப்பாடசாலையில் கல்வி கற்பதாக உறுதிப்படுத்தி அடையாள
அட்டையொன்றைத் தனது பெயரில் தந்துதவுமாறு சதீசன் கேட்டுக்கொண்டார். அது
சட்டவிரோதமானதெனக் கூறி அடையாள அட்டையை வழங்கக் கணபதிப் பிள்ளை மறுத்துவிட்டார்.
அடுத்த சில நாள்களில் கணபதிப் பிள்ளை கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பின்னர் சதீசனும் இராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து இராணுவத்தின் கையாளாக விளங்கிப் புலிகளின் ஆதரவாளர்களைச்
சுட்டுக்கொல்லத் தொடங்கினார். 2009 மே மாதம்வரைக்கும் தொடர்ந்தும் இராணுவத்தினர்
மத்தியில் செல்வாக்குடையவராகச் சதீசன் திகழ்ந்துவந்தார். அண்மைக் காலமாக
நெல்லியடியில் ‘டிஜிற்றல் கலர் லாப்’ ஒன்றைத் திறப்பதற்கான நடவடிக்கைகளில்
ஈடுபட்டுவந்தார். யாழ் மாவட்டத்தில் ‘டிஜிற்றல் கலர் லாப்’ ஒன்றைத் திறப்பதற்குத்
தேவைப்படும் ஆரம்ப முதலீடு 30 இலட்சம் ரூபாவென்பதும் குறிப்பிடத்தக்கது. 03.05.2010
அன்று நெல்லியடியில் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார் ‘இதை நாங்கள் எப்போதோ எதிர்பார்த்திருந்தோம்’ என்பதுபோலவே
படையினர் இச்சம்பவத்தின் பின்னர் நடந்துகொண்டதைப் பார்க்க முடிந்தது. ஒரு
காலத்தில் சதீசன் படையினருக்கு அத்தியாவசியமானவராக இருந்தார். இப்போது சதீசன்
படையினருக்கு எவ்விதத்திலும் அவசியமற்றவர். அவர் இயல்பு வாழ்க்கைக்குத்
திரும்புவதும் படையினருக்கு உவப்பானதல்ல. சதீசன் தொடர்ந்தும் படையினரோடு
சேர்ந்தியங்கியிருப்பின் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கமாட்டார். இப்போதும்
படையினரோடு சேர்ந்தியங்கும் தமிழ்க் குழுக்களுக்கு சதீசன் சுட்டுக்கொல்லப்பட்ட
சம்பவம் ஒரு படிப்பினையாகவே இருக்கப்போகிறது.
நீங்கள் இதுவரையிலளித்த பதில்களிலிருந்து அண்மைக் காலமாக யாழ்குடாநாட்டில்
நடைபெறும் சம்பவங்களுக்கெல்லாம் அரசப் படையினரோ தமிழ் ஆயுதக் குழுக்களோதான் முழு
பொறுப்பென்பதை உய்த்துணர முடிகிறது. இவ்வசம்பாவிதங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான
பின்னணி என்னவாக இருக்கும்?
போர் நடைபெற்ற காலத்தில் இருந்ததைப் போல இப்போதும் சோதனைச் சாவடிகளும் இராணுவ
முகாம்களும் அப்படியே இருக்கின்றன. ஒரு சுமூகமான சூழ்நிலையில் சிவில் நிர்வாகத்தை
மேற்கொள்ளுவதற்குக் காவல் நிலையங்கள் இருந்தாலே போதுமானது. இச்சோதனைச்
சாவடிகளையும் இராணுவ முகாம்களையும் அகற்றும்படி மகிந்த அரசு
அழுத்தத்திற்குள்ளாகிவரும் நிலையில் அவை தொடர்ந்து அதே நிலையிலிருப்பதற்கான
அவசியத்தை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ள
நிலையில் இச்சம்பவங்களைக் காரணங்காட்டித் தப்பித்துக்கொள்ள முயல்வது
கீழ்த்தரமானதொரு தந்திரோபாயமாகும். பொதுப்போக்குவரத்தின்போது படையினர்
வாகனங்களை நிறுத்திச் சோதனையிடும் நடைமுறை மீளவும் இடங்களில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
மீள்குடியேற்றப் பகுதிகளின் நிலைமை எவ்வாறுள்ளது?
மீள்குடியேற்றப் பகுதிகளில் இருமருங்கும் படையினரின் முகாம்கள் நடுவே மக்கள்
குடியேற்றம் என்ற ஒழுங்கமைப்பை அவதானிக்க முடிகிறது. அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் உவப்பானவையல்ல. ஒரு வகை மாதிரியாக இன்றைய கிளிநொச்சியை
எடுத்துக்கொள்வோம். குறிப்பாக இங்கே மீள்குடியேற்றப்பட்டுள்ள பெண்களின் நிலை
மிகமோசமானது. இவர்கள் குளிப்பதற்கு வசதியான மறைவிடங்கள் இல்லை. திறந்தவெளிகளிலும்
பொதுக்கிணறுகளிலுமே குளிக்க வேண்டியிருக்கிறது. அவ்விடங்களில் குளிக்கும்போது
அருகிலிருக்கும் பற்றைகளுக்குள் விசிலடித்தபடியே இராணுவத்தினர் மறைந்திருந்து
பார்க்கின்றனர். தற்போது கிளிநொச்சிப் பகுதியில் வசித்துவரும் பெண்ணொருவரை
யாழ்நகரில் சந்தித்தேன். ஒரு நாள் பொதுக்கிணறொன்றில் குளித்துக்கொண்டிருந்தபோது
அருகிலிருந்த பற்றைக்குள்ளிருந்து மெல்லிய கீச்சொலி கேட்டதாகவும் குருவிகள் ஏதும்
கீச்சிடுவதாகக் கருதியதாகவும் சற்று நேரம் கழித்து அந்தப் பற்றைக்குள்ளிருந்து
படையினன் ஒருவன் சிரித்துக்கொண்டு வந்ததாகவும் அந்தப் பெண் என்னிடம் சொன்னார்.
இப்பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களும் கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்களவர்களே இச்சம்பவங்களுக்குக்
காரணமாயிருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளைஞரொருவர் கிளிநொச்சிப் பகுதியில்
கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சடலம் முட்கம்பியால்
கட்டப்பட்டிருந்ததுடன் மோசமான அடிக் காயங்களும் இருந்தன. அங்கிருந்து
யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சிலரை இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது குறித்த
இளைஞர் தனியே வீட்டில் தங்கியிருந்ததாகவும் தென்னிலங்கையில் இருந்து வந்த சிலர்
அவ்வீட்டில் யாருமில்லையென நினைத்துத் திருடச் சென்றபோது வீட்டினுள் படுத்திருந்த
அவ்விளைஞர் விழித்தெழ அவரை அடித்துக் கொலைசெய்து கிணற்றில் வீசிவிட்டதாகத் தகவல்
கிடைத்தது. இச்சம்பவத்தையடுத்து மேலுமிரு பெண்களின் சடலங்கள் இதே போன்று
அடுத்துவந்த சில தினங்களில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது. பாடசாலை மாணவிகள் இருவர் மீள்குடியேற்றப் பகுதியிலிருந்து
காணாமல்போயிருந்த நிலையில் இருதினங்களின் பின் பற்றைக்குள்ளிருந்து சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் படையினர் இளம்பெண்கள் தனித்திருக்கும் வீடுகளைத்
தேடிச்சென்று கதவுகளைத் தட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில் படையினர் பாரியளவில் மர வியாபாரத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். இப்பகுதிகளில் பல்பொருள் விற்பனை நிலையங்களைத் தென்னிலங்கைச்
சிங்களவர்களே நடத்திவருகின்றனர். கிளிநொச்சியின் மையப் பகுதியில் பிரமாண்டமான
தாதுகோபுரத்துடன் பௌத்த விகாரையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது நான்
உங்களுக்குப் பதிலளித்துக்கொண்டிருக்கும்போது கிடைத்த குறுந் தகவலொன்று நேற்றைய
தினம் (29.05.2010) கிளிநொச்சியின் கணேசபுரத்தில் மலசலகூடக் குழியொன்றைத்
துப்புரவாக்கியபோது அதனுள்ளிருந்து கறுத்த பொலித்தீன் பையில் மூடிக்கட்டப்பட்டு
அழுகியநிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
வலிகாமம் வடக்குப் பகுதிகளிலிருந்து படைமுகாம்கள் அகற்றப்பட்டு அப்பகுதிகளில்
மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள நிலைமை
எவ்வாறுள்ளது?
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தமது வீடுகளிருப்பதால் உருக்குலையாமலிருக்கும்
என்கிற நம்பிக்கை மக்களுக்கிருந்தது. ஆனால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆவலுடன்
சென்றிருந்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அவர்களது வீடுகளில் பெரும்
பாலானவை கூரைகள் அகற்றப்பட்டு மூளியாகக் காட்சியளித்தன. கதவுகள், யன்னல்கள்கூட
இடித்து அகற்றப்பட்டிருந்தன. இப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவதற்கு
முன்னர் தென்னிலங்கைச் சிங்களவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நடமாட
அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது. ‘எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம்’
என்பது இதுதான். பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்
இப்பகுதிகளில் மக்கள் மீளக் குடியேற அனுமதி வழங்கப்படுமென உறுதிமொழி
வழங்கப்பட்டது. தேர்தல் நடைபெற்று 2 மாதங்கள் கடந்தும் இன்றுவரை மக்கள் குடியேற
அனுமதிக்கப்படவில்லை. உயர்பாதுகாப்பு வலயம் அரை கிலோ மீற்றர் மாத்திரமே
பின்னகர்த்தப்பட்டுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையும் பல நோக்குக்
கூட்டுறவுச் சங்கமும் மாத்திரமே மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. காங்கேசன் துறை,
கீரிமலை, மயிலிட்டி, மாவிட்டபுரம், தெல்லிப்பபழை, மாதகல், வறுத்தலைவிளான்,
கட்டுவன், வசாவிளான், குரும்பசிட்டி, பலாலி முதலானவை அடங்கிய பெருநிலம் இன்றுவரை
உயர்பாதுகாப்பு வலயப் பகுதியாகவேயுள்ளது. 1990இல் இடம்பெயர்ந்த ஒரு இலட்சத்திற்கும்
அதிகமான மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ளனர். அவர்களுடைய வளமான
விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 10ஆம் திகதி ‘மனித உரிமைகள் இல்லம்’ ஏற்பாடு
செய்திருந்த கருத்தரங்கிற்குத் தமிழ் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
அழைக்கப்பட்டிருந்தனர். மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டமை
குறித்துக் கேள்வியெழுப்பினர். ‘வலிவடக்கு இடம்பெயர்ந்தோர் சங்க’ப் பிரதிநிதி
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.
வன்னியில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம் பெயர்ந்த மக்களது பிரச்சினையை
சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டு வந்ததுபோல வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைவிட்டு
இடம்பெயர்ந்து 20 வருடங்கள் கடந்தும் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்ட ஒரு
இலட்சத்திற்கும் அதிகமான மக்களது வாழ்வுரிமைப் பிரச்சினையையும் சர்வதேசக்
கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இப்பிரச்சினையைத்
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டனரா? இப்போதும் புகையிரதப்
பாதைகளிலும் தாழ்நிலங்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் தறப்பாளுக்குள் ஓலைக்
குடிசைகளில் வாழும் இம்மக்களது வாழ்வுரிமைப் பிரச்சினையைத் தமிழ் அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகள் சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து
சுண்ணக் கற்கள் அகழப்பட்டுத் தென்னிலங்கையின் காலியிலுள்ள சீமெந்து ஆலைக்கு ஏ - 9
வீதியூடாகக் கனரக வாகனங்களில் அனுப்பப்படுவது பற்றித் தமிழ்க் கூட்டமைப்புப்
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது விரிவான செய்திக் கட்டுரையொன்று யாழ் தினக்குரல்
பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
20 வருடங்களுக்கு மேலாகக் காங்கேசன் துறையிலுள்ள சீமெந்து ஆலை மூடப்பட்டுள்ளது.
வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த இத்தொழிற்சாலை
உயர்பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தால் மீள இயக்கப்படவில்லை. இப்பகுதியில் சுண்ணக்
கற்கள் தொடர்ந்து அகழப்படுவது கடலரிப்பை ஏற்படுத்தும் என்றும் காலப்போக்கில்
காங்கேசன்துறை, கீரிமலை, மயிலிட்டி, மாவிட்டபுரம் முதலான பிரதேசங்கள் கடலினுள்
அமிழ்ந்துபோகக்கூடிய அபாயம் உள்ளது என்றும் சூழலியலாளர்கள் பல தடவை
சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் யாழ்ப்பாணக் குடா நாடு சுண்ணக்கற்களின் மேல்
அமைந்துள்ளது. இச்சுண்ணக்கற்களே நன்னீரைத் தேக்கிவைத்துள்ளன. 20 மீற்றர் ஆழத்தில்
நீர் வந்த பிறகும் இயந்திரங்கள் மூலம் சுண்ணக்கற்கள் அகழப்படுவது எதிர் காலத்தில்
இப்பிரதேசத்தில் மக்கள் குடியேறும்போது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
இந்நிலையில் இரகசியமாகச் சிங்களவர்களைக் கொண்டு சுண்ணக்கற்கள் அகழப்படுவது தொடர
வேண்டுமெனில் உயர்பாதுகாப்பு வலயம் அகற்றப்படக் கூடாது என்பதுதான் நிலை.
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களின் நிலைமை எவ்வாறுள்ளது?
மகிந்த அரசானது வவுனியா புனர்வாழ்வு முகாம்களுக்குச் செஞ்சிலுவைச் சங்கப்
பிரதிநிதிகள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை மறுத்துவரும் நிலையில்
அம்முகாம்களில் பலமாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளம்பெண்கள் மிகமோசமான
நெருக்கடி நிலைக்குள்ளாகியிருப்பதாக ஐக்கியநாடுகள் சபைக்கான ஊடக அமைப்பான
மிஸீஸீமீக்ஷீ சிவீtஹ் றிக்ஷீமீss அறிக்கைவிடுத்துள்ளது. இந்நிலையில் வவுனியா
புனர்வாழ்வு முகாம்களில் ஒன்பது மாதங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளம்
பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகிறது.
பொதுவாக இம்முகாம்களில் உள்ள பெண்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் அவர்களது
வறுமை நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தியும் பாலியல் அத்துமீறல்களை அரசப்படையினர்
நிகழ்த்திவருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் ‘எச்சரிக்கைச் சுவரொட்டி’ முளைத்துள்ளதாக வரும் செய்தி
உண்மையானதா?
26.04.2010 அன்று திங்கட்கிழமை யாழ் நகரில் ‘எச்சரிக்கிறோம்’ என்ற தலைப்பிலமைந்த
சுவரொட்டியைப் பார்த்தேன். தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்-யாழ் மாவட்டப்
பிரிவு எனக் கீழ்க் குறிக்கப்பட்டிருந்தது. மேலும் அச்சுவரொட்டியில் “இன்று தமிழ்
மக்களாகிய நாம் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து
நிற்கும் சிங்களப் பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிடப் பல
உத்திகளை வகுத்துள்ளன. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான
சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்னும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்துத்
தமிழ் மக்களாகிய எம்மைச் சிறுபான்மையினராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இன்று எம்மிடம்
உண்டு. ஆனால் இதற்கு மக்களில் சிலர் துணைபோவது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மயமாக்கலுக்குத் துணைபோகும் விதத்தில்
- வர்த்தக நிலையங்களில் பெயர்ப் பலகையில் சிங்கள மொழியில் எழுதுதல்
- சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களுக்கு வாடகைக்கு வீடுகளை வழங்குதல்
- சிங்களவர்களுக்கு வீடுகள், காணிகள், கடைகளை விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல்
-தனியார் சிற்றூர்திகளில் சிங்கள மொழிப் பாடல்களை ஒலிபரப்புதல்,
-சிங்களப் பேரினவாதத் தலைவர்களின் புகைப்படங்களை வைத்தல்,
போன்ற செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டும். இந்நடவடிக்கைகள் ஒரு வார
காலத்துக்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை
எதிர்கொள்ள வேண்டியேற்படும். அதியுச்சத் தண்டனைகளையும் பெறுவீர்கள். அன்பார்ந்த
பொதுமக்களே! எமது இயங்கு சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதம்
அடைந்துள்ள இவ்வேளையில் எம்முடன் ஒத்துழைத்துச் சிங்களமய மாக்கலில் இருந்து எமது
தாய் மண்ணையும் தாய்மொழியையும் எதிர்காலச் சந்ததியையும் காப்போம்! சிங்கள மக்களே
உங்கள் இராணுவத்தை நம்பி யாழ்ப்பாணம் வராதீர்கள். இனியும் வந்தால் கடும் துன்பங்களை
எதிர்கொள்வீர்கள்!” என்றவாறு அடாவடித்தனங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும்
விதத்தில் அந்தச் சுவரொட்டி அமைந்துள்ளது.

இது யாரால் ஒட்டப்பட்டிருக்கும் எனக் கருதுகிறீர்கள் ?
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழல்
முற்றிலும் வேறுபட்டது. அண்மைக்காலமாக ஏ - 9 வீதிவழியே யாழ் குடாநாட்டுக்குள்
தென்னிலங்கையில் இருந்து பாலியல் தொழிலாளர்களும் கொண்டுவரப்படுகின்றனர். இவர்கள்
கோட்டை முனியப்பர் கோவில் பகுதியில் மாலைவேளைகளில் சுற்றித்திரிவது
அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. யாழ்கோட்டையும் உல்லாசப் பயணிகள் பார்வையிடும் தலமாக
மாறியுள்ளது. இப்பகுதி பாலியல் தொழில் போன்ற தகாத செயற்பாடுகளுக்கு ஏற்றவகையில்
இருள் சூழ்ந்த மறைவிடங்களைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஊர்
இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற அடிப் படையில்தான் டக்ளஸ்
தேவானந்தா போன்றோர் நடந்துகொள்கின்றனர். நாளுக்கு நாள் யாழ் குடாநாட்டில் தகாத
நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன. இது உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய
ஒன்றாகும். கட்டுப்படுத்த வேண்டியவர்களே இத்தகாத செயல்களை மேற்கொள்வதில்
முனைப்புக் காட்டிவருவதால் இச்சுவரொட்டி முளைத்துள்ளது என்றே கருதுகிறேன். சமூக
அக்கறையுள்ள ஒரு குழுவின் செயற்பாடாக இதைக் கருதலாம். சுவரொட்டியில்
குறிப்பிட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை
ஏதும் மேற்கொள்ளப்படவில்லையென்பதால் இதை வெறும் எச்சரிக்கையாகவே கருதலாம்.
சுவரொட்டி மூலமாக விடுக்கப்படும் செய்தி முக்கியமானதெனக் கருதுகிறேன். யாழ்
குடாநாட்டில் தகாத நடவடிக்கைகள் நீடித்துச் செல்லும் நிலையில் இச்சுவரொட்டி
வெளியிட்ட குழுவைப் போன்று மேலும் சில அநாமதேயக் குழுக்கள் உருவாகலாம். இத்தகைய
குழுக்கள் உருவாவதைப் புறச்சூழல்தான் தீர்மானிக்கிறது. இக்குழுக்களின் கை
மேலோங்கும் நிலையில் இச்செயல்களில் ஈடுபட்டுவருவோர் மோசமான பின்விளைவுகளை
எதிர்கொள்ளவும் நேரிடலாம்.
வடக்கில் தமிழினத்தின் வரலாற்றுச் சின்னங்களைத் திட்டமிட்டுச் சிதைக்கும்
நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருவது உண்மைதானா?
‘வடக்கின் வசந்தம்’ என்ற பெயரில் இப்போது யாழ் குடா நாட்டின் பெருந்தெருக்கள்
விரிவாக்கம் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு நாட்டுக்கு வீதி அபிவிருத்தி
முக்கியமானதுதான். ஆனால் உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டிய எவ்வளவோ பிரச்சினைகள்
இருக்கின்றன. குறிப்பாக இன்னும் 75,000 அளவிலான மக்கள் வவுனியா முகாம்களில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு இன்னும்
உறுதிப்படுத்தப்படவில்லை. மிக அண்மையில் 06.06.2010 அன்று முல்லைத்தீவிலமைந்துள்ள
விசுவமடு மாணிக்கபுரத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களில் இளம் பெண்ணொருவர்
இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். அன்றைய தினம்
நள்ளிரவுவேளை குறித்த பெண்ணின் இருப்பிடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் ஆறுபேர்
இப்பெண்ணின் தாயையும் சகோதரனையும் கட்டிவைத்து விட்டுக் குறித்த பெண்ணை
அருகிலிருந்த பாழடைந்த வீடொன்றினுள் இழுத்துச் சென்று கூட்டாகப் பாலியல்
வல்லுறவிற்குட்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் அருகிலுள்ள இராணுவ
முகாமிற்குச் சென்று இப்பெண் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இராணுவத் தினரில்
ஆறுபேரைக் கைதுசெய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் கிளிநொச்சி
நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில்
14.06.2010 வரை இந்த ஆறுபேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு அடையாள அணிவகுப்புக்கு
ஏற்பாடுசெய்யுமாறும் நீதிபதி பெ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ஆறுபேரும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால்
இவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படுமென இராணுவத்தரப்பிலிருந்து
அறிக்கைவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆறுபேரும் பாலியல் வல்லுறவில்
ஈடுபடுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்படுமா என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வி.
இவ்வாறான எத்தனையோ சம்பவங்களில் ஈடுபட்ட படையினர் விடுவிக்கப்பட்டதுதான் வரலாறாக
உள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இவற்றுக்கான
நிரந்தரமானவொரு தீர்வை முன்வைக்காமல் வீதிகளை மட்டும் அபிவிருத்தி செய்வதற்கான
அவசியமென்ன?
உண்மையில் தமிழினத்தின் வரலாற்றுச் சின்னங்களைத் திட்டமிட்டுச் சிதைக்குமொரு
நடவடிக்கையாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. சில சம்பவங்கள் இதை நேரடியாகவே
எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக யாழ் குடா நாட்டுக்குத் தென்னிலங்கையில் இருந்து
வியாபாரம் செய்வதென்ற பேரில் வந்த சிங்கள வியாபாரிகளால் நல்லூர் வீதியிலிருந்த
தியாகி திலீபன் நினைவுத் தூபி இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது. வன்னிப்பகுதியல்
கற்கிலை மடு என்னுமிடத்திலிருந்த பண்டாரவன்னியன் நினைவு நடுகல் உடைத்து
வீழ்த்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்
பிரபாகரனின் வீடு தரைமட்ட மாக்கப்பட்டுள்ளது. மறைமுக வீதி அபிவிருத்தி என்ற பெயரில்
தமிழினத்தின் வரலாற்றுச் சின்னங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவருகின்றன.
எடுத்துக்காட்டாகப் புத்தூர் சோமஸ் கந்தாக் கல்லூரிக்கு முன்பாகவிருந்த ‘மழவராயர்’
காலத்து அரசமரம் வேருடன் அகற்றப்பட்டுள்ளது. உண்மையில் இம்மரத்தைப் பேணிப்
பாதுகாக்கும் நோக்கம் இருந்திருந்தால் அவ்விடத்தில் வட்டப்பாதை அமைத்திருக்கலாம்.
வல்லை வெளியில் ஒருமருங்கிலேயே 10 அடி சுற்றளவுள்ள 5 பாரிய பூவரசமரங்கள்
நின்றிருந்தன. அவையும் வேரோடு அகற்றப்பட்டுவிட்டன. பூவரசமரம் என்பது வேரோடி
புரட்டி மீள்நடுகை செய்யக்கூடியது. இதைப் பற்றியெல்லாம் மரங்களை அகற்றும்
நடவடிக்கையிலீடுபட்டவர்கள் சிந்திக்கவில்லை. தமிழ்ப் பகுதிகளில் போரினாலும் இயற்கை
அனர்த் தங்களாலும் அழிவடையாமல் எஞ்சியுள்ள வளங்களைப் பாதுகாப் பதில் அரசுக்கு
அக்கறையில்லை.
o
பின்குறிப்பு:
இந்நேர்காணல் அநாமதேயனின் வேண்டுகோளின் படி அவர் நாட்டைவிட்டு
வெளியேறிய பின்னர் பிரசுரத்திற்காக அனுப்பப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியும் மனித உரிமைகள் பணியாளருமான ரமேஸ் குலநாயகம்
காணாமல்போனதைத் தொடர்ந்து தனது உண்மைப் பெயரை மறைத்துப் புனைபெயரில் அரசியல்
நிலவரங்கள் குறித்து எழுதிவந்த அநாமதேயன் தொலை பேசிவழி கொலை அச்சுறுத்தலுக்கு
உள்ளாக்கப்பட்டார்.
|