Google   www kalachuvadu.com

கல்வி: கட்டுரை
பாலியல் கல்வி
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு
அனிருத்தன் வாசுதேவன்

“வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதா?”

- சுந்தர ராமசாமி,

“சுய கல்வியைத் தேடி,” ஆளுமைகள் மதிப்பீடுகள், காலச்சுவடு, திசம்பர் 2004.

கல்வி பற்றிப் பேசவும் சிந்திக்கவும் எவ்வளவோ உண்டு. இன்றைய கல்வி முறை பற்றியும் அதன் வியாபார நோக்கு குறித்தும், “பாடப்புத்தகங்கள் முன்வைக்கும் முடிவுகளை அப்படியே விழுங்குவது,” (சு.ரா. “சுய கல்வியைத் தேடி”) என்ற நிலை குறித்தும் சிந்திக்க நிறைய உள்ளன. நடைமுறைகளையும் அவற்றின் குறைபாடுகளையும் பற்றிப் பேசுகையில் உறுதியான நிலத்தின் மேல் சஞ்சரிப்பவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும் உணர்கிறோம். ஆனால் கல்வி குறித்து தத்துவரீதியாகச் சிந்திக்கத் தொடங்கும்போது நம் தொனியில் வேட்கையின் மணமும் கனவின் கனமின்மையும் பல நேரங்களில் கலக்கின்றன. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே உலவுவது ஒரு வித்தை.

பால், பாலுறவு, பாலியல், பாலியல் அரசியல் என்னும் கண்ணோட்டங்களிலிருந்து கல்வி பற்றிச் சிந்திக்கையில் அந்தச் சிந்தனையும் விழைவு, வேட்கை, கனவு ஆகியவற்றின் மணங்களுடன் ஊதுவர்த்தியினின்றும் எழும் புகைபோல மெல்லியதாய் மேலெழும்புகிறது. மேல்வர்க்கச் சிந்தனை என்கிற குற்றச்சாட்டுகளுக்கான சாத்தியங்களையும் மீறி இந்தப் புகை எழத்தான் செய்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் விழைவுகளும் காமமும் காதல்களும் புணர்தல்களும் இருப்பதாகத் தெரிவதால் இது பற்றிப் பேசும்போது ஏதோ ஒரு வர்க்க வாழ்வனுபவத்தின் அடிப்படையில் பேசினாலும் எங்கேனும் ஒரு புள்ளியில் மற்றவர்களையும் அது தொடும் என்கிற நம்பிக்கையுடன் பேச முடிகிறது. பேசுவது மற்றவர் களைச் சென்றடையும் என்னும் நம்பிக்கையில் பேச வேண்டியுள்ளது. “பெண்கள் சந்திப்பு” ஒழுங்கு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் இது குறித்து நான் பேசுகையில் இவ்வாறு கூறினேன்: “பேசுவது கேட்கப்படக் குரல் மட்டும் போதாது. நாம் பேசுவது போய் நிற்க ஒரு வெளி வேண்டும்; ஒரு கருத்துச் சூழல் வேண்டும். நம்மையும் நாம் பேசுவதையும் அடையாளம் கண்டுகொள்ள ஒரு கட்டமைப்பு வேண்டும். மொழியாலான ஒரு இடம்.” ஆனால் இது குறித்து மேலும் சிந்திக்கையில் “மொழியாலான இடம்” என்று மட்டும் கூறியதன் மூலம் சொல்லாடலின் வீரியத்தை அதிகப்படியாக எடைபோட்டு விட்டேனோ என்று தோன்றியது. இது மொழியாலான இடம் மட்டுமன்று. இது உடல்களால் ஆன இடமும்கூட. ஆணும் பெண்ணுமாகிய உடல்கள். இரண்டிலும் அடங்காத உடல்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றாகும் உடல்கள். ஆணுடல் நாடும் ஆணுடல்கள். பெண்ணுடல் நாடும் பெண்ணுடல்கள். எவ்வுடல்களையும் நாடும் எவ்வுடல்களும். உடல்களாலான இடம். மொழியாலான இடம். உடல்களாலான மொழியாலான இடம். உடல்களை உதாசீனப்படுத்தாத மொழியாலான இடம். அத்தகையதொரு இடத்தைக் கல்வியால் உருவாக்கக்கூடுமானால் அது எத்தகையக் கல்வியால் சாத்தியமாகும்?

நிச்சயமாக அது இன்றைய கல்வியால் நடக்காத காரியம். பால் அடையாளங்களை, பாலியல் வெளிப்பாடுகளை, விழைவுகளை, இச்சைகளை இவை குறித்த உரையாடல்களை உள்ளடக்கிய கல்வி இன்றைய கல்விபோல் நிச்சயம் இராது. பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும் சரி, இல்லையெனினும் சரி. பாலியல் பற்றி வரும் சந்ததியினருக்குக் கற்பிக்க முயலும் முன் அது குறித்து நாம் ஏற்கனவே கற்றிருப்பதில் பெரும்பான்மையை முதலில் மறக்க வேண்டியுள்ளது. பாடப்புத்தகங்களின் அட்டைகளுக் கிடையிலும் ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலிலும் பாலியலுக்கு இடமில்லை என்றால் நம் குழந்தைகள் அது குறித்துத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்று நம்பினோமானால் சுய ஏமாற்றத்தில் தன் கண்ணை மூடி உலகத்தை இருளச் செய்ததாக நினைத்த பூனையைவிட மோசமானவர்களாவோம்.

ஏனெனில் பாலியல் குறித்துப் பலவற்றையும் ‘கற்பதற்கான’ இடங்கள் எத்தனையோ உள்ளன. தொலைக்காட்சி, விளம்பரம், ஊடகங்கள், சினிமா, இணையதளம் ஆகியவை தவிரத் தங்களது உடனடிச் சூழல்களான வீடு, தம் தாய் தந்தையருக்கு இடையில் உள்ள அதிகாரச் சமன்பாடின்மை, தம் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் நடந்துகொள்ளும் விதங்கள், நடத்தப்படும் விதங்கள், உடன் வளரும் சிறுவர் சிறுமியர் தம்மை வெளிப்படுத்தும் விதங்கள் என்று குழந்தைகளுக்குப் பால், பால் வேற்றுமை, வெளிப்பாடு, விழைவு, வன்முறை ஆகியவை பற்றி மறைமுகமாகக் கற்றுக்கொடுக்க ஆயிரம் இடங்கள் உள்ளன. இவை அனைத்தையும் தவிரக் குழந்தைகளுக்குப் பாலியல், பாலின வெளிப்பாடு குறித்து அவர்களது உடல்களும் உள்ளங்களுமே கற்றுக்கொடுக்கின்றன. இவை எல்லாவற்றையும் கண்காணிக்க நாமும் எவ்வளவோ முயன்றுகொண்டிருக்கிறோம்.

பல கண்காணிப்புகளையும் மீறி நாம் இரகசியமாய்க் கண்டுகொண்டு, தப்பும் தவறுமாய்ப் புரிந்துகொண்டு, அது குறித்து அதிகம் சிந்தித்து, இன்பம் பெற்று, இன்பம் வழங்கி, துன்புற்று, துன்புறுத்தி, அது குறித்து அதிகம் சிந்திக்காமல் இருக்க முயன்று, அதில் தோற்று, ஆனால் சிந்திக்கவும் சரியான மொழியில்லாததால் அதிலும் அரைகுறை வெற்றி மட்டுமே கண்டு, ஆனால் யாரேனும் அதற்குக் கவிதைமொழி கண்டுவிட்டால் ஆத்திரம் கொண்டு, ஆனால் யாருடைய அகமோ “புறப்”படும்போது, ஒளிபரப்பாகும் போது கிளுகிளுப்படைந்து இப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் நம் குழந்தைகளை “இது” சென்றடையாமல் கண்காணிப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

கல்வி என்பது வாழ்க்கையை முன்கூட்டியே மதிப்பிட உதவும் கலையெனில், இச்சை, விழைவு, புணர்வு போன்றவை அந்த வாழ்க்கையில் முக்கிய இடம் வகிப்பவையெனில், இன்றைய கல்வி - நிறுவனக் கல்வியும் சரி, நம் கண்களுக்குத் தெரியாத Antennaக்கள் மூலம் நம் சூழலிலிருந்து நாம் பெறும் கல்வியும் சரி - நம் வாழ்க்கையை மதிப்பிட எவ்விதத்திலும் உதவுவதில்லை. தன்னில் பயனற்ற இக்கல்வியில் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்றாகப் பாலியல் கல்வியை இணைப்பதால் மட்டும் இக்கல்வி பயனுள்ளதாகாது. அது எத்தகைய முற்போக்கான பாடத்திட்டமாக இருந்தாலும் சரி. பெண்ணுரிமை பற்றிய பாடத்திலிருந்து இறுதித் தேர்வில் கட்டாயமாகக் கேள்வி வந்தாலும், சரியான விடையை உமிழ முடிந்தாலும் தன்னுடைய சூழலில், வீட்டில், பள்ளியில் வகுப்பறையில் அதற்கு முரணான அனுபவங்கள் கிடைத்துக்கொண்டிருக்கும்வரை இந்தப் பாடமும் ஒப்பித்தலுக்குகந்ததாக மட்டுமே இருக்கும். அல்லது இன்னமும் வசதியாக ஏழில் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கும்போது இதனை நிம்மதியாக விட்டுவிடவும் செய்யலாம்.

பாலியல் கல்வி பெரும்பாலும் சுய கல்வியாகவே இருந்துவருகிறது. இந்தச் சுய கல்விக்கும் சிந்தனைக்கும் தேவையான சூழலும் தளமும் பெரும்பாலோருக்குத் தம்முடைய வாழ்க்கை அனுபவங்களாகவே இருந்துவருகின்றன. அனுபவம் என்பது மிகச் சிறந்த ஆசான் என்றபோதும் அது கொடுக்கும் கல்வி முழுமையானதல்ல. நாம் அனுபவித்திராதவற்றையும் அடையாளம் கண்டு, அங்கீகரித்து, நம் அனுபவத்திற்குப் புறத்தே நிற்பவற்றையும் நிற்பவர்களையும் அவர்களின் வாழ்வுகளையும் கற்பனை மூலம் அறிய, உணர யத்தனிப்பது சுய கல்வியில் பெரும் பங்குவகிக்கிறது. இதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது மட்டுமே இதைச் சாத்தியமாக்கும். இந்தச் சூழல் மொழியில் உறுதிப்பட வேண்டுமானால் அது வாழ்வில் உறுதிப்படுவதற்கான முயற்சிகளும் அவசியம். எப்படி வாழ்கிறோம் என்பது மையமாகிறது. சொல்லாடல்கள் வாழ்க்கைக்கு மாற்று அல்ல. சொல்லாடலையும் வாழ்க்கையையும் கொண்டு ஒரு பொய்யான ஈரிணையை நான் உருவாக்க முயலவில்லை.

சொல்லாடலுக்கு ஒரு வேட்கைப் பண்பு உண்டெனில் சொல்லாடலுக்குத் தொலைநோக்கு உண்டெனில் அது வாழ்க்கை இன்றெப்படி உள்ளதோ அதற்குக் கட்டுப்படாமல், செல்ல வேண்டிய திசைகளை, சென்றடைய வேண்டிய புள்ளிகளை, சென்றடையக்கூடிய சாத்தியங்களைக் காட்டி நிற்கிறது. உடல்களைப் பற்றிய, உடல்களுக்குள்ளும் இடையிலும் பாய்ந்து கொண்டிருக்கும் இச்சைகளைக் குறித்த சொல்லாடல் நமக்கு உறுதிப்பட வேண்டுமெனில் நாம் நமது உடல்களை அங்கீகரிக்க வேண்டும், நமதுடல்களுடன், அவற்றின் வடிவங்களுடன், அழகுகளுடன், கோணல்மானல் களுடன், அவற்றை ஆண்மை பெண்மைகளுடன், நமதுடல்களின் உடல் தன்மைகளுடன் அவற்றின் பிரக்ஞைகளுடன் வாழப் பழக வேண்டும்.

இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது கற்ற பலவற்றையும் மறப்பது. உடல் குறித்த, அது எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த உடல்கள் எதை எதைச் செய்ய வேண்டும், எப்படி அமர வேண்டும், எப்படி நிற்க வேண்டும், எந்த உடல்கள் எந்தெந்த உடல்களுடன் புணரலாம் என்பவை குறித்த நமது ‘கல்வியை’ மறக்க வேண்டும். இது ஒருவிதக் கனவு. “மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு.”

உள்ளடக்கம்