Google   www kalachuvadu.com

விவாதம்
இமையம் பணிந்த வரலாறு
கண்ணன்

‘அ. ராவின் எதிர்வினையில் நான் குறிப்பிட்ட சில செய்திகளை அவர் விளக்கிக்கொண்டிருக்கும் விதம் சரியல்ல. பின்நவீனத்துவத்தை மோஸ்தர் பார்வையுடன் காலச்சுவடு இன்று மட்டுமல்ல எப்போதுமே அணுகியதில்லை. அதைக் கண்டு காய்தல் உவத்தல் கொள்வதுமில்லை. ருஷ்யாவில் நிலப்பிரபுத்துவ நிலையிலிருந்து, மார்க்ஸ் அனுமானித்தது போல முதலாளித்துவ நிலைக்கு வராமலேயே, கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது போல நவீனத்துவத்தை அடையாமலேயே திமுக பின்நவீனத் துவத்திற்குள் சென்றுவிட்டதோ தெரியவில்லை. அரசியல் ‘துறவி’கள் மாளிகையில் வாழ்வதும், திராவிட அழகிகள் சிகப்பாக இருப்பதும் இப் பின்நவீனத்துவ நிலையின் அடையாளங்களாக இருக்குமோ? காலம்தான் இதைக் கணிக்க வேண்டும்.

காலச்சுவடு என்னைப் பதிப்பாளர்/ ஆசிரியராகக் கொண்டு 1994இல் மீண்டும் வெளிவந்தபோது அதில் இடம்பெற்ற முதல் படைப்பு இமையத்தின் கோவேறு கழுதைகள் பற்றிய சு.ராவின் விமர்சனம். மதுரையில் நண்பர் பஷீரின் உதவியுடன் வர்ஷா அலுவலகத்தில் அதை நானும் உடனிருந்து வடிவமைத்தமையால் அந்த முதலிடம் என்னுடைய முடிவாகவே இருக்க வேண்டும். இமையத்தை தலித்தியம் ஏற்றுக்கொள்ள மறுத்த காலகட்டம் அது. தலித் எழுச்சியின் மும்மூர்த்திகளாக அப்போது திகழ்ந்த அ. மார்க்ஸ், ராஜ் கௌதமன், ரவிக்குமார் ஆகியோரில் முதல் இருவர் கோவேறு கழுதைகள் நாவலைக் கண்டித்தனர். ரவிக்குமார் அப்போது மௌனமாக இருந்தார். பின்னர் 2001இல் அவரும் நானும் இலங்கைப் பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சந்திக்கையில் இது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குச் ‘சமகாலத்தில் தலித் அறிஞர்கள் இமையத்தைப் புறக் கணித்தது பிழை’ என்றும் ‘சு.ராவின் கணிப்பு சரி’ என்றும் கருத்துத் தெரிவித்தார். அவர் பார்வை அப்போதுதான் பதிவாயிற்று என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து காலச்சுவடு இமையத்திற்கு ஒரு அடித்தளமாக இருந்தமை இலக்கிய வரலாறு. இக்காலகட்டத்தில் இமையத்தை ஆதரித்தமைக்காகக் கடும் விமர்சனத்தை - சாதி, சதி, சூழ்ச்சி - எல்லாம் கேட்டு அனுபவித்திருக்கிறோம். அதன் எந்தச் சலனத்தையும் காலச்சுவடிலிருந்து இமையம் உணர்ந்திருக்கமாட்டார். இமையத்திற்கு மட்டுமல்ல எழுத்தாளர்கள் கருத்து, படைப்புச் சுதந்திரம் சார்ந்த எங்கள் அணுகுமுறை எப்போதுமே உறுதியானது. காலச்சுவடைப் பழிக்க இமையத்திற்குத் திமுகவின் புதிய அதிகார மையங்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர் அதற்கு உடன் பணிந்தார் என்பதும் வரலாறு.

ஆனால் எல்லா நெருக்கடிகளின்போதும் இமையம் திமுக தொண்டராகத் திமுகவுடன் நின்றிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வரும்வரை அரசியலுக்கு ‘அப்பால்’ நின்றுவிட்டு, அதிகாரத்தை அறுவடை செய்யவும் கப்பத்தில் பங்கு கேட்கவும் அரசியலுக்கு வந்தவரல்ல இமையம். திமுகவைக் குடும்பமாக நினைப்பவர். தன் குடும்பமே திமுக என நினைக்கும் தலைவரின் செயல்பாடுகள் பற்றி எந்த விமர்சனமும் இல்லாமல் அவரைப் பக்தியுடன் பின்பற்றும் தொண்டர். பரிசு வாங்கும் மேடையில் அவர் கூறிய வார்த்தைகளும் சரி, காலில் விழுந்ததும் சரி, அவரளவில் ஆத்மார்த்தமான செயல்களே. எனவே அதை நான் விமர்சிக்கவே இல்லை. இமையம் விரும்பிய உன்னத அங்கீகாரத்தை அவர் அடைந்த பிறகு ஊடக அங்கீகாரம் அவ்வளவு முக்கியமானதே அல்ல என்பதுதான் என் பதிவு.

யாரும் தம் மத குருக்களைக் காலில் விழுந்து வணங்குவது பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. இந்தியாவில் இது இந்துக்களுக்கு மட்டும் உரிய பழக்கமும் அல்ல. செய்வதை வெளிப்படையாகச் செய்தால் மகிழ்ச்சி. பொது வாழ்க்கையில் பகுத்தறிவு பேசிச் சுரண்டிக்கொண்டே தனி வாழ்க்கையில் ஆன்மிகத்தைச் சுரண்டுவது முரண்பாடு. இமையம் இலக்கிய அங்கீகாரத்திற்குத் தகுதியானவர் தான். கருணாநிதியின் காலில் விழுந்ததால் அந்தத் தகுதியை அவர் இழக்கவில்லை. என் விமர்சனம் அந்தப் பரிசு தகுதியானது அல்ல என்பதுதான். மடங்கள் வழங்கும் விருதுகளைக் காலச்சுவடு அங்கீகரித்துவிட்டுத் தமிழக அரசுப் பரிசைக் குறிப்பாக மறுத்தால்தான் அது முரண்பாடு.

பெரியாரைப் பின்பற்றும் ஒரு கட்சித் தொண்டர்களின் செயல்களையும் இந்துக்களின் மத/ஆன்மிகச் செயல்பாடுகளையும் ஒரே நிலையில் வைத்து அ.ரா., ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடே திமுக மீதான கடுமையான விமர்சனம் ஆகும். சமத்துவப் பெரியாரைத் தெய்வம், திருப்பதி என்றெல்லாம் சொன்னால் அவர் அக மகிழ்வார். கடவுளர்களுடன் அவருக்கு இருக்கும் பிரச்சினை தனக்குப் போட்டியாக அவர்கள் தமிழர்கள் மனத்தில் இடம்பெற்றிருக்கும் நிலைதான். யாரும் பெரியார் காலிலும் அண்ணா காலிலும் விழும் புகைப்படங்களை நான் பார்த்ததில்லை. அவர்கள் முன்னிலையில் அவர்களைத் தெய்வம் என யாரும் புகழவும் முடியாது. பெரியாரையும் அண்ணாவையும் மஞ்சள் துண்டு மர்மங்கள் சூழவும் இல்லை.

உள்ளடக்கம்