|
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததன் மூலம் ஆட்சியாளர்கள் விரும்பினால்
ஒரு பண்பாட்டு மரபை எவ்விதத் தர்க்கபூர்வமான காரணங்களுமின்றி மாற்றிக்காட்டிவிட
முடியுமென்பதற்கு உதாரணமான தலைவராக விளங்குகிறார் முதல்வர் கருணநிதி. அவர் நன்கு
தமிழறிந்தவர். அவரது ஆலோசகர்களுக்குத் தமிழோ தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களோ
தெரியுமா என்னும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது முதல்வரின் இந்த முடிவு. குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்துவகையாகப் பிரிக்கப்பட்ட தமிழ் வாழ்வின்
ஆதாரமான பண்பாட்டு அடையாளங்களோடு எள்முனையளவு தொடர்பும் தமிழ்ப் புத்தாண்டான
சித்திரை ஒன்றுக்கு இல்லை. கிரிகோரி காலண்டரின் சரிபாதியையோ பஞ்சாங்கம் எனப்படும்
காரிய கருமாதி ஏட்டையோ மேலோட்டமாகப் புரிந்தவர்களுக்குக்கூட இந்த உண்மை புரியும்.
மேல்நோக்கு, கீழ்நோக்கு, சம நோக்கு, மழை பற்றிய குறிப்பு, விதைப்பு, அறுப்பு,
கோவில் திருவிழாக்கள், ஆற்றுப் பெருக்கு எல்லாமே விவசாயத்தோடு தொடர்புடையவை.
தை ஒன்றைத் தமிழர் திருநாள் என்பதற்கும் சித்திரை ஒன்றை ஆண்டின் முதலாகக்
கொள்வதற்கும் அனேக வானியல், நிலவியல், வாழ்வியல் காரணங்கள் உண்டு. ஆனால் அரசு
தையைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்கு அத்தகைய வரலாறு சார்ந்த காரணங்கள் ஏதேனும்
உள்ளனவா?
நமது வானியல் குறிப்புகளைத் தட்டையாகச் சோதிடம், ஏமாற்று வித்தைகள் என்று கூறிய
திராவிட மரபு அவர்களிடமிருந்து அதை மீட்க முயலவில்லை. தமிழ்ப் பெருந்தகைகள் பலருக்கோ
அது இன்னதென்றே தெரியாது. விளைச்சல் அறுவடையான மாத்திரத்திலேயே விற்றுவிட்டு இனாம்
தாரியாய்க் கையேந்தும் விவசாயிக்கும் தமிழ் ஆண்டுக் கணக்குத் தனக்கானது என்பது
தெரியவே தெரியாது. வானியல் தொடர்பின் புரிதலற்ற குறைந்தபட்சம் வெள்ளி தெற்கில்
பாடானது என்பதுகூட மறந்துபோன நிலையில் நிலம் பாழ் பரப்பாகிவிட்டது.
பெரும் பொழுதாக முன்பனியும் ஓரையாகச் சுறவமும் (மகரம்) நாள்மீனாக திருவோண
அவிட்டமும் கொண்டது தை மாதம். பெரும் பொழுதாகவோ ஓரையாகவோ நாள்மீனாகவோ மாதமாகவோ
இது முதலாவதாக இல்லை. கடைசிக்கு முன் முன்னதாக மட்டுமே உள்ளது. வாடைக்காற்று என்று
சொல்லும் வடகிழக்கு பருவக்காற்று தளர்ந்து முன்பனி (பனி முடங்கலாக) குளிர்
நடுக்கும் காலம். குறிப்பாகத் தமிழரின் பொக்கிஷமான நெல் அறுவடைக்குப் பின்பு
கானப்பயிர் என்னும் வித்துக்கள் முதிர (பனியிலேயே விளைந்துவிடும்) காத்திருக்கும்
காலம். தை ஏழுவாக்கில் ஞாயிறு மண்டிலத்தின் வடசெலவு (அ) வடகோளரை (அ) தேவபாகம் (அ)
உத்ராயணம் தொடங்குகிறது. வானியல் ரீதியாகத் தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றல்ல இது.
வடசெலவைத்தான் புத்தாண்டு காலமாக ஏற்கிறோமா? அறுவடை முழு மையடையாமல் பனியின்
முடக்குதலில் சிக்கியவாறு சூரியனின் வடசெலவுத் தொடக்கத்தை ஆண்டு முதலாக வைத்து
யோசிப்பதோ செயல்படுவதோ வேடிக்கையான சூழல்.
முதலாவதாக ஆண்டு, மாதம், வாரம், நாள், நாழிகை, வினாடி, வெள்ளுவா (பௌர்ணமி), காரூவா
(அமாவாசை), ஒளிப்பக்கம் (சுக்ல பட்சம்), இருட்பக்கம் (கிருஷ்ண பட்சம்), கோளரைகள் (அயனம்)
காற்றடிக் காலம் போன்ற பகுப்பெல்லாம் நெடுங்காலத்திற்கு முந்தைய தமிழனின் கடல்
வாணிபத்திற்கும் விவசாயத்திற்கும் இவையிரண்டோடு சார்புடைய மருத்துவம், இசை, அளவீடு
சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த வானியல் காலக் கணக்கு சோதிடனுக்கானதல்ல. சோதிடத் தேவை என்பது 230 நாளோடு
முடிந்துவிடுகிறது. சோதிடத்தின் தேவை இரண்டு மட்டில்தான். ஒன்று சிசுவின் பிறந்த
நேரத்தில் சூரியன் முதலான கோள்களின் இருப்பால் அவனுடைய உடல் சந்திக்கப்போகும்
நோய்கள் பற்றியவை. இரண்டு அவனுக்கு இணையான பெண்ணுடலைக் கண்டறிவது (பொருத்தம்
பார்ப்பது). மீதிக் கதைகளெல்லாம் அவரவர் விருப்பு சார்ந்தவை. இந்த வானியல் கணிப்பில்
அரசனுக்குத் தேவையாக இருப்பது இரண்டு: ஒன்று போர் தொடர்பானது, இரண்டாவது அரசுக்
கருவூலத்திற்குக் கிடைக்கும் வருவாய் சார்பானது.
இந்தக் காலம், இடம், தேவை நெய்தல் நிலக் கடல் வணிகர்களுக்கும் மருதநில நெல்
உற்பத்தியாளர்களுக்கும் உள் நில முல்லை நிலத்துக்காரர்களுக்கும் மட்டுமேயானது. நெல்
உற்பத்தி செய்யும் நிலமே நீர், மண், வெப்பம் சரிவிகிதம், சீதோஷணத்தில் மனிதன் வாழ
ஏதுவான இடம் என்பது தமிழர் கணிப்பு. சற்றேறக் குறைய ஏழுமாத அளவிற்கு நீளும் நெல்
பயிரிடும் தொழில்நுட்பம் ஒவ்வொரு ஆண்டின் முக்கியமான நிகழ்வு. இந் நிகழ்வு
வெற்றியடைந்ததன் உவகையும் அறிவிப்பும் கொண்டாட்டமுமே தைப் பொங்கல். பொங்கலுக்கு
முன்பு போகியன்று பழையதைக் கழித்துக் கட்டுவது புத்தாண்டின் குறியீடாக அல்ல, புதிய
விளைச்சலைச் சேமித்துப் பாதுகாக்கக் குதிர் முதலானவற்றில் மீந்திருக்கும் பழைய
தானியங்களைக் காலிசெய்து சுத்தமாக்குவது. இது வீடு சார்ந்த செயல். இன்றும்
கிராமத்தில் வீடென்பது நபர்கள் புழங்கும் இடம் குறைவாகவும் விளைபொருட்களைப்
பாதுகாக்கும் இடம் அதிகமாகவும் இருப்பதே இதற்குச் சாட்சி. பங்குனியில் அழித்து,
சித்திரைப் புதுமழையில் பொன்னேர் பூட்டும் மரபு ஒரு புதிய தொடக்கத்திற்கான
குறியீடு. ஆறேழு மாதம் கழித்துக் கீழைக் காற்றில் கடல் வணிகத்திற்குச் செல்லும்
கடலாடிகள் தை, மாசியில் ஊர் திரும்பிவிடுவர்.
சித்திரை மாதமெனும் இளவேனில் பருவத்தில் மேழ (தகர்) ஓரை நாள், மீனாக அஸ்வினி பரணி
கார்த்திகை கொண்டது. சூரியனின் தாக்கம் வலு வடைந்து வேனல் நோய் தாக்கும் காலம்.
இளவேனிலும் முதுவேனிலும் கடலாட லாயக்கற்ற காலம். மருத நிலக்குடியானவனும் நெய்தல்
நிலக் கடலாடிகளும் ஒன்றுகூடிக் கேளிக்கைகளில் திளைத்திருப்பர். அந்நாள் சித்ரா
பௌர்ணமி (அறுவை வெள்ளுவா) சித்திரையின் தலத்தெய்வம் இந்திரனும் தச்சனும். இந்திரன்
என்பது சூரியனைக் குறிப்பிடும் இந்திரவிழா என்னும் சித்திரைத் திருவிழா பற்றிச்
சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களில் குறிப்புகள் தெரிவிக்கும். மாமல்லை,
திருச்செந்தூர், பாடலிபுத்திரம் (கடலூர்) உப்பிலியப்பன், காரைக்கால் சனி (காரி)
சிதம்பரம் நடராசன், கன்னியா குமரி இவையெல்லாம் கடலோரத் திருவிழாத் தலங்களே.
சித்திரையில் அழகர் வைகையில் இறங்குவது, கூவாகத்தில் அரவானிகள் விழா எடுப்பது எனச்
சித்திரை மாதத்தில் எடுக்கப்படும் விழாக்களின் பட்டியல் நீளும்.
ஞாயிறின் சுழற்சி மேஷத்தில் நிற்பதையே ஆண்டு முதலாகக் கொள்வது தமிழர் கணக்கு. மேஷம்
என்றால் ஆட்டின் மீது நிற்பதல்ல. காரணப் பெயர். மேஷம் என்ற ராசிமண்டலம் ஆட்டுக்
கொம்பு வடிவ தோற்றமுடையதாலேயே இப்பெயர். ஆடு வருடை என்னும் சொல்லிலிருந்து ஆண்டு
வருடம் பயன்படுத்தி வருதல் கூடும். வருஷம் என்பது வடமொழிச் சொல்லாகக் கொண்டாலும்
மழையை மழைக் காலத்தையே குறிக்கும். இவ்வகையிலும் தையைக் குறிப்பிடாது.
தொல்காப்பியர்கூட மழைக்காலத்தை மடங்கல் ஆவணியையே முதலாவதாக வைக்கிறார்.
நெற்பயிரிடுவதையே மடங்கல், சம்பா, குறுவை என்கிறோம். இவ்வகையிலும் தை முதலாகாது.
வட இந்தியாவில் வைகாசி விசாகமே ஆண்டுப் பிறப்பாக இருக்கிறது. (இதுவும் காற்றடிக்
காலத்தை அடிப்படையாகக் கொண்டதே. விக்ரமாதித்தன் தொடங்கிய ஆண்டுக் கணக்கைப்
பின்பற்றும் தெலுங்கர்களின் வருடப் பிறப்பு ‘யுகாதி’ பங்குனியில் வருகிறது. பரசுராம
ஆண்டைப் பராமரிக்கும் மலையாளிகள் சித்திரை விசுவையே வருடப் பிறப்பாகக் கருதுகின்றனர்.
கன்னடியர்களுடையதும் யுகாதியே (பங்குனி). குமரிக் கடல் கீழாக இலங்கையிலிருந்து மேலே
உஜ்ஜயினி வரை ஈக்வேட்டரை வெட்டும் புள்ளியில் சூரியனின் இருப்பும் செல்கையும்
சித்திரையில் கணக்கிடப்படுகிறது. சில காலக்கணிதக் கோவில்களில் சித்திரை 7-10 தேதி
வாக்கில் சங்கை வெளியில் வைத்துக் காலத்தைத் துல்லியமாக அளந்து சங்கை உடைக்கும்
வழக்கம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. தமிழர்கள் பின்பற்றும் 60 ஆண்டுக் கணக்கு
வியாழ வட்டம் இந்தியாவில் வேறெங்கும் நடைமுறையில் இல்லாதது. இது பாலி
மொழியிலிருந்து பௌத்த சமண ஆதிக்கத்துக்குப்பின் விவசாய நடைமுறைக்காகவே தமிழகம்
வந்தது. ஒரு விவசாயி பயிர் தொழில்நுட்பத்தைத் தன் சந்ததிக்குக் கடத்தும் காலத்தைக்
கணக்கிட்டே 60 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். அதேபோலச்
சித்திரையில் நிகழும் வியாழப் பெயர்ச்சி பருவநிலை மாற்றத்தைக் குறிப்பது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இனக் குழுவினர் எல்லோரும் அவர்கள் எந்தவொரு சமயத்தைச்
சார்ந்தவராயினும் பருவம், காலம், பொழுது, ஆண்டு ஆகிய அனைத்தையும் உழைக்கும்
மக்களின் இயங்கியல் தேவை சார்ந்தே கணக்கிட்டு வந்திருக்கின்றனர். சில திருவிழாக்கள்
வேண்டுமானால் அரசால் கட்டாயப் படுத்தப்படலாம். சில பகுதிகளில் மட்டும்
கொண்டாடப்பட்டுவந்த ‘பங்குனி உத்திரம்’ சோழர்களால் அவர்களுடைய
அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு இப்படித் திணிக்கப்பட்டது. கொடை, மான்யம்,
தானம், வரிச்சலுகைகளின் மூலமாக இந்தத் திணிப்பு ஏற்கச் செய்யப்பட்டது. தர்மகர்த்தா,
கோவில் கட்டளைக்காரர், தலைக்கட்டு என்பதெல்லாம் இதன் பின்புலத்தில் உருவானவைதாம்.
இதன் மூலம் சாதியம் மிக வலுவாக நிலை நிறுத்தப்பட்டது.
திருக்குறள் உயர்ந்த இலக்கியம் என்பதற்காகக் கால அடிப்படைகளைச் சிதைத்து தை
முதல்நாளை வருடப் பிறப்பாக அறிவிப்பது பொருளுடைய நடவடிக்கையாக இருக்க முடியாது.
வெகு மக்களின் பண்பாட்டு விழுமியத்தைச் சிதைப்பது வருங்காலத்தில் உருவாகும்
குழப்பங்களுக்கு அடிப்படை என்பதைக் கருணாநிதி உணர்ந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை.
தமிழாய்ந்த தலைவராக அறியப்பட்டிருக்கும் முதல்வர் இது போன்ற நம் பண்பாட்டு
அடையாளங்களைச் சிதைக்கும் ஒரு காரியத்தை உரிய நியாயங்களேதுமின்றி அவசர அவசரமாகத்
தமிழ்ச் சமூகத்தின்மீது திணித்திருப்பது தமிழினத்தின் ஊழ்வினையே.
|