Google   www kalachuvadu.com

கடிதங்கள்

ஏப்ரல் 2010, காலச்சுவடு இதழில் வெளியான தேவிபாரதியின் ‘ஒழுக்கம் என்னும் தந்திரம்’ கட்டுரை நன்று. ஒழுக்கம், வாழ்க்கை நெறி எனும் வெற்றுக் கோஷங்களை வைத்துக்கொண்டு போலியான பிம்பங்களை வடிவமைத்து, தாங்கள் தான் இந்த அகிலத்தின் உத்தம புருஷர்கள் எனப் பறைசாற்றிக் கொள்பவர்களின் - நிறுவனங்களின் முகமூடிகளை, பொய்த் திரைகளைக் கிழித்தெறிகின்றது. பல அமைப்புகள் நெடு நாட்களாகவே குறுகியவாதக் கண்ணோட்டத்துடனே இயங்கி வருகின்றதால், சிந்தனையாளர்கள் பலர் வெளியேறிவிடுகின்றனர். தேர்தலை மையப்படுத்தி, நமது அரசியல் கட்சிகள் நடத்தும் பேரங்களில் இடதுசாரிகள் பலியாகிவிடுகின்றனர். இதில் பாட்டாளி வர்க்கத்தை பொலிடிக்கலைஸ் செய்வது என்பது வெறும் மாயாவாதம்தான். நமது ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம் வருத்தமளிப்பதாக உள்ளது. சாமியார்கள் விவகாரம், அரசியல் என்றாலும் ஒரேவிதமான பார்வையைத்தான் அவை கையாளுகின்றன.

கு. இரவிச்சந்திரன்
ஈரோடு

கண்ணனின் கட்டுரையான ‘அன்றாட மனித உரிமை: அதிகாரத்தின் சூதாட்டம்’ படித்தேன். நம்மில் பெரும்பாலோரைச் சட்டத்தின் வன்முறைகள் நேரடியாகத் தீண்டாமல் அதிர்ஷ்டவசமாகத்தான் தப்பித்துவருகிறோம். துரதிர்ஷ்டவசமாகச் சட்டத்தின் நீண்ட கரங்களால் தீண்டப்பட்டால், பிறகு இந்த வாழ்க்கையே வெறுத்துவிடும். புதுப்புதுச் சட்டங்கள் வந்துகொண்டிருப்பதால் அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளாதவர்கள்தான், அறிந்திருப்பவர்களைவிட அதிகமாக இருப்பார்கள். சட்டப்படிப்பை முடித்துவிட்டு வக்கீல்களாக மாறியவர்கள்கூட எல்லாச் சட்டங்களையும் தெரிந்துகொண்டவர்களாகயிருப்பார்களா என ஐயுறுகிறேன். விதிக்கப்படும் எல்லாச் சட்டங்களும் எல்லோரும் அறிந்திருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பே ஒரு மனித உரிமை மீறல்தான்.

கீழாம்பூர் கே.எஸ். ராமையா
மதுரை

‘ஒழுக்கம் என்னும் தந்திரம்’ என்னும் கட்டுரை குறித்து.

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் உ.ர. வரதராஜனின் மறைவு குறித்த கருத்துகள், கட்சியின் நடவடிக்கை குறித்த விமர்சனங்களில் உள்ள மதிப்பீடு உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை.

ஒரு செயல், அதன் விளைவு என்னும் பார்வையைத் தாண்டி, ஒரு கட்சித் தலைவரின் அந்தரங்கத்தை அசிங்கமாகத் தோண்டும் முயற்சியே புலப்படுகிறது. தனிநபர் அந்தரங்கத்தை ஆழமாக ஆராயும் நற்பணியில் காலச்சுவடும் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்று, கட்சி அளித்த தண்டனை குறித்து இக்கட்டுரை அளவில்லாக் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய தண்டனையா? விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லையே? போன்ற ஆதங்கங்கள் மேலோட்டமாக நியாயமானவை போன்று தோன்றும்.

அக்கட்சி இவ்விதத் தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் அறிவுரை, அறிவுறுத்தல், எச்சரிக்கையோடு நின்றிருந்தால், பெரும் பிழை பொறுத்ததற்குக் குற்றவாளிக் கூண்டில் யார் நிற்பது? தனிமனித ஒழுக்க நிலை பிறழ்ந்தால் தவறுக்கு உறுதுணையாய் நிற்கும் அவப் பெயரை யார் துடைப்பது? இது போன்ற கவலைகளெல்லாம் தனிமனிதருக்கு இல்லை. ஆனால் சிபிஎம் போன்ற கட்சிக்குக் கூடுதலாய் உண்டு என்பதுதான் உண்மை நிலை.

தலைவர்களைப் பார்க்காமல் தவறுகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வது மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை. பிற கட்சிகள் இது குறித்துப் பெரிய அளவில் சிந்தனையைச் செலவிடுவதில்லை. அங்கே தனிமனித ஒழுங்கீனங்கள் பெரிய பதவிகளுக்குத் தடைகற்கள் அல்ல. நீதியரசரின் முறைகேடுகள்கூடப் பதவி உயர்வுகளில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதுதான் சமீபத்திய நிலை.

இக்கட்டுரையில் வரதராஜன் குறித்த விமர்சனத்துடன், நித்யானந்தாவின் கதையையும் இணைத்து எழுதியிருந்தது, தங்கள் இதழின் இழிநிலையைக் காட்டுகிறது. இறை நம்பிக்கையை மூலதனமாக்கி கோடிகளைச் சம்பாதித்த ‘பணி விடை சாமியாரையும்’ சேவையே குறிக்கோளாய் வாழ்ந்து தன் சறுக்கலைத் தானே உணர்ந்து வருந்தி உயிர்நீத்த தலைவரையும் ஒரே தட்டில் எடைபோடுவதுதான் பத்திரிகைகளின் பண்பாடா?

நித்யானந்தா தற்கொலைக்கு முயலவில்லை, திருக்குறளை மேற்கோள்காட்டவில்லை என்னும் கட்டுரை வரிகள் உவமைக்கு இலக்கணமல்ல; வக்கிரத்தின் வெளிப்பாடு. மாறுபட்ட கருத்துகளை முன்வைப்பது என்னும் பெயரில் உண்மைக்கும் நியாயத்திற்கும் மாறுபட்ட கருத்துகளை விற்பது சமூகத்திற்கு ஆற்றும் தொண்டு அல்ல, பீடித்த பிணி என்பதைக் ‘காலச்சுவடு’ உணர்ந்தால் நன்று!

வெ. மோகன்
மதுரை

‘அன்றாட மனித உரிமை: அதிகாரத்தின் சூதாட்டம்’ என்னும் தலைப்பில் கண்ணன் எழுதிய கட்டுரை வாசித்தேன். அதில் அரசு ஊழியர்கள் பொதுமக்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் கூடுதலாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சக அரசு ஊழியரையும் அவர்கள் அவ்வாறே நடத்துகின்றனர் என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

பாலகிருஷ்ணன்
கோவை.
suba.bala09@gmail.com

ஒழுக்கம் என்னும் கருத்துருவாக்கத்தைப் பேணுவதாகக் கருதித் தங்களை ஞானத் தந்தையர்களாகப் பாவித்துக்கொண்ட ஊடகங்களும் அமைப்புகளும் மேற்கொண்ட நிலைப்பாடுகள் சமூகச் சீரழிவின் மோசமான வெளிப்பாடாகும்.

நித்யானந்தா விவகாரத்தில் நடிகை ஒருவரின் பெயரை முதல் நாள் பூடகமாகக் கூறி மறுநாள் முழுமையாகத் தெரிவித்த தொலைக் காட்சியின் நோக்கமென்ன?

தன் கருத்துக்கணிப்பின் எதிரொலியாக மூன்று அப்பாவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டபோது எழுந்த ஆவேசம் அடங்கிச் சாம்பலாகிக் காற்றில் கரைந்துபோன ‘நிஜம்’ என்னவென்று துப்புத் துலக்கிக் காட்ட முடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன் சிவகாசியைச் சேர்ந்த பெண் ஒருவரின் பாலியல் விவகாரம் குறித்துப் போட்டிபோட்டுக்கொண்டு ஊடகங்கள் தங்கள் வணிகத்தைப் பெருக்க முனைந்தன. ஆனால் தொடர்புடைய காவல் துறையினர் எவருடைய படத்தையும் காட்டவில்லை. பெண்ணென்றால் மட்டும் அப்படி யோர் இளக்காரம்! அதிலும் பொருளாதாரத்திலும் சமூக நிலையிலும் பின்தங்கியவர்கள் என்றால் ஊடகங்களுக்குக் கொண்டாட்டந்தான்.

இன்றைய திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் பெண்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் ஆன்மிகம் என்னும் திசையைக் காட்டிப் பழைமைவாதச் சேற்றுக்குள் அமிழ்த்தும் வேலையையே செய்துவருகின்றன. நாடாளு மன்றத்தில் பாதிக்கு மேல் பெண்கள் இடம்பெற்றாலும் அவர்களின் பின்னாலிருந்து எளிதாக இயக்க முடியுமென நம்பும் ஆண்கள் ஏராளம்.

பெண்ணியவாதிகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோர் பெரியாரைக் கற்காமல் ஒரு துரும்பையும் அசைத்துவிட முடியாது. அதைப் போன்றே ஆண்-பெண் உறவு குறித்தும் தெளிவான பார்வை இல்லாமல் மரபுவழிச் சிந்தனையால் தவறான முடிவை மேற்கொள்ளும் போக்கும் நீடிக்கிறது.

அலுவலகத்தில் பணிபுரிந்த ஆண், பெண் ஆகிய இருவரின் கூடா நட்பு பற்றிய பிரச்சினை எழுந்தபோது சே குவேரா அதை எவ்வளவு இலகுவாகக் கையாண்டார் என்னும் செய்தி அமைப்புகளுக்குள்ளே இருப்போரின் ஒழுக்கம் குறித்த பார்வைக்குத் தக்க எடுத்துக்காட்டு. தா. பாண்டியன் சே குவேராவைப் பற்றி எழுதியுள்ள நூலைப் படிப்பது மார்க்சிய நம்பிக்கையுடைய அனைவரின் கடமை. அடிப்படைக் கொள்கைகளைத் தத்தம் தொண்டர்களுக்கு முறையான வகுப்புகள் நடத்துவதன் மூலம் தலைவர்களும் தம் கடமையை உணர முடிகிறது.

தேர்தலில் நிற்காமலேயே மிகப் பெரிய சமூக மாற்றத்திற்கு வித்திட்ட பெரியாரிடமிருந்து சட்டமன்ற, நாடாளுமன்றத்துச் சில இடங்களுக்காக முரண்பாடுள்ள கட்சிகளுடன் கூடக் கூட்டணி வைக்கும் போக்கை மாற்றிக்கொள்ளக் கற்க வேண்டும்.

‘பெரியார் சொன்னார்; காமராஜர் செய்தார்’ என்னும் வாசகம் அவர்கள் இருவருக்குமே அளவில்லாப் பெருமை சேர்ப்பதாகும்.

தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு

‘காலச்சுவடு’ மாசி இதழில் வெளியான, சூரியதீபனின் ‘அதிகாரத்தை நோக்கிய வாளும் மயிலிறகுகளும்’ கட்டுரையில் “1970களின் பிற்பகுதியில் பேராசிரியர் கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றோர் முதன்மைப்படுத்திய முற்போக்குத் தடங்களைப் பதிவுசெய்த அலை...” என்று ‘அலை’ இதழ்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பீடு, ‘அலை’ தோன்றிய நோக்கங்களுக்கு முற்றிலும் மாறான பிம்பத்தினை ஏற்படுத்துவதால், ‘அலை’யின் இதழாசிரியர்களில் ஒருவன் என்ற வகையில் சில தெளிவுகளை ஏற்படுத்துதல் அவசியம்.

பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றோர் விமர்சன முறையில் முதன்மைப்படுத்திய, கட்சிசார்ந்த Left Hand Complimentக்கு எதிரான தடங்களைப் பதிவுசெய்ததே ‘அலை’யாகும். கட்சிசார்ந்த மதிப்பீடுகளுக்கு எதிரான அலை முன்வைத்த கருத்துகளின் விளைவாக பெங்களூரில் இருந்து வெளிவந்த ‘படிகள்’ என்னும் காலாண்டிதழ் இல:6-7 ஜூன் 1980இல் ‘அலை’யில் மிதக்கும் கைலாசபதி என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது இங்கே குறிப்பிடக்கூடியது. கலை, இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகளில், பிரகடனங்களுக்கு அப்பால் கலைத்துவக் கூறுகளை முதன்மைப்படுத்த முனைந்த நான்கு இளைஞர்களின் கன்னிக்கூவல் அது.

‘அலை’யின் முதலாவது இதழில், ஆசிரியர் குழுவின் கருத்தாக வெளிவந்த, ‘இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு’, ‘சாகித்திய விழாவும் தமிழும்’ ஆகிய குறிப்புகளே ‘அலை’ பதிக்க முயன்ற தடங்களைச் சுட்டப் போதுமானவை.

ஈழத்தில் தரமான படைப்புகள் வெளிவந்திருந்தும் தரம் குறைந்த படைப்புகளுக்குப் பரிசு கொடுக்கப்படுவதைக் குறிப்பிட்டு, தமிழகத்தின் ஆற்றல்மிகு படைப்பாளிகளாகத் தி. ஜானகிராமன், மௌனி, ஆர். சண்முகசுந்தரம், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோர் இனங்காணப்பட்டதில் ‘அலை’ ஏற்படுத்த முனைந்த தடங்கள் தெளிவாகியுள்ளது. (Galle) காலியில் நடைபெற்ற சாகித்திய விழாவில் இடம்பெற்ற கருத்தரங்குகள், புத்தகக் கண்காட்சி, பரிசு பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் ஆகியவற்றில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதையும் சாகித்திய மண்டலத் தமிழ்க் குழுவின் பொறுப்பின்மையையும் சுட்டிக்காட்டியுள்ளது. இது ‘அலை’ அழுத்த முனைந்த சுயத்தின் வெளிப்பாடுமாகும்.

‘அலை’, காலத்தின் தவிர்க்க முடியாத வெளிப்பாடு. 70களில், அதுவரை நிலவிவந்த அரசியல் அதிருப்தி, இளைஞர் எழுச்சியாக வெளிவந்ததுபோல், இலக்கியப் போக்கின் அதிருப்தி ‘அலை’யாக வெளிவந்தது எனக் கொள்ளுதல் தவறான முடிவாகாது.

மு. புஷ்பராஜன்
mpushparajan@yahoo.co.uk

‘சென்று தேய்ந்து இறுதல்’ தலையங்கத்தில் நிதியாண்டு முடிவுக்குள் நிதி ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்திட முனையும் திடீர் விழிப்புணர்வு காரணமாக, சீரமைப்பு என்னும் பெயரில் குண்டும் குழியுமாகச் சிதிலமடைந்து காட்சியளிக்கும் சாலைகளின் நிலை, அறிவுத்துறைச் செயல்பாடுகளுக்கும் பரவிவருகிறது என்னும் அவலம் வேதனையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தாற்போல் மேற்கொள்வது போன்ற போக்கு, பணியின் தரம் தாழ்ந்திடவும் பணவிரயம் உயர்ந்திடவும் ஊற்றாக அமையுமென்பதே உண்மை. அறக்கட்டளைகளின் நிதிப் பயன்பாடுகள் பற்றிய பொறுப்பான தார்மீகக் கடமையை உணர்த்தும் தலையங்கப் பாங்கு, செயல் உணர்வைத் தூண்டுகிறது. காலச்சுவடு இதழின் தலையங்கங்கள், பரவலாக உறுத்துகின்ற நினைவுகளை மனம் திறந்து பரிமாற்றம் செய்து, மன அழுத்தம் குறைவதற்கும் குறைபாடுகள் களையப்படுவதற்கும் தகுந்த எச்சரிக்கையுடன் கூடிய, ஆக்கபூர்வமான கருத்துகளைத் தயக்கமின்றி வெளியிடுகின்றன.

கண்ணனின் ‘அன்றாட மனித உரிமை: அதிகாரத்தின் சூதாட்டம்’ கட்டுரை, மனிதருக்கான அடிப்படை வசதிகளை எண்ணிப் பார்த்திட அவகாசமற்ற நிர்வாகம், வெறும் புள்ளிவிவரங்களுக்காகவும் எழுத்தளவிலான சாதனைப் பட்டியல்களுக்காகவும் அனைத்து சக்திகளையும் விரயம் செய்து, அப்பாவி மக்களை வேதனைக்குள்ளாக்கும் அன்றாட அவலங்களை விரிவாகப் பட்டியலிடுகிறது. மனித வாழ்வின் மீதான கரிசனையை வெளிப்படுத்தும் கட்டுரையில், கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சுயமரியாதை வாழ்வினரையும் மனித உரிமைக் கோட்பாடுகள் பற்றிய விழிப்புணர்வையும் முதன்மைப்படுத்திடத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

நா. முத்தையா,
மதுரை

உள்ளடக்கம்