Google   www kalachuvadu.com

பத்தி
இங்கிலாந்து: மறுபார்வை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

பிரித்தானியத் தேர்தல்: திக்குத் தெரியாத வாக்காளர்கள்

இந்தப் பத்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கலாம். தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் படி போட்டிபோடும் மூன்று முக்கியக் கட்சிகளில் - தொழிலாளர், பழமைவாதம், தாராள - ஜன நாயகம் - ஒன்றாவது பெரும்பான்மையான பலத்துடன் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்பாலும் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற கருத்தே நிலவுகிறது. இவை தேர்தல் அறிவித்த தொடக்க நாட்களில் எழுந்த கணிப்புகள். எதிர்வரும் மூன்று வாரங்களில் இந்த நிலைமை மாறலாம்.

இந்தத் தேர்தல் இரண்டுவிதங்களில் வித்தியாசப்படுகிறது. ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பாணியில் இங்குப் போட்டிபோடும் மூன்று பிரதானக் கட்சித் தலைவர்களின் தொலைக்காட்சி விவாதம். கவர்ச்சியும் சொல்வன்மையும் இல்லாத மூன்று தலைவர்களின் 90 நிமிட விவாதத்தை எப்படித் தாக்குப் பிடிக்கப்போகிறோம் என்னும் கவலை இருந்தது. அரசியல் பற்றி மக்கள் களைப்படைந்த நேரத்தில் கோர்டன் பிரவுன், டேவிட் கமரன், நிக் கிளெக் ஆகியோரின் விவாதம் வாக்காளரிடத்தில் ஒரு சின்ன விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் மறுபடியும் கவர்ச்சிகர மான அம்சமாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட 9 மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்ச்சியில் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி வாக்காளர்கள் புதிதாக எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வெற்றியும் தோல்வியும் அரசியல்வாதிகளின் கருத்துநிலைகளைப் பார்க்கிலும் வாக்காளர்களை மருட்சியூட்டி வயப்படுத்துதலில்தான் இருக்கிறது. இந்தக் காரியத்தைத் தாராள-ஜனநாயகக் கட்சித் தலைவர் நீக் கிளெக் திறம்படச் செய்திருந்தார் என்பதைச் சொற்போரிடுவுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிக் கிளெக்கை ஆங்கில ஒபாமா என்று நினைக்க வேண்டாம். நிக் கிளெக்னின் இந்த எதிர்பாராத செல் வாக்கு பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குத் தடங்கலாக இருக்கிறது. கமரன் பிரதமராக வர வேண்டுமானால் தாராண்மை-ஜனநாயகக் கட்சி தற்போது வைத்திருக்கும் 24 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்.

என் கவனத்தை ஈர்த்த ஒரு காரியம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த முதலாம் விவாதத்தில் பங்குபெற்ற மூவரும் நிகழ்ச்சி நடத்தியவரும் அவையிலிருந்து முதல் கேள்வி கேட்டவரும் மத்திய வர்க்க வெள்ளை ஆண்கள். பெரிய பிரித்தானியா பல்லின மக்களின் பிரதேசம் எனப் பொதுவெளியில் பிரச்சாரப்படுத்தப்படும் எண்ணத்திற்கான தடயங்களை நான் இந்த விவாதத்தில் காணவில்லை.

இரண்டாவதாக எதிர்வரும் தேர்தலில் பிரிட்டிஷ் இந்தியப் பெண்கள் முதல்முறையாக நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்படியான வாய்ப்பு உண்டெனத் தெரிகிறது. மூன்று பிரதானக் கட்சிகளும் 22 இந்திய வம்சாவளிப் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதன்முதலாக அங்கம் வகித்த இந்திய ஆண் தாதாபாய் நௌரோஜி என்பது பொது அறிவுப் போட்டிகளில் பங்குபெறுகிறவர்களுக்குத் தெரிந்த செய்தி. இது நடந்தது 1892இல். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் 9 பிரிட்டிஷ் இந்திய ஆண்கள் அங்கத்தவர்களாயிருந்திருக்கிறார்கள். இவர்களுடைய அரசியல் பார்வை மையநீரோட்டக் கருத்துகளையே பிரதிபலித்தது. எனக்கெனத் தனியாக அரசியல்வாதிகளை எடைபோட ஒரு சரிபார்ப்புப் பட்டியல் வைத்திருக்கிறேன். அவற்றின் பொருளடக்கம்: அடையாள அட்டை அறிமுக எதிர்ப்பு, அன்னியப் போர்களில் ஈடுபட்டிருக்கும் துருப்புகளை வாபஸ் பெறுதல், இஸ்லாமியப் பயங்கரவாதத்தைச் சாக்காக வைத்துத் தனிமனித உரிமைகளைப் பறித்த சட்டங்களை ரத்துசெய்தல். என்னுடைய இந்தச் சோதனையில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் ஒருவருமே தேறவில்லை. போட்டிபோடும் பிரிட்டிஷ் இந்தியப் பெண் வேட்பாளர் தூக்குத் தண்டனையை மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார். கவனத்தை ஈர்க்கும் இன்னுமொரு சம்பவம் என்னவென்றால் லண்டனில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரின் மூதாதையினர் வங்காள தேசத்தவர்கள். அவரை எதிர்ப்பவரின் பெற்றோர் பாக்கிஸ்தானியர். சல்மான் ருஷ்டியின் இறப்பற்ற வார்த்தைகளில் சொல்லப்போனால் ஏகாதிபத்தியம் திருப்பித் தாக்குகிறது.

தமிழ்நாட்டுச் சுவரொட்டிக் கலாச்சாரம் இங்கேயும் உண்டு. ‘கடாரம் வென்றான்’, ‘காவேரியை மீட்ட செம்மல்’ என்று வீரப்பிரதாபங்களைவிட ஆங்கில விளம்பரத் தட்டிகளில் முரண்நகையே அதிகம் உண்டு. பழமைவாதக் கட்சி கோர்டன் பிரவுனை நக்கலடித்த சுவரொட்டி வாசகங்களில் ஒன்று: ‘நான் தேசியக் கடனை இரண்டு மடங்காக்கினேன். என்னை மறுபடியும் இதைச் செய்யவிடுங்கள்.’

போட்டியிடும் எல்லாக் கட்சிகளுமே தங்கள் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருக்கின்றன. இவை விழுந்து ஓடிப்போய் வாங்கக்கூடிய வாசகத்தன்மை உடைய பிரசுரங்கள் அல்ல. ஆங்கிலத் தினசரிகள் சுருக்கித்தந்த திரட்டைப் படித்தபோது நிறையப் பண்புப்பெயர்கள், அரசியல் சொல்லாடலில் படித்து அலுத்துப்போன இயற்சொற்களே என் கண்ணில்பட்டன. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்தது என்பது தெரியாமல் பிலிப்பைன்ஸ் காடுகளில் மறைந்திருந்த ஜப்பானிய இராணுவ வீரர்கள் சிலர் மறுபடியும் நாகரிக உலகுக்கு வந்த செய்தியைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கடந்த எழுபது ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை அறிந்திராத ஜப்பானிய வீரர் ஒருவர் இந்த மூன்று கட்சிகளின் விஞ்ஞாபனங்களைப் படிக்க நேர்ந்தால் தாராண்மைவாத - ஜனநாயகக் கட்சிக்கே பெருவிரலை உயர்த்துவார். மக்கள் விருப்புவாதக் கொள்கைகள் இவர்களின் கட்சித் திட்ட அறிவிப்பில் உண்டு. ஒரு எளிய உதாரணம்: சம்பாதிக்கும் முதல் பத்தாயிரம் பவுண்டுகளுக்கு வருமானவரி மதிப்பீட்டை அகற்றுவது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த மூன்று கட்சிகளுமே கறை படிந்த வங்கிகளின் மகாத்மியத்தில் மயங்கிப்போயிருக்கின்றன.

தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி அவை தரும் விடைகளாலோ சீராக எழுதப்பட்ட அரசியல் சித்தாந்தங்களாலோ நிச்சயிக்கப்படுவதில்லை. மூன்று காரியங்களில் தங்கி இருக்கின்றன. ஒன்று அரசியல்வாதிகள் வாக்காளர்களிடையே ஏற்படுத்தும் உற்பத்தி செய்யப்பட்ட பீதி. இரண்டுவிதப் பயங்களைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவார்கள். ஒன்று குடிநுழைவு, மற்றது இஸ்லாமியப் பயங்கரவாதம். இதுவரை இந்த இரண்டு சமாச்சாரங்களும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்படவில்லை. அடுத்த மூன்று வாரங்களில் இவை கட்டாயமாக விவாதிக்கப்படும். குடிநுழைவு பற்றி ஆங்கிலக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவு இல்லை. பல்லினச் சமூகத்தை ஆதரிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளக் குடிவரவாளர்களை வரவேற்கிறோம் என்பார்கள். அதே கதையுடன் புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பார்கள். குடிநுழைவு விவகாரத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான உருப்படியான செயல்திட்டங்கள் இவர்களிடம் இல்லை. பொதுவான, தெளிவில்லாத மொழியில் பேசுகிறார்கள். தொழிற்கட்சி எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிறது. பழமைவாதக் கட்சி உள்ளே நுழையும் வந்தேறிகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு விதிக்க வேண்டும் என்கிறது. எத்தனை பேரை உள்ளே அனுமதிப்பீர்கள் எனக் கேட்டால் மவுனம் சாதிக்கிறார்கள். தாராண்மை-ஜனநாயகக் கட்சி மட்டும் செயல்திறமுள்ள தொழிலாளர்களை வரவேற்பதுடன், ஏற்கனவே கள்ளத்தனமாக நுழைந்தவர்களில் நன்னடத்தை உள்ளவர்களுக்குக் குடி உரிமை வழங்க வேண்டும் என்கிறது.

இரண்டாவது வாக்காளரிடையே ஏற்படுத்தும் பேராசை. இதை உருவாக்க அரசியல்வாதிகள் கையாளும் உத்திகள்: வாக்காளர்கள் அதிகம் செலவுசெய்யக்கூடிய வருமானத்தை உருவாக்கல். கடுமையாக உழைக்கும் மத்தியதரக் குடும்பத்தின் வரிச்சுமையைக் குறைத்தல். வீட்டு அடமான வரியைச் சாதகமாக்குதல், கடன் அட்டையை எக்கச்சக்கமாகப் பாவிக்கச் சலுகை தருதல். மொத்தத்தில் பொருளாதரமயமான சமூகச் சூழலை உண்டுபண்ணுதல்.

இவை இரண்டையும்விடத் தேர்தலில் வெற்றி, அரசியல்வாதிகள் தரும் உத்தரவாதங்களில் இருப்பதில்லை அவர்கள் எழுப்பும் கேள்விகள் வாக்காளருடன் ஒத்துப்போவதில் இருக்கிறது. 1974இல் நிலக்கரித் தொழிலாளிகளின் தகராறு நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்தபோது எட்வர்ட் ஹீத் எழுப்பிய வினா: இந்த நாட்டை ஆள்பவர் யார்? வாக்காளர் கொடுத்த விடை முதலாளித்துவ பழமைவாதக் கட்சியைத் தேர்ந்தெடுத்தது. 1979இல் தொழிற் சங்கங்கள் தங்களைத் தட்டிக்கேட்பார் யாருமில்லை என்னும் பாவனையில் நடந்துகொண்டபோது மார்க்கிரேட் தாட்சர் ‘இந்தச் சங்கங்களைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர விரும்புகிறீர்களா?’ என்றபோது பெரும்பான்மையான வாக்காளர்கள் அம்மையாரின் தொழிலாளர் உரிமைகளைத் தகர்க்கும் பணியை ஆதரித்து அவரைத் தெரிவுசெய்தார்கள். 1992 பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட நாட்களில் வாக்காளரிடம் ஐயத்தைப் புகுத்தி ஜான் மேஜர் கேட்ட கேள்வி நீல் கின்னக் தலைமை தாங்கும் தொழிற்கட்சியிடம் உங்கள் பொருளாதாரப் பொறுப்பை நம்பிக்கொடுக்கலாமா? வாக்காளர்கள் இல்லை என்றார்கள். 1997இல் டோனி பிளையர் பெரிய கேள்விகள் ஒன்றையும் கேட்கவில்லை. அவர் ஒரு சின்னக் கேள்வியைத்தான் கேட்டார்: ஊழல் நிறைந்த, அழுகிய, ஒழுக்கங்கெட்ட 17 வருடப் பழமைவாதக் கட்சியின் ஆட்சியிலிருந்து மாற்றம் தேவையா? வாக்காளர்கள், ஆம் என்று முழுமனத்துடன் வாக்களித்தார்கள். 2005இல் பிளையரின் செல்வாக்கு ஈராக் போருக்குப் பின் தளர்ந்திருந்தது. ஆனால் அவர் மீண்டும் வெற்றிபெற்றார். இந்தத் தடவை வாக்காளரிடம் சொன்னது: எங்களுடைய ஆட்சி உங்களுக்குச் சோர்வைத் தந்திருக்கலாம். ஆனால் இன்னுமொரு ஐந்தாண்டுகள் உங்களால் மைக்கல் ஹார்வர்டின் தலைமையில் உள்ள டோரிக் கட்சியைத் தாக்குப்பிடிக்க முடியுமா? மக்கள் முடியாதென்றார்கள்.

இன்றைய தேர்தலில் மூன்று கேள்விகள் மேல் தூக்கி நிற்கின்றன. அனுபவச் சாத்தியமில்லாத, பங்குச் சந்தையை ஆதரிக்கும் கமரனிடம் பொருளாதார நிர்வாகத்தை ஒப்படைக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இது பிரவுனின் கேள்வி. கமரன் வாக்காளரிடம் எழுப்பும் வினா: பதின்மூன்றாண்டுகளாகக் கோர்டன் பிரவுனின் தலைமையில் தொழிற்கட்சி ஆட்சியின் தவறுகள் தொடர்ந்து நீட்டிப்பதை உங்களால் சகித்துக்கொள்ள முடியுமா? நிக் கிளெக்கின் எதிர்பாரத செல்வாக்கு புதியதொரு தெரிவை வாக்காளரிடத்தில் அறிமுகமாக்கியிருக்கிறது. அவர் உயர்த்தும் கேள்வி: இந்த இரண்டு கட்சியின் ஆட்சியில் சலித்துப்போன உங்களுக்கு ஒரு மாற்று அரசாங்கம் வேண்டுமா? தேர்தல்கள் அரசியல்வாதிகளின் தர்க்கத் திறமையால் நிச்சயிக்கப்படுவதில்லை. உணர்ச்சி மிகு மொழிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. பிரித்தானியத் தேர்தல் முடிவு எந்தக் கட்சி மக்களின் உணர்ச்சிப்பெருக்கேட்டைத் தீவிரப்படுத்தப்போகிறார்கள் என்பதில் இருக்கிறது.

சீடர்களும் சிறார்ப் பிரியர்களும்

இது சாமியார்களுக்குக் கெட்ட காலம். இந்தியாவில் நித்தியானந்தர். ஐரோப்பாவில் கத்தோலிக்கப் போப்பாண்டவர் பதினாறாம் பென்னடிக். இரண்டு பேருமே ஊடகக் கவனத்திற்கு வரக் காரணம் பாலியல். ஒருவர் பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறார். மற்றவர் அவரின் திருச்சபையின் சிசுப்பிரிய (paedophile) பாதிரிகளின் பாலியல் செய்கைகளை மூடிமறைத்ததற்காகக் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறார். முதலில் 80களில் அமெரிக்காவில் அம்பலப்படுத்தப்பட்ட கத்தோலிக்கக் குருமாரின் பாலியல் நடத்தைகள் இப்போது ஐரோப்பாவரை வந்திருக்கிறது. இந்த மூடிமறைப்புகளுக்கு 16ஆம் பென்னடிக்கும் உடந்தையாக இருந்திருக்கக்கூடும் என்ற செய்திகள் இவர் எழுதிய பழைய கடிதங்கள் மூலம் தெரியவருகிறது. இதற்கிடையில் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்திற்காகக் குடியாளர்-கைது என்ற சாதாரண மக்களுக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி இவரை விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனக் கடவுள் நம்பிக்கையில்லாத கருத்தைப் பரப்புரைக்கும் விஞ்ஞானியான ரிச்சர்ட்ஸ் டோர்கின்சும் கலாச்சார மதிப்புரைஞர் கிரித்தோர் ஹிக்கின்ஸ்சும் அறிக்கைவிட்டிருக்கிறார்கள்.

பதினாறாம் பென்னடிக் ஒரு கறாரான மரபுவாத மனிதர். வைதீகக் கத்தோலிக்கக் கொள்கைகள் தளர்வதற்கு, குலைவதற்கு இடமளிக்காதவர். இவர் போப்பாண்டவராகும் முன் முதன்மைக் குரு (Cardinal) ரட்சிங்கராக அறிப்பட்டிருந்தார். இவர் திருச்சபையின் பற்றுருதிப் போதனைக் (Congregation for Doctrine of Faith) குழுவின் ஆளுகையாளராக (prefect) இருந்தபோது சட்டாம்பிள்ளைத்தனமாக நடந்துகொண்ட காரியங்கள் நிறைய உண்டு. மூன்றாம் உலக விடுதலை இறையறிஞர்களின் இறையியலுக்குக் கண்டனம் தெரிவித்தார். சமீபத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்த செய்தி சிறிலங்க கத்தோலிக்கக் குருவான தீசா பாலசூர்யாவின் எழுத்துக்கள் அன்னை மேரியின் புனிதத்திற்குக் களங்கம் விளைவித்ததாக அவரைப் பதவிநீக்கம் செய்ய எடுத்த முயற்சி. இந்த 16ஆம் பென்னடிக் ஒரு தொடர் மத வசைப்பாளர். சில ஆண்டுகளுக்கு முன் புத்த மதத்தை auto-erotic spirituality வர்ணித்தார். ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஒரு இடைக்காலப் பேரரசரின் புனிதப் போர் நாட்களில் இஸ்லாமைப் பற்றித் தெரிவித்த கருத்துகளை ஒரு எடுத்துக்கூறாக உபயோகித்திருந்தார். அந்த அரசர் கூறிய வசனங்கள்: ‘முகமது ஏதாவது புதிதாக வெளிப்படுத்தியிருக்கிறாரா என்று எனக்குக் காண்பியுங்கள். குரூரமானதும் மனிதாபிமானமற்ற செயல்களையே நான் காண்கிறேன். அவர் பிரகடனப்படுத்திய மதம் வாளால்தான் பரப்பப்பட்டது.’ இந்த வாக்கியங்கள் ஏற்படுத்திய புரளியில் போப்பாண்டவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. துருக்கி நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தினராவதை இவர் எதிர்க்கிறார். அதற்கு இவர் கூறும் காரணம்: இஸ்லாமியத் துருக்கியின் நுழைவு கிறிஸ்துவ ஐரோப்பிய அடித்தளத்திற்கு இடைஞ்சலாயிருக்கும். இவர் யூதர்களையும் விட்டுவைக்கவில்லை. கிறிஸ்தவரின் புனிதச் சின்னமான சிலுவை யூதர்களுக்குத் தடை என்றார்.

இந்தப் போப்பாண்டவரின் இறையியல் சிந்தனை உலகம் இரண்டு சட்டகத்துக்குள் இயங்குகின்றது. ஒன்று திருச்சபை பிதா ஆகஸ்டின்னின் (Augustine) எண்ணங்கள். ஆகஸ்டின்னின் கருத்துபடி உலகம் தீயது. திருச்சபை இந்த வஞ்சக உலகுக்கு உன்னத உதாரணமாக மலைமேல் வைக்கப்பட்ட பட்டினம், உலகத்துக்கு வெளிச்சம், இந்த வஞ்சக உலகம் தீய செயல்களைத் திருச்சபைக்குச் செய்து கொண்டே இருக்கும். ஆகையால் திருச்சபை தன் அப்பழுக்கற்ற பிம்பத்தைக் காப்பாற்ற வேண்டும். பாலியல் விவகாரம் பற்றி மதச்சார்பற்ற ஊடகம் எழுப்பும் கேள்விகள் உலகம் தீயது என்பதற்கு அடையாளம். மற்றது இன்றைய பூலோக இழிநிலைக்குக் காரணம் நவீனம் உருவாக்கிய சார்புவாதம் (relativism). விவாகரத்துகள், ஓரினச்சேர்க்கை, தனி ஆள் தார்மீகச் சரிவு, பல்பண்பாட்டு நிலைமை எல்லாம் சார்பியக்கத்தின் அறிகுறிகள்.

ஒரு சில கத்தோலிக்கக் குருமாரே இந்த இழிசெயலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆகையால் முழுத்திருச்சபையையும் நியாயத் தீர்ப்புக்கு உட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் திருச்சபையின் உயரதிகாரம் குருமாரின் தகாத செயலில் நடந்துகொண்டவிதந்தான் நம்பிக்கை தருவதாக இல்லை. அதைவிட மக்களிடத்தில் அதன் ஆன்மிக அதிகாரத்தை இழந்திருக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபை இந்தப் பாலகநேச (paedophilia) விவகாரத்தை ஒழுக்கம் சார்ந்த ஒரு தனி ஆளின் புனிதக் கேடாக, பாவச் செயலாக, பார்த்ததே தவிர இது சட்டப்படி குற்றமான காரியமாகக் கிறிஸ்தவ மேலிடத்திற்குத் தெரியவில்லை. இந்த வெட்கக்கேட்டிலிருந்து மீளக் கத்தோலிக்க நிறுவனம் இரண்டு உத்திகளைக் கையாண்டிருந்தது. ஒன்று அவமானப்படுத்தப்பட்ட குருமாரை நீக்காமல் (defrock) அவர்கள் ஊழியம் செய்த பேராயத்திலிருந்து இன்னொரு பேராயத்திற்கு மாற்றியது. அம்பலப்படுத்தப்பட்ட குருமாரைக் காவல் துறையினரிடம் ஒப்புக்கொடுக்காமல் அவர்கள் தலைமறைவாக்கப்பட்டார்கள். இரண்டாவது இந்தக் குருமாரின் துர்ச்செயலுக்குச் சமூகத்தைச் சீரழிக்கும் சமபாலின ஈர்ப்பே காரணமெனப் பழியை வேறிடத்திற்கு மாற்றியது.

கத்தோலிக்க அதிகாரத்துவத்திற்குத் திருச்சபையின் பொதுக்களத்தில் அதன் மாட்சிமையான தோற்றுரு முக்கியமாக்கப்பட்டதே தவிரப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மனநிலை முறிவுகள் பெரிதாகப்படவில்லை. கத்தோலிக்கத் திருச்சபைக் குருமாரின் ஆன்மிக நலனைக் காப்பாற்றுவதில்தான் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

கத்தோலிக்கக் குருமார் கடைப் பிடிக்கும் தாம்பத்திய விரதத்துவம் தான் (celibacy) இந்தப் பாலிய சோதனைக்குக் காரணம் என்கிறார்கள். இதற்கு இவர்கள் தரும் சுலபமான விடை கத்தோலிக்கக் குருமாரைத் திருமணம் செய்ய அனுமதிப்பது. எந்த எளிய விடையுமே சங்கடமானவை. சிறாரைப் பாலியலுக்காகத் தவறான முறையில் பயன்படுத்துவது திருமணமான ஆண்களிடமுமுண்டு.

இந்த விஷயத்தில் பொதுத்தகவல் சாதனங்கள் நடந்துகொண்டவிதம் ஆங்கில ஊடகத்தின் இருமுகத் தன்மை மீண்டும் வலுப்பெறச் செய்தது. கத்தோலிக்கக் குருமாரிடையே நிலவும் பாலியல் விஷயம் பற்றி அம்பலப்படுத்தும்போது திருச்சபையைத் தனியாகப் பிரித்து இது ஏதோ தனிநபர் விவகாரம், கெட்டழிந்த சில குருமாரால் கடைப்பிடிக்கப்பட்ட செய்கை என்று அறிவிக்கின்றன. மற்ற மதத்தினருக்கு இந்தச் சலுகை காண்பிக்கப்படுவதில்லை. சில புலம்பெயர்ந்த சமூகங்களிடையே சீதனத் தகராறுகளால் நடைபெறும் கௌரவக் கொலைகளை ஏதோ இவை இந்து மதத்துடன் இறுகிய பிணைப்புடையவையாக ஊடகங்கள் சித்திரிக்கின்றன. அதுபோலவே குண்டுதாரிகள் தற்கொலையில் ஈடுபடும்போது திருக்குரானில் அவை அங்கீகரிக்கப்பட்டதாக இஸ்லாம் மதத்தையும் இணைத்து அறிவிக்கின்றன. ஆனால் பாலியல் தகாத முறைகள் மேற்கத்திய ஆங்கிலேயரிடையே காணப்படும்போது இதை அந்தச் சமூகத்தின் தார்மீகத் தவறாக மேற்கத்திய ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன. இந்தத் தவறான செய்கைகளை கிறிஸ்துவ மதத்தின் அடையாளக் குறியீடாகப் பார்ப்பதில்லை.

கடைசியாக, சிறு பிள்ளைகள் என்னிடம் வரத் தடைசெய்யாதீர்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்து இந்த ஒழுக்கம் தவறிய குருமார் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று அவரது வாசகங்களை உள்ளடக்கிய புதிய ஏற்பாட்டை மெதுவாகப் புரட்டினேன். இரண்டு வார்த்தைகள் மேலோங்கி நின்றன: வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்.

உள்ளடக்கம்