Google   www kalachuvadu.com

தலையங்கம்
செயலற்றதாக்கப்படும் சட்டம்

சுதந்திர இந்தியாவின் ஜனநாயகச் சாதனைகளில் ஒன்று தகவல் பெறும் உரிமைச் (த.பெ.உ.) சட்டம். ஆளும் வர்க்கம் இச்சட்டம் நிறைவேற அனுமதியளித்துவிட்டோமே என வருந்தும் சட்டம் இது. இது ஒரு இயக்கமாக - பெருமளவிற்கு நகர்ப்புற மத்தியதர வர்க்க இயக்கமாகவே இருப்பினும் - உருவாகும் என அரசாளும் வர்க்கம் எதிர்பார்க்கவில்லை. எனவே இப்போது அதைச் சிறுகச் சிறுக - தேசப் பாதுகாப்பு, அரச ரகசியம் போன்ற காரணங்களைக் காட்டி - முனை மழுங்கச் செய்ய அரசுகள் முயன்றுவருகின்றன. மக்களிடமிருந்து தகவல்களை மறைப்பது என்பது அதிகார வர்க்கத்தின் இயல்பு. எனவே அதிகார வர்க்கம் இச்சட்டத்தைச் செயலற்றதாக மாற்ற அனைத்து வழிகளிலும் முயலும் என்பதில் ஐயமில்லை.

இப்பின்னணியில் தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய மாநிலத் தகவல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்வது அவசியம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பொது அதிகாரங்கள் (Public Authority) தாமாகவே முன்வந்து தம்மைப் பற்றிய தகவல்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4, எந்தத் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் எனப் பட்டியல் இட்டுள்ளது. ஆனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய மாநிலத் தகவல் ஆணையமே தன்னைப் பற்றிய போதிய தகவல்களை வெளிப்படுத்துவதில்லை.

த.பெ.உ. சட்டத்தின்படி விண்ணப்பங்களுக்கு ஒரு அதிகாரி 30 நாள்களில் பதிலளிக்கவில்லை எனில் ஆணையம் அபராதம் விதிக்கலாம். ஆனால் தமிழகத் தகவல் ஆணையம் தன்னிடம் வரும் த.பெ.உ. விண்ணப்பங்களுக்குப் பதில் அளிக்கப் பல மாதங்கள் எடுத்துக்கொள்கிறது. தான் பின்பற்றாத காலக்கெடுவைப் பிறருக்கு வலியுறுத்தும் விநோத நிலையில் ஆணையம் செயல்படுகிறது.

மாநிலத் தகவல் ஆணையத்திற்கு இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன, எத்தனைக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, எத்தனை அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது போன்ற புள்ளிவிவரங்கள் எதுவும் ஆணையத்திடம் இல்லை. இதனால் தன்னுடைய செயல்பாடுகளை மதிப்பிட முடியாத நிலையில் ஆணையம் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டிய வருடாந்திர அறிக்கையை ஆணையம் 2005இலிருந்து இதுவரை ஒருமுறைகூட அனுப்பவில்லை.

பொது மக்களால் வேண்டப்பட்ட தகவலை 30 நாட்களுக்குள் தர மறுக்கும் அதிகாரிக்கு ரூ.25,000/- வரை தகவல் ஆணையம் அபராதம் விதிக்க முடியும். இதை ஆணையம் உறுதியாகப் பயன்படுத்தினால் அரசு செயல்படும் முறையிலேயே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். எத்தனை அதிகாரிகளுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆணையம் புள்ளிவிவரங்கள் எதையும் வழங்குவதில்லை. ஆனால் தமிழக ஆணையத்தின் தீர்ப்புகளைப் பார்வையிட்டிருக்கும் த.பெ.உ. செயல்பாட்டாளர்கள் கடந்த மூன்றாண்டுகளில் 35 முறைகள் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இதே மூன்றாண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் ஆணையத்திற்கு வந்துள்ளன. அதாவது 4300 விண்ணப்பங்களில் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பெரும்பான்மையான விண்ணப்பங்களுக்குத் தகவல் அதிகாரிகள் உரிய தகவலை உரிய காலத்தில் அனுப்புவதில்லை என்பதைக் கணக்கில் எடுக்கும் போது இந்த 0.2 சதவிகித அபராதம் என்பது கடலில் கரைக்கும் பெருங்காயம் போன்றது.

தகவல் உரிமைச் சட்டத்தின்படி பொதுமக்களால் வேண்டப்படும் தகவலைத் தர வேண்டிய அதிகாரிகள் 30 நாட்களுக்குள் அவற்றைத் தரவில்லை எனில் மாநிலத் தகவல் உரிமை ஆணையத்திடம் மேல் முறையீடு செய்யலாம். இவ்வாறு நாம் முறையிடும்போது, ஆணையம் ஒன்றில் நேரடி விசாரணை செய்யலாம் அல்லது சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தலாம்/உத்தரவிடலாம் (directions). மேல் முறையீடுகளில் 95 சதவிகிதத்திற்கு ஆணையம் உரிய தகவல் அதிகாரிக்கு உத்தரவுகள் அனுப்புகின்றது. மனுதாரர்களுக்கு ஆணையத்திடம் நேரடியாக முறையிட வாய்ப்பளிக்காமல் இவ்வாறு உத்தரவிட்டுவிடுவது நீதி வழங்குவ தாகாது. இவ்வாறு முறையிட வாய்ப்பளிக்காமல் இவ்வாறு உத்தரவு அனுப்பும் முறைமை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.

தகவல் உரிமை அதிகாரி உரிய காலத்தில் தகவலை வழங்காவிட்டாலோ அல்லது போதிய அளவிற்குத் தகவலை வழங்காவிட்டாலோ அவர்கள் த.பெ.உ. சட்டத்தின்படி கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பான்மையான முறையீடுகளில் ஆணையம் இச்சட்டத்தைப் பின்பற்றாமல் உத்தரவிடுவதோடு நிறுத்திக்கொள்கிறது; அபராதம் விதிப்பதையும் ஒழுங்கு நடவடிக்கைக்குப் பரிந்துரைப்பதையும் தவிர்க்கிறது. இது பெரிய குறைபாடாகும். அபூர்வமாக அபராதம் விதிக்கும் போதும் அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆணையம் உறுதிப்படுத்திக்கொள்வதில்லை. தமிழகத்தில் அவ்வாறு அபராதம் வசூலிக்கப்பட்ட எண்ணம் கையளவு மட்டுமே இருக்கும் என்கின்றனர் த.பெ.உ. செயல்பாட்டாளர்கள்.

ஆணையத்தின் செயல்பாட்டிற்கு அதன் உயர் அதிகாரிகள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றனர் என்பது மிக முக்கியம். தமிழகத்தில் ஒரு முதன்மை ஆணையரும் ஆறு ஆணையர்களும் உள்ளனர். இவர்களில் ஆறுபேர் அரசு அதிகாரிகள். யாருமே சட்டம், அறிவியல், சமூகப் பணி, ஊடகவியல் போன்ற துறைகள் சார்ந்தவர்கள் அல்ல. மைய அரசின் ஆணையர்களில் திருமதி தீபக் சாண்டு போன்ற ஊடகத் துறையினருடன் சைலேஷ் காந்தி என்ற தகவல் பெறும் உரிமைக் களப்பணியாளராக இருந்தவரும் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தகவல் ஆணையத்தின் ஆணையர் நியமனத்தில் தமிழக அரசு பின்பற்றும் முறைமைகள் வெளிப்படையானவையாக இல்லை. அரசு அதிகாரிகளுக்கு அப்பால் ஒருவரைத் தேர்வு செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும் தமிழக அரசின் தகவல் ஆணையத்தில் போதிய அதிகாரிகள் இல்லை. இதனால் பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. மேற்படிச் செய்திகள் ஆரோக்கியமான நடைமுறைகளை ஆணையம் பின்பற்றுகிறது என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆணையம் வலுவாக இருந்தால் தான் மக்களுக்குச் சார்பான விதத்தில் இயங்க அதிகாரிகளை அது கட்டாயப்படுத்த முடியும். தற்போதைய முதன்மை ஆணையரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2010 தோடு முடிவடைகிறது. புதிய முதன்மை ஆணையரின் தேர்வில் ஆரோக்கியமான முன் உதாரணங்களைத் தமிழக அரசு பின்பற்றுமா? புதிய முதன்மை ஆணையரின் கீழ் புதிய ஊக்கத்தோடு, குறைபாடுகளைக் களைந்து ஆணையம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்பது நம் எதிர்பார்ப்பு.

உள்ளடக்கம்