Google   www kalachuvadu.com

நேர்காணல்
“நமது ஜனநாயகம் நொறுங்கிப்போய்விட்டது!”
நேர்காணல்: ஹென்றி திபேன்
சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம்
தொகுப்பு: செல்லப்பா
புகைப்படங்கள்: லோகநாதன்
மதுரையிலிருந்து இயங்கிவரும் மக்கள் கண்காணிப்பகம் என்னும் மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திபேன் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தின் மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராடி வருபவர். மனித உரிமைச் செயல்பாட்டைச் சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகப் பார்க்கும் திபேன் ஒரு பரவலான மக்கள் இயக்கமாக மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் அக்கறை கொண்டவர்.

போலி மோதல் சாவுகள், சித்திரவதைக்கெதிரான பிரச்சாரம், சாதிய பிரச்சினைகளை உலக அளவில் கொண்டுசெல்வது எனப் பல்வேறு தளங்களில் செயல்பட்டுவருகிறார். மனித உரிமைச் செயல்பாடு என்பதைப் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் பங்கேற்கும் கூட்டுப் பணியாகக் கருதி பல போராட்டங்களை அவற்றோடு இணைந்து நடத்தியிருக்கிறார். வழக்கறிஞரான திபேன் 1990களில் தமிழகக் கர்நாடக அதிரடிப் படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை மீட்புக்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் இயங்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு தொடர்புகொண்டு தமிழகத்தின் மனித உரிமைப் பிரச்சினைகளை உலக சமுதாயத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றவர். அவற்றில் சில அமைப்புகளில் உறுப்பினராகவும் ஆலோசகராகவும் இருந்துவருகிறார். அவருடனான காலச்சுவடு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்த நேர்காணல் காலச்சுவடுக்காக மதுரை மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் எடுக்கப்பட்டது. மூன்று கட்டங்களில் பலமணி நேரம் நடத்தப்பட்ட உரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது.

மனித உரிமைத் தளத்தில் செயல்படக் காரணமான பின்னணி, சூழல் குறித்துச் சொல்லுங்கள்?

சரியான புரிதலுடன் மனித உரிமைத் தளத்தில் செயல்படத் தொடங்கியது எண்பதுகளின் தொடக்கத்தில் தான். மனித உரிமை குறித்துச் சிந்திக்க, கற்றுக்கொள்ள ஒரு தளமாக இருந்தது மக்கள் சிவில் உரிமைக் கழகம்தான் (பியூசிஎல்). சேவை மனப்பான்மை இல்லாமல் ஒருவர் மனித உரிமைத் தளத்தில் செயல்பட முடியாது. சமூக முரண்பாடுகளைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.

அத்தகையதொரு சேவை மனப்பான்மை எனக்கு உருவாகக் காரணமாக இருந்தவர் என் அம்மாதான். அவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மருத்துவர். ஆப்பிரிக்கா அல்லது இந்தியாவுக்குச் சென்று மருத்துவச் சேவையில் ஈடுபட வேண்டும் என்னும் நோக்கத்துடன் 1934இல் கும்பகோணம் வந்தார். அங்கு கான்வெண்ட் கேதலிக் நடத்திய ஒரு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். என் மூத்த சகோதரரை அங்குதான் தத்து எடுத்தார். பிறகு 1948இல் அவரும் அண்ணனும் பிரான்ஸ் சென்றனர். அண்ணனுக்கு அப்போது இரண்டு வயது. அம்மா அங்கு எம்டி படிப்பை முடித்துவிட்டுத் திரும்பி வந்து சேலம் அரிசிப்பாளையத்தில் இருக்கும் கான்வெண்ட் மருத்துவமனையில் தன் பணியைத் தொடர்ந்தார். மருத்துவப் பணியுடன் தொழுநோய் தடுப்புப் பணிகளிலும் ஈடுபட்டார். தொழுநோய்த் தடுப்பு மருத்துவமனையை மட்டும் மையப்படுத்திய பணியாக இருக்க முடியாது. நோயாளிகளைத் தேடிக்கொண்டு கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். வாரத்தில் நான்கு நாட்கள் மரத்தடிகளில் செயல்படும் நடமாடும் மருத்துவ முகாம்களில் பணிபுரிய வேண்டும். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் சென்று வந்தவர் என் அம்மா. 1956இல் அவர் என்னைத் தத்து எடுத்துக்கொண்டார்.

சேலத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான் அவர் உங்களைத் தத்தெடுத்துக்கொண்டார் அல்லவா?

ஆமாம் அப்போதுதான். வெகு காலம்வரை எனக்கு என் பெற்றோர், குடும்பம் பற்றித் தெரியாது. பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போதுதான் என்னைப் பெற்ற தாயார் பிரசவத்தின்போது இறந்துவிட்டதைத் தெரிந்துகொண்டேன். அப்போது அவருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவராயிருந்த அம்மா என்னைத் தத்தெடுத்துக்கொண்டார். மருத்துவமனைக்கு அருகிலேயே வீடு. நாங்கள் மொத்தம் ஆறு பேர். நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். மூத்த சகோதரரும் இளைய சகோதரியும் சேலத்தில் இருக்கின்றனர். சகோதரி சமூகப் பணியாளர். ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அம்மா 1999இல் இறந்துவிட்டார்கள். அவருடைய பெயர் டாக்டர் திபேன்.

நீங்கள் எல்லாருமே அம்மாவால் தத்து எடுக்கப்பட்டவர்கள்தானா?

ஆமாம். நாங்கள் வெவ்வேறு குடும்பங்களில் பிறந்தவர்கள். வெவ்வேறு வயது. ஆனால் ஒரே குடும்பமாக வாழ்ந்தோம். அம்மா பிரான்ஸ் நாட்டவர் என்றாலும் நாங்கள் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அல்ல. எனக்குத் தெரிந்து அம்மாவுக்கு அறுநூறு ரூபாய் சம்பளம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது உயர்ந்தது. ஒரு சராசரிக் குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் அனைத்தோடும் வாழ்ந்தோம். அதுதான் நான் சரியான பாதையில் செல்வதற்குக் காரணமாயிருந்ததென இப்போது உணர்கிறேன். அம்மா மிகவும் எளிமையானவர். எளிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகக்கூடியவர். இன்றும் சேலம் சிறையில் ‘திபேன் ப்ளாக்’ என்று ஒரு ப்ளாக் இருக்கிறது. முன்பெல்லாம் தொழுநோய் பாதிப்புக்குள்ளானவர்களைச் சேலம் சிறையில்தான் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு வாரமும் அங்கே போய் அவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். அதனால் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனக் கருதியது சிறை நிர்வாகம். அம்மா எதையும் பெற்றுக்கொள்ள மறுத்ததால் ஒரு ப்ளாக்குக்கு அவர் பெயரை வைத்துவிட்டார்கள்.

பள்ளி வாழ்க்கையில் மிகப் பாதுகாப்பாக உணர்ந்தேன். அதை முடித்துத் திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் சேர்ந்தபோது அது முழுமையாக உடைந்துவிட்டது. ஏழை, பணக்காரர் எனப் பல தரப்பு மாணவர்களும் பயிலும் கல்லூரி அது. என்னைத் தயார்செய்துகொள்ள அந்தக் கல்லூரி ஒரு களமாக இருந்தது. அங்கே புகுமுக வகுப்புப் படித்தேன். நான் பொதுப்பிரிவில் இருந்ததால் புகுமுக வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் மருத்துவம் படிக்க முடியும். நான் என்ன சாதியென்றே எனக்குத் தெரியாது. சாதி தெரியாததால் சான்றிதழ்படி நான் முன்னேறிய வகுப்பினன். புகுமுக வகுப்பில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். கண்டிப்பாக மருத்துவம் கிடைத்துவிடும் என்றனர். நானும் விண்ணப்பித்தேன். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. பெரிய ஏமாற்றத்தோடும் அதனால் சமுதாயத்தின் மீது ஏற்பட்ட கோபத்துடனும் கல்லூரியில் சேர்ந்தேன். முதலாண்டுப் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டுமென்பதுதான் என் கனவு. மருத்துவம் படித்தால்தான் சேவை செய்ய முடியுமென்ற எண்ணம் எனக்குள் உருவாகிவிட்டது. கல்லூரியில் செயல்பட்ட அனைத்திந்திய கத்தோலிக்க அமைப்பில் உறுப்பினரானேன். என் அண்ணன் அதில் உறுப்பினராக இருந்தார். அம்மா பிரான்ஸில் அது சார்ந்த அமைப்பில் உறுப்பினராக இருந்திருக்கிறார். நான் உறுப்பினராகக் காரணமாக இருந்தவர் ஃபாதர் செராக். இப்போது அவருக்கு 96 வயது. அவர்தான் என் அம்மாவை வழிநடத்தியவர். இந்தப் பின்னணியில்தான் அய்க்கப்பில் சேர்ந்தேன். அங்கு நடந்த உரையாடல்களின் மூலம் ஒரு தெளிவு பிறந்தது. சமூக அக்கறை உருவானது. அன்று எனக்கு வழிகாட்டியாக இருந்த ரவீந்திரன் இன்று ஐநா சபையில் ஒரு முக்கியமான பதவியில் இருக்கிறார்.

மாணவர் அமைப்பில் முழுநேரமாக இயங்கத் தொடங்கினேன். மீண்டும் மருத்துவம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் அப்போது இல்லை. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மாணவர் அமைப்பில் வெவ்வேறு பொறுப்புகளை வகித்தேன். சென்னையில் மாணவர் அமைப்பில் முழுநேரப் பணியாளனாகச் சேர்ந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் கிராமப்புற, நகர்ப்புற வறுமையை நேரடியாகப் பார்த்து உணர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. சமுதாயத்தில் ஏழ்மை எப்படி உருவாகிறது, இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பாடசாலையாகவும் இருந்தது கல்லூரி வாழ்க்கை. சாதி அமைப்பு பற்றிய புரிதல் ஏற்பட்டதும் இங்குதான். சமூக சேவையில் மாணவர் பங்களிப்பு என்பதெல்லாம் அய்க்கப்பின் பொதுவான பண்புதான். மார்க்சிய-லெனினியக் கருத்துகளின் அறிமுகம் கிடைப்பதற்கான ஒரு தளமாகவும் அந்த வாழ்க்கை இருந்தது.

இப்படியான ஒரு வாய்ப்பு அய்க்கப் மூலமாகத்தான் கிடைத்ததா?

ஆமாம். ரவீந்திரனும் தேன்மழை ஆசிரியர் நடேசனும் தான் வழிகாட்டிகள். முதல் ஆண்டிலேயே தேன்மழை இதழ் தயாரிப்புப் பணிகளில் பயிற்சிபெற வாய்ப்புக் கிடைத்தது. பல பெரிய எழுத்தாளர்களையெல்லாம் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூடத் தேன்மழை அலுவலகத்திற்கு வந்திருந்தார். இது போன்ற வாய்ப்புகள் தாம் என்னை உருவாக்கியவை. என்னைத் தயார்படுத்திக்கொள்ள மாணவர் அமைப்பு பெரிய தளமாக இருந்தது. ஒவ்வொரு பயிற்சி முகாமிலிருந்தும் அமைப்புரீதியான பணிகளைச் செய்வதற்கான ஆட்களை உருவாக்கிக்கொண்டே இருந்தோம். அது ஒரு கத்தோலிக்க மாணவர் அமைப்பாக இருந்தாலும் அனைத்து மத, அரசியல் பின்னணி கொண்டோருக்கானதாகவும் இருந்தது. மாணவர்களுக்குத் தொழிற்சங்கரீதியிலான, அரசியல்ரீதியிலான விஷயங்களை அறிமுகப்படுத்தியது அய்க்கப்பின் முக்கியமான பங்களிப்பு.

1977இல் வேடசந்தூரில் அழகாபுரி அணை உடைந்து கடும் வெள்ளச் சேதம். ஏதாவது செய்ய வேண்டுமென முடிவு செய்து தேன்மழையில் இருந்த ஐ. பால்ராஜும் நானும் அங்கே சென்றோம். சில எதிர்ப்புகள் இருந்தன. அவற்றை நாங்கள் பொருட்படுத்தவில்லை. வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய அனுபவம் அது. வேடசந்தூரில் இறங்கினோம். கையில் பணம் இல்லை. அங்குள்ள சூழலைப் பார்ப்பதற்காகப் போன நாங்கள் பிறகு அங்கேயே இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினோம். ஒரு கேணியில் தூர்வாற முயன்றபோது முதல் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. அது தலித்துகள் பயன்படுத்தும் கேணி, அதுதான் எதிர்ப்புக்குக் காரணம். ஆனால் நாங்கள் எங்கள் பணியை முதலில் அங்கிருந்துதான் தொடங்க வேண்டுமென முடிவுசெய்தோம்.

நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கினோம். இரண்டு மாதத்திற்கும் மேலாக அங்கேயே தங்கிப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டோம். அய்க்கப் எங்கள் முடிவை எதிர்த்தது. அந்தப் பணி எங்களுக்கு நிறைவளித்ததால் நாங்கள் தொடர்ந்து அதைச் செய்யத் தீர்மானித்தோம். அப்போதுதான் மக்களை வர்க்கரீதியில் திரட்ட வேண்டியதன் தேவையை உணர்ந்தோம். ஒரு குழுவாக இணைந்து தீண்டாமைக்கு எதிராகச் சிறுசிறு போராட்டங்களை நடத்தினோம். 1980இல் மதுரைக்கு வந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் பணிகளுக்கு வழக்கறிஞர்கள் அவசியம் என்பதை உணர்ந்து நானே சட்டம் படிக்கவும் முடிவுசெய்தேன்.

உண்மையில் சட்டம் பயில்வதற்காக எங்கள் குழுவிலிருந்து அனுப்பப்பட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒரு கூட்டுக் குடும்பமாக எல்லோரும் ஒரே கூரையில் தங்கியிருந்தோம். கழிப்பிட வசதிகூடக் கிடையாது. ஒரு கம்யூன் வாழ்க்கை. திண்டுக்கல் சேவியர், அவர் மனைவி லூசி, இப்படிச் சிலர் எங்கள் குழுவில் இருந்தவர்கள்தாம். சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக இடதுசாரித் தத்துவங்களைப் படித்திருந்தேன். தீவிரமான இடதுசாரி நிலைப்பாடுகளை எடுத்திருந்த மாணவன் நான். தலை மறைவு இயக்கங்களைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. சமூக மாற்றம் குறித்த கனவு இருந்தது. சட்டம் படித்தது வழக்கறிஞராகப் பணிபுரிய வேண்டும் என்பதற்காக அல்ல. சமூக மாற்றத்துக்கான போராட்டங்களில் ஈடுபடும்போது அடக்குமுறைகளை எதிர்கொள்ள ஒரு வழக்கறிஞர் தேவை. அதைப் பூர்த்திசெய்ய வேண்டுமென நினைத்தேன்.

சட்டக் கல்லூரியில் ஒரு மாணவனாக உங்கள் அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

இரண்டு மூன்று வருடங்கள்வரை கூட்டங்கள், சந்திப்புகள், விவாதங்கள் என இருந்துவிட்டதால் சட்டக் கல்லூரியோடு என்னால் ஒட்ட முடியவில்லை. வகுப்புகளில் உட்கார முடியவில்லை. வகுப்புகளும் ஒழுங்காக நடக்கவில்லை. அங்கு நடந்த அராஜகங்கள் என்னை மிகவும் சங்கடப்படுத்திவிட்டன. முதல் செமஸ்டருக்குப் பிறகு வகுப்புகளுக்குப் போகக் கூடாது எனத் தீர்மானித்தேன். அங்கு ராஜ்குமார் என்ற சமூகப் பொறுப்புள்ள வழக்கறிஞரின் நட்பு கிடைத்தது. சில இடதுசாரிகளின் தொடர்புகள் கிடைத்தன. முதல் செமஸ்டருக்குப் பிறகு கல்லூரியிலிருந்து என்னைத் துண்டித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என்ன பணி செய்யலாம் என யோசித்தபோதுதான் மனித உரிமைப் சார்ந்த பணிகள் பற்றித் தெரியவந்தது. ஓசிடிஆர் (Organisation for Civil and Democratic Rights)

தமிழகத்தில் செயல் படத் தொடங்கியிருந்த காலம் அது.

ஓசிடிஆர் இடதுசாரிச் சார்புள்ள அமைப்பு அல்லவா?

ஆம். அப்போதுதான் வழக்கறிஞரும் மனித உரிமைப் போராளியுமான பி.வி. பக்தவச்சலம் அறிமுகமானார். பிவிபியுடனான அறிமுகத்தின் வழியாகச் சட்டம், சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றங்களின் செயல்பாடுகள், சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை குறித்து அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இவை குறித்த என்னுடைய முதல் ஆசிரியர் பிவிபிதான். அவர் கலந்துகொண்ட கூட்டங்கள்தாம் வகுப்பறைகளாக இருந்தன. பிவிபி மேடையில் கோபமாகப் பேசுவார். நான் மேடையில் கோபமாகப் பேசும்போது சிலர் “ஏன் மேடையில் இவ்வளவு கோபமாகப் பேசுகிறீர்கள்” எனக் கேட்பார்கள். சமூக அமைப்பின் மீது நமக்குள்ள கோபத்தைப் பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. உரத்த தொனியில் பேசும்போது அது மனதைத் தொந்தரவு செய்யும். அமைதியாக இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிற சமூக மனதைத் தொந்தரவுக்குட்படுத்தப்பட வேண்டுமென்னும் வெறி எனக்குள் இருக்கிறது. அந்த வெறியை எனக்கு ஊட்டியவர் பி. வி. பக்தவச்சலம்தான்.

மார்க்சிய-லெனினியச் சிந்தனைகள் சார்ந்த செயல்பாடுகளிலிருந்து மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளுக்கு நகர்ந்துசென்றதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சமுதாய மாற்றத்திற்கான பணிகளில் ஒரு சிறு பகுதிதான் ஓசிடிஆர் அமைப்பினரின் செயல்பாடு. மார்க்சிய-லெனினிய அரசியல் இயக்கமொன்றின் மக்கள் திரள் அமைப்புதான் அது. புரட்சிகரச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டது ஓசிடிஆர். அதுதான் எனது நிலைப்பாடும். இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு பிவிபியை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போதும் அவர் அதே உணர்வுகளுடன்தான் இருந்தார். அதற்குப் பிறகு மனித உரிமை சார்ந்து பணியாற்ற எனக்குக் கிடைத்த தளம்தான் பியூசிஎல். நான் உறுப்பினராக இருந்திராத ஒரு சூழலில் பியூசிஎல் அமைப்பைக் கட்ட வேண்டிய பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அதில் நான் சுதந்திரமாக ஈடுபட்டேன். மாணவனாக இருந்தபோது மதுரை மாவட்ட யூனிட்டைக் கட்டும் பணியைச் செய்தேன். குடிமைச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட பலர் அதில் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். நூறு நூற்றைம்பது பேரைக்கொண்ட குடும்பமாக அது உருவானது. வங்கி ஊழியர்கள், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரிந்தவர்கள், தொழிற்சங்கவாதிகள், ஜெகன்நாதன் போன்ற காந்தியவாதிகள், மனித உரிமைத் தளங்களில் தீவிரமாகச் செயல்பட்ட லோகநாதன், ராஜ்குமார், மஹபூப் பாட்சா - அப்போது நிஜங்கள் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தார் - போன்ற வித்தியாசமான நபர்களைக்கொண்ட ஜனநாயக அமைப்பாகப் பியூசிஎல் இருந்தது. நான் அதன் மாவட்டச் செயலாளராக இருந்தேன்.

மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் மனித உரிமை மீறல்களில் குறுக்கிடுவதற்கான வாய்ப்பும் அமைப்புரீதியான செயல்பாடுகளில் அனுபவமும் பயிற்சியும் பெறுவதற்கும் அது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. மாநில அளவில் அறியப்பட்ட மூத்த வழக்கறிஞர் கே. வி. சங்கர் அப்போது பியூசிஎல்லின் தலைவராக இருந்தார். அவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். நக்ஸலைட்கள் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்காக இலவசமாக வாதாடியவர். அவரைப் போன்றவர்கள் பலர் பியூசிஎல்லில் இருந்தது நம்பிக்கை யூட்டுவதாக இருந்தது.

சட்டக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்துகொண்டே இத்தகைய பணிகளில் ஈடுபட்டீர்களா?

முதல் செமஸ்டரோடு கல்லூரிக்குப் போவதை நிறுத்திவிட்டேன். முழுநேர மனித உரிமைப் போராளியாக இருந்தேன். வீட்டிலிருந்து பணம் வரும். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டேன். குடும்பச் சுமை வேறு. பியூசிஎல்லில் மாநில அளவில் பொறுப்பேற்றுக்கொண்டு செயல்பட்டேன். சோ ராமசாமி தலைவர், நான் செயலாளர். அமைப்பு சார்ந்த பணிகளுக்காகத் திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், காரைக்குடி போன்ற ஊர்களுக்குச் சென்றேன். அமைப்பைக் கட்டுவதில் தீவிரமாக இருந்தேன். பல்வேறு விதமான ஆள்களைப் பார்க்க, அவர்களுடன் பழக இதன் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் கையாண்ட வழக்குகளின் மூலம் சட்ட நடைமுறைகள் குறித்த புரிதல் உருவானது. அவற்றிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.

பியூசிஎல் போர்க் குணத்தோடு செயல்பட்ட காலகட்டம் அது. மனித உரிமை சார்ந்த பல முக்கியமான வழக்குகளை நடத்தினீர்கள் அல்லவா?

ஆமாம். மிக முக்கியமான வழக்கு சீவலப்பேரி பாண்டி வழக்கோடு தொடர்புடைய இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தொடர்பான வழக்கு. அப்போது அவர் காவல் துறைத் துணை ஆய்வாளராக இருந்தார். வாடிப்பட்டியில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை அடித்து, உதைத்துச் சித்திரவதை செய்தார். நாங்கள் ஒரு உண்மையறியும் குழு அமைத்து விசாரித்தோம். நாளிதழ்களில் அது பற்றிய செய்திகள் வந்தன. மறுநாளே அவர் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டார். ஒரு வருடம் கழித்துத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாவட்டக் காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராக நியமனம் பெற்றார். 1982இல் தொடரப்பட்ட வழக்கின் மீது 2004இல் தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பினடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஒரு போர்க் குணம் மிக்க குழுவாகத்தான் இயங்கினோம்.

1982இல் காவல் துறை அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் வகையில் இருவார எதிர்ப்பியக்கம் ஒன்றை அனுசரித்தோம். பிவிபி போன்ற தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரை அவற்றில் பங்குபெறவைத்தோம். காவல் துறை சித்திரவதை குறித்த ஒரு கண்காட்சியும் நடத்தினோம். இறுதியாக அக்டோபர் 30, 1982 அன்று ஒரு அமைதிப்பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். நீதிபதி தார்க்குண்டே, கண்ணபிரான் ஆகியோர் உள்படப் பதினெட்டு பத்தொன்பது பேர்வரை வந்திருந்தனர். கட்டபொம்மன் சிலை அருகே முகம்மது அலி தலைமையில் சுமார் முந்நூறு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காவல் துறை அனுமதி கிடைத்திருந்தது. எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அப்போதைய அதிமுக ஆட்சியில் சிவில் உரிமைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்ததைக் குறிக்கும்விதமாக எல்லோரும் வாயில் கறுப்புத்துணி கட்டி அமர்ந்திருந் தோம். பதற்றமடைந்த காவல் துறையினர் தடியடி நடத்தி எல்லோரையும் விரட்டினார்கள். தார்க்குண்டே வைக் கைதுசெய்தார்கள். காவல் நிலையத்தில் அவரை விசாரித்தபோது, அவர் மகாராஷ்டிரா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்பது தெரிந்து அவரை வெளியே அனுப்பச் சொல்லி உத்திரவிட்டார்கள். அவர் வெளியே போக மறுத்தார். அவரைப் பிடித்துத் தள்ளி மூக்குக் கண்ணாடியை உடைத்து பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டார்கள். அது தொடர்பான வழக்கை நாங்கள் எதிர்கொள்ள விரும்பினோம். ஆனால் காவல் துறை அதைத் திரும்பப்பெற்றுக்கொண்டது.

அதற்குப் பிறகு பல பெரிய வழக்கறிஞர்கள் பியூசிஎல் பக்கம் வந்தனர். நானும் சட்டப்படிப்பை முடித்துவிட்டு முழு நேரமாகப் பணிபுரியத் தொடங்கினேன். தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றக் கூடாதென ஒரு நிலைப்பாடு எடுத்தோம். பல நக்ஸலைட் வழக்குகளை நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் குற்றாலம் நண்பர் ஆனார். நக்ஸலைட் வழக்குகளை அவரிடம் எடுத்துச் சென்றேன். வழக்குகளில் அவருக்கு உதவுவேன். என்னை ஒரு மகன்போல நடத்திய மூத்த வழக்கறிஞர் அவர். நக்ஸலைட் சேத்தூர் ஆவுடையப்பன் ராமன் வழக்கில், அவர்களைக் கைவிலங்குடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்ததைப் புகைப்படம் எடுத்தோம். இதை மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தியுடன் பிரசுரித்திருந்தனர். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு எதிராகக் கைதிகளுக்குக் கைவிலங்குப் போடப்படுவதை அம்பலப்படுத்திய நிகழ்வு அது. அந்த வழக்கை நடத்தியவர் அவர்தான். அவரிடம் பயிற்சியெடுத்துக் கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது. மனித உரிமைப் பணி வழக்கறிஞர் பணியைவிடக் கடினமான பணி. இன்னும் ஆழமான தயாரிப்பு தேவை. மகாபலிபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெவ்வேறு நாடுகளில் சட்டத்தைப் பயன்படுத்தி மனித உரிமைப் பணிகளில் ஈடுபடுபவர்களைச் சந்தித்தேன். இங்குள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இருப்பது அப்போது தெரிந்தது.

தொண்டு நிறுவனங்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு மாற அந்த நிகழ்வு காரணமாக இருந்ததா?

அவர்கள் மீதிருந்த வறட்டு எதிர்ப்பு கொஞ்சம் குறைந்தது. என் நெருங்கிய நண்பர் மஹபூப் பாட்சாவைக் கூடல்நகரில் உள்ள என் வீட்டு மாடியை நிஜங்கள் பத்திரிகைக்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தேன். என் குடும்பத்தில் அவரும் ஒருவராக இருந்தார். 84, 85இல் சோகோ அறக்கட்டளையை அமைத்தவர் அவர்தான். சட்டப் பணிகளுக்கான அமைப்பு அது. பாட்சா அந்த அறக்கட்டளையின் பொருளாளர் என்னை அவர்களோடு இணைத்துப் பணியாற்றவைக்க முயன்றனர். அது ஒரு தொண்டு நிறுவனமென்பதால் நான் மறுத்துவிட்டேன்.

80களின் இறுதியில் நுகர்வோர் இயக்கம் வந்தது. ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கக்கூடிய ஒரு முழக்கமாக இருந்தது நுகர்வோர் உரிமை. நுகர்வோர் அமைப்புக்கு நாங்கள் ஆதரவளித்தோம். மாநில அளவில் நல்ல அமைப்பாக உருவெடுத்தது அது. 1993இல் நடை பெற்ற வியன்னா மாநாடு ஒரு முக்கியத் திருப்புமுனை. அங்கே செல்ல எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இரண்டாம் நாள் அந்த மாநாட்டுக்கு நான் போனேன். மனித உரிமைகள் தளத்தை வெவ்வேறு நாடுகளிலுமுள்ள ஜனநாயக சக்திகள், குறிப்பாக லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அங்கெல்லாம் அரசுகளைக் கேள்வி கேட்கும் அளவுக்கு மனித உரிமை அமைப்புகள் பணியாற்றியுள்ளன. அந்தப் பதினைந்து நாட்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போன்றிருந்தது. அரசைப் பதில் சொல்லவைப்பதுதான் மனித உரிமை அமைப்புகளின் பணி, அந்தப் பங்கைச் செலுத்த வேண்டும், அரசைக் கண்காணிப்பதும் ஒரு முக்கியமான பணி, அதை முறையாகச் செய்ய வேண்டுமென்னும் தீர்மானத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன்.

மக்கள் கண்காணிப்பகம் குறித்த சிந்தனை அப்போது தோன்றியதுதான் அல்லவா?

ஆமாம். ஆனால் அதற்குப் பலரது உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்பட்டன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அணுக எனக்குத் தயக்கமாக இருந்தது. எனவே ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பேசினேன். அனைவருமே நல்ல பணி ஆனால் எங்களால் இணைந்து பணியாற்ற இயலாது, வேண்டிய உதவிகளைச் செய்கிறோம் என்றே பதிலளித்தனர். அப்போது நான் மதுரை ஒய்எம்சிஏ தலைவராக இருந்தேன். எனவே ஒய்எம்சிஏவுக்குள்ளிருந்தே கண்காணிப்புக் குழுவைச் செயல்படுத்தலாம் என முடிவுசெய்தேன். ஆனால் அவர்கள் என்னை வெளியே அனுப்பிவிட்டனர். எனவே வேறுவழியின்றி 1995இல் தேவசகாயம், மறைந்த ஃபாதர் அலெக்ஸ் டைமண்ட்ராஜ், மாயா தர்வாலா, ரவிநாயர் ஆகியோர் இணைந்து பெங்களூரில் கூடி ஒரு அமைப்பை ஆரம்பித்தோம். மக்கள் கண்காணிப்பகத்தில் எனது முதல் பணி கண்காணிப்புப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர். நிறுவனராக அலெக்ஸ் டைமண்ட் ராஜ் இருந்தார். எனக்குப் பக்க பலமாக இருந்தவர் தேவசகாயம்.

என்னென்ன மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டுமென முடிவுசெய்தீர்கள்?

இரண்டு முக்கியமான தீர்மானங்களை எடுத்தோம். எங்கள் பணிகள் தமிழ்நாடு சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டுமென்பது ஒன்று. இரண்டாவது மதுரையை மையமாக வைத்து அமைப்பு செயல்பட வேண்டும் என்பது. அரசைக் கண்காணித்து ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றும்படி அதன் அமைப்புகளை நிர்ப்பந்திப்பதுதான் கண்காணிப்புப் பணியின் நோக்கம். மனித உரிமை சார்ந்த ஒரு கலாச்சாரத்தைப் பொது வெளியில் உருவாக்க நினைத்தோம். 1995 ஆகஸ்ட் 31இல் கொடியங்குளம் சம்பவம். இதன் பின்னணியில் செயல்படத் தொடங்கினோம். சாதிய வன்முறைகளில் எரிந்துகொண்டிருந்த தென் தமிழகம் அதற்குப் பொருத்தமான இடமாக இருந்தது. பலர் எங்களைத் தலித் அமைப்பா எனக் கேட்கிறார்கள். யார் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களுக்காக நாங்கள் போராடுகிறோம். தலித் மக்கள் பக்கம் நாங்கள் நிற்க வேண்டிய காலகட்டம் இது. எஸ்சி/எஸ்டி சட்டம் 1989இல் கொண்டுவரப்பட்டது. 1993இல் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. நாங்கள் 1995-96இல் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துப் பரிசீலித்தோம். எங்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அதுபோல் களத்திலிருந்து நேரடியாகப் பெற்ற அனுபவங்களிலிருந்தே தமிழகத்தில் சாதி மோதல்கள் என்னும் நூலை வெளியிட்டோம்.

சிறு குழுவாக இருந்துகொண்டு தமிழகம் தழுவிய அளவிலான மனித உரிமைப் பணிகளைச் செய்ய முடியாது என்பதால் அதற்கான ஆள்களை உருவாக்க 1996இல் மனித உரிமைத் தலையீட்டுப்பணி பயிற்சிகள் நடத்தினோம். அத்துமீறல்களைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்தல் மட்டும் போதாது, சட்டத்தைச் செயல்பட வைக்க வேண்டும், அதற்கான ஆற்றல் அமைப்புக்கு ஊட்டப்பட வேண்டுமென விரும்பினோம். அதை நோக்கமாகக் கொண்டு ஆறேழு பயிற்சிப்பட்டறைகளை நடத்தினோம். எங்களுக்கு நாங்களே போட்டுக்கொண்ட விலங்கு சட்டரீதியான தீர்வுகளுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது என்பது. நாங்கள் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களாக இருந்ததால் எல்லா விஷயங்களுக்கும் சட்டரீதியான தீர்வைத் தேடக்கூடிய ஒரு மனநிலை உருவாகிவிடும். மனித உரிமை சார்ந்த பணி மக்கள் பங்கேற்போடு செய்யக் கூடியது. பொதுச்சமூகத்தின் விழிப்புணர்வு முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். எனவே நாங்கள் உண்மையறிதல், அது தொடர்பாக அறிக்கை தயாரித்து அவற்றைச் சமூகத்தின் பார்வைக்கு வைத்தல், அதைப் பத்திரிகைகளில் வெளியிடுதல் என எங்கள் பணிகளை வடி வமைத்துக்கொண்டோம்.

சட்டரீதியாகத் தீர்வுகளுக்கு முக்கியத்துவமளிக்காததன் விளைவுகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

உண்மைகள் உங்களைக் கொந்தளிக்கச் செய்கின்றன. எஸ்சி/எஸ்டி சட்டம் பயனற்றதாக இருக்கிறது என்பதை நாங்கள் அம்பலப்படுத்தினோம். அதன் எதிர்வினையாக இரண்டு விஷயங்கள் நடந்தன. ஒரு மின்னஞ்சல் வந்தது. அமெரிக்க ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சிலிருந்து வந்த மின்னஞ்சல் அது. இந்தியப் பெயர் கொண்ட பெண் ஒருவர் எஸ்சி/எஸ்டி சட்டம் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அவர் ஏதாவது செய்தால் நல்லது என்னும் எண்ணத்தில் உடனே பதிலளித்தோம். இதே நேரத்தில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலும் இதே விஷயத்திற்காக எங்களை அணுகினார்கள். அவர்களுக்கும் விவரங்கள் அனுப்பினோம். பொதுவாகச் சமூக, கலாச்சார பொருளாதார உரிமைகள் விஷயத்தில் ஆம்னெஸ்டி இறங்கமாட்டார்கள். இதில் அவர்கள் இறங்கியது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. சாதி மோதல் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார்கள். 1997இல் மின்னஞ்சல் அனுப்பிய ஸ்மிதாவும் ஆராய்ச்சிக்காக வந்தார். தமிழகத்திலிருந்த அனைவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தினோம். தலித் விவகாரங்களை சர்வதேசக் கவனப்படுத்துவதற்கு அது ஒரு வாய்ப்பாக இருக்குமென்பதால் எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைவரையும் அறிமுகப்படுத்தினோம். தமிழகம், மகாராஷ்டிரா, பீஹார் மூன்று மாநிலங்களையும் ஆய்வுக்கெடுத்துக்கொண்டு அதனடிப்படையில் அவரால் எழுதப்பட்டதுதான் நொறுக்கப்பட்ட மக்கள் என்னும் அந்தப் புத்தகம். கள அனுபவங்களிலிருந்து உருவாக்கப்படும் அறிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கத்தை உருவாக்க முடியுமென்பதற்கு இது சான்று.

1998 ஜூலையில் இந்தப் புத்தகம் சார்ந்த பரிந் துரைகளை எங்களை எழுதி அனுப்பச் சொன்னார்கள். நாங்கள் சம்மதிக்கவில்லை. ஏனெனில் இங்கே மேற் கொண்ட ஆராய்ச்சிக்கு நியூயார்க்கில் இருந்தபடி பரிந்துரைகள் தயாரிப்பது சரியாக இருக்காது எனவே இங்கே வந்து ஆள்களைச் சந்தித்துப் பின்னர் பரிந்துரைகளை உருவாக்கினால் அது தரமானதாக இருக்குமென நாங்கள் கூறினோம். ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் நியூயார்க்கைவிட்டு வெளியே வந்து பரிந்துரைகள் எழுதியதில்லை. ஆனால் நீங்கள் சொல்வது சரியாக இருப்பதால் நான் அனுமதி கேட்டு வருகிறேன் என்றார் ஸ்மிதா. ஜூலை 10, 11 பெங்களூரில் வைத்துக் கூட்டம் நடந்தது. பரிந்துரைகளைத் தயாரித்தார். அந்தக் கூட்டத்தில் அனைவரும் கூடியிருந்தனர். அப்போது, “தலித் உரிமைகள் அல்லது மனித உரிமைகள் என்று பார்க்கக்கூடிய ஒரு அரசியலமைப்பை நாம் ஏற்படுத்தவில்லை. சாதியரீதியான அரசியலமைப்பைத் தான் நாம் உருவாக்கியுள்ளோம். தலித் உரிமைகள், மனித உரிமைகள் என்னும் முழக்கத்தின் பெயரில் தேசிய அளவிலான பிரச்சாரம் நடத்த வேண்டியது அவசியம் இல்லையா?” என்று கேட்டேன். அனைவரும் சம்மதித்தனர். அக்டோபரில் அது தொடர்பாக ஒரு கருத்துரு தயாரித்தோம். 1998 டிசம்பரில் பணியைத் தொடங்கினோம். அப்படித்தான் தேசிய அளவில் தலித் மனித உரிமைகளுக்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இன்று சர்வதேச தலித் ஒற்றுமை மையம் என்னும் அமைப்பு உள்ளது. ஐநா சபையில் வேர்ல்ட் கான்பரன்ஸ் ஆன் ரேஸிசம், டர்பன் மாநாட்டுக்கான பணிகள் எல்லாமே இந்தச் சிறு பணியிலிருந்து (நொறுக்கப்பட்ட மக்கள்) உருவான பணிகள்தாம். மனித உரிமைப் பிரச்சினைகளைப் பரவலான முறையில் கொண்டுசென்றால், முறையாக ஆராய்ந்து முறையாக ஆவணப்படுத்தினால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்னும் பாடம் எங்களுக்குக் கிடைத்தது.

உலக அளவில் தலித் பிரச்சினைகளைக் கொண்டு சென்றதால் இங்கே என்ன விளைவுகள் ஏற்பட்டன?

சாதி, தீண்டாமை தொடர்பாக ஐநா போன்ற அரங்குகளில் பேசக் கூடாது, அப்படிப் பேசுபவர்கள் வாயை அடைக்க வேண்டுமென்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. 1993இல் இரண்டாம் உலக மாநாட்டில் மூன்று விஷயங்கள் குறித்த உரையாடல்களை அதிகாரவர்க்கம் ஒடுக்க முயன்றது. ஒன்று இலங்கைப் பிரச்சினை, இரண்டு காஷ்மீர் பிரச்சினை, மூன்றாவது தீண்டாமை. தீண்டாமையை மறுக்கும் அளவுக்கு அதிகாரவர்க்கத்தின் அந்தக் குரல் இருந்தது. அந்தக் குரலுக்குப் பின்னால் சாதியும் இருந்தது. அரசாங்கத்தில் பெரும்பான்மையானவர்கள் உயர்வகுப்பினர். தீண்டாமை குறித்த பிரச்சினைகள் வெவ்வேறு மட்டங்களில் கவனம் பெற்றுவிடக் கூடாது என அவர்கள் செயல்பட்டனர். அவர்களே சில தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி அங்கீகாரம் கொடுத்து சர்வதேச அரங்குகளில் உண்மைகளுக்கு மாறாகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர். 1998இலிருந்து 2001 வரை நடந்த வேலைகளின் காரணமாக இந்தப் பிரச்சாரம் உடைபட்டது. சாதியப் பாகுபாடு ஒரு மனித உரிமை மீறல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தியா ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் சாதிய கட்டமைப்பு இவற்றையெல்லாம் மீறித் தீண்டாமையைப் பிரதிபலிக்கிறது என்னும் உண்மையைக் கொண்டுசெல்ல முடிந்தது. அவ்வுலக மாநாட்டில் இரண்டு விஷயங்கள் முன்னணியில் நின்றன. ஒன்று பாலஸ்தீனப் பிரச்சினை. அடுத்தது சாதியப் பாகுபாடு. சர்வதேசச் சமுதாயம் சாதியப் பாகுபாடு ஒரு மனித உரிமை மீறல் என்று இவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொண்டது உண்மையில் ஆச்சரியமானது. சித்திரவதை ஒரு மனித உரிமை மீறல் என்ற ஒப்புதல் அளிப்பதற்குச் சர்வதேசரீதியில் 20 ஆண்டுகள் பணியாற்ற வேண்டியிருந்தது. இந்திய அரசாங்கம் எதிர்மறையாகச் செயல்பட்டது. Caste based discrimination பற்றி யாருமே பேசக் கூடாது என முடிவெடுத்தது. இனப்பாகுபாட்டுக்குச் சமமானது சாதிப் பாகுபாடு என்னும் எங்கள் கூற்றை எதிர்ப்பதாக அரசாங்கம் கூறியது. இனப்பாகுபாட்டிற்கான சட்டப்படி சாதியப் பாகுபாடும் இனப்பாகுபாட்டிற்குள் அடங்கும். சர்வதேசரீதியில் இங்குள்ள பிரச்சினைகளைக் கவனப்படுத்துவதால் அரசாங்கம் கோபம் கொண்டது. இந்திய அரசியலமைப்பே தீண்டாமையைப் போக்குவதற்காக இட ஒதுக்கீட்டை அமல் செய்துள்ளபோது, இங்கே வரும் சர்வதேச நிறுவனங்கள் நம் அரசியலமைப்புக்கு மாறாக இட ஒதுக்கீடு இல்லாமல் வேலைவாய்ப்பு அளிப்பது முறைகெட்டதாகிவிடும். நம் நாட்டை நாம் கண்காணிக்காமல் நமது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தைக் கண்காணிக்காமல் மாற்றங்கள் வராது. எனவே கண்காணிப்பு அடித்தட்டிலிருந்து நிகழ்த்தப்பட வேண்டியது அவசியம். சாதியப் பாகுபாடு தேசியப் பிரச்சினை அல்ல, சர்வதேசப் பிரச்சினை. வெவ்வேறு வகையான இனப்பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு நமக்குக் கிடைக்கும்போதுதான் இது powerful international lobbyயாக மாறும்.

எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனித உரிமை இயக்கங்களின் வளர்ச்சியும் இந்தக் காலகட்டத்தில் முக்கியமான ஒன்று. அவை இச்சட்டத்தைச் செயல்படுத்துவதில் எந்தவகையில் பங்குவகிக்கின்றன? அவற்றின் செயல்பாட்டால் என்ன மாற்றம் வந்துள்ளது?

மனித உரிமை இயக்கங்கள் இச்சட்டத்தை உணரவே காலதாமதமானது. மனித உரிமை இயக்கங்கள்தாம் எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்குக் காரணமென்கிற மாதிரியான ஒரு கருத்து இருக்கிறது. இச்சட்டம் கொண்டுவரப்பட இந்த இயக்கங்கள் எதுவும் செய்யவில்லை. அவை அதிகமாக மனித உரிமை சார்ந்த பணிகளைத்தாம் மேற்கொண்டன. பியூடிஆர் (Peoples Union for Democratic Rights), சிபிடிஆர் போன்ற சில அமைப்புகள் தலித்துகளின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தன. தலித் இயக்கங்களின் பங்களிப்புகூட அதிகமில்லை. தீண்டாமைக் கொடுமையைப் பார்த்துக் கொந்தளித்த பி.எஸ். கிருஷ்ணன், சங்கரன் போன்ற அறிவுஜீவிகள் சிலர்தான்-அவர்கள் தலித்துகளாக இல்லாவிட்டாலுங்கூட - இச்சட்டம் இயற்றப்படக் காரணமாக இருந்தவர்கள். 1989இலேயே இச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் 1998இல்தான் அரசாங்கம் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தொகையை ஒதுக்கியது. இந்தச் சட்டத்தில் எவ்வளவோ நுட்பங்கள் இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லை. மத்திய சமூகநலத் துறை அமைச்சராக இருந்த மீராகுமார்தான் தேசிய அளவிலான ஒரு ஆய்வை நடத்தினார். அதுகூட அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்தது.

o

வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் மக்கள் கண்காணிப்பகத்தின் பங்கு முக்கியமானது. அந்தப் பிரச்சினை உங்கள் கவனத்துக்கு எப்போது வந்தது?

காவல் துறை வன்முறை, காவல் நிலைய மரணம், போலி மோதல் சாவுகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம். 1996இல் மைசூர் சிறையிலிருந்து அருள்தாஸ் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். கொளத்தூர் காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள்மீது வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது தமிழக, கர்நாடகக் கூட்டு அதிரடிப்படைகளால் நடத்தப்பட்ட சித்திரவதைகளைப் பற்றி விவரித்திருந்தார். அதிரடிப்படையினரால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் கண்காணிப்பகம் விரிவாக விசாரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டிருந்தது அக்கடிதம்.

உண்மையறியும் குழு ஒன்றை அமைத்து அந்தப் பகுதிக்கு அனுப்பினோம். முதலில் ஒரு சிறு குழுவை அனுப்பினோம். தொடக்க கட்ட விசாரணையில் அந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவில் காவல் துறை அத்துமீறல்களும் சித்திரவதைகளும் அரங்கேற்றப்பட்டிருப்பதை அறிந்து பிறகு ஒரு பெரிய குழுவை அனுப்பினோம். 40, 50 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோரைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்களைப் பேசவைக்கவே ஓரிரு நாள்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் பாதிப்பின் ஆழத்தைப் புரிந்துகொண்டோம். ஒரே இரவுக்குள் அவர்களுக்கு எங்கள்மீது எப்படி நம்பிக்கை வரும்? அந்த மௌனத்தை எப்படியாவது உடைக்க வேண்டுமென விரும்பினோம். அதற்காகச் சித்திரவதைகளுக்குள்ளானோர் பங்குகொள்ளத் தக்க வகையில் மாநாடு ஒன்றைக் கூட்ட ஏற்பாடு செய்தோம். வழக்கம்போல் போலீஸ் அனுமதிக்க மறுத்தது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு மாநாடு நடந்தது. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் நானூறு பேர்வரை அதில் பங்கேற்றனர். அங்கே முதல் ஆளாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகப் பேசியவர் தங்கம்மாள். டிஜிபி தேவாரத்தின் பாலியல் வன் முறைக்குப் பலியான சகோதரி அவர். அப்போது நானே வெட்கப்படும்படி மனித உரிமைகளுக்கெதிரான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதாயிற்று. பாதிக்கப்பட்டவர்கள் மௌனமாக இருந்ததைப் பார்த்து நான் அதற்கான காரணத்தைக் கேட்டேன். யாரும் பயப்பட வேண்டாமெனத் தைரியம் கொடுத்தபோது மாநாட்டு அரங்கினுள் முன்வரிசையில் இரண்டு அதிரடிப்படை அதிகாரிகள் இருப்பதாகத் தெரிவித்தனர். நாங்கள் அவர்களிடம் அது பாதிக்கப்பட்டவர்களுக்கான மாநாடு, இங்கே இருப்பது மாநாட்டின் நோக்கத்திற்கு எதிரானது என்பதைச் சொல்லி அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் எங்கள் வேண்டுகோளை ஏற்கவில்லை. எனவே நாங்கள் அவர்களைக் கழுத்தைப் பிடித்துக் கட்டாயமாக வெளியேற்றினோம். ஒருவகையில் பார்க்கப் போனால் இதுவும் மனித உரிமைகளுக்கு எதிரான செயல்தான். ஆனால் அதற்குப் பிறகு மக்கள் தைரியமாகப் பேசத் தொடங்கினர்.

18 மாதங்களாக அந்த அப்பாவி மக்கள்மீது சட்டத்திற்குப் புறம்பான, கொடூரமான வன்முறையை ஏவிவிட்டது தமிழக, கர்நாடகக் கூட்டு அதிரடிப்படை. சித்திரவதைகளை விதவிதமான முறைகளில் அரங்கேற்றுவதற்காக ஒரு ‘வொர்க்ஷாப்’பே நடத்தியிருக்கிறார்கள். அங்கே ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி அனைவரையும் நிர்வாணமான நிலையில் வட்டமாகச் சுவரைப் பார்த்தபடி உட்கார வைப்பார்கள். நுனிக்காலில்தான் உட்கார வேண்டும். அவர்களிலிருந்து ஒருவரைத் தேர்வுசெய்து மையத்திற்குக் கொண்டுவந்துவிடுவார்கள். டென்னிஸ் பேட் போன்ற பிளைவுட் பலகையில் ஆணி அடித்து அதைக்கொண்டு அவரது பின்பக்கத்தில் அடிப்பார்கள், எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பார்கள். மின்சாரத்தின் அளவைப் பரிசோதிப்பதற்கு ஆணி அடிக்கப்பட்ட பலகையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அடி உதைகளால், எலக்ட்ரிக் ஷாக்கால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் எங்களது ஏற்பாட்டில் இன்றுவரையில் பிஸியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து சிகிச்சை எடுத்தாக வேண்டிய அளவுக்கு அவர்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களும் பெண்களுமாய் 127 பேர் தடாச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மைசூரில் தடா நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்த வழக்குகளை நடத்த வேண்டிய பொறுப்பையும் மக்கள் கண்காணிப்பகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

எங்களுடைய பணி அடிப்படையில் பலரது பங்கேற் போடும் நடைபெற்றுவரும் ஒரு கூட்டுப் பணி. பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி. குணசேகரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தோழர்கள் குறிப்பாக வழக்கறிஞரும் எழுத்தாளருமான பாலமுருகன், மதுரை சோகோ அறக்கட்டளை போன்ற மனித உரிமை அமைப்புகள் எனப் பல தனிநபர்களும் இயக்கங்களும் இணைந்து மேற்கொண்டிருக்கும் பணி இது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசிடமிருந்து 89 குடும்பங்களுக்காக 2.89 கோடி ரூபாய் நஷ்டஈடாகப் பெற்றுத் தந்ததை எங்களுக்குக் கிடைத்த ஒரு சிறு வெற்றி எனச் சொல்லலாம். தவிர அந்தப் பகுதியிலேயே மறுவாழ்வு மையம் ஒன்றை அமைத்திருக்கிறோம். பிஸியோதெரபிஸ்ட்களைக் கொண்ட நடமாடும் மருத்துவக் குழுக்களை உருவாக்கிக் காவல் துறைச் சித்திரவதையால் ஊனப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களைச் சிறிது சிறிதாக அதிலிருந்து மீட்க முயல்கிறோம். தேவையை ஒப்பிட்டால் நாங்கள் செய்வது மிகச் சிறிய பணி. ஆனால் எடுத்துக்காட்டான பணி எனச் சொல்ல முடியும். அந்த மக்களுக்கு ஒரு நிலையான, தரமான மருத்துவ உதவி கிடைக்கப் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம்.

வீரப்பன் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? காவல் துறையின் கூற்றை நீங்கள் மறுத்திருக்கிறீர்கள் அல்லவா?

வீரப்பன் சாவை மோதல் சாவு என்று அதிரடிப்படை சொன்னதை நாங்கள் பகிரங்கமாக மறுத்தோம். வேறுவிதத்தில் நாங்கள் மதிக்கக்கூடிய விஜயகுமார் போன்ற காவல் துறை அதிகாரிகளை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. மோதல் சாவுகள் தொடர்பான கண்காணிப்புப் பணிகளை நாங்கள் வீரப்பன் கொல்லப்பட்ட நிகழ்விலிருந்துதான் தொடங்கினோம். குடிமைச் சமூகத்தின் மீது சட்ட விரோதமாக நிகழ்த்தப்பட்டுவரும் சித்திரவதைகளைக் கண்காணிப்பதும் தடுப்பதும் பாதிக்கப்பட்டோருக்குச் சட்டபூர்வமான நிவாரணம் கிடைக்கச் செய்வதும் தவறிழைப்பவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்துவதும் அடிப்படையான மனித உரிமைப் பணி. ஆனால் இதைப் பல தரப்பினரின் கூட்டுழைப்பால் மட்டுமே சாதிக்க முடியுமென்பதால் வெவ்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெற முயன்றோம். தமுமுக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்ற அமைப்புகளை இணைத்துக்கொள்ள முடிவெடுத்தோம். மக்கள் கண்காணிப்பகம் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய பத்து இடங்களில் 40, 50 ஆர்வலர்களுக்குச் சித்திரவதையைக் கண்காணிப்பது குறித்த பயிற்சிகள் அளித்தோம். 2001இலிருந்து 2005 வரை கலைக்குழுக்களை வைத்து வெவ்வேறு மட்டங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டோம். சித்திரவதை என்னும் வார்த்தையைப் பரவலாக்கி அதற்கான எதிர்ப்பையும் பரவலாக்கிய ஒரு பணி இது. இதன் பயனாகத் தேசிய அளவில் சித்திரவதையைத் தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

சித்திரவதை என்பதை அரசு சார்ந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுபவை என்னும் பொருளில்தான் விளக்குகிறீர்களா?

பகிரங்கமாக, சட்டபூர்வமாக என்னென்ன வகைகளில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அவை எல்லாவற்றையும் ஒரே பொருளில்தான் விளங்கிக்கொள்கிறோம். சித்திரவதை என்னும் வரையறைக்குள் குடும்ப வன்முறையும் கொண்டுவரப்பட வேண்டுமென்பதுதான் எங்களுடைய விருப்பம். ஒரு முழுமையான பெண்ணியப் பார்வையில் பெண்களுக்கெதிரான வன்முறையும் ஒருவகைச் சித்திரவதையே. ஆனால் சட்டபூர்வ வரையறையில் அப்படி இல்லை. சித்திரவதை என்பதை ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் வேண்டிய தேவை இருக்கிறது. இப்போதைக்கு நாங்கள் அரசு, அதிகாரவர்க்க நிறுவனங்களால், காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகளைக் குறித்தே கவனம் செலுத்துகிறோம். மனித உரிமை மீறல்களை மட்டும் கண்காணித்துக்கொண்டிருப்பதல்ல ஒரு மனித உரிமை அமைப்பின் பணி. எங்களுக்குச் சமீபத்தில் கிடைத்த படிப்பினை, நீதிமன்றத் தீர்ப்புகளுங்கூடக் கண்காணிக்கப்பட வேண்டியவை என்பதை உணர்த்தியது. மனித உரிமை நிறுவனங்களைக் கண்காணிப்பதுங்கூட அவசியம்.

தேசிய மனித உரிமை ஆணையம், பெண்களுக்கான தேசிய ஆணையம், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம், குழந்தைகளின் உரிமைகளுக்கான ஆணையம் போன்ற அனைத்து அமைப்புகளும் மனித உரிமைகள் என்னும் பொருள் சார்ந்து இயங்குபவை. இன்று தமிழகத்தில் சுமார் 150 அமைப்புகள் இயங்குகின்றன. தேசிய மனித உரிமை ஆணையம் 2002இன் குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியது போன்ற சில மகத்தான பணிகளைச் செய்திருக்கிறது. டர்பன் மாநாட்டில் சாதியும் விவாதப் பொருளாக இருக்க வேண்டுமென்று சரியான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் இவையெல்லாம் போதாது. எனவே அவற்றையும் கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஜெனிவாவில் உள்ள International Coordination Committe for National Human Rights Institutions முன் நமது அரசு, தேசிய மனித உரிமை ஆணையம் தனது ஏ கிரேடைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மனுச்செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் பி கிரேடாகிவிடுவார்கள். அப்படி நடக்குமானால் ஐநா சபையில் எந்த விவாதத்திலும் தேசிய மனித உரிமை ஆணையம் பங்கேற்க முடியாது. இது நாட்டுக்குப் பெரிய அவமானம்.

தேசிய மனித உரிமை ஆணையத்தை நீங்கள் என்னவாகப் பார்க்கிறீர்கள்?

தேசிய மனித உரிமை ஆணையம் சர்வதேசரீதியிலான மனித உரிமைக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறதா என்று பார்க்க வேண்டும். 1993இல் உருவாக்கப்பட்ட தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மரண தண்டனை சார்ந்து ஒரு திட்டவட்டமான நிலைப்பாடு கிடையாது. மிக மிக மோசமான நிலை இது. நாங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை குறித்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிலைப்பாடு என்ன, அதை ஒழிப்பதற்கு அந்த அமைப்பு என்ன செய்திருக்கிறது, அது குறித்த ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் எப்போது நடந்தது, அதன் நடவடிக்கைக் குறிப்புகள் ஆகிய தகவல்களை அளிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.

இது போன்ற விவகாரங்களில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க முயல்கிறோம். அதன் அடிப்படையில் கேள்விகளை எழுப்பத் தீர்மானித்தோம். தேசிய மனித உரிமை ஆணையத்தில் வெவ்வேறு வகையான உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவில் மூன்று பேர் நீதிபதிகள் எனும்போது அதில் வேறுபட்ட பார்வைகள் சாத்தியமில்லை.

ஐநா சபையின் இனப்பாகுபாடுகளுக்கு எதிரான அமைப்பு சாதி குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது அல்லவா?

ஐநா சபையின் நவநீதம் பிள்ளை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சாதிய சமுதாயத்தைப் பற்றிப் புரிந்துவைத்திருப்பவர். ஐநா சபையின் மனித உரிமை ஆணையர் என்னும் முறையில் சாதிப் பாகுபாட்டை அடையாளம் கண்டு 2009இல் பகிரங்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். உண்மையில் சாதிப் பாகுபாடு பற்றிய மௌனத்தை முதலில் கலைத்தது டர்பன் மாநாடுதான். அதைத் தொடர்ந்து வெவ்வேறு மட்டங்களிலும் நிலவிவந்த மௌனம் உடைக்கப்பட்டது. ஆணையரே பேசக்கூடிய அளவுக்கு அது ஒரு வெளிப்படையான பிரச்சினையாக வளர்ச்சியடைந்தது. எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவைதான். நவநீதம் பிள்ளையின் இந்த நடவடிக்கை காரணமாக நமது நாடு அவர்மீது கோபமாக இருக்கிறது. சர்வதேசப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் கிடைக்குமெனக் காத்திருக்கும் நமது நாட்டின் நலனுக்கு எதிராக ஒரு ஹை கமிஷனர் பேசுகிறார் என இதைப் பார்க்கிறார்கள். ஆனால் அவர் துணிச்சலான பெண்மணி.

போலி மோதல் சாவுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காவல் துறை அதிகாரிகள் அதற்குத் தயங்குவதே இல்லையே?

என்கவுன்டர் சாவு என்பது ஒரு சீரியஸான விஷயம். என்கவுன்டர் குறித்து இங்கு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. மோதலில் கொல்லப்படும் நபர் கிரிமினலா இல்லையா என்பதிலிருந்து இந்த விஷயத்தை அணுகுகிறார்கள். குற்றம் செய்த ஒருவர் கொல்லப்படுவது நியாயமென்னும் பார்வை இருக்கிறது.

அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியதும் அவர்களைத் தண்டிக்க வேண்டியதும் நீதிமன்றம்தான். காவல் துறை அதற்கான சட்டரீதியிலான அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் காவல் துறை தொடர்ந்து சட்ட விரோதமான முறையில் போலி மோதல்கள் மூலம் பலரைக் கொன்றுகொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. மாறாகச் சட்டவிரோதமான காரியங்களுக்காக அவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கிறார்கள். இந்த அரசின் போக்கு மட்டுமல்ல முந்திய அரசின் போக்கும் அப்படித்தான் இருந்தது. வீரப்பன் அதற்கொரு சிறந்த உதாரணம். தமிழகக் காவல் துறை அதிகாரிகளுக்குள் ஒரு தத்துவம் நீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்காப்பைக் காரணமாகக் காட்டி யாரையும் சுட்டுக் கொன்றுவிடலாம் என்பதுதான் அது. ‘தேவார’க் கலாச்சாரம் அது. இதை இன்றைய காவல் துறை அதிகாரிகள் சிலர் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதிரடிப்படையில் பணிபுரிந்தவர்கள் வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் காவல்நிலையப் பணிகளுக்குத் திரும்பியபோது அந்தக் கலாச்சாரம் பெரிய அளவில் வளரத் தொடங்கியது. காட்டிலிருந்து இரட்டைப் பதவியுயர்வு பெற்று வெளியில் வந்தவர்கள் துப்பாக்கிகளைக் கையாள்வதில் திறமைசாலிகளாக இருந்தனர்.

1993 இலிருந்து 1996 வரை காட்டில் இருந்தவர்கள் குடிமைச் சமூகப் பணிகளுக்குத் திரும்பியபோதும் தம் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அதிரடிப்படையில் சாதாரணக் காவலராக இருந்தவருக்கு இரட்டைப் பதவியுயர்வு வழங்கி இங்கே காவல் துறை ஆய்வாளராக நியமிக்கிறார்கள். அங்கே இன்ஸ்பெக்டராக இருந்தவர் இங்கே காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர். இப்போது ஏராளமான மோதல் சாவுகள், காவல்நிலைய மரணங்கள், சட்டவிரோதக் காவல்கள், சித்திரவதைகள். இவற்றைச் செய்பவர்கள் யார்? இவை தேவாரம், விஜயகுமார் தலைமையில் செயல்பட்ட முன்னாள் அதிரடிப்படையினரால் மேற் கொள்ளப்படுபவை. அவர்களிடம் ஒரு பொதுக் கருத்தியல் இருக்கிறது. அத்துமீறல்களுக்கு, போலி மோதல் சாவுகளுக்கு, காவல்நிலைய மரணங்களுக்குச் சாதகமான கருத்தியல் அது. எல்லாவற்றையும் ஆராய்ந்தால் நீதித் துறை தொடர்பான சில கசப்பான உண்மைகள் வெளிவரக்கூடும். மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எத்தனை பேரை நீதிமன்றங்கள் தண்டித்திருக்கின்றன? ஒரு சதவிகிதம்கூட இல்லை. இது இன்றைய எதார்த்தம். மனித உரிமை இயக்கங்கள் கடைசிவரை வழக்கை நடத்துவதே பெரிய வெற்றி என்றாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் எதிராளிகளுடன் சமரசம் செய்துகொண்டுவிடுகிறார்கள். பலர் பயமுறுத்தப்படுகிறார்கள். சாட்சியமளிக்கத் தயாராக இருப்பவர்கள் மிகமிகக் குறைவானவர்கள்தாம். குற்றத்தை நிரூபிக்கக் குற்றத்தின் பின்னணி, நோக்கம், சாட்சியங்கள், தடயங்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதில் அரசுத் தரப்பினர் மேற்கொள்ளும் விசாரணை, புலனாய்வு நடை முறைகளின் பலவீனம் குற்றவாளிகளுக்குச் சாதகமாகிவிடுகிறது. சுலபமாக விடுதலை ஆகிவிடுகிறார்கள்.

வெவ்வேறு மட்டங்களில் சட்டத் துறை, காவல் துறை சார்ந்தவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக்கொடுக்க முடியுமென்னும் நம்பிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு என மிரட்டி இந்த எதார்த்தத்தைப் பேசுபவர்களின் வாயை அடைத்துவிட முடியாது. இது மிக வெளிப்படையான எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

என்கவுன்டர் விஷயத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டுமென்ற விதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? காவல் துறை அதைப் பொருட்படுத்துவதே இல்லையே?

ஆந்திராவில் ஏபிசிஎல்சி என்னும் அமைப்பு 1998ஆம் ஆண்டு நீதிபதி வெங்கடாசலையா தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தபோது ஒரு வழக்குத் தொடர்ந்தார்கள். எங்கள் மாநிலத்தில் வருடத்திற்குச் சராசரியாக 380 பேர் சட்டவிரோதமாகக் கொல்லப்படுகிறார்கள். இதை விசாரிக்க நீங்கள் வர வேண்டுமென்றார்கள். எனவே ஒரு குழு வந்தது. வந்த குழுவையே அடிக்க வந்தனர். குழுவால் புகார்தாரர்களைப் போலீஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. எனவே அதன் இறுதியில் 1998இல் முதன்முறையாகத் தேசிய மனித உரிமை ஆணையம் என்கவுன்டர் குறித்துச் சில வழிகாட்டும் நெறிகள் உருவாக்கியது. 2002 டிசம்பர் 12இல் அதில் சில மாற்றங்களைச் செய்தது. ஒவ்வொரு என்கவுன்டருக்குப் பிறகும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி தானே அந்த என்கவுன்டரை நடத்தியதாக உரிமை கோருவது வழக்கமாக இருந்தது. விருது கிடைக்கும் என்பதுதான் காரணம். எனவே யாரெல்லாம் உரிமை கோருகிறார்களோ அவர்களுக்கு எதிராக இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 302இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டுமெனப் பரிந்துரைத்தது தேசிய மனித உரிமை ஆணையம். இப்போது என்கவுன்டரில் ஈடுபடும் அதிகாரிகள் தற்பாதுகாப்புக்காகச் சுட்டதாகச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முயல்கிறார்கள்.

கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினர் யாராவது அந்த இறப்பில் தங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது என்று புகார் கொடுத்தாலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். எனவே முதலில் புகார் பதிவுசெய்ய வேண்டும். நேற்று இரவு பதினோரு மணிவரைக்கும் என்கவுன்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாயும் எங்கள் வழக்கறிஞர்களும் புகார் மனுவோடு காத்திருந்தனர். வெள்ளைத்துரைதான் காவல்நிலையத்திலிருந்தவர். நெல்சன் என்ற இன்ஸ்பெக்டரும் இருந்தார். புகாரை வாங்க மறுத்தார்கள். அங்கிருந்து 12கிலோ மீட்டர் தூரத்தில்தான் உயர் நீதிமன்றம் இருக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கொடுக்கலாம். ஆனால் முதல் தகவல் அறிக்கையைக் காவல்நிலையத்தில் மட்டும்தானே பதிவுசெய்ய முடியும்? பிறகு புகாரை மின்னஞ்சலில் அனுப்பினோம். காவல்நிலையத்தில் புகார் பதிவுசெய்த பின்பு மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து அந்தக் கூற்றில் உண்மை இருக்கிறதா என விசாரிக்க வேண்டும். இவையெல்லாம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள். அதோடு இந்த விசாரணை முடியும்வரை அந்தக் குறிப்பிட்ட அதிகாரிகளுக்குப் பதவி உயர்வோ விருதோ தரப்படக் கூடாது என்கிறது அந்த வழிகாட்டுதல்.

இந்த அமைப்புக்கு வெள்ளைத் துரை மாதிரியான அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். ஆறு மாதத்திற்கொருமுறை மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய அறிக்கை மாநிலக் காவல் துறைத் தலைவரால் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பப்பட வேண்டு மென்பது ஒரு வழிகாட்டு நெறி. எந்த ஆட்சியில் எந்தக் காவல் துறைத் தலைவர் அவ்வாறு அனுப்பியிருக்கிறார்? சொல்லச் சொல்லுங்கள். சரி இவர்கள்தான் அனுப்பவில்லை. தேசிய மனித உரிமை ஆணையமாவது அதைப் பற்றிக் கேட்க வேண்டாமா? போன வருடம் செப்டம்பரில் தேசிய மனித உரிமை ஆணையத்தால் நடத்தப்பட்ட சந்திப்பில் இந்தக் கேள்வியை எழுப்பினோம். ‘என்னங்க வழிகாட்டு நெறி?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள். அதனால்தான் இந்த அமைப்பின் தோல்விக்கு எல்லோருமே பொறுப்பு என்றேன்.

இப்போது நீதி அமைப்புகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளனவே? இலவசச் சட்ட உதவி, ஆலோசனைகள், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள், மீடியேஷன் என அழைக்கப்படும் சமரசத் தீர்வு மையங்கள் போன்ற அமைப்புகளால் நீதி வழங்கும் நடைமுறைகள் மேம்பட்டுள்ளனவா?

நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கமான அமைப்புகளால் முடியாததால் புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் அவற்றை எதிர்க்கவில்லை. ஆனால் மாற்று அமைப்புகளால் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டுள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும்.

சட்டரீதியான அமைப்புகளிடமிருந்து நீதி கிடைக்காததுதான் கட்டப்பஞ்சாயத்துகளின் இருப்புக்கான தேவை நீடித்துக்கொண்டிருக்கிறது. முன்பு கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டவர்கள்தான் இப்போது போலி மோதல்களில் கொல்லப்படுகிறார்கள். நம் அரசியலமைப்பே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதான ஒரு பாவனையோடுதான் இயங்குகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல்தான் என்றாகிவிட்டது. தேர்தல்கள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன? சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்பதெல்லாம் வெறும் பேச்சு. தேர்தல் என்றால் ஒருவர் வெற்றி பெறுவார், அதிகாரம் அவரது கைகளில் ஒப்படைக்கப்படும். தோற்றுப்போன மற்றவர்கள் அவரது அதிகாரத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது இதுதான் என்னும் கருத்து பரவலாக இருக்கிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும். பலரும் அதில் பங்கு பெற வேண்டும். ஆனால் ஸ்டாலின் மட்டுமே வெற்றி பெற வேண்டும். அதற்கு அடியாட்கள் படை தேவைப்படுகிறது.

2006 சென்னை மாநகராட்சித் தேர்தலுக்காக அடியாட்கள் மலேசியாவிலிருந்து விமானத்தில் வந்தார்கள். ஆப்பரேஷன் நடத்தினார்கள். சென்றுவிட்டார்கள். தேர்தல் முடிந்த பின்னர் இன்றிருக்கும் டிஜிபி தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றிக்குத் துணை நின்ற அதே ரௌடிகளை ஒழித்துக்கட்டுவேன் எனக் களமிறங்கினார். லத்திகா சரண் மிக நேர்மையான, மிகத் துணிச்சலான காவல் துறை அதிகாரி எனப் பெயரெடுத்தவர்தான். அப்படிப்பட்ட அதிகாரிகளும்கூட இப்படிப்பட்ட தருணங்களில் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அரசியல் எல்லாவற்றையும்விட வலிமையானது. அரசியல்வாதிகளே அதிக அதிகாரம் கொண்டவர்கள். துரதிர்ஷ்டவசமாக நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் மோதல் சாவுகள் பற்றிப் பேசுவது தவறு.

அரசியல் கட்சிகளில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்களே?

அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக்கம் மிகுந்துவிட்டது. சில நேரங்களில் குற்றவாளிகள் நேரடியாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறார்கள். மதுரையில் அப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகம். அரசியலில் வெற்றிபெற, உச்ச அதிகாரம் பெறச் சிலரை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது. ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களின் பட்டியலை சிலசமயம் அரசியல்வாதிகளும் சிலசமயம் காவல் துறை அதிகாரிகளும் தயாரிக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் காவல் துறையால் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. மதுரையில் ஒருவரை மோதல் சாவில் கொல்கிறார்கள் என்றால் அது மதுரைக் காவல் துறை ஆணையர் மட்டும் தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல. முடிவெடுக்கும்போது சாதி சார்ந்த சமன்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு தேவரைப் போட்டுத் தள்ளினால் ஒரு தலித்தையும் போட்டுத்தள்ள வேண்டும். அது அரசியல் தேவை. இவற்றையெல்லாம் எங்கள் கள அனுபவங்களில் பார்த்திருக்கிறோம்.

ஒரு அமைச்சரின் பொருளாதார நலன்களுக்கு வெள்ளை ரவி இடையூறாக இருந்ததால் அவர் ஒரு மோதலில் கொல்லப்படுகிறார். அதற்கான திட்டம் காவல் துறைக்குக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதைச் செயல்படுத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் உதாரணங்கள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக எந்த வழக்கும் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணைக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் உண்மைகள் வெளியில் வந்திருக்கும். என்கவுன்டர் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம். குஜராத், மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மோதல் கொலைகளில் தேர்ச்சி பெற்ற ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ இருந்தார்கள். இன்று அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். சிபிஐ விசாரணை நடத்துகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சிபிஐ விசாரணைகள் வேறுமாதிரியானவை. வெவ்வேறு அதிகார மையங்களின் கூட்டு காரணமாக அவற்றின் பண்பே மாறிவிடும் அபாயம் இருக்கிறது. மிகச் சமீபத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரது வழக்குகள் சரியான உதாரணங்கள். திண்டுக்கல் பாண்டியை எங்கேவைத்துக் கைதுசெய்தார்கள்? முதல் நாள் இரவு திண்டுக்கல்லில் அவரைப் பார்த்ததாகவும் மறுநாள் காலையில் சென்னையில் பிடித்ததாகவும் சொல்கிறார்கள். திண்டுக்கல்லில் உள்ள உள்ளூர்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பாண்டி அங்கே இருப்பதாக ஒரு செய்தி வெளியானதாகவும் அவரைத் தேடி காவல் துறையினர் திண்டுக்கல் செல்வதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் மறுநாள் காலை சென்னையில் பிடித்ததாகவும் காவல் துறை சொல்கிறது.

தர்க்கபூர்வமான, இயற்கையான சில கேள்விகள் எழுகின்றன.

முதல் நாளிரவு திண்டுக்கல்லிலிருந்து தப்பியோடும் ஒரு நபர் எதற்காகச் சென்னைக்கு வர வேண்டும்? தப்பிக்க வேண்டுமென நினைப்பவன் வலிய வந்து காவல் துறையினரிடம் சிக்கிக்கொள்கிறான் என்றால் அவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும். சிறப்புக் காவல்படைப் பிரிவு சென்னையில்தான் இருக்கிறது என்பது தெரியாத அளவு பாண்டி அப்பாவி அல்ல. காவல் துறையினர் பாண்டியைப் பிடித்தது ஈரோட்டில் என யூகிக்க இடமிருக்கிறது. ஒருவேளை ஈரோட்டில் வைத்தே அவர் கொல்லப்பட்டிருக்கலாம். உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. உயிரோடு சென்னைக்கு அழைத்துவரக் காவல் துறையினர் துணிந்திருக்கமாட்டார்கள். தங்களுக்கேகூடப் பாண்டியால் ஏதாவது ஆபத்து வரும் எனக் காவல் துறையினர் நினைத்திருக்கலாம். அவர் தன் சகோதரரைக் கொன்ற எட்டுப் பேரையும் கொன்று பழிதீர்த்த ஆள். அவரை எங்களைப் போல ஆள்கள் வேண்டுமானால் குறைத்து மதிப்பிடுவோம். நிச்சயமாகக் காவல் துறையினர் சரியாகவே மதிப்பிட்டிருப்பார்கள். யாராவது பாண்டியின் உடலைப் பார்த்தார்களா? ஒரு புகைப்படமாவது எடுக்கப்பட்டதா? உடல் நீலாங்கரையில் கிடந்ததற்கான புகைப்பட ஆதாரமாவது இருக்கிறதா? அப்புறப்படுத்துவதற்கு ஏன் அவ்வளவு அவசரம்?

நீலாங்கரையில் பாண்டியின் உடல் கிடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் ரத்தக் கறை இருக்கிறது. சுட்டுக்கொன்றபோது ரத்தம் பக்கத்திலிருக்கும் பாறையில் தெறித்திருக்காதா? பாண்டியின் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் எதற்காக மலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்? மாலைவரை அந்த உடலை ஏன் அங்கு வைத்திருக்க வேண்டும்? இவையெல்லாம் அவரது உடலை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளேயல்லாமல் வேறென்ன?

மோதிக்கொண்ட இருதரப்பினரிடமும் ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. அவர்களில் ஒருவர் கொல்லப்படுகிறார். எதிர்தரப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்குக் கூடக் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் நடந்த எந்த மோதல் சம்பவங்களிலும் காவல் துறையினருக்கு எந்தப் பாதிப்புமில்லை. ஒவ்வொரு என்கவுன்டருக்குப் பிறகும் அதில் ஈடுபட்ட காவல் துறையினர் எவ்வளவு நாள்கள் விடுப்பில் இருக்கின்றனர்? பெரும்பாலான என்கவுன்டர்களில் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு இத்தாலிய ரிவால்வேர் இருக்கிறது. ஒரு பெரிய கத்தியும் இருக்கிறது. அவர் கத்தியைப் பயன்படுத்தினாரா? ரிவால்வரைப் பயன்படுத்தினாரா?

தெர்மல் நைட்ரேட் சோதனைதான் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்கான சோதனை. துப்பாக்கியைப் பயன்படுத்தும் போது துப்பாக்கிக் குண்டின் சிதறல்கள் அந்த இடத்தில் இறைந்துகிடக்கும். தெர்மல் நைட்ரேட் சோதனை அதைத் துல்லியமாகக் காட்டிக்கொடுத்துவிடும். வீரப்பன் சாவுக்குக் காரணமானதாகச் சொல்லப்படும் மோதல் உள்ளிட்டு எந்தவொரு என்கவுன்டருக்குப் பின்னரும் அத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டதே இல்லை.

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் நீங்கள் தீவிரமாகச் செயல்பட்டீர்கள். இப்போது அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்களில் இவ்வழக்கு குறித்த செய்திகள் தென்படக்கூட இல்லை. அதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்? உண்மையிலேயே தமிழ் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா?

மிகச் சிக்கலான கேள்வி இது. நீங்கள் மீடியாவில் உங்களுடைய வேலையைச் செய்வதற்கு, காவல் துறையினர் காவல் துறையினராகத் தம் பணியைச் செய்வதற்கு, நீதிபதிகள் நீதிபதிகளாக இருப்பதற்கு, பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்தவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தம் பணியைத் தொடர்வதற்கும் ஆதாரமாக இருப்பது உயிர்ப்புடன் இருப்பதாக நம்பப்படும் ஒரு ஜனநாயக அமைப்பு. ஆனால் இப்போதுள்ள ஜனநாயக அமைப்பு பல வகைகளிலும் தோல்வியடைந்துவிட்ட ஜனநாயகமாகும். மிக மோசமாக நொறுங்கிப் போயிருக்கிறது இந்த அமைப்பு. அதை மிகக் கஷ்டப்பட்டு ஒட்டிச் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நம் ஜனநாயகத்தின் இந்த நிலையைத்தான் மாவோயிஸ்ட்டுகள் முழுவதும் தோற்றுப்போன நிலை என்று கூறி இதைத் தூக்கி எறிய வேண்டுமெனச் சொல்கிறார்கள். அது ஒரு அரசியல் நிலைப்பாடு. ஆனால் இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நம் ஜனநாயகத்தின் மோசமான நிலைதான்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த தேர்தல் கமிஷனரைவிட இப்போது உள்ள தேர்தல் கமிஷனர் தேர்தலை உயர்ந்த தரத்தில் நடத்த முயன்றாலும் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பல மடங்கு அதிகமாக வன்முறைகள் வளர்ந்திருக்கின்றன. வன்முறைகளில் அரசியல்வாதிகள் நேரடியாக ஈடுபடுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆகவேதான் அவர்களுக்கு வன்முறையைத் தொழிலாகக் கொண்ட, சட்ட விரோதமாகச் செயல்படுகின்ற சமூக விரோத சக்திகளின் துணை தேவைப்படுகிறது. காவல் துறை மூலம் அரசியல்வாதிகள் அந்தச் சக்திகளுக்குப் பாதுகாப்பளிக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகள்கூட அவர்களது சுயநல அரசியலுக்குத் துணைபோகும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். குடும்பம், பிழைப்பு போன்ற காரணங்களால் அவர்களும் விட்டுக்கொடுக்கிறார்கள். சமூக விரோத சக்திகள், கிரிமினல்களின் துணையில்லாமல் இந்த அமைப்பு செயல்பட முடியாது. ஜனநாயகம் இருக்கிறது என நம்பவைப்பதற்கான நாடகம்தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எதிர்வினையாற்ற வேண்டிய மக்களும் மௌனமாக இருக்கிறார்கள். நேற்று இங்கே நடந்த என்கவுன்டருக்கு ஒருவர் சாட்சியாக இருந்திருக்கிறார். அதைப் பற்றி எங்களிடம் சொன்னவர் தயவுசெய்து என் பெயரை வெளியிட்டுவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பிறகு தானே டுவீட்டரில் i just now witnessed a live police encounter within ten feet distance என்று எழுதினார். அநியாயத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு பொறுப்புள்ள குடிமகனின் எதிர்வினை இது. இவரைப் போல் ஆயிரக்கணக்கான மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ஜனநாயகம் ஒரு பக்கம் மக்களை அமைதியாக்குகிறது. இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளை அதிகாரம் நிறைந்தவர்களாக மாற்றுகிறது. ஒவ்வொரு மனிதனையும் அமைதியாக்க முயல்கிறார்கள். அரசியல்வாதிகள், குற்றவாளிகளின் மிக ஆபத்தான கூட்டை அனுமதித்துக்கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் எனும் நாடகம் நிகழ்த்தப்பட அவசியம் தேவைப்படும் நடிகர்களாகப் பல்வேறு பிரிவினரும் மாற்றப்பட்டுவிட்டனர். எதற்கும் உதவாத, தன்னம்பிக்கையற்ற, அரசியலமைப்பின் நோக்கங்களைப் பற்றி அறியாத, மனித உரிமைகள் பற்றி அறியாத பலருக்கும் வெவ்வேறு நிறுவனங்களை ஏற்படுத்தி அவற்றை வழிநடத்திச் செல்லும் பொறுப்புகளை வழங்கிவிட்டோம். நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க எண்ணற்ற இயக்குநர்களும் நடிகர்களும் பார்வையாளர்களும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய மனித உரிமை ஆணையம் பெண்கள் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம், தகவல் உரிமை ஆணையம் எனப் பல பெயர்களில், விதவிதமான அடையாளங்களைத் தாங்கிப் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த உண்மையைத்தான் மாவோயிஸ்ட்கள் பேசுகிறார்கள்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலையா ஓய்வுபெற்ற பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகப் பணிபுரிந்தார். நான்காண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நமது நீதித் துறையின் தோல்வியே மாவோயிஸ்ட்களின் வளர்ச்சிக்குக் காரணம் என்றார். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் எல்லாமே தோல்வி கண்டவை எனச் சொல்கிறார் அவர். எனக்கு உடம்பில் வலிமை இருந்திருந்தால் மாவோயிஸ்டுகளுடன் போய்ச் சேர்ந்திருப்பேன் என்றார். எந்த மக்களை வன்முறையாளர்கள் என நாம் விமர்சனம் செய்கிறோமோ, சிதம்பரம் யாரை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று சொல்கிறாரோ அவர்களிடம் போய்ச் சேர்ந்திருப்பேன் என்று சொன்னார். அவர்கள் வைக்கும் வாதங்களில் நியாயம் இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக அமைப்புகளால் தீர்க்க முடியவில்லை என்றால் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்திலிருக்கும் 110 மாவட்டங்களின் எண்ணிக்கை எளிதாக 250 ஆக வளர்ந்துவிடும் என்றார் வெங்கடாசலையா.

இந்த அமைப்பைத் தோல்வியுறச் செய்ததில் நீதித் துறைக்கும் பல மனித உரிமை அமைப்புகளுக்குங்கூடப் பங்கு இருக்கிறது. அமைப்புக்கு வக்காலத்து வாங்குகிற, அதன் தவறுகளை நியாயப்படுத்துகிற அரசு சாரா அமைப்புகளுக்குப் பங்கு இருக்கிறது. ஏன் சாதாரண மக்களுக்குங்கூடப் பங்கு இருக்கிறது. நேற்று நடந்த என்கவுன்டர் பற்றிய உண்மைகளை வெளியிடுவதற்கு மதுரையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் தயங்குகிறார்கள்.

தினகரன் வழக்கில் இன்றைய நிலை என்ன? குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் அல்லவா?

தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மூன்று உயிர்கள் பலியாகியிருக்கின்றன. விசாரணையின்போது முதல் மூன்று மணிநேரம் உண்மையைப் பேசிய சாட்சிகள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிறழ்வு சாட்சிகளாக மாறிவிட்டார்கள். சாட்சிகள் பிறழ்வு சாட்சிகளாக மாற்றப்பட்டதன் பின்னணியில் எந்தச் சக்தி இருக்கிறது? இப்போது நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் படித்துக்கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ நாடுவோம். தினகரன் வழக்கை இதோடு விட்டுவிட்டோம் என்றால் மறுபடியும் நமது பணியில் நாம் தவறுகிறோம் என அர்த்தம். இவை கடினமான பணிகள். ஆனால் குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் இந்தக் கடினமான பணியை டீஸ்டா செடல்வாட் (Teesta Setalvad) போன்ற ஒருவர் செய்ததால்தான் இன்றும் நாம் ஜனநாயகம் பற்றிப் பேச முடிகிறது.

தம் ஊழியர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட ‘தீர்ப்பு’ பற்றிய செய்தியைக்கூடத் தினகரன் வெளியிடவில்லையே? பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுங்கூட அந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்துவிட்டனவே?

பத்திரிகை என்பது வியாபாரம். துரதிர்ஷ்டவசமாக, இறந்துபோனவர்களுக்கு அந்த வியாபாரத்தில் சம்பந்தம் கிடையாது. அவர்கள் அதன் தந்திரங்களுக்குப் பலியானவர்கள். அந்தப் பத்திரிகையின் முதலாளிக்கும் அவர்கள்மீது வன்முறையை ஏவிவிட்டவர்களுக்குமான தொடர்பு, உறவு குறித்து முழு உலகிற்கும் தெரியும். அவர்கள் தமக்குள் சமரசம் செய்துகொண்டுவிட்டனர். அந்தச் சமரசமும் பொருள்சார்ந்த சமரசம். எல்லாருமே ‘ஏன் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள், அதை விட்டு விடுங்கள்’ என்கின்றனர்.

மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் என்னும் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறீர்கள். அதன் நோக்கம், திட்டம் குறித்துச் சொல்லுங்கள்.

நாங்கள் மனித உரிமைகள் சார்ந்த கண்காணிப்பில் ஈடுபடுகிறோம். அது ஒரு அரசுசாரா நிறுவனம். இதற்குச் சில எல்லைகள் இருக்கின்றன. எங்களுடைய வறையறுக்கப்பட்ட செயல்பாடுகளால் மனித உரிமை குறித்த விழிப்புணர்வு பரவலாகிவிடும் என்னும் நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஒரு மக்கள் இயக்கம் செய்ய வேண்டிய பணி அது. அதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். பரவலாகச் சிறு சிறு குழுக்களை அமைத்து அவற்றை ஒரு மக்கள் இயக்கமாக ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல முயல்கிறோம்.

மனித உரிமைத் தளத்தில் வேலை செய்வதுபோல் ஒரு இயக்கமாக மாறிய பிறகு வேலை செய்ய இயலுமா?

இதற்கு மிகப் பாதுகாப்பாகப் பதில் அளிக்க வேண்டியுள்ளது. நான் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்தவன். 1995இலிருந்து 2006 வரையிலான பணிகளில் தென்பட்ட போதாமைகள் காரணமாகவே மக்கள் கண்காணிப்பகத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எங்களின் ஆலோசகராகப் பேராசிரியர் கல்யாணி இருக்கிறார். மனித உரிமை சார்ந்த பணிகளை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுப்பதில் நம்பிக்கையும் அனுபவமும் கொண்டவர். எங்களோடு இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு எச்சரிக்கை உணர்வு இருக்கிறது. நம்பிக்கையும் இருக்கிறது. இயக்கமாக மாறும்போது தரம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்காக எந்த அடியையும் எடுத்துவைக்கக் கூடாது என்ற நிலையில் இருந்து மாறியிருக்கிறோம். ஆயிரக்கணக்கான பேரைத் தயார் செய்ய வேண்டும். தமிழகத்தில் பல்வேறுவித கண்காணிப்புப் பணிகளில் இந்தக் குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். சிவில், அரசியல் உரிமைகளோடு நின்றுவிடாமல் பொருளாதார, கலாச்சாரரீதியிலான உரிமைகளுக்காகவும் போராடக் கூடிய அமைப்பாக இதை வளர்த்தெடுக்க வேண்டும். எங்கள் அமைப்பினர் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை ஆராய்கிறார்கள். பிற மனித உரிமை இயக்கங்களோடு இணைந்து செயல்படும் இயக்கமாக இது இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். நிறையக் கனவுகள் இருக்கின்றன. எல்லாம் நிஜமாகும் எனச் சொல்ல முடியாது. நமது எல்லைகள் நமக்குத் தெரிய வேண்டும். வெவ்வேறு தரப்பினரையும் எங்களோடு இணைக்க முயல்கிறோம்.

மனித உரிமை அமைப்புகள் சட்டரீதியாக ஏன் அங்கீகரிக்கப்படவில்லை?

மனித உரிமை அமைப்புகள் சட்டரீதியான அங்கீகாரங்களுடன் செயல்பட வேண்டுமென்னும் அவசியமில்லை. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் மனித உரிமைப் பணிகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதுதான் முக்கியம். பாதிக்கப்பட்டவர்கள் எப்போது மனித உரிமைப் பாதுகாவலர்களாக மாறுகிறார்களோ அப்போதுதான் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு உண்மையான அர்த்தம் உருவாகும். இந்தப் பயணம் அவர்களை வெறுமனே பாதிக்கப்பட்ட வர்களாக மட்டுமே வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை. இதுதான் மனித உரிமைப் பணிகளின் ஆன்மா என்று நினைக்கிறேன். வறுமைக்கு எதிராகப் போராடுவது கூட மனித உரிமைச் செயல்பாடுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு பார்வை இல்லை. இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சட்டரீதியான செயல்பாடுகளால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. அவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். முழுமையான தீர்வு அத்தகைய ஒரு வரையறைக்குட்பட்டதல்ல.

உள்ளடக்கம்