Google   www kalachuvadu.com

பதிவுகள்

ஏற்காடு சிறுகதை செம்மையாக்க முகாம்

எஸ்.செந்தில்குமார்

கதாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இடைவெளியற்ற காலம் இது. எழுத்தாளர்கள் யார், வாசகர்கள் யார், பதிப்பாளர்கள் யார் என்பதைப் பிரித்தறிய முடியாத பிம்பங்கள் கொண்ட தமிழ்ச் சூழலில் நிர்ப்பந்தங்களின் பேரில் அவசரமாக உருவாகும் படைப்புகளும் அவற்றைப் பிரசுரிக்கும் பத்திரிகைகளும் பெருகிவிட்டன. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பிரசுரித்து வாசகர்களுக்கு விற்றுப் பணம் பிடுங்கிக்கொள்ளலாம் என்னும் அவலம் உருவாகியுள்ளது. பிரதியைப் பற்றிய கவலையும் அது நிகழ்த்தும் அதிர்வுகளும் அரசியலும் இப்போது முக்கியமானவையாக இல்லை. இக் காலகட்டத்தில் இளம் படைப்பாளன் எழுதி முடித்த தன் பிரதியைச் செப்பனிடும் பொருட்டு மேற்கத்திய நாடுகளில் உள்ள மீபீவீtவீஸீரீ ரீக்ஷீஷீuஜீ போன்ற அமைப்பைத் தமிழ்ச் சூழலில் வேண்டி நிற்பது அபத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது பிரசுர வசதி அதிகரித்துள்ளது. செப்பனிடப்படாத, வாசிப்புக்கு ஏற்ற வகையில் அமையாத பிரதிகளைத்தான் அச்சாக்கிச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள்.

விஷ்ணுபுரம் வெளிவந்த புதிதில் கணையாழியின் கடைசிப் பக்கத்தில், தன்னிடம் அந்த நாவலை எடிட் செய்து தர முடியுமா என ஜெயமோகன் கேட்டதாகவும் அதற்கு அவர் ‘உங்களாலே எடிட் செய்ய முடியும். முயன்று பாருங்கள்’ என்று சொன்னதாகவும் சுஜாதா எழுதியிருந்தார். என்னளவில் அப்போதுதான் எழுதியதை எடிட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. சினிமா எடிட்டிங்கைப் புரிந்துகொள்கிற அளவிற்கு எழுத்துப் பிரதியை எடிட் செய்வதைக் குறித்து எந்தச் சிறுபத்திரிகையிலும் ஒரு கட்டுரைகூடப் பிரசுரமாகாதது இப்போதும் வேதனையாகத்தான் இருக்கிறது.

செம்மையாக்கம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாவே எனக்கு மேலோங்கியிருந்தது. செம்மையாக்கம் நிச்சயமாகப் பிழை திருத்தும் பணியல்ல. ஒற்றுப் பிழை, எழுத்துப் பிழைகளைக் களைவதும் அல்ல என்பதை நடைமுறை சார்ந்து நேரிடையாகத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாகச் சிறுகதைச் செம்மையாக்க முகாம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் 30, 31 ஆம் தேதிகளில் ஏற்காட்டில் நடந்தது.

எந்தப் பத்திரிகையிலும் அறிவிப்பு வெளியிடாமல் சிறுகதை எழுதும் பனிரெண்டு பேர் மட்டும் இம் முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

o

ஜனவரி 30ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் நான் சேலம் சந்திப்பில் இறங்கியபோது பாவண்ணன், ஜி.கே. ராமசாமி, நஞ்சுண்டன் மூவரும் பெங்களூரிலிருந்து முன்னரே வந்திருந்தார்கள். காலை ஐந்து மணியளவில் வந்த ஏற்காடு விரைவு வண்டியில் சென்னையிலிருந்து பாலசுப்ரமணியன், முத்துசாமி, கீழ்வேளூர் பா. ராமநாதன், நஞ்சுண்டனின் துணைவியாரும் மகனும் வந்தார்கள். எல்லோரும் அங்கிருந்து ஒரு வேனில் சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு வந்தோம். எக்மோரிலிருந்து வரும் சேலம் விரைவு வண்டியில் ராஜேந்திர சோழன், தேவிபாரதி, ந. கவிதா, கவிதா - முரளிதரன் ஆகியோர் வந்தார்கள். இதற்கிடையில், இரா. சக்திவேல் உள்பட மேலும் சில நண்பர்கள் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். வேன் ஏற்காடு நோக்கிப் புறப்பட்டது. வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட சேலம் மத்திய சிறைச்சாலை, இன்று உருமாறிவிட்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகியவற்றைக் கடந்தபோது அவை பற்றிய பல தகவல்களை ஒரு வழிகாட்டியைப் போல நஞ்சுண்டன் சொல்லிக்கொண்டே வந்தார்.

எல்லோருக்கும் ஏற்காடு தமிழ்நாடு ஹோட்டலில் தங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஹோட்டலுக்குப் பக்கத்தில் ஏரிக்கு மேல் அமைந்துள்ள படகு இல்ல அரங்கில் அமர்வுகள். பாலசுப்ர மணியன் எல்லோரையும் வரவேற்றார். கவிஞர் தேவேந்திர பூபதி செம்மையாக்க முகாமைத் தொடங்கிவைத்தார். சங்க காலத்திலிருந்த செய்யுள் வடிவத்தையும் இப்போதுள்ள கவிதை வடிவத்தையும் தொடர்புபடுத்திப் பேசியதோடு செம்மையாக்கத்தின் அவசியத்தையும் அதை எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதைப் பற்றியும் அவர் விரிவாகப் பேசினார்.

தன் செம்மை அமைப்பின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் விளக்கிய நஞ்சுண்டன் இந்த முகாமுக்கான தோற்றுவாயைச் சொன்னார். மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருந்தார். கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட - முழுவதும் கையாலேயே தயாரிக்கப்பட்ட - கைவினைக் கோப்பிலிருந்தே அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை தெரிந்தது. சிறுகதை எழுதிவந்து முகாமில் பங்கேற்றவர்கள்: பா. ராஜா, ஆங்கரை பைரவி, வறீதையா கான்ஸ்தந்தின், சத்தியநாதன், சக்தி அருளானந்தம், ஆர். சிவபிரகாஷ், குமார நந்தன், பிரதாப், வேணுகோபால், கே. என். செந்தில், எஸ். செந்தில்குமார். முகாமின் முன்னேற்பாடுகளின்படி எழுத்தாளர்களிடமிருந்து தலா ஒரு சிறுகதை முன்கூட்டியே பெறப்பட்டு அவை கணிப்பொறியில் ஜிகிவி மீஸீநீஷீபீமீல் உள்ளீடுசெய்யப்பட்டிருந்தன. அதோடு ஒவ்வொரு கதையும் செம்மைக் குழுவினரால் செம்மையாக்கப்பட்டு இரண்டாம் படிவங்கள் தயாராயிருந்தன.

ரம்மியமான அந்தக் கண்ணாடி அரங்கில் நான்கு மடிக்கணினிகளும் லேசர் அச்சுப்பொறியும் அணிவகுத்திருந்தன. தேவையானவர்களுக்கு உடனுக்குடன் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் லேசர் பிரிண்ட் அவுட் எடுத்துத் தரும் வசதி செய்யப்பட்டிருந்தது.

செம்மைக் குழுவினர் செய்திருந்த பிழைதிருத்தங்களைக் கதாசிரியர்கள் உள்வாங்கிக்கொள்ள அவகாசம் தரப்பட்டது. தேவைப்பட்டபோது செம்மைக் குழுவினர் அவற்றை விளக்கவும் செய்தார்கள்.

சிறுகதைகளின் அடுத்த கட்டச் செம்மையாக்கத்தில் உதவுவதற்காக மூத்த எழுத்தாளர்களாக வந்திருந்தவர்கள்: ராஜேந்திர சோழன், பாவண்ணன், தேவிபாரதி, பெருமாள்முருகன், காசி மாரியப்பன். இவர்களை மேல்நோக்கு எழுத்தாளர்கள் என்றழைத்தார் நஞ்சுண்டன். ஒவ்வொரு மேல்நோக்கு எழுத்தாளரும் தலா இரண்டு கதாசிரியர்களுடன் அவர்களது சிறுகதைகளைக் குறித்து விரிவாக விவாதித்து யோசனைகளைச் சொன்னார்கள்.

மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் எல்லோரும் அரங்கில் கூடியபோது தேவிபாரதி, கவிதா - முரளிதரன், கே. என். செந்தில் மட்டும் மிஸ்ஸிங்க். மேற்படி நண்பர்கள் ஜாலியாகப் படகுச் சவாரியில் ஏரிக்கு நடுவிலிருந்தது குளுமையான அந்தக் கண்ணாடி அரங்கிலிருந்து தெரிந்தது. மாலைத் தேநீர் இடைவேளைக்குள்ளாகவே கதை எழுதியவர்களுக்குத் தாங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றிய புரிதல் பேரளவுக்கு உண்டாகியிருந்ததை உணர முடிந்தது.

தேநீருக்காகவே எல்லோரும் லேடீஸ் சீட் என்னும் இடத்திற்குப் போனோம். கருப்பு - வெள்ளைப் படங்களில் அந்த இடத்தைப் பார்த்திருந்த ஞாபகம் பலருக்கும் அலைமோதியது. அங்கு வரிசையாக இருந்த பஜ்ஜிக் கடைகள் ஒன்றில் சுடச்சுட வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, காலிஃபிளவர் பக்கோடாவுடன் தேநீர் அருந்தினோம். ஏற்காட்டின் அந்தக் குளிர் பஜ்ஜிகளுக்கு அதீதமான சுவையைக் கூட்டியிருந்தது.

மீண்டும் படகு இல்ல அரங்கம். ஆறாம் வகுப்பில் படிக்கும் தன் மகன் சுகவனன் எங்களுக்குச் சில பாடல்களைப் பாடிக்காட்டுவார் என நஞ்சுண்டன் அறிவித்தபோதுதான் அவர்கள் வந்திருந்த காரணம் எனக்குத் தெரிந்தது. அவைக் கூச்சம் சற்றும் இல்லாமல் தன் கணீரென்ற குரலில் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் அதன் ராகம், தாளம் போன்றவற்றை அறிவித்துச் சுமார் நாற்பது நிமிடங்கள் கச்சேரி நிகழ்த்திய சுகவனன் இறுதியாகப் பாரதியின் காக்கைச் சிறகினிலேயையும் பச்சை மாமலைபோல் மேனி என்னும் திவ்விய பிரபந்தப் பாடலையையும் தானே மெட்டமைத்துப் பாடினார். சுகவனனுக்குக் கவிதா முரளிதரன் நன்றி சொல்ல அந்த அரங்கில் அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்தன.

மறுநாள், அதிகாலையிலேயே எழுந்துகொண்ட நண்பர்கள் தங்கள் சிறுகதைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துக் குளிரையும் பொருட்படுத்தாமல் போர்வைகளைப் போர்த்திக்கொண்டு விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ‘காதலாவது மண்ணாங்கட்டியாவது’ என்னும் சொற்றொடரை நீக்குவது தொடர்பாக ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். சரியாக எட்டு மணிக்குத் தமிழ்நாடு ஹோட்டலிலிருந்து புறப்பட்ட வேன் வளைந்து நெளிந்த மலைப்பாதையில் சென்று மலைவாழ் மக்களின் வழிபாட்டுத்தலமான பகோடா பாயிண்ட் என்னும் இடத்தை அடைந்தது. அங்கிருக்கும் ஆதிக் கோபுரங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவையாம். இப்போது நவீனக் கோவிலும் அங்கே கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து மலைவாழ் மக்களின் கிராமங்கள் கீழே தெரிந்தன. ‘அவர்கள் நம்மைப் போல பஸ் தடத்தில் வர வேண்டியதில்லை. அவர்கள் நேராக இந்த ஒற்றையடிப் பாதையிலேயே வந்துவிடலாம்’ எனக் கீழே தெரிந்த வழியை ஏதோ தனக்கு மிகப் பரிச்சயமான ஈரோட்டின் கருங்கல்பாளைய வீதியைக் காட்டிப் பேசுவதைப் போலச் சொன்னார் தேவிபாரதி. அங்கிருந்து திரும்பிய வழியில் மரங்களுக்கு ஊடாகத் தொலைவில் தெரிந்த கட்டடத்தைக் காட்டிய நஞ்சுண்டன் அதுதான் க்ரான்ஜ் என்றார். சிப்பாய்க் கலகம் முடிந்த பிறகு அப்போது சேலத்தில் வசித்த ஆங்கிலேயர்கள் தாங்களும் தாக்கப்படலாம் எனப் பயந்துபோய் ஏற்காட்டில் ஒரு நிலவறையைக் கட்டினார்களாம். அதில் ஆயிரம் பேருக்கு ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவும் நீரும் சேமித்துவைக்கும் வசதி இருந்ததாம். அதுவுமல்லாமல் கீழிருந்து ஒரு பீரங்கியையும் கொண்டுவந்து நிறுத்திவைத்தார்களாம். இன்று அந்த நிலவரையைக் கொண்ட கட்டடம் நட்சத்திர ஹோட்டல்.

அன்றைய காலை அமர்வு படகு இல்லக் கண்ணாடி அரங்கில் காலை பத்து மணிக்குத் தொடங்கியது. எல்சிடி புரொஜக்டர் திரையிடலோடு உரையாற்றிய நஞ்சுண்டன் மெய்ப்பு நோக்கலுக்கும் செம்மையாக்கத்துக்குமான வேறுபாடுகளிலிருந்து தொடங்கி அதன் பல்வேறு கூறுகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிப் பிழைகளை வகைப்படுத்திச் சொன்னார். மேற்கத்தியப் பதிப்புலகில் செம்மையாக்கம் தனித்துறையாக வளர்ந்துள்ள விதத்தையும் அதற்குள்ள மதிப்பையும் விரிவாக எடுத்துக்கூறினார். காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் தனக்குக் கிடைத்த செம்மையாக்க அனுபவங்களைச் சொன்னதோடு ஒவ்வொரு நூலுக்கும் தான் எழுதிய விரிவான குறிப்புகளின் தொகுப்பையும் காட்டினார். ஆனால் அதை யார் கேட்டும் படிக்கத் தரவில்லை. அது புத்தகமாக வந்தால் நிச்சயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலக்கணம் என்றால் பயந்துகொண்டிருந்த எனக்கு அதை எளிதாகக் கற்றுக்கொள்ள அவர் சொன்ன யோசனைகள் செயல்படுத்தக் கூடியவையாகத் தோன்றின.

தேவிபாரதி நண்பர்களுடன் கலந்துரையாடுவதுபோல் தன் பேச்சைத் தொடங்கினார். காலச்சுவடின் பொறுப்பாசிரியராகச் சிறுகதையாசிரியர்களுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களைக் கதையாடலாகவே முன்வைத்தார். இளமைக் காலத்தில் புத்தகங்களைத் தேடி சைக்கிளிலேயே பல இடங்களுக்கும் அலைந்த நாட்களை நினைவுகூர்ந்த தேவிபாரதி தன் சிறுகதைத் தொகுப்பு வெளியானபோது நண்பர்களையே வாசகர்களாகத் தக்கவைத்துக்கொண்ட தந்திரோபாயத்தையும் சொல்லிக் கலகலப்பூட்டினார்.

பெருமாள்முருகன் பேசும்போது தன் நூல்களை நஞ்சுண்டன் செம்மையாக்கிய தருணங்களில் அவர் முன்வைத்த விவாதங்கள் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவங்களை விரிவாகச் சொன்னார். நான்கு பதிப்புகளைக் கண்ட தன் ஏறுவெயில் நாவல் அவர் செம்மையாக்கத்தில் இப்போதுதான் தனக்கு மனநிறைவளிக்கும்படி வந்துள்ளதாகக் கூறியதோடு தமிழ்ப் பதிப்புலகில் நடந்துள்ள பல குளறுபடிகளை எடுத்துச் சொல்லிச் செம்மையாக்கத்தின் தேவையை விளக்கினார்.

நவீனப் படைப்புகளைச் செம்மையாக்கும்போது இயந்திரத்தனமாக இலக்கணத்தைப் பின்பற்றக் கூடாது என்றும் இலக்கிய நுட்பங்களை அறிந்த மனநிலை அதற்கு அவசியம் என்றும் காசிமாரியப்பன் வலியுறுத்தினார். காசிமாரியப்பன் வகுப்புகளை மாணவர்கள் கட் அடிக்கமாட்டார்கள் என சத்தியம் செய்யலாம்.

கதாசிரியர்கள் மேல்நோக்கு எழுத்தாளர்களுடன் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். மதிய உணவுக்குப் பிறகும் அது தொடர்ந்தது.

கதை எழுதிவந்து முகாமில் கலந்துகொண்டவர்களில் சிலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிய வாசிப்பு, தொழிற்சங்கத் தோழர்களின் மூலம் உருவான இலக்கியத் தொடர்புகள், அவற்றுடன் இணைந்து உருவான எழுத்து அனுபவம் எனப் பலவற்றையும் பாவண்ணன் பகிர்ந்துகொண்டார். தான் எழுதத் தொடங்கிய நாட்களில் இது போன்ற எடிட்டிங் வசதிகளோ உடனுக்குடன் கருத்துக் கேட்டுப் பெறும் வசதிகளோ இல்லை என்ற அவர் இன்றைய இளம் எழுத்தாளர்கள் இப்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தினார்.

மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் நேரடித் தொடர்புள்ள ராஜேந்திரச் சோழன் முகாமின் நிறைவுரையாற்றினார். தன் நீண்ட எழுத்தனுபவத்தைச் சற்றும் தொய்வில்லாத வகையில் விவரித்தவர் 70களின் தொடக்கத்தில் பூமணி, செயப்பிரகாசம், பிரபஞ்சன் போன்றவர்களுடன் தனக்கேற்பட்ட தொடர்பை விரிவாகக் கூறினார். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும் அவர்களின் குரல்களையும் கவனித்து எழுதினாலே போதும், மனத்திலிருக்கும் சிறுகதை தானாகவே வெளி வந்துவிடும் எனக் குறிப்பிட்டார். இது போன்ற முகாம்களின் தேவையை விளக்கியதோடு அடுத்த முறை நடத்தும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய அம்சங்களையும் தொட்டுப் பேசினார். ராஜேந்திர சோழன் அவர்களின் பேச்சு முகாமுக்கு மிகப் பொருத்தமான நிறைவுரை என்பது சற்றும் மிகையற்ற கூற்று. ந. கவிதா நன்றி கூறினார்.

ஆறு மணியாகியிருந்தது. சில நண்பர்களுக்குச் சேலம் சந்திப்பில் இரவு 9 மணிக்கு ரயில். ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியை நினைவுபடுத்துவதுபோல வண்டி எங்கள் அவசரத்தைப் புரிந்துகொள்ளாமல் ஊர்ந்துகொண்டிருந்தது. இருந்தாலும் வேனில் திரையிடப்பட்ட சிவாஜியின் பழைய பாடல்கள் எங்களை ஆசுவாசப்படுத்தின. தேவிபாரதியும் கே. என். செந்திலும் சிவாஜியின் சோகப் பாடல்களை ரசித்தபடியே வந்தார்கள். தேவி பாரதி உணர்ச்சிவசப்பட்டு திரையில் தெரிந்த சிவாஜியைப் போலவே தானும் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு பாடத் தொடங்கிவிட்டார். ‘எங்களுக்கு ரயிலுக்கு நேரமாச்சு. இதுல சிவாஜி பாட்டைப் போட்டு ஏன் இம்சை பண்றீங்க?’ என்று கவிதா முரளிதரன் கவலைதோய்ந்த குரலில் கேட்டார். ‘எனக்கு 10 மணிக்கு ஈரோட்டில் ரயில்’ என்று நான் கவிதாவிடம் சொன்னதும் அவர் சற்று அமைதியடைந்தார்.

நாங்கள் சேலம் பேருந்து நிலையத்துக்கு வந்துசேர்ந்தபோது இரவு எட்டு மணி. நானும் தேவிபாரதியும் ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறியபோது அவர் முகத்தைக்கூடப் பார்க்க முடியாத அளவு எனக்குப் பதற்றம் கூடியிருந்தது. ‘ரயில் ரயில்’ என மனம் பதறிக்கொண்டிருந்தது. அதை அதிகரிக்கும் விதமாகப் பேருந்தில் நாடோடி திரைப்படம் ஓடியது. பேருந்து ஈரோடு வருவதற்கு முன்பே 9:30 மணிக்குப் பள்ளிப்பாளையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து ரயிலடிக்குப் போகச் சொன்னார். சரியாக 9:50க்கு ரயில் நிலையம் போய்ச் சேர்ந்ததும் ‘மதுரை வழியாகச் செல்லும் நாகர் கோவில் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது பிளாட்பாரத்துக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று அறிவித்த பெண் குரல் எனக்கு நிம்மதியைத் தந்தது.

உள்ளடக்கம்