|
கருணாநிதி அரசின் தலித் விரோதப் போக்கை இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தேசிய ஆதிதிராவிட நல ஆணையத் துணைத் தலைவர்
பேராசிரியர் காம்ளேவின் பேட்டி கருணாநிதியைக் கலவரமடையச் செய்திருக்கிறது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வைத் தேடாமல், சிறுபிள்ளைத்தனமாகப்
பிரதமரிடம் முறையிடப் போவதாகக் கோபித்துக்கொள்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் நுழைவுப்
போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்
திருமதி லதா, தலித் என்னும் ஒரே காரணத்திற்காக, மாவட்டக் காவல் துறைக்
கண்காணிப்பாளர் அமல்ராஜுவின் உத்தரவின் பேரில் லதாவைக் கீழே தள்ளி வயிற்றில்
லத்தியால் குத்தியதால் அவரது கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு இன்றுவரை சிகிச்சை
மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பாதகச் செயலைச் செய்த அமல்ராஜுவுக்குத் திருச்சி
மாவட்ட ஐ.ஜியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த தோழர்களின் படுகொலையைக் கண்டித்து நடந்த
போராட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் ‘விழுப்புரம் மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக
அறிவிக்க வேண்டுமென முழங்கினார். ஆனால் இப்போது தேசிய ஆதிதிராவிட நல ஆணையத் துணைத்
தலைவர் காம்ளேவின் பேட்டியைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனக் கூறி, கருணாநிதிக்கு
‘அம்பேத்கர் சுடர்’ விருது அறிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்கு நன்றி
விசுவாசத்தைத் தெரிவிக்கின்றார். முன்பு இது போன்று திமுகவின்மீது வைக்கப்படும்
தலித் விரோத விமர்சனங்களுக்குப் பரிதி இளம்வழுதி, ஸ்பெக்ட்ரம் ராஜா போன்றவர்கள்
மறுப்பறிக்கை விடுவார்கள். இன்று இவர்களே வியக்கும் அளவிற்கு அந்தப் பணியைத்
திருமாவளவன் செய்துகொண்டிருக்கிறார்.
‘தான் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்தத் தேரை முன்னோக்கி இழுக்காவிட்டாலும்
பரவாயில்லை, தயவுசெய்து பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள்’ என அம்பேத்கர் கூறினார்.
ஆனால் இன்று அந்தத் தேரை, தலித் அரசியலை வைத்துத் தன்னை முதன்மைப்படுத்திக்கொண்ட
திருமாவளவன், பின்னோக்கி இழுக்கும் வேலையைத் தன் சுயலாபத்திற்காகச்
செய்துகொண்டிருக்கிறார்.இச்செயலை, காலம் ஒருபோதும் மன்னிக்காது.
கொ. மூர்த்தி, அத்தியூர்
மார்ச் 2010 இதழில் ‘தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையமும் ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக
அரசாங்கமும்’ தலையங்கம், நிருவாகத்தின் எதார்த்தப் போக்கை மாற்றி, திட்டச்
செயலாக்கங்களில் உயிரோட்டம் உருவாவதில், அறிவுஜீவிகளின் பங்கு பற்றிய அழுத்தமான
ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது. தற்காலிகத் தீர்வுகளில் அன்றாடம் காலந்தள்ளும்
நிருவாகம் ஒரு பக்கம்; நமக்கு வரும்போது பார்த்துக்கொள்வோம் என்னும்
விழிப்புணர்வு மழுங்கிய மக்கள் மற்றொரு பக்கம் இருக்கும் இன்றைய சூழலில்,
அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் தயங்கும் அலட்சியப் போக்கைச் சுட்டிக்காட்டும்
இத்தலையங்கம், உரியவர்களைச் சென்றடைந்தால் உத்வேகத்தை உருவாக்கும்.
வண்ணநிலவனின் ‘பால்தாக்கரேவும் பிராந்தியவாதத்தின் வேர்களும்’ கட்டுரை ஒட்டுமொத்த
இந்தியாவின் நலனுக்காகத் தமது குறுகிய நலத்தைத் துறக்கத் தெரியாது, பொதுவாழ்க்கை
என்னும் போர்வையில் இயங்கும், துண்டாகும் அமைப்புகள் குறித்த அருமையான அலசல். உலகம்
சுருங்கி வருவதாக மார்தட்டிக்கொள்ளும் நாகரிக யுகத்தில், மனித மனமும்
சுருங்கிவருவதால் ஏற்படும் பிரிவினைவாத சக்திகளை அடக்கிவைக்க வேண்டியதன் அவசியம்,
கட்டுரையில் வலுவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரே பாதையில் பயணிக்க மறுக்கும்
அமைப்புகளுக்கு இது நல்ல பாடமாக அமைந்திடும்.
நா. முத்தையா, மதுரை
ராஜபக்சேயின் தேர்தல் வெற்றிச் சரித்திரம் படித்தேன். தேர்தல் முறைகேடுகளில் இரண்டு
வகை உள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்து, விதிகளை மீறி, சட்டங்களை வளைத்து அதன்
மூலம் பொய் பிரச்சாரம் செய்து மக்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வருவது ஒருவகை.
இவை எதையும் அதிகம் செய்யாது, மக்களை மிரட்டியோ பயமுறுத்தியோ அவர்களுக்குப் பணம்,
பொருட்கள் ‘அன்பளிப்பு’ செய்தோ வாக்குகளைக் குவிப்பது இன்னொரு வகை. முதல் வகைக்கு
உதாரணம் இலங்கைத் தேர்தல்! இரண்டாம் வகைக்கு உதாரணம் தமிழகத்தில் நடைபெற்றுவரும்
இடைத்தேர்தல்கள்!
ஜனநாயக முறையில் ஆட்சி நடை பெறும் தேசங்களில், அத்துமீறும் ஆட்சியாளர்களையும் அடாவடி
செய்யும் அட்டூழிய ஆளும் வர்க்கங்களையும் தண்டிக்க, மக்கள் கையில் உள்ள ஒரே ஒரு
துருப்புச் சீட்டு - வாக்குச்சீட்டு தான். இப்போது அதையும் தட்டிப்பறிக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் ஏழு வருடங்களுக்கு ராஜபக்சேயை யாரும்
எதுவும் செய்துவிட முடியாதெனச் சொல்லப்படுகிறது.
அதுபோலத்தான் தமிழகத்தில் இனி திமுகவைத் தோற்கடிக்க இயலாது என்னும் சூழல்
மெல்லமெல்ல உருவாகி வருகிறது. இதெல்லாம் நாட்டை எங்கே கொண்டுபோய் விடும்? ஆளும்
தரப்புகளின் முறைகேடுகள் ஒரு புறமிருக்க, தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப் பதில்
மக்களிடையே உருவாகியுள்ள ஒருவிதமான அலட்சிய மனோபாவமும் இதற்கு
அடிப்படையாகிவிடுகின்றன. எதிர்க்கட்சிகளின் பலகீனம், கட்டுக்கோப்பு இன்மையும் ஆளும்
தரப்புக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகின்றன.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இது போன்ற அராஜகச் சூழல்களே ஒரு நாட்டில்
சர்வாதிகாரிகள் உருவாவதற்கும் மக்கள் கொந்தளித்து எழுவதற்கும் சாதகமான சூழலை
ஏற்படுத்தியிருப்பது தெரியவரும். மண்ணின் மைந்தர்கள் முழக்கம் தோன்றுவதற்கும்
மாநில, மொழி வெறி உருவாகி வளர்ந்து வருவதற்கும் மொழிவழி மாநில அமைப்பே காரணம்
என்ற வண்ணநிலவனின் கூற்று ஏற்புடையதல்ல. ஒரு மக்கள்திரள் பேசும் மொழிவழி, கலாச்சார
வழி எனப்படுவது இயல்பானது. தவிர்க்க முடியாதது. எப்போதும் இது இருந்தே
வந்திருக்கிறது. மொழிவழி மாநிலங்கள் நேரு காலத்தில் பிரிக்கப்படாமல் இருந்தால்கூட,
காலப்போக்கில் இப்பிரிவினை ஏற்பட்டே இருக்கும்.
ஆந்திரா, மைசூர், கேரளா போன்ற மாநில மக்கள் ஒன்றிணைந்து சென்னை மாகாணம் என்று
இருந்தபோதுகூட, அந்தந்தப் பகுதி மக்கள் அந்தந்தப் பிரதேச உணர்வுடனேயே வாழ்ந்தார்கள்.
வேலைதேடிப் பெருநகரங்களில் மக்கள் குவிவது இயல்பான ஒன்றுதான். மும்பை அப்படியான ஒரு
பெருநகரம். எந்தவொரு சாதாரண மராட்டியனும் தமிழனையோ பிகாரியையோ உ.பி, அஸ்ஸாம்
மாநிலத்தவனையோ இங்குப் பிழைக்க வராதே என இன்றுவரை சொன்னதில்லை. இனியும்
சொல்லமாட்டார்கள். இது தாக்கரேக்களின் சொந்த சுயநலப் பிரச்சினை. தேவை: ஒரு அரசின்
தைரியமிக்க நடவடிக்கை மட்டுமே.
கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்
மார்ச் மாத காலச்சுவடு பார்த்தேன். வழக்கமாக இதழ்களின் அட்டைப் படங்கள் நடிகைகளின்
படங்களைத் தாங்கினால் அன்றிக் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் காலச்சுவடின் அட்டைப்படம்
வித்தியாசமாக, கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. அதில் பொதிந்துகிடந்த உள்கருத்து
உள்ளேயிருந்த கட்டுரையைப் படித்தபோது இன்னும் துலக்கமானது.
அ. முத்துலிங்கம்
amuttu@gmail.com
ஈழ விடுதலைப் போரில் தமிழின ஒழிப்புக்குத் துணைநின்ற கருணாநிதி தமக்கு ஏற்பட்டுள்ள
தீராப் பழியைச் செம்மொழி மாநாட்டை நடத்தி நீக்கிவிடலாம் என்னும் தப்புக் கணக்கின்
ஒரு பகுதியாக, டாக்டர் கிருஷ்ணசாமி உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை வெற்றிகரமாக
நடத்திவிடக் கூடாதெனத் தமக்குள்ள அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்.
செம்மொழித் தமிழ் மாநாடு கருணாநிதியின் துதிபாடிகளால் இழிவை விரிவுபடுத்தவே உதவும்.
போலி நட்பாளர்களை உணரும் ஆற்றலைக் கருணாநிதி பல ஆண்டுகளுக்கு முன்பே இழந்துவிட்டார்.
மார்க்சின் ‘பெருள்முதல்வாதம்’ ஏங்கெல்சின் ‘குடும்பம், தனிச் சொத்து, அரசு
ஆகியவற்றின் தோற்றம்’ ஆகிய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி நகைச்சுவையின்
சிகரம். கருணாநிதி காவல் துறையின் இத்தகு அத்துமீறல்களுக்கு விளக்கம் கூற வேண்டும்.
அந்நூல்கள் எப்போது, எந்த அரசாணையால் தடைசெய்யப்பட்டவை என்னும் தகவலைத் தெரிவிக்க
வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு நிச்சயம் உண்டு.
கிருஷ்ணசாமி நடத்திய மாநாட்டுக்குப் பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரை
அழைக்கக் கூடாதெனக் காவல் துறை மூலம் வாய்மொழி ஆணை பிறப்பித்துள்ளார். ‘மத்தியில்
கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று முழங்கிக்கொண்டே காவிரி, முல்லைப்
பெரியாறு, பாலாறு பிரச்சினைகளில் தமிழர் நலனைக் காவு கொடுக்கும் கருணாநிதி வாழும்
இந்தியாவில்தான் உச்ச நீதிமன்றத்துக்கும் நடுவண் அரசுக்கும் தண்ணீர் காட்டும் வல்லமை
மிக்க கர்நாடக, கேரள, ஆந்திர முதல்வர்கள் நெஞ்சு நிமிர்த்தி வாழ்கின்றனர். வெற்றுப்
புகழுரைகளைக் கவிஞர்களும் நடிகையரும் நடிகர்களும் வழங்குவதாலேயே பிறவிப் பயனடைந்து
விட்டதாகக் கற்பனையில் திளைத்து நிற்கும் கருணா நிதி செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கு
முன்பே தமிழர்களுக்காகத் தன்னைச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டிய பணியைத் தொடங்குவது
நல்லது.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
எதிர்வினை:
தரவுகளும் பொத்தாம்
பொதுவான குற்றச்சாட்டுகளும்
காலச்சுவடு மார்ச் 2010 இதழில் அரவிந்தன் எழுதியுள்ள எதிர்வினையில் “2000 ஆண்டுக்
கால இந்திய மரபு தனது செழுமையான பல்வேறு கூறுகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இடத்தை
மறுத்துவந்தது மட்டுமல்ல; அவர்களது இருப்பைத் தன் பிரக்ஞையிலிருந்தும் இயல்பாகவே
அகற்றியிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக வரலாற்றில் இது சரியான கருத்தெனக்
கொள்வதற்கில்லை. இன்றைக்குப் பறையர் குல உட் பிரிவாகக் கருதப்படும் வள்ளுவர்
சாதியைச் சேர்ந்த திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்னும் நீதிநூல் தமிழ் வேதமாகவே
போற்றப்பட்ட நிலையும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. திருக்குறள் கி.பி. 4ஆம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். 1,600 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்ப்புடன்
இந்நூல் தமிழ் மக்களால் பயிலப்பட்டு வருகிறது என்றால், ஒரு தாழ்த்தப்பட்ட
சமூகத்தவரின் படைப்பு பிற உயர் சாதிக்காரர்களால் எப்படி ஏற்கப்பட்டிருக்க முடியும்
என்ற கேள்வி எழுகிறது.
வள்ளுவர் சாதியைப் பிற சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியாகக் கருதத் தொடங்கியது எந்த
நூற்றாண்டிலிருந்து? அத்தகைய ஒரு கருத்தும் நடைமுறையும் உருவானதற்கான சமூகச் சூழல்,
வாழ்வியல் நிர்ப்பந்தங்கள் எவை என்பதையெல்லாம் ஆராய்ந்தால்தான் இதற்கு விடை
கிடைக்கும். ஆரியத்திற்கு எதிரான திராவிடச் சிந்தனை மரபின் பிரதிநிதி திருவள்ளுவர்
என்பது போன்ற மட்டையடி வாதங்கள் கட்சிப் பிரச்சாரமாக இருக்கலாமே தவிர, ஆய்வுக்
கருத்தாக இருக்க முடியாது.
பறையர் என்ற பெரும் சாதியையே எடுத்துக்கொண்டாலும் வலங்கைப் பிரிவில்
சேர்க்கப்பட்டிருந்த பறையர்கள் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த (கல்வெட்டுகளில் இடங்கைச்
சாதியாகக் குறிப்பிடப்படுகின்ற மறவர், கைக்கோளர், வன்னியப் படையாச்சிகள் போன்ற)
பல சாதிகளைவிடத் தாழ்ந்த சாதியாகக் கருதப்படக் காரணம் என்ன? கி.பி. 12, 13ஆம்
நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் ‘சூத்திர ராயன்’ என்னும் பட்டத்துடன்
குறிப்பிடப்படுகின்ற பறையர் குலத்தவர் எந்தக் காரணங்களுக்காக எப்போது பஞ்சமர்
பிரிவில் சேர்க்கப்பட்டனர்? கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுவரை பறையர்கள் தீண்டாச்
சாதியினராகக் கருதப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டா?
மேற்கண்ட கேள்விகளுக்கு ஒரு பதிலைக் குறிப்பிட முடியும். பிற்காலச் சோழர் ஆட்சிக்
காலத்தின் (13ஆம் நூற்றாண்டின்) இறுதிக் கட்டம்வரை பறையர்கள் பஞ்சமர்களாகக்
கருதப்பட்டிருக்க வாய்ப்பில்லை. சித்திர மேழிப் பெரியநாட்டார் எனப்பட்ட வேளாளர்
குலக் கூட்டமைப்பினரின் எழுச்சியாலும், அரச குலச் சத்திரியரின் வீழ்ச்சியாலும்,
பறையர்கள் தாம் சார்ந்திருந்த நிலங்களோடு பிணைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட அடிமை
நிலையை எய்தினார்கள். புலையர்கள் போன்ற பிற பழமையான சாதியினருடன் சேர்க்கப்பட்டு
ஒட்டுமொத்தத் தீண்டாச் சாதிக் குழுக்களுடன் அவர்கள் இணைக்கபட நேர்ந்தது.
நிலம் என்பது அரசின் உடைமை என்ற கருத்து ஏட்டளவில் மட்டுமே இருந்ததாலும், 19, 20ஆம்
நூற்றாண்டுகளின் முதன்மையான நிர்வாகப் பதவிகளில் (பட்டாமணியம் அல்லது கிராம
முன்சீப்பு, கர்ணம் அல்லது கணக்கப்பிள்ளை போன்றவை) நாலாம் வர்ணத்தவரான வேளாளர்களே
நிறைந்திருந்ததாலும், பறையர் சமூகத்தவர் போன்றோரின் சுதந்திரமான இயக்கமே
முடக்கப்பட்டது. “கணக்கனைப் பகைத்தவன் காணியை இழந்தான்” என்னும் ஊரகப் பழமொழி
ஒன்றுண்டு. ராஜகுலவர்கள் தங்கள் காணிப்பற்றை இழந்ததே சித்திரமேழிப் பெரிய நாட்டாரின்
எழுச்சியால்தான் என்பது வரலாறு. கலப்பையில் பூட்டப்படுபவர்கள் பஞ்சமர்களாகவும்
கலப்பையைக் கையில் பிடித்திருப்பவர்கள் வேளாளர்கள் என்பதனால்தான் இந்த நிலைமை.
19, 20ஆம் நூற்றாண்டுகளில் தென் மாவட்டத்துச் சைவ வேளாளர்களாலும், கார்காத்த
வேளாளர்களாலும் ராஜகுலச் சான்றோர் (நாடார்) சமூகத்தவர்மீது ஒடுக்குதல் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. பறையர்களைத் தாழ்த்தியது போலவே, சான்றோர்களையும் அடக்கி
ஒடுக்கி அனைத்துவித அந்தஸ்துகளையும் பறிப்பதற்கான முயற்சிகள் தொடங்கின. ஆனால்
சான்றோர் சமூகத்தவரிடம் எஞ்சியிருந்த அரசகுலப் பாரம்பரியப் பெருமித உணர்வாலும்
போர்க் குணத்தாலும் தலைமைப் பண்புகளாலும் வேளாளர்களின் முயற்சியை முறியடித்துத்
தங்கள் சுயசார்பையும் தன்மானத்தையும் நிலைநிறுத்திக்கொண்டனர்.
சான்றோர் சாதியினர் குடிகாவல் மரபினர் என்ற வரலாற்று உண்மையைத் தேவநேயப் பாவாணர்
போன்ற தமிழறிஞர்கள்கூட ஒப்புக்கொண்டு பதிவுசெய்துள்ளனர். குடிகாவல் என்பது
சத்திரியப் பண்பாகும். பறையர் போன்ற அடித்தட்டு மக்களையும் அரவணைத்துக் காத்தல்,
அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கேற்றல், அவர்களுக்கிடையே ஏற்படுகிற வழக்குகளை
நடுநிலையோடு தீர்த்துவைத்தல் போன்றவையும் இப்பண்புநலனில் அடங்கும். இன்றும்
சான்றோர் சமூகத்தினர் பெரும்பான்மையினராக இருக்கின்ற ஊர்களில், பறையர் சமூகத்தவர்
போன்றவர்கள்மீது தாக்குதலோ ஒடுக்குமுறைகளோ நிகழ்வது இல்லை என்றே கூறலாம்.
விதிவிலக்காக ஒருசிலர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டாலும் சான்றோர் சமூகத்திலுள்ள
நடுநிலையாளர்கள் நிலைமை மோசமடையாமல் சீர்செய்து விடுவதையும் காணலாம்.
அடுத்ததாக அரவிந்தன், “கடந்த ஆயிரம் ஆண்டுகளாகப் பிராமணர்களும் க்ஷத்திரியர்களும்
சேர்ந்துகொண்டு இந்தியாவின் பெருவாரியான மக்களை ஒடுக்கிவைத்திருந்தது பற்றி அவர் (விவேகானந்தர்)
விரிவாகப் பேசுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தரின் கருத்து வட
இந்தியாவின் சில பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்; அவர் பிறந்து வளர்ந்த வங்காள
மாநிலத்துக்கேகூடப் பொருந்தாது. விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியை
17ஆம் நூற்றாண்டுவரை ‘பிரம்ம க்ஷத்திரியர்’ என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். அதன்
பிறகு பிரம்ம க்ஷத்திரியர் அந்தஸ்தைக் கைவிட்டுச் சூத்திர அந்தஸ்தோடு
திருப்தியுற்றனர்.
எனவே, பெருவாரியான மக்களை ஒடுக்கிவைத்திருந்தனர் என்னும் கூற்று விவேகானந்தரே
கூறியிருந்தாலும், ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று. ஐரோப்பிய, குறிப்பாக பிரிட்டிஷ் காலனி
ஆதிக்கம் எந்தெந்த விதங்களில் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தையும் சீரழித்து
ஓட்டாண்டிகளாக்கியது என்பதை முழுமையாக ஆராய்ந்தால்தான் இது குறித்த முழு உண்மை
தெரியவரும். விவேகானந்தர் உலகளவில் இந்தியர்களின் தன்மானத்தையும் தற்சார்பையும்
உயர்த்திப் பிடித்தவர் என்ற அளவில் அவர் ஒரு போற்றத்தக்க ஆன்மிகவாதியே தவிர,
வரலாற்று அறிஞர் அல்லர். வரலாற்றாய்வில் நம் தவறுகளுக்கும் தோல்விகளுக்குமான
காரணங்களையும் பழியையும் பிறர்மீது சுமத்துமுன், ஆய்வுக் கண்ணோட்டத்துடன் தரவுகளைப்
பரிசீலித்துவிட்டுக் குற்றம் சுமத்துவதுதான் சரியாக இருக்குமே தவிர, பொத்தாம்
பொதுவாகக் குற்றம்சாட்டுவது முறையல்ல.
அ. கணேசன்
(தலைவர், சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகம், சென்னை)
|