Google   www kalachuvadu.com

தலையங்கம்
‘சென்று தேய்ந்து இறுதல்’
தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கும் அறிவுத் தேடல் மார்ச் மாத இறுதியில் நிறைவுபெற்றுவிடுகிறது. இந்த இரண்டு மாதங்களுக்கும் ‘கருத்தரங்க மாதங்கள்’ என்று பெயர். பேராசிரியர்கள் காலையிலும் மாலையிலும் வெவ்வேறு கருத்தரங்குகளில் உரையாற்றுகின்றனர். இடைவிடாமல் பயணம். கணவன், மனைவி இருவரும் பேராசிரியர்களாக இருந்துவிட்டால் தம்பதி சமேதரராய் காரில் வந்திறங்கிக் கடமையாற்றிவிட்டு இருவருக்கும் பயணப்படி பெற்றுச் செல்லலாம். இவர் அங்கே போனால் அவர் இங்கே வரலாம். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்களிடையே உள்நாட்டுச் சண்டைகள் இருப்பினும் வெவ்வேறு நிறுவனங்களில் உள்ளவர்களிடையே பரஸ்பரப் புரிதல்கள் நிலவுகின்றன.

அரசு ஒதுக்கும் நிதி, அறக்கட்டளைகள் வழியாக வரும் வட்டித் தொகை, பல்கலைக்கழக மானியக் குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முதலியவற்றின் நிதிநல்கைகள், பரோபகார வள்ளல்கள் வழங்கும் கொடைகள் எனப் பல வழிகளில் வரும் கோடிக்கணக்கான ரூபாய் இம்மாதங்களில் செலவிடப்படுகிறது. அல்ல, விரயமாக்கப்படுகிறது. மார்ச் மாத முடிவில் செலவுக் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம்தான் கருத்தரங்கச் சடங்குகளுக்கு முக்கியக் காரணம். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் திட்டங்கள் முழுக்க இந்த இரண்டு மாதங்களில் வெகுவேகமாக முடிக்கப்படுவது போலவே அறிவுத் துறையாகிய கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. துரித கதியில் கட்டி முடிக்கப்படும் கட்டடங்கள் மிக விரைவில் காரை பெயர்ந்து பல்லிளித்து நிற்கின்றன. அவசரமாகப் போடப்படும் சாலைகள் சிறு மழைக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்துபோகின்றன. அத்தகைய நிலைதான் கருத்தரங்குகளுக்கும்.

சில நிறுவனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் உள்ளன. வைப்புத்தொகை வழியாக வரும் வட்டியில் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடத்த வேண்டும் என்பது விதி. அந்தத் தொகையைப் பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் பயன்படுத்த வேண்டும் என எதுவும் சட்டமிருக்கிறதா? கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து மாதம் ஒன்றிரண்டு பொழிவுகள், கருத்தரங்குகள் எனத் திட்டமிட்டு ஆண்டு முழுவதும் நடத்தினால் விளைவுகள் பயன்தரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொதுப்பணித் துறை பெயரளவுக்கு வேலைகளைச் செய்துவிட்டுப் பெருமளவுக்கு வேலைசெய்ததாகக் கணக்குக் காட்டி ஆவணங்கள் தயாரிக்கிறது. அவசரத்தில் வேலைகளின் அளவை, தரத்தைப் பார்வையிடக்கூட அவகாசம் கிடைக்காது. நிதியாண்டு இறுதிக் கருத்தரங்க நிலையும் இதுதான். பரிசீலனைக்குக்கூடக் காலம் இல்லாத அவரசத்தில் ஒப்பேற்றல்கள் நடக்கின்றன. ஒரேநாளில் காலையிலும் மாலையிலும் என இரண்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் வீதம் தொடர்ந்து நடக்கும் எனில் பயன் என்ன? வேறு வழியற்று உட்கார்ந்திருக்கும் மாணவர்களுக்கு இவற்றைப் பற்றி நல்லெண்ணம் எப்படி ஏற்படும்? இச்சூழலில் பயிலும் மாணவர்கள் கற்றுக்கொள்வதெல்லாம் வருகை தரும் பேராசிரியர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வதும் உணவு, தேநீர் ஏற்பாடுகளைச் செய்வதும் எப்படி என்பவற்றைத்தான். ஒன்றுக்கும் உதவாத பகட்டான பங்கேற்புச் சான்றிதழ்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் இத்தலை முறையினர் பொறுப்பேற்கும்போது நிலை இன்னும் எப்படி இருக்கும் என்பதை எண்ணினால் வருத்தமே மிஞ்சும்.

திட்டமில்லாத உரைகள் பட்டிமன்றப் பேச்சுக்களாகவும் வகுப்பறை விரிவுரைகளாகவும் இருக்கின்றனவே தவிர ஆராய்ச்சியோடு தொடர்பேதும் கொண்டிருப்பதில்லை. அறக்கட்டளைச் சொற் பொழிவுகளைவிடக் கருத்தரங்குகளின் நிலை படுமோசம். இரண்டு நாள் கருத்தரங்கம் என்றால் முதல் அரைநாள் தொடக்க விழா. இறுதி அரைநாள் நிறைவு விழா. அதிகாரங்களுக்குப் பொன்னாடை போர்த்தல், நினைவுப் பரிசு வழங்கல், சொரிந்துவிடும் பாராட்டுகள், புகழ் மொழிகள், இவற்றுக்கிடையே கருத்தரங்கப் பொருள் பற்றிய புரிதலற்ற உரைகள் என இவ்விழாக்கள் நடக்கின்றன. மீதமுள்ள இரண்டு அரை நாள்களில் கட்டுரையாளர்களுக்குப் பத்து நிமிடம், ஐந்து நிமிடம் என ஒதுக்கி முடிக்கும் நிலை. விவாதத்திற்குத் துளியும் இடமிருப்பதில்லை. கட்டுரையாளர்கள் துண்டுச் சீட்டுகள் சகிதம் சிற்றுரை ஆற்றுவதில் பாதி நேரம் கருத்தரங்க ஏற்பாட்டாளர்களைப் புகழ்ந்து விளிக்கவே சரியாகிவிடும். இப்படிப் பெருந்தொகை செலவிட்டு நடத்தப்படும் கருத்தரங்குகள் அவற்றின் சடங்குத்தனம் காரணமாகச் சுவடற்றுப் போய்விடுகின்றன.

இருபது, முப்பது ஆண்டுகளுக்குமுன் நடந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. கோவைக்கிழாரின் ‘கொங்கு வேளிர்’, வ.சுப. மாணிக்கத்தின் ‘கம்பர்’, கா. திரவியத்தின் ‘தேசியம் வளர்த்த தமிழ்’, மு. அருணாசலத்தின் ‘இளம்பூரணர்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்கப் பல நூல்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்தாம். சிட்டி, சிவபாத சுந்தரம் எழுதிய ‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் எழுத்தாக்கம்தான். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிகழ்ந்த பல பொழிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கல்கி அறக் கட்டளை, சொர்ணம்மாள் அறக்கட்டளை ஆகியவற்றின் பதிவுகள் மிகச் சிறப்பானவை. கருத்தரங்கக் கட்டுரைகள் பலவும் நூல்களாக வெளிவந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டு ஆர்வமும் துறைப் புலமையும் உடையோரைத் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவுகள் இவை. மேலும் கல்வி நிறுவனங்களின் பதிப்புத் துறை சிறப்பாகச் செயல்பட்டதன் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

இன்று நிறுவனங்களின் பதிப்புத் துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. பழைய நூல் பிரதிகள் சிலவற்றைப் பரப்பி ஓர் அறையில் காட்சிக்கு வைத்திருக்கும் அளவில் மட்டுமே இருக்கின்றன. சொற்பொழிவுகள், கட்டுரைகள் என எவற்றையும் வெளியிடும் எண்ணம்கூட இல்லை. இந்தப் பதிப்புத் துறை முடக்கம் கருத்தரங்க ஏற்பாட்டாளர்களுக்கு மிகுந்த வசதியாகிவிட்டது. கணக்கை ஒப்படைத்தால் போதுமே. கட்டுரைகளை ஒப்படைக்கத் தேவையில்லை. இதனால் சில அறக்கட்டளைகள் நடத்தப்படுவதும் இல்லை. பல ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இக்கட்டளைகளின் வைப்புத் தொகை இன்று சொற்பமாகிவிட்டது. ஆகவே வட்டி வருவாய் மிகக் குறைவு. நல்லெண்ணத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டவை இருக்கும் இடம் தெரியவில்லை. இன்றைய பணவீக்கத்திற்கு ஏற்ப வைப்புத் தொகை அளவைக் கூட்ட நிறுவனங்களில் எந்த ஏற்பாடும் இல்லை. அரசு இத்தகைய விஷயங்களில் அக்கறை காட்டுவதில்லை. வட்டி வருவாய் குறைந்தும் அறக்கட்டளைகளைச் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தலாம். இரண்டு மூன்று அறக்கட்டளைகளின் வருவாயை இணைத்து ஒரே கருத்தரங்கம் நடத்தலாம். அதற்கேற்ப விதிகள் அமைத்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை.

தமிழ்த் துறைசார்ந்த செயல்பாடுகள் இந்த நிலையில் உள்ளன. பிற கலை, அறிவியல் துறைகளிலும் தொழில்நுட்பத் துறைகளிலும் நடைபெறும் நிகழ்வுகளும் இதற்கு மாறானவை அல்ல. அவை பற்றிய தகவல்கள் ஊடகங்களில் பெரிய அளவு இடம்பெறுவதில்லை. பெற்றாலும் சமூகக் கவனத்திற்கு உள்ளாவதில்லை. அத்தகைய துறைகளில் எத்தகைய ஆய்வுகள் நடைபெறுகின்றன என்பதுகூட வெளியாவதில்லை. பாடநூல்கள் குவிந்து கிடக்கும் அளவை ஒப்பிட்டால் அத்துறைகளில் ஆய்வு நூல்கள் ஒரு விழுக்காடு அளவேனும் இருக்குமா என்பதும் ஐயமே. அவற்றிற்குச் செலவிடப்படும் தொகையையும் சேர்த்தால் திரளும் கோடிகளைச் சரியான முறையில் பயன்படுத்தப் பல நிலைகளிலும் புனரமைப்புச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. சமூகத்தை முன்னடத்தும் அறிவுத் துறையினர்க்கு உரிய தார்மீகக் கடமை, பொறுப்பு உணர்த்தப்பட வேண்டும். செயல்களின் விளைவுகளை வைத்துப் பரிசீலனையும் மதிப்பீடும் நடைபெற வேண்டும். பதிப்புத் துறைகளின் செயல்பாடுகளே இவற்றை வெளியுலகுக்குக் கொண்டுவரும். அவை செயல்படும் வகையில் செப்பனிடப்பட வேண்டும். இவையெல்லாம் நடைபெற அறக்கட்டளைகளின் நிலை பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்படவும் கருத்தரங்க நிதிப் பயன்பாடுகள் பற்றி மதிப்பிடவும் பொறுப்பான ஏற்பாடுகள் தேவை. இல்லாதபட்சத்தில் தமிழகத்தின் பொதுப் பண்பான ‘சென்று தேய்ந்து இறுதல்’ அறிவுத் துறையில் மிக விரைவில் நிகழும்.

உள்ளடக்கம்