|
எனது மனிதம்
என் மூலையில் படிகிறது
எனது மூளை
எனது விரல் நுனியில் முடிகிறது
எனது விரல் நுனி
என் எழுத்தாய் உயிர்க்கிறது
‘காட்டுப்பூக்கள்’ - ஜெயந்தன்
தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட எழுத்தாளர்
ஜெயந்தன் அண்மையில் காலமானார்.
கிருஷ்ணன் என்னும் இயற்பெயர் கொண்ட ஜெயந்தன், திருச்சி - மணப்பாறையில்
15.06.1937இல் பிறந்தார். நடுத்தரமான பொருளாதாரப் பின்னணியில், தனது பள்ளியிறுதி
வகுப்பை முடித்தவுடன் கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்து அரசுப் பணியில்
சேர்ந்தார்.
பணியின் நிமித்தம் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் பணியாற்றும் கட்டாயமும் பலதரப்பு
மக்களிடையே பழகும் சூழலும் இவருடைய சிறுகதைகளுக்கான களங்களாகவும் கதை
மாந்தர்களாகவும் மாற்றம்கொண்டன. இவரது சிறுகதைகளின் பாத்திரங்கள் பலரும் அவரது
வாழ்வில் சந்தித்தவர்களாகவே இருந்தார்கள்.
இவரது சிறுகதைகளைப் படிக்கிறபோது, அந்தக் கதைகள் பேசும் சம்பவங்களோடு
நின்றுவிடாமல், இந்தச் சமூகத்தின் மீதான ஓர் எழுத்தாளனின் அக்கறையும் சகமனிதன்
குறித்த கவலையும் வாசக மனத்தில் விரிகிறவிதமாய், மனித மனத்தின் ஆழமான சிக்கல்களைப்
பற்றிப் பேசுபவையாக அமைந்திருந்தன.
வாழ்க்கை ஓடும், சம்மதங்கள், மொட்டை, அவள், இவள் போன்ற பல கதைகளும் இத்தன்மை
கொண்டவையாகவே இருப்பதை உணர முடியும்.
பலரும் சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கி, பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவது
வழக்கம். ஜெயந்தன், பெரும் பத்திரிகைகளில்தான் எழுதத் தொடங்கினார். எண்பதுகள்வரை
பல்வேறு பெரும் பத்திரிகைகளில் எழுதியவர், பின்னர் அவற்றில் எழுதுவதை நிறுத்தி
விட்டுச் சிறுபத்திரிகைகளில் மட்டும் எழுதுபவராக மாறினார்.
இவரது நினைக்கப்படும் என்னும் நாடகம் கணையாழியில் பிரசுரமானபோது பலரது கவனத்தை
ஈர்த்துப் பாராட்டுதல்களைப் பெற்றது. நாடகங்களில், தன் இயக்கத்தை
அதிகப்படுத்திக்கொள்ளவில்லையெனினும், நவீன நாடகங்கள் குறித்த மேதமை அவரிடம்
இருந்தது.
ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பத்து
ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர், கருத்து வேறுபாட்டால் விலகிக்கொண்டார்.
பாவப்பட்ட ஜீவன்கள், இந்தச் சக்கரங்கள், முறிவு போன்ற குறுநாவல்களும், சம்மதங்கள்,
அரும்புகளா, ஞானக்கிறுக்கன் கதைகள், மீண்டும் கடவுளும் கந்தசாமி பிள்ளையும்,
மனச்சாய்வு போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாயின. ஜெயந்தன் நாடகங்கள்,
நினைக்கப்படும் போன்ற நாடக நூல்களும் பிரசுரமாயின. இவரது சிறகை விரி, வானம் உனது
என்னும் வானொலி நாடகம் அகில இந்திய வானொலியில் முதல் பரிசு பெற்றது.
பணி ஓய்வுபெற்ற பின்னர், சென்னை வேளச்சேரியில் இருந்தபோது கோடு என்கிற
சிறுபத்திரிகையைத் தொடங்கிச் சிறிது காலம் நடத்தினார். எதற்காகவும் சமரசம்
செய்துகொள்ளாதவராகவும் தனக்கான பிரத்யேகமான நேர்மையான கருத்தை உருவாக்கி அதன்படி
செயல்படக்கூடியவராகவும் இருந்தார்.
சிறுகதைகள், குறுநாவல்கள் போன்றவற்றை எழுதிவந்தவர், இரண்டாயிரத்துக்குப் பின்
மனம்விரிந்த கவிதைகளாகவும் தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடாகவும் கவிதைகள் எழுதிக்
காட்டுப்பூக்கள் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
2006இல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான மணப் பாறைக்குக் குடிபெயர்ந்தார்.
தனது இறுதிக் காலத்தை, தன் பால்யகால நண்பர்களோடு கழித்தது அவருக்கு மகிழ்வைத்
தருவதாகவே இருந்தது.
அவரும் மணவை முஸ்தபாவும் இணைந்து தொடங்கிய மணவைத் தமிழ் மன்றம் என்னும் அமைப்பின்
செயல்பாடுகளில் ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு,
சிந்தனைக்கூடல் என்னும் புதிய அமைப்பையும் உருவாக்கினார். மாதம் இரண்டு கூட்டங்கள்
நடத்தி, இலக்கியம், சமூகம் சார்ந்த ஆழமான சிந்தனைகளை இளைஞர்களிடத்திலே உருவாக்கிட
வேண்டுமென்பதே சிந்தனைக்கூடல் அமைப்பின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.
அண்மையில், அவரது மொத்தக் கதைகளின் தொகுப்பு நிராயுதபாணியின் ஆயுதங்கள் என்னும்
தலைப்பில் வெளியானபோது, அவரது படைப்புகள் குறித்து ஒரு கருத்தரங்கிற்குச்
சென்னையில் ஏற்பாடு செய்வதாகக் கூறினேன். ஆனால் சென்னைக்கு வரும் சாத்தியமில்லை
எனக் கூறிவிட்டார்.
சென்னையில் இருந்தபோதுகூட எப்போதேனும் சந்தித்த நான், அவர் மணப்பாறை போனபின்பு,
எனது சொந்த ஊரும் அது என்பதால், அடிக்கடி சந்திக்கிற சந்தர்ப்பம் வாய்த்தது.
தன் இறுதி நாட்களில், அறிவியல் புனைகதை எழுதும் முயற்சியில் இருந்தார். இருநூறு
பக்கங்கள்வரை எழுதப்பட்ட அந்த நாவல் முற்றுப் பெறுவதற்கு முன்னரே அவரது வாழ்க்கை
முற்றுப்பெற்றுவிட்டது.
|